Advertisement

அத்தியாயம் 21

 

               வேந்தன் அவளைசெவ்விஎன்று அழைக்கவும் அதுவரை இருந்த நிலை மாறி,அவள் கண்ணீர்விட பதறித்தான் போனான் அவன். “ஹேய் செவ்வி, என்ன என்ன பண்ணுது உனக்கு. ஏன் அழற, எங்கேயும் வலிக்குதா, மதிய கூப்பிடவாஎன்று அவன் கேட்டுக்கொண்டே எழவும், அவளும் உடன் எழுந்து கொண்டவள்

 

        “என்கூட வா வேந்தா.” என்று அவனை அழைத்துக் கொண்டு அவன் அறையை நோக்கி நடந்தாள். இவர்களை தூரத்தில் இருந்து கவனித்துவிட்ட மதிமாறன்இன்னிக்கு என்ன பண்ணான்னு தெரியலையேஎன்று தம்பியை திட்டிக்கொண்டே இவர்கள் அருகில்வர சக்தியும் இவர்களை பார்த்திருந்தவள் செவ்வியின் அருகில் வந்தாள்.

 

           செவ்வி மணமகன் அறைக்குள் நுழைந்தவள் அங்கிருந்த வேந்தனின் நண்பர்களை பார்த்து திணற, வேந்தன் அவர்களை வெளியே இருக்குமாறு கண்ணை காட்டவும் அனைவரும் வெளியேறிவிட, அதற்குள் மதிமாறனும்,சக்தியும் அங்கு வந்து சேர்ந்திருந்தனர்.

 

       இருவரும் ஒரே சமயம் அறைக்குள் நுழைய, செவ்வி ஓய்ந்து போய் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தவள் தன் கையில் இருந்த மொபைலை மூவர் முன்பும் காட்ட, என்ன என்பதுபோல் தான் பார்த்தனர் ஆண்கள்.சக்திக்கு அவள் முகத்தில் இருந்த உணர்வுகளால் என்னவோ என்று பயம் வர அருகில் வந்தவள்என்னடி என்ன ஆச்சு. எதுக்கு இந்த மொபைலை கொடுக்கிறஎன்று கேட்கும்போதே அந்த மொபைலை ஆன் செய்து காட்டியவள் சக்தியின் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டு கதறி விட்டாள்.

 

         அத்தனை நேரம் அன்னையாக இருந்து மதியை தேற்றியவள் இங்கு தன் நட்புகளிடம் வாய்விட்டு கதற ஆரம்பித்திருந்தாள். சக்தி அந்த மொபைலை பார்த்தவள் சிலையென நிற்க, வேந்தனும்,மதிமாறனும் கூட அருகில் வந்து பார்த்தவர்கள் பதறித்தான் போனார்கள். சக்தி ஒருவார்த்தை கூட பேசவும் இல்லை, யார் முகத்தையும் நிமிர்ந்துகூட பார்க்கவில்லை அவள்.

 

            மாறாக மதிமாறன் தான் செவ்வியிடம்யார் பண்ண வேலை இது செவ்வி ? யார்  அனுப்பியது இதை ? என்று அதட்டி கொண்டிருக்க, செவ்வி கண்ணீரோடு நடந்ததை அவனிடம் கூறி முடித்தாள். மதிமாறன்எவனுக்கு இத்தனை தைரியம் வந்தது ? அதுவும் நம்ம வீட்டு பேரை கெடுக்க துணிஞ்சிருக்கானுங்க. என்ன நடக்குதுன்னு நானும் பார்க்கிறேன்.கையில கிடைக்கட்டும் அப்புறம் இருக்கு இவனுங்களுக்குஎன்றவன் கோபமாக வெளியேற முற்பட

 

              வேந்தன் என்றும் இல்லாத நிதானத்தோடுவெளியாளுங்களா இருந்தா நீ எல்லாம் பண்ணுவ.செஞ்சது உன் குடும்பத்து ஆளுங்களா இருந்தா.உன் பாசக்கார அத்தையோட மகளா இருந்தா, ஏன் உன் அத்தையே கூட செஞ்சிருக்கலாம். ஏன்னா எதுக்கும் துணிஞ்சவங்க தான் உன்னோட அத்தை.”

 

       வேந்தனின் வார்த்தைகளில் மதிமாறன் அப்படியும் இருக்குமோ என்று யோசிக்க, செவ்வியோகடவுளே இப்படியும் செய்வார்களா இவர்கள். என்ன பெண்கள் இவர்கள். வேந்தன் சொல்வதை போல் செய்திருப்பார்களோ  ” என்று மருகியவள்  கண்ணீர் விட, சக்தி இன்னும் தெளியவே இல்லை.

 

              வேந்தன் அவளை அப்படி பார்க்க முடியாமல் அவள் தோளை தொட்டு அசைக்க, அதில் லேசாக தெளிந்தவள் வேந்தனை நிமிர்ந்து பார்த்தாள். அவன்என்ன ஆகிடுச்சுன்னு நீ இப்படி இருக்க சக்தி. உனக்கு ஆதியை பத்தி தெரியாதாஎன்று கேட்க, அவனை முறைத்தவள் எதுவும் பேசாமல் தன் மொபைலை எடுத்து ஆதித்யனை அழைத்தாள். அவன் எடுக்காமல் போகவும் மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டிருக்க அவளது ஒரு அழைப்பை கூட அவன் ஏற்கவே இல்லை.

 

                            அவன் எப்போதும் இப்படி இருந்ததில்லை என்பதால், லேசான பதட்டம் அவளை தொற்றிக்கொள்ள  மீண்டும் முயன்றாள்.ஆனால் இப்போதும் அவன் எடுக்காமல் விட, எழுந்து விட்டாள்.” நான் வீட்டுக்கு போயிட்டு வரேன் செவ்வி, அவர் இந்நேரம் வந்திருக்கணும். ஆனா இப்போ வரைக்கும் இங்கேயும் வரல, போனையும் எடுக்கலஎன்றவள் “நான் என்னன்னு பார்க்கணும். கிளம்புறேன் செவ்வி ” என்றுவிட்டு கிளம்பிவிட்டாள். மதிமாறன் அவளை தடுத்து தானும் உடன் வருவதாக கிளம்ப, சக்தி அவனை மறுத்து விட்டு கிளம்ப முற்பட வேந்தன் அவலுடன் கிளம்பினான். அதிர்ந்து போனவள் “இளா நீ எங்கே கெளம்புற. இன்னும் கொஞ்ச நேரத்துல நிச்சயம், என்ன விளையாடறியா. ஒழுங்கா இங்கேயே இரு ” என்று அவனை தவிர்க்க பார்க்க

 

                     “நீதான் சக்தி விளையாடிட்டு இருக்க. இன்னும் கொஞ்ச நேரத்துல நிச்சயம் அவன் இன்னும் வந்து சேரல,போனையும் எடுக்கல. இப்போ நீ தனியா கிளம்பினா உன்னை எப்படி விட முடியும். என்கூட வா, நாம என்னன்னு பார்த்திட்டு வருவோம். இல்லேன்னாலும் இவங்க என் நிச்சயத்தை முடிச்சிக்கட்டும். தாமரை புரிஞ்சிப்பா, நீ வா ” என்று அவன் கிளம்ப, சக்தி எத்தனை மறுத்தும் கேட்கவே இல்லை அவன்.

 

                 வெளியில் அமர்ந்திருந்த வேதமாணிக்கமும் சிவகாமியும் பேத்தியின் முகத்தை வைத்தே ஏதோ சரி இல்லை என்று கணிக்க, கந்தகுரு மருமகளின் அருகில் வந்திருந்தார். என்ன ஏதென்று அவர் விசாரிக்கவும் சக்தி அவரிடம் விவரம் கூறியவள் கிளம்ப அவரும் வேந்தனை போக வேண்டாம் என்று சொல்லி பார்த்தார்.

 

                 ஆனால் அவன் யாருடைய பேச்சையும் காதில் வாங்காமல் சக்தியுடன் கிளம்பி விட்டான். இருவரும் பெரிய வீட்டிற்கு முதலில் செல்ல, அங்கே நந்தினி வீட்டில் இருந்ததால் வீடு திறந்தே இருந்தது. சக்தி வேகமாக வீட்டை ஆராய ஆதித்யன் வந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை அங்கே.

 

            இருப்பினும் தன் அறை வரை சென்று ஒருமுறை பார்த்தவள் மீண்டும் அவன் மொபைலுக்கு அழைக்க,இப்போதும் அது முழுதாக அடித்து ஓய்ந்ததே தவிர யாருமே அதை எடுக்கவே இல்லை. சக்திக்கு ஏதோ ஒரு பயம் நெஞ்சை கவ்வ, கண்களில் கண்ணீர் பெருகியது.

 

         எப்போதுமே இப்படி செய்பவன் இல்லை என்பதால், எப்படி எடுத்துக் கொள்வது இதை என்று கூட தெரியவில்லை அவளுக்கு.அவள் கண்ணீரோடு கீழே இறங்கிவர, வேந்தன் அவள் கண்ணீரில் பதறியவனாக அருகில் வர ” அவர் வீட்டுக்கும் வரல இளா, மண்டபத்துலயும் இல்ல.போனையும் எடுக்க மாட்றாரு. பயமா இருக்கு ” என்று அவள் கூற இளவேந்தன் அவள் தலையில் கைவைத்து “ஹேய் இம்சை, அவனுக்கு ஒன்னும் இருக்காது. போனை வண்டில வச்சிட்டு எவனையாவது விரட்டிட்டு இருப்பான். அவன் வேலைல இதெல்லாம் சாதாரணம்.இதுக்கெல்லாம் பயந்திட்டு இருப்பியா “என்று கூறினாலும் “இப்படி பண்ணமாட்டானே ” என்று தான் அவன் மண்டையிலும் ஓடிக் கொண்டிருந்தது.

 

       திடீரென ஞாபகம் வந்தவனாக “நந்தினி எங்கே. வீட்ல தான இருக்கான்னு சொன்னாங்க” என்று கேட்க சக்தி “அவ அவளோட ரூம்ல இருப்பா.” என்று உரைக்க, செவ்வியின் கண்ணீர் வடிந்த முகம் முன்னால் வர சக்தியை அழைத்துக் கொண்டு அவள் அறைக்கு சென்றான் வேந்தன். அவள் கையில் கிடைத்தால் அவளை ஒருவழி செய்துவிடும் எண்ணத்தில் தான் அவன் உள்ளே நுழைந்தது.

 

        ஆனால் உள்ளே நுழைந்த இருவரும் ஒரு நொடி அதிர்ந்து தான் நின்றுவிட்டனர் அவள் இருந்த நிலையை கண்டு. அங்கே அவள் காலையில் பாட்டியின் அறையில் இருந்து எடுத்து வந்திருந்த தூக்க மாத்திரை குப்பி கீழே உருண்டிருக்க, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் நந்தினி.

 

                 தான் செத்தாலும் தாமரை வேந்தனோடு வாழக் கூடாது என்று முடிவு செய்திருந்தவள் தன் திட்டத்தில் அடுத்த அடியை எடுத்து வைத்திருந்தாள். அவள் சுயநினைவை இழந்து கட்டிலில் கிடக்க பார்த்தவுடனே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டனர் இருவரும்.

 

            சக்திக்கு ஆதித்யனை பற்றிய கவலை பின்னே போக, பதறி போனவளாக அவள் அருகில் சென்றவள் அவள் கையை பிடித்து அவளை சோதித்து பார்க்க, அவளின் நாடித்துடிப்பு சற்று பலவீனமாகவே இருந்தது புரிந்தது அந்த மருத்துவச்சிக்கு. அவளின் நிலை சற்று மோசமாகவே இருக்க, தாமதிக்காமல் அவளுக்கு முதலுதவி செய்தவள் வேகமாக செயல்பட்டாள்.

 

           அவளை காரில் ஏற்றி கொண்டு இருவரும் மருத்துவமனையை அடைய, அங்கே சக்தி பரிட்சையமானவள் என்பதால் வேகமாக சிகிச்சை நடந்தது. சக்தியும் மருத்துவர்களோடு இணைந்து கொள்ள கிட்டத்தட்ட மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவளை மீட்டிருந்தனர் மருத்துவர்கள்.

 

          ஆனாலும் அவள் ஆழ்ந்த மயக்கத்திலேயே இருக்க, சக்தி வெளியே வந்து பார்க்க வேந்தன் இன்னமும் அந்த மருத்துவமனையின் காரிடாரில் அமர்ந்திருந்தான். சக்தி வேந்தனிடம் வந்தவள் “ஒன்னும் பிரச்சனை இல்ல இளா.இப்போ ஓகேதான், மயக்கத்துல இருக்கா.” என்று கூற

 

            வேந்தன் சக்தியை நிமிர்ந்து பார்த்தவன் முகத்தில் அத்தனை கோபம் இருந்தது. அவன் கோபத்தில் திகைத்து போனவளாக “என்னாச்சு இளா. ஏன் இப்படி இருக்க” என்று கேட்க

 

             வீட்டில் கட்டிலின் அருகே மேசைமீது இருந்து எடுத்திருந்த மொபைலை ஆன் செய்து அவன் காண்பிக்க,, அதில் மதியழகியின் மொபைலில் இருந்த அத்தனை புகைப்படங்களும் இருந்தது. என்ன எண்ணத்தில் மொபைலை லாக் செய்யமல் விட்டிருந்தாளோ ? ஆனால் இந்தக்கணம் அதுவே அவளுக்கு வினையாக மாறி போனது.

 

                கண்டிப்பாக பிழைக்கமாட்டோம் என்று தெரிந்தே திட்டமிட்டே அவள் அனைத்தையும் செய்திருக்க, அவள் திட்டத்தின் ஒரு படியாக தான் அந்த புகைப்படங்களை அழிக்காமல் விட்டதும். எப்படியோ இவர்களை வாழ விடாமல் செய்ய வேண்டும் என்று வன்மத்தோடு அவள் நினைத்திருக்க அவளின் கெட்ட நேரமோ அல்லது நல்ல நேரமோ இவர்கள் இருவரும் அவளை காப்பாற்றி இருந்தனர்.

 

                 உள்ளே சுய நினைவே இல்லாமல் அவள் துவண்டு கிடக்க அந்த நிலையிலும் அவள் மீது இரக்கம் வரவில்லை இருவருக்கும். வேந்தன் வெளிப்படையாகவே “இவளை எல்லாம் சாகட்டும்ன்னு விட்டுட்டு நாம கிளம்பி இருக்கனும் சக்தி. சொந்த அண்ணன் பேர் கேட்டு போகுதேன்னு கூட ஒருத்தி யோசிக்க மாட்டாளா ?? மதி என்ன செஞ்சா இவளை ? என்னை பழிவாங்க அவ வாழ்க்கை தான் கிடைச்சிதா ? அவ என்ன சாகுறது நானே அவளை என் கையால கொன்னுடறேன் சக்தி. நீங்க எல்லாம் நிம்மதியா இருங்க. இன்னியோட முடிச்சிடறேன் அவ கதையை.” என்றவன் இருக்கையிலிருந்து எழுந்துவிட சக்தி அவன் கையை பிடித்து தடுத்தவள் அவனை மீண்டும் அதே இருக்கையில் அமர்த்தினாள்.

 

                      “அவ இதெல்லாம் பண்ணது மதியை பழிவாங்க இல்ல. தாமரையோட வாழ்க்கையை கெடுக்க, அது எப்பவும் நடக்கக்கூடாது இளா. இந்த கல்யாணம் நடந்தே ஆகணும். அவளை கொன்னுட்டு நீ ஜெயிலுக்கு போனா அங்கே ஒருத்தி உன்னை எதிர்பார்த்திட்டு இருப்பாளே.அவளுக்கு என்ன பதில் சொல்லுவ.

 

            நீ மொதல்ல கெளம்பு, நீ இங்க இருக்க வேண்டாம். இவ இப்படி இருக்கான்னு யார்கிட்டேயும் சொல்லாத. இந்த கல்யாணம் குறிச்ச நேரத்துல நடந்தே ஆகணும். நீ போ.” என்று அவனை விரட்ட

 

             “ஹேய் என்ன விளையாடறியா. நாந்தான் உன்னை கூட்டிட்டு வந்தேன். இப்போ தனியா எப்படி போக முடியும். நீ எங்கே ன்னு கேட்டா என்ன சொல்வேன் நான்” என்று வேந்தன் அதற்கும் கோபப்பட

 

           சக்தி யோசித்தவள் மீண்டும் ஆதித்தனுக்கு அழைத்து பார்ப்போம் என்று அவன் எண்ணுக்கு முயற்சிக்க அது இப்போதும் எடுக்கப்படவில்லை. சக்திக்கு அதுவேறு பதட்டத்தை கொடுக்க,இப்போதைக்கு வேந்தனை மண்டபத்திற்கு அழைத்து செல்வது முக்கியமாக பட, நந்தினியை பார்த்துக்கொள்ள ஒரு செவிலியை ஏற்பாடு செய்தவள் மண்டபத்திற்கு புறப்பட்டாள் அவனுடன்.

           அவள் கண்கள் நொடிக்கு ஒருமுறை மொபைலை தொட்டு மீள, ஆதித்யன் ஏன் போனை எடுக்கவில்லை என்பதே ஓடிக் கொண்டிருந்தது மனம் முழுவதும். இருவரும் ஒருவழியாக மண்டபத்தை அடைய, அங்கே வாசலில் இவர்களுக்காக காத்திருந்தனர் மதிமாறனும், தனஞ்செயனும்.

 

               நிச்சயம் முடிந்து இரவு உணவுக்கான பந்தி முடிந்திருக்க அப்போது தான் வந்து சேர்ந்தனர் இருவரும். மாலை நிச்சயத்தின் போதே பெரியவர்கள் வேந்தனை அத்தனை திட்டி இருக்க, தனஞ்செயனும் அத்தனை கோபத்திலிருந்தான் அவன் மீது. அவன் வராமல் தான் மட்டும் மேடையேற விரும்பவில்லை அவன் மனம்.

 

              நிச்சயத்தை நீங்களே முடித்து விடுங்கள் என்று பெரியவர்களிடம் கூறி அவன் மேடையேற மறுத்துவிட, தாமரை தான் அவனை சமாதானம் செய்து ஒருவழியாக சரிக்கட்டி இருந்தாள்.

 

          தாமரைக்கு வேந்தனின் மீது லேசான வருத்தம் தவிர வேறு எந்த கோபமும் வரவில்லை. ஏனோ வேந்தன் வேண்டுமென்று செய்திருப்பான் என்று அவளுக்கு தோன்றவே இல்லை. மாறாக என்ன ஆனதோ ? ஏதும் பிரச்சனையா என்று மனம் அதிலேயே உழன்று கொண்டிருந்தது 

           அவளுக்கு வேந்தன் மீது துளிகூட சந்தேகமோ, கோபமோ வராதது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தாலும், தன் கவலை ஒதுக்கி தன் அண்ணனின் நிச்சயத்தை நல்லபடியாக முடித்து வைத்திருந்தாள் பெண். அதன் பிறகே செவ்வியை குடைந்து அணைத்து விஷயங்களையும் வாங்கி கொண்டவளுக்கு நிச்சயம் மறந்தே போனது அவளின் நிச்சயம்.

 

          மதிக்காக கவலைப்பட்டவள் தன் அண்ணனின் குணம் நினைவுக்கு வர தெளிந்து விட்டாள். ஆனால் ஆதித்யன் அண்ணாவுக்கு என்ன ஆனது என்பதே அவள் கவலையாக இருக்க, அவள் அறையில் அமர்ந்து விட்டிருந்தாள் அவள்.   

              இங்கு வாசலில் நின்றிருந்த தனஞ்செயனிடம் மதிமாறன் அனைத்து விவரங்களையும் ஏற்கனவே தெரிவித்து இருக்க, அவன் கோபம் மறைந்து ஆதித்யன் எங்கே சென்றிருப்பான் என்பதே ஓடிக் கொண்டிருந்தது அவன் மண்டையிலும். இவர்களை பார்க்கவும் இருவரும் ஒரே நேரத்தில் “ஆதி எங்கேன்னு தெரிஞ்சிதா ” என்று கேட்க

 

               அவன் இதுவரையிலும் மண்டபத்திற்கு வரவில்லை என்பது சக்திக்கு தெளிவாகி போக, கண்கள் கலங்கிய விட்டது அவளுக்கு. வேதமாணிக்கம் அந்த நேரம் அங்கே வந்தவர் என்ன என்று விசாரிக்க அவரிடம் சக்தி நடந்த அனைத்தையும் கூறி முடிக்க,நந்தினியின் செயலில் தீராத வெறுப்பு இருந்தாலும் உயிரை விட துணிந்தாளே என்று கவலை தான் அதிகமானது அவருக்கு.

 

            தனஞ்செயன் அருகில் இருப்பதால் அந்த புகைப்பட விவரம் பெரியவரிடம் சொல்லப்படவில்லை. நந்தினியின் கவலையில் துவண்டவர் எதிரே இருக்கும் செல்லப்பேத்தியின் கண்ணீர் முகம் கண்ணில்பட “அவன் லேட்டாத்தான் வருவேன்னு சாயங்காலம் கிளம்பும்போதே சொல்லிட்டு தான் போனான் சிவாம்மா.  உன்கிட்ட சொன்னா சத்தம் போடுவேன்னு சொல்லாம போய்ட்டான். எனக்கும் அப்போவே சொல்லிட்டு தான் கிளம்பினான்.” என்று கூற

 

         “அப்போ ஏன் தாத்தா என்னோட போன் எடுக்கல” என்று அவள் அப்போதும் சந்தேகமாக கேட்க

“முக்கியமான வேலை போன் கையில இருக்காதுன்னும் சொன்னான் மா. சொல்லிட்டு தான் கிளம்பினான்.” என்று அடித்து கூறினார் அவர். அவரின் பதிலில் சக்திக்கு லேசான நம்பிக்கை தோன்ற அனைவரும் மண்டபத்திற்குள் நுழைந்தனர்.

          நந்தினியின் விஷயம் யாருக்கும் சொல்லப்பட வேண்டாம் என்று முடிவு செய்திருக்க, மண்டபத்தில் யாருக்கும் அவள் மருத்துவ மனையில் இருப்பதே தெரியாமல் போனது.

 

         

 

 

 

 

 

 

 

 

 

      

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

              

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement