Advertisement

அத்தியாயம் 31

மதியழகி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க, அவளை கண்டுகொள்ளாமல் மில்லுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் தனஞ்செயன். அன்று இரவு தோப்பிற்கு சென்றுவிட்டு வந்தது முதல் அவர்களின் நெருக்கம் அதிகரித்து இருக்க, இருவருக்கு இடையேயான புரிதலும் அதிகரித்து இருந்தது.

முன்புபோல பேசவே யோசிக்காமல் காலை முதல்  நடந்த விஷயங்களை அவனிடம் அவ்வபோது பகிர்ந்து கொள்வாள். அவள் இயல்பாக இருப்பதே தனாவுக்கு நிம்மதியாக இருக்க, வீட்டிலும் விசாலத்துடன் நன்கு பொருந்தி விட்டாள் அவள்.

இன்றைய நிலையில் தனாவுக்கும், மதிக்கும் ஏதும் பஞ்சாயத்து என்றால் கூட விசாலம் கண்ணை மூடிக்கொண்டு மதிக்கு தான் தன் ஆதரவை வாரி வழங்குவார். அந்த அளவுக்கு மதி நல்ல பிள்ளையாக அவர் மனதில் பதிந்து இருந்தாள், இந்த நான்கைந்து நாட்களில்.

இயல்பான கணவன் மனைவியாக அவர்கள் வாழ்வை தொடங்கி நன்றாக போய் கொண்டிருக்க, இப்போது நந்தினியால் மீண்டும் முட்டிக் கொண்டனர் இருவரும். காலையில் தாமரை மதிக்கு தானாகவே அழைத்தவள் நந்தினி பற்றிய விஷயங்களை கூறி இருக்க, மிகவும் வருத்தமாகி போனது மதிக்கு.

எப்போதும் போலவே கணவனிடம் தாமரை கூறியவற்றை அவள் பகிர்ந்து கொள்ள, அவன் அப்படியா என்று கேட்டுக் கொண்டதோடு சரி. எதுவுமே பேசி இருக்கவில்லை. அதில் கடுப்பானவள் “என்னங்க நான் சொல்லிட்டே இருக்கேன். நீங்க எதுவுமே பேசாம இருக்கீங்க” என்று ஆரம்பித்து வைக்க

“என்ன பேசணும், கொஞ்சம் ஏமாந்து இருந்தாலும் நம்ம வாழ்க்கையை நாசம் பண்ணி இருப்பா, இன்னிக்கு அவளுக்கு ஒண்ணுன்னா என்னை பரிதாபப்பட சொல்றியா. உனக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவே இல்லைல” என்று அவன் காட்டமாகவே கேட்டிருக்க

” ஏதோ தெரியாம பண்ணிட்டா, இப்போ உணர்ந்திருப்பா. அதுக்காக அவளை அப்படியே விட முடியுமா. என்ன பேசறீங்க நீங்க” என்று அவள் கேட்கவும்

“நீ பேசுவடி, பேசுவ. படுத்தி வச்சது என்னைதான. அப்போ நீ இன்னும்கூட பேசுவ. இங்க பார் உன் மாமன் பொண்ணு நல்லவளாவே இருக்கட்டும். என்கிட்டே அவளை பத்தி பேசாத.” என்று அவன் கோபமாக கூறிவிட்டு குளிக்க சென்று விட்டான்.

அவன் கத்தியதில் மதிக்கு கண்கள் கலங்க பார்க்க, அதற்கும் திட்டுவான் என்பதால் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள் அவள். அவன் குளித்து முடித்து வந்தவன் அவன் பாட்டிற்கு மில்லுக்கு கிளம்ப, அத்தனை கோபம் வந்தது அவளுக்கு.

அவன் அந்த அறையின் வாசலை நெருங்கும் நேரம், “என்னை கூட்டிட்டு போய் என் வீட்ல விடுங்க, நான் நந்தினியை போய் பார்க்கணும். அண்ணிகூட போயிட்டு வந்துடறேன்” என்று அவள் கூறிவிட

அவளை திரும்பி நேராக பார்த்தவன் “யார் வீட்டுக்கு” என்று கூர்மையாக கேட்க, அத்தனை ரௌத்திரம் அவன் கண்களில். அப்போதுதான் உணர்ந்தவள் “அய்யோ” என்று தலையில் அடித்துக் கொள்ள “முதல்ல உன் வீடு எதுன்னு தெளிவா ஒரு முடிவெடுத்துக்கோ. அடுத்து போறதுன்னு முடிவு பண்ணிட்ட இல்ல, நீயே கெளம்பிப் போ. என்னை கூப்பிடாத” என்றவன் நடந்துவிட

எழுந்து அவன் பின்னால் ஓடினாள் அவள். ஆனால் நிற்காமல் சென்றுவிட்டவன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். அவளை திரும்பியும் பார்க்கவில்லை. இருவரும் இணைந்து வாழ ஆரம்பித்த பிறகு ஏற்படும் முதல் உரசல், வெகுவாக பாதித்தது அவளை.

தனாவுக்கு அப்படி எதுவும் இல்லை போல, கோபம் மட்டுமே அவன் முகம் முழுவதும். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள்? என்று நினைக்க நினைக்க ஆத்திரம்தான் வந்தது அவனுக்கு. அன்று முழுவதும் அந்த கோபத்தோடு அவன் சுற்றிக் கொண்டிருக்க, வீட்டிலோ விசாலத்தின் வற்புறுத்தலில் சரியாக உண்டுவிட்டவள் அவருடனே சுற்றிக் கொண்டிருந்தாள்.

கணவனோடான பிணக்கை யாரிடமும் கூற விரும்பாதவள், அவன் இல்லாமல் எங்கும் செல்லவும் விரும்பவில்லை. அமைதியாக அந்த வீட்டை சுற்றி வந்து பொழுதை ஓட்டியவள் மனம் நந்தினியை காண துடித்தாலும், வெளிகாட்டிக் கொள்ளவில்லை அவள்.

நந்தினி என்ன செய்து இருந்தபோதிலும் அவளுக்கு ஒன்று எனவும் தாங்கி கொள்ள முடியவில்லை அவளால். சிறு வயது முதலே இருவரும் ஒன்றாக சுற்றி வருபவர்கள். அவளுக்கு முதல் தோழி என்று கேட்டால் கூட சற்றும் யோசிக்காமல் நந்தினியின் பெயரை தான் சொல்வாள் மதி/

தன்னை விட சிரியவளாக இருந்தாலும், நந்தினி அவளுக்கு உற்ற தோழிதான். இவர்களுக்கு இடையில் வேந்தனும், ஆதித்யனும் வராமல் போயிருந்தால் இன்றும் கூட அவர்கள் இரட்டையர்களாகவே சுற்றிக் கொண்டிருந்திருப்பர் என்று யோசித்தவளுக்கு இப்போது சிரிப்பாக வந்தது.

முன்பு உயிரே போகும் அளவிற்கு பெரிதாக தெரிந்த பிரச்சனைகள் எல்லாம் இப்போது ஒன்றுமில்லாததாக தோன்றிவிட, இது அனைத்திற்கும் காரணம் தனஞ்செயன் தான் என்பதை அவள் மனம் உணர்ந்தே இருக்க, அதன்பொருட்டே அவள் அவனைமீறி செல்ல விரும்பாததும்.

இந்த நான்கைந்து நாட்களிலேயே அவன் ஒரு விஷயம் செய்தால் அது நிச்சயமாக சரியாக தான் இருக்கும் என்று நம்பிக்கை வந்திருக்க, அவன் மனமிறங்கும்வரை காத்திருக்க தொடங்கினாள் அவள். அதோடு இப்போது நந்தினியும் நலமாக இருப்பதாக மதியம் அவளின் தாமரை அண்ணி கூறியிருக்க, அவளை அவர்கள் எல்லாரும் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்தவள் இப்போதைக்கு தன் கணவனை கவனிப்பது என்று முடிவெடுத்துக் கொண்டு வீட்டில் தங்கிவிட்டாள்.

இங்கு பெரிய வீட்டில் இருந்த தாமரை,மதிய உணவுக்காவது வருவான் என்று அவனுக்காக காத்திருக்க, அவன் வரவே இல்லை. காலையிலும் அவன் சாப்பிடாமலே சென்றிருக்க, இப்போது மதிய உணவுக்கும் வரவில்லை என்றதும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தாள் அவள்.

வெகு நேரமாகியும் அவன் வரவில்லை எனவும், அவள் முகம் சோர்வாக இருக்க சக்தி ஒரு தூக்கில் உணவை எடுத்து வைத்தவள் ஒரு கூடையில் வைத்து தாமரையிடம் நீட்டிவிட, அவள் கேள்வியாக பார்க்கவும் தன் வண்டிச்சாவியை அவள்முன் நீட்டினாள் சக்தி. தாமரை புரிந்து கொண்டவளாக புன்னகைக்க சக்தி அவளை நக்கலாக பார்த்தவள் “தாமரை உடனே மலர்ந்துடுச்சே” என்று அவளை கிண்டல் செய்தே அனுப்பி வைத்தாள்.

தாமரை கையில் கூடையுடன் செல்வதைக் கண்டு ரங்கநாயகி புன்னகைத்து கொள்ள, சிவகாமியோ “எங்கே கிளம்பிட்டா இவ?” என்று கேட்டுக் கொண்டிருந்தார். அவள் வேந்தனுக்கு உணவு எடுத்து செல்வதாக சக்தி சிவகாமியிடம் கூறியவள் அனைவரையும் சென்று சிறிது நேரம் படுக்க சொல்லி அனுப்பிவிட்டு தானும் தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

தாமரை வேந்தனின் மில்லுக்கு சென்றவள் அவன் அறையில் அமர்ந்திருக்க, அவனோ தன் முன்பிருந்த கணக்கு புத்தகத்தில் கவனமாக இருந்தான். திருமணத்தால் இடையில் இரண்டு மூன்று நாட்கள் மில்லுக்கு வராமல் இருந்திருக்க அந்த கணக்குகளில் மூழ்கி போயிருந்தான் அவன்.

தாமரை பொறுத்து பார்த்தவள் எழுந்து அந்த அறையை விட்டு வெளியே செல்ல முற்பட, அப்போதுதான் கவனம் களைந்து அவளை பார்த்தவன் “எங்கே போற தாமரை ” என்று கேட்க

“நீங்க உங்க வேலையை முடிச்சிட்டு சாப்பிடுங்க, எனக்கு தூக்கம் வருது. வீட்டுக்கு போறேன்” என்று அவள் கிளம்ப முற்பட, “இங்க வந்து உட்காரு.” என்று அவன் கூறவும் அவள் முறைக்க “வந்து உட்காருடி.ஒரு பத்து நிமிஷம் முடிச்சிடுறேன்.இப்போ விட்டா திரும்ப முதல்ல இருந்து பார்க்கணும்.” என்று கூற அமைதியாக அவன் எதிரில் வந்து அமர்ந்தாள் அவள்.

சொன்னதுபோலவே பத்து நிமிடங்களில் வேலையை முடித்து விட்டவன் கையை கழுவிக் கொண்டுவர அவனுக்கு உணவை எடுத்து வைத்தாள் அவள். சாப்பிட அமர்ந்தவன் அவளையும் அருகில் அமர்த்திக் கொண்டான்.

அந்த இடம் அவனது அலுவலக அறையின் ஒருபகுதியாக இருக்க, அங்கு யாரும் வரமாட்டார்கள் என்பதால் அவள் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டான் அவன்.

அவன் செயலில் புன்னகை வந்தாலும் “என்ன பண்றிங்க நீங்க. யாரவது வரப்போறாங்க” என்று அவள் விலக

“யார் வந்தா என்ன? என் பொண்டாட்டிய தானே உரசிட்டு இருக்கேன். எவன் பார்த்தா எனகென்னடி” என்று வேந்தன் இலகுவாக கூறவும்

“ப்பா. பொண்டாட்டி… வெளியே சொல்லிடாதிங்க.. நானா தேடி வரலைன்னா பொண்டாட்டி ஞாபகம் கூட வராது சாருக்கு. இந்த மில்லையே கட்டிட்டு அழுவீங்க”

“கல்யாணம் ஆகி ஒரே வாரத்தில வேலைக்கு போறது கொடுமைன்னா அதைவிட கொடுமை இங்க வந்து உக்காந்துட்டு உங்களை வேடிக்கை பார்க்கிறது” என்று அவள் அலுத்துக் கொள்ள

சிரித்துக் கொண்டவன் “உன் புருஷன் இதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேண்டி. அப்படி சட்டுனு யாரையும் நம்பிவிட முடியல. அடுத்து உன் வேலை நீயெல்லாம் வேலை செய்ய அழுத்துக்கவே கூடாது. இந்த வேலை எத்தனை முக்கியமானது ன்னு நான் சொல்லனுமா உனக்கு.” என்று அவன் கேட்க

அவன் தோளில் சாய்ந்து கொண்டவள் “அட போப்பா. நான் எல்லாம் தெரிஞ்சுதான் படிச்சேன். எனக்கும் புரியும். இத்தனை நாளும் சரியாதான் வேலை செஞ்சிருக்கேன். ஆனா இப்போ இந்த வேந்தனால தான் இதெல்லாம் நடக்குது. என்னவோ பண்றிங்க என்னை.” என்று அவனையே குறை கூற

“அதுசரி. நீ சோம்பேறி ஆகிட்ட, அதுதான் உண்மை. வேந்தன் என்ன பண்ணேன் உன்னை. இதுவரைக்கும் நிதானமா ஒரு கிஸ் கூட கொடுக்கல “

அவன் கூறியதில் அவனை நிமிர்ந்து முறைத்தவள் “புத்தி போகுது பாரு.” என்று கூற, அவள் தோளிலிருந்த கையை அவள் இடைக்கு மாற்றிக் கொண்டவன் ” ஏன் என் புத்திக்கு என்ன” என்று அவன் வார்த்தைக்கு வார்த்தை அவள் இடையில் அழுத்தம் கொடுக்க “எங்கே இருந்துட்டு என்ன வேலை பார்க்குறாங்க ” என்று அதிர்ந்தவள் விலக முற்பட அவளை இன்னும் இறுக்கி கொண்டவன் “தள்ளி போகணும்ன்னு நெனச்ச ரெண்டு கையாலையும் இறுக்கமா பிடிச்சுப்பேன். அப்புறம் நீயும் உன் குழம்புல இருக்க  விரால் மீன் மாதிரியே மணக்க ஆரம்பிச்சிடுவ” என்று மிரட்டினான் அவன்.

அவன் வார்த்தைகளில் அவள் அசையவே இல்லை. அவனுக்காக மீன்குழம்பை எடுத்துக் கொண்டு வந்த அவளையாயே அவள் திட்டிக் கொண்டு அமர்ந்திருக்க, அதற்கும் ” என்ன அமைதியாகிட்டிங்க மேடம்” என்று அவன் சீண்ட

“ஒன்னும் இல்ல.” என்று நொடித்தவள் “உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்தேன்ல. எனக்கு வேணும்தான்” என்று அழாத குறையாக சொல்ல

” இந்தா சாப்பிடு” என்று அவள் வாயில் உணவை திணித்திருந்தான் வேந்தன். அவள் முறைக்கவும் “முதல்ல சாப்பிடு. அப்புறம் முறைக்கலாம்” என்று நக்கலாக கூற அவள் எழுந்து கொள்ள முற்பட,

“என்னடி உன் பிரச்சனை. சாப்பிட்டுட்டு எழுந்துக்கோ” என்று அவன் அவளை ஒரே கையால் இழுத்து அமர வைக்க “நான் வரும்போதே சாப்பிட்டுட்டுதான் வந்தேங்க. நீங்க முதல்ல சாப்பிடுங்க” என்று அவள் நகர்ந்து அமர

“உன்னை யாரு இவ்ளோ சாதம் வைக்க சொன்னது. பாரு என்னால சாப்பிடவே முடியல” என்று அவன் கடிந்து கொள்ளவும், “பொறுமையா சாப்பிடுங்க” என்றவள் அவனை விட்டு அசையவே இல்லை. எங்கே தான் விலகினால் உணவை வைத்துவிட்டு எழுந்துவிடுவானோ என்று தோன்ற அவன் அருகில் அமர்ந்தே இருந்தாள்.

அவளை சீண்டிக் கொண்டே ஒருவழியாக அவன் உண்டுமுடிக்கவும், பாத்திரங்களை எடுத்து வைத்துக் கொண்டு அவள் கிளம்ப தயாராக வேந்தனும் வேலைகளை முடித்து விட்டவன் அவளுடனே கிளம்பினான்.

அவன் பெரிய வீட்டிற்கு தான் செல்வான் என்று நம்பி தாமரை அவனுடன் கிளம்பி இருக்க, அவனோ வண்டியை அவர்கள் வீட்டுக்கு செல்லும் பாதையில் திருப்ப, பதட்டமாக “எங்கே போறீங்க ” என்று அவள் கேட்க

“எங்கே போவாங்க, வீட்டுக்கு தான் போறோம் “

“ஐயோ, எல்லாரும் பெரிய வீட்ல இருக்காங்க. நாம மட்டும் வீட்டுக்கு பொய் என்ன செய்ய போறோம். ஒழுங்கா வண்டியை திருப்புங்க ” என்று அவள் கூறவும் “ஹேய் அறிவு பொண்டாட்டி… எல்லாம் பெரிய வீட்ல இருக்கவும் தான் உன்னை நம்ம வீட்டுக்கு கடத்திட்டு போறேன்.” என்று அவன் கூறியதும் அவள் முகம் சிவந்தாலும், “இந்த சக்தியும், செவ்வியும் என்னை கிண்டல் பண்ணுவாங்க உங்களால” என்று கவலைப்பட

“இதுக்கெல்லாம் பார்த்தா குடும்பம் நடத்த முடியுமா?? அப்படியே அவங்க கிண்டல் பண்ணாலும் நீ அமைதியா வந்துடுவ என்ன” என்று அவளை நக்கலடித்தவன் அவளை வீட்டிற்கு கூட்டிவந்து விட்டான்.

இருவரும் வீட்டிற்குள் வரவும், வேந்தன் சோஃபாவில் அமர்ந்துவிட தாமரைக்கு தான் லேசான படபடப்புடன் கடந்தது நொடிகள். மருத்துவராக இருந்தாலும், எத்தனை வாயடித்தாலும் ஏனோ சிறு பயம் இருந்தது அவளுக்குள். ஆனால் அவன் இத்தனை நாளாக தன் மனதை புரிந்து விலகி இருக்க, இந்த நொடி அவனை ஏற்றுக் கொள்ள தயாராக தான் இருந்தாள் அவள்.

ஆனால் உள்ளுக்குள் தோன்றும் படபடப்பை அவளால் மறைக்கவே முடியவில்லை. இப்போதும் அவன் சோஃபாவில் அமர்ந்து கொள்ளவும் தப்பித்தவளாக மேலே தன் அறைக்கு சென்றுவிட்டவள் குளித்துவிட்டு ஒரு சாதாரண சேலையை கட்டிக்கொண்டு கீழே இறங்கிவர இன்னும் சோஃபாவில் தான் அமர்ந்திருந்தான் வேந்தன்.

இவள் கீழே வரவும் திரும்பி அவளை பார்த்தவன், சத்தமாக விசிலடித்து விட்டான். அந்த கரும்பச்சைநிற புடவை அவளுக்கு அத்தனை பொருத்தமாக இருக்க, கண்களை மூட மறந்தவன் போல் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

இவன் பார்வையில் அங்கே நிற்க முடியாமல் கால்கள் துவண்டு போக, மீண்டும் வந்த வழியே திரும்பி படிகளில் ஏறிவிட்டாள் அவள். அவள் படிகளில் ஏறவும் எழுந்து வேகமாக வந்தவன் அவளை கைகளில் தூக்கிக்கொள்ள “அய்யோ” என்று சத்தமாகவே அலறினாள் அவள்.

“ஏண்டி கத்துற” என்று அவளை அடக்கியவன் அவர்கள் அறைக்கு செல்லும் படிகளில் லோல்படிகளில் அமர்ந்துகொண்டு அவளையும் தன் மடியில் அமர்த்திக் கொண்டான். ஏற்கனவே குறுகலான படிகள் அவை. ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே ஏறவோ,இறங்கவோ முடியும்.

அதில் குறுக்காக அமர்ந்துகொண்டு அவன் அவளை வேறு தன்மீது அமர்த்திக்கொள்ள முழுவதும் அவன்மீது உரசிய நிலைதான் தாமரைக்கு. அவன் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவள் தலையை குனிந்து கொள்ள அவள் முகத்தை கைகளால் தொட்டு நிமிர்த்தியவன் அவளை தன்னருகில் மேலும் இழுக்க அவள் முகம் அருகில் வரவும்

“இப்போ சொல்லு, இந்த வேந்தனை பிடிச்சிருக்கா” என்று கேட்க, இடவலமாக தலையசைத்தவள் “பிடிக்கவே இல்ல.” என்று கூற அவளை கிள்ளிவைத்தவன் “அப்புறம் ஏண்டி என்னை கட்டிக்கிட்ட” என்று கேட்க

அவன் கிள்ளிய இடத்தை கைகளால் தடவிக் கொண்டவள் “சரியான முரடு, நான் எங்கே உங்களை கட்டிகிட்டேன். நீங்க தான் என்னை கடத்திட்டு போனீங்க, கல்யாணமும் பண்ணிட்டீங்க” என்று கூறிவிட அன்றைய நினைவில் சிரிப்பு வந்தது வேந்தனுக்கு.

“அன்னைக்கு எப்படி ஓடி வந்த, இளா… இளா… கண்ணை திறங்க இளா ன்னு..ப்பா… என்னா பீலிங் தெரியுமா,” என்று அவன் சிலாகிக்க, “நான் அலறியடிச்சு ஓடி வந்தா உங்களுக்கு சிரிப்பு வந்துச்சா” என்று அவள் கோபமாக கேட்க

“பின்னே காதலிக்கவே இல்ல, நந்தினியை கட்டிக்கோ ன்னு சொன்னவ. என் கைய பிடிச்சு அழுதா…. நல்லா இருந்துச்சு.” என்று அவன் ரசித்து கூற

“அடப்பாவி, ஒருத்தி உயிர் போக கதறுனா நீ ரசிப்பியா அதை” என்றவள் அவன் முடியை கைகளில் பிடித்து ஆட்டிவைக்க, வலிக்கவே இல்லை அவனுக்கு. மாறாக அவள் கையை தூக்கியதில் வெளிப்பட்ட அவளின் அழகை அவன் கண்களால் பருகிக் கொண்டிருக்க, சில நொடிகள் கடந்தே சுதாரித்து கைய இறக்கி கொண்டு ” கெட்ட பையனாகிட்டிங்க நீங்க ” என்றுவிட்டு எழுந்து சென்றுவிட்டாள்.

அவள் அவனை தாண்டி செல்லவும், அவள் கைகளை பிடித்துக் கொண்டு எழுந்துவிட்டவன் அவளோடு தங்கள் அறைக்குள் நுழைய, கதவை தாளிட்டுவிட்டு அவள் புறம் திரும்பினான்.

அப்போதும் அவள் முகம் பார்த்தவன் தயங்கி நிற்க “அவ்ளோ நல்லவனாடா நீ” என்று ஒருமையில் கேட்டவள் குரலில் நிச்சயம் பெருமிதம்தான் விரவி இருந்தது. சட்டென்று அவள் ஒருமைக்கு தாவிவிடவும் அதிர்ந்து நின்றவன் அவள் கேள்வியில் சிரித்துவிட்டான்.

“பாவம் பயப்படறாளே ன்னு யோசிச்சா என்னையே கிண்டல் பண்றியா… இன்னிக்கு காட்றேன் எவ்ளோ நல்லவன்னு.” என்றவன் “என்ன சொன்ன டா வா ” என்று அவளை நெருங்க, அசையாமல் தோரணையாகவே அவனை பார்த்து நின்றாள் அவள்.

அவள் பார்வையில் அவன் தான் தயங்க வேண்டியதாகிப்போனது. அவன் தயக்கத்தில் அவன் கழுத்தில் கைகளை கோர்த்துக் கொண்டவள் ” நான் டாக்டர். ஞாபகமிருக்கா உங்களுக்கு…. அன்னிக்கு பயந்தது சட்டுன்னு நடந்தது… அதுக்காக இவ்ளோ யோசிக்க வேண்டாம். கத்துக் கொடுக்கலாம்” என்று அவள் அவனுக்கு பாடமெடுக்க அவளை கைகளில் அள்ளிக் கொண்டான் அவன்.

அந்த மாலை வேளையில் சூரியன் நிலவை தேடிச் சென்று கொண்டிருக்க, தன் தாமரைநிலவோடு சங்கமித்து இருந்தான் தாமரையின் வேந்தன்.

Advertisement