Advertisement

அத்தியாயம் 33

விஜயராகவன் சொன்னது போலவே திருமண வேலைகளில் முழுமூச்சாக ஈடுபட்டு இருக்க, அதன் பலனாக இருவருக்கும் நிச்சயமே நடந்து முடிந்திருந்தது. அத்தனை போரையும் தன் பக்கம் வளைத்து விட்டவன் நந்தினியையும் எப்படியோ பேசி, கெஞ்சி சிறிது மிரட்டி என்று தன் வழிக்கு கொண்டு வந்திருந்தான்.

நந்தினியும் முதலில் மறுத்தவள் தன் அண்ணன் சொல்லுக்கு கட்டுப்பட்டவளாக இறுதியில் தலையசைத்திருந்தாள். விஜய்க்கு தாய் இல்லாமல் போக அவன் தந்தை மட்டுமே வந்திருந்து நல்லபடியாக நிச்சயத்தை முடித்திருந்தார்.

அவளுக்கு இப்போது தான் மூன்றாமாண்டு கல்லூரி தொடங்கி இருக்க, விஜய் நாகர்கோவிலில் இருப்பதால் அங்கேயே ஒரு கல்லூரியில் மாற்றிக் கொள்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் முடித்து விட்டான்  ஆதித்யன். அவனுக்கு அவன் தங்கை விஜயோடு மனம் ஒன்றி ஒரு வாழ்வை வாழ ஆரம்பிக்கும் வரை அவள் இந்த ஊரில் இல்லாமல் இருப்பதே நலம் என்று தோன்றிவிட அதற்காக என்னவும் செய்ய தயாராக இருந்தான் அவன்.

நந்தினியை விட விஜயின் மீது அதிக நம்பிக்கை இருந்தது ஆதித்யனுக்கு. அவன் எப்படியும் நந்தினியை அவனுக்கு ஏற்றபடி மாற்றி, அவன் காதலையும் அவளுக்கு புரிய வைத்துவிடுவான் என்று முழுதாக நம்பினான் அவன். சக்தி கூட படிக்கும் பெண்ணிற்கு எதற்கு இத்தனை அவசரமாக திருமணம் என்று மறுப்பாக சொல்லி இருக்க, ஆதித்யன் ஒரே பிடியாக நின்று அனைவரையும் சமாளித்தவன் திருமணத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருந்தான்.

அவனுக்கு அவன் தங்கை அவன் கைக்குள் இருக்கும்போதே அவள் வாழ்வை நேராக்கிவிட வேண்டும் என்று உள்மனது சொல்லிக் கொண்டே இருக்க, அந்த நேரத்தில் தான் விஜயும் அவன் விருப்பத்தை ஆதித்யனிடம் தெரிவித்தது. மனம் ஏதேதோ கணக்கிட தங்கையின் வாழ்வை மனதில் கொண்டு நந்தினியை பற்றிய அத்தனை உண்மைகளையும் விஜயிடம் தானே தெரிவித்து விட்டிருந்தான் ஆதித்யன்.

விஜய்க்கு ஏனோ அத்தனையையும் கேட்டும் அவளை தவறாக எண்ண முடியவில்லை. அவளோ பெரிய தில்லாலங்கடியா நீ ??? என்று கிண்டலாக தான் எண்ணமிட்டான். அதே எண்ணத்தில் தான் அன்று அவளிடம் பேசியதும். மறுப்பாள் இல்லை கண்ணீர் விடுவாள் என்று அவன் எதிர்பார்த்திருக்க அவள் தைரியமாக அனைத்தையும் ஒப்புக்கொண்டு அதற்கு என்ன இப்போ என்று கேட்டவிதம் அவனை வசீகரிக்க அவள்தான் தன் வாழ்வுக்கு என்று முடிவெடுத்து விட்டான் அவன்.

அதன் பின் அனைத்து வேலைகளும் வேகமாக நடைபெற ஒரே வாரத்தில் நிச்சயத்தை முடித்துக் கொண்டு ஊருக்கு கிளம்பி இருந்தவன் இதோ இப்போது திருமணத்திற்காக மீண்டும் அழகிய நல்லூருக்கு வந்திருந்தான். நாளை மறுநாள்  திருமணம் என்ற நிலையில் பெரிய குடும்பத்தின் பண்ணை வீட்டில்  பெரிய குடும்பத்தில் சம்பந்தப்பட்ட அத்தனை ஆண்களும் கூடியிருக்க அங்கு கச்சேரி களைகட்டியது.

ஆதித்யன்,இளவேந்தன், தனஞ்செயன், மதிமாறன், என்று அத்தனை பேரும் கூடியிருக்க இவர்களுக்கு தலைமை தாங்கி கொண்டிருந்தவர் வீரபாண்டியன். சென்னையில் கண்ணியம் மிக்க காவல் அதிகாரியாக வளம் வந்தவர் இங்கு கையில் டம்ளரோடு தன் மருமகனுடன் அமர்ந்து பார்ட்டி பண்ணிக்க கொண்டிருந்தார்.

ஆம்… இன்று விஜய் கொடுக்கும் பேச்சிலர் பார்ட்டி. அவன் தன் பேச்சால் அனைவரையும் கவர்ந்து விட்டிருக்க இளவேந்தனும், தனஞ்செயனும் கூட அவனுக்கு நண்பர்களாகி இருக்க அவர்களையும் சேர்த்தே இழுத்து வந்திருந்தனர்.

அத்தனை பேரில் மதி ஒருவன் மட்டுமே கொஞ்சம் தெளிவாக இருக்க, நம் ஆதித்யனோ “மாப்ள…. குடிக்க கூடாதுடா … என்னை மாதிரி தெளிவா இருக்கணும்” என்று அவனிடம் கூறிக் கொண்டே தன் கையில் இருந்த டம்ளரை வாயில் சரித்துக் கொள்ள

வேந்தனோ “அவனே ஒரு பயந்தாங்கொள்ளி, எங்கே செவ்வி அடிப்பாளோ ன்னு பயந்து உக்காந்திட்டு இருக்கான். அவன் வேற குடிப்பானா..” என்று ஆதித்யனுக்கு பின்பாட்டு பாட

தனா “ஆமா.. பயம்ன்னா என்னன்னே தெரியாதவன் சொல்றான் அதை. மூடிட்டு குடிடா, தாமரையை பார்த்தா அலறி அடிச்சு ஓடிடுவ.. நீ என் மச்சானை வம்புக்கு இழுக்கறியா..” என்று மதிக்கு ஆதரவாக பேசிவிட

வேந்தனோ “என்னடா பண்ணிடுவா உன் தொங்கச்சி…. கூப்பிடு லோட்டஸ… இப்போ இப்போவே ஒரு கை பார்க்குறேன்… ” என்று எழுந்து நின்று ரகளை செய்ய தலையிலேயே அடித்துக் கொண்டான் மதி.

“இவனுங்களோட வந்தேனே என் புத்திய” என்று தன்னையே நொந்து கொண்டு அவன் அமர்ந்திருக்க, வீரபாண்டியனோ “சைலன்ஸ்” என்று கத்தியவர் “மகனே பெரியப்பாக்கு ஒரு டம்ளர் ஊத்துடா” என்று குழறலாக  மதியிடம் கேட்க, ஏற்கனவே ஒரு முழுப்பாட்டிலை முடித்திருந்தார் மனிதர்.

ஆதித்யன் அங்கு இருந்த மற்றொரு பாட்டிலை கையில் எடுத்துக் கொண்டவன் “யோவ் பாண்டியா… போதும் எழுந்திருயா… உனக்கு ஓவர் ஆகி போச்சு,” என்று அடக்க

வேந்தனோ “டேய்.. என் பெரியப்பாவுக்கு சரக்கு கொடுக்க மாட்டியா நீ.. மரியாதையா ஊத்துடா…” என்று ஆரம்பிக்க

புதுமாப்பிளையோ “நான் கொடுக்கறேன் வீரா சார்.” என்றவன் அவருக்கு ஊற்றி கொடுக்க “வெரிகுட் மை பாய். இப்படிதான் இருக்கனும்..” என்றவர் ஆதித்யனிடம் ” கத்துக்கோடா… எப்போ பார்த்தாலும் போதும் போதும் ன்னு சொல்லிட்டு இருக்கான்…” என்று அவனை முறைக்க

வேந்தன் அவர் கையில் இருந்ததை பிடுங்கி குடித்து விட்டவன் “போதும் பெரிசு, உனக்கு ஓவரா தான் போச்சு. போய் தூங்கு ” என்றவன் “நீ வாடா மாப்பிள்ளை” என்று ஆதித்யனை அணைத்துக் கொள்ள அவன் கையில் வைத்திருந்த பாட்டிலை தான் பிடுங்கி கொண்டிருந்தான்.

“ஹான்… நல்லவன் மாதிரி பேசுறானே ன்னு யோசிச்சேன் அவன் வேலைய காட்டிட்டான்” என்று தனஞ்செயன் மதியிடம் கூற, அங்கு வைக்கப்பட்டிருந்த காரசேவையை  எடுத்து அவன் வாயில் திணித்தவன் “இப்போ பேசு மாப்பிள்ளை..” என்று தனாவை முறைக்க விஜயோ இவர்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

தன் பங்குக்கு தானும் கொஞ்சம் காரத்தை எடுத்து வேந்தனின் வாயில் திணித்தவன் தனாவுடன் ஹைபை  கொடுத்து கொள்ள “காலை வாறிட்டியேடா துரோகி..” என்று வேந்தன் அவன் மீது பாய வீரபாண்டியன் அங்கேயே ஒரு ஓரமாக சரிந்திருந்தார்.

மதி வேந்தனை தடுக்க நினைத்து அவனை பிடிக்க அதற்குள் விஜயும், தனாவும் சேர்ந்து வேந்தனை கீழே உருட்டி விட, அவன் மீது ஏறி அமர்ந்த ஆதித்யன் “காரம் சாப்பிடு மாப்பிள..” என்று மீண்டும் அவனுக்கு ஊட்டிவிட ஆரம்பித்திருந்தான். இவர்கள் இப்படி பண்ணைவீட்டில் கூத்தடித்துக் கொண்டிருக்க அங்கு நந்தினி பெரிய வீட்டில் தன் அலைபேசியில் இவர்கள் அடிக்கும் கூத்தை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தாள்.

அதிசயமாக விஜய்யிடம் ஏதோ கேட்பதற்காக அவள் அவனுக்கு அழைத்திருக்க, அவனோ அழைப்பை எடுத்தவன் குழறலாகவே ஏதோ சொல்லி முடித்து துண்டித்திருந்தான். அவன் என்ன பேசுகிறான் என்று புரியாமல் ஒரு சந்தேகத்தில் தான் அவள் வீடியோ கால் செய்தது.

ஆனால் அவனின் கேட்ட நேரமாக அழைப்பை துண்டிப்பதற்கு பதிலாக அவன் ஏற்றிருக்க, இவர்கள் அனைவரது முகங்களும் தெளிவாக தெரியாவிட்டாலும் குரலிலேயே அத்தனை போரையும் அறிந்து கொண்டவள் சக்தியை அழைத்து அவளுக்கு காண்பிக்க, திருமணத்திற்காக பெரியவீட்டில் கூடியிருந்த பெண்கள் ஒருவர்பின் ஒருவராக  நந்தினியின் அறையில் குழுமி விட்டிருந்தனர்.

இவர்களின் அலப்பறை தாங்காமல் அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தாலும் அத்தனை பெரும் கொலை வெறியில் தான் இருந்தனர் தத்தம் கணவன்மார்களின் மீது. ஒருவரும் வீட்டில் சொல்லாமல் வேறு சென்றிருக்க அதுவும் கடுப்பை கிளப்பியது பெண்களுக்கு.

இறுதியாக அனைவரும் குடித்து முடித்து அங்கேயே உறங்கும் வரை அழைப்பை துண்டிக்காமல் அனைத்தையும் கேட்டுக் கொண்டவர்கள் அவரவர் அறைக்கு சென்று முடங்க, அடுத்த நாள் காலையில் தான் அதுவும் பத்து மணிக்கு மேல்தான் வீட்டிற்குள் நுழைந்தது ஆண்கள் பட்டாளம்.

முதலில் இவர்களை கண்டுவிட்ட தாமரை வேந்தனை முறைத்தவள் “கொஞ்சம் வீடு வரைக்கும் போகணும். என்கூட வாங்க” என்று அவனிடம் கூறிவிட்டு முன்னால் நடந்துவிட, ஏன் முறைச்சா?, இப்போ ஏன் கூப்பிடறா?? என்று யோசித்துக் கொண்டே பொறியில் சிக்கும் எலியாக அவள் பின்னால் நடந்தான் வேந்தன்.

அவனை  தவிர்த்து மற்றவர்கள் வீட்டிற்குள் நுழைய சக்தி ஆதித்யனை பார்த்தவள் அவனை கண்டுகொள்ளாமல் மீண்டும் வந்த வழியே தன் அறைக்கு சென்றுவிட்டாள். அவள் கோபமாக இருக்கிறாள் என்பதுவரை ஆதித்யனுக்கு புரிய என்ன நடந்தது என்றுதான் தெரியவில்லை.

ஒருவேளை நேற்று நடந்தது தெரிந்திருக்குமோ என்று ஒருநொடி யோசித்தவன் “வாய்ப்பில்லையே ஆதி… வேற என்ன யோசி யோசி..” என்று அவனுக்கு அவனே அலர்ட் ஆக, நந்தினி அறையில் இருந்து வந்த மதியழகி இவர்களை பார்த்தவள் தனாவை கண்ணை உருட்டி முறைத்துவிட்டு மீண்டும் அறைக்குள் சென்று அமர்ந்துவிட்டாள்.

அவள் சென்ற வேகத்தில் மீண்டும் அறைக்குள் வர, அவள் முகத்தில் கோபத்தை கண்ட நந்தினி என்னவென வெளியில் எட்டிப்பார்க்க அங்கு நின்றிருந்தவர்களை கண்டதும் நேற்றைய நினைவுகள் தானாக நினைவு வர சத்தமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டாள் அவள்.

அவள் சிரிக்கவும் புரியாமல் ஆண்கள் முழிக்க, சிறிது முடித்தவள் உள்ளே திரும்பி “ஏன் மதி.. பாவம் எல்லாரும் எவ்ளோ களைப்பா இருக்காங்க பாரு. ஒரு காஃபி கூட கொடுக்காம இப்படியா மூஞ்சிய திருப்புவ.. பாவம்ல தனா அண்ணா…” என்று அவள் அழுத்தி சொல்ல

அதிலேயே ஏதோ அபாயமணி அடித்தது விஜய்க்கு. அவன் முழியை கண்டவள் சிரித்துக் கொண்டே தன் கையில் இருந்த போனை அவன் முன் ஆட்டி காட்டியவள் “நீங்க சொன்னமாதிரியே எல்லாருக்கும் இவங்க அடிச்ச கூத்தை காட்டிட்டேங்க.” என்று நல்லவளாக கூறி முடிக்க

“அட துரோகி..” என்று ஒரே சமயத்தில் அவன் புறம் திரும்பினர் ஆதித்யனும், தனாவும், மதியும். அவர்கள் பார்வையை உணர்ந்தவன் “அடேய்.. நான் எதுவுமே பண்ணலடா” என்று கூறிக்கொண்டே பின்னால் நகர அவனை துரத்திக் கொண்டு ஓடினர் இருவரும். பின்வாசல் அருகே அவனை பிடித்தவர்கள் அவனை மொத்தி எடுக்க வீரபாண்டியன் தூரமாக நின்று சிரித்துக் கொண்டிருந்தார்.

விஜய் “டேய் சத்தியமா நான் எதுவும் சொல்லலடா. அவ பிளான் பண்ணி சிக்க வச்சிட்டாடா, அவளை பிடிங்க டா” என்று கத்த, காதிலேயே வாங்காமல் அவனை மொத்தி எடுத்து கொண்டிருக்க தனா நடுவில் “ஏன் மாப்பிள்ளை. என் பொண்டாட்டி என்னை முறைச்சதோட போய் உட்கார்ந்துட்டா. ஆனா என் தங்கச்சி நம்ம பயலை கையோட கூட்டிட்டு போயிருக்காளே. பய சேதாரமில்லாம திரும்பிடுவானா..” என்று கேட்க

அப்போதுதான் வேந்தனின் நினைவு வந்தது அவர்களுக்கு. மதிக்கு திடீரென வேந்தன் தாமரையிடம் அடிவாங்குவது போல கற்பனை தோன்ற, சத்தமாக சிறிது விட்டவன் “பய சண்டியர் கணக்கா திரிஞ்சதுக்கு இன்னிக்கு மொத்தமா வாங்க போறான்” என்று கையைத்தட்டி சிரிக்க அவன் காலுக்கருகில் நங்கென்று சத்தத்தோடு வந்து விழுந்தது பித்தளை கும்பா ஒன்று.

மதி அதிர்ச்சியாக திரும்பி பார்க்க அங்கு அத்தனை கோபமாக நின்றிருந்தாள் செவ்வி. மதியை முறைத்தவள் பின்வாசலின் முதல் படியில் நின்றிருக்க மனைவியின் பார்வையை உணர்ந்தவன் “செவ்வி.. செவ்வி..” என்று அழைத்துக் கொண்டே அவள் பின்னால் ஓட, அந்த இடைவெளியில் அவர்களிடமிருந்து நழுவி ஓடிவிட்டான் விஜய்.

அன்று முழுவதும் சக்தியிடம் தனியாக சிக்கவே இல்லை ஆதித்யன். அவளுக்கு குடிப்பது சுத்தமாக ஆகாத ஒன்று என்று தெரிந்தும் அவன் செய்து வைத்திருக்க, யார் அவளிடம் பாட்டு வாங்குவது என்று யோசித்தவன் அவளின் கண்களில் படவே இல்லை.

தனா கல்யாண வேலைகள் என்று பேர் பண்ணிக் கொண்டு ஆதித்யன் மற்றும் மதியோடு சுற்றிக் கொண்டிருந்ததால் அவனும் அவன் அழகியிடம் சிக்கவே இல்லை.

இங்கு தனக்கு கொடுக்கப்பட்டிருந்த அறையில் அமர்ந்திருந்த விஜய்க்கு நந்தினியின் செயலில் சிரிப்பாக வந்தது. தன் மொபைலை ஆராய்ந்தவன் தானாகவே அவளிடம் சென்று மாட்டியிருப்பதை உணர்ந்துகொள்ள அவள் செய்து வைத்த வேலையால் ஆதித்யனும் மற்றவர்களும் மொத்தி எடுத்ததில் கடுப்பாக இருந்தவன் அவள் தனியாக சிக்கும் நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தான்.

ஆனால் அன்று முழுவதுமே அவன் எதிர்பார்த்த நேரம் அவனுக்கு கிடைக்காமல் போக, சக்தியின் உதவியை நாடி இருந்தான் அவன். நல்ல பிள்ளையாக நந்தினியிடம் சற்று பேச வேண்டும் என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவன் நடிக்க, அவன் நடிப்பை நம்பியவள் நந்தினியை ஏதோ காரணம் சொல்லி மொட்டை மாடிக்கு அழைத்து வந்திருந்தாள்.

அங்கு ஒரு ஓரத்தில் நின்றிருந்த விஜய் லேசாக கண்ணை காட்டவும், சக்தி நந்தினியுடன் வந்தவள் அப்படியே கீழிறங்கிவிட, தனியாக பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்த நந்தினி திரும்பி பார்க்க கீழ்ப்படிகளில் இறங்கி கொண்டிருந்தாள் சக்தி.

“அண்ணி.. அண்ணி ” என்று அழைத்தவளை கண்டுகொள்ளாமல் அவள் நடந்துவிட, அவள் பின்னோடு செல்ல போனவளை கையை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்திருந்தான் விஜய். அதில் பதறி போனவள் நிமிர்ந்து அவனை முறைக்க, அவள் முறைப்பை கண்டுகொள்ளாமல் அங்கிருந்த மறைவான பகுதிக்கு அவளை இழுத்து வந்து சுவற்றில் சாய்த்தவன் “என்ன சொன்ன காலையில..” என்று மிரட்ட

அவனை பயப்படாமல் எதிர்கொண்டவள் “என்ன போலீஸ் மிரட்டறீங்களா… நேத்து கால் பண்ணப்போ நீதான் விடீயோ கால் பண்ண சொன்ன. அதான் செஞ்சேன்” என்று அசால்ட்டாக சொல்ல

“அடிப்பாவி ” என்று வாய்விட்டே முனகியவன் “வாய்க்கொழுப்பு ஜாஸ்திடி உனக்கு” என்று அவள் உதட்டை இரு விரல்களால் அழுத்தி வலிக்குமாறு இழுக்க, அவன் கைகளில் பட்டென்று அடித்தவள் தன் உதட்டை தேய்த்து விட்டு கொண்டாள்.

அவள் போட்டிருந்த சிகப்புச்சாயம் அவன் கைகளில் வந்துவிட அவனை முறைத்தவள் “லிப்ஸ்டிக் எல்லாம் போச்சு..” என்று புலம்ப அவள் புலம்பலை கேட்டவனுக்கு அதை மொத்தமாக எடுத்துவிட ஆசை வரவே அவளை நெருங்கியவன் அவள் இதழ்களை முற்றுகையிட்டான்.

அவன் செயலில் விழிகள் பெரிதாக விரிய, கண்ணை அகல விரித்தவள் அடுத்தநொடி கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள். கைகள் தானாகவே அவன் சட்டை காலரை பற்றிக் கொள்ள லேசான நடுக்கம் தெரிந்தது அவள் கைகளில்.

அவன் விலகியபோது அவள் அமைதியாக நின்றுவிட “உன் வாயை மூட இதுதான் வழியா… இது தெரியாம இத்தனை நாளை வேஸ்ட் பண்ணிட்டேனே” என்று சோகமாக அவன் உச்சுக்கொட்ட, அவனை நிமிர்ந்து முறைத்தவள் அவன் நெஞ்சில் கைவைத்து அவனை விலக்கிவிட்டு நகர முற்பட அவள் இடக்கையை பிடித்துக் கொண்டவன் “லவ் யூ பெப்பி ” என்று கூறவும்

அவனை மிதப்பாக பார்த்தவள் “வாய்ப்பில்ல.. வாய்ப்பில்ல” என்று நக்கலாக உதட்டை சுழித்து அவனை வெறுப்பேற்றிவிட, அவன் மீண்டும் நெருங்கவும், அவன் கையில் சிக்காமல் ஓடிவிட்டாள்.

Advertisement