Advertisement

அத்தியாயம் 30

 

                       சிவகாமி வேந்தனுடன் வீட்டிற்குள் நுழைந்தவர் நந்தினியைத் தேட, சக்தியுடன் அவள் அறையில் இருந்தாள் அவள். தாமரை சமையலறையில் இருந்து கையில் பாலுடன் வெளியே வர, வேந்தன் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.

                       சிவகாமி நந்தியின் அறைக்குள் நுழைய தலையை குனிந்து கொண்டு அமர்ந்திருந்தாள் அவள். இதுவரை ஒரு வார்த்தை கூட சக்தியிடம் அவள் பேசி இருக்கவில்லை.உள்ளே நுழைந்தது முதலே அமைதியாகவே இருக்க, அவளின் அமைதி சக்திக்கு ஏனோ தவறாகவே பட்டது. என்னவானது இவளுக்கு என்று அவள் யோசனையாக அவளுடன் நின்று கொண்டிருக்க, அந்த நேரம் தான் சிவகாமி வந்தது.

                     சிவகாமி நந்தினியின் முன்னால் நின்றவர் அவளை ஓங்கி அறைந்துவிட, அசையவே இல்லை அவள். அவர் அடித்த அடியின் தாக்கம் கூட எதுவும் இல்லை. கண்ணீரோ, கோபமோ எதுவுமே இல்லாமல் அவள் அமைதியாகவே அமர்ந்திருக்க மீண்டுமொருமுறை அடித்துவிட்டார் அவர்.

                     சக்தி அவரின் நிலை புரிந்தவளாக அவளிடமிருந்து அவரை விலக்கி நிறுத்தியவள் “என்ன பண்ற கிழவி நீ, கொஞ்ச நேரம் அமைதியா இரு.” என்று அவரை அடக்க

                 அவளிடம் இருந்து திமிறி விலகியவர் மீண்டு நந்தினியிடம் செல்ல, அதற்குள் ஆதித்யன் தடுத்திருந்தான் அவரை. “என்ன வேணும் பாட்டி உங்களுக்கு. எதுக்கு அவளை அடிக்க போறீங்க ” என்று கேட்க

                   “எங்கே போயிருந்தா இவ, எங்கே இருந்து கூட்டிட்டு வர இவளை. இப்போ என்ன இழுத்து வச்சிருக்கா ” என்று அவர் கேட்க

                   “பாட்டி. அவ எங்கேயும் போகல, புரியுதா உங்களுக்கு. முதல்ல அமைதியா இருங்க நானே சொல்றேன் எல்லாத்தையும்” என்று கூறியவன் நடந்தது அனைத்தையும் அவரிடம் கூற அங்கு நின்றிருந்த சக்தியும், தாமரையும் வேந்தனும் கூட அனைத்தையும் கேட்டிருந்தனர்.

                  வேந்தன் இவளுக்கு இது வேண்டியது தான் என்று நினைத்தாலும் வெளியில் எதுவுமே சொல்லவில்லை. சக்திக்கு அவள் அப்படி அமர்ந்திருப்பது வருத்தமாக இருக்க அருகில் சென்றாள். அவள் அருகில் சென்றவள் அவள் கையை பிடிக்க, சக்தியை நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் கண்ணீர் பெருகியது மீண்டும்.

                       சக்தி கையை நீட்டி அவள் கண்களை துடைத்துவிட, ஆதித்யன் தங்கையின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான். அவளை தோளில் சாய்த்துக் கொண்டவன் “அவளை எதுவும் கேட்காதீங்க பாட்டி. அவ ஓய்வெடுக்கட்டும்” என்று கூறிவிட அனைவரும் வெளியேறவும், நந்தினியிடம் திரும்பியவன் ” நீ கொஞ்ச நேரம் படுத்துக்கோ நந்து. கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு, படுத்து தூங்கு” என்றவன் எழுந்து கொள்ள முற்பட அவன் கையை பிடித்துக் கொண்டவள் “இங்கேயே இருண்ணா ” என்று பாவமாக கூறவும் அவள் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டான் அவள்.

                     ஏனோ உறக்கமே வரவில்லை அவளுக்கு. தன் கையிலிருந்த அண்ணனின் கைகளை பார்த்தவளுக்குள் சிறுவயது ஞாபகங்கள். ஏனோ இவன் கையை தான் விட்டிருக்கவே கூடாதோ?? என்று தோன்ற அமைதியாக கண்களை மூடிக் கொண்டாள்.

                    சிறிது நேரத்தில் சக்தி அந்த அறைக்கு வந்தவள் நந்தினிக்கான உணவை எடுத்து வந்திருந்தாள். அவள் படுத்திருக்கவும், ” சாப்பிடாம ஏன் தூங்க விட்டிங்க, எப்போ சாப்பிட்டான்னே தெரியல. அத்தனை சோர்வா இருந்தா” என்று ஆதித்யனிடம் பேசிக் கொண்டிருக்க, அவன் முகத்தில் ஒரு விரிந்த புன்னகை தன் மனையாளை நினைத்து.

                         இவ ஏண்டா இவ்வளவு நல்லவளா இருக்கா ?? என்று நினைத்தவனுக்கு சிரிப்பு வர, “என்ன சிரிப்பு வேண்டி இருக்கு. எழுப்புங்க ” என்று அவள் அதட்டவும் நந்தினி தானாகவே கண்களை திறந்து விட்டாள். சக்தி அவளை பார்த்து புன்னகைத்தவள் ” எழுந்துக்கோ நந்தினி. சாப்பிட்டுட்டு படுத்துக்கோ” என்று கூற, நந்தினிக்கு தான் குற்றவுணர்வாக இருந்தது.

                     எத்தனை முறை அவளை அவமதித்து இருப்பாள் ?? இப்போது அது எதுவுமே நினைவில் இல்லாதவள் போல் அவள் நடந்துகொள்ள, அவளின் பண்பில் தன் குற்றங்கள் பூதாகரமாக தெரிந்தது அவளுக்கு. அவளை பார்க்கவே தயக்கமாக இருக்க சக்தி அவளை புரிந்தவளாக ” நாத்தனாரோட சண்டை போடறது எல்லாம் எல்லா வீட்லயும் இருக்கும். அதுக்காக உன்னை எப்படியோ போ ன்னு விட்டுடுவாங்களா?? இதுக்கெல்லாம் முழிச்சு முழிச்சு பார்த்துட்டு இருக்க. முதல்ல எழுந்திரு.” என்று அவளை அதட்டினாள் சக்தி.

             அவள் எழுந்து அமரவும், “மொதல்ல போய் குளி. உன்னோட கசப்பான விஷயங்கள் அத்தனையும் உன்னைவிட்டு போய்டணும்ன்னு நெனச்சு தண்ணி ஊத்திக்க. உனக்கே தெம்பா இருக்கும். குளிச்சு சாப்பிட்டுட்டு எழுந்து வெளிய வாம்மா. நடந்துள்ள உன் தப்பு என்ன இருக்கு? அந்த நாயோட புத்திக்கு நீ என்ன பண்ண முடியும். இதையெல்லாம் தூக்கி போடு” என்று நந்தினியை அவள் தெளிய வைக்க, அவளின் முகமும் மெல்ல தெளிந்தது.

                 அதை பயன்படுத்திக் கொண்டவள் அவளை எழுப்பி குளிக்க அனுப்பிவிட, அங்கு அமர்ந்திருந்த ஆதித்யன் சக்தியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனைவியின் பரிமாணங்கள் அவனை அசந்து நிற்க வைத்தது. இப்போது சக்தியும் ஆதித்யனிடம் திரும்பியவள் அவன் பார்வையை உணர்ந்து என்ன என்பதுபோல் பார்க்க, கண்களால் அவளை அருகில் அழைத்தான் அவன்.

                              அவள் அருகில் வரவும் அவள் கன்னங்களை பிடித்து கொண்டவன் அவள் நெற்றியில் இதழ்பதிக்க எப்போதும் போலவே இப்போதும் சிவந்து நின்றாள் அவள். அவள் முகத்தை கண்டவனுக்கும் அவளை இப்போது தான் முதல்முறை பார்ப்பதை போலவே தோன்ற அவள் இதழ்களை எடுத்துக் கொண்டான்.

                     சிறிது நேரம் அவனுடன் இழைந்தவள் அவன் முதுகிலே பட்டென்று ஒன்று போட்டு அவனிடம் இருந்து விலகினாள். அவன் முறைக்கவும் பாத்ரூமை அவள் கண்காட்ட, புரிந்தவனாக தலையை கொதிக்க கொண்டு வெளியேறினான் அவன். நந்தினிக்கு எடுத்து வந்த உணவு ஆறி போயிருக்க, சக்தி மீண்டும் அவளுக்கு தோசை வார்த்து எடுத்துவர அதே நேரம் குளியல் அறையிலிருந்து வெளிப்பட்டாள் நந்தினி.

                அவள் முன்பு அவளுக்கான உணவை வைத்தவள், அவள் உண்டு முடித்தபிறகு, இரண்டு மாத்திரைகளை அவளிடம் நீட்டினாள். அவள் புரியாமல் பார்க்கவும் ” ரொம்ப சோர்வா இருக்க நந்தினி, கண்டிப்பா காய்ச்சல் வந்திடும் உனக்கு. இதை போட்டுட்டு படுத்துக்கோ. நல்லா தூங்கி எழுந்தா எல்லாம் சரியாகிடும்’ என்று கூற

                     எதுவும் பேசாமல் அந்த மாத்திரைகளை வாங்கி விழுங்கியவள் படுத்துக் கொண்டாள். சக்தி அந்த அறையை விட்டு வெளியேற அந்த அறையில் தனியாக இருப்பது ஏனோ அவளுக்கு பிடிக்கவே இல்லை.ஏதேதோ நினைவுகள் அவளை துரத்திக் கொண்டிருக்க, நிச்சயம் உறக்கம் வராது என்று தோன்றியது அவளுக்கு. சக்தியை அங்கேயே இருக்க சொல்லவும் ஏதோ தடுக்க அவள் சென்றுவிட்டாள்.

                         ஆனால் சில நிமிடங்களில் சக்தி மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்தவள் அவள் அருகில் அமர்ந்து கொள்ள, கேள்வியாக பார்த்த நந்தினியிடம் “நீ தூங்கு, நீ தூங்குற வரைக்கும் கூட இருக்கேன்” என்று விட்டு அமைதியாக அவள் மொபைலை பார்க்க, கண்களை மூடி மெதுவாக உறங்க தொடங்கினாள் நந்தினி.

                      ஆதித்யன் நடந்த அனைத்து விஷயங்களையும் வீரபாண்டியனிடம் கூறி இருக்க, அவர் உடனே கிளம்பவும் சுந்தரபாண்டியனும் அவருடன் கிளம்பி இருந்தார். செவ்வியும் வருவதாக கூற அவளை தனியே விட மனமில்லாமல் ரங்கநாயகியும் கிளம்ப அத்தனை பெரும் அடுத்த ஒருமணி நேரத்தில் பெரிய வீட்டில் இருந்தனர். இவர்கள் வருவதை அறிந்த வேந்தன் “இது வேலையாகாது” என்று நினைத்தவன் தாமரையிடம் மட்டும் கிளம்புவதாக கூறிவிட்டு மில்லுக்கு சென்றுவிட்டான்.

                     அனைவரும் இங்கே வருவதால் அவளை அழைத்து செல்லவில்லை. ஆம் இப்போதெல்லாம் தாமரையின் ஓய்வு நேரங்கள் பெரும்பாலும் மில்லில் தான். அவன் மில்லை விட்டு அசையாமல் அடம் பிடிக்க, அவனுடன் இருக்க விரும்புபவள் மருத்துவமனையிலிருந்து நேராக மில்லுக்கு சென்றுவிடுவாள். இவள் இருப்பதால் அவனும் நேரத்திற்கு கிளம்ப தொடங்கி இருக்க ரங்கநாயகி நிம்மதியாக பத்து மணிக்கெல்லாம் உறங்க தொடங்கி இருந்தார்.

                      இருவரும் மனதளவில் முன்பை விட அதிகமாக நெருக்கமாகி இருக்க, உடல் அளவில் விலகியே இருந்தனர். தாமரை அவனை அவ்வபோது பார்த்தாலும் “ரொம்ப யோசிக்காதடி.. ” என்று அவளை அடக்கி விடுபவன், அவள் தனியாக கிடைக்கும்போது அவளை வெகுவாக சீண்டுவதையும் வழக்கமாகவே மாற்றி இருந்தான்.

                         பெரும்பாலும் அவன் தனியாக இருக்கும் நேரங்களில் தாமரை அவன் கண்களில் சிக்குவதே இல்லை இப்போது. அவளும் அன்றைய இரவுக்கு பிறகு பயம் என்ற ஒன்றை கண்களில் காட்டாமல் இருந்தாலும், அவள் தன்னை மனதளவில் உணர வேண்டும் என்று முடிவு செய்திருந்தவன் உணர்த்தவும் தொடங்கி இருந்தான். அதன் பொருட்டே இந்த சீண்டல்கள் எல்லாம்.

                             அவளை சீண்டி சீண்டியே சிவக்க வைப்பவன் தன் அருகமையையும் உணர்த்த தவறுவதே இல்லை. அதன் பொருட்டே இப்போதெல்லாம் அவன் மீது லேசாக கருணை காட்ட துவங்கி இருந்தாள் அவன் மனைவி.

                                 வீரபாண்டியன் மொத்த  குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு மருமகளை நலம் விசாரிக்க கிளம்பி இருக்க, பெரிய வீடு அன்று சொந்தங்களால் சூழப்பட்டு இருந்தது. வேதமாணிக்கத்திற்கு அனைத்து விஷயங்களும் சொல்லப்பட்டிருக்க, அவரும் வீடு வந்திருந்தார்.

 

              பேத்தியின் மீது ஏகப்பட்ட வருத்தங்கள் இருந்தாலும் அவருடைய பேத்தி தானே அது மாறிவிடாது அல்லவா. பெற்ற பிள்ளைகளையே விஞ்சி நிற்கும் உறவு என்றால் அது பேரன்களும், பேத்திகளும் தான். வேதமாணிக்கமும் அதற்கு விதி விலக்கு அல்ல என்று நிரூபிப்பவரை போல கண்ணீருடன் பேத்தியின் தலையை கோதிவிட்டவர் வெளியில் வந்து அமர்ந்து விட்டார்.

 

                     அனைவரும் நந்தினி கண்விழிப்பதற்காக காத்திருக்க, அனைவரூக்கும் உணவு தயாரிக்கும் பொறுப்பை சக்தியும், தாமரையும் கையில் எடுத்திருந்தனர். இருவரும் சமையலறையில் தீவிரமாக இயங்கி கொண்டிருக்க வெளியில் பேச்சு ஓடிக் கொண்டிருந்தது.

 

                        அனைவரும் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தாலும், நந்தினியை பற்றிய கவலை உள்ளுக்குள் இருந்தது என்னவோ நிஜம். இனி என்ன செய்ய போகிறாளோ என்று அனைவரும் எண்ணமிட்டு கொண்டிருக்க அப்படி எந்த கவலையும் இல்லாமல் அமர்ந்திருந்தான் ஆதித்யன்.

 

                              நேற்று நந்தினியிடம் பேசியபோதே அவனுக்கு தெளிவுதான். அவள் இனி மீண்டு விடுவாள் என்று. ஒரு போலீஸ் அதிகாரியாக அவள் கண்களில் தெரிந்த உணர்வுகள் புரிந்தது அவனுக்கு.அந்த அளவுக்கு பயந்திருந்தாள் அவள். ஒருவகையில் இதுவும் நல்லதுக்காகவே என்றுதான் அவனுக்கு தோன்றியது.

 

                    இப்படி நடக்காமல் போயிருந்தால் அவன் தங்கை அவனுக்கு கிடைக்காமலே கூட போயிருக்கலாம், அந்த வகையில் நடந்த விஷயங்களை நினைத்து அவனுக்கு நிம்மதிதான். இனி அவள் வாழ்க்கையை அவள் விரும்பும் வகையில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தவனுக்கு விஜயின் முகம் நினைவு வர லேசான புன்னகை தான் அவனிடம்.

 

               இவர்களை எல்லாம் இப்படி படுத்தி வைத்தவளோ சாவகாசமாக மதியம் மூன்று மணிபோல தான் எழுந்து கொண்டாள். அவள் அருகில் வீரபாண்டியன் அமர்ந்திருக்க, அவரை கண்டவுடன் உடல் நடுங்கியது அவளுக்கு. ஆனால் அவரோ வாஞ்சையாக அவள் கன்னம் தட்டியவர் “தூக்கம் விட்ருச்சா குட்டிமா.” என்று அன்பாக கேட்க

 

                அந்த அன்பில் நெகிழ்ந்துதான் போனாள் அவள். கண்கள் கலங்க அவரை பார்க்க “ஸ்ஸ் .. சும்மா அழக்கூடாது நந்துமா. அழுதா மாமாக்கு பிடிக்காது தெரியும்ல” என்று அதட்டவும் கண்களை துடைத்துக் கொண்டாள் அவள். அப்போது தான் அவள் நிமிர்ந்தது பார்க்க மொத்த குடும்பமும் நின்றிருந்தது அங்கே.

 

                 கந்தகுரு தன் மகளின் தலைமாட்டில் நின்றிருக்க அவரை கண்டவள் “அப்பா….” என்று அழைக்கவும் அவர் முன்னால் வர அவரை கட்டிக்கொண்டு அழுதாள் அவள். அவளால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. அந்த குடும்பத்திற்கு இதுவரை எதுவுமே செய்ததில்லை அவள்.

 

              அதை விட்டுவிட்டால் கூட அவர்கள் பெயரை கெடுப்பது போல் நடந்து கொண்டது தான் அதிகம். அதுவும் மதி விஷயத்தில் எத்தனை பெரிய தப்பு செய்திருக்க, இப்போது ஒருவரும் அதைப் பற்றி பேசாமல் தன்னை தாங்கி கொள்வதை பார்த்தவளுக்கு தான் செய்த குற்றத்தின் வீரியம் புரிந்தது.

 

                 அவர்கள் அனைவரும் அவளை அன்பால் அடித்துக் கொண்டிருக்க, அவர்கள் அன்பில் அவள் மீது படிந்திருந்த கறைகள் விலகி, தெளிய தொடங்கி இருந்தவள் சரியான வழியில் யோசிக்க ஆரம்பித்திருந்தாள். அவர்கள் அத்தனை பேரின் அன்பையும் திகட்ட திகட்ட வாங்கி கொள்ள முடிவு செய்தாள் அவள். இனி இவர்கள் தான் என் வாழ்விற்கு என்று முடிவு செய்தவள் தன் தந்தையிடம் இன்னும் அழுத்தமாக ஒட்டிக்கொண்டாள்.

               ஒருவழியாக அவள் அழுகையை முடிக்கவும் அனைவரும் அவளுடன் பேசிக் கொண்டு அமர்ந்திருக்க, அவளும் ஆர்வமாகவே அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

 

                 அங்கிருந்தவர்களில் ஒருவர் கூட நேற்று நடந்த விஷயங்களை பற்றியோ, மதி விஷயத்தையோ அவளிடம் எடுக்கவே இல்லை. எதுவும் நடக்காதது போலவே அவளிடம் சாதாரணமாக பேசியவர்கள் அவளையும் பேச்சில் இழுத்துக்கொள்ள அவர்களின் முயற்சி புரிந்தவளாக அவளும் ஒத்துழைத்தாள்.

 

             அவளுக்கான மதிய உணவை சிவகாமி எடுத்து வந்தவர் அவளிடம் கொடுக்க, வாங்கவே இல்லை அவள். அவர் மீண்டும் முறைக்கவும், கந்தகுரு தட்டை வாங்கி கொண்டவர் தன் மகளுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தார். அவள் உண்ண தொடங்கவும் சக்தியும், தாமரையும் அனைவருக்கும் உணவு பரிமாற நேரம் அழகாக கடந்தது அங்கே.

 

                      காலையில் மங்கையின் வரவால் கசப்பாக விடிந்திருந்த அந்த நாள்,கொஞ்சம் கொஞ்சமாக தன் இயல்பை மீட்டு கொண்டு மகிழ்ச்சியாக மாறிக் கொண்டிருந்தது. அந்த வகையில் அன்று  நல்ல நாளே……..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement