Advertisement

அத்தியாயம் 9

 

               தாமரை மில்லில் இருந்து அழுதுகொண்டே கிளம்பவும், வாசலில் நின்றிருந்த மதிமாறனுக்கும்,அன்புவுக்கும் என்ன நடந்தது என்று ஒன்றும் புரியாமல் போக, இருவரும் வேந்தனிடம் செல்ல அவனோ கண்களை மூடி அந்த கயிற்று கட்டிலில் படுத்துவிட்டிருந்தான். மதி அவன் அருகில் அமர்ந்தவன் அவன் கையில் அடித்து

          ” என்னடா சொன்ன அந்த பிள்ளையை. அழுதுட்டே போறா. என்னடா பண்ணி தொலைச்சஎன்று அவன் கத்தவும்

        ” என்ன பண்ணிட்டேன்.ஒன்னும் பண்ணல விடு. நீ எதுக்கு இங்க வந்து  உட்கார்ந்திட்டு இருக்க. உனக்கு டிரான்ஸ்போர்ட்ல வேலை எதுவும் இல்லையா கெளம்புஎன்றுவிட

     மதி அவனை முறைத்தவன்என்னடா உன் பிரச்சனை. உடம்பை கெடுத்துட்டு வந்து படுத்துட்டு இருக்க. பார்க்க வந்த பொண்ணையும் அழவச்சு அனுப்பிட்டு என்கிட்ட வேற கேள்வி கேக்கறியாஎன்று அவனை திட்டினான்.

       வேந்தன்ஆமாடா. திட்டிட்டேன் அவளை. நீங்க எல்லாம் பஞ்சாயத்து பண்ணுங்க. போய் வேலைய பாருடா. வந்துட்டான். இனி உனக்கு இந்த வேலை இருக்காது நானே வேண்டாம்னு சொல்லிட்டேன் அவகிட்ட. இனி அவளும் வரமாட்டா. நானும் அவளைத்தேடி போகமாட்டேன்

     “போ. போய் உன் அப்பாகிட்ட சொல்லு. அவர் தங்கச்சி பொண்ணை பேசி முடிச்சாலும் கூட சரிதான். தாலி கட்றேன். போய் சொல்லுடா ரொம்ப சந்தோஷப்படுவாருஎன்று அவனையும் குதற

         ” அப்பா ஏற்கனவே பேசி முடிச்சிட்டாரு.இன்னிக்கு சாயங்காலம் பெரிய வீட்ல வச்சு தாம்பூலம் மாத்தி, பொண்ணுக்கு பூ வைக்கிறாங்க. கூடவே மதிக்கும் மாப்பிள்ளை பார்த்து முடிச்சிட்டாங்க அவளுக்கும் இன்னிக்கே பேசி முடிக்கிறோம். சாயங்காலம் வந்து சேரு.” என்றவன் அங்கிருந்து நகர, அவன் சொல்லிய வார்த்தைகளில் அதிர்ந்து நின்றான் வேந்தன்.

 

     அவன் பின்னால் ஓடியவன்டேய் என்னடா சொல்ற.யாரை கேட்டு முடிவு பண்ணீங்க நீங்க.” என்று கத்த அவனோ பதில் சொல்லாமல் புன்னகைத்தவன்யாரை கேக்கணும். நாங்க பேசி முடிச்சிட்டோம் அவ்வளவுதான். உனக்கு இதுக்குமேல விவரம் வேணும்ன்னா வீட்டுக்கு வந்து அம்மகிட்ட கேட்டுக்கோஎன்றவன் பைக்கில் ஏறிக் கிளம்பிவிட்டான்.

 

           அவன் சென்ற அடுத்த பத்து நிமிடங்களில் வீட்டை அடைந்தவன் நேராக சென்று நின்றது ரங்கநாயகியின் முன்புதான். அவரிடம் சென்றுஎன்ன நினைச்சிட்டு இருக்கீங்கமா நீங்க. யாரை கேட்டு எனக்கு கல்யாணம் பேசி முடிச்சிங்கஎன்று அவரிடம் கத்த

            ரங்கநாயகி அவனை முறைத்தவர் பின் நிதானமாகயார்கிட்ட கேட்கணும்.” என்று கேட்க

 

       “என்கிட்ட கேட்க வேண்டாமா. நான் தானே தாலி கட்டணும்.”

நீ என் பிள்ளை தானே. அப்போ நான் முடிவெடுத்தா போதும்.உன் விருப்பத்துக்கு விட்டுதான் இந்த நிலைமைக்கு வந்து இருக்கஎன்று அவன் தோற்றத்தை சுட்டிக்காட்ட

 

            “ஐயோ மாநான் உங்க பிள்ளை தான். ஆனா அதுக்காக எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியுமா. ஏன்மா என் நிலைமையை யோசிக்க மாட்ரிங்க. என்னால கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாது.”

 

        “ஓஹ். உன்னோட சேர்த்து உன் தங்கச்சிக்கும்தான் பேசி முடிச்சு இருக்கோம். உன் வாழ்க்கையோட சேர்த்து அவ வாழ்க்கையும் நாசம் பண்ணிடு.உனக்கு அதுதானே வேணும். அதுக்கு தான இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க. என்னை நிம்மதியாவே இருக்க விடமாட்டல நீ. பெரியவங்க என்ன சொன்னாலும் கேட்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிருக்கியாஎன்று அவனிடம் பொரிந்து கொண்டிருந்தவர் முடிக்கும்போது மூச்சுவாங்க அப்படியே அமர்ந்துவிட வேந்தன் அதிர்ந்து அவர் அருகில் அமர்ந்தவன்மா என்ன பண்ணுது. என்ன ஆச்சுமா.” என்று பதறவும்

              அவன் கையை தட்டி விட்டவர் நெஞ்சை பிடித்துக் கொண்டுஒன்னும் ஆகல. உயிரோட தான் இருக்கேன்.. இங்க பாரு வேந்தாநான் முடிவு பண்ணிட்டேன் இந்த கல்யாணம் நடந்தே ஆகணும்.இல்ல…” என்று ஒரு விரல் நீட்டி அவனை மிரட்டியவர் எழுந்து தன் அறைக்கு சென்றுவிட்டார்.

              அவர் சென்ற பிறகும் கூட நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்திருந்த வேந்தனின் நிலைதான் மிகவும் மோசமாக இருந்தது. என்னதான் தாமரையிடம் வாய் கிழிய பேசிவிட்டாலும் தன்னால் அவளை மறக்கவோ, இல்லை அவளை விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்வதோ இந்த ஜென்மத்தில் முடியாது என்று அவனுக்கு தெரிந்தே இருந்தது. இன்று அவளிடம் அவன் கத்தியது கூட என் காதலுக்கு எந்த எதிர்வினையும் இவளிடம் இல்லையா என்ற ஆதங்கத்தில் தான்.

              ஆனால் அதற்காக அவளை விட்டு இன்னொரு பெண்ணை மணப்பது எல்லாம் சாத்தியமற்ற ஒன்று என்று நினைத்தவனுக்கு தாயின் பிடிவாதம் கவலை கொடுக்க, அவரை எப்படி சமாளிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான் அவன். எப்படியும் மாலை அவரோடு செல்லக்கூடாது என்று முடிவெடுத்தவன், என்ன சொல்வது என்று இப்போதே யோசிக்க ஆரம்பித்திருந்தான்.

           இந்த யோசனையிலேயே தன் அறைக்கு வந்து விட்டிருந்தவன் சட்டையை கூட மாற்றாமல் அப்படியே கட்டிலில் விழ, அவன் கண்முன் அப்போதும் தாமரை தான் உலா வந்தாள். இன்று மிகவும் அதிகமாக பேசிவிட்டோமோ அவளை. என்ன செய்து கொண்டிருப்பாள் அழுது கொண்டிருப்பாளா என்று நினைத்தவன் வேற என்ன தெரியும் ஓன்று அழுவா இல்லை அவளை கட்டிக்கோ இவளை கட்டிக்கோன்னு என்னை சாகடிப்பா வேற என்ன செய்திட போறா பைத்தியக்காரி. இவ எல்லாம் டாக்டர். இவ சொல்ற மாதிரி வேற எவளையாச்சும் கட்டிக்கிட்டேனா தெரியும் இவ நிலைமை. செத்தே போய்டுவா. அது புரியாம பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்கா. என்று அவளை தன் இஷ்டத்திற்கு வசைபாடியவன் அவள் கொடுத்திருந்த மருந்துகளின் வீரியத்தில் அப்படியே கண்ணயர்ந்திருந்தான்.

             இவன் இப்படி இருக்க தாமரையோ மில்லிலிருந்து கிளம்பியவள் வீட்டுக்கு செல்ல மனமில்லாமல் நீண்ட நேரம் கோவிலில் அமர்ந்திருந்தவள் நீண்ட நேரம் கழித்தே தன்னை சமன்படுத்திக் கொண்டு வீட்டிற்கு திரும்பி இருந்தாள். அப்போதும் சாப்பிட அழைத்த விசாலத்திடம்பசியில்லைஎன்று கூறிவிட்டு தன் அறையில் முடங்கியவளுக்கு என்ன முயன்றும் மீண்டும் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

               எப்படி எல்லாம் பேசிவிட்டான். என் மனம் இவனுக்கு புரியாதா ? என்னை புரிந்துகொள்ளவே மாட்டானா? செவ்வியின் தங்கை என்றால் எனக்கும் தங்கை போல தானே அதை யோசித்து தானே இவனிடம் ஆரம்பம் முதலே விலகி நின்றேன், என்னை விடாமல் விரட்டி காதலை தந்தவன் இன்று என்னை தூக்கி எறிந்துவிட்டானே என்று கலங்கியவள் என் அப்பாவின் மரியாதை மட்டும்தான்  எனக்கு முக்கியமா ? இவன் எனக்கு முக்கியம் இல்லையா.

 

                   என்ன நினைத்துவிட்டான் இவன் என்னை ? நான் வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ள வேண்டுமாமே, அதை சொல்ல இவன் யார் ? இவனுக்காக திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்தவள் நான்.அப்படி இருக்க இவன் என்னை போக சொல்வானா. என்று கோபமாக நினைத்தவள் இவனுக்கு என்னோடு திருமணம் பேசியது தெரியவே தெரியாதா இல்லை தெரிந்தும் என்னை பிடிக்காமல் அப்படி சொன்னானா ?என்று அதுவேறு கவலையை கொடுக்க

 

          எதுவாக இருந்தாலும் இதற்குமேல் என்னால் என் உணர்வுகளுடன் போராட முடியாது. எதுவாக இருந்தாலும் விதிப்படி நடக்கட்டும் அவனுக்கு விருப்பமில்லை என்றால் திருமணத்தை மறுத்து சொல்லட்டும் என்று கண்ணீரோடு நினைத்துக் கொண்டவள் அதற்காக அத்தனை வேதனைப்பட்டாள்.ஆனால் அடுத்தநொடியேநெல்லையப்பா. என்னால முடியாது. என் வேந்தனை எனக்கே கொடுத்திடு, எங்க கல்யாணத்தை நல்லபடியா முடிச்சிக் கொடுப்பாஎன்று வேண்டுதல் வைக்க ஆரம்பித்துவிட்டாள்.

                இப்படி இருதலை கொல்லி எறும்பாக அவளுக்கு அவளே போராடி ஒரு நிலையில் அவள் அலுத்துபோய் அவளுக்கே தெரியாமல் உறங்கி இருக்க, வெகுநேரம் கழித்து விசாலம் மகளை எழுப்பியவர் அவளை குளித்துவிட்டு வர சொன்னார். எதற்கு தயாராகிறோம் என்று புரிந்தாலும் அதற்கான மகிழ்ச்சியே துளிகூட இல்லை அவளுக்கு.

                    வேந்தனை மனதால் பூஜித்தவள் தான் ஆனால் அவனின் குணநலன்கள் முழுதாக தெரியும் அளவுக்கு இன்னும் நெருக்கம் இல்லையே பெண்ணுக்கு.இதுவரை மொத்தமாகவே அவன் இவளோடு பேசிய நேரங்களை விரல் விட்டு எண்ணி விடலாம் அந்த அளவுதான் இவர்களின் பேச்சு. இதில் பலமுறை அவளிடம் காதலை மட்டுமே யாசித்தவன் கடைசி இரண்டு மூன்று முறையாக கோபமாக மட்டுமே பேசி இருந்தான்.

            இப்போதும் அவன் மதியம் பேசிய வார்த்தைகளின் கணம் தாங்காமல் என்ன செய்வானோ நான் வேண்டாமா இவனுக்கு? என்று பயந்துக் கொண்டிருந்தாள் பெண்.நிச்சயம் தாமரை தைரியமான பெண்தான்.துடுக்குத்தனம் நிறைந்தவள். ஏன் அவளின் தோழி சக்தியின் வாழ்வில் இவள் கொடுத்த தைரியம் சக்திக்கு எப்போதும் துணை இருந்தது. ஆனால் இன்று மனம் நிறைந்தவனின் புறக்கணிப்பு முற்றிலுமாக புரட்டி போட்டிருந்தது அவளை.

     வேந்தன் பற்றிய நினைவுகள் அவளை அலைக்கழித்து கொண்டிருக்க, விசாலம் கதவை தட்டியதில் சுயநிலைக்கு வரப்பெற்றவள் வேகமாக குளித்து முடித்து வெளியே வந்து  அன்னை எடுத்து வைத்திருந்த புடவையை அணிந்து தயாராகவும், விசாலம் உணவுத்தட்டை எடுத்து வந்தவர் அவள் மறுத்தபோதும் விடாமல் ஊட்டி விட்டே சென்றார்.

                                          அங்கு வேந்தனின் வீட்டிலோ அவன் அறைக்கு சென்ற சிறிது நேரத்தில் செவ்வி தன் அத்தையிடம் வந்தவள்  ” பாவம் அத்தை. அவர் முகமே மாறிடுச்சு. நீங்க ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கீங்க.உண்மையை சொல்லிடலாம்ல. எதுக்கு இப்படிஎன்று கேட்க

 

     ரங்கநாயகி கண்ணை உருட்டி அவளை முறைத்தவர்என்ன கொழுந்தன் மேல பாசம் பொங்குதா. ரெண்டு நாளா என்ன பாடு படுத்திட்டான் நம்மை எல்லாம். அவனும் கொஞ்சநேரம் படட்டும். நீ அமைதியா இரு. இன்னிக்கு ஒருநாள் தானே உன் கொழுந்தன் அனுபவிக்கட்டும்.உன்னை எத்தனைநாள் திட்டி இருப்பான் விடுஎன்று அவர் கூலாக சொல்ல

 

          ” பாவமத்தை. எப்படி இருந்தாலும் சாயங்காலம் தெரிஞ்சிடும். அதுக்கு நீங்களே சொல்லிடலாம்ல. நீங்க பொய் சொன்னது தெரிஞ்சுது அப்புறம் மலை இறக்கறது கஷ்டம் ஆகிடும் பார்த்துக்கோங்கஎன்று அவள் கூற

 

        ” அட போடி. என் சின்ன மருமக கெட்டிகாரி. அதெல்லாம் அவ இவனுக்கு மேல பதில் கொடுப்பா. அதனால இவன் மலையேறினா அவளை வச்சு நான் இறக்கிக்கறேன்என்று அவர் நக்கல் பேச, செவ்வி அவரை பார்த்து சிரித்துவிட்டு சென்றுவிட்டாள்.ஆனால் இவருக்கு எப்படி தெரியும் இவர் மகன் முதலில் அவளை மிரட்டி அழவைத்துவிட்டுதான் தன்னிடம் வந்தான் என்பது. தாமரை பேசுவாள் என்றால் இவன் பேசாமலே அவளையும் ஆட்டி வைப்பான் என்று இன்னும் அவருக்கு தெரியவில்லை

     ஒருவழியாக அன்று மாலை சுந்தரபாண்டியன், மாணிக்கம் இருவரும் குடும்பத்தோடு பெரிய வீட்டில் கூடி இருக்க, ஆதித்யனும் நேரமே வந்திருந்தான். பெண்கள் இருவரும் கீழே பாட்டியின் அறையில் இருக்க சக்தியும் அவர்களுடன் அங்கே இருக்க, முற்றத்தில் இரு குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களும், வேதமாணிக்கம்,சிவகாமி தேவி மற்றும் ஆதித்யனும் அமர்ந்திருந்தனர். இவர்களுடன் ஆதித்யன், நந்தினியின் தந்தை கந்தகுருவும் அமர்ந்திருக்க மாணிக்கத்திற்கு இருந்த கொஞ்ச நஞ்ச சஞ்சலமும் பறந்துவிட்டது.

 

            ஆனால் முக்கியமான ஒருவன் ரங்கநாயகியின் போனை எடுக்காமல் இப்போது வரை அவரின் பிபியை ஏற்றிக் கொண்டிருந்தான்.ஆம் வேந்தன்தான். இவர்களுடன் கிளம்பியவன் அவசரமாக மில்லில் இருந்து ஒரு அழைப்பு வரவும் உடனே வருவதாக கூறி சரியாக இவர்கள் கிளம்பும்நேரம் வீட்டிலிருந்து கிளம்பி இருந்தான். நல்ல நேரம் தொடங்கிவிட்டதால் இவர்களும் அவனை விட்டு மற்றவர்கள் கிளம்பி இருந்தனர்.

 

          இங்கு வந்து கிட்டத்தட்ட அரைமணிநேரம் கடந்திருக்க இன்னும் அவன் வந்தபாடில்லை. அவனுக்காக காத்திருப்பதை விட்டுவிட்டு தனஞ்செயன்மதியழகியின் திருமணத்தை உறுதி செய்வோம் என்று முடிவு செய்த பெரியவர்கள் வேதமாணிக்கம் முன்னிலையில் வெற்றிலைபாக்கு பழம் வைத்து இருவரும் மாற்றி கொள்ள செவ்வி மதியழகியை அழைத்து வரவும் விசாலாட்சி தான் கொண்டு வந்த பூவை அவள் தலையில் வைத்து அவளை நெட்டிமுறித்து, கன்னம் வழித்து முத்தமிட்டார்.

 

             அவள் அழைத்து வரப்பட்டதிலிருந்து தனஞ்செயன் பார்வையை அவளிடம் இருந்து திருப்பாமல் அவள் முகத்தையே அளவிடுவதை பார்த்துக் கொண்டிருக்க,அவளோ இவன் இருக்கும் பக்கம் கூட திரும்பவில்லை என்பதைவிட அவள் யாரையுமே நிமிர்ந்து பார்க்கவில்லை.பெரிதாக வெட்கம் இல்லாவிட்டாலும் அவளுக்கு தனாவின் மேல் வண்டிவண்டியாக பயம் இருந்தது. அதைக் கொண்டு அவள் நிமிரவே இல்லை . கடைசியாக விசாலம் அவள் முகத்தை நிமிர்த்தவும் அவர் முகத்தை பார்த்து அவள் புன்னகைக்க அந்தப்புன்னகை அத்தனை அழகாக இருந்தது அவளுக்கு.

 

                    அவள் மனம் முழுவதும் ஒருவித பதட்டம் சூழ்ந்திருக்க, இந்த சூழலை எப்படி கையாளுவது என்று தெரியாமல் போக அமைதியாகவே இருந்தாள்.பூ வைத்து முடித்ததும் விசாலம் அவளை உள்ளே அனுப்பாமல் தன் பக்கத்தில் வேறு அமர்த்திக் கொள்ள சங்கடமாகவே அமர்ந்திருந்தாள்.

                  இதுவரை தாமரையுடன் நல்ல உறவு இல்லை அவளுக்கு. அதுவும் வேறு உறுத்திக் கொண்டிருக்க, தாமரை ஏதும் பேசிவிடுவாளோ என்று அதுவேறு கவலையாக இருந்தது. என்ன இருந்தாலும் ஆதித்யனை நினைத்து செய்த பைத்தியக்காரத்தனங்கள் தாமரைக்கும் தெரியும் என்பது அவளுக்கு உள்ளுக்குள் ஒரு மூலையில் உறுத்திக் கொண்டே இருந்தது.

                   ஆனால் தாமரை இது எதைப்பற்றியும் சிந்திக்கவே இல்லை. அவளுக்கு தெரியும் மதி எப்படி இருந்தாலும் தன் அண்ணன் அவளை தனக்கு ஏற்றதுபோல் மாற்றிக் கொள்வான் என்று.அவளுக்கு அத்தனை நம்பிக்கை இருந்தது அவள் அண்ணனிடம். ஆனால் அவளது இப்போதைய கவலை எல்லாம் இப்போதுவரை வந்து சேராமல் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கும் அவள் வேந்தனை நினைத்துதான்.

 

          இவர்கள் மதியழகிதனாவின் திருமணம் பற்றி பேசிமுடித்து கூட அவன் வரவில்லை. ஆதித்யன் எப்போதும் போல் அன்புவை அழைத்தவன் அவன் மூலம் வேந்தனிடம் பேச, அவனிடமும் பிடிகொடுக்காமல் அவன் பேச அப்போதுதான் ஆதித்யன் சந்தேகப்பட்டவன் மதியழகி திருமண பேச்சுவார்த்தை இன்னும் தொடங்காமல் இருப்பதாகவும், இவனுக்காக மாப்பிளை வீட்டினர் காத்திருப்பதாகவும் கூறி இதற்குமேல் உன்விருப்பம் என்று வேறு சொல்லிவிட்டு போனை அணைத்துவிட

 

           எப்படியும் ஒத்துக் கொள்ளப்போவதில்லை. வேண்டாம் என்று நேரில் சென்று சொல்லிவிடுவோம். என்னால் என் தங்கையின் வாழ்வு தடை படவேண்டாம், அவள் திருமணத்தை மட்டுமாவது பேசி முடிப்போம் என்று நினைத்து கிளம்பிவிட்டான். அண்ணன் தங்கை இருவருக்கும் ஒரே வீட்டில் பெண் ,மாப்பிளை பார்த்திருப்பார்கள் என்று அவன் கொஞ்சம்கூட யோசிக்கவே இல்லை.

 

         அவன் எண்ணம் முழுவதும் திருமணத்தை மறுப்பதாக இருக்க,அவன் தாய் கூறிய விஷயத்தில் இருந்த ஓட்டைகளை அவன் கவனிக்கவே இல்லை. இப்போதும் கூட அதே மனநிலையில் அவன் பெரியவீட்டை அடைந்தவன் உள்ளே நுழைய அங்கு அமர்ந்திருந்தவர்களை பார்த்து ஒரு நொடி ஒன்றும் புரியாத நிலை.

 

           அவன் திருதிருவென முழிக்க, ஆதித்யன் சூழ்நிலையை கையில் எடுத்துக் கொண்டவன் எழுந்து அவனை தோளோடு அணைத்து கொண்டுமுகம் கழுவிட்டு வரலாம் மாப்பிள்ளை. மாப்பிளை நீ இப்படி வேர்த்து போய் வந்து நிற்கிறியேஎன்று பேசிக்கொண்டே அவனை உள்ளே அழைத்து சென்றான். மனம் முரண்டினாலும் ஆதித்யனோடு அமைதியாக வேந்தன் உள்ளே செல்ல மதிமாறன் தனாவின் அருகில் அமர்ந்திருந்தவர் தானும் எழுந்து அவர்களுடன் சென்றான்.

 

               உள்ளே சென்ற வேந்தன்என்னடா நடக்குது இங்க, என்ன பண்ணிட்டு இருக்கீங்க எல்லாரும்என்று கத்த, அதற்குள் மதியும் அங்கு வந்திருக்க ஆதித்யன்பார்த்தா தெரியல, நீ தூக்கிட்டு போய் தாலி கட்டணும்ன்னு பிளான் பண்ண, இப்போ அவங்களே தூக்கி கொடுக்கறாங்கஎன்று கூற

 

         வேந்தனுக்கு காதில் விழுந்ததை நம்ப முடியாத ஒருநிலை. ஆதித்யனை பார்த்தவன் இவன் சொல்வது உண்மையா என்பதுபோல் மதியை பார்க்க அவனும் தலையசைக்கவும் அத்தனை நிம்மதி அவன் முகத்தில்.ஆனால் அதெல்லாம் ஒருநொடி தான்.அடுத்தநொடி முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டவன்என்கிட்ட சொல்லணும்ன்னு தோணவே இல்லைல உங்க யாருக்கும்.” என்று கேட்டிருந்தான் மதியை பார்த்து.

 

            மதியத்திலிருந்து அவன் பட்டிருந்த வேதனை அப்படி. அந்த வேதனை அவனை பேசவைத்தது.மதி ஏதோ சொல்ல வர அவனை கைகாட்டி தடுத்தவன் அவனுக்கென்ன அங்கு வைத்திருந்த உடையை எடுத்துக் கொண்டு சென்று மாற்றி வந்தவன் வெளியில் சென்றுவிட்டான். ஆதித்யனும் மதியும் அவனை தொடர்ந்து வந்து அமர்ந்துகொள்ள மீண்டும் இவர்கள் திருமணத்திற்கு தாம்பூலம் மாற்றி கொண்ட பெரியவர்கள் தாமரையை அழைக்க சக்தி அவளை அழைத்து வந்தாள்.

 

         ரங்கநாயகி செவ்வியை அழைத்து தாமரைக்கு பூ வைக்க சொன்னவர், அவள் வைத்தவுடன் தாமரையை கட்டிக்கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட கண்கள் கலங்கி போனது தாமரைக்கு. மெதுவாக நிமிர்ந்தவள் வேந்தனை லேசாக பார்க்க,அவன் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.மற்றவர்களுக்கு சாதாரணமாக தெரிந்தாலும் அவளுக்கு தெரியாதா அவளவனின் பார்வை மாற்றம்.

 

             இரண்டு குடும்பங்களும் பேசி முடித்து அடுத்து வரும் வளர்பிறை முகூர்த்தத்தில் திருமணத்தை நடத்துவதாக முடிவு செய்தவர்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த இரவு உணவை முடித்துவிட்டு, நீண்ட நேரம் கழித்தே அங்கிருந்து விடைபெற்றனர். அத்தனை நேரமும் வேந்தன் எல்லாரிடமும் சகஜமாக காட்டிக் கொண்டாலும் அவன் அப்படி இல்லை என்பது அவனை பெற்றவருக்கும், அவனுடைய அன்பை பெற்றவளுக்கும் தெரிந்தே இருந்தது.

 

 என்ன செய்ய காத்திருக்கிறானோ ??

 

           

            

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement