Advertisement

அத்தியாயம் 18

தன் அறையில் இருந்த ஜன்னலின் வழியாக வெளியில் தெரிந்த நிலவை வெறித்து கொண்டு அமர்ந்திருந்தாள் மதியழகி. ஏனோ இன்று மனம் முழுவதும் தனாவின் நினைவுதான். சுற்றி அத்தனைபேர் இருக்க  எத்தனை தைரியமாக அருகில் அமர்ந்து கொண்டான் என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு இப்போது நினைத்தாலும் வெட்கம் கொடுத்தது அவனது செயல்கள்.

மேலும் அவன் தேர்வு செய்திருந்த புடவை அந்த நிறங்கள் ஏனோ மனதை வருடியது. விசாலத்தையும் அத்தனை தூரம் பிடித்திருந்தது அவளுக்கு. தன் அண்ணன் திருமணத்தின் போது அண்ணிக்கு புடவை எடுக்க தன் அன்னையின் முடிவுதான் அங்கு எல்லாமே. அண்ணன் எல்லாம் அருகில்கூட வந்திருக்கவில்லை.

இப்போதும் அவள் அதை யோசித்துதான் விசாலம் எடுத்துக் கொடுப்பதை வாங்கி கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்க அவர் அத்தனை முறை இவளிடம் விருப்பம் கேட்டது, தனா தேர்வு செய்தது எல்லாமே அழகாக தெரிந்தது அவளுக்கு.

முகத்தில் புன்னகை உறைந்திருக்க, தலைமுடியை விரித்து விட்டிருக்க அது இடுப்புக்கு கீழே வரை நீண்டிருக்க அந்த நேரத்தில் நிச்சயம் அவள் மோகினியே தான். இரவு உணவை முடித்து அறைக்கு வந்துவிட்டவளுக்கு உறக்கம் வராமல் போக சாளரத்தை தஞ்சம் அடைந்திருந்தாள்.

அந்த நேரத்தில் அலைபேசி இசைக்கவும், இந்த நேரத்தில் யார் அழைப்பது என்று யோசித்தவளுக்கு தனாவாக இருக்குமோ என்று நினைத்த நிமிடம் வியர்த்துப்போக சற்று பயத்துடனே அலைபேசியை பார்த்தாள். அவனுடைய அலைபேசி எண் தான். அன்று அவனிடம் பேசவேண்டும் என்பதற்காக எப்படியோ அவன் அலைபேசியை எடுத்திருக்க அதை சேமித்தும் வைத்திருந்தாள்.

ஆனால் அதோடு மறந்திருக்க, இப்போது அவன் அழைக்கவும் இதயம்  தடதடத்தது. கடவுளே இவனை நினைத்தாலே பயம் மட்டுமே வருதே” என்று நொந்துகொண்டு ஒருவாறாக அவள் அலைபேசியை இயக்கி காதில் வைத்தாள். ஆனால் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, எதிர்முனையும் பேச முனையவே இல்லை.

அவனாக பேசமாட்டான் என்பது புரிய இவள் மெல்லிய குரலில் “ஹலோ ” என்று சொல்லவும்,

“சீக்கிரம் தரையை பாரு. கொட்டின முத்து எல்லாம் உருண்டு ஓடிட போகுது. சீக்கிரம் அள்ளிக்கோ ” என்று எடுத்த எடுப்பில் அவன் கூற

அவன் கூற்றில் லேசான கோபம் வர ” எனக்கு ஒன்னும் வேண்டாம்.உங்களுக்கு தேவை இருந்தா அள்ளிக்கோங்க” என்று கூற

“பார்றா. கோபம் கூட வருது. பயம் மட்டும்தான் வரும்னு நெனச்சேனே. ” என்று மீண்டும் கிண்டல் தொனியில் கூற

இப்போது அமைதியாகிவிட்டாள். திரும்பவுமா என்று நினைத்தவன் ” போன் எடுத்தா ஹலோ சொல்லணும் அத விட்டுட்டு அமைதியா நின்னா யாருன்னு எப்படி தெரியும் உனக்கு ” என்று கேட்க

” யாருன்னு தெரியும் ” என்றாள் மெல்லிய குரலில். அவனுக்கும் அவள் தன்னை அழைத்திருந்தது அப்போது தான் நினைவு வர அன்றைய நினைவில் லேசான கோபம் வந்தது. ஆனால் இப்போது அதை காட்ட விரும்பாதவன் ” யாருன்னு தெரிஞ்சா பேச வேண்டியது தானே.ஏன் அமைதியா இருக்கணும் ” என்றுவிட

என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை நங்கைக்கு. அமைதியை பதிலாக்க அவனுக்கு அது போதவில்லை போலும்.

” ஏதாவது பேசு மதி. நான் கேட்கறதுக்கு பதில் மட்டுமாவது சொல்லலாம்ல ” என்று கேட்க

” என்ன பேசுறது… நிஜமா எனக்கு தெரியல.” என்று கூற

” சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.யாருன்னு தெரிஞ்சும் ஏன் அமைதியா இருந்த “

” யாருன்னு தெரிஞ்சதால தான் பேச்சே வரல.” என்றுவிட

” ஏன் அப்படி என்ன பண்ணிட்டேன் உன்னை”

” தெரியல. ஆனா ஏதோ பண்றிங்க. இன்னிக்கு கடையில கூட …” என்று சொல்ல வந்தவள் பாதியில் நிறுத்திவிட

” ஹேய் வார்த்தையை முடி. கடையில கூட என்ன ? என்ன பண்ணேன் உன்னை ” என்று சிரிப்புடன் அவன் கேட்க

அப்போதுதான் உளறி விட்டதை உணர்ந்தவள் ” ஒண்ணுமில்ல. நான் எதுவும் சொல்லலையே ” என்றுவிட்டாள் வேகமாக

” சரி பொழச்சு போ. ஆனா இனிமே தினமும் கூப்பிடுவேன். ரெடியா இரு. உனக்கு இந்த டைம் ஓகே தான.” என்று அவன் கேட்க

தினமுமா என்று நொந்து கொண்டவள் அதை சத்தமாகவும் சொல்லி இருக்க ” என்ன தினமுமா. ஏன் தினம் போன் பண்ணா என்ன ” என்று கேட்க ஐயோ என்றானது அவளுக்கு.

” இல்ல, ஒண்ணுமில்ல. சும்மாதான் சொன்னேன் ” என்று அவசரமாக கூற

” மொதல்ல தெளிவா பேசி பழகு மதி. சின்ன பிள்ளையா நீ இப்படி தட்டு தடுமாறி பத்து வார்த்தைக்கு ஒரு வார்த்தை பேச. இப்போ நீ பேசினதுல இருந்து நான் என்ன நினைக்கட்டும். உனக்கு என்கூட பேச விருப்பம் இல்லைன்னு நெனச்சிக்கிறதா ? இல்ல என்னை கல்யாணம் பண்ணவே பிடிக்கல உனக்குன்னு நெனைக்கவா ” என்று கேட்டவன் அவள் ஏதோ மறுத்து சொல்ல வரவும் அவளை பேசவே விடாமல்

” அண்ணிக்கும் அப்படிதான் நீ பாட்டுக்கு பேசணும்ன்னு சொன்ன, வந்த, கல்லினத்தை நிறுத்திடுங்க ன்னு சொல்லிட்டு கிளம்பிட்ட. எப்படி அவ்ளோ தைரியம் வந்தது உனக்கு. வீட்ல பார்த்து பெரியவங்க பேசி முடிச்ச கல்யாணம் நிறுத்திடுங்கன்னு ஒரே வார்த்தையில சொல்ற அவ்ளோ ஈஸியா போய்டுச்சா உனக்கு.

” நான் கல்யாணத்தை நிறுத்தி இருந்தா என்ன பண்ணி இருப்ப. இல்ல நீ சொன்னதை வச்சு கல்யாணம் முடிஞ்ச பிறகு உன்னை டார்ச்சர் பண்ணா என்ன பண்ணுவ. எதையுமே யோசிக்காம நீ நெனச்சத செய்வியா. இதால என்ன பிரச்சனை வரும்ன்னு யோசிக்கவே மாட்டியா” என்று விடாமல் அவளை வறுத்து எடுத்தவன் மூச்சு வாங்க இடைவெளி விட

இங்கே அவன் பேச்சில் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது மதிக்கு. அவன் சொன்னது அத்தனையும் உண்மைதானே. என்று யோசித்தவளுக்கு கண்ணீர் பெருக வார்த்தையே வரவில்லை. அவன் மீண்டும் “லைன்ல இருக்கியா ” என்று கேட்க ஒரு கேவலே பதிலாக கிடைக்கவும் மேலும் கடுப்பாகி விட்டான்.

“அழறதை நிறுத்து மதி. என்ன நினைக்கிற நீ. செய்றதெல்லாம் செஞ்சிட்டு இப்போ நான் அதை சொன்னா அழுவியா. நான் உன்னை அழ வைக்கிறேனா ” என்று அதற்கும் காய

” இல்லை” என்று வேகமாக கண்களை துடைத்துக் கொண்டு கூறியவள் “சாரி ” என்றும் சேர்த்து சொல்ல

” என்ன பேசுற. புரியல எனக்கு, சத்தமா பேசு ” என்றான் வேண்டுமென்றே

பயந்துகொண்டே ” இல்லை. சாரி சொன்னேன் “

” எனக்கு உன் சாரி தேவையே இல்ல. இப்படி என்ன சொன்னாலும் கண்ணை கசக்காத. எனக்கு அழறது பிடிக்காது, அதுவும் என் பொண்டாட்டி அழுதா நான் கையாலாகாதவன்னு தான் நினைப்பேன்.” என்று கட்டளையாகவே கூறவும்

” இல்லை.அழமாட்டேன் ” என்று அவனுக்கு சொன்னவள் தன் கண்களையும் துடைத்துக் கொண்டாள்.

” ஓகே. இப்போ சொல்லு நான் போன் பண்றதுல என்ன பிரச்சனை” என்று தொடங்கிய இடத்திற்கே வரவும்

“ஐயோ பிரச்சனை எல்லாம் எதுவும் இல்ல, நான் எப்படி …” என்று தடுமாறியவள் பின் அவளே ” எனக்கு உங்ககிட்ட பேசவே வரல. ஏனோ பயமா இருக்கு. வார்த்தையே வரல. இதுக்கு நான் ரொம்ப அமைதி எல்லாம் இல்ல, நெறைய பேசுவேன். ஆனா உங்ககிட்ட … நான் என்ன பண்ணட்டும் ” என்று கேட்க

“இது மட்டும் வேகமா வருது ” என்றுதான் தோன்றியது அவனுக்கு. ” சரி உனக்கு பயமா இருக்கு. என்ன பண்ணலாம் அதுக்கு ” என்று அதையும் அவளிடமே கேட்க, அவனை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை அவளுக்கு. அதை அப்படியே அவனிடம் சொல்லியும் விட்டாள் பெண்.

” உங்ககிட்ட எப்படி பேசணும்ன்னே தெரியல எனக்கு. என்னால முடியல நிஜமா” என்று கூறிவிட

சத்தமாக சிரித்தவன் ” அது பிரச்சினையில்ல. நான் சொல்லி தரேன், எப்படி பேசணும்ன்னு அதைவிட எனக்கு என்ன வேலை. ஒரு ஆறு நாள் பொறுத்துக்கோ. அப்புறமா கத்துக்கலாம்” என்று சிரிப்போடு கூறியவன்

” ஒழுங்கா கத்துக்குவ இல்ல ” என்று கேட்கவும்

“ம்ம்ம் ” என்று வேகமாக கூறினாள். அவனோ புன்னகையுடன் ” சரி ஓகே ரொம்ப நேரம் ஆகிடுச்சு. படுத்துக்கோ. ஆனா நாளைக்கு நீயே எனக்கு கூப்பிடனும். அதான் உனக்கு பனிஷ்மென்ட் அழுததுக்கு. பண்ணுவ இல்ல ” என்று கேட்க

அந்த நேரம் தப்பிக்க ” ம்ம்ம் ” என்று அவள் கூற, ” நாளைக்கு போன் பண்ணல ன்னா அதுக்கும் பனிஷ்மென்ட் இருக்கு பார்த்துக்கோ ” என்று கூறிவிட்டு போனை அணைத்தான் அவன்.

இவர்கள் நிலை இப்படி இருக்க, அங்கே ஒருத்தி இவர்களை எப்படியும் பிரித்தே தீர வேண்டும் என்று ஆகாத வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். இன்று அவள் கல்லூரியில் உடன் படிக்கும் தோழன் ஒருவன் அவளுக்கு போனில் அழைத்திருந்தான். பார்ப்பதற்கு பொம்மை போல் இருக்கும் நந்தினியை எப்போதும் அவனுக்கு பிடிக்கும். ஏன் காதல் சொல்லலாம் என்றுகூட யோசித்துக் கொண்டிருந்தான்  மகேஷ்.

ஆனால் பெண்கள் சகவாசம், போதை என்று அவன் இருக்க, அவனிடம் இருந்து தள்ளியே இருப்பாள் நந்தினி. எப்போதுமே அவனிடம் நெருங்கி பேசியது கூட இல்லை.ஆனால் அவன் விடாமல் இவளை தொடர்ந்து வருவதால் இப்போது அவள் கல்லூரிக்கு விடுப்பு எடுத்ததை காரணம் காட்டி அவளுக்கு அழைத்திருந்தான்.

அவன் அழைப்பில் முதலில் எரிச்சல் வந்தாலும், இன்றைய நிலையில் இவனால் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்தவள் அவனிடம் பேசும் தொனியை மாற்றி இருந்தாள். நல்ல விதமாகவே அவனிடம் பேசியவள் தனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று அவனிடம் கூற என்ன என்று கேட்டிருந்தான் அவன்.

தாமரையின் திருமணத்தில் ஏதாவது செய்தால் நிச்சயம் தன் பெயர் அடிபடும் என்று சாதுரியமாகவே திட்டம் போட்டவள் தடுக்க நினைத்தது மதியழகியின் திருமணத்தை. அன்று அந்த தனஞ்செயன் தன் கழுத்தை பிடித்தது நினைவுக்கு வர எப்படியாவது இதை முடிக்க வேண்டும் என்று தோன்றிவிட்டது அவளுக்கு.

அதற்கு மகேஷை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தாள். அதற்காக இருவரும் சேர்ந்து எடுத்திருந்த சில புகைப்படங்களை மகேஷுக்கு அனுப்பியவள், மேலும் ஆதித்யனின் சில புகைப்படங்களையும் அவனுக்கு அனுப்பி வைத்தாள்.

மகேஷ் இது எதற்காக ஏன் அவள் திருமணத்தை தடுக்க வேண்டும் என்று கேட்டபோதும் நீ என்னை கேள்வி கேட்பியா மகேஷ் எனக்காக இதைக்கூட செய்யமாட்டியா என்று அவனிடம் உருகிய குரலில் கேட்க அந்த நல்லவனும் அவள் சொன்னதை செய்து முடிக்க தயாராகிவிட்டான்.

இதன் பின்விளைவுகள் என்ன என்று கூட யோசிக்காமல் அந்த நொடியை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தாள் அவள். மதியழகி -தனஞ்செயன் திருமணம் தடைப்பட்டால் தானாகவே தாமரை- வேந்தனின் திருமணமும் நிற்கும் என்று கணக்கு போட்டாள் அவள்.

ஆனால் அவளின் பால்ய சிநேகிதி, உயிர் தோழி, நல்ல உறவு என்று அனைத்துமாக இருந்த தன் மதியழகியை அவள் மறந்துவிட்டாள் அந்த நொடியில். அவள் என்ன ஆவாள் என்று யோசிக்க தவறிவிட்டாள். அவளின் நோக்கம் வேந்தன் மட்டுமே என்றாக தோழியின் வாழ்க்கை, குடும்ப கௌரவம், அண்ணனின் மரியாதையான பதவி, பெரிய குடும்பத்தின் பெயர் என்று அனைத்தும் பின்னால் போனது.

திருமணத்திற்கு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இவளின் இந்த சதித்திட்டம் சாத்தியப்படுமா இல்லை முறியடிக்கப்படுமா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

Advertisement