Advertisement

அந்த நாளின் இரவில் அதே அழகிய நல்லூரில் பெரிய வீட்டில் தன் மனைவியின் பின் அலைந்து கொண்டிருந்தான் ஆதித்யன். அவள் சற்று பலவீனமாக இருப்பதாக மருத்துவர் அவனிடம் தெரிவித்து இருக்க, அவன் மகளோ அவளை உண்ணவே விடாமல் படுத்திக் கொண்டிருக்க இடையில் மாட்டிக் கொண்டது என்னவோ சக்தி தான்.

காலையில் எழும்போதே சோர்வு, வாந்தி மயக்கம் என்று அத்தனையும் தொடங்க ஆதித்யன் தான் அசந்து போனான். அவள் வேதனைகளை பார்த்தவனுக்கு குழந்தையே வேண்டாம் என்று கூட தோன்றிவிடும் சில நேரங்களில். அதை சக்தியிடம் சொல்லி நன்றாக வாங்கியும் கட்டி இருக்க இப்போது அந்த பேச்சையெல்லாம் விடுத்து மனைவியை தாங்கி கொள்வதை மட்டுமே முழுநேர வேலையாக மாற்றிக் கொண்டிருந்தான்.

இப்போதும் உணவை முடித்துவிட்டு வந்தவளை ஒரு டம்ளர் பாலை குடிக்க வைக்கத்தான் அவள் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தான். அவளோ குடித்தால் வாந்தி எடுத்துவிடுவோம் என்று தோன்ற மறுத்துக் கொண்டிருந்தாள். ஆதித்யன் விடாமல் அவளை தொடர்ந்தவன் அந்த பாலை புகட்டிவிட,அடுத்த ஐந்து நிமிடங்களில் உள்ளே சென்ற உணவும் சேர்ந்தே வெளியில் வந்தது.

சோர்ந்து போனவள் ஆதித்யனின் நெஞ்சிலேயே சாய்ந்துவிட, அவளை தூக்கி வந்து படுக்க வைத்தவன் விலக நினைக்க அவனை விடாமல் தன்னுடன் இழுத்துக் கொண்டவள் அவன் படுக்கவும் அவன் மார்பில் முகத்தை வைத்துக் கொண்டாள்.

சிறிது நேரம் அமைதியில் கழிய, உறங்கிவிட்டாலோ என்று மனைவியின் முகம் பார்க்க, கண்திறந்து அவனை பார்த்து புன்னகைத்தாள் அவள். அவள் சிரிக்கவும் “போடி” என்று அவன் கடிந்து கொள்ள,

“என்ன போடி.. நாந்தான் சொன்னேன்ல போதும்ன்னு கேட்டீங்களா நீங்க.உங்கப்பொண்ணு உங்களுக்கு மேல இருக்கா… அதான் பிடிவாதமா எல்லாத்தையும் வெளியே தள்ளியாச்சு” என்று சிரிப்போடு கூற

“ம்ச்… விளையாட்டு இல்ல சக்தி. டாக்டர் நீ ரொம்ப அனிமிக்கா இருக்க ன்னு சொல்றாங்க. பார்த்து இருக்கணும்”

“அச்சோ… ஆதி சார், இந்த வாமிட் நின்னதும் நானே நல்லா சாப்பிட ஆரம்பிச்சுடுவேனே. அப்போ அனிமிக் தானா சரி ஆகிடும். அதோட இப்போ சாப்பிடாமயும் இல்லல்ல.சோ கவலைப்பட வேண்டாம்” என்று அவனுக்கு நம்பிக்கையளித்தாள்

“இந்த வாமிட்டிங்க்கு ஏதாச்சும் செய்யேன். நீயும் டாக்டர் தான”

“அதெல்லாம் எதுவும் செய்ய முடியாது. இன்னும் ஒரு மாசத்துக்கு இப்படிதான் இருக்கும். டேப்லெட்ஸ் எடுத்தா பாப்பாவுக்கு ஏதாவது பிரச்சனை வர வாய்ப்பிருக்கு.” என்று கூறியும் அவன் முகம் தெளியாமல் இருக்க, அவனை இறுக்கியவள் அவன் தாடையில் தானாகவே முத்தமிட்டு ” டிஎஸ்பி சார். நீங்க கூட இருக்க வரைக்கும் உங்களைமீறி எனக்கு எதுவும் ஆகாது. அதோட உங்க குழந்தையையும் உங்க பொண்டாட்டி நல்லாவே பார்த்துப்பா. சோ பயப்படாதீங்க. நீங்க பயந்தா பார்க்க சகிக்கவே இல்லை” என்று அவன் மீசையை முறுக்கிவிட, அவல் செயல்களில் காதலானவன் அவளை அணைத்திருந்த கரங்களால் லேசாக அழுத்தம் கொடுக்க

“நல்லாவே கட்டிக்கலாம்.” என்று சக்தி அனுமதி கொடுத்ததும் கூட ” வேண்டாம். என் பொண்ணுக்கு வலிக்கும்” என்று அவன் கூற

” கிட்டத்தட்ட ரெண்டு மாசமாச்சு. நீங்க நீங்களா என்னை கட்டிக்கிட்டு, போங்க..” என்றவள் எழுந்து கொள்ள பார்க்க,

“அடியேய். நீதான் நான் வீட்ல இருந்தாலே என் நெஞ்சிலேயே கிடக்குறியே. அப்புறம் எங்கடி நான் தனியா கட்டி வேற பிடிக்க” என்று சிரிப்போடு கூற, சக்தியும் சிரித்துவிட்டாள் அவன் வார்த்தைகளில்.

அவன் சொல்வது உண்மையும்கூட. அவன் வரும் நேரம் வரை சிவகாமியுடன் சுற்றிக் கொண்டிருப்பவள் அவன் வந்துவிட்டால் அவனை விட்டு நகரவே மாட்டாள். அவள் மகள் அவளை படுத்தும் போதெல்லாம் ஏனோ தாயின் நினைவு அதிகம் தாக்கும் அவளை. அந்த நேரங்களில் அவள் தேடுவது ஆதித்யனை தான்.

சிவகாமியும் அவளை புரிந்தவராக அவளை சமாளிக்கும் பொறுப்பை ஆதித்யனிடமே வழங்குவார். சிறு குழந்தையாக மாறி நின்றவளோ சிறு வயதில் இழந்துவிட்ட அத்தனை சந்தோஷ தருணங்களையும் இப்போது அனுபவிப்பவன் போல் வேதமாணிக்கத்திடமும் செல்லம் கொஞ்சிக் கொண்டு பெரியவீட்டை வலம்வர ஆதித்யனும் அவளின் முகத்தை பார்த்தே அவள் மகிழ்ச்சியை பருகிக் கொள்வான்.

இப்போதும் அவள் முகத்தை பார்த்தே அவளின் மனதை உணர்ந்தவன் சிறிது நேரம் அவளிடம் பேச்சுக் கொடுத்து கொண்டிருக்க, அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே உறங்கி போயிருந்தாள் அவள். இது அடிக்கடி நடப்பதுதான் என்பதால் அவனும் அவளை தலையணைக்கு மாற்றி கீழே சென்று அவளுக்கு மீண்டும் உண்பதற்கு இரண்டு இட்லியை எடுத்து வந்து வைத்துவிட்டு, அவள் நடுவில் எழும்போது கொடுத்து கொள்ளலாம் என்று நினைத்தவன் அவள் அருகில் படுத்து விட்டான்.

———————-

அடுத்தநாள் காலை…

வேந்தனின் அரிசிமில்லில் ஒரு பகுதியில் பந்தல் போடப்பட்டிருக்க, அவனின் குடும்பம் மொத்தமும் கூடியிருந்தது அங்கே. வேதமாணிக்கமும் மனைவி, பேரன், பேத்தி என்று அனைவரோடும் வந்து சேர்ந்திருக்க, தனஞ்செயனும் குடும்பத்தோடு வந்திருந்தான். மேலும் அவர்களுக்கு நெருக்கமான சில சொந்தங்களும், அவன் மில் தொழிலாளர்களும் அங்கு கூடி இருந்தனர்.

இளவேந்தனும், தாமரைச்செல்வியும் தம்பதி சமேதராக அங்கே அமர்ந்திருக்க, ஐயர் மீண்டும் ஒருமுறை மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தார். வேந்தன் அவன் தொழிலில் அடுத்த அடியை எடுத்து வைத்திருக்க அதற்கான ஏற்பாடுகள் தான் இவையெல்லாம்.

அவன் மில்லில் இன்னொரு பிளான்ட் போடுவதற்கான அடிப்படை வேலைகளை அவன் முடித்திருக்க, வேலை ஆரம்பிப்பதற்கு முன்னால் பூமிபூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார் ரங்கநாயகி. வேந்தனும் தாமரையும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கூட, ரங்கநாயகி கேட்காமல் அவர்கள் இருவரையுமே அமர்த்தி இருந்தார்.

அவன் தொழில் சிறக்க வேண்டுமென அத்தனை உள்ளங்களும் மனதார ஆண்டவனை பிரார்தித்துக்  கொண்டிருக்க, அவனின் இந்த தொழிலில் சக்தி ஒரு பங்குதாரர். அவன் அவனுடைய சேமிப்பு மொத்தத்தையும் இதில் கொட்டி இருந்தான். அப்படியும் கையை கடிக்க, மீண்டும் பெரியப்பாவிடம் சென்று நிற்க தயக்கம் காட்டினான் அவன்.

தாமரை எப்போதும் போல் சக்தியிடம் பகிர்ந்திருக்க, தன் பெயரில் இருந்த சில டெபாசிட்களை உடைத்து அவனுக்கு உதவி இருந்தாள் அவள். அவளிடம் அப்படியே பெற்றுக் கொள்ள விரும்பாதவன் அவளை தன்னுடன் கூட்டணி சேர்த்துக் கொண்டான். வேறு யார் என்றாலும் நிச்சயம் இந்த முடிவிற்கு வந்திருக்க மாட்டான் வேந்தன்.

அவள் சக்தியாக இருக்கவும் மட்டுமே இந்த முடிவு. அவனின் இந்த முடிவுக்கு ரங்கநாயகியும், தாமரையும் முழுமனதோடு சம்மதிக்க, வேறு என்ன வேண்டும் அவனுக்கு. எப்படியோ அவளை சரிக்கட்டி தன் வேலையை முடித்துக் கொண்டிருந்தான். இப்போதும் தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதை போல தோன்றவே நின்றிருந்தாள் சக்தி.

அவளை பொறுத்தவரை வேந்தனுக்காக மட்டுமே இது. அவன் முன்னேற இது வழி என்பதால் மட்டுமே கையெழுத்திட்டிருந்தாள் அவளும். அதன்பிறகு இன்றுவரை அவனை அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை அவள். அவன் சரியாகத் தான் செய்வான் என்பதில் அத்தனை நம்பிக்கை அவளுக்கு.

முதல் கல்லை ரங்கநாயகி எடுத்து வைக்க நிறைவாக முடிந்தது அந்த நிகழ்வு. வேந்தன் மிகவும் உற்சாகமாக காணப்பட்டான் அன்று. அவன் முயற்சியில் அவன் இன்று அடுத்த அடி எடுத்து வைத்திருக்க மனம் அத்தனை மகிழ்வாக இருந்தது. அதுவும் கிடைக்கவே மாட்டாளோ என்று அவன் ஏங்கி இருந்த தாமரை அவன் அருகில் இருக்க அவளோடு சேர்ந்து இந்த பூஜை, அவளின் அருகாமை என்று ஒரு எகிழ்ந்த நிலையில் தான் நின்றான் அவன்.

திருமணம் முடிந்தும் கூட, அவன் வேலை வேலை என்றுதான் ஓடிக் கொண்டிருப்பது பெரும்பாலும். ஆனாலும் அவன் சகதர்மினி அவனை பொறுத்துக் கொண்டவள் பெரியோர் சொன்னது போல அவன் காரியத்திலும் கைகொடுத்தாள். அந்த வகையில் அவனுக்கு பெருமை தான் மனைவியை நினைத்து.

இப்போதும் அவன் மேலே படிக்க சொல்ல, செவ்வி, சக்தியின் பிரசவத்தை காரணம் காட்டி விட்டவள்  சக்தியோடு சேர்ந்தே விண்ணப்பிப்பதாக முடித்துவிட்டாள். அவனும் எத்தனையோ எடுத்து சொல்லியும் கூட சக்தியோடு விண்ணப்பிக்கிறேன் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டவள், தான் பயிற்சி பெற்ற மருத்துவமனையிலேயே வேலைக்கும் சேர்ந்து விட்டிருந்தாள்.

அங்கு வேலை முடியவும், வேந்தனின் மில்லுக்கு வருபவள் நேரம் அதன் பிறகு வேந்தனுக்கானது. அவன் கற்று கொடுத்திருந்தபடி அவன் வைத்திருக்கும் கணக்குகளை வரிசைப்படுத்தி கணினியில் பதிந்து கொடுப்பவள் அவன் கொடுக்கும் மற்ற வேலைகளையும் செய்து கொடுப்பாள்.

அந்த நேரங்களில் தான் அவர்களின் தனிமை என்றாகிவிட, இருவருமே விரும்பும் நேரங்கள் அவை. மிகவும் அழகானவையும் கூட அவர்களை பொறுத்தவரை. அதுவும் வேந்தன் அவளை அப்படி தாங்கி கொள்ள அதற்காகவே அவனுடன் சுற்றிக் கொண்டிருப்பாள் அவள். வெளியில் இருந்து பார்ப்பவருக்கு அவன் தன் போக்கில் நடந்து கொள்வதாக பட்டாலும் தாமரைக்கு தெரியும் அவன் அக்கறை.

எங்கிருந்தாலும் தன் பார்வை வட்டத்தில் அவளை வைத்துக் கொள்பவன் சிறு சங்கடமும் நேரும்படி விடமாட்டான். அவர்கள் இருவருக்கு இடையில் புரிதல் இருக்க, தாமரை அழகாக கையாண்டாள் அவனை. ஆம்… நிச்சயம் தாமரை தான் அவனை கையாண்டாள். பின்னே அவன் அன்னையோடே முட்டிக் கொள்ளும் அவனுக்கு.

அப்படி இருக்க தாமரை எம்மாத்திரம். சில நேரங்களில் கத்துவதும் கூட நடக்கும். ஆனால் அழகாக அதை சமாளிப்பவள் சில நிமிடங்களில் அவனை சரி செய்து விடுவாள். பிறகு எப்படி அவன் கோபம் காட்டுவது?? அந்த வகையில் அவர்கள் வாழ்வு ஊடல்,கூடல் என்று வாழ்வின் அத்தனை பரிமாணங்களோடும் கலந்து மிளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது இன்றுவரை.

அன்று பூஜை முடியவும் உறவுகள் அத்தனையும் கிளம்பி இருக்க, தாமரையை தன்னுடன் அழைத்துக் கொண்டவன் சென்று நின்றது கோவிலில் தான். அவளை தனக்கு கொடுத்ததற்காக நன்றி சொன்னவன், தன் தொழில் சிறக்கவும் வேண்டிக்கொண்டான்.

தாமரைக்கு பெரிதாக வேண்டுதல்கள் இல்லை. வந்த அத்தனை சங்கடங்களையும் அவர் தீர்த்து அவன் வாழ்வில் அவளை இணைத்து வைத்திருக்க, இனியும் அவர் காப்பார் என்ற நம்பிக்கை இருந்தது பெண்ணுக்கு. எனவே நன்றி நவிழ்தல் மட்டுமே.

இருவரும் கடவுளை தரிசித்துவிட்டு வீடு திரும்ப மாலையாகிவிட்டது. அதன்பின் வீட்டின் உறவுகளோடு நேரம் கழிய இரவு உணவை முடித்து தன்னறைக்கு சென்று விட்டவனுக்கு எப்போதும் உள்ள வழக்கமாக பாலை எடுத்துக் கொண்டு மாடியேறினாள் தாமரை.

அவர்கள் அறைக்கு வெளியில் இருந்த மல்லிகை பந்தலுக்கு கீழ், மொட்டைமாடியின் சுவற்றில் சாய்ந்து அவன் தரையில் அமர்ந்திருக்க, அவன் அருகில் சென்று அமர்ந்தவள் அவனிடம் பாலை நீட்டினாள். கையில் வாங்கியவன் பாதியை அவளிடம் நீட்டி விட்டான்.

எப்போதுமே பால் பிடிக்காது அவனுக்கு. அவளின் வற்புறுத்தலால் இந்த அரை டம்ளருக்கு பழகி இருந்தான். அவன் கொடுத்ததும் புன்னகையுடன் வாங்கி குடித்து முடித்தவள் அதை கழுவி வைப்பதற்காக எழுந்து கொள்ள

அவள் கையை பிடித்து இழுத்து அமர்த்தியவன் அவளை தன் மடியில் சரித்துக் கொண்டான். இரவுநேரமாக இருக்க, சுற்றிலும் யாரும் இல்லாத தனிமை தந்த தைரியத்தில் அவன் மடியில் வாகாக படுத்து கொண்டவள் அவன் முகம் பார்க்க அவள் கையை பிடித்து தன் கையில் ஒளித்துக் கொண்டவன் “கனவு இல்லையே. கண் மூடி திறந்ததும் திரும்ப யாரையும் கட்டிக்க சொல்ல மாட்டியே” என்று எப்போதும் போல் அவளை வம்பிழுக்க

எப்போதும் அவனை அடித்து வைப்பவள் இன்று அவன் பின்கழுத்தில் தன் கைகளை கோர்த்துக் கொண்டு அவனை தன்னை நோக்கி இழுத்துக் கொண்டாள். அவன் இதழ்களை முதல் முறையாக எடுத்து கொண்டவள் அவனுள் மூழ்கிப்போக ஆற அமர,நிறுத்தி நிதானமாக ஒரு முத்தம்.

வெகுநேரம் கழித்தே விலகியவள் “போதுமா.. சந்தேகம் தீர்ந்து போச்சா… ” என்று கேட்க மறுப்பாக தலையசைத்தவன் “ம்ஹூம். தீரவே இல்லை, இன்னும் சந்தேகமாதான் இருக்கு. அதனால இன்னும் ஒருமுறை டெஸ்ட் பண்ணிக்கறேன்” என்றவன் இம்முறை செயலை தனதாக்கி கொள்ள புன்னகையோடு அவனுடன் இழைந்தாள் அவள். சிரிக்கவும், சிலிர்க்கவும் செய்த முத்தம், வியர்க்க வைத்து வியக்க வைத்தது அவளை. வேகத்தோடு ஆட்கொண்டாலும் அமைதியாக உறங்கும் ஆட்கடல் போல அமைதியாகவே அவளை கொள்ளையிட்டவன் மொத்த வேட்கையையும் ஒற்றை முத்தத்தில் வெளியிட்டுக் கொண்டிருந்தான்.

அவள் மூச்சுக்கு போராடவும் முயன்று அவளை விடுவித்தவன் அவள் கழுத்தை சுற்றி கையை போட்டு தன்னோடு இழுத்துக்கொண்டு தன் உடலோடு குழைத்துக் கொண்டான் அவளை. கிட்டத்தட்ட அவள் உடல் முழுவதும் அவன்மேல் படும்நிலையில் அவள் இருக்க, இதற்குமேல் இங்கு இருக்கமுடியாது என்று தோன்றவும் சில நொடிகளில் அவனிடம் இருந்து விலகி எழுந்து கொண்டாள் அவள்.

அவள் அந்த அறைக்குள் செல்ல, அவள் பின்னால் எழுந்து அவன் செல்ல கட்டிலில் அமர்ந்திருந்தாள் அவள். அவளை தாபத்தோடு நெருங்கியவன் அதே வேகத்தில் ஆக்கிரமிக்க, இம்முறை தயங்காமல் அவனை எதிர்கொண்டாள் அவள். உக்கிரம் தணிந்து மேற்கில் இறங்கும் சூரியனைப்போல சுட்டெரித்து அவளை குளிர்வித்தவன் கட்டிலில் விழுந்து அவளையும் இழுத்து தன் நெஞ்சில் போட்டுக் கொண்டான்.

அவள் கண்களை பார்க்க, கண்மூடி இருந்தவள் சிரிப்போடு அவன் நெஞ்சில் படுத்திருந்தாள். அவளை புரட்டி அவள் முகத்தை நன்றாக பார்க்குமாறு படுக்க வைத்தவன் அவள் மீது படர்ந்து அவளையே பார்க்க அந்த குறுகுறுப்பில் கண்களை திறந்தவள் அவனை என்ன என்பதுபோல் பார்க்க அவள் இதழ்களை மெல்லியதாக தீண்டியவன் “வேந்தனை பிடிச்சிருக்கா… ” என்று அபத்தமாக கேட்க,சிரிப்பு வந்துவிட்டது அவளுக்கு.

அவன் கேள்வியில் தன்னை மறந்து சிரித்தவள் “இந்த கேள்விக்கு பதில் வேந்தனுக்கு தான் தெரியணும். தாமரை சொல்லமாட்டா..” என்று கூறிவிட, “ஓஹ்” என்றவன் “சரி அப்போ இதுக்கு பதில் சொல்லு.. வேந்தனுக்கு தாமரையை பிடிச்சிருக்கா..” என்று கேட்க

“இந்த கேள்வியே தப்பு. வேந்தன் வேற தாமரை வேற இல்ல. இந்த வேந்தனோட துடிப்பே தாமரைதான்” என்று அவன் நெஞ்சை தொட்டுக் காட்டியவள் “அந்த திமிர்ல தான் வேந்தன் பார்த்துப்பான்ங்கிற நம்பிக்கையில தான் தாமரை. அவன் இல்லாம அவள் இல்லவே இல்ல நிச்சயமா… இப்போ நீங்க சொல்லுங்க வேந்தனுக்கு தாமரையை பிடிக்குமா இல்லையா ??” என்று புருவம் உயர்த்த அவள் பதிலில் அசந்து போனவனாக அவளை மீண்டும் சிறையெடுக்க முற்பட்டான் அவன். சிறைப்பட்டவளும் புன்னகையோடு அவன் கைக்குள் அடங்கியது தான் அதிசயம் அங்கே…….

——————–சுபம் ———————–

Advertisement