Advertisement

                                                        ஓம் நமச்சிவாயா
தாளம் 6
அமர்ந்து இருந்தவர்கள் அவனை பார்த்தும் எழுந்து “எப்படி இருக்கீங்க  மப்பிள்ளை??” என்றிட “நீங்க யாரு??” என்றான் ஜெய். 
அவன் கேட்டதும் தேவகிக்கும் ஈஸ்வரனுக்கும் முகம் சுருங்கி விட்டது.
அன்னம் வந்தவள் “இது எங்க அப்பா… இது அம்மா” என்றிட அதிர்ந்து விட்டான்  ஜெய். 
‘டேய் சொந்த மாமனார் மாமியார தெரியலை!! நீ எல்லாம் நல்லா வருவடா…’ என்று அவன் மனம் திட்ட ‘பொண்டாட்டிய பார்த்தே தெரியலை?? அப்பறம் தான மாமனார் மாமியார் எல்லாம்…’ நினைத்தவன், “உங்காருங்க எதுக்கு நின்னுட்டு” என்றவன் அவர்களின் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.
அப்போது தான் கவனித்தான் ஈஸ்வரை, அன்னத்தின் முக ஜாடை அப்படியே இருந்தது. சற்று மெலிந்து இருந்தார் அவ்வளவே. “அனு அவங்களுக்கு சாப்பிட கொடுத்தியா??” கேட்க 
“ஆச்சு மாப்பிள்ளை.  நாங்க கிளம்புறோம் உங்கள பாக்க தான் இருந்தோம்” என்று ஈஸ்வரன் சொல்ல, “மாமா… நீங்க இங்க இருந்துட்டு நாளைக்கு போகலாமே…” என்றான் ஜெய்.
“இல்ல மாப்பிள்ளை பசங்க ரெண்டும் எங்களுக்காக காத்துகிட்டு இருக்கும் நாங்க கிளம்புறோம்” என்று எழுந்து கொள்ள, ஜெய் அன்னத்தை அழைத்தவன் அவர்களின் காலில் விழ ஈஸ்வரனுக்கு தான் என்ன சொல்லுவது!! என்று தெரியவில்லை 
இந்த சில மாதமாக தான் அவர் எழுந்து நடக்க ஆரம்பித்தது.   ஜெய் இல்லாமல் அன்னம் மட்டும் தனியாக இத்தனை வருடம் இருப்பது அவரின் உடல் நிலையை மேலும் மோசமாகி இருக்க அன்னத்தின் ஆறுதல் வார்த்தைகள் தான் அவரை சற்று தேற்றி இருந்தது. 
நேற்று வீராசாமி ஜெய் வந்ததை சொன்னதுமே, ஈஸ்வர் கேட்டார் தேவகிடம்  “நாளைக்கு நாம மாப்பிள்ளைய பாக்க போலாமா??” என   
இன்று ஜெய்யிடம் அன்னத்தை பற்றி பேசலாம் என்று நினைக்க, அவன் அழைத்த “அனு” என்ற வார்த்தையிலேயே அவரின் மனம் நிறைந்து விட்டது.  காலில் விழுந்தவர்களை ஆசிர்வாதம் செய்தவர்கள் “அத்தை, மாமாகிட்ட சொல்லிடுமா” என்று புறப்பட்டுவிட்டனர்.
அவர்கள் சென்றதும் அறைக்கு சென்றவன் பின்னாலயே சென்றாள் அன்னம். குளிக்க  போக  சட்டையை கலட்டியவன் “உங்க அம்மா, அப்பா வந்த ஃபோன் பண்ணி சொல்லுறது இல்லையா?? நான்  யார்னு கேட்டதும் அவர் முகமே ஒரு மாதிரி ஆகிடுச்சு!!” 
அவள் பதில் சொல்லாமல் சுவரை பார்த்து இருக்க  “உங்க அப்பாவுக்கு என்ன ஆச்சு??” என்றான் 
அதற்கும் அவளிடம் பதில் இல்லாமல் போக “நான் போய் குளிச்சுட்டு வர்றேன்” என்றவன் குளியல்  அறை கதவை வேகமாக சாத்த அப்போது தான் அவள் உணர்வுக்கே வந்தாள். 
“ஐய்யோ” என அன்னம் குளியல் அறையை பார்க்க  ‘ஆமா… அவர் காலையில இருந்து பேசினதுக்கு எல்லாம் இந்த அம்மா பதில் சொல்லிடுச்சு!! இப்ப இதுக்கு சொல்லலைன்னு அவர் கோபமா போயிட்டாரு… உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?? அவர் உன் கிட்ட எது கேட்டாலும் ஒன்னு பயப்படுற இல்லை அவர் முகத்தை பார்த்து நிக்குற.  அவரே உன் கூட இருக்க ஆசை பட்டாலும், நீயே அவர போயிட்டு வாங்கன்னு அனுப்பி விட்டுவ போல. அப்பறம் என்ன??’ என்ற அவளின் புத்தி மண்டையில் குட்ட  அவன் வந்ததும்  பேச அங்கேயே அமர்ந்து கொண்டாள். 
உள்ளே ஜெய்க்கு ஆத்திரம் கண்ணை மறைத்து “விட்டுட்டு போயிட்டோமேன்னு கொஞ்சம் இறங்கி வந்தா ரொம்பதான் செய்யுறா!! இப்ப என்ன நான் கேட்டேன்னு அப்படி ஒரு பார்வை??” சின்னதாக ஒரு கோபம் அன்னத்தின் மீது.
“கேக்கிறோமே பதில் சொல்லுன்னும் அப்படின்னு தோனுதா?? எதை கேட்டாலும்  அப்படியே நிக்குறது  இனி நான் அவளை கேட்டாதானா??”  குளித்து வெளியில் வர…
 
“நான் ஃபோன் செஞ்சேன் நீங்க  வெளிய இருக்குறதா சித்தப்பா சொன்னாங்க” என்றாள் அவனை பார்க்காமலே..
“அப்ப எனக்கு செய்ய வேண்டியது தான??” சற்று விரைப்பாகவே அவன் கேட்க அன்னம்  “எனக்கு உங்க நம்பர் தெரியாது…” என்றவள் “டீ எடுத்துட்டு வரவா” என கேட்க அப்போது தான் கவனித்தான் அவளை. அறைக்குள் வந்ததில் இருந்து அவளின் பார்வை  அவன் மீது இல்லை என்பதை ‘என்ன ஆச்சு இவளுக்கு??’ நினைத்தவன்  “சரி” என்று தலையை மட்டும் ஆட்டினான். பதில் சொல்லாமல் அவன் தலையை ஆட்ட அவனை திரும்பி பார்த்தவள்  கீழே சென்று விட்டாள். 
கண்ணாடி முன் நின்றவனுக்கு அப்போது தான் தான் அவள் முன் நின்ற கோலம் தெரிந்தது. வெறும் பாத்ரோப் மட்டும் கட்டி இருக்க அது அப்படி ஒன்றும் அவனை காட்டி கொடுக்க வில்லை என்றாலும் அவளுக்கு அது அந்த ரக உடைதான்.
“என் பொண்டாட்டி என்னைய சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டாளா என்ன…!!” உல்லாசமாக சிரித்தவன் உடை மாற்றி கட்டிலில் விழுந்தான். 
அவனை நினைத்து சிரித்த படி தான் வந்தாள் அன்னம். ‘கொஞ்சமாவது வெட்கம் இருக்கா?? நான் நின்னுட்டு இருக்கேன் அப்படியே வர்றார்.. உள்ளயே டிரஸ் போட்டுட்டு வந்தா என்னா??”
அன்னம் ஜெய்க்கு டீ போட ஃபோன் அலரியது.  மங்களம் தான் கேட்டார் “அன்னம் ஜெய் எங்க??”  
“மேல இருக்காரு அத்தை” என்றதும் “எதுக்கு உங்க அப்பா அம்மாவை உடனே அனுப்பி வைச்ச??” என்றார்  
“அன்புவும் கவியும் வந்துடுவாங்க…  இன்னிக்கு அப்பாவுக்கு செக் அப் இருக்கு ஹாஸ்பிட்டல்   போகனும்.  இப்ப போனா தான் பாக்க முடியும் அது தான்” என்றவள்  “அத்தை நைட்டுக்கு என்ன செய்ய??” கேட்டாள்
“எங்களுக்கு எதுவும் வேண்டாம் நாங்க இங்கயே முடிச்சுகிறோம். வரும் போது ரூபிணியையும் கூட்டிக்கிட்டே வர்றோம்” என்றவர் ஃபோனை வைத்து விட்டார்.
டீயை எடுத்துக்கொண்டு அன்னம் மேலே போக நல்ல தூக்கத்தில் இருந்தான் ஜெய். 
அன்னம்  இரவு உணவுக்கு தயார் செய்து கொண்டு இருக்க “அனு டீ கொடு” என்று வந்தான் ஜெய் ஜெய்யின் சத்ததை கேட்டவள் ‘தூங்கிட்டு தான இருந்தாரு… அதுகுள்ள எழுந்துட்டாரா!!” என்று என்று வந்து பார்க்க, டேபிளிலில் ஃபோனை பார்த்து கொண்டு இருந்தான் ஜெய்.
அவனின் அருகில் வந்தவள் “தூங்கிட்டு தான இருந்தீங்க?? அதுகுள்ள வந்துட்டீங்க?? என்ன ஆச்சு??” என்றாள். “ரொம்ப நாளைக்கு அப்பறம்  கொஞ்சம் அதிகமாகவே வேலை செஞ்சுட்டேன் போல அது தான் அசந்துட்டேன். நீ வந்தவ எழுப்பி விட்டு இருக்க வேண்டியது தானா..” 
“நல்லா தூங்குறவங்கள யாராவது எழுப்பி விடுவாங்களா?” அது தான் வந்துட்டேன். 
“சரி இனிமே அன் டைமில தூங்குனா எழுப்பி விடு” என்றவன் “உனக்கு ஏதும் முக்கியமான வேலை இருக்கா அனு??” என்றான். 
“இல்லை. ஆனா உங்களுக்கு நைட்டுக்கு சாப்பிட மட்டும் செய்யனும்” என்றவள் அவன் முகம் பார்க்க.
“ஏன் எனக்கு மட்டும். அம்மா, அப்பா, ரூபி  எங்க??”  
“அத்தை மாமா நல்லசாமி மாமா வீட்டுக்கு போயிருக்காங்க முகூர்த்த பட்டு பார்க்க… ரூபி அவ பிரண்ட் வீட்டுக்கு போயிருக்கா… அத்தை அங்கயே சாப்பிட்டு  வரும் போது ரூபிய கூட்டிட்டு வர்றாங்களாம்”  
‘இவகிட்ட மில்லு  வீடு பத்தி கேட்டா போதும் மொத்தமும் சொல்லிடுவா. ஆனா… அவள பத்தி கேட்டா மட்டும் வாயே தொறக்க மாட்டா’ மனதில் திட்டிக்கொண்டானா?? கொஞ்சிக்கொண்டானா??  அன்னத்தை பார்த்தவன்  
“நான் வெளிய போறேன் நான் சொன்னதுக்கு அப்பறம் நீ சமைச்சா போதும்” என்றவன்  பைக்கை எடுத்து கொண்டு சென்றான். போகும் அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள் அன்னம் ‘இவனுக்கு தான் சரியானவளா??’ என்று.
மாலையில் ஜெய்  அவளின் அப்பாவை பற்றி கேட்டதே நினைவில் இருந்தது ‘அவர் என்கிட்ட சாதரணமாதான் பேசுறாரு… ஆனா நான் சரியா இருக்குறேனா???  இப்ப கூட என்கிட்ட நல்லாதான பேசுனாரு?? அப்பறம் எதுக்கு அவரை பார்த்து பயம்??’ 
‘அவர் பேசுனா அதுக்கு பதில் சொல்லனும் முதல்ல இப்ப சொன்னது போல’ என்று அவளுக்கு அவளே சொல்லி கொண்ட பின் தான் சற்று தெளிந்தாள்.
ஜெய் வரும் போதே ரூபிணியும் அவன் உடன் வந்தாள். அன்னம் அவனை பார்க்க “வர்ற வழி தான அது தான் கூட்டிக்கிட்டு வந்தேன்” என்றவன் அவனின் கையில் இருந்த பார்சலை அவளிடம் தர என்ன?? என்று பார்த்தாள். “நமக்கு மட்டும் தான… அது தான் ஹோட்டல்ல இருந்து பார்சல் பண்ணிட்டேன்” 
ஜெய் ரூபிணி டேபிளில் அமர்ந்து இருக்க அன்னம் இருவருக்கும் பார்சலில் இருந்ததை வைத்து கொண்டு இருந்தாள். 
ரூபி தான் கேட்டாள் ஜெய்யிடம்  “இத்தனை நாளா எங்க நியாபகமே வரலையா??” என்று ஜெய் அமைதியாக தட்டில் இருந்ததை சாப்பிட்ட படி இருக்க, அன்னம் தான் அதட்டினால் ரூபிணியை. 
“ரூபி சாப்பிடும் போது என்ன பேச்சு?? பேசாம சாப்பிடு..” 
“என்ன வாய மூட சொல்லாம். ஆனா மத்தவங்கள… நான் சின்ன பொண்ணு தான், எதுவும் தெரியாது தான். ஆனா அண்ணாவ பத்தி பேசும் போது எப்படி நான் சும்மா இருக்குறது??” 

Advertisement