Advertisement

அவர் வீராசாமி.. மனைவி மங்களம்… தம்பி நாராயணசாமி, தங்கைகள் சாந்தி, வள்ளி என்று  பெரியது  தான் அவர்களின் குடும்பம். தம்பி தங்கைகளுக்கு திருமணம் செய்து பக்கதிலேயே வைத்துக்கொண்டார் வீராசாமி.
அதனால் மாதத்தின் பாதி நாட்கள் இவர்கள் வீட்டில் தான் அவர்களின் வாசம். வீராசாமிக்கு இருமகன்கள் ஜெய்தேவ், சத்தியன். மகள் ரூபிணி.
அன்னம் கிட்சனுக்குள் போக “என்னம்மா இன்னிக்கும் எல்லாரும் வந்து இருக்காங்க??” என்று மஞ்சு கேட்க, அன்னம் பார்த்த பார்வையில் அவளின் சர்வமும் நடுங்கி போனது. “இல்லம்மா… அது வந்து” என்று எச்சில் முழுங்க “வந்தோமா வேலைய முடிச்சோமான்னு இருக்கனும் தேவை இல்லாத பேச்சு இருக்க கூடாது” என்று அவள் சொன்னதற்கு பதில் இரண்டு அடி அடித்து இருக்கலாம் என்று தோன்றியது மஞ்சுவுக்கு.
அன்னலட்சுமி எவ்வளவு அமைதியோ அவ்வளவு கோபமும் வரும் தேவையில்லாமல் அதை காட்டவும் மாட்டாள்.
“இல்லம்மா தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சுடுங்க” என்றவளை “போய் தோசை ஊத்து” என்றவள் மற்றதை எடுத்து டேபிளில் வைத்தாள்.
வீராசாமிக்கு தட்டில் தோசை வைக்க “எல்லாருக்கும் வைம்மா” என்றார். அனைவரும் சாப்பிட்டு முடிக்க சத்தியன் முகமே சரியில்லை. அன்னம் அவன் முகத்தை பார்த்தவள் எதுவும் சொல்லாமல் உள்ளே சென்றாள். 
சத்தியன் எழுந்து சென்றதும் அனைத்தையும் சரி செய்தவள், மத்தியத்திற்கு என்ன வேண்டும் என்று மஞ்சுவுக்கு சொல்லியவள், “மாமா நான் வர்றேன்” என்று வெளியில் சென்றாள்.
சென்றவளை தான் அனைவரும் பார்த்து இருந்தனர். “என்ன திமிரு நாம இங்க இருக்குறோம் அப்படியே போறா… இந்த திமிருக்கு தான் அனுபவிக்குறா இன்னும் அடங்கல பாரு” என்று சாந்தி வள்ளியிடம் சொல்ல “அங்க என்ன பேச்சு பசங்களா” என்று வந்தார் வீராசாமி.
அன்னம் காரில் ஏறும் சமயம்  வெளியில் இருந்து கார் வர… யார்?? என்று பார்த்தாள் அன்னம். காரில் இருந்து இறங்கியவனை  அவளுக்கு யார்?? என்று தெரியவில்லை. 
“யார் நீங்க?? யாரை பாக்கனும்??” என்றவள்  “மாமாவ பாக்க வந்தீங்களா.. உள்ள போங்க” என்று அன்னம் அவனிடம் சொல்ல,  ஜெய்தேவ் அவளை அதிர்ச்சியாக பார்த்தான். பின்னே தாலி கட்டியவனை “யார் நீ??” என்று கேட்டால் அதிர்ச்சி ஆகாமல் என்ன செய்ய.
அப்போது தான் அவன் முகத்தை நன்றாக பார்த்தாள் அன்னம். இப்போது அதிர்ச்சியில் மூச்சு இவளிடம் இருந்து வெளியில் வர மறுத்தது. 
சில வினாடிகள் தான் இருவரும் தன் நிலைக்கு திரும்ப, காரில் ஏறியவள் சென்றுவிட்டாள்.   
வீட்டில் இருந்து சிறிது தூரம் கூட இருக்காது அன்னத்தால் காரை ஓட்ட முடியவில்லை. கார் அவள் கைகளில் தடுமாற ஓரத்தில் நிறுத்திவிட்டாள்.  உடல் மூச்சு காற்றுக்காக ஏங்க கண்ணாடியை இறக்கியவள் வேகமாக மூச்சு இழுக்க அவளால் முடியவில்லை. சிரிப்பும் அழுகையும் இரண்டும் ஒரே நேரத்தில் வந்தது.
நிற்பதோ நடு ரோட்டில். யாராவது பார்த்தாள் கண்ணாடியை ஏற்றியவள் ஏசியை வேகப்படுத்தினாள்.
“அம்மா” என்று கத்தியவள்  அழ  ஆரம்பிக்க நேரம் தான் போனதே தவிர அழுகை நிற்க வில்லை. சிறிது நேரத்தில் அழுகையை கட்டுபடுத்தியவள் கண்ணாடியில் முகம் பார்க்க அது காட்டியது அவளின் திருமணநாள் முகத்தை.
“சீதா கல்யாண வைபோகமே.,
ராமா கல்யாண வைபோகமே.,”
பெண்கள் ஆரத்தி எடுக்க “வலது கால எடுத்து வைச்சி உள்ள வாம்மா” என்றார் மங்களம்.
அவர் சொன்ன படி காலை எடுத்து வைத்து உள்ளே வந்தால் அன்னலட்சுமி  உடன்  அவள் கணவன் ஜெய்தேவ். 
“வா… வந்து விளக்கு ஏத்து அன்னம்” என்ற மங்களத்தின் குரலுக்கு “சரி” என தலையாட்டியவள் எழுந்து போக, மற்ற முறைகள் எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் நடந்தது. 
உறவுகள்  சிறிது சிறிதாக கலைந்து போக மீதம் இருந்தது அந்த வீட்டின் ஆட்கள் மட்டுமே. 
சாந்திக்கும் வள்ளிக்கும் இரண்டு பெண்கள் இருந்தாலும் வீராசாமி வெளியில் இருந்து தான் பெண் எடுத்தார் மகனுக்கு.
“எதுக்குண்ணா வெளியில இருந்து எடுக்கனும் ஜெய்க்கு?? நம்ம சாந்தி பொண்ணையே கட்டலாம்ல??”  என்று நாராயணன் கேட்டதற்கு “இல்ல நாராயணா ஒருத்தர் வீட்டுல பொண்ணு எடுத்து இன்னொருத்தர் வீட்டுல எடுக்கலையின்ன அது நல்லா இருக்காது. நீயா… நானான்னு போட்டி வரும். தேவையில்லாத பிரச்சனை. அதுக்கு வெளிய எடுத்தா பேச்சே இல்லை பாரு” என்றதும் ஒத்துக்கொண்டார் நாராயணன். 
வீடே அமைதியாக இருக்க… எங்கு செல்வது, யாரிடம் கேட்பது என புரியாமல் நின்று இருந்தாள் அன்னம்.   மாடி படிகளில் சத்தம் கேட்க மெதுவாக தலை நிமிர்த்தி பார்த்தாள் அன்னம். 
ஆறு அடி உயரத்தில்… வெள்ளை நிறம் இப்போது கோபத்தில் சிவந்து இருக்க மீசை இல்லாமல் முகவாயில் சிறிது தாடியுடன் தலையில் சிறிய குடும்மியுடன் ஜீன்ஸ் டீசர்ட்டு போட்டு இறங்கி வந்தவனை கண்கள் விரித்து பார்த்து இருந்தாள் அன்னம். 
இப்போது தான் அவனை முழுதாக பார்க்கிறாள் அவள். காலையில் இருந்து அவன் கால் பாதங்களை மட்டுமே பார்த்து இருந்தவளுக்கு அவனின் முழு உருவம் இப்போது தான் தெரிந்தது.
அவளின் கண்களுக்கு அழகனாகத்தான் இருந்தான் அவன்.  அவள் அடிக்கடி டீவியில் பார்க்கும்  ஹிந்தி பட ஹீரோவை போல் இருப்பவனை யாருக்கு தான் பிடிக்காது… இவளின் கணவன் அப்படி இருக்க, அவனின் தோள் உயரம் கூட இல்லை இவள்.
இப்போது தான் பள்ளி இறுதி ஆண்டை முடித்தாள் அன்னம். ஊர் திருவிழாவிற்கு வந்தவளை பார்த்ததும் பிடித்து போக மகனுக்கு முடித்துவிட்டார் வீராசாமி. 
இது மட்டுமே அனைவருக்கும் தெரிந்தது. அவரும் அப்படி தான் சொல்லி இருந்தார். மங்களம் “ஏங்க இப்ப என்ன வயசு ஆகுதுன்னு இப்ப அவசர அவசரமா இந்த கல்யாணம் அவனுக்கு?? இப்ப தான இருபத்திரெண்டு ஆகுது” என்றதற்கு, “எனக்கு அந்த வயசுல ஜெய்க்கு ரெண்டு வயசு ஆச்சு” என்றதும் வாயை மூடிக்கொண்டார்.
பிறகு அவர்  கோபபட்டால் எதிர் நிற்பது யார். அவரை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது அந்த வீட்டில். அப்படி ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையை கடை பிடிப்பவர் வீராசாமி.
யாரும்… தன்னையோ, குடும்பத்தையோ எதுவும் சொல்லிவிடக்கூடாது என்று நினைப்பவர். மகனை பற்றி குற்றம் சொன்னதாலேயே இந்த திருமணம். 
சென்ற வாரம் தான் சென்னையில் இருந்து வந்து இருந்தான் ஜெய். கல்லூரியில் பெண்களுடன் பேசுவதும் சிரிப்பதும் சகஜமே அங்கு. அதுவும் அவன் படிப்பது விசுவல் கம்யூனிகேசன் அதில்  இந்த பாகுபாடு பார்க்க முடியாது அல்லவா…
அவன் பெண்களுடன் பேசுவதை பார்த்த ஒருவர்  வீராசாமியிடம் சொல்ல முடித்து விட்டார் மகனின் திருமணத்தை. அவன் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்றால் திருமணம் முடிந்த பிறகே என்று சொல்ல, கேமராவின் மீது இருந்த தீராத காதல் அவனை அன்னத்தின் கழுத்தில் தாலி கட்ட வைத்தது.
தன் வீட்டிற்கு வரும் பெண் அனைவரையும் அரவணைத்து செல்பவளாக இருக்கவேண்டும்…  ஜெய்யின் கோபத்திற்கு யாரையும் அவனால் அனுசரித்து செல்ல முடியாது… அவனுக்கு  அவனின் கோபத்தை தாங்கும் பெண்ணாக தேட… கிடைத்தாள் அன்னலட்சுமி.
அன்னத்தின் குடும்ப சூழ்நிலை, அன்னத்தின் அம்மா தேவகியிடம் கேட்டதும் சரி என்றுவிட்டார். கணவன் ஈஸ்வரன் உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாகி இருக்க, இரு பெண்கள், ஒரு ஆண் குழந்தை என குடும்பத்தை  நடத்த சிரம பட்டவருக்கு கை கொடுத்தார் வீராசாமி.
ஒரு வகையில் தூரத்து சொந்தம் தான் தேவகி. அவரின் பொறுமை நிச்சயம் அன்னத்திடம் இருக்கும் என்று நினைத்தவர் மகனுக்கு முடித்துவிட்டார் அவளை. திருத்தமான முகம் முகத்தில் எப்போதும் உறைந்து இருக்கும் சிரிப்பு என அவளை பார்த்தும் பிடித்து விட, மகனை கேட்கமல்  தட்டை மாற்றி அடுத்த மூன்று நாட்களில் திருமணம்.
கேட்ட செய்தியில் பதறி அடித்து வந்தவன் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. அனைவரும் கை நீட்டியது வீராசாமியை தான்.  “இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கலையின்னா என்ன செய்வீங்க??” கேட்டான் வீராசாமியிடம். 
“சுலபம் நீ இனி படிக்க முடியாது… இப்ப முடிவு சொல்லு” என்றார் வீரா.
ஜெய் “என்ன பயம் காட்டுறீங்களா??” என்று வீம்புக்கு நிற்க 
“பயமா!! உனக்கா… டேய் நான் சென்னதை செய்வேன்னு உனக்கு நல்லா தெரியும். நீ இந்த கல்யாணத்தை செஞ்சுகிட்டா  மேல படிக்கலாம். இல்லையின்னாலும் படிக்கலாம் வீட்டுல இருந்து. ஏன்னா வெளியில போக உனக்கு உடம்புல எதுவும் இருக்காது”  என்றார். 
அவனுக்கு நன்கு தெரியும் வீராசாமியை பற்றி.  இவர் சொன்னால் சொன்னது தான்.  இப்போதே வீட்டை சுற்றி காவலுக்கு ஆள் வைத்து விட்டார். அவர்களை மீறி செல்லவும் முடியாது  “இப்ப முடிவா என்ன சொல்லுறீங்க??” கேட்டான் அவரிடம். 
“கல்யாணம் செய் மேல படி  அவ்வளவு தான்” என்று விட தாலி கட்டிவிட்டான் அவள் கழுத்தில். 
படியில் இருந்து இறங்கி வந்தவன் நின்றது நடு கூடத்தில் தான். பெட்டியுடன் நின்றவனை வீராசாமி கேள்வியாக பார்க்க பதறி போய் வந்தார் மங்களம். “என்னடா இது?? தாலி கட்டின கையோட எங்க கிளம்பிட்ட??” 
வீராசாமியை முறைத்தவன் “நான் போறேன்  இனி இந்த வீட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றவன் அவள் முன் நின்றது சில நொடிகளே, அங்கு இருந்த யார் பேச்சையும் கேட்க நிற்க வில்லை சென்றுவிட்டான் அவன். 
தலையில் கைவைத்து மங்களம் அமர வீராசாமி சன்ன சிரிப்புடன் “போங்க எல்லாரும் வேலைய பாருங்க எங்க போக போறான் வந்துடுவான்” என்று விட்டு உள்ளே சென்றார்.
மங்களத்தை அனைவரும் சமாதானம் செய்ய, அங்கு சமாதான படுத்த வேண்டியவளோ அனாதையாக நின்றாள் இனி தன் வாழ்கை எப்படி?? என்ற சிந்தனையில்………………. 
               
“வாரணம் ஆயிரம் சூழ வாழ்க்கை வாழ
 கனவு கண்டாள் முகுந்தனின் கோதை
வாழ்க்கையையே கனவாக கண்டாள் ஜெய்ந்தனின் பாவை”
தாளத்தில் சேராத தனி பாடல்.

Advertisement