Advertisement

அத்தியாயம் 28

 

                              நந்தினியும், மகேஷும் காரில் கிளம்பி இருக்க, திருநெல்வேலியை கடந்து கன்னியாகுமரி மாவட்டத்தை நெருங்கி இருந்தனர் இருவரும். அங்கிருந்து கேரளா சென்றுவிடுவது தான் மகேஷின் திட்டம். திருவனந்தபுரத்தில் அவன் பாட்டியின் வீடு இருக்க, அங்கு சென்றுவிட்டால் அவர் தன் தந்தையை சமாளித்துக் கொள்வார். தங்கள் திருமணத்தையும் முடித்து வைத்து விடுவார் என்று திட்டமிட்டிருந்தவன் நாகர்கோவிலை நெருங்கி இருந்தான்.

 

                    ஆதித்யனின் மீது இருந்த பயத்தால் இவர்கள் கிளம்பிய விஷயத்தை அவன் அவனது நண்பர்களிடம் கூட தெரிவித்துக் கொள்ளவில்லை. இருவரும் மட்டுமே கிளம்பியிருக்க, காரில் அவனோடு பயணித்துக் கொண்டிருந்த நந்தினியோ என்ன மனநிலையில் இருந்தாள் என்று அவளுக்கே புரியவில்லை.

 

                     கிட்டத்தட்ட இரண்டு  நாட்களாக அந்த மருத்துவமனையின் தனிமை அவளுக்கு நிதர்சனத்தை உணர்த்தி இருக்க, தனக்காக யாருமே இல்லையோ என்பது போன்றதொரு மனநிலைக்கு சென்றிருந்தாள் அவள். அதுவும் நேற்று மங்கையிடம் அவள் அத்தனை தூரம் பேசி இருக்க அவரும் இதுவரை என்ன நடந்தது என்றுகூட அவளிடம் எதுவுமே கூறி இருக்கவில்லை.

 

                     உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்தில் தான் அன்று அவள் விஷத்தை குடித்தது கூட. அதில் நிச்சயம் எந்த சந்தேகமுமில்லை அவளுக்கு. இந்த வாழ்வு வேண்டாம், தாமரையும் வேந்தனும் ஜோடியாக நிற்பதை தன்னால் காணவே முடியாது. என் இடத்தில இன்னொருத்தி வந்துவிட நான் ஏன் உயிருடன் இருக்க வேண்டும் என்பது தான் அவள் எண்ணமாக இருந்தது அந்த நிமிடம்.

 

                        அவளை சொல்லியும் குற்றமில்லை, சிறு வயது முதலே சுந்தரபாண்டியன் அவளை ஆசையாக மருமகளே என்றுதான் அழைப்பார். அவள் அன்னையும் அதற்கு தூபம் போட்டுக்கொண்டே இருக்க அவள் மனதில் வேந்தனின் மனைவியாகவே தன்னை எண்ணி இருந்தாள்.

 

                         ஒரு கட்டத்தில் அவன் அவனது மனநிலையை தெளிவாக கூறிவிட்டபோதுகூட அவனது பிடித்தமின்மையை நினைத்து அழுதவளிடம் மங்கை தான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்க, அதற்கு ஏற்றார் போல் மங்கையின் எண்ணப்படி மதி-செவ்வியின் திருமணமும் முடிந்துவிடவே, இனி என் ராஜ்ஜியம் தான் என் அண்ணன் வீட்டில், உன்னை அங்கு வாழ வைக்கிறேன் பார்” என்று முழுமையான நம்பிக்கையை அவர் அளித்திருக்க அதனை கொண்டே அத்தனை அலட்சியம் அவளிடம்.

 

                   வேந்தன் கடைசியில் தன்னிடம் தான் வந்து நிற்க போகிறான் என்று நினைத்து இருமானது இருந்தவளுக்கு கிடைத்த எதிர்பாராத அடிதான் தாமரை மீதான வேந்தனின் காதல். அதுவும் அவன் காதலின் உறுதியை கண்டவள் அவனை வளைக்கும் எண்ணத்தில்தான் மாமனையும், அன்னையையும் ஏற்றிவிட்டது.

 

                   ஆனால் கடைசி நொடியில் சுதாரித்துக் கொண்ட சுந்தரபாண்டியன் மகனது வாழ்வு முக்கியம் என்று அவன் பக்கம் சாய்ந்துவிட விளைவு அவர்களின் திருமணம். அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியாமல் போகவும் தான் அவளும் ஏதேதோ செய்து வைத்திருந்தாள். கடைசி முயற்சியாக தான் மதியை பணயம் வைத்து மிரட்டியது ஆனால் அதுவும் தனாவினால் வீணாகி இருக்க நொந்துபோய் இருந்தாள் அவள்.

 

                 அந்த சிந்தனைகளில் அவள் மூழ்கி இருந்தபோதுதான் மகேஷ் வந்தது, அவளும் எத்தனையோ வழியில் எடுத்துக்கூறியும் அவன் ஒத்துக் கொள்ளவே இல்லை. அவளை உடன் அழைத்து கொண்டிருந்தவன் அவள் மறுக்கவும் அடுத்த கட்டமாக அந்த படங்களை அவள்முன் நீட்டி அவளை பணிய வைத்திருந்தான்.

                                  அதை தொடர்ந்தே இதோ ந்த பயணம். பயணம் தொடங்கிய நிமிடம் முதலாக ஒரு வார்த்தை கூட பேசி இருக்கவில்லை அவள். முகத்தை அத்தனை கோபமாக வைத்துக் கொண்டு அவள் அமர்ந்திருக்க, அவளை கண்டுகொள்ளவே இல்லை அவன். வழியில் ஒருமுறை நிறுத்தியவன் ஒரு தேநீர் வாங்கி வந்து கொடுக்க, அவள் மறுக்கவும் கண்டுகொள்ளாதவனாக அவன் மட்டும் குடித்து விட்டு பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தனர்.

 

                 அடுத்த அரைமணி நேரத்தில் இவர்கள் நாகர்கோவிலை கடக்க முற்படும்போது,அங்கிருந்த காவல் துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட மகேஷிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் இருவரையும் பிடித்து நிறுத்தி வைத்திருந்தனர் அவர்கள். அந்த நடு இரவில் சாலையோரம் செக் போஸ்டில் இருவரும் நின்றிருக்க, அந்த நேரம் தான் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான் அவன். விஜயராகவன் ஐபிஎஸ்.

 

                           அங்கு நின்றிருந்தவர்களை நோக்கி தன் பார்வையை அவன் சுழலவிட, நந்தினியை பார்த்தவன் கண்கள் ஒருநொடி சுருங்கி விரிய அங்கிருந்த காவலரிடம் அவன் விவரம் கேட்க, அவர் ஏதோ சொல்லவும் நந்தினியை அவன் கைநீட்டி அழைக்க அவள் உடல் நடுங்கியது.

 

                         அவன் கண்களில் தெரிந்த உக்கிரத்தில் அவள் அசையாமல் நிற்க, “இங்கே வா” என்று அவன் அழுத்தமாக அழைத்து அங்கு நின்றிருந்த பைக்கின் மீது ஒருகாலை மடக்கி அமர, அவள் மகேஷை பார்க்க அவன் முன்னால் வந்து நின்றான்.

 

             “என்கிட்டே கேளுங்க சார். நான் பதில் சொல்றேன்” என்று மகேஷ் அவனிடம் கூற

 

            “என்ன கேட்கனும் உன்கிட்ட” என்று அவனை பார்த்து கோபத்துடன் எழுந்தவன் நந்தினியை நோக்கி “ஏய் உன்னை இங்கே வா ன்னு சொன்னேன்ல்ல” என்று மிரட்ட

 

                 மகேஷின் அருகில் வந்து நின்றாள் அவள். தலையை நிமிராமல் பயத்துடன் அவள் நிற்க, மகேஷ் அதற்குள் “சார். எதுக்கு மரியாதையில்லாம பேசறீங்க, உங்களுக்கு என்ன தெரியணும் என்கிட்டே கேளுங்க சார் . அவளை ஏன் மிரட்டறீங்க” என்று எகிற ஆரம்பிக்க, அடுத்தநொடி அவன் கண்களில் பூச்சி பறக்கும் ஒரு உணர்வு. அவன் தெளியவே முழுதாக ஒருநிமிடம் ஆகி இருக்க அதன்பின்பே அவன் தன்னை அடித்திருந்ததை உணர்ந்தான் அவன்.

 

                   அவன் மகேஷை அடித்ததில் பயந்து போனவளாக நந்தினி இரண்டு அடிகள் பின்னால் நகர, விஜயராகவன் அவளிடம் திரும்பியவன் அவளை நெருங்கி “நீ ஆதி தங்கச்சிதானே.” என்று கேட்க

 ஒரு நொடி மூச்சே நின்றது போல் ஆனது அவளுக்கு. பயத்தில் பேச்சே வரவில்லை, ஏற்கனவே மகேஷின் மிரட்டலில் பயந்து போய் இருந்தவள் இப்போது எதிரில் நிற்பவன் அண்ணனின் பெயரை சொல்லவும் அப்போதுதான் ஆதித்யனின் நினைவு வர என்ன நடக்கபோகிறதோ என்று அச்சத்தில் உறைந்தவள் மௌனமாக நிற்க எதிரில் நின்றவனோ “ஏய் காது கேட்குதா” என்று அதட்டியவன்

 

               “கேள்வி கேட்டா பதில் வரணும்.” என்று விரல் நீட்டி மிரட்ட, தன் வாயை திறந்தவள் “ஆமா” என்று கூற அவளை முறைத்தவன் “இவன் யாரு, எப்படி தெரியும் இவனை” என்று கேட்க

 

                    அதற்குள் மகேஷோ “சார், நான் லவ் பண்ற பொண்ணு சார். கல்யாணம் பண்ணிக்க போறோம். எங்க பாட்டி வீட்டுக்குத்தான் போயிட்டு இருக்கோம்.” என்று கூற

 

               அவனை மீண்டும் ஒன்று வைத்தவன் “லவ் பன்றியா, லவ் பண்ற பொண்ணை அர்த்த ராத்திரில எதுக்குடா கூட்டிட்டு போகணும். இந்த நைட்ல ரோட்ல என்னடா வேலை. தெருநாயா நீ, நாயே” என்றவன் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவனை  அடித்துக் கொண்டிருக்க, நந்தினிக்கு மகேஷுடன் போக வேண்டாம் என்பது நிம்மதியாக இருந்தாலும் எதிரில் நிற்பவனை நினைத்து பயத்தில் காய்ச்சல் வரும்போல் ஆனது.

 

                ஆனால் அவனோ அவளை கண்டுகொள்ளாமல் எதிரில் நின்றவனை துவைத்து எடுத்துக் கொண்டிருக்க, அவன் அலறலில் காதுகளை பொத்திக் கொண்டவள் கண்ணீருடன் கண்களை மூடி கொண்டு நிற்க, அவன் வேலையை முடித்து அவனை அள்ளி அங்கிருந்த காவல் வாகனத்தில் போட சொன்னவன் நந்தினியிடம் வந்து நின்றான்.

 

                      அவள் நின்றிருந்த கோலம் உறுத்தினாலும், இந்த நேரத்தில் வீட்டை விட்டு வந்தது அத்தனை கோபம் கொடுக்க மீண்டும் “ஏய்” என்று அவளை கத்தி அழைக்க, பயத்தில் அவள் உடல் தூக்கி போட்டது. அடித்துவிடுவானோ என்று பயமாக இருக்க, மெதுவாக நிமிர்ந்து அவள் அவனை பார்க்க “இவன்லாம் ஒரு ஆளுன்னு இவன்கூட வந்திருக்க, உன்னை என்ன பண்ணலாம்” என்று அவன் கையை ஒங்க,பயத்தில் கண்களை மூடிக்கொண்டாள் அவள்.

 

               அவளுக்கு இந்த அளவுக்கு பயத்தை ஒருவன் காட்டுவான் என்று யாரும் கூறி இருந்தால் கூட நம்பி இருக்கமாட்டாள் அவள். சிறுவயது முதலே பெரிதாக யாரும் அதட்டிக்கூட பழக்கப்படாமல் நினைத்ததை நடத்தியே பழக்கப்பட்டவள்  இப்போது இவன் அடிக்க கை ஓங்கவும் அழுதே விட்டாள்.

 

                     அவள் அழுது கொண்டிருக்கும்போதே அவள் கையை பிடித்து இழுத்து வந்தவன் அவளை ஜீப்பில் தள்ளி கதவை அடைத்து மறுபுறம் அமர்ந்து வண்டியை எடுத்தான். இவர்கள் வந்த காரை ஸ்டேஷனுக்கு எடுத்து செல்லுமாறு பணித்துவிட்டு அவன் அங்கிருந்து கிளம்பிவிட, அப்போதுதான் மௌனம் கலைந்தவள் “எங்கே எங்கே கூட்டிட்டு போறீங்க என்னை” என்று கத்த

 

              அவளை நக்கலாக பார்த்தவன் பதிலே சொல்லவில்லை. பயந்து போனவளோ “என்னை எங்கே கூட்டிட்டு போறீங்க, ப்ளீஸ் விட்டுடுங்க ” என்று மீண்டும் அழ, அவளை கண்டுகொள்ளாமல் ஒரு வீட்டின் முன்பு ஜீப்பை நிறுத்தியவன் அவளை இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றான்.

 

                       அவன் செயல்களில் நிச்சயம் அவன் மீது நல்ல எண்ணம் வரவில்லை அவளுக்கு. என்ன செய்வானோ என்ற பயம் தான் ஒவ்வொரு நொடியும். தன் அண்ணனை அவனுக்கு தெரிந்திருப்பது ஒன்று மட்டுமே லேசான நிம்மதியை கொடுக்க, அவனோ அவளுக்கு மொத்தமாக அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துக் கொண்டிருந்தான் தன் செயல்களால்.

 

                   அங்கிருந்த சோஃபாவில் அவளை அவன் தள்ளிவிடவும், அதிர்ச்சியுடன் அவனை பார்த்தவள் “ஏய், என்ன பண்ணிட்டு இருக்க நீ. நான் யாருன்னு தெரிஞ்சும்..” என்று வார்த்தையை விட, அவள் கன்னத்திலே ஒரு அறை விட்டவன் “மூச்…. “என்று விரல் நீட்டி மிரட்டிவிட்டு

 

                           “மரியாதை… மரியாதையா பேசி பழகணும்… நீ விடுற மூச்சுக்காத்து கூட மரியாதையாதான் வெளியே வரணும் என்கிட்டே. புரியுதா” என்று கேட்க அவன் அடித்த அதிர்ச்சியில் அவள் அப்படியே அவனை பார்க்கவும் “புரியுதா “என்று அவன் இன்னும் சத்தமாக கத்த, அழுகையுடன் ஆமோதிப்பாக தலையசைத்தாள் அவள்.

 

                 அங்கிருந்த ஒரு அறையை காட்டியவன் “அந்த ரூம்ல போய் இருந்துக்கோ. சாப்பாடு வரும், சாப்பிட்டுட்டு தூங்கு. காலையில உன் அண்ணன் வருவான்” என்று அழுத்தமாக கூறிவிட்டு செல்ல அசையவே இல்லை அவள்.சில நிமிடங்களுக்கு பிறகே அவன் சொன்னது உரைக்க எங்கே மேஈண்டும் அடிப்பானோ என்று பயந்தவள் அவன் காட்டிய அறைக்குள் சென்று முடங்கி கொண்டாள்.

                                    இரவு  அங்கிருந்த காவலர் கொண்டு வந்த உணவை தொட்டுக்கூட பார்க்கவில்லை அவள். அப்படியே அமர்ந்திருந்தவள் ஒருகட்டத்தில் எப்படியோ உறங்கி இருந்தாள்.

 

                           இங்கு விஜயராகவன் இரவே ஆதித்யனுக்கு தகவல் தெரிவித்து இருக்க, காலையில் நேரத்திலேயே அங்கு வந்துவிட்டான் அவன். இருவரும் ட்ரெய்னிங்கில் அறிமுகமாகி இருக்க ஒரு அழகான நட்பு இருந்தது அவர்களுக்கிடையில். இருவரும் ஒரே அறையை பகிர்ந்து கொண்டிருக்க ஆதித்யனை பற்றிய அத்தனை விவரங்களும் தெரியும் அவனுக்கு.

 

                      அதனைக்கொண்டு அவன் நந்தினியை பார்த்த கணமே கண்டுகொண்டது. இப்போது   ஆதித்யனை காணவும் விரைந்து வந்து அணைத்துக் கொண்டவன் அவன் வயிற்றிலேயே குத்த, தானும் அவன் கழுத்தை இறுக்கிய ஆதித்யன் அவனை தன் கைகளுக்குள் வளைக்க அவன் இழுப்புக்கு வந்தவன் புன்னகையுடன் தரையில் விழுந்தான். விழுந்தவன் மல்லாக்க படுத்துக் கொண்டு சிரிக்க, ஆதித்யன் அவனை கண்டுகொள்ளாமல் உள்ளே செல்ல, அப்போதும் எழவில்லை அவன்.

 

                   அவன் தங்கையுடன் பேசட்டும் என்று நினைத்தவன் வீட்டின் பின்பக்கத்திற்கு சென்றான்.அங்கு அவன் வளர்க்கும் நாய் கட்டப்பட்டிருக்க, அதை அவன் அவிழ்த்துவிடவும் ஆசையுடன் அவனுடன் கொஞ்சி கொண்டிருந்தது அது.

                         

                       ஆதித்யன் உள்ளே  நுழைந்தவனோ, அங்கு கீழே இருந்த அறைக்கதவை தட்ட பயத்துடன் வந்து கதவை திறந்தாள் நந்தினி. அந்த நேரத்தில் தன் அண்ணனை அங்கு எதிர்பாராதவள் அதுவரை இருந்த பிடிவாதங்கள் ஓடிப்போக அத்தனை வேகமாக ஓடிவந்து அவனை கட்டிக் கொண்டாள்.

                அவள்மீது அத்தனை கோபம் இருந்த போதும் அவள் தன்னை கட்டிக்கொண்டு அழவும் ஒரு அண்ணனாக உருகிதான் போனான் அவன். ஆனால் இது பாசம் காட்டும் நேரம் இல்லை என்பதை உணர்ந்தவனாக அவளை தள்ளி நிறுத்தியவன் “என்ன நடக்குது நந்தினி. என்ன பண்ணி வச்சிருக்க நீ,”என்று அதட்ட

 

                மீண்டும் அழுதவள் ” நீ என்ன நினைக்கிற அண்ணா. நான் இப்படி பண்ணுவேன்னு நினைக்கிறியா, இவங்க தப்பா நினைக்கிறாங்க. அவன்… அவன் என்னை மிரட்டி ” என்று ஆரம்பித்தவள் ஆதி முதல் அந்தமாக அவள் மதியழகியின் புகைப்படங்களை மார்ப் செய்தது முதல் இப்போது மகேஷ் செய்தது வரை அனைத்தையும் அவனிடம் சொல்லிவிட்டாள்.

 

                     அவள் கூறியது அனைத்தையும் பொறுமையாக கேட்டவன் அவள் முடிக்கவும் “நான் என்ன செய்யணும் நந்தினி, நீயே சொல்லு. என்ன பண்ணட்டும் நான்??” என்று கேட்க

 

                      முழித்தாள் அவள்.அந்த நொடி அவளுக்கு என்ன வேண்டும் என்று அவளுக்கே தெரியவில்லை. வேந்தனுடனான வாழ்வு இனி இல்லை என்பது முடிவாக தெரிந்துவிட அதனைக்கொண்டு உயிரை மாய்த்து கொள்ள துணிந்தது.அதையும் சக்தி கெடுத்துவிட, அடுத்ததாக இதோ மகேஷிடம் சிக்கிவிட்டாள் கொஞ்சம் பிசகி இருந்தாலும் வாழ்வே சூன்யமாகி இருக்கும் என்ற நினைவே நடுங்க வைக்க, அடுத்து என்ன என்று புரியவே இல்லை அவளுக்கு.

  தன் செயல்கள் மதியழகியை எத்தனை பாதித்து இருக்கும் என்பதும் மகேஷின் மூலமாக புரிந்துவிட்டிருக்க, இதற்குமேல் எதற்கும் தயாராக இல்லை அவள். எங்கேயாவது சென்றுவிடலாமா என்று கூட நினைக்க தோன்றியது ஒருநொடி.

 

                அவள் முகத்தில் ஓடிய உணர்வுகளை அசையாமல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஆதித்யன். அவள் அலைப்புறுதலை கண்டவனுக்கு தன் அன்னையின் மீது அத்தனை கோபம் வந்தது. எங்கே கொண்டு வந்து நிறுத்திவிட்டார் இவளை. நேற்று மட்டும் விஜயின் கண்களில் இவள் படாமல் போயிருந்தால் என்று நினைத்தவனுக்கு நினைப்பே அத்தனை வேதனை கொடுத்தது.

 

                          அண்ணனாக நான் இருந்தும், அதுவும் ஒரு காவல்துறை அதிகாரியாக இருக்கிறேன் ஆனால் அதைக்கூட பெரிதாக எண்ணாமல் என் தங்கையை ஒருவன் மிரட்டி இருக்கிறான் என்றால் என்ன அண்ணன் நான் ? என்று அவன் மனம் கேள்வி கேட்க முயன்று தன்னை அடக்கி கொண்டு அமர்ந்திருந்தான்.

      இப்போதும் எதிரில் இருப்பவள் என்ன பதில் சொல்வாளோ என்று உள்ளம் கிடந்து தவிக்க, கண்களில் காட்டிக் கொள்ளாமல் அமர்ந்து வேடிக்கை பார்த்தான் அவளை. தன் அண்ணனை கவனித்தவள் அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலையை குனிந்து கொள்ள, எழுந்து அருகில் வந்தவன் அவள் தலையில் கைவைக்க அவனை இடையோடு கட்டிக்கொண்டவள் அத்தனை சத்தமாக கதறிவிட்டாள்.

 

                         “என்னை கூட்டிட்டு போய்டுண்ணா. நீ என்ன செய்யணுமோ செய்,நான் கேட்கிறேன். என்னை வெறுத்துடாத அண்ணா ப்ளீஸ். நான் உன் தங்கச்சி தானே” என்றவள் மீண்டும் அழ, அவள் தலையை தடவிக் கொடுத்தவன் அவள் உச்சியில் முத்தமிட்டு ” நீ எப்பவுமே என் தங்கச்சிதான் நந்துமா. அது எப்பவும் மாறாது. நீ சொல்லிட்டல்ல எல்லாத்தையும் அண்ணன் பார்த்துப்பேன். நீ எதைப்பத்தியும் கவலைப்படாம இரு. அண்ணன் இருக்கேன்டா” என்று கூற அந்த வார்த்தைகள் யானை பலம் தந்தது அவளுக்கு.

 

                              அவன் வார்த்தைகளை பிடித்துக் கொண்டவள் தன் அழுக்கிலிருந்து மீண்டு வர முயற்சி செய்வது என முடிவெடுத்துக் கொண்டாள். ஆதித்யனை பற்றிக்கொண்டே இதை கடந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தவள் தன் அண்ணனின் கைகளை இறுக பற்றிக் கொண்டாள்.

எந்த வயதிலும் இந்த சகோதரர்கள் தரும் தைரியமும், பாசமும் பெண்களை கட்டிதான் வைக்கும் போல.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

              

                            

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                              

                           

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement