Advertisement

அத்தியாயம் 8

சுந்தரபாண்டியன் மாணிக்கத்திடம் பேசிமுடித்து விட்டு வீடு திரும்பியவர் தன் மனைவியிடம் நடந்ததை கூறி முடிக்க ரங்கநாயகியும் மகிழ்ந்து போனவராக எழுந்து சென்று சாமியறையில் விழுந்து வணங்கிவிட்டு வந்து அமர்ந்தவர் அன்று மாலை நிகழ்விற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட ஆரம்பித்தார். சுந்தரபாண்டியன் தான் அவரை தடுத்தவர்
“முதல்ல மதிக்கிட்ட பேசு. அவ என்ன நினைக்கிறான்னு தெரியனும்ல” என்று கூற
“அவ என்ன சொல்லப்போறா . உங்களுக்கு தெரியாதா” என்று ரங்கநாயகி கேட்கவும்,
“அந்த பையன் மதிக்கிட்ட நடந்துகிட்ட விதத்துக்கு அவ என்ன வேணாலும் முடிவு எடுக்கலாம். முதல்ல அவகிட்ட பேசு. எடுத்து சொல்லு” என்றுவிட
ரங்கநாயகி மதியின் அறைக்கு செல்ல கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தவள் எழுந்து அமர்ந்தாள். அவள் அருகில் அமர்ந்தவர் மெதுவாக சுந்தரபாண்டியன் மாணிக்கத்திடம் பேசியதை சொல்லியவர்
“அவங்க உன்னை பொண்ணு கேக்குறாங்க மதிம்மா. உன் அண்ணனுக்கும் தாமரையை முடிச்சிக்கலாம்ன்னு பேசி இருக்கு. நீ சொல்ற பதில்ல தான் இருக்கு” என்றவர் மேலும்
” உன் அப்பா மாணிக்கம் அண்ணனுக்கு வாக்கு கொடுத்து இருக்காரு மதி. அதோட அவனும் நல்ல பையன் தான். நீ நடந்ததை வச்சு ஒரு முடிவுக்கு வராத. தனா நல்ல பையன் மதி.குடும்பமும் நல்ல குடும்பம் ” என்று அடுக்கிக் கொண்டே போக, அதிலேயே தெரிந்தது அவர் இந்த சம்பந்தத்தில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்று.

மதியழகி ஒரு நொடி தான் இந்த குடும்பத்தில் பிறந்து மகளாக என்ன நல்லது செய்தோம்.இந்த திருமணம் எல்லோருக்கும் மகிழ்ச்சி கொடுக்கும் என்றால் ஏன் செய்து கொள்ள கூடாது ?. என் அண்ணனின் வாழ்வும் சீராகிவிடுமே என்று முதல் முறையாக தன் குடும்பத்திற்காக யோசித்தவள் சரி என்று தலையாட்டி இருந்தாள்.

ரங்கநாயகி மகளின் பதிலில் மகிழ்ந்து போனவர் அவளை நெட்டி முறித்து அணைத்துக் கொண்டார். மகிழ்ச்சியில் கண்கள் கூட கலங்கி விட்டது அவருக்கு. தாயின் மகிழ்ச்சியில் தானும் சிரித்தவள் அவரை அணைத்து கொள்ள அந்த நொடி இந்த திருமணத்திற்கு தயாராகி விட்டது அவள் மனம்.
ஆனால் அந்த உக்கிரமூர்த்தியின் நினைவும் வர, மேலும் அவன் பார்வையும் நினைவுக்கு வந்து குளிரை பரப்பியது அவளுக்குள். ‘கடவுளே அவனை பார்த்தாலே பயமாக இருக்கிறதே நான் எப்படி அவனோடு’ என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டவள் வெளியில் சிரித்த முகமாகவே இருந்தாள்.
ரங்கநாயகி தன் மகளின் சம்மதத்தை கணவரிடம் கூறியவர் வேந்தனை பற்றி கவலைப்படவே இல்லை.ஏன் அவனிடம் ஒரு வார்த்தை கூட கூறவில்லை அவர். அவனும் அரிசி மில்லே கதி என்று கிடக்க வீட்டில் நடந்தது எதுவும் தெரியாமலே போனது அவனுக்கு. மாலை தாம்பூலம் மாற்றிக் கொள்ள தேவையான ஏற்பாடுகளை பெற்றவர்கள் செய்து கொண்டிருக்க, மாப்பிள்ளை காதல் நோயில் கிடந்தான் கிட்டத்தட்ட.
மாணிக்கம் தன் முடிவை மகனிடம் கூறியவர் மேலும் சுந்தரபாண்டியனிடம் பேசி முடித்ததையும் அவனிடம் தெரிவிக்க தந்தை முடிவு செய்துவிட்டு தான் தன்னிடம் சொல்கிறார் என்பதை உணர்ந்துகொண்டவன்
“எனக்கு எந்த மறுப்பும் இல்லப்பா. ஆனா அந்தப்புள்ள என்ன நினைக்குதுன்னு தெரியனும்ல. ஏற்கனவே அவளை தூக்கிட்டு வேற போய் ஏழரைய கூட்டி இருக்கேன். இதுல அடுத்தநாளே நீங்க கல்யாணம் பேசி முடிச்சிட்டு வந்து நிக்கறீங்க. அந்த பொண்ணு என்ன சொல்லுதுன்னு கேட்க சொல்லுங்க.அவளுக்கு சம்மதம்ன்னா எனக்கு சரிதான்.” என்று தெளிவாக கூறிய மகனை மெச்சுதலாக பார்த்தவர்

“நான் பார்த்துக்கறேன் தம்பி. உனக்கு என்ன அந்த புள்ள கிட்ட கேக்கணும் அவ்ளோதானே. நானே கேட்டுடறேன்.” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் அவர். வீட்டிற்கு சென்றவர் விசாலம் மற்றும் தாமரையிடம் விஷயத்தை கூற விசாலம் “எனக்கு அன்னைக்கே சம்மதம் தான். நீங்க தான் ஊடால ஏதேதோ பேசி, குட்டைய குழப்பி விட்டு இம்புட்டு தூரத்துக்கு கொண்டு வந்துடீங்க” என்று நொடித்துக் கொள்ள
“அன்னிக்கு பேசி இருந்தா ஒரு கல்யாணம் தான். இன்னிக்கு ரெண்டு கல்யாணம் பேசி முடிச்சிருக்கேன்ல சாலா. அதா நெனச்சுப்பாரு.” என்று அவர் பெருமைப்பட
” உங்களால தான் என் புள்ள அந்த பொண்ண தூக்குற அளவுக்கு இந்த விஷயம் வந்து நிண்டு இருக்கு. அதையும் நெனச்சுப்பாருங்க” என்றவர் “பிள்ளைகளுக்கு கல்யாணம் பேசி முடிச்சிட்டாராம்.இதுல ஒரு பெருமை. பொண்ணுக்கு கல்யாணம் பேசி முடிச்சிருக்கீங்க என்னென்ன வேலை இருக்குனு கணக்கு பண்ணுங்க ” என்று குட்டிவிட்டே சென்றார்.
மாணிக்கம் தன் மகளிடம் ” பாப்பா நீ எதுவுமே சொல்லலையே டா” என்று கேட்க
“நான் என்னப்பா சொல்லப்போறேன். நீங்க சொன்னா சரிதான்.” என்று முடித்துவிட்டாள் அவள்.
அன்று காலையிலேயே வேந்தனை பற்றிய அனைத்து விவரங்களையும், மேலும் தனக்கும் அவனை பிடிக்கும் என்பதையும், முன்தினம் நடந்த விஷயங்களையும் முழுவதுமாக அவள் தனாவிடம் கூறி முடித்திருக்க அதன் பொருட்டே தந்தை திருமணத்தை பற்றி பேசும்போது அமைதியாக இருந்தான் அவன். இப்போது அதை நினைத்து கொண்டவளுக்கு திருமணம் அதுவும் வேந்தனுடனான திருமணம் அளவில்லாத மகிழ்ச்சியை கொடுத்தபோதும், நேற்றைய அவனது செயலை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
“உனக்கு இருக்குடா” என்று மனதில் கூறிக் கொண்டவள் அவன் கையில் கிடைத்தால் அவனை கொன்று போடும் அளவுக்கு வெறியில் இருந்தாள்.
தன் அறையில் அமர்ந்திருந்தவள் ஏதோ புத்தகத்தை படித்துக் கொண்டிருக்க அந்த நேரம் ஒலித்தது அவள் அலைபேசி. யாரென்று எடுத்துப்பார்க்க அன்று வந்த அதே எண்ணிலிருந்து அழைப்பு வரவும் முதல் இரண்டுமுறை எடுக்கவே இல்லை அவள். ஆனால் மீண்டும் மீண்டும் அலைபேசி அடித்துக் கொண்டிருக்க எடுத்தவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க
எதிர்முனையில் அன்பு “தாமரை” என்று அழைத்தவன் பதட்டமாக “தாமரை வேந்தனுக்கு உடம்பு சரி இல்ல தாமரை. கண்ணையே திறக்கல. அனத்திட்டே இருக்கான்.கொஞ்சம்” என்று அவன் பேசிக்கொண்டிருக்க
“உனக்கு அவ்ளோதான் மரியாதை அன்பு. போனை வச்சிடு” என்றவள் அழைப்பை துண்டிக்க போக
“என் அம்மா மேல சத்தியமா அவனுக்கு உடம்பு சரி இல்ல தாமரை. நீ வந்து பாரு” என்றிருந்தான்.
அவளோ மனம் துடித்தாலும், நடந்தது நினைவில் வர “உன் பிரெண்ட்க்கு உடம்பு முடியலைன்னா ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போ. எனக்கு ஏன் போன் பண்ற” என்று கத்தவும்

“அவன் வரமாட்டேன்னு அடம் பிடிக்கிறானே தாமரை. அவன் அம்மா கூட அவன்கிட்ட பேசல. நேத்துல இருந்து அவன் வீட்டுக்கு கூட போகல தாமரை” என்று எடுத்து கூறவும்
“நீ என்ன சொன்னாலும் என்னால வரமுடியாது அன்பு” என்று போனை அனைத்துவிட்டாள்.

“ஏண்டா என்னை இப்படி சாகடிக்குற” என்று மனதில் அவனை திட்டிக் கொண்டவள் தாயிடம் “ஒரு அவசர அழைப்பு உடனே செல்ல வேண்டும்” என்று மட்டும் கூறிவிட்டு கிளம்பி இருந்தாள். அவன் அரிசிமில்லை அடைந்தவளுக்கு அப்போதுதான் அங்கு அனைவரும் இருப்பார்களே என்ன சொல்வது தன்னை இங்கே பார்த்தால் என்ன பேச்சு வரும் என்று தோன்ற அந்த நேரம் அங்கே வந்து கொண்டிருந்தான் மதிமாறன்.
இவளை கண்டதும் அவன் வண்டியை நிறுத்திவிட்டு இவள் அருகில் வந்தவன் “அன்புதான் போன் போட்டான் எனக்கும். என்கூட வா தாமரை.” என்று விட்டு முன்னால் நடக்க தன் பையை எடுத்துக் கொண்டவள் அவனுடன் நடந்தாள். . மதி தாமரையை அழைத்து வந்ததாகவே கூறப்பட்டது அங்கு. அலுவலக அறையில் வேந்தன் கிடத்தப்பட்டிருக்க, சுயநினைவே இல்லாமல் கிட்டத்தட்ட மயங்கி இருந்தான் அவன்
அவனை சுற்றி ஆட்கள் இருக்க, அவன் நிலையை நெஞ்சில் ரத்தம் வடிய சோதித்துக் கொண்டிருந்தாள் அவள்.இரண்டு நாளில் ஒரு மனிதன் பாதியாகி இருந்தான். இரண்டு நாட்களாக சவரம் செய்யாத தாடி, சிவந்து மேலேறியிருந்த கண்கள். களையிழந்து காணப்பட்ட முகம் என்று அவன் ஆளே மாறி இருக்க,அவளால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
இருக்கும் இடம் கருதி தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள் அவனுக்கு வைத்தியம் செய்து கொண்டிருக்க, மதி அவளை உணர்ந்தவனாக அனைவரையும் வெளியேற்றியவன் தானும் அந்த அறையின் வாயிலில் சென்று நின்று கொண்டான்.
அவனுக்கு ஊசியை செலுத்தியவள் வெளியில் வந்து மதியிடம் “கொஞ்சம் சுடுதண்ணி வேணும் மாமா.” என்று கூற, அடுத்த சில நிமிடங்களில் சுடுதண்ணி வந்து சேரவும், தன் கைக்குட்டையை நனைத்து அவன் நெற்றியை துடைத்து விட்டவள், தன் பையில் இருந்த வெள்ளை துண்டை நனைத்து அவன் உடல் கைகால்கள் , நெஞ்சு பகுதி என்று துடைத்துவிட்டு மீண்டும் அவன் உடல் வெப்பநிலையை ஒருமுறை சோதித்துக் கொண்டாள்.

ஆனால் ஒரு நாள் காய்ச்சலுக்கு இவன் ஏன் இப்படி ஆனான் என்று யோசித்தவள் அன்புவை அழைத்து அவன் என்ன சாப்பிட்டான் என்று கேட்க நேற்று மொத்தத்திற்கும் சேர்த்தே இரண்டு இட்லி மட்டுமே உண்டிருந்தான் அவன். கேட்டிருந்த மதிக்கு கஷ்டமாக போக தாமரை வெளிப்படையாகவே அழுதிருந்தாள்.
இவன் ஏன் இப்படி தன்னை வதைத்துக் கொண்டு என்னையும் சித்ரவதை செய்கிறான். அப்படி என்ன காதல் இவனுக்கு தன் உடல்நிலையை கூட கவனிக்காமல் என்று கோபமாக வந்தது அவளுக்கு. இருந்தும் எதுவும் பேசாமல் இருக்கும் சூழல் கருதி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவள் அவன் கண்விழிக்க காத்திருந்தாள். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் கழித்து அவன் கண்திறந்து பார்க்க,தாமரை அதுவரையிலும் கூட அவன் அருகில் தான் அமர்ந்திருந்தாள்.

அவள் தன் முன்னால் இருப்பதை நம்ப முடியாமல் கனவோ என்று நினைத்தவன் மீண்டும் கண்ணை சிமிட்டி பார்க்க அவன் கனவு கலையவே இல்லை. நிஜம் தான் என்று உணர்ந்தவனுக்கு அந்த நிமிடம் அத்தனை கர்வமாக இருந்தது தன் காதலியை எண்ணி. நேற்று தான் ஒரு நாடகம் நடத்தி அவளை வரவழைத்து அடைத்து வைத்து என தான் அத்தனை கேவலங்களையும் அரங்கேற்றி இருக்க, இன்று தனக்கு முடியவில்லை என்று தெரிந்து மீண்டும் என்னை நம்பி கண்களில் கண்ணீர் வழிய வந்து அமர்ந்திருக்கிறாள்.

ஆனால் காதலை கேட்டால் மட்டும் கதை சொல்லுவாள் பைத்தியக்காரி. இவள் கண்களில் வழியும் கண்ணீருக்கு பெயர் காதல் இல்லாமல் வேறென்ன என்று எண்ணிக் கொண்டவனுக்கு அவள் கண்களில் வழிந்த கண்ணீர் அவனுக்காகத்தான் என்றாலும் பெரும் வலியை கொடுத்தது. இப்படி எனக்காக உருகுபவளை எப்படி நான் விட்டுவிடுவேன்,விட்டுவிட்டால் நான் என்ன ஆவேன் ? என்று தன் போக்கில் அவன் உருகிக் கொண்டிருக்க

தாமரை அவன் கண்விழித்ததை கண்டவள் வேகமாக அவன் அருகில் வந்தாள். அவன் எழுந்து அமர முயற்சிக்கவும் அவன் கையை பிடித்து இவள் அவனை எழுப்பி அமர வைக்க, எழுந்து அமர்ந்தவன் எதுவும் பேசாமல் இருக்கவும் தாமரை ஆரம்பித்துவிட்டாள்.

” ஏன் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க நீங்க. இப்படி உடம்ப கெடுத்துகிட்டு என்ன சாதிக்க போறீங்க” என்று அவள் வெடிக்க

அவனோ உச்சகட்ட விரக்தியில் ” சாதிக்கிறதா நானா. வாய்ப்பே இல்லை. விரும்புற உங்கிட்ட எனக்கான காதலை சாதிக்க முடியல. சரி நீங்களாவது பண்ணிவைங்கன்னு பெத்தவங்ககிட்டயும் சாதிக்க முடியல. இனி யார்கிட்டயும் எதுவும் பேசப்போறதில்லன்னு முடிவு எடுத்து தான் இங்க வந்துட்டேன். நீயும் உன் வீட்ல பார்க்கிறவனை கட்டிக்கோ”
“உன் அப்பாவுக்கு அதுதான் கௌரவம். அதோட இனிமே இங்க எல்லாம் வராத. எனக்கு முடியலைன்னா நானே பார்த்துப்பேன். இப்போ நீங்க வந்து பார்த்ததுக்கு ரொம்ப நன்றி. ஆனா இனிமே இவன் செத்துட்டான்னு சொன்னா கூட இந்தப்பக்கம் வராத” என்றவன் சுவற்றில் சாய்ந்து கண்களை மூடிக் கொள்ள
தாமரைக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. தன் வார்த்தைகள் அவனை காயப்படுத்தி இருப்பது புரிய, மேலும் தங்களின் திருமண விஷயமும் அவனுக்கு தெரிந்திருக்கவில்லை என்பதை உணர்ந்தவள் ” ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க. நான் சொல்றதை” எனும்போதே அவளை தடுத்தவன்

“என்ன சொல்லப்போற தாமரை. என்ன அந்த நந்தினியை கட்டிக்கணும் அதான. உன் விருப்பம் அதுதான்ன்னா அதையும் கூட பண்ணிட்றேன். நீ கவலைப்படாத

“என்னால உன் அப்பாவோட மரியாதைக்கு ஒரு களங்கமும் வராது” என்று அவளை வார்த்தையால் அடிக்க அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
கண்களை துடைத்துக் கொண்டவள் கோபமாக ” எனக்கு என் அப்பாவோட மரியாதை எப்பவும் முக்கியம்தான். அது எப்பவும் மாறாது.” என்று திடமாக கூற
” நானும் உன்னை மாத்திக்கவே சொல்லலையே. இனி நானும் உன்னை தொந்தரவு பண்ணமாட்டேன்னு தான் சொல்றேன்”
கண்களில் வடியும் கண்ணீரோடு அவனை பார்த்தவள் “ரொம்ப பேசிட்டிங்க வேந்தன். போதும்” என்றுவிட

” என்னடி பேசிட்டேன் நான். நீயும் இதை தான கேட்ட, மறந்துபோச்சா. நானும் கிட்டத்தட்ட மூணு வருஷமா உன் பின்னால வந்துட்டு இருக்கேன்.உன் மனசாட்சியை தொட்டு சொல்லு.நான் உன்னை பார்க்கிறது உனக்கு தெரியாது.உனக்கு பிடிக்கலைன்னா முத நாளே என் பின்னாடி வராத ன்னு சொல்லி இருக்கலாம்ல”
“சத்தியமா சொல்லு. நீ என்னை விரும்பல. என்னை கட்டிக்கணும்ன்னு நினைக்கவே இல்ல. உன் கண்ல தெரிஞ்ச காதலால தாண்டி தைரியமா உன் பின்னாடி வந்தேன்.ஆனா அதுவே உனக்கு இளக்காரமா போச்சுல. இந்த வேந்தனோட காதல் உனக்கு அவ்ளோ ஈஸியா போச்சுல”
“எப்படிடி உன்னால முடியுது….. என் அம்மாவை கேட்டா சொல்வாங்க, இந்த மூணு வருஷமா தூக்கத்துல கூட நான் செல்வி ன்னு தான் சொல்லி இருக்கேன். உன்னை தவிர வேற ஒருத்திய நிமிர்ந்து கூட பார்த்தவன் இல்லடி இந்த வேந்தன். என்னை போய் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இன்னொருத்தியை கட்டிக்க சொல்ல எப்படிடி உனக்கு மனசு வருது.

“அதுவும் அந்த நந்தினி அவளுக்காக என்னை வேண்டாம்ன்னு சொல்ல உன்னால முடியும்ன்னா அப்புறம் என் காதலுக்கு என்ன மரியாதை இருக்கு உங்கிட்ட. உன்பின்னாடியே சுத்தினதால தான என்னை ஈஸியா நெனச்சிட்ட. என் காதல் உனக்கு புரியவே இல்லையாடி.” என்று நிறுத்தியவன் மீண்டும் அவனே

” ஹப்பா போதும் இந்த காதல். கடைசி வரைக்கும் இப்படியே நிம்மதியா இருந்துட்டு போய்டுறேன். இந்த கல்யாணம், காதல் எதுவுமே வேண்டாம். இனி என் வாழ்க்கையை நான் பார்த்துக்கறேன். உன்னை தொந்தரவு பண்ணவே மாட்டேன். அதோட நேத்து நடந்ததுக்கும் என்னை மன்னிச்சுடு. ஏதாவது தண்டனை கொடுக்கணும்ன்னு தோணினா உன் அண்ணன் கிட்ட சொல்லிடு. ஏற்கனவே ஒரு ராத்திரி முழுக்க கையில விலங்கொட உட்கார வச்சு பொம்பளை பொறுக்கின்னு சொல்லாம சொல்லிட்டான்.
“நீ உன் பங்குக்கு ஒரு கேஸ் கொடுத்திடு. பண்ண தப்புக்கு தண்டனை அனுபவிச்சிட்டா இந்த குற்ற உணர்ச்சி மாறுதா பார்க்குறேன்.
உன் அப்பன் மரியாதைன்னு இவ்ளோ யோசிக்கிறியே. நான் உன்னை லவ் பண்றேன், என் அப்பாவை சமாளிச்சு என்னை கட்டிக்கொன்னு ஒரு வார்த்தை நீ சொல்லி இருந்தா, என்ன பாடுபட்டாலும் அதை நடத்தி இருப்பேன் டி. ஆனா உனக்கு என்மேல அந்த நம்பிக்கை வரவே இல்லைல.

காதலுக்கு அடிப்படையே நம்பிக்கை தான்.இங்க அதுக்கே வழி இல்லையே. ஓஹ் நீதான் இதுவரைக்கும் என்னை காதலிக்கிறேன்னு சொன்னதே இல்லையே. நான் ஒரு பைத்தியக்காரன், உங்கிட்ட இதெல்லாம் சொல்லி உன் நேரத்தை வீணாக்கிட்டு இருக்கேன் பாரு” என்றவன் “நீ கெளம்பு” என்று வாசலை நோக்கி கைகாட்டி இருந்தான்.

அவள் கண்களில் வழிந்த கண்ணீர் மனதை அறுத்தாலும், இதற்கு மேல் அவளிடம் போராட அவனும் தயாராக இல்லை. ஏதோ ஒரு வெறுத்த மனநிலைக்கு வந்துவிட்டிருந்தான். காதலே இல்லை என்பவளிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை அவனுக்கும்.

அவன் வார்த்தைகளில் அவன் பட்ட காயங்களின் ரணம் அப்படியே தெரிய, அழுது கொண்டிருந்தவள் அவனது “போ ” என்ற வார்த்தையில் எதுவும் பேச தோன்றாமல் அப்படியே கண்ணீர் வழிய வெளியே சென்றிருந்தாள்.

கண்ணீரில் கரைந்துவிடுமா
கன்னியவள் கொண்ட காதல்!!!

Advertisement