Advertisement

அத்தியாயம் 34

 

                  அந்த திருமண மண்டபம் தங்க நிற விளக்குகளால் ஜொலித்து கொண்டிருக்க, அதன் வாயிலில் வருபவர்களை வரவேற்றுக் கொண்டு கம்பீரமாக நின்றிருந்தார் வேதமாணிக்கம். அருகில் அவரின் மனைவி சிவகாமி. இருவர் முகத்திலும் மனம் நிறைந்த, மனதிலிருந்து வெளிவரும் உண்மையான புன்னகை.

 

                    இருக்காதா? அவர்கள் வீட்டின் கடைசி திருமணம். அதுவும் அவர்களின் கடைக்குட்டி நந்தினியின் திருமணம். பிடிக்காதது போல் காட்டிக் கொண்டிருந்தாலும், அத்தனை பேருக்குமே அவள் சிறியவள் என்பதால் அந்த கரிசனம் வேறு. அவள் வாழ்வு என்னவாகுமோ என்று கலங்கியது போய், இன்று கண்முன்னே அவள் பூண்டிருந்த தங்க வைர நகைகளுக்கு இணையாக அவளும் ஜொலித்துக் கொண்டிருக்க வேறு என்ன வேண்டும் அவர்களுக்கு.

 

                திருமண மண்டபத்தின் உள்ளே, இளைய பட்டாளம் ஆளுக்கு ஒரு வேலையை இழுத்து போட்டுக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்க, திருமணத்திற்கு முன்னதாக வரவேற்பு நடந்து கொண்டிருந்தது அங்கே. வீரபாண்டியன், ஆதித்யன் வரிசையில் இப்போது விஜயராகவனும் காவல்பணியில் இருக்க, காவல்துறை உயரதிகாரிகள்,நண்பர் வட்டம், இவர்களுக்கு பழக்கமான சில ஐஏஎஸ் அதிகாரிகள் என்று மண்டபம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

 

              விஜய்க்கு சொந்தபந்தங்கள் குறைவாக இருக்க, அவர்களுடனும் கூட அதிக நெருக்கம் இல்லை அவர்கள் குடும்பத்திற்கு. தங்கள் காதலால் தன் மகன் தனித்து நின்றுவிடுவானோ என்று அஞ்சிக் கொண்டிருந்த அவன் தந்தைக்கு பெரிய குடும்பத்தின் உறுப்பினர்களை கண்டதும் அந்த கவலை விட்டுவிட்டது. அதுவும் மகனும் அவர்களுக்கு இணையாக வாயடைக்க அவருக்கு வெகுதிருப்தி இந்த திருமணம்.

                 இப்போதும் அதன் பொருட்டே, நாகர்கோவிலை விட்டு திருநெல்வேலியில் திருமணத்தை வைத்திருந்தார் பெரிய குடும்பத்தின் வசதிக்காக.

                  மாப்பிள்ளையும், பெண்ணும் விதவிதமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து அலுத்து போயிருக்க, இடையிடையே அவர்களை கவனித்து கொண்டிருந்தாள் சக்தி. செவ்வியால் முன்போல எடுத்து செய்ய முடியாமல் அவள் மகள் அவளை படுத்திவைக்க, முதல் வரிசையில் ஒரு ஓரமாக அமர்ந்துவிட்டிருந்தாள் அவள்.

                   ஆம்.. மகள்தான் பரிசோதனையின் போது தாமரை அறிந்துகொண்டவள் செவ்வியிடம் கூறி இருந்தாள். ஆவலுடன் மருத்துவமனைக்கு செல்வது அவளை கவனித்து கொள்வது என அத்தனை பொறுப்பும் தாமரையுடையது தான். அவள் உடல்நிலை, அவளின் உணவுகள், மருந்துகள் என்று அத்தனையும் அவள் வசம்தான்.

                 இப்போது கல்யாண வேலைகளில் சக்தியுடன் அவள் அலைந்து கொண்டிருக்க,ரங்கநாயகி மருமகளின் அருகில் அமர்ந்து கொண்டிருந்தார். இளமாறன் அவன் தந்தையிடம் இருக்க, அவன் உயரத்திற்கு ஏற்றவாறு கோட், சூட்டில் அத்தனை அட்டகாசமாக இருந்தான் அவன். தந்தை, தாய்மாமன், சித்தப்பன் என்று ஆண்களிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டு அவர்கள் கையிலே ஒட்டிக் கொண்டிருந்தவன் அன்னையை தேடவே இல்லை அன்று.

               தனஞ்செயன் மதியழகி மற்றும் தன் பெற்றோருடன் திருமணத்திற்கு வந்திருக்க விசாலம் ரங்கநாயகியுடன் அமர்ந்து கொள்ள அவர்களுக்கு பேசிக்கொள்ள ஆயிரம் விஷயங்கள் இருந்தது. கந்தகுரு, வீரபாண்டியன், மாணிக்கம், சுந்தரபாண்டியன் என்று மூத்த ஆண்கள் குழு ஒருபுறம் தங்கள் உறவுகளை கவனித்துக் கொண்டும், பேசிக்கொண்டும் ஒன்றாகவே சுற்றிவர அங்கு வந்திருந்த அத்தனை பேரின் கண்களும் இந்த உறவுகளின் மீது தான்.

 

                    ஆதித்யன் தன் துறை நட்புகளுடன் சுற்றிக் கொண்டிருந்தவன் பார்வை அடிக்கடி மேடையில் நின்றிருக்கும் தன் மனைவியை தொட்டு மீள, என்னவோ அவள் சரியில்லாதது போன்ற ஒரு தோற்றம் அவனுக்கு. சில நாட்களாகவே சற்று சோர்வாகத் தான் இருக்கிறாள் அவள்.

 

                    ஆதித்யன் ஒரு முக்கியமான வழக்கில் சற்று பிசியாகி விட, திருமண வேலைகள் அனைத்தும் அவள் பொறுப்பு தான். திருமண அழைப்புகளை வேதமாணிக்கம் பார்த்துக் கொண்டாலும் கூட பிற வெளிவேலைகள், வீட்டிற்கு வந்து செல்லும் உறவினர்களை கவனிப்பது என்று அத்தனையும் அவள்வசம் தான். இந்த இடைவிடாத வேலைகளால் சோர்ந்து தெரிகிறாளோ என்று யோசித்தாலும் கூட, எதுவோ வித்யாசமாக இருந்தது காவலனுக்கு.

 

                           இதில் நேற்றிலிருந்து அவன்மீது கோபமாக வேறு இருக்க, அவனையும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. என்ன செய்கிறது இவளுக்கு? என்று யோசித்துக் கொண்டே சுற்றிக் கொண்டிருந்தான் அவன்.

 

                   அவன் எண்ணம் சரிதான் என்பதுபோல மேடையில் நின்றிருந்தவளுக்கு சோர்வாகவே இருந்தது. ஏனோ உடல் அளவுக்கு மீறி அசதியாக இருப்பது போல் ஒரு தோற்றம். சில நாட்களாகவே இப்படித்தான் இருக்கிறது என்று புரிந்தாலும், திருமண வேலைகள் இழுத்துக் கொள்ள அவளால் வேறு யோசிக்க முடியவில்லை.

               வெகுநேரமாக சமாளித்து நின்றிருந்தவளுக்கு ஒரு கட்டத்தில் முடியாமல் போக, மெதுவாக யார் கவனத்தையும் ஏற்காமல் மெல்ல மேடையை விட்டு இறங்கி இருந்தாள். அருகில் இருந்த அறைக்குள் சென்றவள் அமைதியாக அமர்ந்துவிட, இவள் அமர்ந்து ஒரு இரண்டு நிமிடத்திற்கெல்லாம் ஆதித்யன் அந்த அறையினுள் நுழைந்தான்.

 

                   நிமிர்ந்து அவனை பார்த்தவள் கண்டுகொள்ளாமல் மீண்டும் கைகளால் தலையை தாங்கி கொண்டு அமர்ந்துவிட, அவளை நெருங்கியவன் “சக்தி… என்ன பண்ணுது..” என்று அவள் தோளை தொட, அவன் கையை தட்டி விட்டவள் அமைதியாகவே இருந்தாள்.

                   இது நேற்று தன் செயலுக்காக என்று புரிந்தாலும், அவள் உடல்நிலையை கணக்கில் கொண்டவன் “ஏய்… என்ன செய்யுது ன்னு கேட்கறேன்ல” என்று அதட்ட, அவளுக்கே சந்தேகம் தான். இதில் அவனிடம் என்ன கூறுவது என்று யோசித்தவள் “ஒண்ணுமில்ல.. கொஞ்சம் டயர்டா இருக்கு, அவ்ளோதான்.” என்று கூறியவள் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.

                      கட்டிலில் அவள் அருகில் அமர்ந்து கொண்டவன் “இந்த மந்த் உன் டேட் முடிஞ்சிடுச்சா?? ” என்று அவள் காதருகில் கேட்க, அதிர்ச்சியாக அவனை திரும்பி பார்த்தவள் “என்ன” என்று மீண்டும் கேட்டிருந்தாள்.

           “என்னடி.. எனக்கு தெரிஞ்சு கிட்டத்தட்ட ஒன்றரை மாசமா நீ என்….. ” என்று சொல்லும்போதே அவன் வாயை அடைத்து விட்டவள் முகம் சிவந்து போக ” கொன்னுடுவேன் உங்களை.. வாயை மூடுங்க. நானே சொல்லுவேன்ல, அதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு, உங்க போலீஸ் புத்திய இங்கேயும் காட்டணுமா” என்று கடிந்து கொள்ள

             சிரிப்போடு அவளை பார்த்தவன் ” சரி நீயே சொல்லு.” என்று அவள் முகம் பார்க்க,

 

ஐயோ.. எனக்கே தெரியலைங்க.. நாலஞ்சு நாளாகவே இப்படித்தான் இருக்கு, இருந்த வேலையில பெருசா கவனிக்கல. இப்போ அப்டி இருக்குமோ ன்னு தோணுது” என்றுவிட

                  அவளை முறைத்தவன் “நீயெல்லாம் டாக்டர் ன்னு வெளியே சொல்லிடாத. உன்மேலேயெ உனக்கு அக்கறை இல்ல, நீ அடுத்தவனுக்கு வைத்தியம் பண்ற.” என்று அவன் கடிந்துகொள்ள, தன் மீது தவறென்பதால் அமைதியாக தான் இருந்தாள் அவள்.

                  “இப்போ எப்படி கன்பார்ம் பண்றது.. தாமரையை கூப்பிடவா” என்று அவன் கேட்க, “வேண்டாம்..” என்று தலையசைத்தவள் “நான்…. எனக்கே தெரியுது…. அதுதான். ஆனா கன்பார்ம் பண்ண ஹாஸ்பிடல் தான் போகணும். நாளைக்கு பார்த்துட்டு சொல்றேனே.” என்று கூற

                  நேரத்தை பார்த்தவன் “என்கூட கிளம்பு. என்னால நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணலாம் முடியாது. பார்த்துட்டு வந்திடுவோம்.” என்று அழுத்தமாக கூறியவன் அடுத்த அரைமணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்தான். அங்கு சக்தியின் சீனியர் டாக்டர் அவளின் கர்ப்பத்தை முதற்கட்ட சோதனைகள் மூலம் உறுதி செய்தவர் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து அனுப்பி வைத்தார்.

                  சக்திக்கு ஏற்கனவே தெரிந்தாலும், இப்போது தான் முழுமையான மகிழ்ச்சியை அனுபவிக்க முடிந்தது. ஒரு மருத்துவராக அவள் அத்தனை பார்த்திருக்க, தன் மனதை அடக்கி கொண்டே காத்திருந்தாள் அவள். இப்போது உறுதியாகவும், ஆதித்யனை அணைத்துக் கொண்டவளுக்கு கண்கள் கூட கலங்கி போக, அவள் உச்சியில் முத்தமிட்டவன் “இப்போ திருப்தியா.. இதுக்கு அப்படி யோசிக்கிற” என்றவன் தானும் அவளை அணைத்து கொண்டான்.

                                                              இருவரும் ஒருவழியாக மீண்டும் மண்டபத்தை வந்து அடைய நேரம் பதினொன்று ஆகி இருந்தது. கூட்டமும் குறைந்து போயிருக்க, நெருங்கி உறவுகள் மட்டுமே மண்டபத்தில் தங்கி இருக்க அவர்கள் கண்டது ஜோடியாக வரும் ஆதித்யனையும், சக்தியையும் தான்.

                           வெகுநேரமாக இவர்களை காணும் என்று கெட்டவர்களிடம் எல்லாம் இளவேந்தன் ஏதோ ஒன்றை கூறி சமாளித்திருக்க, இப்போது இருவரையும் கண்டதும் ஆதித்யனை பார்த்து தலையை அசைத்து ஏதோ கேட்க,ஆமோதிப்பாக தலையசைத்து சிரித்தான் ஆதித்யன். அவனை நெருங்கி கட்டிக் கொண்டவன் அவன் கன்னத்தில் முத்தமிட, “டேய்.. ச்சி. தள்ளிப்போடா…’ என்று அழகாக வெட்கப்பட்டான் ஆதித்யன்.

                            அவன் தள்ளிவிடவும், மீண்டும் அவனை கட்டிக்கொண்டு அவன் கலாட்டா செய்ய அந்த இடமே அவர்களை வேடிக்கை பார்த்தது. சக்தி இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டே தன் பாட்டியின் அருகில் சென்று அமர்ந்து விட்டாள். சிவகாமி அவளிடம் ஏதோ கேட்க, அவருக்கு தலையசைத்து அவள் பதில் சொல்லவும்                                                    

                  அவர் மகிழ்ந்து போனவராக அவளை நெட்டி முறித்து முத்தமிட்டவர் தன் மகளானவளை அணைத்துக் கொள்ள, வேதமாணிக்கத்திற்கும் கூட லேசாக கண்கள் பனித்து தான் இருந்தது. பின்னே தாயுமானவர்கள்  அல்லவா இருவரும். தங்கள் குழந்தைக்கே ஒரு குழந்தை தான் என்று தோன்றியது அந்த பெரியவர்களுக்கு.

                  அங்கிருந்த அத்தனை பெரும் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே இருந்தனர். அங்கிருந்த அனைவருமே சக்தியின் நலம் நாடுபவர்களாக இருக்க, அங்கு மகிழ்ச்சிக்கு பஞ்சமேயில்லை. வேந்தன் இதற்குள்ளாகவே “மருமகனை பெத்துக் கொடு சக்தி.. அடுத்தவருஷம் நான் உனக்கு மருமகளை ரெடி பண்ணிடறேன்” என்று அவளை கலாட்டா செய்ய

                  செவ்வியோ “ஹேய்.. அதெல்லாம் முடியாது, பொண்ணு பெத்துக்கோ.. எனக்கு தான் மருமக” என்று அவள் ஒருபக்கம் அவளை இழுக்க, வேந்தனோ செவ்வியிடம் சண்டைக்கு நின்றான். தாமரை இருவரையும் முறைத்தவள் “மரியாதையா தள்ளி உட்காருங்க ரெண்டு பெரும்..” என்று அவர்களை அதட்டிவிட்டு, “இன்னும் பிறக்கவே இல்ல… அதுக்குள்ள போட்டிக்கு வந்தாச்சு… ” என்று சலித்துக் கொண்டவள் தன் தோழியை அணைத்து கொண்டாள்.

               பெரியவர்கள் இவர்கள் பேச்சில் தலையிடாமல் அமைதியாக பார்த்திருக்க, மதி எப்போதும் போலவே வாயை பிளந்துதான் பார்த்திருந்தாள் இந்த குழுவினரை.தனஞ்செயன் தான் ” சக்தி.. பையனோ பொண்ணோ பெத்து என்கிட்டே கொடுத்திடு… நான் சூப்பரா வளர்த்து கொடுக்கறேன்.” என்று அவன் ஒருபக்கம் கூற

                 விசாலம் தான் “அடேய்… மொதல்ல அவ பெத்து எடுக்கட்டும்டா…உங்களையெல்லாம் வச்சிட்டு” என்று கடிந்து கொண்டவர் “பிள்ளைக்கு கண்ணுப்படும். பேசுனது போதும்..போய் படுங்க எல்லாரும்” என்று விரட்டிவிட்டார் அனைவரையும். அனைவரும் ஒரு மகிழ்ச்சியான மனநிலையிலேயே உறங்க சென்றனர்.

                                                          நந்தினியின் திருமணமே மகிழ்ச்சி என்றால் சக்தி அவள் பங்குக்கு அவளும் அங்கு மகிழ்ச்சியின் விதைகளை தூவி இருக்க, அடுத்த நாள் அவர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஒரு நாளாகவே விடிந்தது. நந்தினியும், விஜயும் அக்கினியின் முன் அமர்ந்திருக்க ஐயர் கூறுவதை கிளிப்பிள்ளைகள் போல் பவ்யமாக கூறிக் கொண்டிருந்தனர்.

 

               மங்களம் நிறைந்த அந்த சுபயோக வேளையில் மங்கலமெலாம் மத்தளம் கொட்ட, அருகில் அமர்ந்திருந்தவளின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி தன்னவளாக ஏற்றுக் கொண்டான் விஜயராகவன். மூன்றாவது முடிச்சை விஜயின் விருப்பத்திற்காக சக்தியே போட்டிருந்தாள். ஒற்றை பிள்ளையாகவே நின்றிருந்தவன் சக்தியை மனதாறவே தன் தங்கையாக ஏற்றிருந்தான் அவன்.

                   நந்தினியுடனான அவன் வாழ்வு சுவாரஸ்யத்திற்கும் அதே சமயம் அடிதடி பஞ்சாயத்துகளுக்கும் குறைவில்லாமல் இருக்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு நிறையவே இருக்க, அந்த நம்பிக்கையுடன் அவள் வாழ்வின் சரிபாதியாக இணைந்திருந்தான் அவன்.

                 அவனுக்கு சற்றும் குறையாத மகிழ்வோடுதான் இருந்தாள் நந்தினி. பழைய கசப்புகள் ஏதும் அண்டாமல் தன்னை காத்துக் கொண்டவள், தன்னை முழுவதுமாகவே விஜயராகவனுக்கு கொடுத்திருந்தாள். அவள் மனதில் எந்த உறுத்தலும் இல்லாமல் முழுவதுமாக விஜய்யின் நந்தினியாகவே மாறிப் போயிருந்தாள் அவள்.

                                        வேதமாணிக்கமும்,சிவகாமியும் பெற்றவர்களாக இருந்து நந்தினியை தாரை வார்த்து கொடுத்திருக்க, மங்கைக்கு அழைப்பே இல்லை. இளவேந்தனின் திருமணத்திற்கு முறைப்படி அழைக்க வந்தவர்களை அவமானப்படுத்தி திருப்பி அனுப்பியவர் இன்று சொந்த மகளின் திருமணத்தை கூட அருகில் நின்று பார்க்க கொடுத்து வைக்கவில்லை.

 

                அதற்காக அவர் வருத்தப்படவும் இல்லை பெரிதாக. எப்போதும் போலவே தன்னை அழைக்கவில்லை, மதிக்கவில்லை என்று அவருக்கு தாளம் தட்டும் சிலரிடம் புறம் பேசிக்கொண்டு தான் அமர்ந்திருந்தார் இப்போதும். சிலர் அப்படிதான்.

 

                   “நரைகூடிக் கிழப்பருவ மெய்தி, கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும்”  வேடிக்கை மனிதர்கள். இவர்களை திருத்துவதற்காக நாம் பிறப்பெடுக்கவில்லை. அவர்கள் திருந்தப்போவதும் இல்லை. பின் எதற்கு அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

 

                     அவர் ஒருபோதும் மாறப்போவதில்லை என்பது அங்கிருந்தவர்களுக்கு ஆழப் பதிந்துவிட, அவர்களும் பெரிதாக மெனக்கெடாமல் தங்கள் வழியில் ஒதுங்கி கொண்டனர். அதுதான் உத்தமமும் கூட. இத்தனை உறவுகளில் ஒருவர் கூட, ஏன் அவர் பெற்ற மக்கள் கூட அவரின் இருப்பை வேண்டவில்லை என்பதே அவருக்கு தண்டனைதானே.

                                       திருமண மண்டபத்தில் அடுத்தடுத்த சடங்குகள் தொடர்ந்து கொண்டிருக்க, மகிழ்ச்சியாகவே அனைத்தையும் செய்து முடித்தவர்கள் முதலில் வேதமாணிக்கம்- சிவகாமியின் கால்களில் விழுந்து எழ, தொடர்ந்து இருவரின் தகப்பன்களும், தாய்மாமன்களும் ஆசிர்வதித்தனர் பிள்ளைகளை.

 

          இறுதியாக நந்தினி தன் அண்ணனின் அருகில் சென்றவள் அவன் காலில் விழ முற்பட, அவளை தடுத்தவன் தோளோடு அணைத்து கொள்ள செவ்வி தானும் தன் அண்ணனின் தோள் வளைவில் ஒண்டிக் கொண்டாள். நந்தினி அவளை முறைக்க, செவ்வி அவளை வெறுப்பேற்ற இன்னும் தன் அண்ணனை நெருங்கி நின்று கொண்டாள்.

 

               அடுத்த இரண்டு நாட்கள் வேகமாக கழிந்துவிட, மூன்றாம் நாள் காலை விஜயுடன் கிளம்பிக் கொண்டிருந்தாள் நந்தினி. அவன் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியிருக்க, அதன் விசாரணைக்காக விடுமுறையை ரத்து செய்துவிட்டு கிளம்பிக் கொண்டிருந்தான் அவன்.

 

               விஜயராகவனின் பூர்விக வீடு நாகர்கோவிலில் இருப்பதால், அவளின் சீர்வரிசை பொருட்களையும் லாரியில் ஏற்றி இருந்தாள் சக்தி. ஆம் சக்தியே தான். அவளின் திருமணத்திற்கான அத்தனை சீர்வரிசையும் அவளின் பொறுப்பு. சிவகாமியை கூட அதில் தலையிட விடவில்லை அவள்.

 

               பரம்பரை நகைகளை தொடாதவள் ஆதித்யன் பேரிலும், அவள் பேரிலும் இருந்த சில சொத்துக்களின் வருமானத்தில் ஒருபகுதியை அவளுக்கு செலவு செய்திருக்க நிறைவாகவே செய்திருந்தாள். தங்கம், வைரம், வெள்ளி என்று அத்தனையும் பார்த்து பார்த்து வாங்கி அடுக்கி இருந்தவள் அவளுக்கு தேவையான அத்தனை பொருட்களையும் பார்த்து பார்த்து வாங்கி இருக்க பெரிய குடும்பத்தின் சீரை ஊரே பார்த்து வியக்கும் அளவுக்கு தான் செய்திருந்தாள்.

 

                             யாரை பெரிய வீட்டிலிருந்து மங்கை துரத்த நினைத்தாரோ அவளே இன்று அவர் மகளுக்கு பெரிய வீட்டின்  வாழ்வரசியாக வாரி வழங்கி இருந்தாள். நந்தினி மறுத்தபோதும் கூட, சக்தி அவள் பேச்சை காதில் போட்டுக்கொள்ளாமல் அனைத்தையும் முடித்தே விட்டிருந்தாள்.

 

                               இதோ அவர்கள் கிளம்பும் நேரமும் வந்துவிட, குடும்பத்தின் அத்தனை உறுப்பினர்களும் அங்கு கூடி இருந்தவர்கள் இருவரையும் ஆசிர்வதித்து வழியனுப்பி வைக்க, தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கி இருந்தாள் நந்தினி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

               

              

 

 

 

 

 

 

 

 

                 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement