Advertisement

அத்தியாயம் 32

அன்று மதியம் வரை எப்படியோ மதியழகியை பற்றி நினைக்காமல் தனஞ்செயன் பொழுதை ஓட்டியிருக்க, மதிய உணவுக்கு பிறகு அவள் நியாபகம் அதிகமாக இருந்தது அவனுக்கு. இப்போதும் அவள் நந்தினியை பார்க்கவேண்டும் என்று கூறுவதில் அவனுக்கு உடன்பாடு இல்லைதான்.

ஆனால் வாடியிருந்த அவன் மனைவியின் முகம் அவனை மிகவும் தொந்தரவு செய்தது. இப்போதும் அவள்மீது கோபம்தான் வந்தது அவனுக்கு. அவளைப் போய் பார்க்கணும்ன்னு என்கிட்டயே சொல்றா என்று திட்டிக் கொண்டவனுக்கு, கிளம்பும் போது அவள் பின்னால் ஓடிவந்தது நினைவு வர லேசாக சிரிப்பு வந்தது.

என்ன பண்ணி இருப்பா? என்று யோசித்தவன் எப்படியும் செவ்விகூட கிளம்பி போயிருப்பா? என்று ஒரு மனம் சொன்னாலும், போயிருப்பாளோ என்று யோசித்தவனுக்கு ஏனோ அவள் அங்கு சென்றிருக்க கூடாது என்று தோன்ற, உடனே வீட்டுக்கு சென்று பார்த்துவிடுவது என்று முடிவு செய்தவனுக்கு வேலைகள் வரிசைகட்டி நின்றது.

எப்படியோ ஒருவழியாக நேரத்தை நெட்டி தள்ளியவன் வேலை முடியவும் கிளம்பி இருந்தான் வீட்டுக்கு. இவன் வீட்டிற்குள் நுழைய அந்த நேரம் அவள் விசாலத்துடன் அமர்ந்துகொண்டு அவர்கள் தோட்டத்தில் இருந்து வந்திருந்த மல்லைகை பூக்களை தொடுத்துக் கொண்டிருக்க பார்த்தவனுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி உள்ளுக்குள்.

ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளாமல் உள்ளே நுழைந்தவன் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டான். அப்போதுதான் அவனை நிமிர்ந்து பார்த்த மதியை முறைப்பாக பார்த்தவன் “ஒரு காஃபி எடுத்துட்டு  வா” என்று கூறிவிட்டு அறைக்குள் நுழைந்து கொண்டான்.

விசாலம் இவள் கட்டிய பூவில் கொஞ்சத்தை அவளுக்கு வைத்துவிட்டு கோவிலுக்கு கிளம்பி இருந்தார். அவன் கோபத்தை கண்டு இவர் இன்னும் மலையிறங்கலையா கடவுளே? என்று நொந்துகொண்டு தான் மதி அவன் அறைக்குள் நுழைந்தது. விசாலமும் கிளம்பிவிட சண்டை போடுவாரோ? என்ற எண்ணம் எழுவதை தடுக்க முடியவில்லை.

இவளுக்காக காத்திருந்தவனோ இவள் உள்ளே நுழையவும், காஃபியை கையில் வாங்கி கொண்டான். “உன் வீட்டுக்கு போறேன் ன்னு சொன்ன?? போகலையா?? என்று அவன் கேட்கவும்

” நான் என் வீட்ல தானே இருக்கேன்.” என்று அமைதியாக வந்தது பதில். அதில் புருவம் உயர்த்தியவன்  “பரவாயில்லையே, அறிவு வளர்ந்துடுச்சு போல” என்று நக்கலாக கூற

அவன் கிண்டலில் அவனை நிமிர்ந்து முறைத்தவள் “என்ன அறிவு வந்துச்சு. அது ஏதோ கோவத்துல காலையில தெரியாம சொல்லிட்டேன். அதுக்குதான் திரும்பிக்கூட பார்க்காம போனீங்கள்ல. இப்போ திரும்பவும் ஏன் அதையே பேசறீங்க” என்று மூக்குவிடைக்க அவள் கேட்க

“ஓஹ்… நான் என்ன பேசணும் பேசக்கூடாது ன்னு கூட உன்கிட்ட கேட்கணுமா?? ஏன் காலையில பார்க்காம போனா சாயங்காலம் உன்கிட்ட எதுவும் கேட்ககூடாதா?” என்று அவன் வம்புக்காகவே பேச

“நீங்க என்ன வேணாலும் கேட்கலாம்ங்க. பதில் சொல்லத்தான் நான் இருக்கேன். கேளுங்க” என்றவள் அமைதியாக தலை குனிந்து கொள்ள, தனாவுக்கு சிரிப்பாக இருந்தது.

இதற்குமேல் அவளை வாட்ட வேண்டாம் என்று முடிவு செய்தவன் “இங்கே வா” என்று கூப்பிட அவனை நிமிர்ந்து பார்த்தவள் அமைதியாக அவன் அருகில் சென்று நிற்க, அவளையே பார்த்தவன் அவளை இழுத்து தன்மேல் போட்டுகொண்டு கட்டிலில் சரிந்து அவளை தனக்கு கீழே கொண்டு வந்திருந்தான்.

அவள் அதிர்ச்சியில் ஆவென பார்க்க, அவள் கண்களை பார்த்தவன் “நல்லாதானே சண்டையை ஆரம்பிச்சேன், அப்புறம் ஏண்டி அமைதியாகிட்ட.என்னை திரும்பிக்கூட பார்க்காதவன் ஏண்டா கேள்வி மட்டும் கேட்கறே ன்னு கேக்க வேண்டியது தானே” என்று கேட்டு அவள் நெற்றியில் முட்ட

அவன் சாதாரணமாக பேசியதில் கண்கள் கலங்கிவிட்டது அவளுக்கு. “போங்க, போங்க… நல்லா பயமுறுத்திட்டீங்க நீங்க. நீங்க கோபமா போனதும் பயந்துட்டேன்” என்று அவனை தள்ளிவிட இன்னும் வாகாக அவள் மீது படர்ந்து கொண்டவன் “நீ இப்படி அமைதியா இருந்த, நானே உன்ன ஏய்க்க ஆரம்பிச்சிடுவேன். பேச வேண்டிய இடத்துல பேசணும்டி என் அழகி” என்று கொஞ்சிக் கொண்டான் தன்னவளை.

“காலையில நான் பேசியதும் தப்புதானே. ஆனா வேணும்ம்ன்னு பேசல, தெரியாம கோபத்துல…” என்று அவனுக்கு புரிய வைக்க முயல

“ஏய் அழகி நீ தெரிஞ்சு பேசுற அளவுக்கெல்லாம் ஆள் இல்ல. எனக்கு தெரியும் அது. நானும் உனக்கு புரிய வைக்கத்தான் அப்படி போனேன். ரெண்டுத்துக்கும் சரியாய் போச்சு விடு” என்று கூற

“ம்ம்ம் ” என்று சொல்லிக்கொண்டவள் “என்னை விடுங்க நான் நைட் க்கு சமைக்கணும். அத்த கோவிலுக்கு போயிருக்காங்க.” என்று கூறவும்

“அதெல்லாம் சமைக்கலாம்..” என்று இழுத்தவன் அவளை சிறிது நேரம் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டான். சிறிது நேரத்திற்கு பின் தானாகவே அவளை விடுவித்தவன் அவள் மார்புச்சேலைக்குள் மறைந்திருந்த அவனுக்கு பிடித்த மச்சத்தில் தன் இதழை பொருத்திவிட்டு நிதானமாக விலக மூச்சடைத்தது அவளுக்கு.

அவன் விலகவும் அவள் எழுந்து அறைக்கு வெளியில் செல்லப்பார்க்க, மீண்டும் அவள் கையை பிடித்துக் கொண்டவன் “நாளைக்கு போகலாம் உன் நந்தினியை பார்க்க, ஆனா என்னை உள்ளே கூப்பிடக் கூடாது. காலையில உன்னை கூட்டிட்டு போய் விட்டுட்டு போறேன். மதியம் நான் வரும்போது வந்து கூட்டிட்டு வந்துடறேன். சரியா??” என்று அவன் திட்டம் போட, அப்போதும் புன்னகைதான் அவளிடம்.

சொன்னது போலவே அடுத்த நாள் காலை மதியை பெரிய வீட்டிற்கு அழைத்து சென்று விட்டவன் வாசலோடு கிளம்பி இருந்தான். உள்ளே நுழைந்த மதியை முதலில் கண்டது சக்தி தான். சண்டையிட வந்திருக்கிறாளோ ? என்று நினைத்தவள் அவள் அருகில் வர “நந்தினி எங்கே சக்தி நான் பார்க்கணும் அவளை” என்று மென்மையாகவே கேட்டிருந்தாள் மதியழகி.

நடந்த அத்தனை விஷயங்களும் தெரிந்தவள் என்பதால் சக்திக்கு ஆச்சர்யம் தான் அவளின் இந்த மென்மை. சக்தி பதில் சொல்லாததில் மதி தானாகவே நந்தினியின் அறைக்குள் நுழைய அப்போதுதான் விழித்து எழுந்திருப்பாள் போலும். குளியலறையிலிருந்து வெளிப்பட்டாள் நந்தினி.

மதியை அங்கே எதிர்பார்க்காததால் அவளுக்கும் அதிர்ச்சிதான். என்ன செய்வாளோ என்று அவள் மதியை பார்க்க மதி அவளை நெருங்கியவள் கண்ணீரோடு அவள் கன்னத்தை பற்றிக் கொண்டவள் அவளை தன்னோடு இழுத்து அணைத்து கொள்ள, நந்தினியும் அவள் தோளில் சாய்ந்துகொண்டாள்.

தன் தவறுகளை அவளிடம் கரைத்து விடுபவள் போல் அவள் கண்ணீரில் கரைய, மதியும் சிறிது நேரம் அழதவள் அவள் கண்ணீரை துடைத்துவிட்டு அவளை கட்டிலில் அமர்த்தி அருகில் அமர்ந்து கொன்டாள்.

நந்தினி “சாரி மதி, என்னை மன்னிச்சுடு. உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்” என்று அவள் கையை பிடித்துக் கொண்டு அப்போதும் கண்ணீர்விட

“இல்லன்னு சொல்லமாட்டேன் நந்தினி. ஆனா எல்லாமே முடிஞ்சி போச்சு, ஏன் அதையே பேசி நம்மை காயப்படுத்திக்கணும். விட்டுடு” என்று மதி கூறவும்

“உனக்கு என் மேல கோபம் வரலையா”

“சத்தியமா இல்ல, என் நந்தினி இப்படி பண்ணிட்டாளேன்னு தான் வருத்தம். நீ ஹாஸ்பிடல்ல இருக்கறது தெரிஞ்சதும் அதுவும் இல்ல. உனக்கு என்னாச்சோ ன்னு பயம் தான்.. ஆனா யார்கிட்ட கேட்கறது ன்னு தெரியாம அமைதியவே இருந்துட்டேன்.” என்று அவள் மெதுவாக கூற

நந்தினியால் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை. என்ன மாதிரியான அன்பு இது. தான் இத்தனை தவறு செய்தும் ஒரு வகையில் இது அவள் என்மீது வைத்த நம்பிக்கைக்கு நான் செய்த துரோகம் கூட அப்படி இருந்தும் என்னிடம் இத்தனை அன்பாக இருக்க இவளால் எப்படி முடிகிறது என்று  தோன்றி விட, தன்னை மிகவும் கீழாக உணர்ந்தாள் அவள்.

மதி அவளை புரிந்து கொண்டவளாக அவளை சமாதானம் செய்து அவளுடனே பேசிக் கொண்டிருந்தாள். மதியம் தனா வரும்வரை அவளுடனே இருந்தவள் அவன் வந்ததும், நந்தினியிடம் விடைபெற்றுக் கிளம்பினாள்.

மதியிடம் பேசிய பிறகு நந்தினிக்கும் அவளின் குற்ற உணர்வு லேசாக மட்டுப்பட்டது. மதியின் மகிழ்ச்சி அவள் முகத்தில் தெரிய தன்னால் அவள் வாழ்வு பாதிக்கவில்லை என்பதில் நிம்மதியாக உணர்ந்தாள் அவள். அவளிடம் பேசிய நந்தினி மெல்ல மெல்ல தன் கூட்டை விட்டு வெளியே வர அடுத்து வந்த நாட்கள் எல்லாம் அவள் நிலையில் முன்னேற்றம் தான்.

அனைவரோடும் சகஜமாக பேசத் தொடங்கியிருந்தவள், தன்னைத்தானே அலசி ஆராய்ந்து தன் தவறுகளை களைய முற்பட்டுக் கொண்டிருந்தாள். இடையில் அந்த மகேஷிடம் இருந்த மொபைல், அவளின் படங்கள் அனைத்தையும் கைப்பற்றி விட்டதாக ஆதித்யன் அவளிடம் தெரிவித்து இருக்க, ஒரு சிறிய புன்னகை தான் பதில்.

அவளின் நாட்கள் அமைதியாகவே கடந்துபோக, அதை கெடுப்பதற்கென்றே கிளம்பி வந்திருந்தான் விஜய ராகவன்.

மதி வந்து அவளை பார்த்து சென்று ஒருவாரம் கழிந்து இருந்தது. இப்போதெல்லாம் தினமும் தன் வீட்டுக்கு பின்புறம் இருந்த வயல்களில் நடந்து தங்கள் தென்னந்தோப்பை ஒரு சுற்று சுற்றி விட்டு வருவதை அவள் வழக்கமாக்கி கொண்டிருந்தாள். அந்த நேரங்களை மிகவும் ரசிக்க தொடங்கி இருந்தாள் அவள்.

அந்த இடம் முற்றிலும் அவர்களுக்கு சொந்தமானது என்பதும், அவளை அங்கிருந்த எல்லாருக்கும் தெரிந்திருந்தும் அவளுக்கு பாதுகாப்பாகி இருக்க, அவள் எப்போதுமே தனியாக தான் செல்வது. இன்றும் அதேபோல் நடந்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் தான் அவள் கண்ணில்பட்டான் விஜயராகவன்.

அவளுக்கு எதிரில் தன் ஜீப்பில் வந்து கொண்டிருந்தான். ஜீப் என்றால் காவல்துறை வாகனம் அல்ல. ஒரு கருப்புநிற மஹிந்திரா ஜீப். அதன் மேல்பாகம் முழுவதுமாக திறந்தநிலையில் இருக்க, அதன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தான் அவன்.

முதலில் அந்த ஜீப்பையே அவள் கவனிக்கவில்லை, அது தன் அருகில் வந்து நிற்கவும் தான் அந்த வாகனத்தை பார்த்தவள் அதில் அமர்ந்திருந்தவனை கண்டதும் முகம் வெளிறிப் போனது. அவனை நன்றாக ஞாபகம் இருக்க, அதற்கு மேல் அங்கே தாமதிக்கவில்லை அவள்.

வேகமாக நடக்க தொடங்க, அவனோ ஜீப்பை பாதையில் இருத்திவிட்டு இறங்கியவன் அவள் கைகளை ஓடிச்சென்று பிடித்துவிட, அவள் பயந்துபோனவளாக சுற்றிலும் பார்வையை ஓடவிட்டு தன் கையை உதறிக் கொண்டாள்.

“என்ன பண்றிங்க நீங்க, யாரவது பார்த்தா என்ன நடக்கும் தெரியுமா” என்று அவள் அவனிடம் கத்தும்போதே அவளின் பெரியப்பா முறையிலிருந்து ஒருவர் அவன் வாகனத்திற்கு பின்னால் தன் டிராக்டரை நிறுத்திவிட்டு சத்தம் எழுப்பி கொண்டிருந்தார்.

அவரின் சத்தத்தில் திரும்பி பார்த்தவள் வண்டியில் இருந்தவரை கண்டு பதற, அவரோ ” என்ன நந்தினிமா. தம்பி யாரு?? என்ன சொல்றாரு” என்று கேட்டுக்கொண்டே வண்டியில் இருந்து இறங்க

“ஒண்ணுமில்ல பெரியப்பா, அண்ணாவோட பிரெண்ட் தான் இவங்க. இவரும் போலீஸ்தான், அண்ணனை பார்க்க வந்திருக்காங்க. வீட்டுக்கு வழி தெரியலன்னு என்கிட்டே கேட்குறாங்க.” என்று பவ்யமாக பதிலளிக்க

“அவரோ சிரித்தவாறு ” அட போலீஸ் தம்பி, நம்ம ஆதியோட தங்கச்சி தான் நந்தினிமா, அதுகிட்டயே அது வீட்டுக்கு வழி கேட்பிங்களா.” என்று கூற

நந்தினியோ “நீங்க வாங்க, கிளம்புவோம் ” என்று கூறி அவனுடன் ஜீப்பில் ஏறிவிட, விஜய் “என்னடா நடக்குது இங்க ” என்றுதான் பார்த்தான். அவர்கள் பின்னால் வந்த பெரியவரின் வண்டி இவர்களை தாண்டி சென்றதும் “வண்டியை நிறுத்துங்க, நான் இறங்கணும் ” என்று கூற

“இங்க இறங்கி, ஒழுங்கா என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போ ” என்று அவன் மிரட்டவும்

“வீட்டுக்கா… ஏற்கனவே எனக்கு ரொம்ப நல்ல பேரு. இன்னும் உங்ககூட வேற சேர்ந்து போய் நின்னேன் விளங்கிடும். முதல்ல வண்டிய நிறுத்துங்க. உங்களுக்கு வழி தெரியலன்னா அண்ணனுக்கு போன் போடுங்க வந்து கூட்டிட்டு போகும்” என்று அவள் பொரிய

“அன்னிக்கு வாயே தொறக்காம நின்ன, இன்னிக்கு சத்தம் அதிகமா இருக்கே” என்று அவன் வியக்கவும்

அன்றைய நினைவில் முகம் வாடினாலும் “அன்னிக்கு என்மேல தப்பு இருந்தது, அமைதியா இருந்தேன். இப்போ என்ன வந்தது, அதோட அந்த ஒருநாளை வச்சு என்னை பத்தி முடிவு செய்யாதீங்க” என்றவள் இதையெல்லாம் ஏன் இவனிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறோம் என்று தன்னையே திட்டிக்கொண்டு மீண்டும் “வண்டியை நிறுத்துங்க” என்று கத்த

“இதோ” என்றவன் வண்டியை நிறுத்தி இருந்தது பெரிய வீட்டு வாசலில் தான். அந்த நேரம் சிவகாமி வேறு வீட்டு திண்ணையில் அமர்ந்திருக்க, பயத்தில் கால்கள் நடுங்கியது நந்தினிக்கு. இப்போதெல்லாம் சிவகாமியிடம் சற்று பயம்தான் அவளுக்கு. அந்த வீட்டில் அவளை கண்டிக்கும் ஒரே ஆள் அவர்தான் என்றாகிப்போக தானாகவே பயம் வந்திருந்தது.

அவள் பயப்படுவதை கண்டவன் அவள் காதருகில் “பயப்பட வேண்டாம் பெப்பி… என்கூட வந்தா எதுவும் சொல்ல மாட்டாங்க. அப்படியும் கேட்டா நான்தான் தூக்கிட்டு வந்துட்டேன் ன்னு சொல்லு ” என்று மெதுவாக கூறியவன் சிவகாமியை நோக்கி நடந்து விட்டான்.

அவன் கூறிய வார்த்தைகளில் அதிர்ந்து நின்றுவிட்டவள் சில நிமிடங்கள் அசையவே இல்லை. சிவகாமி அவளை அழைக்கவும் தான் சுயம் பெற்றவளாக விரைந்து வீட்டினுள் சென்றாள். அங்கே ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்து ஆதித்யனுடன் அவன் பேசிக்கொண்டிருக்க, அமைதியாக அவர்களை கடந்து தன் அறைக்கு சென்றுவிட்டாள் அவள்.

அதன் பின்பு அன்று முழுவது ம்வெளியே தலைகாட்டவே இல்லை. உணவுகூட சக்தியின் உபயத்தால் அறையிலேயே நடந்தேறியது. ஆனால் விஜயராகவன் அந்த வீட்டில் இருந்த எல்லாரையும் தெரிந்தவன் போல் சரளமாக பேசி அனைவருடனும் நட்பாகி விட்டான்.

ஏற்கனவே ஆதியும் அவன் வந்த விஷயத்தை பற்றி தன் தாத்தா பாட்டியிடம் கூறிவிட்டிருக்க, ராஜமரியாதை தான் அவனுக்கு.

இங்கு நந்தினிதான் காய்ந்து கொண்டிருந்தாள். எதற்கு வந்திருக்கிறான்? என்று யோசித்தவள் அடுத்து எவ்ளோ தைரியமா பேசுறான். நல்லா முழியைப்பாரு ஆந்தையாட்டம். இதுல பெப்பி வேற. அது என்ன கருமமோ” என்று அவனை வசைபாடியவள் கடவுளே இவனை சீக்கிரமா துரத்தி விட்டுடேன்.” என்று வேண்டிக் கொண்டிருந்தாள்.

அவன் வெளியே அவள் அண்ணனுடன் சென்ற நேரம் அறையிலேயே அடைந்து கிடந்தவள் வெளியே வந்து தன் வீட்டின் மடியில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு வெளியே வேடிக்கையை ஆரம்பிக்க, சற்று நேரத்தில் அவள் பின்னால் வந்து நின்றிருந்தான் அவன்.

ஏதோ அரவம் உணர்ந்து திரும்பியவள் அங்கே அவனை எதிர்பார்க்காமல் தடுமாற, ஊஞ்சலை இறுக்கமாக பிடித்தவன் அவளை நெருங்கி ” ஹாய் கல்யாணப்பொண்ணு” என்று கூற

நீ என்ன லூசா என்ற பார்வையை கொடுத்தவள் அமைதியாக இருக்க “நிச்சயமா நீ கல்யாண பொண்ணுதான். அடுத்தமாசம் கல்யாணம் உனக்கு, இந்த விஜயராகவனோட. அது விஷயமா பேசத்தான் உன் ஊருக்கு வந்தது. இப்போ பேசியும் முடிச்சாச்சு. ரெடியா இரு” என்று உரைக்க

அவன் கூற்றில் அவள் அதிர்ச்சியானது ஒருநொடி தான். அவன் விலகும் நேரத்திற்குள் தெளிந்து விட்டவள் “இப்போ என்ன ? என்னை கல்யாணம் பண்ணிக்க போறிங்களா” என்று சாதாரணமாக கேட்க, விஜய்க்கு லேசான ஆச்சரியம் தான் அவளிடம்.

இருந்தாலும் அவன் ஆம் என்பது போல தலையசைக்க “என்ன தெரியும் என்னைப்பத்தி? என்ன அன்னிக்கு பயந்து போனதை பார்த்து பயந்தான்கொள்ளி. வாய்பேச மாட்டா ன்னு முடிவு பண்ணிட்டிங்களா.” என்றவள் தன் கைகளை தனக்கு பின்னால் ஊன்றிக்கொண்டு ” நீங்க நினைக்கிற அளவுக்கு அப்பாவி இல்ல நான். வில்லி. ரெண்டு கல்யாணத்தை ஒரே நேரத்துல நிறுத்த திட்டம் போட்டு இருக்கேன். இடையில ஒரு சூசைட் ட்ராமா வேற. இது இல்லாமலும் நெறைய இருக்கு என் லிஸ்ட்ல.

அன்னிக்கு என்கூட வந்தான்ல மகேஷ் அவனை நான் லவ் பண்ணவே இல்ல.ஆனா வேற ஒருத்தனை அவன் தான் எல்லாமே நினைக்கிற அளவுக்கு லவ் பண்ணிருக்கேன். அதுக்காக தான் இவ்வளவும். இப்போ திருந்திட்டேன் ன்னு எல்லாம் இல்ல. அவன் வேண்டாம் ன்னு முடிவு பண்ணிருக்கேன் அவ்ளோதான்.

அதுக்காக யார் வேணாலும் என்னை கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இல்ல. புரியுதா?? முக்கியமா உங்களுக்கும் எனக்கும் செட் ஆகாது. அன்னிக்கு என்ன சொன்னிங்க மரியாதை அதெல்லாம் என்கிட்டே எதிர்பார்க்க முடியாது. நீங்க நினைக்கிற மாதிரி ஒரு நல்ல ஹவுஸ் வைப் ஆ நான் இருக்க மாட்டேன்.

இதெல்லாம் கேட்டபிறகும் எனக்கு இந்த bettermax லைட்டே தான் வேணும் ன்னு தோணினா தாராளமா கல்யாணம் பண்ணிக்கோங்க.” என்று கூறியவள் எழுந்து நடந்துவிட அவள் இடக்கையை பிடித்து இழுத்தவன் அவளை மீண்டும் ஊஞ்சலில் தள்ளி “நிச்சயமா எனக்கு நீ தான் வேணும். நான் பிக்ஸாகிட்டேன். பார்க்கலாம் நீ எப்படி குடும்பம் நடத்துற ன்னு. எனக்கும் உன்னை மாதிரி ஒருத்திதான் கரெக்ட்.” என்றவன் அவள் கன்னத்தை நிமிண்டிவிட்டு கீழே இறங்கிவிட, நந்தினிதான் அதிர்ந்து நின்றாள்.

Advertisement