Advertisement

அத்தியாயம் 3

வேந்தன் என்றைக்கும் இல்லாத வழக்கமாக அன்று விரைவிலேயே வீடு திரும்பி இருக்க, சுந்தரபாண்டியன் அவர் அறையில் உறங்கி கொண்டிருக்க, ரங்கநாயகி செவ்வியுடன் அமர்ந்து அவர்கள் தோட்டத்தில் பூத்த மல்லிப்பூக்களை மாலையாக கட்டிக் கொண்டிருந்தார்.பார்த்தவன் எதுவும் சொல்லாமல் அங்கிருந்த சோபாவில் அமர்ந்துவிட்டான்.

ரங்கநாயகி அவனிடம் எப்படி இதைக் கூறுவது என்று யோசித்துக் கொண்டிருந்தார். ஆனால் செவ்விக்கு தெரியும் தான் இங்கே இருக்கும்வரை அவன் ஒருவார்த்தை கூட கேட்கமாட்டான் என்று. எனவே தொடுத்த பூக்களை அங்கேயே வைத்துவிட்டு மாடியில் இருந்த துணிகளை எடுத்து வருகிறேன் என்று ரங்கநாயகியிடம் கூறிவிட்டு படிகளில் ஏறிவிட்டாள்.

ரங்கநாயகிக்கு புரியாமல் இருக்குமா. இதற்கு காரணமான தன் இளைய மகனை அவர் உக்கிரமாக பார்க்க, அவரின் பார்வை புரிந்தவன் ” உங்க மருமகளை நானா வெளியே போக சொன்னேன். அவங்களா போனாக்கூட என்னை முறைப்பீங்களா நீங்க ” என்று அவன் கேட்கவும்

” நடிக்காதடா. எனக்கு தெரியாது உன்னைப்பத்தி. என்ன தெரியணும் உனக்கு கேளு ” என்றுவிட

” மா. தாமரை வீட்டுக்கு போனீங்களே என்ன ஆச்சு. என்ன சொன்னாங்க ” என்று அவன் எதிர்பார்ப்புடன் கேட்க

அவன் முகத்தில் தெரிந்த எதிர்பார்ப்பில் ரங்கநாயகிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. என்ன சொல்வார் அவர். அவர்கள் மறுப்பை எப்படி சொல்வது என்று அவர் மருகிக் கொண்டிருக்க, அவரின் முகமாற்றத்திலேயே விஷயத்தை புரிந்துகொண்டவன்

” என்னவாம் என்ன சொன்னாங்க.” என்று கேட்க, அதற்குமேல் முடியாமல் அங்கு நடந்த அனைத்தையும் ரங்கநாயகி மகனிடம் கூறிவிட, அவர்களின் மறுப்பில் கோபம் கனன்றது அவனுக்கு. அதுவும் அந்த நந்தினியை தான் கட்டிக் கொள்ள வேண்டுமா என்று நினைத்தவன்

” அவங்க பொண்ணை கொடுக்க முடியாதுன்னு சொல்ற வரைக்கும் சரி. ஆனா நந்தினியை முடிக்க சொல்லி அவர் எப்படி சொல்வாரு. இதை கேக்கமாட்டிங்களா ரெண்டு பேரும் ” என்று அவன் காய

” நான் என்னடா பண்ணுவேன். மாணிக்கம் அண்ணன் அப்படி சொன்னதும் உங்க அப்பா கிளம்புறோம்னு சொல்லி எழுந்துட்டாங்க. எனக்கு மட்டும் ஆசை இல்லையா கண்ணா ” என்று அவர் கூற அவரை முறைத்தவன்

” உங்கையாரையும் இனி நம்புறதா இல்ல. நானே பார்த்துக்கறேன் ” என்றவன் அந்த நேரத்தில் வெளியே கிளம்பிவிட்டான். அவன் போன வேகத்திற்கு கடவுளே இவன் என்ன செய்ய காத்திருக்கிறானோ தெரியலையே என்று உள்ளுக்குள் புலம்பியவர் வேகமாக சென்று கணவரை எழுப்பி நடந்ததை கூற, சுந்தரபாண்டியன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

” விடு நாயகி. வருத்தத்துல இருப்பான்.அவனே சரியாகிடுவான். நானும் அண்ணன்கிட்ட பேசுறேன் ” என்றார். அந்த நேரம் செவ்வி இருவருக்கும் காஃபி கொண்டுவந்து கொடுக்க அந்த பேச்சு அத்துடன் முடிந்துபோனது. ஆனால் வீட்டிலிருந்து கிளம்பியவன் அதை முடிப்பதாக இல்லை போல.

நேராக கிளம்பி மில்லை அடைந்தவன் அன்புவின் போனை எடுத்து அவன் தங்கை மணிமேகலைக்கு அழைத்து ” மணி, தாமரை வீட்ல இருக்காளா. இல்ல ஹாஸ்பிடல் கெளம்பிட்டாளா ன்னு கொஞ்சம் பார்த்து சொல்லுடா ” என்றதும்

அவளும் உடனே சென்று பார்த்துவந்தவள் ‘ அக்கா கிளம்பிட்டாங்க அண்ணா. மதியத்துக்கு மேல தான் கிளம்பி இருக்காங்க போல” என்று கூற அவளுக்கு நன்றி உரைத்தவன் தன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான் திருநெல்வேலிக்கு. அந்த மருத்துவமனையின் வாசலில் சென்று நின்றவனுக்கு உள்ளே செல்ல என்ன காரணம் சொல்வது என்று யோசனையாக இருக்க, அங்கேயே நின்றிருந்தான்.

அந்த நேரத்தில் தான் நம் சக்தி எதற்கோ வெளியில் வந்தவள் இவனை பார்த்துவிட, எப்போதுமே இளாவிடம் நன்றாக பேசுபவள் என்பதால் அருகில் வந்து ” என்ன இளா இங்க என்ன ஆச்சு ” என்று கேட்க

இளா சக்தியிடம் ” நான் தாமரையை பார்க்கணும் சிவா. ப்ளீஸ் ” என்றதும், அன்று மதியம் தாமரை தன்னிடம் கூறியவைகளை யோசித்து பார்த்தவள் ” வேண்டாம் இளா. அவளே இப்போதான் கொஞ்சம் நார்மலா இருக்கா. அதுவும் இது அவ வேலை பார்க்கிற இடம். இங்க வேண்டாமே. அவ ஊருக்கு வந்த உடனே பேசிக்கலாம் இளா. ” என்று பொறுமையாக கூறவும்

” உனக்கு புரியாது சிவா. நான் அவளை ஒன்னும் பண்ணிட மாட்டேன். ஒரு பத்து நிமிஷம் நான் அவளோட பேசணும் அவ்ளோதான். நீ கூப்பிடு. நான் பேசிட்டு போய்டுவேன் ” என்று கூற

” இல்ல இளா.அவ வரமாட்டா . புரிஞ்சிக்கோ ” எனவும்

” அவளை பார்க்காம நான் இங்க இருந்து ஒரு அடி கூட நகரமாட்டேன் சிவா. போய் சொல்லு உன் பிரென்ட் கிட்ட. எனக்குத்தெரியும் அவதான் உன்னை அனுப்பி இருப்பான்னு. நீ போய் அவகிட்ட சொல்லு. நான் இங்கேயே தான் இருப்பேன் ” என்று தீர்மானமாக உரைத்தவன் அவன் பைக்கில் அமர்ந்துவிட்டான்.

அவன் தாமரையை பார்க்காமல் போகமாட்டான் என்பது சக்திக்கு புரிந்துபோக, அவனிடம் அதற்குமேல் எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டாள் அவள். உள்ளே வந்தவளின் முகத்தை தாமரை கேள்வியாக பார்க்க

” அப்படி பார்க்காத தாமரை.இளா உன்னைவிட பிடிவாதம். போகாம அங்கேயே உட்கார்ந்து இருக்கு” என்றவள்

” நீயே பேசிடு தாமரை. இது உன் வாழ்க்கை நீதான் முடிவெடுக்கணும். உங்கிட்ட பேசாம அவன் இங்க இருந்து போகமாட்டான். அதையும் பார்த்துக்கோ.” என்றவள் அங்கிருந்து சென்றுவிட தாமரை அங்கிருந்த ஜன்னல் வழியாக அவனை பார்த்தவள் கண்களில் கண்ணீர் நிறைந்தது.

” ஏண்டா இப்படி என் பின்ன சுத்திட்டு இருக்க. எனக்கு நீ வேண்டாம் ” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் மௌனக் கண்ணீர் வடித்து கொண்டிருந்தாளே தவிர, வெளியே சென்று அவனிடம் பேசிவிடும் தைரியம் வரவில்லை அவளுக்கு. இரவு எட்டு மணி போல டியூட்டி முடிந்து இவள் தன் வண்டியில் கிளம்ப, அதுவரை அங்கேயே நின்றிருந்தான் அவன்.

சக்தி சற்று நேரத்திற்கு முன்பு காரில் முத்துவுடன் கிளம்பி இருக்க, தாமரை தன் வண்டியில் ஏறிக் கிளம்பினாள். அவன் அங்கு நின்றிருப்பதை உணர்ந்தாலும் அவனிடம் பேசும் தைரியம் வராமல் போக கிளம்பிவிட்டாள். அவனோ ” உனக்கு அம்புட்டு ஏத்தமா ஆகிடுச்சா டி ” என்று கொதித்தவன் தன் கோபத்தை வண்டியில் காட்டியவன் அவள் பின்னே தொடர ஆள் அரவமற்ற சாலையில் அவள் சென்று கொண்டிருக்க, ஒரு இடத்தில அவளை தாண்டி சென்றவன், அவளுக்கு முன்னால் அவளை மறிப்பது போல தன் வண்டியை குறுக்காக நிறுத்தி இறங்கி, அவள் வண்டியின் சாவியை கையில் எடுத்துக் கொண்டான்.

அவனின் இந்த செயலில் உள்ளுக்குள் நடுங்கி போனாலும், அவன் வரம்பு மீறமாட்டான் என்ற நம்பிக்கையும் இருக்கவே திடமாகவே ” என்ன பண்றிங்க நீங்க. முதல்ல சாவியை கொடுங்க. யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க ” என்று கேட்க

அவனோ ” யார் என்ன நெனச்சாலும் எனக்கு கவலை இல்ல செல்வி. நீ எனக்கு பதில் சொல்லியே ஆகணும்.” என்று கூற

” என்ன பதில் சொல்லணும் உங்களுக்கு. ஏன் என் வழியை மறிச்சு தொல்லை பண்றிங்க. சாவியை கொடுங்க ” என்று அவள் கோபமாகவே கேட்க

” ஹேய். முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லு. என் அப்பா உன் வீட்டுக்கு வந்தப்போ உன்னை கட்டி கொடுக்க முடியாதுன்னு உன் அப்பா சொல்லி இருக்காரு. இதுக்கு நீ என்ன சொல்ற. உன் முடிவு எனக்கு தெரிஞ்சாகணும் ” என்று அவன் கத்த

” என் அப்பாவும் அண்ணாவும் என்ன முடிவு பண்றாங்களோ அதுதான் என்னோட முடிவும்.என் வாழ்க்கையை எப்படி அமைச்சு கொடுக்கணும்ன்னு அவங்களுக்கு தெரியும்” என்று அவள் சொன்னது தான் தாமதம் அவன் முகம் கோபத்தில் சிவக்க, அவளை நெருங்கி அவள் கழுத்தை நெரித்தவன்

” என்ன சொன்ன உன் அப்பனும்,அண்ணனும் முடிவு பண்ணுவாங்களா.அப்போ உன்பின்னாடி சுத்துற  நான் என்ன பைத்தியக்காரனா. என்னடி நெனச்சிட்டு இருக்க நீ. தியாகியா நீ.”

” நீ கிடைக்காம போன உசுரை விடுவேனே தவிர ஒருநாளும் அவளை கட்டிக்க மாட்டேன். அதை ஞாபகத்துல வச்சிக்கோ ” என்று கூற

” நீங்க யாரை கட்டிக்கிட்டாலும், இல்லைனாலும் எனக்கு ஒண்ணுமில்லை. எனக்கு என் குடும்பத்தோட மானம் மரியாதை ரொம்ப முக்கியம். நீங்க என்னை விரும்புறதா நெனச்சிட்டுதான் உங்க அத்தை எங்க வீட்டு முன்னாடி வந்து சத்தம் போட்டுட்டு போச்சு. இப்போ இப்படி நாம பேசிட்டு இருக்கறத யாராச்சும் அதுகிட்ட சொல்லிட்டா எனக்கு வேசி பட்டமே கட்டிருவா அவ.

” அதுதான் உங்களுக்கு வேணுமா.அதுக்குதான் இப்படிலாம் பண்ணிட்டு இருக்கீங்களா.” என்று கண்ணீரோடு அவள் கேட்க அவன் மனதை கரைத்தது அந்த கண்ணீர்.

” என்னால உன்னை தவிர யாரையும் கட்டிக்க முடியாது செல்வி. உனக்கும் என்னை பிடிக்கும் எனக்கு நல்லாவே தெரியும் இல்லன்னு பொய் சொல்லாத. நீ சொல்லு நான் என்ன பண்ணட்டும்”

” என்னை பிடிச்சிருக்குன்னு என் கண்ணை பார்த்து சொல்லு செல்வி. உன் அப்பன் அண்ணன் யார் வந்தாலும் நான் பார்த்துக்கறேன்.” என்று அவன் கூறவும்

” உங்களுக்கு புரியவே இல்ல. உங்களை பிடிக்குமா இல்லையா இதெல்லாம் அடுத்ததுதான். ஆனா என் அப்பாவோட நம்பிக்கைக்கு என்னால துரோகம் பண்ண முடியாது. நிச்சயமா நான் என் குடும்பத்தை மீறி வரமாட்டேன். உங்களை பிடிச்சு இருந்தா கூட வரமாட்டேன்.”

” நீ வரவேண்டாம். நீ வரவே வேண்டாம் டி. நாளைக்கு நான் செத்து கிடந்தா கூட வராத. உன் அப்பன் பார்க்கிற மாப்பிளையை கட்டிக்கோ ” என்றவன் அவள் வண்டி சாவியை அதன் இடத்தில் பொருத்தியவன்

” வண்டியை எடு ” எனவும்

” நான் சொல்றத ” என்று அவள் ஆரம்பிக்கவும் ” நீ சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்ட செல்வி. உன் குடும்பத்துக்கு முன்னாடி என் காதல் ஒண்ணுமே இல்லைனு புரிய வச்சிட்ட. போதும் கிளம்பு ” என்றுவிட

அவன் நிலை கண்ணீரை உற்பத்தி செய்தாலும் அவன் விலகி செல்வதே நல்லது என்று தோன்ற கண்ணை துடைத்துக் கொண்டு வண்டியை கிளப்பினாள் அவள். ஊருக்குள் நுழையும்வரை அவளுக்கு காவலாக பின்னால் வந்தவன் ஊருக்குள் இருந்த டீக்கடையில் வண்டியை நிறுத்திக் கொண்டான்.

அவன் செய்கையை பார்த்தவள் கண்ணீரோடு புன்னகைத்துக் கொண்டே வீட்டை அடைந்தாள்.

இங்கு மங்கையின் வீட்டில் நந்தினி உற்சாகத்தில் இருந்தாள். சுந்தரபாண்டியன் தாமரையை பெண் கேட்டு சென்றது, மாணிக்கம் பெண் கொடுக்கமாட்டேன் என்று சொன்னது என அனைத்தையும் அவள் தோழி ஒருத்தி மூலம் அவள் அறிந்திருக்க அவள் மனம் மகிழ்ச்சியில் திளைத்து இருந்தது.

மதியழகி இவள் கூடவே சுற்றிக் கொண்டு இவளின் செயல்களுக்கு துணையாக இருந்தவள், சில நாட்களாக இவளின் அலைபேசி அழைப்புகளை கூட எடுக்காமல் போக, என்னவென்று அவளிடம் நேரில் சென்று கேட்டதற்கு அவளோ ” போதும் நந்தி. நாந்தான் உன் அண்ணனை நினைச்சு சுத்திட்டு இருக்கேன்.ஆனா உன் அண்ணன் அந்த சக்தியோட சந்தோஷமா தான் இருக்காங்க. அவரையே நினைச்சு முட்டாள்தனமா என் வாழ்க்கையை அழிச்சிக்க நான் தயாரா இல்ல.

அதோட என் அண்ணனும் உன்னை கட்டிக்க மாட்டான் அவன் வேறொரு பெண்ணை விரும்புறான். நீயும் உன் மனச மாத்திக்கிட்டு பொழைக்கிற வழியப்பாரு ” என்று அவளுக்கே அறிவுரை கூறி சென்றிருக்க,அவளின் கூற்றில் கொதித்துப் போனவள் அந்த பெண் யாரென்று துருவ, அவள் விசாரணை தாமரையை கைகாட்டவும் தன் அன்னை மூலம்ஏதேதோ பேசி  தன் மாமனை  வளைத்திருந்தவள் சம்பந்த பேச்சை தள்ளி போட்டிருந்தாள்.

இப்போது இரண்டு நாட்களுக்கு முன்னர், எப்போதும் போல் வேந்தனை கண்டவள் அவன் அருகில் சென்று ஒட்டி உறவாட அவளை அருவருப்பாக பார்த்தவன் அவளை கேவலமாக பேசி சென்றுவிட அதன் பொருட்டே மங்கையை ஏவி இருந்தாள் அவள்.

மங்கையும் காரியத்தை கச்சிதமாக முடித்திருக்க, வேந்தன் -தாமரை யின் திருமணப் பேச்சு தொடங்கிய வேகத்தில் முடிந்திருந்தது. இப்போது அதை தன் அறை கட்டிலில் அமர்ந்து நினைத்துக் கொண்டிருந்தவள் முகத்தில் ஒரு குரோத புன்னகை விரிந்திருந்தது.

ஆனால் இவளின் இந்த சதி திட்டங்களில் எல்லாம் அகப்படுபவனா இளவேந்தன். ஊரே எதிர்த்து நின்றாலும் தாமரையை தூக்கி செல்லும் அளவுக்கு துணிச்சல் இருந்தது அவனுக்கு. அதைவிட பயம் என்ற ஒன்றை அவன் அறிந்ததே இல்லை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

அவன் காதலுக்கு எதிராக யார் வந்தாலும் துணிந்து எதிர்கொள்ள அவன் தயாராக தான் இருந்தான். ஆனால் இங்கு அவன் காதலியே அல்லவா எதிராக இருக்கிறாள். கண்ணில் கண்ணீரோடு அவள் இவன் முன் நின்றால் அந்த நிமிடமே அவனின் உறுதி கரைந்து விடுகிறதே. என்ன செய்வான் அவன்.

உன்னை காதலிக்கிறேன் என்று அவள் ஓர் வார்த்தை சொன்னால் அவள் அப்பா என்ன ஊரையே கூட சமாளிப்பான். ஆனால் அவள் ஒரே பிடியாக நீ வேண்டாம் என்றல்லவா சொல்கிறாள். இவளுக்காக இவள் அப்பாவை சரிக்கட்ட மாட்டேனா நான் என்மீது அந்த நம்பிக்கை இல்லையா இவளுக்கு என்று அவன் புலம்பிக் கொண்டிருந்தான் அங்கே.

அவனை புலம்ப வைத்தவளோ அவன் நினைவில் தலையணை நனைத்துக் கொண்டிருந்தாள் அவள் அறையில். அவளால் வேந்தனை தவிர இன்னொருவனை நினைக்க முடியாது என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மை அவளால் அவள் குடும்பத்தை தூக்கி எறிய முடியாது என்பது.

காதலுக்கும், பாசத்திற்கும் இடையில் அல்லாடியவள் கண்ணீரில் தன்னை கரைத்துக் கொண்டிருந்தாள் ……………

Advertisement