Advertisement

அத்தியாயம் 4

தாமரை வேந்தனை சந்தித்து வந்து இரண்டு நாட்கள் கடந்திருந்தது, நேற்று இரவு அவளுக்கு நைட் டியூட்டி போட்டிருக்க, முடித்து வந்தவள் தன் அறையில் உறங்கி கொண்டிருந்தாள். விசாலம் சமையலை முடித்தவர் சென்று மகளை எழுப்ப,” இன்னும் கொஞ்ச நேரம்மா ப்ளீஸ் ” என்றவள் தூக்கத்தை தொடர

” தாமரை எழுந்து சாப்பிட்டு தூங்கு. அப்புறம் உன்னை எழுப்பவே மாட்டேன். எழுந்திரு வா ” என்று கூறி அவளுக்கு உணவை எடுத்துவைக்க, குளித்துவிட்டு வந்தவள் உணவு உண்ண அமர விசாலம் அவளுக்கு சாப்பாடு எடுத்து வைத்தவர் அவள் சாப்பிட்டு முடிக்கவும்,

” சரி நீ வீட்ல இரு. இன்னிக்கு வேலை இருக்கு வரமுடியாதுன்னு அண்ணன் சொல்லி இருந்தான். நான் அவனுக்கு சாப்பாடு கொடுத்துட்டு வந்திடுறேன் ” என்று விசாலம் கிளம்ப

“சரிம்மா ” என்று அவரை அனுப்பி வைத்தவளுக்கு தூக்கம் வராமல் போக, தொலைக்காட்சியை உயிர்ப்பித்து அதில் மூழ்கிவிட்டாள். அதில் பாடல் ஓடிக் கொண்டிருக்க, அவள் மனமோ அவள் நாயகனை தேடத் தொடங்கியது. இப்போது என்ன செய்து கொண்டிருப்பான் என்று யோசித்தவளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ” நான் செத்தால் கூட என்னை பார்க்க வராத ” என்ற அவனின் வார்த்தைகள் இப்போதும் கேட்பது போல இருக்க  இன்னும்கூட வலித்தது அவளுக்கு.

என்ன வார்த்தை சொல்லிவிட்டான். எவ்ளோ கோபம் வருது அந்த தடியனுக்கு” என்று யோசித்துக் கொண்டிருந்தவள்  இப்போது என்ன செய்து கொண்டிருப்பான் என்று அவனை சுற்றியே தன் நினைப்பை ஒட்டிக் கொண்டிருக்க, அந்த நேரம் ஒலித்தது அவளின் அலைபேசி. யாரென்று எடுத்துப் பார்க்க, ஏதோ புது எண்ணாக இருக்கவும் யார் என்ற யோசனையிலேயே எடுத்து காதில் வைத்தாள் அவள் எதிர்புறத்தில் பேசியது அன்பு ” தாமரை தாமரை ” என்று தடுமாறியவன்

“ஹலோ யாருங்க” என்று அவள் சத்தமாக கேட்கவும்

“தாமரை நான் அன்பு. வேந்தனோட பிரண்ட் மா. ” என்றான்.

“சொல்லுங்கண்ணா ” என்று தாமரை கூறவும், அழ ஆரம்பித்தவன் ” தாமரை தாமரை நம்ம வேந்தன் விஷத்தை குடிச்சிட்டான்மா.” என்றவன் கதறி அழ,

அவளுக்கோ ஒருநிமிடம் உலகமே ஸ்தம்பித்த நிலை. இவள் எதுவும் பேசாமலே  இருக்க எதிர்முனையில் அன்பு ” தாமரை, தாமரை” என்று கத்தி கொண்டிருக்க அப்போதுதான் சுயத்தை அடைந்தவள் “ஹ்ம்ம்… அண்ணா என்ன என்ன சொல்றிங்க நீங்க. எங்க இருக்கீங்க. என்னண்ணா ஆச்சு அவருக்கு” என்று கதறி அழ தொடங்கவும்

” தாமரை அவன் சுயநினைவே இல்லாம கெடக்குறான்மா. இங்க நம்ம தோட்டத்துல தான் இருந்தோம். பேசிகிட்டு இருந்தவன் தென்னை மரத்துக்கு வச்சிருந்த பூச்சி மருந்தை எடுத்து குடிச்சிட்டான்மா. பேச்சு மூச்சே இல்ல. நீ கொஞ்சம் வரியா தாமரை. எனக்கு பயமா இருக்கு ” என்று அவனும் அழவும்

தாமரை எதைப்பற்றியும் யோசிக்காமல், அந்த நொடி வேந்தனின் உயிரை பற்றி மட்டுமே கவலை கொண்டவளாக வீட்டிலும் யாருக்கும் எதுவும் சொல்லி கொள்ளாமல் வண்டியை எடுத்துக் கொண்டு வேந்தனின் தோட்டத்தை நோக்கி விரைந்திருந்தாள்.

அங்கு தோட்டத்திலோ ஒரு கயிற்று கட்டிலில் சுயநினைவே இல்லாமல் கிடத்தப்பட்டிருந்தான் வேந்தன். அவன் சட்டை முழுவதும் அவன் குடித்த அந்த மருந்தின் வாசமும், வேர்வை நெடியும் கலந்து வீச, அவன் அருகில் அழுது கொண்டே நின்றிருந்தான் அன்பு. அந்த தோட்டத்தில் அவர்கள் இருவரையும் தவிர யாருமில்லாமல் போக, அமைதியாக இருந்தது அந்த தோட்டம் முழுவதும்.

தாமரைக்கு இது அனைத்தும் கண்ணில்பட்டாலும் எதுவும் கருத்தில் பதியாமல் போக, அவள் எண்ணம் முழுவதும் வேந்தன் மட்டுமே நிறைந்திருந்தான். அவர்கள் இருந்தஇடத்திற்கு வந்து வண்டியை நிறுத்தியவள் ” இளா ” என்று அவன் அருகில் சென்று அவன் கன்னத்தை தட்டியவள் அவனிடம் அசைவில்லாமல் போக

கைகள் நடுங்க அவனை சோதித்தவள் அவன் இடதுகை மணிக்கட்டை பிடித்து, அவன் நாடித்துடிப்பை கணக்கிட அவள் கண்கள் கலங்க தொடங்கியது. மேலும் ஸ்டெதஸ்க்கோப் உதவியால் அவன் இதய துடிப்பை கணக்கிட்டவள் அவனை விட்டு விலகி தூரமாக சென்று தரையில் அமர்ந்துவிட்டாள்.

இந்த கடைசி அரைமணி நேரமாக அவள் பட்ட வேதனை கண்முன் வந்து போக அவள் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது. தன்னை குறித்தே வெட்கியவள் குலுங்கி அழ, அவள் அழுவதை பார்த்த அன்பு அவள் அருகில் வந்து ” தங்கச்சி, ஒன்னும் இல்லமா. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்டலாமா ” என்று கேட்க

கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தவள் அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைக்க, பொறி கலங்கியது அன்புவுக்கு. அவள் அடித்த அடியில் அவன் சுற்றி கட்டிலில் இருந்தவன் மீது விழ, திடீரென்று அவன் விழுந்ததில் மூச்சுவிட திணறிய வேந்தன் இருமலை கட்டுப்படுத்த முடியாமல் எழுந்துவிட

இருவரும் மாட்டிக் கொண்ட முகபாவனையில் எழுந்து நிற்கவும் தாமரை வேந்தனை முறைத்தவள் அவனை நெருங்கி ” உனக்கு இவ்ளோதான் தெரியுமா. இல்ல இன்னும் ஏதாவது மிச்சம் இருக்கா” என்று முறைத்துக் கொண்டே கேட்கவும்

சிலிர்த்துக் கொண்டவன் ” என்னடி பண்ணிட்டேன் இப்போ. எனக்கு ஒன்னும் தப்பா தெரியல. நான் செத்துடுவேங்கிற பயத்துல தானே இப்படி ஓடி வந்திருக்க. என்னை பிடிக்காமலா இதெல்லாம் பண்ற” என்று அவன் அவளை மடக்க

“ஆமா. நீ சொல்றது சரிதான் . உனக்காகத்தான் வந்தேன். ஆனா இந்தநிமிஷம் உன்னை எனக்கு பிடிக்கல. இந்த  அரைமணி நேரத்துல அரை உசுரா போனேண்டா. பதறி அடிச்சு ஓடி வந்திருக்கேன் ஆனா நீ என்னை ஏமாத்தி இருக்க இல்ல.என்னை அழவிட்டு வேடிக்கை பார்க்கிறியா.” என்று அவன் சட்டையை பிடித்து உலுக்கியவள்

” நீ எனக்கு வேண்டாம்.  உன்னை பிடிக்கவே இல்ல எனக்கு ” என்று கத்தியவள் அவனை திரும்பியும் பார்க்காது தன் வண்டியை நோக்கி நடக்க, அவள் கையை பிடித்து இழுத்தவன்

” நீ இங்க இருந்து போகக்கூடாது தாமரை. நான் உன்னை விட்றதா இல்லை” என்று அவன் நிதானமாக கூற

அவன் குரலின் ஒலி ஏதோ விபரீதத்தை உணர்த்தியது தாமரைக்கு. அப்போதுதான் தனியாக வந்த தன் மடத்தனத்தை நொந்து கொண்டவள் முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு

” மரியாதையா கைய விட்டுடு இளா. நீ ஏற்கனவே எனக்கு செஞ்ச வரைக்கும் போதும். இதுக்குமேலயும் தப்பு பண்ணாத” என்று அவனை மிரட்ட

” என்ன ஆனாலும் சரி செல்வி. என்னால இதுக்குமேல போராட முடியாது. உனக்கு உன் குடும்பம் பெருசு. என் அப்பாவுக்கு அவர் தங்கச்சி பெருசு. உங்களோட போராட என்னால முடியாது. நாளைக்கு விடிஞ்சதும் நம்ம எல்லைக்காளி கோவில்ல வச்சு உனக்கு தாலி கட்டப் போறேன். அதுக்கு அப்புறம் உனக்கு என்ன தோணுதோ அத செய். எவன் என்னை தடுக்கிறான்னு நானும் பார்க்கிறேன் ” என்று அவன் உறுதியான குரலில் கூற

அவன் உறுதியை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது. இல்லை இது நடக்க கூடாது என்று நினைத்தவள் கடைசி முறையாக கண்ணில் நீரோடு “வேண்டாம் இளா. நீ இப்படி பண்ணக்கூடாது. இது சரியில்ல. என்னை போகவிடு. நான் அண்ணன்கிட்ட பேசுறேன். அவன் பார்த்துப்பான்” என்றதும்

“இப்போகூட உன் அண்ணா பார்த்துக்குவான்ன்னு தான் சொல்ற.இந்த நம்பிக்கை ஏண்டி உனக்கு என் மேல இல்லாம போச்சு” என்று அவள் கண்களை பார்த்து கேட்க

“இதுல நம்பிக்கைன்னு எல்லாம் இல்ல இளா. அன்னான் வீட்ல பேசுவான்னு சொல்றேன். இப்படி இப்படி பண்றது வேண்டாமே.” என்று கூற

” இல்ல செல்வி. நீ என்ன சொன்னாலும் என் முடிவு மாறப்போறதில்லை. எனக்கு இது நடந்தே ஆகணும். நாளைக்கு நம்ம கல்யாணம் நீ தயாரா இரு ” என்றவன் அவள் கைகளை பிடித்து இழுத்துச் சென்று சற்று தள்ளி நின்றிருந்த ஒரு காரில் ஏற்ற இதற்குமேல் தன்னால் ஆவது ஒன்றுமில்லை என்று நினைத்தவள் அவன் கையை உதறிவிட்டாள். “என்னை தொடாத. நானே வரேன்” என்றவள் அதன்பிறகு காரிலும் சரி, அவன் அழைத்து சென்று இறக்கிவிட்ட வீட்டிலும் சரி அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

காரிலிருந்து இறங்கி அவன் அந்த வீட்டை திறக்க அவனோடு நின்றிருந்தவள் அசைய கூட இல்லை. அவன் உடன் உள்ளே வர தொடங்க, கைகாட்டி வாசலிலேயே அவனை நிறுத்தியவள்

“உள்ள வராத. உனக்கு என்ன காலைல நான் உன்கூட கோவிலுக்கு வரணும் அவ்ளோதான. நான் வரேன். நீ இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது” என்று கூற

அவள் வார்த்தையில் அவன் மனம் பலமாக காயம்பட “ஏய். என்ன லந்தா என்னை பார்த்தா பொம்பளைக்கு அலையறவன் மாதிரி தெரியுதாடி உனக்கு” என்று அவன் கத்தவும்

“உன்னை பார்த்தா ஒரு பொண்ணை கடத்திட்டு வர்றவன் மாதிரி கூடத்தான் தெரியல. ஆனா நீ பண்ணல”

“வேண்டாம் செல்வி.என்னை ரொம்ப சோதிக்காத. கதவை பூட்டிக்கோ” என்று அவன் வெளியில் நிற்க உள்ளே சென்று கதவை அடைத்து தன்னை தானே சிறையிட்டுக் கொண்டவள் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.

“கடவுளே நான் அப்பாவுக்கு என்ன பதில் சொல்வேன். என்னை ஏன் இப்படி சித்ரவதை பண்ற. நான் இவனை காதலிச்சதுதான் நான் செய்த தப்பா” என்று கேட்டுக் கொண்டவள் இருந்தாள்.

அங்கு  வீட்டிலோ விசாலம் வந்தவர் மகள் வீட்டில் இல்லாது போகவும், அவள் எண்ணுக்கு அழைக்க போன் டேபிளில் ஒலித்தது. சரி மறந்திருப்பாள் என்று நினைத்தவர் சக்திக்கு அழைக்க அவளும் தாமரை மருத்துவமனையில் இல்லை என்று கூறவே அப்போதுதான் பதட்டமானவர் தன் மகனுக்கு அழைத்து விவரம் கூற

தனஞ்செயன் பதறி போனவனாக அவனும் தாமரையை தேடிபார்க்க அவளை பற்றிய ஒரு தகவலும் கிடைக்கவில்லை மாலை மூன்று மணிவரை. இவன் தாமரையை பற்றி விசாரித்துவிட்டு சாலையில் வந்து கொண்டிருக்க அப்போது எதிரில் வந்தான் அவன் நண்பன் குமார். இவன் பதட்டத்தை பார்த்தவன் என்ன என்று இவன் வண்டியை மறித்துக் கேட்கவும் குமார் அப்போதுதான் தாமரை சுந்தரபாண்டியன் தோட்டத்திற்கு சென்றதை காலையில் பார்த்ததாக அவன் கூறவும், தனஞ்செயன் “என்னடா சொல்ற” என்று அவனை உலுக்க

“ஆமாம்டா. நான் பார்த்தேன்.தங்கச்சி வண்டில மெடிக்கல் கிட்டும் இருந்தது. சரி யாருக்கு முடியல போலன்னு நெனச்சிட்டேன் டா” என்று கூறவும்

தன் மற்றொரு நண்பனுக்கு அழைத்து வேந்தன் எங்கிருக்கிறான் என்று பார்க்க சொல்ல அவன் வீட்டிலும் இல்லை. மில்லிலும் இல்லை என்பது உறுதியாக அவன் நண்பனோ “டேய் மாப்பிள. அவன்தான் தூக்கி இருப்பான்னு நெனைக்கிறியாடா” என்று கேட்க

“அவனை தவிர வேற யாரும் பண்ணி இருக்க தேவை இல்லடா” என்றவன் அமைதியாக

அவன் நண்பனோ “பஞ்சாயத்தை கூட்டுவோம்டா. அப்போ அவன் வந்து தான ஆகணும். அவனை நிக்க வைப்போம்டா” என்று கூற தனஞ்செயன் அமைதியாகவே இருந்தான்.

சற்று நேரம் கழித்து “பஞ்சாயத்தை கூட்டி என் தங்கச்சிய அவனுக்கே கட்டி கொடுக்க சொல்றியாடா. என்ன பண்ணாலும் என் தங்கச்சி பெரும் சேர்ந்து இல்ல கெட்டு போகும்.”

“டேய் தங்கச்சியே கூட அவன் கூட போய் இருக்கலாம்லடா “

“அவ என் தங்கச்சிடா. இதுபோல சின்னபுத்தி எல்லாம் அவளுக்கு கிடையாது. அவளுக்கு பிடிச்சி இருந்தா முதல் ஆளா என்கிட்ட தான் சொல்லி இருப்பா . இது இந்த பைய தான் ஏதோ வேலை பார்த்திருக்கணும்” என்றவன் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு “டேய், அவனுக்கு ஒரு தங்கச்சி இருக்குல்ல. ” என்று சட்டென அவன் கேட்க குமார் சுதாரித்தவன்

“டேய் பொம்பள புள்ளை மேல கைவைப்பியா. அவனுக்கும் உனக்கும் வித்யாசம் இல்லையாடா” என்று அவனுக்கு புரியவைக்க பார்க்க

“டேய் அவனுக்கு எல்லாம் அவன் வழில பேசினாதான் புரியும்டா. அவ  பொம்பள பிள்ளைன்னா அப்போ என் தங்கச்சி. அவனுக்கு வலிக்கனும்டா” என்று கர்ஜித்தவன்

” ப்போ எங்கடா இருப்பா அவ” என்று கேட்க

“மாப்பிளை நல்லா யோசிச்சுக்கோடா. பெரிய விஷயம்” என்று கூற

“நான் முடிவு பண்ணிட்டேன். நீ முடிஞ்சா என் கூட இரு. இல்லையா இப்படியே ஓடிடு” என்றவன் பைக்கை எடுக்க, குமார் அவனை தனியே விட மனமில்லாமல் அவன் வண்டியில்  ஏறி கொண்டான்.

“அந்த புள்ளை வள்ளியம்மாள் காலேஜ்ல படிக்குது மாப்பிளை. இந்நேரத்துக்கு அங்க தான் இருக்கும்” என்று அவனுக்கு தகவலும் தர இருவரும் மதியழகி படிக்கும் கல்லூரிக்கு விரைந்தனர். இவர்கள் சென்ற நேரம் கல்லூரி முடிந்து மாணவர்கள் வெளியே வந்து கொண்டிருக்க அவள் சென்றிருக்க கூடாதே என்று கவலைப்பட்டவன் அவளுக்காக காத்திருக்க, அங்கு காருடன் வந்து நின்றான் குமார்.

இருவரும் வெகுநேரம் காத்திருக்க, இவர்களின் காத்திருப்பை பூர்த்தி செய்வது போல் ஆகாய வண்ண சுடிதாரில் அழகாக வந்து கொண்டிருந்தாள் மதியழகி. அவள் வகுப்பு முய அன்று சற்று தாமதம் ஆகி இருக்க, வேகநடையில் வாசலை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் அவள். இப்போது நந்தியுடன் சரியாக பேசுவதில்லை என்பதால் அவள் இவளுடன் வருவதில்லை என்பதால் இவள் பயணம் தனியாக தான்.

இன்றும் அப்படியே அவள் வந்து கொண்டிருக்க, சரியாக பேருந்து நிலையத்திற்கு சற்று முன்னால் நின்றிருந்த தனஞ்செயன் கைக்குட்டையால் அவள் வாயை பொத்தி அவளை தன் நண்பனின் காரில் ஏற்றி இருந்தான். அவள் திமிர திமிர அவளை அடக்கி ஏற்றியவன் அவன் காரில் ஏற்றியதும்

“டேய் யாருடா நீங்க. என்ன பண்றிங்க. மரியாதையா என்னை விட்டுடுங்க” என்று கத்தவும் அவளை ஓங்கி ஒரு அறை விட அவனின் அந்த முரட்டு கரங்களின் பலத்தால் சுயநிலை இழந்தவள் மயங்கி அவன் மேலே சாய்ந்தாள். தன் நெஞ்சில் விழுந்தவளை தாங்கி கொண்டவனுக்கு உள்ளே ஏதோ செய்ய புதிதான ஒரு உணர்வு அவனுக்குள்.

Advertisement