Advertisement

மங்கை எப்போதும் செய்யும் வேலையாக அவளை அடக்க நினைத்து தன் கைகளை ஓங்கிவிட அருகில் நின்றிருந்த வேந்தன் அவர் கையை முறுக்கியே  விட்டான். அவர் “அய்யோ ” என்று அலறவும் அவர் கைகளை விட்டவன் “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க. நீங்க அடிச்சிட்டே இருந்தா எல்லாரும் வாங்கிட்டே இருப்பாங்கன்னா. அவளை விட்ட ஒரு அறைக்கே உங்க அண்ணன் ல இருந்து உங்க புருஷன் வரைக்கும் ஆதி வாங்கிட்டிங்க. நியாபகத்துல இருக்கட்டும்.

இனி எப்பவும் இவங்க ரெண்டு பேர் மேலேயும் கை வைக்கிற தைரியம் உங்களுக்கு வரவே கூடாது. இவங்களை நீங்க தொடணும்ன்னு நெனச்சா அதுக்கு முன்னாடி இளவேந்தன் முகம் உங்களுக்கு நியாபகம் வரணும். நான் ஆதி இல்ல, அம்மான்னு பாவம் பார்க்க. சக்தியும் இல்ல… நீங்க என்ன செஞ்சாலும் அமைதியாவே இருக்க.

இந்த முறை கையை முறுக்கினதோட நிறுத்திட்டேன். ஆனா அடுத்தமுறை கழுத்தை நெரிச்சிடுவேன். நீயா இருந்தாலும் சரி. உன் மகளா இருந்தாலும் சரி. இனி என் குடும்பத்து ஆளுங்க கிட்ட வாலாட்டவே கூடாது.

“அதோட உங்களுக்கு என் பெரியம்மா பிச்சையா போட்ட வாழ்க்கை வேண்டாம்மில்ல. அதுக்கும் வழி பண்றேன். சீக்கிரமே பஞ்சாயத்தை கூட்டுறேன். என் மாமா நீங்க அவர் பொண்டாட்டியே இல்லன்னு உங்கள அத்து விடுவாரு. இதோ நிக்கிறாளே இவை கழுத்துல இருந்து தாலியை பறிச்சிங்க இல்ல. சீக்கிரமே உங்க தாலியை கழட்டி கொடுக்க தயாரா இருங்க.” என்றவன் தன் ராமனிடம் திரும்பி ” ஏன் மாமா நான் சொன்னா பஞ்சாயத்துல இவங்க வேண்டாம்ன்னு சொல்ல மாட்டிங்க நீங்க ?” என்று கேள்வியாக நிறுத்த

” நீ சொல்லு மாப்பிள. என் காலத்துக்கும் சத்தியம் சத்தியம் ஒத்த வார்த்தைக்கே கட்டுப்பட்டு நின்னுட்டேன். இனி என் பிள்ளைங்க வாழ்க்கை தான்யா முக்கியம்.நீங்க எல்லாம் என்ன சொல்றிங்களோ அதையே செய்றேன்யா” என்று கூறிவிட, வேந்தன் மங்கையை பார்த்து நக்கலாக சிரித்தவன்

” கொஞ்ச நேரம் முன்னாடி என்ன சொன்னிங்க பெரிய வீட்டு மருமகன்னா அதுக்கு முதல் ஆப்பு. அடுத்து என்ன உங்க பொறந்த வீடா ? ” என்று கேட்டவன் தன் பெரிய தந்தையிடம் திரும்பி

” நான் என்ன செய்யட்டும் பெரியப்பா. இதுக்கு மேலேயும் இவரு உங்க தங்கச்சி தான் முக்கியம் ன்னு சொல்வாரா இல்ல எங்களை பத்தி யோசிப்பாரா.

“கேட்டு சொல்லுங்க தங்கச்சி முக்கியம்ன்னா கூடவே வச்சிக்கட்டும். என் தங்கச்சி மாமியார் வீட்டுக்கு போய்டுவா. நானும் என் அண்ணனும் நம்ம பண்ணை வீட்டுக்கு போயிடுறோம். இப்போ என்ன எத்தனையோ பேர் கல்யாணம் முடிஞ்சதும் தனிக்குடித்தனம் போகல அப்படி நெனச்சிக்கறோம்.  நீங்க சொல்லுங்க பெரியப்பா.” என்று கேட்க

வீரபாண்டியன் தன் மகனின் கையை பிடித்துக் கொண்டவர் ” நீங்க ஏண்டா தனிக்குடித்தனம் போகணும். என்னிக்கு சக்திக்கு இவ செஞ்ச கொடுமை எனக்கு தெரிய வந்ததோ அன்னிக்கே இவளுக்கு பிறந்தவீடு இல்லன்னு நான் முடிவு பண்ணிட்டேன். என் தம்பியும் என்னை மறுத்து பேசலையே.

“என்ன….. வீட்ல ஒரு கல்யாணம் நடக்கவும் மனசு கேக்கல, நம்ம தங்கச்சியாச்சே ன்னு தேடி போனேன். ஆனா அந்த மரியாதைய கூட காப்பாத்திக்க தெரியாம இன்னிக்கு இங்க வந்து நிக்கிறா.இதுக்குமேல  நான் சொல்ல என்ன இருக்கு.

என் பிள்ளைங்க முடிவு தான் எனக்கும். நீ என்ன நினைக்கிறியோ அதை செய். நான் உன்கூட இருப்பேன்” என்றுவிட்டார் அவர்.

வேந்தன் மங்கையை இப்போது மீண்டும் திரும்பி பார்க்க, அத்தனை ஏளனமாய் இருந்தது அவன் பார்வை. ” இனி பொறந்த வீடும் கெடையாது ” என்று அடித்து சொன்னது அவன் பார்வை. எனவே அதை விடுத்தவன் அவரிடம் மீண்டும் ” அடுத்து என்ன.?? உங்க போலீஸ்கார பிள்ளையா. அவன்கிட்ட நான் கேட்கவே வேண்டாம்.நீங்க சக்தியை அறைஞ்சீங்க ன்னு சொன்னாலே போதும்.

“அவனே மாமியார் கொடுமை ன்னு ஒரு கேஸ் புக் பண்ணி உங்களை உள்ள தள்ளிடுவான். இவ எப்போதும் போல அவன்கிட்ட சொல்லாம விட்டாலும் நான் சொல்லுவேன். நேத்துல இருந்து இப்போ வரைக்கும் நீங்களும் உங்க மகளும் ஆடின ஆட்டம் அத்தனையும் ஒன்னுவிடாம சொல்லுவேன் அவன் கிட்ட”

” இனி நீங்க வாலை சுருட்டிட்டு இருக்கணும் புரியுதா. இனிமே யாருக்காவது தொந்தரவு கொடுக்கணும்ன்னு நீங்க நினைச்சாலே உங்களை நிம்மதியா இருக்கவிட மாட்டேன். இனி எங்க குடும்பத்துல இருந்து யாரோட உதவியும் உங்களுக்கு கிடைக்காது.

அதை எப்பவும் நியாபகத்துல வச்சிக்கோங்க. இப்போ இங்க இருந்து கிளம்புங்க. உங்களுக்கு தான் உங்க பொண்ணு மேல ரொம்ப அக்கறையாச்சே. போய் இருக்காளா செத்தாளா ன்னு பாருங்க.

ஆனா உங்க பொண்ணை பத்தி தெரிஞ்ச வரைக்கும் அவ சாகிறதெல்லாம் நடக்கவே நடக்காது. வேணும்ன்னா கூடவே இருக்க யாரையாவது கொலை பண்ண பார்ப்பா. அதுதான் உண்மை.

யாருக்கு தெரியும். நீங்களே கூட உங்க பொண்ணுக்கு விஷத்தை கொடுத்திருக்கலாம், நீ குடிச்சிட்டு படுத்துக்கோ நான் வேந்தனை மடையனாக்கி உன் கழுத்துல தாலி கட்ட வைக்கிறேன் ன்னு சொல்லி கூட இருப்பிங்க. ஆனா இந்த அன்னை தெரேசா இருக்கா பாருங்க, உங்க திட்டத்தை கெடுத்து அவளை காப்பாத்தி, கல்யாணத்தையும் முடிச்சிட்டா.

ஒருவேளை அதுக்குதான் அவளை அடிச்சீங்களோ. உங்க திட்டத்தை கெடுத்துட்டான்னு.” என்றவன் சக்தியிடம் திரும்பி ” என்ன சக்தி நீ. இப்படி பண்ணிட்டியே ” என்று நக்கல் பேச

மங்கைக்கு முகத்தை எங்கு கொண்டு வைப்பது என்றே தெரியவில்லை. முழுதாக இல்லாவிட்டாலும் மகள் விஷம் குடித்ததை கேட்டதும் அவரும் கிட்டத்தட்ட இதைத்தானே எண்ணி இருந்தார். இப்போது அவன் அதையே சொல்லவும் தலை குனிந்து நின்றார் அவர். ஆனாலும் இறுதி முயற்சியாக கண்ணீரோடு, தன் மாமனாரிடம் சென்றவர்

” இதெல்லாம் நியாயமா மாமா. ஒரு சின்ன பையன் என்னை இத்தனை பேசுறான் நீங்க வேடிக்கை பார்த்துட்டு நிப்பீங்களா. நான் என்ன உங்க மகன் கூட ஓடியா வந்தேன், நீங்க தானே முறைப்படி என்னை உங்க மருமகளா அழைச்சிட்டு வந்திங்க.

அப்போ எனக்க்கான உரிமையை நீங்க தானே வாங்கி கொடுக்கணும். உங்க மகன் என்னை அடித்து விடுவாராம் அதை அவன் சொல்றான். உங்க மகனும் அதுக்கு தலையாட்டிட்டு நிக்கிறாரு, ஊருக்கே நியாயம் சொல்றவராச்சே நீங்க எனக்கு நியாயம் சொல்லுங்க. ” என்று கேட்க

வேதமாணிக்கம் அமைதியாக ” நீ சொல்றது சரிதான்மா. ஆனா என்ன செய்யிறது, நான் அடிச்சி வளைக்கிற வயச எல்லாம் தாண்டிட்டானே. இதே போல அவன் தங்கச்சி செத்த முப்பதாவது நாள் என்கிட்டே வந்து கலங்கி நின்னான்.

நானும் இப்போ நீ சொன்ன மாதிரி தான் எடுத்து சொல்லி வாழ அனுப்பினேன். ஆனா அது எத்தனை தப்பு ன்னு இத்தனை வருஷத்துல நல்லாவே புரிஞ்சிகிட்டேன்மா. நான் மறுத்த விடுதலையை அவன் பிள்ளைங்க அவனுக்கு கொடுக்கணும்ன்னு நினைக்கிறாங்க இன்னிக்கு. அதை நான் எப்படிம்மா தடுக்க முடியும்.

இந்த கிழவனுக்கு வயசாகிடுச்சின்னு தான அன்னிக்கு என் கண்ணை மறைச்சு என் மகளை வாழவிடாம செஞ்ச. இன்னிக்கு அதேபோல அவன் மருமகனும் நெனச்சிட்டான் போல ” என்றதும் வேந்தன் “தாத்தா ” என்று பதற

” நான் தப்பு சொல்லலய்யா. நீ செஞ்சது அத்தனையும் சரி, அன்னிக்கு உன் அத்தை அவளுக்கு சாதகமா என்னை வளைச்சு என் மகள கடைசியில இல்லாமலே பண்ணிட்டா. இன்னிக்கு நீ என் மகனை மீட்டு கொடுத்து இருக்க. உன்னை எப்படிடா நான் குறை சொல்லுவேன்

ஆதி இங்கே இருந்தா என்ன செய்வானோ அதைத்தான் நீ செஞ்சிருக்க. நீ கலங்காத வேந்தா.” என்றவர் அவனை பிடித்து கொண்டே நிற்க,

வேந்தன் தன் அத்தையின் புறம் திரும்பியவன் “என்ன கடைசிபந்தும் அவுட்டா. உங்களுக்கு எல்லாம் சூடு சொரணையே இல்லல்ல. வெளியே போங்க முதல்ல. உங்களையெல்லாம் பார்க்கவே பிடிக்கல எனக்கு. டேய் அன்பு !! முதல்ல இவங்களை வெளியே துரத்தி விடுடா” என்று கத்தியவன்

தாத்தாவிடம் ” உங்களுக்கே பிபி இருக்குல, இங்கே என்ன வேடிக்கை உங்களை இங்க விட்டுட்டு இந்த பாட்டி பாருங்க பேசுறவங்க வாயை பார்த்திட்டு நிக்கிறத.” என்று சொல்ல

சிவகாமி “அடேய்!! என்று குரல் கொடுக்க ” உன் புருஷனை கூட்டிட்டு போ கிழவி, எப்போ பார்த்தாலும் என்னையே சொல்ல வேண்டியது. ” என்று அவர்களை அங்கிருந்து அனுப்பினான்.

அடுத்து தன் பெரியப்பவை பார்க்க அவரும் ” ஏம்மா உனக்கு வேலை ஏதும் இல்லையா.உன் மகன் கல்யாணம் தானே.இங்கேயே நின்னா ஆச்சா” என்று ரங்கநாயகியை கேட்க

“போறேன் மாமா ” என்று அவர் செல்ல அவருடன் நின்ற விசாலமும் உடன் நகர்ந்தார். மாணிக்கதித்திடம் கண்ணை காட்ட அவர் சுந்தரபாண்டியனை அழைத்து செல்ல வீரபாண்டியனும் அவர்களின் பின்னால் சென்றுவிட்டவர் மங்கையை திரும்பி கூட பார்க்கவில்லை.

இளையவர்கள் மட்டுமே அங்கிருக்க வேந்தன் மீண்டும் மதியிடம் திரும்பியவன் ” அவ எப்படி போனாலும் பரவால்லையாடா உனக்கு. மாசமா இருக்க பொண்ணு, அம்மாங்கிற பேர்ல ஒரு பேய் அவளை அடிக்க வருது அப்பவும் ஆளையே காணும் உன்னை. இப்போவும் இவ்வளவு நேரம் அவ நின்னுட்டு இருக்கா, சாப்பிட கூட இல்ல .கொஞ்சமாவது அக்கறை இருக்கா உனக்கு” என்று அவனை மிரட்ட மதி அவனை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே செவ்வியை கைபிடித்து அழைத்து சென்றான்.

செவ்வியோ ” நீ பொறுப்பா இருக்கன்னு என் புருஷனை பொறுப்பில்லை ன்னு சொல்வியா ” என்று கேட்க,” உன்னை மறந்து நான் அவனை கேட்டுட்டேன் ஆத்தா, நீ போ ” என்று உடனே சரணடைய, அவள் சக்தியை ” உனக்கென்ன வேலை இங்கே. எதுக்கு இங்க நின்னுட்டு இருக்க, அப்படியே நாலு வார்த்தை கேட்டிட போற மாதிரி நிற்கிற. அது என்ன சொன்னாலும் மண்ணு மாதிரி வாங்கிட்டு தான் நிக்க போற. அதுக்கு என்னோடவே வா. என் அண்ணன்கிட்ட மட்டும் வாய் பேசினா ஆகாதுடிம்மா ” என்று அவளை திட்டிக் கொண்டே இழுத்து சென்றாள். தாமரையும் நடந்த கலவரத்தில் அமைதியாக வந்து தன் தோழிகளிடம் நின்றிருக்க அவளும் சக்தியை திட்டிக்கொண்டே நகர்ந்தாள் அவர்களுடன்.

மதிமாறன் தனாவையும் உடன் அழைக்க அந்த ஜோடியும் சென்றுவிட்டது அவர்களுடனே. அன்பு மட்டுமே வேந்தனுடன் நிற்க, வேந்தன் மங்கையை பார்த்தவன் ” இன்னும் போகலையா நீங்க, உங்களை அப்பவே கிளம்ப சொன்னோமே ” என்று கேட்டவன் ” டேய் துரத்திட்டு வாடா ” என்றுவிட்டு தானும் உள்ளே சென்றுவிட்டான்.

அந்த இடமே காலியாக இருக்க மங்கை தனித்து நின்றிருந்தார் அங்கே. புறக்கணிப்பின் வலி அன்று புரிந்தது அவருக்கு. ஒரு ஐந்து வயது குழந்தையை தள்ளி நிறுத்தி ஒதுக்கியது ஏனோ சந்தர்ப்பமாக இன்று நினைவு வந்தது,கூடவே அன்று சக்தியின் திருமணமான புதிதில் அவளை அடித்ததும். அன்று கேட்க நாதியில்லாமல் அவள் கண்ணீர் விட்டிருக்க, நான் பெரிய வீட்டின் மருமகள் என்று மிதப்பாக நின்றவர் அவர்.

ஆனால் இன்று மொத்தத்திற்கும் சேர்த்து அவளை அடித்த ஒரு அடிக்கு ஒட்டுமொத்த குடும்பமும் தன்னை உதறி இருக்க, அனாதையாக நின்றிருந்தார் மங்கை. நிறுத்தப்பட்டிருந்தார் என்பது சரியாக இருக்குமோ …………………

Advertisement