Advertisement

அத்தியாயம் 24

மண்டபத்தில் இருந்து மங்கையை வெளியேற்றிய அடுத்த சிலமணி நேரங்களில் வேலைகள் வேகமாக நடந்திருக்க, ஆதித்யன் வீடு திரும்பி இருந்தான். சக்தி அவனோடு துணைக்கு இருக்க, அங்கே மணமக்கள் வீட்டிற்கு கிளம்பி இருந்தனர். வேந்தனின் வீட்டில் தாமரை இயல்பாக பொருந்திக் கொள்ள, வேறிடத்திற்கு வந்த உணர்வே இல்லை அவளிடம்.

வேந்தனும் துணையாக இருக்கவே புகுந்தவீட்டை நினைத்து பெரிதாக பயம் இல்லை அவளிடம். ரங்கநாயகி சொன்னபடி சாமி வீட்டில் விளக்கேற்றியவள் வந்து அமர ரங்கநாயகி இருவருக்கும் பால்,பழம் கொடுத்து முடித்தவர், அவளை வீட்டில் பால்காய்ச்ச சொல்ல,அவர் சொன்னபடி செய்தவள் பாலை சாமிக்கு படைத்து தன் திருமண வாழ்விற்காக வேண்டிக்கொள்ள வேந்தனின் அறைக்கு அவளை அழைத்து சென்றவர் புடவையை மாற்றிக்கொண்டு சிறிது நேரம் படுக்க சொல்லிவிட்டு கீழே வந்துவிட, வேந்தன் அவன் நண்பர்களோடு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிகளை மறந்திருந்தவன் சற்றே இயல்பாக இருந்தான். அன்புவும் அவன் உடனே சுற்றிக் கொண்டிருக்க, ரங்கநாயகி அவனை வீட்டினுள் அழைத்தவர் அவனையும் சிறிது நேரம் தூங்க சொல்லி அனுப்பினார்.

அங்கே தனஞ்செயனின் வீட்டிலோ செவ்வி உடன் இருந்தும் கூட மதியழகி இயல்பாக இல்லாமல் ஏதோ ஒரு குழப்பத்தில் தான் இருந்தாள்.அவளை பற்றி நன்கு அறிந்ததால் தான் செவ்வி அவளை தனியாக விடாமல் தானும் உடன் வந்திருக்க, அப்போதும் அவளிடம் மெல்லிய தடுமாற்றம்.

தனஞ்செயனும் அவளின் தடுமாற்றம் உணர்ந்தாலும் ஒரு வார்த்தை கூட அவளிடம் பேச முயற்சிக்கவில்லை அவன்.அவளையே ஏதோ யோசனையுடன் வேடிக்கை பார்த்திருந்தான். விளக்கேற்றி முடித்து வந்து அமர்ந்தவளுக்கு பால் பழம் கொடுத்த விசாலம் அவள் முகத்தை பார்த்து அவள் சோர்வாக இருப்பதை உணர்ந்தவர் அவளை சென்று படுக்க சொல்லிவிட்டார்.

நாளை அவளின் வீட்டிற்கு சென்று வந்தால் சரியாகி விடுவாள். பிறந்த வீட்டை குறித்த ஏக்கம் தான் என்று முடிவு செய்து கொண்டார் அவர். செவ்வியையும் தாமரையின் அறையில் படுக்க சொன்னவர் தானும் அவளுடனே இருந்து கவனித்துக் கொண்டார்.பின்னே மகளின் உத்தரவாயிற்றே.

வீடு முழுவதும் சொந்தங்கள் இருந்தாலும், விசாலம் சுழன்று கொண்டுதான் இருந்தார்.பின்னே ஒரே நேரத்தில் இரண்டு திருமணம் செய்வது சாதாரண காரியமா. தனஞ்செயன் தன் பெரியப்பா, மற்றும் தாய்மனவுடன் அமர்ந்து கொண்டவன் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து கொண்டு அமர்ந்திருக்க, அவனை வம்பிழுத்துக் கொண்டிருந்தனர் அவர்கள்.

வீடு திருமண கொண்டாட்டத்தில் களைகட்ட சம்பந்தப்பட்ட இரு உள்ளங்கள் ஒன்று பயத்திலும், மற்றொன்று யோசனையில் ஆழ்ந்து இருந்தது அங்கே. மகனின் முகத்தை பார்த்தே ஏதோ புரிந்தவராக விசாலம் அவனையும் சென்று படுக்க சொல்ல, அங்கிருந்து எழுந்தவன் தன் அறைக்கு செல்ல அங்கே கட்டிலில்ஒருக்களித்து படுத்து கொண்டிருந்தாள் அவள்.

இவன் உள்ளே வந்த அரவத்தில்  கண்களை திறந்து பார்த்தவள் பதட்டமாக எழுந்து அமர, அவளை பார்த்துக் கொண்டே வந்தவன் சட்டையை கழட்டி அங்கிருந்த  கொக்கியில் மாட்டி விட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான். சில நிமிடம் கழித்து அவன் வெளியே வர, அந்த கட்டிலை எழுந்து கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள் அவன் மனைவி.

அந்த நிலைஅழகாக இருக்க அவனையும் மீறி ஒரு புன்னகை இதழ்களில். வந்து அவள் அருகில் அமர்ந்தவன் அவளை பார்க்க சற்றே பதட்டமாக காணப்பட்டாள் இப்போதும். இதை இன்றே முடித்துவிட வேண்டும் என்று எண்ணியவன் ” என்ன விஷயம். ஏன் இப்படி இருக்க ? எனக்கு தெரிஞ்சு நேத்துல இருந்தே நீ சரி இல்ல. என்ன பண்ணி வச்ச திரும்பவும் ” என்று அதட்ட

அவன் பொறுமையாக கேட்டிருந்தால் சொல்லி இருப்பாளோ என்னவோ அவனின் இந்த கோபத்தில் மீண்டும் அதே பதட்டத்துடன் “நான்.. நான் ஒன்னும் பண்ணல.” என்று கூறும்போதே கண்ணீர் வந்துவிட

அவனோ மீண்டும் நிதானமாகவே ” முதல்ல இப்படி ம்ம் ன்னு சொல்றதுக்குள்ள கண்ல தண்ணி வைக்கிற பழக்கத்தை விடு. என்ன கேட்டேன் உன்னை இப்போ. எதுக்கு அழுகை வருது ? என்று கேட்க

அவளுக்கு உண்மையை சொல்லிவிட உள்ளம் துடிக்க ஆனால் தைரியம்தான் வரவே இல்லை. அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் கண்களில் கண்ணீர் வழியவும், ” என்ன மதி ? சொன்னதானே எனக்கு தெரியும், நீ இப்படி அழுதா நான் என்ன நினைக்கட்டும் ” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்க

கண்ணீர் கேவலாக மாற சற்று சத்தமாகவே அழுதவள் கண்ணீருடன் அவன் தோளில் சாய்ந்துவிட்டாள். அவன் தோளில் புதைந்து விடுபவளாக  அழுந்தி கொண்டவள் வெடித்து அழ, அவள் அழுகையில் இருந்தே விஷயம் ஏதோ பெரிதானது என்று தோன்ற சிறிது நேரம் அவளை அழவிட்டவன் அதன்பிறகே அவளை விலக்கினான். அவன் தன்னை விலக்கியதில் அவள் முழிக்க, அவள் கண்களை பார்த்தவன் ” நீ இன்னும் என்ன விஷயம்ன்னே சொல்லல என்கிட்ட. சொல்லிட்டு அழு ” என்று கூறி அசையாத பார்வை பார்க்க

எதையும் எதிர்கொள்ளும் துணிவு ஏனோ இந்த சில நிமிடங்களில் வந்திருக்க,  கண்களை துடைத்தவள் எழுந்து சென்று தன் மொபைலை எடுத்துவந்து அதை ஆன் செய்தவள் நேற்று தனக்கு வந்திருந்த அந்த படங்களை திறந்து அவனிடம் நீட்டிவிட்டாள். என்ன வந்தாலும் எதிர் கொண்டே தீருவது என்று முடிவெடுத்தவளாக அவள் நின்றிருக்க, அவள் முகத்தை பார்த்தவன் அந்த புகைப்படங்களை பார்க்கும் முன் அவளை இழுத்து தன் அருகில் அமர்த்தினான்.

அமைதியாக அமர்ந்தவள் மீண்டும் அவன் முகத்தை பார்க்க, அவன் அப்போதுதான் அந்த மொபைலை வாங்கி பார்த்தான். அவன் முகத்தில் தெரிய போகும் உணர்வுகளுக்காக அவள் காத்திருக்க, அவன் முகம் எந்த உணர்ச்சியையும் பிரதிபலிக்கவே இல்லை கடைசி வரை.

அந்த மொபைலை பார்த்தவன் அவளை திரும்பி பார்க்க, அவன் என்னமோ சாதாரணமாக தான் தெரிந்தான் ஆனால் அவளுக்கு உள்ளே குளிரடித்தது.  “இதை பார்த்துட்டு தான் நேத்துல இருந்து இப்படி இருக்கியா ?? ” என்று அவன் நிதானமாக கேட்க

அவள் ஆம் என்பதுபோல் தலையை மட்டும் அசைக்க, எழுந்தவன் அந்த அறையில் இருந்த மர பீரோவின் மேலிருந்து ஒரு கவரை எடுத்து வந்து அவளிடம் கொடுக்க, அவள் புரியாது பார்க்கவும் “பிரிச்சு பாரு ” என்றான்.

அந்த மொபைலில் இருந்த புகைப்படங்கள் தெளிவாக பிரிண்ட் போடப்பட்டு இருந்தது அந்த கவரில்.அதை பார்த்தவளுக்கு அதிர்ச்சியில் மீண்டும் கண்ணீர் வர “இப்போ நீ கண்ணை துடைக்கல, என்ன செய்வேன்னே தெரியாது எனக்கு. மரியாதையா கண்ணை துடை.” என்று மிரட்டவும் கண்களை பயத்தோடு துடைத்துக் கொண்டாள் அவள்.

” கேவலம் இந்த போட்டோவை பார்த்து உன்னை சந்தேகப்படுவேன் ன்னு எவனோ திட்டம் போட்டு இருக்கான். தனாவோட அழகி இப்படிப்பட்டவ இல்லன்னு நெனச்சதால தான் இதை நான் யார்கிட்டேயும் காட்டகூட இல்லை. ஆனா நீ இதை நான் நம்புவேன்னு நேத்துல இருந்து அழுதிட்டு இருந்து இருக்க.”

“அத்தனை நம்பிக்கை இல்ல என்மேல. நான் என்ன செஞ்சி உனக்கு என்னை நிரூபிக்க முடியும் மதி, அதோட எத்தனைமுறை நிரூபிப்பேன். நீ இதை நேத்து பார்த்த நிமிஷம் என்கிட்டே வந்து சொல்லி இருக்கணுமா இல்லையா அந்த அளவுக்கு உனக்கு என்மேல நம்பிக்கை வரவே இல்லையா.

கல்யாணமெல்லாம் வாழ்க்கையில ஒருமுறை தான் மதி. நேத்துல இருந்து எந்த சடங்கை நீ முழுமனசோட செஞ்ச சொல்லு. அப்படி ஒரு பயம் உன் முகத்துல, என்ன பண்ணிடுவாங்க உன்னை, நானே கூட என்ன சொல்லிடுவேன் உன்னைன்னு இப்படி பயந்து பொய் இருக்க.

எனக்கு தெரிஞ்சி செவ்விகும் தெரிஞ்சி இருக்கணும் இதெல்லாம். அதான் நேத்துல இருந்து உன்னை அடைகாத்துட்டே இருந்தா அவ, சரியா ?? மாசமா இருக்க பொண்ணு அவளையும் நிம்மதியா விடாம நேத்துல இருந்து அலைகழிச்சிருக்க. நீ செய்றது எல்லாம் உனக்கே சரியாய்  தோணுதான்னு யோசிச்சு பார்த்துக்கோ.

உங்கிட்ட இதுக்குமேல எதுவும் நான் சொல்றதா இல்ல. உனக்கு எப்போ நம்பிக்கை வருதோ அப்போ சொல்லு ” என்றவன் அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான். வெளியே விசாலம் அழைத்தும் கூட கேட்காமல் நகர்ந்து விட்டான் அவன்.

உள்ளே இருந்தவளுக்கோ அவன் கோபித்து கொண்டு போகிறான் என்பதெல்லாம் நினைவிலேயே இல்லை. தன் மீதான அவன் நம்பிக்கையே பிரதானமாக நின்றது அவளுக்கு.அவன் வார்த்தைகளில் நேற்றிலிருந்து ஏறி இருந்த பாரம் நெஞ்சை விட்டு இறங்கி இருக்க, அப்படியே அமர்ந்துவிட்டாள்.

யார் என்ன நினைப்பார்களோ என்று பயந்திருந்த பாவை அவள், கொண்டவனின் வார்த்தைகளில் யார் என்ன நினைத்தால் எனக்கென்ன என்ற நிலைக்கு வந்திருந்தாள். உண்மையும் அதுதானே. அவளின் மீதான நம்பிக்கையை அவளின் கணவன் கண்முன் காட்டிவிட்டிருக்க, இதற்குமேல் யார் என்ன செய்துவிட முடியும் அவளை.

அவளது நாள் அந்த நொடியிலிருந்து மகிழ்ச்சியாக மாறிப்போக, அந்த புகைப்படங்களை சுக்கு நூறாக கிழித்தவள் அதே கவரில் போட்டு அவன் எடுத்த இடத்தில் வைத்துவிட்டு அமர்ந்து கொண்டாள்.அவள் உள்ளத்தின் மகிழ்ச்சி முகத்தில் தெரியும்படி அவள் அமர்ந்திருக்க அந்த நேரம் விசாலம் உள்ளே நுழைந்தார்.

மகன் கோபமாக செல்லவும், அவளை எதுவும் திட்டிவிட்டானோ என்று அவர் தயங்கியே வந்திருக்க, அவள் முகம் இப்போதுதான் தெளிந்து இருந்தது.அதை கொண்டவருக்கு ஏதோ ஒரு வகையில் நிம்மதியாக இருக்கவும் அவளிடம் மெல்ல பேச்சு கொடுத்தார் அவர்.

” தனா. ஏதோ வேலை இருக்குன்னு போய்ட்டான் மா. கொஞ்ச நேரத்துல வந்திடுவான். நீ வெளியே வந்து அத்தை கூட இருக்கியா ?? ” என்றவர் பிறகு “வேண்டாம் ஊர்கண்ணெல்லாம் உங்க மேல தான்.ஆளுங்க போயிட்டு வந்திட்டு இருக்காங்க. நீ உள்ளவே இரு, கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரு ” என்று கூற

புன்னகைத்தவள் ” எனக்கு தூக்கம் வரல அத்தை, நீங்க என்னோட இருங்க கொஞ்ச நேரம் ” என்றுவிட

விசாலம் சிரித்தவாறு “அதுசரி. கல்யாண வீடு ஆத்தா, ஆளுங்க வர்றதும் போறதுமா இருக்காக. என்னதான் சொந்தகாரங்க இருந்தாலும் நாம வீட்டு ஆளா நின்னு பார்க்கணுமில்ல. அப்போதானே என்ன நிலவரம் ன்னு நமக்கு தெரியும் ” என்று கூற

“அப்போ நானும் உங்களோட வந்து இருக்கவா ” என்றுவிட்டாள் அவள். விசாலத்திற்கும் அவள் அப்படி கேட்டது மகிழ்ச்சியே. திருமணம் பேசிய நாள்தொட்டு அமைதியாகவே இருந்தவள் தான் என்பதால் அவருக்கு லேசான பயம் இருந்ததென்னவோ உண்மை. எப்படி நடந்து கொள்வாளோ என்று அவர் பயந்திருக்க, அவளின் இந்த ஓட்டுதல் நிம்மதியாக இருந்தது.

“தாமரை இல்லாத குறையை  என் மருமகள் போக்கிவிடுவாள்  என்ற எண்ணம் வர அவளிடம் ” நீ புதுப்பொண்ணு இல்லையா. வெளியே வந்து நின்டா எல்லா கண்ணும் உன்மேல தான் இருக்கும் கண்ணா. நீ கொஞ்ச நேரம் தூங்கு. உன் அண்ணி எழுந்ததும் உன்கூட வந்து இருக்க சொல்றேன் சரியா. இல்லன்னா டீவியை போட்டு பாரு.அத்தை உனக்கு சாப்பிட கொடுத்துவிடறேன் ” என்று கூற சரி என்று தலையசைத்துக் கொண்டாள் அவள்.

மொத்தத்தில் மகனிடம் ராசியாகி இருக்க வேண்டியவள் அவன் கோபித்துக் கொண்டு கிளம்பவும் அவன் தாயிடம் ராசியாகி இருந்தாள். ஆனால் அதில் துளிகூட வருத்தம் இல்லை அவளுக்கு.அவனுக்கு என்னால் புரிய வைக்க முடியும் என்ற எண்ணம் வலுப்பெற அவனுக்காக காத்திருக்க தொடங்கியது பெண்.

Advertisement