Advertisement

அத்தியாயம் 22

 

அந்த திருமண மண்டபம் முழுவதும் உறவினர்களால் நிறைந்திருக்க, இருவீட்டு பெரியவர்களும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு வந்த உறவினர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் திருமணம் நடக்க இருக்க பெண்களுக்கு முகூர்த்த சேலைகளை ஏற்கனவே கொடுத்து அனுப்பி இருக்க, மாப்பிள்ளைகள் ஐயர்  கூறும் மந்திரங்களை திரும்ப கூறி கொண்டு மணமேடையில் அமர்ந்திருந்தனர்.

 

செவ்வி மதியழகிக்கு உதவ அவளுடன் இருக்க, தாமரையோடு சக்தி சென்றிருந்தாள். தாமரை நேற்று இரவு சற்று வருத்தமாக இருந்து இருந்தாலும் இப்போது மணப்பெண்ணுக்கு உரிய களையோடு முகம் பூரிக்க தயாராகி கொண்டிருந்தாள்.

 

சக்தி முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் தாமரைக்கு உதவிக் கொண்டிருந்தாலும் அவள் மனம் ஆதித்யனையே சுற்றிக் கொண்டிருந்தது.நேற்று இரவு முழுவதும் கூட அவன் வந்திருக்கவில்லை. இதோ இப்போதும் இன்னும் சற்று நேரத்தில் திருமணம் நடக்கவிருக்க இன்னும் வந்து சேர்ந்திருக்க வில்லை அவன். என்னதான் தாத்தா சொல்லி இருந்தாலும் “அப்படி என்ன வேலை இன்னிக்கு கூட ” என்று அவள் மனம் முறுக்கி கொண்டது.

 

ஆதித்யனை ஒருவழி செய்துவிடும் வேகத்தில் தான் அவள் இருந்தாள்.ஆனால் அதற்கு ஆதித்யன் கண்ணில் படவேண்டுமே. வேந்தனும், செவ்வியும் நேற்றிலிருந்து அவள் பின்னால் சுற்றிக்கொண்டே இருக்க முயன்று தன்னை சாதாரணமாக காட்டி கொண்டு இருந்தாள் அவள்.

 

இங்கு மதியழகி இன்னும் கூட பயந்து கொண்டே தான் இருந்தாள். நேற்று இரவே நந்தினியின் செயல்களை செவ்வி அவளிடம் கூறியவள் “இனி பயப்பட ஏதுமில்லை ” என்று அவளை தெளிய வைத்து இருந்தாலும், ஏதோ ஒரு அச்சம் அவள் மனம் முழுவதும் விரவி நின்றது.

 

இப்போதும் புது பெண்ணுக்கான நாணமோ, மகிழ்ச்சியோ முகத்தில் இல்லாமல் ஒரு குழப்பத்துடனும்,பயத்துடனும் தான் தயாராகி கொண்டிருந்தாள் அவள். தனாவும் நேற்றிலிருந்து இவளை கவனித்துக் கொண்டு தான் இருந்தான். ஆனால் இவளுடன் தனித்து இருக்கும் சூழ்நிலை அமையாததால் அவனால் என்ன ஏதென்று கேட்க முடியவில்லை.

 

மணமேடைக்கு பெண்கள் அழைக்கப்பட, செவ்வி மதியழகியையும், சக்தி தாமரையையும் அழைத்து வந்தனர். இருவருக்குமே அந்த நேரம் மற்ற கவலைகள் மறந்து ஒரு இனிய படபடப்பு ஆட்கொள்ள, தலை நிமிரவே இல்லை இருவருக்கும்.

 

தாமரை வந்து அருகில் அமர்ந்ததும் வேந்தன் அவள் முகத்தை ஏறிட்டு பார்க்க,அவள் அவன் புறம் திரும்பினால் தானே. ஐயர் அவன் கவனத்தை தன் புறம் திருப்பியவர் மந்திரங்களை உச்சரித்து அவனையும் தன்னோடு இணைத்துக்கொள்ள கர்ம சிரத்தையாக உச்சரித்துக் கொண்டு இருந்தான் அவன்.

 

இங்கு தனாவின் முகமோ ஏதோ யோசனையிலேயே இருந்தது.நிச்சயம் மதியிடம் ஏதோ சரியில்லை என்று அவன் உள்மனம் கூறிக் கொண்டே இருக்க, ஐயர்  சொல்வதில் அவன் கவனம் செல்லவே இல்லை. மாறாக மதியை தான் ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தான். “இவ ஏன் இப்படி இருக்கா” என்பது போல். தலை குனிந்தே அமர்ந்து இருந்தாலும் மதியழகியால் தனாவின் பார்வையை உணர முடிந்தது.

 

ஆனால் இனம்புரிய ஒரு கலக்கம் நெஞ்சை சூழ்ந்திருக்க, அதோடு அவனை கண்ட கணம் முதல் ஓடி வந்து ஒட்டிக்கொண்ட வெட்கம் வேறு ஒருபுறம் படுத்த இரண்டுக்கும் நடுவில் தடுமாறியவள் அவனை ஏறிட்டு பார்க்கும் தைரியத்தை இழந்திருந்தாள்.

 

 

மேடையில் சுந்தரபாண்டியன்-ரங்கநாயகி, மாணிக்கம்-விசாலம், செவ்வி- மதிமாறன், சக்தி, சிவகாமி தேவி என்று இருவீட்டினரும் நிற்க வேதமாணிக்கம் கீழே முதல் வரிசையில் அமர்ந்து மேலே நடப்பதை பார்த்து கொண்டிருக்க, அவருக்கு பக்கத்தில் வீரபாண்டியன் அமர்ந்திருந்தார்.அப்படி ஒரு கம்பீரம் அந்த இருவரிடமும்.

அந்த நேரம் சக்தியின் மொபைலில் ஏதோ அழைப்பு வர, அழைத்தது மனோஜ். இன்று அவனுக்கு காலைநேர ஷிப்ட் ஆக இருக்க, நேற்று இரவே கிளம்பி இருந்தான் அவன். இது அவர்களின் பயிற்சி காலம் என்பதால் விடுப்பு எடுக்க விரும்பாமல் அவன் சென்றிருக்க, இப்போது அவனிடமிருந்து அழைப்பு.

எதற்கு அழைக்கிறான் என்ற யோசனையில் அவள் மொபைலை எடுக்க,அங்கே மேளச்சத்தத்தில்  ஒன்றுமே கேட்கவில்லை அவளுக்கு. அழைப்பும் துண்டிக்கப்பட்டு விட,அங்கிருந்து நகர்ந்தவள் சற்று தள்ளி வந்து மீண்டும் அவனுக்கு அழைத்தாள்.

அவன் எடுத்ததும் ” என்ன மனோ, கால் பண்ணி இருக்க ” என்று கேட்க

அவனோ “சக்தி, நீ எங்கே இருக்க. “என்று கேட்க

“என்ன கேள்வி கேட்கிற மனோஜ்.இப்போ எங்க இருப்பேன்? தாமரை கூட தான் இருந்தேன்.நீ கூப்பிடவும் கீழே வந்து உங்கிட்ட பேசிட்டு இருக்கேன். சீக்கிரம் சொல்லு, நா போகணும் ” என்று கூற

அவன் தயங்கியவனாக ” சக்தி… சக்தி ஆதி சார் இங்க….” என்று தடுமாற,அவனின் தடுமாற்றத்தில் இங்கே பதறிப்போனாள் அவள்.

“என்ன என்ன சொல்ற மனோஜ். என்ன பண்றாரு அங்கே.இல்ல அவருக்கு ஏதாவது… மனோஜ் என்ன அவருக்கு” என்று கத்திவிட

 

“சக்தி அவர் இங்க அட்மிட் ஆகி இருக்காரு, ஆக்சிடென்ட். லேசான காயங்கள் தான், வேற எந்த பிரச்னையும் இல்ல. ஆனா வீட்டுக்கு சொல்ல வேண்டாம்ன்னு சொல்லி இருக்காரு.நான் பார்த்தது அவருக்கு தெரியாது” என்று அவன் கூறி முடிக்க

கண்களில் நிறைந்த கண்ணீரோடு “மனோஜ்.நிஜமா லேசான காயம் தானே. நல்லா இருக்காரு இல்ல” என்று மீண்டும் கேட்க

“ஹேய் சக்தி. சத்தியமா நல்ல இருக்காருடா, எந்த பிரச்னையும் இல்ல.” என்று அவன் அழுத்தி கூற

“நான் கிளம்பி வரேன் மனோஜ். நீ அதுவரைக்கும் கொஞ்சம் பார்த்துக்கோ ” என்றவள் அழைப்பை துண்டித்து விட்டாள். உள்ளே எட்டிப்பார்க்க திருமாங்கல்யம் அனைவரின் ஆசிக்காக கொடுக்கப்பட்டிருந்தது. சிவகாமிதேவி மேடையில் இருக்க செவ்வியும் அவருடன் நின்று கொண்டிருந்தாள்.

ஆதித்யன் நலமாக இருப்பதாக சொன்ன தன் தோழனின் வார்த்தைகளை முழுமையாக நம்பினாள் சக்தி. அப்போதுதான் வேதமாணிக்கம் நேற்று அவளை சமாதானப்படுத்தியது நினைவுக்கு வர, அப்படி ஒரு கோபம் வந்தது அவளுக்கு.

“இங்கே திருமணத்தில் இருந்து பாதியில் கிளம்பிவிடுவேன் என்றே என்னிடம் கூற வேண்டாம் என்று சொல்லி இருப்பான்” என்று நினைத்தவளுக்கு அவன் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு ஆத்திரம் வர,முயன்று தன்னை அடக்கியவள் தன் பாட்டியின் அருகில் சென்று நின்று கொண்டாள். அந்த நேரம் ஐயர் மந்திரங்களை முடித்தவர் மங்கள நாணை எடுத்து வேந்தனிடம் கொடுக்க, அவன் புன்னகையுடன் அதை கையில் வாங்கியவன் தாமரையை பார்க்க அவள் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

அவள் காதருகில் குனிந்தவன் “என்னை நிமிர்ந்து பாரு.அப்போதான் கட்டுவேன்” என்று கூற, அவன் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்திருந்தாள் அவள்.அவள் கண்கள் கலங்கி இருக்க, கண்ணீரோடு புன்னகைத்துக் கொண்டிருந்தாள் அவள்.அவளின் அந்த கண்களை பார்த்துக்கொண்டே அவளுக்கு மங்கள நாண் பூட்டி வேந்தன் அவளை மனைவியாக்கி கொள்ள, மூன்றாவது முடிச்சை மதியழகி போட்டு முழுமனதுடன் தன் அண்ணன் அண்ணியின் நல்வாழ்விற்காக வேண்டிக் கொண்டாள்.

முகூர்த்த நேரம் முடிவதற்குள் மதியழகி  சென்று தன் மனையில் அமர, அங்கே தனாவிடம் தாலியை எடுத்துக் கொடுத்தார் மற்றொரு ஐயர்.அவன் தாலியை வாங்கியவன் மதியை பார்க்க அவள் பார்வை நிலம் நோக்கி இருந்தது.

அவள் செயலில் லேசான புன்னகையோடு அவள் கழுத்தில் மங்களநாண் பூட்டினான். அவளுக்கு நாத்தனார் முடிச்சை தாமரை எழுந்து வந்து போட்டுவிட அவள் கண்களும் கலங்கி தான் இருந்தது. தன் அண்ணனின் வாழ்க்கைக்காக மனதார கடவுளை வேண்டிக் கொண்டவள் தன் இடத்தில் சென்று அமர்ந்தாள். இத்தனைக்கும் மதியழகி நிமிரவே இல்லை. அடுத்ததாக ஐயர் குங்குமத்தை மணமகன்களிடம்  கொடுக்க தனா மதியை சுற்றி கையை கொண்டு வந்தவன் அவள் நெற்றியில் குங்குமம் இடுவதற்கு முன் இடது கையால் அவள் தாடையை பற்றி நிமிர்த்தியவன் அவள் கண்களை பார்த்துதான் குங்குமம் இட்டான்.

அவனின் இந்த செயலில் சுற்றி இருந்தவர்கள் சிரித்துவிட, மதியழகி முகம் அழகாக சிவந்து போனது தனாவின் அருகாமையில்.அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு பார்வையை விளக்கவே முடியாமல் போக, அடுத்தடுத்த சடங்குகளில் ஒரு மோன நிலையிலேயே இருந்தனர் இருவரும்.

இவர்கள் இப்படி இருக்க வேந்தனோ ஒவ்வொரு சடங்கிலும் விடாமல் தாமரையை வம்பிழுத்துக் கொண்டிருந்தான். குங்குமம் இடும்போது அவளை சுற்றி கைகளை கொண்டுவருவதற்கு பதிலாக தன் உடல் முழுதும் உரசும்படி அவளை அணைத்தவாறு குங்குமம் இட்டதாகட்டும், அக்னியை வலம் வரும்போது அவள் கையை பிடித்திருந்தவன் அவள் உள்ளங்கையில் தன் விரல்களால் குறுகுறுப்பூட்டிய தாகட்டும், சடங்கு முடிந்த பிறகும் கூட அவள் கையை விடாமல் பற்றிக் கொண்டதாகட்டும், எல்லா விதத்திலும் அவன் தாமரையை சீண்டிக் கொண்டே இருக்க, தாமரை தான் நொந்துபோனாள் அவனின் இந்த சீண்டல்களில்.

ஆனால் இத்தனையிலும் வேந்தன் முகத்தை அமைதியாக வைத்துக் நல்லபிள்ளையாக நடந்து கொண்டிருக்க, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவன் செயல்கள் கண்ணில்படவே இல்லை. அவன் திருமணத்திற்கு தன் தொழில் வட்டத்தினர் அனைவர்க்கும் அவன் அழைப்பு விடுத்து இருக்க, நகரின் முக்கியப்புள்ளிகள் அனைவரும் குழுமி இருந்தனர் அங்கே. இவர்கள் பக்கம் வரவேற்பு என்று தனியாக செய்வது இல்லை என்றாலும் மூன்று நாட்கள் கோலாகலமாக நடைபெறும் திருமணமும், அதை தொடர்ந்த விருந்தும்.

இவனின் தொழில்வட்டம் திருமணத்தில் கலந்துகொள்ள, ஊர்க்காரர்கள், முக்கிய உறவு முறைகளுக்கு நாளை இவர்களின் தோட்டத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவளை அவ்வபோது சீண்டிக்கொண்டே இருந்தாலும் முறையாக சடங்குகளை முடித்து பெரியவர்களின் காலில் விழுந்து மணமக்கள் நால்வரும் முறையாக ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள அத்தனை சந்தோஷம் பெற்றவர்களின் முகத்தில்.

தன் கடமையை சரிவர முடித்துவிட்ட திருப்தி தெரிந்தது அந்த பெற்றவர்கள் முகத்தில். பிள்ளைகளின் ஜோடி பொருத்தத்தை ஊரே மெச்சிக்கொள்ள அத்தனை பெருமை அவர்களிடம். சுந்தரபாண்டியன் மகிழ்ச்சியோடும், நிம்மதியோடும் தன் அண்ணனின் அருகில் நின்று கொண்டிருந்தார். வேந்தனின் வாழ்வை நினைத்து அவர் வருந்தாத நாள் இல்லையே.

அதிலும் மகன் சோம்பேறியாகவோ,குடிகாரனாகவோ மாறி இருந்தால் கூட வெறுத்து விட்டிருப்பார்.ஆனால் அவன் அதற்கு மாறாக தன் கோபம் மொத்தத்தையும் தொழிலில் காட்டி முன்னேற இன்று இந்த நெல்லை மாவட்டத்தில் அவருக்கு இருக்கும் வியாபார தொடர்பை விட பெரியது அவனது தொழில்வட்டம்.

மதிமாறன் தந்தைக்கு ஏற்ற மகனாக அவருக்கு துணையாக இருந்து தொழிலை பெருக்க,இவனோ தந்தை மேல் இருந்த கோபத்தில் குடும்பத்தொழில் வேண்டாம் என்று உதறி சென்றவன். பெரிய தந்தையின் துணையோடு இன்று தானே வளர்ந்து நிற்கிறான்.

எத்தனை பேருக்கு கிடைக்கும் இப்படி ஒரு வரம். ஆம் அவர் மகன் வரமாக தான் தெரிந்தான் அவரின் கண்ணுக்கு. அப்படிபட்ட மகன் தன் சொந்த வாழ்வில் எதைப்பற்றியும் யோசிக்காமல் தன்னுள்ளே ஒடுங்கிக்கொண்டு, தன்னையே வருத்திக் கொண்டு உணவைக்கூட பல நேரங்களில் மறந்து சுற்றியதை எந்த தந்தையால் ஏற்றுக்கொள்ள முடியும்.

அவனை நினைத்து ரங்கநாயகி வெளிப்படையாக கண்ணீர் சிந்தினால் சுந்தரபாண்டியன் தன் தங்கைக்கும், மகனுக்கும் இடையில் அல்லாடுபவர் மனதிற்குள் அழுது கொண்டிருந்தார் மகனின் நிலை எண்ணி. இன்று அனைத்திலிருந்தும் விடுதலை அவருக்கு. மகனின் மகிழ்ச்சி அவன் கண்களில் தெரிய இதற்குமேல் என்ன வேண்டும் எனக்கு என்று கர்வமாகவே நின்றிருந்தார் அவர்.

ரங்கநாயகிக்கும் கண்களை கண்ணீர் நிறைத்தாலும் மகிழ்ச்சியுடன் சுற்றி வந்தார் அந்த மண்டபத்தை. செவ்வி மசக்கையாயிருக்க அவளை ஓரிடத்தில் அமர வைத்தவர் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார் தன் மக்களின் திருமணத்தில். சோர்வோ,உடல்வலியோ, எப்போதும் இருக்கும் லேசான மயக்கமோ எதுவுமே இல்லை அவரிடம்.மனதின் மகிழ்ச்சி வெளியில் தெரிந்தால் உடலில் உள்ள பிணிகள் ஒதுங்கி நின்றுவிடும் போல.. யாரறிவார்???

இங்கு மணமக்கள், அவர்களின் சுற்றத்தினர், உற்றார் உறவினர் என்று அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கி இருக்க சக்தி எப்படி இங்கே இருந்து வெளியில் செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். திருமணம் நல்லபடியாக முடிந்ததில் நிம்மதியாக உணர்ந்தாலும் ஆதித்யனை பார்க்கும்வரை அவள் மனம் ஒரு நிலைக்கு வராது.

அவள் அவனை நினைத்து மருகி கொண்டிருக்க, மருத்துவமனையில் படுத்திருந்தவனோ நகரின் முக்கிய புள்ளி ஒருவருக்கு வலை விரித்து விட்டு காத்திருந்தான் வழக்கம் போல். இந்த விபத்து அவனே எதிர்பாராதது, சாலையில் ஒரு லாரியின் பின்னால் இவன் சென்று கொண்டிருக்க இவனை முந்திக்கொண்டு சென்றது ஒரு கார்.

அந்த கார் சற்று அதிகமான வேகத்தில் சென்று கொண்டிருக்க, இவனும் லேசாக ஒரு பார்வை பார்த்தவாறே அதன் எண்ணை குறித்துக்கொண்டு வண்டியை செலுத்திக் கொண்டிருக்க,  அந்த காரின் மேல் கவனம் வைத்திருந்தவன் அடுத்து வந்த வளைவை கவனிக்க மறந்தான்.

அந்த வளைவில் வந்து கொண்டிருந்த ஒரு கார் கடைசி நேரத்தில் கட்டுப்பாடு இல்லாமல் இவன் மீது மோதி இருக்க, தூக்கி வீசப்பட்டான் அவன். கையில் லேசான எலும்பு முறிவு இருக்க உடல் முழுவதும் சிராய்ப்பு காயங்கள் வேறு. உடல் வழியும் அதிகமாகவே இருக்க, மருத்துவர் சொன்னவுடன் அட்மிட் ஆகிவிட்டான்.

ஆனால் சக்திக்கு தெரிந்தால் பதறி விடுவாள் என்பதால் தாத்தாவிடம் சொல்லி சமாளிக்க சொல்லி இருந்தவன் காலையில் மண்டபத்திற்கு சென்றுவிடும் எண்ணத்தில் தான் இருந்தான். ஆனால் நேற்றை விட உடல் வலி அதிகமாக இருக்க, மருத்துவர்கள் கொடுத்திருந்த மருந்துகளின் விளைவால் நன்றாக உறங்கி விட்டிருந்தான். தாத்தாவிடம் சொல்லி கொள்ளலாம் என்று அவன் அங்கேயே இருக்க, மனோஜ் சொதப்பி வைத்திருந்தான் அவன் திட்டத்தை.

சக்தி செவ்வியுடன் நின்றிருந்தவள் சுற்றிலும் பார்த்துக்கொண்டு நின்றிருக்க, அந்த நேரம் அந்த மண்டபத்திற்குள் ஆங்காரியாக நுழைந்து கொண்டிருந்தார் மங்கையற்கரசி. நந்தினி காலை கண்விழித்தவள் செய்த முதல் காரியம் அங்கே பணியில் இருந்த செவிலியிடம் மொபைலை வாங்கி தன் அன்னைக்கு அழைத்தது தான்.

அங்கு இருந்தவர்களிடம் விசாரித்து நேற்று நடந்ததை தெரிந்து கொண்டவளுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது சக்தியின் மேல். தான் இந்த நிலையில் இருந்தும் கூட யாரிடமும் சொல்லாமல் தன்னை சிறை வைத்தது போல் இங்கு அவள் விட்டு சென்றிருக்க தாங்கவே முடியவில்லை அவளால்.

தான் செத்தாலும் இந்த திருமணம் நடப்பது முக்கியமா ? என்று யோசிக்க, இப்போது திருமணமே முடிந்திருக்கும் என்று உணர்ந்தவளுக்கு அடுத்து என்ன என்பது புரியவே இல்லை. அத்தனை அழுகை வர அந்த செவிலியின் அலைபேசியில் இருந்து தன் அன்னைக்கு அழைத்தவள் அவரிடம் நேற்று தான் செய்த காரியத்தை கூறி அழுதவள் அடுத்து சக்தி செய்து வைத்ததையும் முழுவதும் அவள்மீது தான் குற்றம் என்பதுபோல் சொல்லி முடிக்க

மங்கையும் “என் மகள் உயிர்க்கு போராடிக் கொண்டிருக்க,அதைக்கூட யாரிடமும் சொல்லாமல் விட்டுவிட்டு திருமணத்திற்கு சென்றுவிட்டாளா இவள் ? என்ன நினைத்து விட்டாள் என் மகளை ?? என் மகளின் உயிர் போயிருந்தால் என்று யோசித்தவருக்கு கண்களை இருட்டியது.

சக்தி மீது அத்தனை ஆத்திரம் வந்தது அவருக்கு. எல்லாம் அந்த கிழவி கொடுக்கிற இடம். என் பிள்ளை கையாள  தாலி வாங்கிகிட்டு என் மகளை பார்க்காம இவ கல்யாணத்துக்கு போய்டுவாளா. என்கிட்டே சொல்லி இருந்தா கூட இதையே சொல்லி என் அண்ணன் கால்ல விழுந்தாவது என் மக கல்யாணத்தை முடிச்சிருப்பேனே. பாவி பாவி….. இப்படி யார்கிட்டயும் சொல்லாம மூடி மறைச்சு என் குடியை கெடுத்தாளே ” என்று அப்போதும் சக்தியை முழு குற்றவாளியாக்கி இருந்தார் மங்கை.

அந்த கோபத்தில் தான் அவர் மண்டபத்திற்கு வந்தது. வந்தவர் நேராக சென்று நின்றது சக்தியிடம் தான். அவள் கையை முழங்கைக்கு மேலாக பற்றியவரின் தோற்றம் சக்திக்கு அதிர்ச்சியை தர அப்படியே நின்றுவிட்டாள் அவள்.

தலை முடி அவிழ்ந்து தொங்க, வீட்டில் கட்டிக் கொண்டிருந்த கசங்கிய புடவையோடும், முகம் முழுவதும் அழுததில் சிவந்து வீக்கமாக காணப்பட அவரை இதற்குமுன் இப்படி பார்த்ததே இல்லை அவள்.அந்த அதிர்ச்சியில் அவள் இருக்க, அந்த நொடியை பயன்படுத்திக் கொண்டவர் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்.

அதோடு விடாமல் அவள் தலை முடியை பற்றி கொண்டவர் “என் குடியை கெடுக்க வந்த கோடாலிக்காம்புடி நீ. என் மகளை கொல்ல பார்த்தியே” என்று கத்த வேறு செய்யவும், அங்கிருந்த அனைவரும் ஸ்தம்பித்து நிற்க, வேந்தன் வேகமாக இறங்கி இருந்தான் மேடையில் இருந்து.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement