Advertisement

அத்தியாயம் 23

மங்கையின் தோற்றத்தில் அதிர்ந்து போனவளாக சக்தி நிற்க, அவர் அதை கண்டுகொள்ளாமல் அத்தனை பேர் மத்தியிலும் அவளை கைநீட்டி அடித்ததோடு மட்டும் இல்லாமல், அவள் தலைமுடியை வேறு பற்றி இருக்க அவள் எப்படி உணர்ந்தாள் என்று வார்த்தைகளில் வடிக்க முடியாது.

இத்தனைக்கும் அவர் மகளை காப்பாற்றியவளே அவள்தான். ஒருவேளை அவள் பார்க்காமல் விட்டிருந்தால் இன்று அவள் பிணமாகி இருப்பாள், ஆனால் அந்த நன்றி கூட இல்லாமல் இப்படியும் ஒருவர் நடந்து கொள்வாரா ??? என்று யோசித்துக் கொண்டு நின்றவளின் தலை முடியை அவர் மேலும் இறுக்க, அந்த வலியில் தான் சுரனையே வந்தது அவளுக்கு.

வலியில் கண்களில் கண்ணீர் வழிய அவரிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அவள் முயற்சிக்கும் போதே அருகில் நின்றிருந்த செவ்வி சுதாரித்துக் கொண்டவளாக தன் நிலையையும் மீறி அன்னையின் கையை பிடித்து இழுத்து தள்ளி நிறுத்த, மங்கை வெகுண்டு போனவராக அவளையும் அடிக்க கை ஓங்க, தன் அன்னையின் கையை பிடித்தவள் தன் இடக்கையை ஓங்கி இருந்தாள்.

அவள் கை ஓங்கியதில் அவர் அதிர்ந்து நிற்க, ” என் அப்பா முகத்துக்காக உன்னை விடறேன். மரியாதையா போயிடு ” என்று பிடித்திருந்த அவர் கையை அவள் உதற, அன்று மங்கைக்கு பேய் பிடித்திருந்ததோ என்னவோ அவள் கையை உத்தரவும் அந்த நேர ஆத்திரத்தில் அவளை பிடித்து தூர தள்ளி இருந்தார்.

வேந்தன் இவர்களை நெருங்கி இருந்தவன் தன் அண்ணியை கீழே விடாமல் தாங்கி கொள்ள, சக்தி ஓடிச்சென்று அவளை அணைத்தவாறு பிடித்துக் கொண்டாள் சக்தி. செவ்வியை சக்தியிடம் நிறுத்திய வேந்தன் கோபமாக தன் அத்தையை நெருங்க அதற்குள் வீரபாண்டியன் தன் தங்கையை அறைந்து விட்டிருந்தார்.

அவரின் அந்த ஒரு அறைக்கே மங்கை கீழே தரையில் விழுந்திருந்தார். கீழே விழுந்தவரை நெருங்கிய கந்தகுரு அவர் பங்குக்கு இரண்டு அரை விட, மங்கை அப்போதும் அடங்கவே இல்லை. யாரையும் நினைத்து பார்க்கும் நிலையில் அவர் இல்லை அன்று.

சின்ன மகளின் நிலை மட்டுமே கருத்தில் இருக்க, “என் மகளை விட இவர்களுக்கு திருமணம் முக்கியமாக போய்விட்டதா.” என்பது மட்டுமே அவர் கவனத்தில். கந்தகுருவின் அடிகளை வாங்கி கொண்டவர் அங்காரமாக எழுந்து நின்றார் அந்த மனிதரை நோக்கி. தன் முடியை அள்ளி முடிந்து கொண்டவர் “முடிச்சிட்டிங்களா, முடிச்சிட்டிங்களா ன்னு கேட்டேன். உங்களுக்கு கூடவா நம்ம பொண்ணு மேல அக்கறை இல்லாம போய்டுச்சு. என் மக அங்க சாகப் பொழைக்க கெடக்குறா. இங்க நீங்களும் இவங்களோட சேர்ந்து கூத்தடிச்சுட்டு இருக்கீங்களா ” என்று கத்த

கந்தகுரு அதிர்ந்து நின்றார் மனைவியின் வார்த்தைகளில். மகள் சாக பிழைக்க கிடக்கிறாள் என்பதில் அவர் கவனம் பதிய மனைவியை கூர்ந்து நோக்கியவாறு “என்ன ஆச்சு என் பொண்ணுக்கு. என்ன பண்ண என் பொண்ணை ” என்று கேட்க

“என்னை ஏன் கேட்கறீங்க. இதோ இதோ நிக்கிறால்ல உங்க அருமை தங்கச்சி பொண்ணு, இவளை கேளுங்க. என் மகளை என்ன செஞ்சா ன்னு கேளுங்க ” என்று அவர் பெருங்குரலில் கத்தி கொண்டிருக்க, அப்படி ஒரு ஆத்திரம் வந்தது வேந்தனுக்கு.

” என்ன? என்ன பண்ணிட்டா சக்தி ? அதான் சத்தமா சொல்றிங்களே. நீங்களே சொல்லிடுங்க அவ என்ன செய்தான்னு ? ” என்று அவனும் பேச

” பாவி பாவி.. என் மக வாழ்க்கையை நாசம் பண்ணிட்டு இப்படி பேசுறியே. உன்மேல அத்தனை பாசம் வச்சேனேடா ??? என்று கண்ணீர்விட

” பாசம் வச்சீங்களா. நீங்களா, வெளியே சொல்லிடாதீங்க சிரிப்பாங்க. நீங்க கல்யாணம் முடிச்சு போய்ட்டாலும் உங்க பொறந்த வீட்ல உங்க கை ஓங்கி இருக்கனும்ன்னு திட்டம் போட்டு செஞ்சீங்க எல்லாத்தையும்.

உங்க பொண்ணுங்களை எங்களுக்கு கட்டி வச்சிட்டா எல்லாம் உங்க கைக்குள்ள இருக்கும் னு நினைப்பு உங்களுக்கு. செவ்வி மதி கல்யாணம் முடியவும் நீங்க போட்ட ஆட்டமெல்லாம் மறந்து போச்சா. என் அண்ணனுக்கும் அண்ணிக்கும் பிடிச்சி இருந்ததால தான் அந்த கல்யாணமே நடந்தது. ஆனா நீங்க உங்க திட்டம் முடிஞ்சதா சொல்லி சந்தோஷப்படல.

இப்போ என்ன ? உங்க பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ணிட்டேனா ? எப்போவாவது உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன் ன்னு உங்ககிட்டயோ இல்ல உங்க பொண்ணுகிட்டயோ சொல்லி இருக்கேனா நான். உங்க பொண்ண இதுவரைக்கும் திரும்பி கூட பார்த்ததில்லை நான். இந்த லட்சணத்துல நாசம் பண்ணிட்டேனாம்.

நியாயமா பார்த்தா உங்க மக செஞ்ச வேலைக்கு நேத்தே அவளை சாகட்டும்ன்னு விட்டு இருக்கணும். அவளா இருக்க போய் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் காப்பாத்தினா. கிட்டத்தட்ட மூணுமணி நேரம் வேற எந்த நினைப்பும் இல்லாம போராடி உங்க பொண்ணை மீட்டுட்டு வந்தவ அவ.ஆனா எத்தனை சுலபமா பழி போட்டுட்டீங்க நீங்க. நீங்க எல்லாம் என்ன ஜென்மமோ ?” என்று அவன் கேட்க

கந்தகுரு வேந்தனிடம் திரும்பியவர் ” மாப்ள என்னடா நடந்தது? நீயாவது சொல்லு மாமாவிற்கு. ” என்று கேட்க, அவரிடம் நேற்று இரவு இவர்கள் மண்டபத்திலிருந்து கிளம்பியது முதல் நடந்த அனைத்தையும் மதியழகி விஷயத்தை மட்டும் ஒதுக்கிவிட்டு அவரிடம் கூறிவிட்டான் அவன்.

மகளின் நிலை மனதை தைத்தாலும், அத்தனையும் அவளாகவே இழுத்துக் கொண்டது தானே என்று நினைத்தவருக்கு வெறுப்பே மிஞ்சியது. வேந்தன் கூறியதை கேட்ட அனைவரும் அவரவர் ஒரு மனநிலையில் இருக்க, மதியழகனும்,அன்புவும் இதற்குள் மண்டபத்தில் இருந்த ஆட்களை சாப்பிட அனுப்பி இருக்க இவர்கள் குடும்பத்தை தவிர மீதம் வெகு சிலரே இருந்தனர் அங்கு.

செவ்வி இதுவரை அமைதியாக நின்றிருந்தவள் சக்தியை விலக்கிவிட்டு தன் அன்னையை நெருங்கினாள். அவர் அருகில் நின்றவள் சக்தியை கைநீட்டி “இவ என்னம்மா பாவம் பண்ணா உனக்கு.இந்த குடும்பத்துல வந்து பிறந்தது ஒண்ணுதான் அவ செஞ்ச பாவம். அதுக்கு இன்னும் இன்னும் நீ அவளை வதைச்சிட்டே இருப்பியாமா.

” அவ வாழ்க்கையை அழிக்கணும்ன்னு நீ என்னென்ன பாவம் பண்ணி இருப்ப? அவ கழுத்துல இருந்த தாலியையே உன் மகன் உயிரை கூட நினைக்காம அத்து எரிஞ்சவ தானே நீ. இன்னிக்கு நீயெல்லாம் நியாயம் கேட்க வந்துட்டியா.

அவளோட நல்ல மனசுக்கு தான் கடவுள் கூட அவ கேட்காமலே அவ வாழ்க்கையை அவளுக்கு காப்பாத்தி கொடுத்து இருக்காரு. ஆனா நீ எத்தனை திட்டம் போட்டும், எவ்ளோ வேலை பார்த்தும் உன் பொண்ணு வாழ்க்கையை உன்னால காப்பாத்த முடியல பார்த்தியா ???

கடைசியா இன்னிக்கு உன் பொண்ணோட உயிர் கூட அவ போட்ட பிச்சை தான் உனக்கு. உன் வாழ்க்கையை அன்னிக்கு என் அத்தை பிச்சையா போட்டாங்க. இன்னிக்கு அவங்க மக உன் பொண்ணோட உயிரை பிச்சையா போட்டு இருக்கா. அதுதான் நிஜம்.” என்று விட அவளின் இந்த வார்த்தைகளில் மங்கை ஆத்திரம் மிகுந்தவராக

“ஹேய் யாரை பார்த்து டி பிச்சை வாங்கினேன் னு சொல்ற. நான் மங்கைடி, பெரிய வீட்டு மருமக. என் வாழ்க்கையை அவ பிச்சையா போட்டாளா. உனக்கு எவ்ளோ தைரியம் என்கிட்டயே இதை சொல்ல” என்று அவர் மேலும் கத்த

” நீ எத்தனை சத்தம் போட்டாலும் அதுதான் உண்மை. நீ வாழ்ந்ந்திட்டு இருக்க இந்த வாழ்க்கை என் அத்தை உனக்கு போட்ட பிச்சை. நீ என்ன சொன்னாலும் அதை இல்லன்னு சொல்ல முடியாது ” என்று அடித்து கூற

மங்கை தன்னை மறந்த வெறுப்பில் ” ச்சீய். நீ எல்லாம் எனக்கு தான் பொறந்தியாடி கேடுகெட்ட நாயே. பெத்த தாய்ன்னு பாசம் இல்ல,கூட பொறந்தவ மேல அக்கறை இல்ல. புருஷனுக்கு பிள்ளையை பெத்துட்டா அதுதான் உலகமா. பெத்தவங்க மேல பாசமே இல்லாம போய்டுமாடி ” என்று கீழ்த்தரமாக பேச

செவ்வியோ அமைதியாக ” உன்னை மாதிரி ஒருத்திக்கு மகளா இருக்கறதை விட என் புருஷனுக்கு பொண்டாட்டிய இருக்கறது தான் எனக்கு முக்கியம். உன் மகளுக்கு நான் அக்கான்னு சொல்றத விட என் மதிக்கும், வேந்தனுக்கும் அண்ணியா இருக்கறது எனக்கு பெருமை தான்.”

“ஆனா நீ உன்னை பத்தி யோசிச்சு பாரு. நீ இதுவரைக்கும் யாருக்கு நல்லது பண்ணி இருக்க, இல்ல யாருக்கு உண்மையா இருந்து இருக்க. உன் புருஷனுக்கு, உன் பிள்ளைகளுக்கு, உன் மாமியார் மாமனாருக்கு சரி இதெல்லாம் கூட விட்டுடுவோம் உன் அண்ணனுங்களுக்கு. யாருக்கு நீ உண்மையா இருந்த. சொல்லு பார்ப்போம். நீ என்னை பத்தி பேசுவியா ” என்று அவளும் கத்த

Advertisement