Advertisement

அத்தியாயம் 20

 

            விடிந்தால் இளவேந்தன்- தாமரை செல்வியின் திருமணம் என்ற நிலையில் இந்த நிமிடம் வரை நந்தினியால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இவர்களின் திருமணத்தை நிறுத்துவதற்காக மதியழகியின் வாழ்வை அவள் குறி வைத்திருக்க அதற்கும் இதுவரை எந்த எதிர்வினையும் இல்லாமல் போனது. என்ன செய்வது ? என்ன செய்வது ? என்று யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

 

          அவள் சொன்னபடி புகைப்படங்களை மார்பிங் செய்து அனுப்பி விட்டதாக மகேஷ் ஏற்கனவே அழைத்து சொல்லி இருக்க, நிச்சயம் திருமணம் நிற்கும் என்று நம்பியிருந்தாள் அவள். அந்த புகைப்படங்களை மகேஷ் அவளுக்கும் அனுப்பி வைத்திருக்க அதை பார்த்தவளுக்கு தன் அண்ணனும், தோழியும் தெரியவில்லை…….. மாறாக அவளது வன்மம் மட்டுமே மேலோங்க அதற்கு அத்தனை தத்ரூபமாக வடிவம் கொடுத்திருந்தான் அவன்.

 

           அதன் உண்மைத்தன்மை மீது சந்தேகமே வராதபடி அத்தனைச் சரியாக அமைந்திருந்தன அந்த புகைப்படங்கள். அந்த புகைப்படங்களின் மீது இருந்த நம்பிக்கையில் இவள் வேறு எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்க, ஏனோ இன்றுவரை அவள் எதிர்பார்த்தபடி எதுவுமே நடக்கவில்லை.

 

          அதில் இன்னும் கொதித்தவள் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்க, மாலை நேரம் தொடங்கிய அந்த வேளையில் வீட்டில் யாருமே இல்லை அவளுடன். அனைவரும் மண்டபத்திற்கு கிளம்பி சென்றிருக்க, ஆதித்யன் இன்னும் அலுவலகத்திலிருந்து வந்திருக்கவில்லை.

 

             யோசித்துக் கொண்டே இருந்தவளுக்கு அப்போது தான் அந்த விபரீத யோசனை தோன்ற, மகேஷ் மூலம் வாங்கி வைத்திருந்த சிம்மை தன் மொபைலில் பொருத்தி தனக்கு மகேஷ் அனுப்பிய புகைப்படங்களை மதியழகிக்கு அனுப்பி வைத்தவள் மேலும் “இந்த கல்யாணத்திற்கு ஆசைப்பட்டு அசிங்கப்பட வேண்டாம் ” என்றும் அவளுக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பிவிட்டு காத்திருந்தாள்.

 

              மதியழகியை பற்றி அவள் அறிந்தவரையில் மிகவும் பயந்த சுபாவம் உள்ளவள். இதுபோன்ற விஷயத்தில் தைரியமானவர்களே தடுமாறுவர்.அப்படி இருக்க மதியழகி நிச்சயம் பயப்படுவாள் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டாள். திருமணத்திற்கு இன்னும் ஒரே இரவு மட்டுமே மீதி இருக்க அவர்களால் அதற்குள் அவளை சரிக்கட்ட முடியாது என்று வேகமாக திட்டமிட்டு அதை செயல்படுத்தியும் இருந்தாள் அவள்.

 

                    மேலும் அவள் அன்னைக்கு அழைத்தவள் “என்னம்மா உன் அண்ணன் மக கல்யாணம் சிறப்பா நடக்குது போல.நீ இன்னும் கிளம்பலையா ” என்று கேட்க

 

                 “நந்தும்மா.. நான் எப்படி டா போவேன்.என் பொண்ணை கலங்க வச்சிட்டு நான் அந்த கல்யாணத்துல கலந்துப்பேனா.அம்மாவுக்கு உன்னைவிட இந்த உலகத்துல யாருமே முக்கியம் இல்லடா. நீ கூட அம்மாவை புரிஞ்சிக்க மாட்டியா” என்று கண்ணீர் விட

 

             நந்தினி தானும் கலங்கியவள் “எனக்கு வேந்தன் மாமா வேணும்ம்மா. என்னால அவரை யாருக்கும் விட்டு கொடுக்க முடியாது. அந்த தாமரை அவர் வாழ்க்கையில நுழைஞ்சிட்டா நீ என்னை உயிரோடவே பார்க்க முடியாதும்மா. நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது.இந்த கல்யாணம் நடக்கக்கூடாது ” என்று அவள் கத்தவும் “ஐயோ நானே என் பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ணிட்டேனே ” என்று அவரும் அழுதவர்

 

           “நந்தினி அவன் உனக்கு வேணாம்மா.அம்மா உனக்கு அவனைவிட அருமையா பணக்காரனா உனக்கு ஏத்தவனா பார்க்கிறேன் மா. நீ நல்லா இருப்ப டா. அவனை நெனச்சி ஏதும் கிறுக்குத்தனம் பண்ணி வைக்காத நந்துமா.” என்று கண்ணீர் விட

 

             “அப்போ… அப்போ நீயும் எனக்கு ஹெல்ப் பண்ணமாட்ட இல்ல. இது நடக்கக்கூடாதும்மா. நான் விடமாட்டேன். வேந்தன் எனக்கு மட்டும்தான்மா. நீதான சொன்ன அவன்தான் உன்னை கட்டிக்க போறான்னு. என்னை கட்டிக்க சொல்லு. அவ என் வேந்தனோட வாழவே கூடாதும்மா” என்று கத்தியவள் கடைசியில் அழுகையை தொடங்க

 

                  மங்கை அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அவரும் அழுதார். அவரை மேலும் மிரட்ட நினைத்தவள் ” இந்த கல்யாணம் நடக்க கூடாதும்மா. வேந்தன் என்னைத்தவிர யாரோடவும் வாழக்கூடாது.அப்படி ஒன்னு நடந்தா உன்மக உயிரோட இருக்கமாட்டா.” என்றுவிட்டு அலைபேசியை அவள் அணைத்து விட்டாள்.

 

             மங்கை இப்படி ஒரு சூழல் உருவாகும் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. அவரின் பிறந்தகம் என்றும் அவரை கைவிட்டு விடாது என்று அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார் அவர் எப்போதும். ரங்கநாயகி வந்தபிறகு கூட அவர் பெரிதாக மங்கையின் விஷயங்களில் தலையிட்டதே இல்லை என்பதால் அப்போதும் மங்கையின் கை ஓங்கியே இருந்தது தன் அண்ணனின் வீட்டில்.

 

            ஆனால் இளவேந்தன் அத்தனையையும் உடைத்து எறிந்தான்.அவரின் நம்பிக்கையை  அடித்து தூளாக்கியவன் செவ்வந்தி திருமணத்தின் போதே மறுப்பு தெரிவித்ததை நந்தினி மூலம் அறிந்திருந்தார் மங்கை. சரியாகி விடுவான் என்று அவர் நினைத்திருக்க அவனோ அவர் நினைத்ததிற்கு மேலாக தாமரையை விரும்புகிறேன் என்றுவிட்டான்.

 

          அப்போதும் என் மகளை விட எந்த வகையில் அவள் உசத்தி என்ற எண்ணம் தான் மங்கைக்கு. அதே எண்ணத்தில் தான் வேந்தனை மயக்கிவிட்டதாக கூறி அவள் வீட்டின் முன்பு நின்று கத்தியதும் கூட.மேலும் இப்படி அசிங்கப்படுத்தினால் தான் தன் மகளின் வாழ்வில் குறுக்கிடமாட்டாள், அவள் குடும்பமும் ஒதுங்கி கொள்ளும் என்று தான் திட்டம் போட்டிருந்தார் அவர்.

 

             ஆனால் அவர் திட்டம் அவருக்கு எதிராகவே திரும்பிவிட அதுவரை வேந்தன் மட்டுமே பேசிக்கொண்டிருந்த திருமண விஷயம் அனைவராலும் கையில் எடுக்கப்பட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டது. அதுவே அவருக்கு அதிர்ச்சி என்றால் தன் அண்ணன்கள் தன்னை அடியோடு ஒதுக்கிவிட்டதும், அண்ணி கைநீட்டி அடித்ததும் அதற்கும் மேல்.

 

              இப்போது நாளை திருமணம் என்ற நிலையில் வந்து நின்றிருக்க, மகள் வேறு இப்படி மிரட்டி கொண்டிருக்கவும்  நிச்சயம் ஒன்றும் புரியாத நிலைதான் மங்கைக்கு. அவர் செய்த பாவங்கள் அனைத்தையும் மறந்துவிட்டவர் இன்று மகளின் வாழ்க்கைக்காக கடவுளை வேண்டி கொண்டிருந்தார்.

 

              அங்கே பெரிய வீட்டில் அவர் மகளோ யாரையும் நிம்மதியாக விடுவதில்லை என்று முடிவு செய்திருந்தவள் தன் பாட்டியின் அறைக்குள் நுழைந்தாள். சிவகாமி பயன்படுத்தும் தூக்க மாத்திரை பாட்டிலை கைகளில் எடுத்துக் கொண்டவள் தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

                            

             அந்த மாத்திரைகள் அடங்கிய பாட்டிலை கைகளில் வைத்து பார்த்துக் கொண்டே அவள் அமர்ந்திருக்க, அங்கே மண்டபத்திலோ தன் மொபைலை கையில் வைத்துக் கொண்டு அதையே வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் மதியழகி.அதிலிருந்த புகைப்படங்கள் அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.

 

                 அன்று இரவு நிச்சயதார்த்தத்திற்கு நேரம் குறித்திருக்க, மாலையே குடும்பத்தினருடன் மண்டபத்தை அடைந்திருந்தாள் அவள். அழகு நிலைய பெண்கள் அவளை அழகுபடுத்தி முடித்திருக்க, தன் தோழிகளுடன் அமர்ந்திருந்தவள் எதேச்சையாக தன் அலைபேசியை கையில் எடுக்க அதில் முன்பின் தெரியாத ஒரு எண்ணில் இருந்து ஏதோ குறுந்தகவல் வந்திருக்க, யாராக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் அதை திறந்து பார்த்திருந்தாள்.

 

                அதில் இருந்த “இந்த கல்யாணத்திற்கு ஆசைப்பட்டு அசிங்கப்பட வேண்டாம் ” என்ற வார்த்தைகளை பார்த்து அதிர்ந்தவள் அதில் இருந்த புகைப்படங்களை பார்க்க அடுத்து என்ன செய்வது என்று புரியவே இல்லை அவளுக்கு.கண்கள் இருட்டுவதை போல் இருக்க, அலைபேசியை எடுத்துக் கொண்டவள் தோழிகளிடம் இருந்து விலகி அங்கிருந்த பாத் ரூமில் புகுந்து கொண்டாள்.

 

         மீண்டும் அந்த புகைப்படங்களை பார்த்தவளுக்கு  முடியவில்லை. ஆதித்யனின் அருகில் கூட இதுவரை நின்றது இல்லை அவள் அப்படி இருக்க,அவன் கைகளில் அவள் இருப்பதை போலவும், அவன் அவளை எங்கெங்கோ தொடுவதை போலவும் அந்த புகைப்படங்கள் மிகவும் கீழ்த்தரமாக இருக்க அதிலும் இவளது உடையும் ஆங்காங்கே விலகி இருப்பது போல் கேவலமாக இருக்க, நடுங்கித் தான் போனாள் அவள்.

 

            “கடவுளே! என்னால் தாங்கவே முடியவில்லையே. எனக்கு ஏன் இந்த நிலை ” என்று கேட்டுக்கொண்டவளுக்கு கட்டுக்கடங்காமல் அழுகை வர, அழ ஆரம்பித்தாள் அவள். அந்த நேரம் அவள் தோழி கதவை தட்ட முகத்தை துடைத்துக் கொண்டு கதவை திறந்தவளை கண்ட தோழி  அதிர்ந்து போனாள்.மணப்பெண் அதுவும் இன்னும் சிறிது நேரத்தில் நிச்சயத்திற்காக மேடையேற இருப்பவள் இப்படி அழுது சிவந்த கண்களோடு காணப்பட்டால் அவளும் தான் என்ன நினைப்பாள்.

           அவள் கண்ணீரை கண்டு அவள் பதறிப்போனவள் அவளை தள்ளிக் கொண்டு உள்ளேயே சென்றுவிட்டவள் ” என்ன ஆச்சு மதி. ஏன் புள்ள இப்படி இருக்க ” என்று கேட்க, மதி எதுவும் சொல்லாமல் மீண்டும் அழ, அவளோ அவள் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் ” நீ இங்கேயே இரு, வெளியே வராத ” என்றுவிட்டு தான் மட்டும் வெளியே வந்தவள் அவள் நெருங்கிய தோழிகள் இருவரை அழைத்து செவ்வியை அழைத்துவர சொன்னவள் மற்றவர்களிடம் மதி சேலையை மாற்ற வேண்டும், இப்போது குளித்துக் கொண்டிருக்கிறாள் என்று கூறவும் அவர்கள் ஏன் எதற்கு என்று கேள்வி எழுப்ப அவர்கள் காதில் ஏதோ கூறியவள் அவர்களை வெளியே இருக்க சொல்லி அனுப்பிவிட்டாள்.

 

          அனைவரும் வெளியேறவும் அந்த பாத்ரூமின் கதவை தட்டியவள் மதியழகி கதவை திறந்தவுடன் அவள் கைகளை பிடித்து இழுத்து வந்து கட்டிலில் அமர்த்தினாள். அதற்குள் செவ்வந்தி மற்றும் அவள் தோழிகள் வந்து சேர்ந்திருக்க அவர்கள் கதவை தட்டவும், செவ்வியின் உடல் தூக்கிப்போட்டது பயத்தில். அவளை பார்த்தவள் ஏன் இப்படி என்று யோசித்துக் கொண்டே கதவை லேசாக திறந்து பார்க்க, செவ்வியை கண்டவள் அவளுக்கு வழிவிட அவள் தோழியும் அவளோடு உள்ளே வந்தாள்.

 

 

             செவ்வி மதியழகியின் முகத்தை கண்டவள் பதறித்தான் போனாள்.”மதி என்னடாம்மா. என்னடா ஆச்சு ” என்று அவள் பதட்டமாக கேட்க, மதி அவளை வயிற்றோடு கட்டிக்கொண்டவள் அழுதுகொண்டே இருக்க, ” ஹேய் மதி என்ன ஆச்சு. எதுக்குடி இப்படி அழற ” என்று கேட்டவள் அவ தோழிகளிடம் கேட்க

 

       “நல்லா தான் இருந்தாக்கா. திடிர்னு பாத்ரூம்ல இருந்து அழுதுட்டு இருந்தா.அதனால தான் உங்களை கூப்பிட்டேன்.” என்று அவள் சொல்லிவிட

 

        “மதி ” என்று அவளை அழைத்தவள் அவள் நிமிராமல் போகவும், தன்னிலிருந்து அவளை பிரித்து வலுக்கட்டாயமாக அவள் கையை முழங்கைக்கு மேலாக பற்றி ஒரு உலுக்கு உலுக்கினாள்.

 

        “அறைஞ்சிடுவேன் மதி.எதுக்கு இப்போ அழற ” என்று அதட்டி கேட்கவும்,மீண்டும் அழுதவள் அழுகையுடன் தன் கையில் இருந்த மொபைலை செவ்வியிடம் கொடுத்தாள்.செவ்வி ஒன்றும் புரியாமல் ” என்ன என்ன இதுல.எதுக்கு அழற ” என்று கேட்க அதிலிருந்த குறுஞ்செய்தியை திறந்து அவளிடம் காட்டினாள் மதியழகி. மேலும் அதனோடு வந்திருந்த புகைப்படங்களை கண்ட செவ்விக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவளுக்கும் கண்கள் கலங்கி போனது.அதுவும் தன் அண்ணனோடு மதியின் புகைப்படங்களை யாருக்கு இந்த தைரியம் வந்தது? அண்ணனுக்கு தெரிந்தால் என்ன செய்வான் என்று யோசித்தவளுக்கு அப்போது தான் மதியின் நினைவு வர, அவளை தேற்றுவதே இப்போது முக்கியம் என்று உணர்ந்தவள் அந்த மொபைலை அணைத்து தன் கையில் வைத்துக் கொண்டாள்.

 

            மதியை எழுப்பி இழுத்து சென்றவள் “முகத்தை கழுவு ” என்று அதட்டினாள்.மதி மீண்டும் அழவும் ” எதுக்கு அழற. அந்த போட்டோல இருக்கமாதிரி எப்போவாவது நெனச்சி பார்த்திருக்கியா நீ ? என்று அவள் அதட்டலாகவே கேட்க,கண்ணீருடன் மறுப்பாக தலையசைத்தாள் மதியழகி.

 

              “அவ்ளோதான். அப்புறம் எதுக்கு அழுதிட்டு இருக்க.நீ கனவுல கூட நினைக்காத ஒரு காரியத்தை நீ செஞ்சதை சொல்லி ஏதோ ஒரு நாய் சொன்னா அதை நீயே நம்பிட்டு அழுதிட்டு இருப்பியா? இதோட இந்த விஷயத்தை மறந்துட்டு உன் கல்யாணத்தை பார்க்கிற. புரிஞ்சிதா.?

 

             இன்னும் கொஞ்ச நேரத்துல மேடைக்கு கூப்பிட்டுடுவாங்க. இப்போ போய் அழுது முகத்தை இப்படி கெடுத்து வச்சிருக்க உன்னை.” என்று கையை ஓங்கியவள், தன்னையே நொந்து கொண்டு

 

        “முகத்தை கழுவு. முகத்தை கழுவுடி ” என்று அவளை அந்த வாஷ்பேஸினின் அருகில் தள்ளினாள் கிட்டத்தட்ட. ஆனால் மதியழகியால் என்ன முயன்றும் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை.அவள் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருக்க, செவ்வி பொறுத்து பார்த்தவள் அதற்கு மேல் முடியாமல்

 

             “நீ என்ன நினைக்கிற மதி.இப்படி அழுதுட்டே இருந்து என்னத்த சாதிக்க போற.” என்று அவளை முறைக்க

 

         “பயமா இருக்கு அண்ணி. என்னால முடியாது, என்னை விட்டுடுங்க.எனக்கு இந்த கல்யாணமே வேண்டாம் அண்ணி. என்னை விட்டுடுங்க. என்னால முடியல ” என்று கைகளில் முகத்தை புதைத்து கொண்டு அவள் கதற மதிக்கு பாவமாக இருந்தது அவளை அந்த நிலையில் காண. ஆனால் இது பாவம் பார்க்கும் நேரம் இல்லை என்பதால்

 

         ” சரி.நீ கல்யாணம் பண்ணிக்காத. வேண்டாம் மதியால உங்களை கட்டிக்கிட முடியாதாம் ன்னு நானே தனான்னா கிட்ட சொல்லிடறேன். ஆனா என்ன காரணம் சொல்லட்டும். இந்த போட்டோவை எல்லார் கிட்டயும் காட்டிடவா.இதனால தான் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றான்னு சொல்லிடவா.

 

          உன்னையும் என் அண்ணனையும் எனக்கு தெரியும். ஆனா ஊர் என்ன பேசும், இது எல்லாம் உண்மைதானான்னு கேட்பாங்களே.அதுக்கு என்ன பதில் சொல்லுவ. சொல்லு. என்ன சொல்லட்டும்.முதல்ல உன்னை நம்பி மாப்பிளை வேஷம் கட்டி இருக்காரே அவருக்கு என்ன  பதில் சொல்லுவ. வாயைத் திற மதி.” என்று அவள் மீண்டும் அதட்ட

 

                     “ஐயோ, எனக்கு தெரியலையே.அண்ணி நான் என்ன பண்ணுவேன். செத்து போய்டவா அண்ணி ” என்றவள் வார்த்தையை முடிப்பதற்குள் அவள் வாயை பொத்தியவள் அவளை தன்னோடு அணைத்து கொண்டு

 

            “நீ ஏன் சாகணும். நீ நல்லா இருப்படா. உன் வாழ்க்கைக்கு இந்த செவ்வி பொறுப்பு. நான் சொன்னா கேட்ப இல்ல. இந்த போட்டோவை நான் பார்த்துக்கறேன். இந்த போட்டோவால உனக்கு எந்த கெட்டதும் நடக்காது. அது என் கவலை நான் சரி பண்றேன். நீ எழுந்துக்கோ முதல்ல” என்று கூறியும் அவள் அழ

 

            “நீ உன் அண்ணியை நம்புவ இல்ல. நான் உனக்கு கெட்டது நடக்க விடமாட்டேன் மதி புரியுதா. நீ இதை பத்தி யோசிக்காத. முகத்தை கழுவிட்டு கெளம்பு” என்றவள் அவளைவிட்டு அசையவே இல்லை. அவளை முகம் கழுவ வைத்து சேலையை மாற்றி மீண்டும் அவள் தோழிகளை வைத்து மேக்கப்பை முடித்தவள் இளமாறனை அழைத்துவர சொல்லி அவள் கையில் கொடுத்துவிட்டாள்.

 

            “இவனை பார்த்துக்கோ.இவன் அழவே கூடாது.முக்கியமா உன்னோட அழுமூஞ்சியை அவன்கிட்ட காட்டாத ” என்று கூறியவள் அதன்பிறகே அங்கிருந்து நகர்ந்தாள். வெளியே சென்றவள் தன் அண்ணனுக்கு அழைக்க அவன் எடுக்கவே இல்லை. 

                      அவனுக்கு அழைத்து ஓய்ந்து போனவளாக அவள் நிற்க, அந்த நேரம் வேந்தன் தன் நண்பர்களுடன் வெளியில் நின்றிருந்தவன் அவளின் கலங்கிய முகம் பார்த்து அவள் அருகில் வந்தான். அவனை பார்க்கவும் தன் முகத்தை துடைத்துக் கொண்டாள் செவ்வி.அவளுக்கு இதை அவனிடம் சொல்வதா வேண்டாமா என்று கூட தெரியவில்லை.

 

                நாளை மாப்பிள்ளையாக வேண்டியவன்.இவனை இதில் இழுத்துவிட வேண்டுமா ? என்று யோசித்துக் கொண்டு அவள் நிற்க, அவனோ அருகில் வந்தவன் “என்ன ஆச்சு செவ்வி. என்ன செய்யுது.ஏன் எப்படியோ இருக்க ” என்று கேட்டுக்கொண்டே அவளை கையை பிடித்து அழைத்து வந்து ஓர் இருக்கையில் அமர்த்த, கட்டுப்பாட்டையும் மீறி கண்களில் இறங்கியது கண்ணீர்.

 

               

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

              

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement