Advertisement

அத்தியாயம்—6
யாரை இதில் குற்றம் சொல்வது
விதியின் வழி வாழ்க்கை செல்வது ‘’
ஹலோ எஃப் ,எம்.இன் ரெட்ரோ ஃப்ரைடே நிகழ்ச்சியில்,பாடல்களை கேட்டுக்கொண்டே.,சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்த்தாள் செல்லக்கிளி.
..கார்த்திகை மறுநாள் நடந்த சண்டைக்குப் பிறகு,இப்பொழுது தான் வீடு,இயல்புக்குத் திரும்பியிருக்கிறது….அதுவும்,செய்யாத தவறுக்காக,செல்லக்கிளி மன்னிப்பு கேட்ட பின்பே,நடந்திருக்கிறது….விட்டு கொடுத்துப் போவதுதான் வாழ்க்கை என்ற,பதமானது, அவளைப் பொறுத்த அளவில்,தன்மானம்,சூடு,சுய மதிப்பு,ஆகியவற்றை விட்டு விடுதல் என்றுதான்,இன்று வரை,பொருள் ஆகிக் கொண்டிருக்கிறது…
..என்ன இன்னும் கணபதி அக்காவை காணோம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்‌  போதே அவள் வந்துவிட்டாள்…
‘’அக்கா ..உங்களுக்கு ஆயுசு நூறு….வரலியென்னு நெனச்சேன்,,,,வந்துட்டீங்க….’’
‘’ஆமா..போங்க….நூறு வயசு வரை,இந்த கன்றாவியெல்லாம்,பாத்துக்கிட்டு உக்காந்திருக்கவா..?
‘’ஊர்ல நாட்ல நடக்கறதை சொல்றீங்களா’’
‘’அது ஆயிரம் இருக்கு…இன்னிக்கு நம்ம,தெருவுல நடந்திருக்குல்லா ….அத சொல்லுதேன்’’
‘’நம்ம தெருவுலயா….என்ன ஆயிட்டு?’’
‘’என்ன இப்பிடி சாதாரணமா கேக்கீக…நெசமாவே தெரியாதா?’’
‘’தெரியாது…விடிஞ்சதுலேர்ந்து அடுப்புக்குள்ள தான கெடக்கேன்’’
‘’சொல்லி தொலைக்கேன்…நம்ம பெட்டி கடை மீனா மகள் ஓடிப்போயி கல்யாணம் பண்ணிக்கிட்டா…ஊரே பேச்சாக் கெடக்கு ….நீங்க ஒரு ஆளூதான் தெரியாதுங்கீக..’’
‘’அட கடவுளே….இது என்ன கூத்து?
‘’பெரிய கூத்துதான்….நேத்தைக்கு நடந்திருக்கு’’
‘’பெரியவளா…சின்னவளா’’
‘’பெரியவதான்….ஒரு கடையில வேல பாத்தால்லா..அந்த கடைக்கு வந்து போற பையனாம்’’
‘’செந்திலும் மீனாவும் நல்ல குணம்…அவுகளுக்கு,இப்பிடி எமனா பிள்ள வந்து போறந்திட்டுதே’’ என்று மனசார வருந்தினாள் செல்லக்கிளி…
.அவள் குணம் அப்படி..வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரைப் படித்தவளில்லைதான்,..ஆனால் பிறவியிலேயே அந்த குணம் கொண்டவள்…
‘’வேற ஜாதிப் பையனா’’
‘’அப்பிடித்தான் பேசிக்கிடுதாக….எப்பிடித்தான் பெத்து வளத்தவுகளை ஒரு நிமிசத்துல,உதறிட்டுப் போறதுக்கு இந்த பிள்ளைகளுக்கு மனசு வருதோ?சும்மாவா சொல்லி வச்சான் பெத்த மனம் பித்து,பிள்ளை மனம் கல்லுன்னு,,,,கேட்டதுலேர்ந்து மனசே சரியில்ல….மீனா கூட தாயா பிள்ளையா பழகிட்டோம்…’’என்ற கணபதி பாத்திரம் தேய்க்கத் தொடங்கினாள்.
..மீனா கடையில் செல்லக்கிளியும் பொருட்கள் வாங்குவதுண்டு…பாசமாகப் பேசுவாள்…ஏழ்மையிலும்,நேர்மை நியாயத்தை கடை பிடிப்பவர்கள் கணவனும் மனைவியும்….அவர்கள் முகம் கண்முன் வந்து போனது….அவர்கள் என்ன துயர் பட்டிருப்பார்களோ என்று இவள் துயரப்பட்டாள்
‘’இதுல இன்னொருசேதி  கேட்டேங்களா…இந்த பதிவுத் திருமணத்துக்கு சாட்சி கையெழுத்து போட்டதே மீனாதானாம்…’’
‘’இது என்ன புதுக் கத ?’’
‘’ஆமா…அதனால புருஷன் பொண்டாட்டிக்குள்ளேயும் பிரச்சினையாம்….இப்பிடி பொண்டாட்டி எனக்கு வேண்டவே வேண்டாம்,,,வீட்டை விட்டுப் போயிருன்னு சொல்லுதானாம் செந்திலு…பேசிக்கிடுதாக…’’…உறைந்து போனாள் செல்லக்கிளி..
.நமது மனதுக்கு நெருக்கமானவர்களின்,வலிகள் நம்மையும் வலிமையாக ஆட்கொள்கிறதே….கணபதி அக்காவை அனுப்பி விட்டு,சாப்பிடக் கூட இல்லாமல்,மீனா வீட்டிற்கு ஓடினாள் செல்லக்கிளி..
.வீடு தலை கீழாக கிடந்தது….செல்லக்கிளியைக் கண்டதும்.மீனா ஓடி வந்து கட்டிக் கொண்டு அழுதாள்….வீட்டில் வேறு யாருமில்லை..சின்ன மகள் பள்ளிக்கும்,செந்தில் கடைக்கும் போயிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்…..மீனாவின் முதுகை வருடி கொடுத்தாள்..தாங்க முடியாமல் தானும் கண்கலங்கினாள்….மன பாரம் தீர அழுது முடிக்கட்டும் என்று காத்திருந்தாள் செல்லக்கிளி..
.வறட்டு இருமல் வரவும்தான் அழுவதை நிறுத்தினாள் மீனா…அங்கு கிடந்த நார்க்கட்டிலில் அவளை அமர வைத்து விட்டு,பானையில் இருந்து தண்ணீர் கோரி தந்து,மீனாவை குடிக்க செய்தாள் செல்லக்கிளி…மக்களுக்கு,மனிதத்தின் அருமை புரியும் நேரங்கள் இவை..
‘’என்ன மீனா..நான் கேள்விப்பட்டதெல்லாம்,நெசந்தானா ..’’….. முகத்தை கைகளால் மூடிக்கொண்டு,தலையாட்டி ஆமோதித்து பெருங்குரலில் அழுதாள் மீனா..
‘’மீனா…இப்ப நீ அழுகையை நிறுத்து….எனக்கு வெவரஞ்ச் சொல்லு ‘’
கண்களை துடைத்து மூக்கு சிந்தி,முகம் கழுவி விட்டு வந்தமர்ந்தாள்…சிறிது நேரம் அமைதி…
‘’எக்கா…இவ போக்கு சரியில்லென்னு நான் மூணு மாசம் முன்னமே  கேள்விப்பட்டேன்…தெரிஞ்ச ஆளு ஒண்ணு எனக்கு தகவல் சொல்லிட்டு…அத வச்சி நான்,இவகிட்ட கேட்டேன் பாத்துகிடுங்க….அப்பிடியெல்லாம் இல்லவே இல்லம்மான்னு சாதிச்சுட்டா….நீ என்னைய அப்பிடியா வளர்த்திருக்க…நான் அந்த மாதிரி வேலையெல்லாம் செய்ய மாட்டேனுட்டா…பெத்த பிள்ள பேச்சை நம்பாம இருக்க முடியுமாக்கா….நானும் நம்பிட்டேன்…இந்த பூனையும் பால் குடிக்குமா அப்டிங்குத மாதிரி ,கடைக்கு போகவும்,வரவுமா இருந்தா’’
‘’மீனா….முட்டாள் தனம் பண்ணியிருக்கியே…அந்தால,கடையும் வேண்டாம்,கருமாந்திரமும் வேண்டாம்னு அவளை வீட்டுல இருக்க வச்சிருக்கலாம்லா’’என்றாள் செல்லக்கிளி ஆற்றாமையுடன்…
‘’அந்த எடத்துல தாங்க்கா தப்பு பண்ணிட்டேன்…அவ வார்த்தைய நான் முழுசா நம்பிட்டேன்…இல்லேன்னாத்தான்,காலை கைய உடைச்சாவது வீட்டுல போட்டுருப்பனே….’’
‘’அது சரிதான்,,,அப்பறம்?
‘’எக்கா..இந்த மார்கழி வந்தா அவளுக்கு,இருவத்தி ரெண்டு முடியுது….அதனால ஒருத்தன் கையில புடிச்சி குடுத்துருவோம்னு,ஜாதகத்தை கையில எடுக்கவும் உஷாராயிட்டா….எம்மா நானே மாப்ளைய பாத்துட்டம்னா நீ என்ன செய்வ அப்பிடின்னா….அடி செருப்பால…உனக்கு அம்புட்டு தைரியம் வந்துட்டோன்னு கேட்டேன்…வந்துட்டு அப்ப்டின்னா…எனக்கு கொடலு கலங்கிப் போச்சுக்கா…’’
‘’ச்சரி மீனா…இந்த காலத்துல இது சகஜமாப் போச்சு….பேசிப் பாத்துருக்கலாம்லா….நீ ஏன் அவசரப்பட்டு,கலியாணம் பண்ணி வச்சே?’’
மீண்டும் ஒரு பாடு அழுது தீர்த்தாள் மீனா,,
‘’எக்கா…தீப்பட்ட புண்ணுல,தேள் கொட்டுனாப்புல, அந்த பாவி என் வயித்துல அவன் பிள்ள வளருதுன்னு சொல்லிட்டாளேக்கா’’என்று சன்னமான குரலில் சொல்லி விட்டு,இரண்டு கைகளாலும் தலையில் படார் படார் என அடித்துக் கொண்டு அழுதாள்…
.செல்லக்கிளிக்கு  நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது…கடவுளே…ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?வாயடைத்துப் போனாள் செல்லக்கிளி…என்ன பேசுவது..எதைப் பேசுவது….
மீனாவே தொடர்ந்தாள்.’’வளர்த்த கையாலயே அவளை அடிச்சேன்…சூடு வச்சேன்…சோத்துல வெசம் வச்சி கொன்றலாமானு கூட யோசிச்சேன்…கொலைப்பழி ஏத்துகிட்டு ஜெயிலுக்குப் போயிட்டா குடும்பம் தெருவுல நிக்குமேன்னுதான் விட்டுட்டேன்..கடைசியில  அவன்தான் மாப்ளன்னு முடிவாயிட்டு…’’
‘’நம்ம ஆளுக பையனா’’
‘’நம்ம ஆளுகளா இருந்தாத்தான்,என் புருஷன் கால்ல கைல விழுந்தாவது,சம்மதிக்க,வச்சிருப்பன…அதுக்கும் வழி இல்லாமப் போயிட்டு.இந்த விஷயத்தை சொன்னா அவளை வெட்டியே போட்டுருவாக,, இவ ..பதிவுத் திருமணம் பண்ணிக்கிடப் போறோம்னா…எதையாவது பண்ணி தொலைங்கன்னேன்…அதுக்கு,பொண்ணோட அம்மா கையெழுத்து கட்டாயம் வேணும்னு சட்டம் வந்திருக்காம்லா…பிள்ள மானம் போயிரக் கூடாதேன்னு, என் மானத்த விட்டு போயி கையெழுத்து போட்டுட்டு வந்தேன்…அவ நல்லருக்க மாட்டாக்கா…நாசமாத்தான் போவா…எங்களை கொதிக்க வச்சிட்டு,என் வாழ்க்கை தான் பெரிசுன்னு போனாள் லா…கட்ட மண்ணாத்தான் போவா’’
பதறி விட்டாள் செல்லக்கிளி.
‘’உன் வாயால அப்டி சொல்லாத மீனா…பெத்தவ சாபம் பலிச்சு தொலைச்சிரும்…அவ தலையிலெழுத்து அப்பிடி….எப்பிடியோ கழுத்துல, தாலியேறிட்டு….நல்லாருக்கட்டும்…நீ அடுத்த பிள்ளையப் பாரு’’ என்று மீனாவை ஒரு வாராக,தேற்றி வைத்த பொழுது,சோகமாக உள்ளே நுழைந்தான் செந்தில்…கடையை பூட்டி விட்டு சாப்பாட்டுக்கு வந்திருக்கிறான் போலும்…
‘’வாங்கக்கா’’ என்றான் ..
‘’உன் மகள் விஷயத்தை கேள்விப்பட்டு,மனசு கேக்காம,ஓடியாந்தேன் செந்திலு’’
செந்தில் எதுவும் பேசாமல் தலையை குனிந்தபடி உட்கார்ந்திருந்தான் ..
‘’நடந்ததையே நெனச்சுக்கிட்டு இருக்காதீங்க…பொழப்ப பாருங்க’’என்றாள் செல்லக்கிளி…இதை கேட்டதும் கத்தினான் செந்தில்..
‘’அந்த ஓடுகாலி நாயைப்பத்தி,நெனக்கலக்கா நான்….இந்த அறிவுக்கெட்டவ,அந்த கண்றாவி கல்யாணத்துக்கு,சாட்சி கையெழுத்துப் போட்டுட்டு வந்திருக்கா..அப்பறம்,எனக்கு இந்த வீட்டுல ஆம்பளன்னு என்னக்கா மரியாதை இருக்கு..ஊருக்குள்ள ஒவ்வொருத்தனும் என்னைய நாகைப் புடுங்குதால கேள்வி கேக்கான்.’’ என்று ஆவேசப்பட..
‘’செந்திலு…நீ எனக்கு தம்பி மாதிரிப்பா…நான் சொல்றத ஒரு நிமிசம் கேளு..பெத்த பிள்ளைக்கு திருட்டு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு,எந்த தாயாவது,ஆசப் படுவாளா?  சொல்லுங்க…அவ சூழ் நிலை அப்பிடி ஆயிட்டு…அவளை நம்புங்க….வெந்த புண்ணுல வேலை பாச்சாதீங்க….ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா இருங்க,,,,செந்திலு.சரியா….அக்கா சொல்றதை கேப்பியா ..மாட்டியா..?
‘’நீங்க இவ்ளோ தூரம் சொன்னப்புறம்,நான் சரி சொல்லாம இருப்பனா…’’என்று சிவந்த கண்களுடன்,ஆமோதித்தான் செந்தில்
..செல்லக்கிளி மனதில் அந்த சோகத்திலும், ஒரு மன நிறைவு ஏற்ப்பட்டது…இருவரிடமும் விடை பெற்று வெளியே வந்த பொது,ஆட்டோ வை விட்டு இறங்கி,ஒரு வயதான அம்மா மீனா வீட்டிற்குள் வந்தாள்…வந்தவள், யாரை பற்றியும் கண்டு கொள்ளாமல் வயிற்றில் அடித்துக் கொண்டு சத்தமாக ஆழ ஆரம்பித்து விட்டாள்…அதில் ஒப்பாரி வேறு..
‘’போனாளே…போனாளே..
சண்டாளச் சிறுக்கீ…
போனாளே போனாளே
ஓடுகாலி சிறுக்கீ..
நடை தாண்டிப் போனாளே…
நாறச் சிறுக்கீ …’’
செல்லக்கிளி விறு விறு வேன வெளியேறி விட்டாள்…ஆண் கெட்டுப் போனால்,சம்பவம்…பெண் கெட்டுப் போனால்,சரித்திரம்….என்ற கருத்தை மீண்டும் மீண்டும் இந்த சமூகம் பதிவு செய்கிறது…செந்திலும்,மீனாவும்,இதிலிருந்து மீண்டு வர நாளாகும் என்று தோன்றியது செல்லக்கிளிக்கு…
    

Advertisement