Advertisement

அத்தியாயம் 17-2

ரங்கநாயகி மங்கையின் வீட்டிலிருந்து வெளியே வந்தவர் காரில் ஏறாமல் தன் போக்கில் நடந்துவிட்டார். அவருக்கு மனது ஆறவே இல்லை. என்ன பேச்சு பேசிவிட்டாள் என்று அதை சுற்றியே ஓடிக் கொண்டிருந்தது அவரின் நினைவு. இவளை இத்தனை ஆண்டுகள் தாங்கியதற்கு என் பிள்ளைக்கு சாபம் கொடுப்பாளா ? என்று நினைக்க நினைக்க ஆத்திரம் வந்தது அவருக்கு.

அதுவும் இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் என்றிருக்க அவன் வாழமாட்டான் என்ற வார்த்தைகளை எந்த தாயால் பொறுத்துக்கொள்ள முடியும். அந்த வார்த்தையில் தான் உடைந்து போனார் ரங்கநாயகி. இப்போதுவரை மனம் ஆறாமல் கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தவர் காலில் ஏதோ தடுக்கவும் லேசாக தடுமாறி பின் நிற்க அப்போதுதான் சுற்றுப்புறம் உரைத்தது அவருக்கு.

அவர் வீட்டிற்கு செல்லும் வழிக்கு எதிர்திசையில் நடந்திருக்க அங்கிருந்து வெகுதூரத்தில்  இருந்தது அவரின் வீடு. இதற்குமேல் நடக்கமுடியாது என்று தோன்றவும் அருகிலிருந்த சிவன் கோவிலுக்கு சென்றவர் தன் குறைகளை அவரிடம் இறக்கிவிட்டு கண்களில் கண்ணீர் வழிய அங்கிருந்த தூணில் சாய்ந்து அமர்நதுவிட்டார்.

காலையில் சாப்பிடாமல் கிளம்பி இருக்க,தினம் எடுக்கும் பிபி மாத்திரைக்கும் அன்று அவர் விடுப்பு கொடுத்திருக்க எல்லாம் சேர்ந்து கண்களை இருட்டிக் கொண்டு வந்தது அவருக்கு. எதற்கும் உடல் ஒத்துழைக்காமல் போக மயக்கத்தின் பிடிக்கு செல்ல ஆரம்பித்திருந்தார் அவர்.

அவரின் நல்ல நேரமோ என்னவோ விசாலம் எதேச்சையாக அந்த கோவிலுக்கு வந்திருக்க கடவுளை வணங்கிவிட்டு வந்தவரின் கண்ணில் பட்டார் ரங்கநாயகி. அவர் அமர்ந்திருந்தநிலை விசாலத்திற்கு பதட்டத்தை கொடுக்க, அவரை நெருங்கி அவர் தோளில் கைவைக்க அவர்மீதே சாய்ந்துவிட்டார் ரங்கநாயகி.

விசாலம் பதறி போனவராக அவரை தாங்கி கொண்டவர் அருகில் இருந்தவர்களிடம் தண்ணீர் வாங்கி அவர் முகத்தில் தெளித்து அவரை தெளியவைக்க, ரங்கநாயகி எழுந்து அமர்ந்தார். அப்போதுதான் உயிர் வந்தது விசாலத்திற்கு. அவர் ரங்கநாயகியை பார்க்க ரங்கநாயகி விசாலத்தின் கைகளை பிடித்துக் கொண்டவர் கதறி தீர்த்துவிட்டார்.

அவரின் அழுகையில் ஒன்றும் புரியவில்லை விசாலத்திற்கு. அவரை ஒருவாறாக தேற்றி என்ன விஷயம் என்று கேட்க மங்கை வீட்டில் நடந்தது அனைத்தையும் கூறியவர் விசாலத்தின் கைகளை பிடித்துக்கொண்டு மீண்டும் கலங்க, விசாலம் ரங்கநாயகியை பார்த்து புன்னகைத்தவர் இது நடக்காமல் போய் இருந்தால் தான் அதிசயம் என்று நினைத்தவர் அதையே ரங்கநாயகியிடம் கூறினார்.

” அவ எல்லாம் ஒரு ஆளுன்னு அவ பேசினத்துக்கு கலங்கிட்டு இருப்பியா. அவ நல்ல வார்த்தை பேசிட்டாதான் ஆச்சரியப்படணும் ரங்கு. இன்னும் ஒருவாரம் தான் இருக்கு கல்யாணத்துக்கு அதை பார்ப்பியா. அதை விட்டுட்டு கோவில்ல வந்து குத்தம் வச்சிட்டா” என்று நக்கலடித்தவர்

” நல்ல இடம் பார்த்த தூங்கறதுக்கு.” எனவும் ரங்கநாயகி அவரை முறைக்க, புன்னகைத்த விசாலம் ” ஏன் ரங்கு நாத்தி மேல அம்புட்டு பாசமா. சாப்பிடாம கூட அவ வீடடு வாசலுக்கு கிளம்பிட்ட.” என்று கேட்க

ரங்கநாயகி ” நீ வேற சாலா. ஊருக்கே அழைப்பு வச்சிட்டமே, பொறந்த பொண்ணை எப்படி விடறதுன்னு தவிச்சிட்டு இருந்தேன். இன்னிக்கு பெரிய மாமா வரவும் முறையா கூப்பிடலாம்ன்னு போனா, அவ குணத்தை காட்டிட்டா. ஏன் சாலா நீ சொல்லு நான் என்னிக்காவது அவளை பிரிச்சு பார்த்திருக்கேனா” என்று அவர் மீண்டும் ஆரம்பிக்க

” அட விடுவியா. இது ஒரு கதைன்னு பேசிட்டு இருக்க. இன்னிக்கு என் மருமகளுக்கு புடவை எடுக்க போறதா பேச்சு. நெனப்பிருக்கா உனக்கு.” என்று கேட்க

” நடந்த பிரச்சனையில அதை மறந்தே போய்ட்டேன் சாலா” என்று அவர் தலையில் கைவைக்க

” எந்திரிச்சு போய் அந்த வேலைய பாரு. இன்னிக்கு கடைக்கு போயே ஆகணும். கண்டவளுக்காக என் மருமகளுக்கு சேலை எடுக்கறதை தள்ளி போடமுடியாது. ரெண்டு மணிக்கு மேல கிளம்புவோம். சரியா இருக்கும். நீ ஆக வேண்டியதை பாரு”

” இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் அதை பாரு. இவளுக்கென்ன அவசரம் பொறுமையா பார்த்துக்கலாம். தூக்கி தூர வை. எழுந்திரு” என்று அவரை அழைத்துக் கொண்டு கிளம்பியவர் அவர் வீடு இருக்கும் தெரு வரை உடன்வந்து அவரை விட்டுட்டே சென்றார்.

ரங்கநாயகி வீட்டிற்கு வர வேந்தனை தவிர அத்தனை பேரும் இருந்தனர் வீட்டின் ஹாலில். மதி அன்னையை கண்டதும் ” எங்கேம்மா போனீங்க ” என்று பதறிக்கொண்டு முன்னே வர

அவனுக்கு பதில் சொல்லாமல் தன் கணவரையும், பெரிய மாமனையும் திரும்பி முறைத்து விட்டு உள்ளே சென்றுவிட்டார் அவர். அவருக்கு வீரபாண்டியன் பேசியது தெரியவில்லை. அவள் அத்தனை பேசியும் இவர்கள் இருவரும் ஒருவார்த்தை கூட பேசவில்லை என்பது மேலும் கோபத்தை கூட்ட யாருக்கும் பதில் சொல்லவில்லை அவர்.

அவர் அப்படி உள்ளே சென்றது சுந்தரபாண்டியனுக்கு வருத்தமாக இருக்க, தன் அண்ணன் என்ன நினைப்பாரோ என்று அவர் தன் அண்ணனை திரும்பி பார்க்க ” மங்கையை நாம ஒன்னும் கேக்கலைன்னு கோபம் உன் பொண்டாட்டிக்கு. சரியாகிடும் டா. இத்தனை நாள் என்ன பேசி இருக்கு அந்த புள்ள. இன்னிக்கு அது பிள்ளைகளை பத்தி பேசவும் கைநீட்டிடுச்சு. நீ எதுவும் கேட்டுட்டு இருக்காத. இன்னிக்கு ஜவுளி எடுக்க வர்றதா சம்பந்தி வீட்ல சொல்லி இருக்கோம். ஞாபகம் இருக்கா. போய் அந்த வேலைய பாருங்க எல்லாரும் போங்க.” என்றுகூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார் மாடிக்கு.

அனைவரும் சென்று தயாராக தொடங்க, சுந்தரபாண்டியன் ரங்கநாயகியை ஒருவழியாக சமாளித்து அழைத்து வந்திருந்தார். ஆனால் அனைவரும் தயாராகி இருக்க, வழக்கம்போல் வேந்தன் இன்னும் வந்திருக்கவில்லை. மதி இரண்டு மூன்று முறை அழைத்திருக்க முதலில் வந்துவிடுவதாக சொன்னவன், பின்னர் அழைத்து கடைக்கு வந்துவிடுவதாக சொல்லி இவர்களை கிளம்ப சொல்லிவிட்டான்.

அன்று லோட் வந்து இறங்கி இருக்க, அந்த நெல்மூட்டைகளை குடவுனில் சேர்க்கும்வரை நிம்மதி இருக்காது அவனுக்கு. வானம் வேறு மேகமூட்டத்துடன் காணப்பட, வருவதாக சொன்ன ஆட்களில் மூவர் வராமல் போயிருக்க சட்டையை மாற்றிக்கொண்டு அவனும் வேளையில் இறங்கி இருந்தான். எவ்வளவு நேரம் எடுக்கும் என்று தெரியாததால் அவர்களை கிளம்ப சொல்லியவன் வேலைகளை முடித்துவிட்டு அங்கேயே குளித்து உடையை மாற்றி கொண்டு வர நீண்ட நேரம் ஆகி இருந்தது.

நேராக அவன் டவுனுக்கு விரைய, அங்கு ஜவுளிக்கடையிலோ பெண்கள் கடையை புரட்டி கொண்டிருந்தனர். தாமரையை அன்று விடுப்பு எடுக்கவைத்து விசாலம் இழுத்து வந்திருக்க தனாவும் உடன் வந்திருந்தான். மாணிக்கம் ஏதோ வேலையாக சென்றிருக்க, அவரும் வந்துவிடுவதாக கூறி இருந்தார்.

தாமரையின் கண்கள் வேந்தனை தேடி சுழல, செவ்வி அவள் அருகில் வந்தவள் ” வேந்தன் இன்னும் வரல. இனிமே தான் வருவான்.” என்று மெதுவாக கூறிவிட்டு நகர்ந்துவிட தாமரையின் முகம் காற்று போன பலூனை போல் ஆகிவிட்டது. ரங்கநாயகிக்கு மருமகளின் வாட்டம் புரிந்துபோக அவளை தன்னுடனே அமர்த்திக் கொண்டார் அவர்.

மதியழகி உள்ளே நுழைந்தது முதல் தனாவின் கண்கள் அவளை விட்டு அசையவே இல்லை. எப்போதும் சுடிதாரில் பார்த்திருக்க, இன்று செவ்வியின் உந்துதலால் அழகான மரகத பச்சைநிற  புடவையில் அவள் அத்தனை அழகாக இருக்க, அவள்மீது கோபம் இருந்தாலும் “என்னவள் ” என்ற எண்ணம் தைரியம் கொடுக்க, வெளிப்படையாகவே அவளை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

அவன் பார்வையை உணர்ந்தவள் லேசாக நிமிர்ந்து பார்க்க, அவளை பார்த்து லேசாக அவன் கண்ணை சிமிட்டவும் பயந்து போனவளாக தலையை குனிந்து கொண்டாள் மதி. அதற்கு பிறகு அவள் ஏன் நிமிர்ந்து பார்க்க போகிறாள். ??

விசாலம் மதியை அழைத்தவர் அருகில் அமர்த்திக் கொண்டு புடவைகளை எடுத்து அவள் மீது வைத்து பார்த்துவிட்டு பிடித்திருக்கிறதா என்று ஒவ்வொரு முறையும் கேட்க, தனா அவளுக்கு பின்னால் தான் நின்று கொண்டிருந்தான். இவர்களுக்கு எதிரே இருந்த கண்ணாடி வழியாக அவன் இவளையே பார்த்துக் கொண்டிருக்க அவள் எங்கே புடவையை பார்ப்பது.

வந்திருந்த மற்ற ஆண்கள் வாசலில் ஏதோ பேசிக் கொண்டிருக்க, விசாலம் மகனை அருகில் நிற்க வைத்துக் கொண்டிருந்தார் மாப்பிளையாகிற்றே.

மதியழகி ஒன்றும் சொல்ல முடியாமல் திணற, விசாலம் ஒரு அளவுக்கு மேல் அவளை புரிந்து கொண்டவராக தனாவிடம் திரும்பி ” நீ ஏண்டா இங்கேயே நிற்கிற. போய் உனக்கு கல்யாணத்துக்கு தேவையானதை பாரு. போ ” என்று விரட்ட

அவனோ சட்டமாக ” மா.. அவளுக்கு எடுத்து முடிங்க. அடுத்து நான் அவளையும் கூட்டிட்டு போய் எனக்கு எடுத்துக்கறேன்” என்று கூறிவிட

விசாலம் மகனின் எண்ணம் புரிந்தவராக ” எங்க அவளை நீ பார்க்க விடற. நீயே பாரு நீ கட்டிக்க போறவளுக்கு. அப்படி உட்காரு” என்று மதிக்கு அடுத்த இருக்கையை காட்டிவிட செவ்வி அவள் அருகில் அமர்ந்திருந்தவள் விசாலத்தை பார்க்க

அவளையும் ” நீ வா செவ்வி.அதுங்க ரெண்டும் பார்த்து எடுக்கட்டும் ” என்று அவளையும் சேர்த்தே அழைத்து கொண்டு தாமரையிடம் நகர்ந்துவிட்டார்.

மதி செவ்வியின் கைகளை பிடிக்க அவள் கைகளை அழுத்திக் கொடுத்தவள் விசாலத்துடன் நகர்ந்துவிட, அவள் அமர்ந்திருந்த இடத்தில் தனா அமர்ந்துகொண்டான். மதியை முழுதாக அவன் மறைத்துவிட அவள் முகம் கூட அந்த பக்கம் அமர்ந்து இருந்தவர்களுக்கு தெரியாது. இவன் முதுகு மட்டுமே பக்கவாட்டில் அவர்களுக்கு தெரிந்தது.

இவன் அருகில் அமரவும் உள்ளுக்குள் பயம் தாளம் போட்டது மதிக்கு. அவனிடம் திருமணத்தை மறுத்தது வேறு நேரங்கெட்ட நேரத்தில் நினைவுக்கு வர நா உலர்ந்தது அவளுக்கு.ஆனால் அவனுக்கு அப்படி எதுவும் இல்லை போல. அவள் அருகில் தோள் உரசுமாறு சற்று நெருங்கி அமர்ந்தவன் அவளுக்கு அடுத்து இருந்த சேலைகளை எட்டி எடுக்கிறேன் என்று அவளை லேசாக உரசி விட பதறி போய் அவனை திரும்பி பார்த்தாள் அவள்.

அவள் தன்னை பார்க்கவும் ” என்ன” என்றான் ஒருவார்த்தையில்.

அவள் வேகமாக ஒன்றுமில்லை என தலையசைக்க அவள் வேகத்தில் புன்னகைத்தவன் ” என்ன கலர் பிடிக்கும். என்ன மாதிரி புடவை எடுக்கட்டும்.” என்று கேட்க என்ன சொல்வாள் அவள். வாயிலிருந்து வார்த்தை வரவில்லை.

அவள் பேசமாட்டாள் என்பதை புரிந்தவனாக, “நான் என்ன பண்ணட்டும் மதி. ஏன் இப்படி இருக்க” என்று கேட்க

“தெரியலையே ” என்றுவிட்டாள் சட்டென்று.

அவள் பதிலில் சிரிப்பு வர ” நான் என்ன பண்ணட்டும். எழுந்து போய்டவா. நீ பார்க்கிறியா” என்று கேட்க,

” இல்லல்ல.. இருங்க ” என்று கூறவும், அவளையே பார்த்தவன் ” சரி இருக்கேன் சொல்லு. என்ன கலர் எடுக்கட்டும்” என்று கேட்க

ஏனோ என்ன சொல்வது என்று புரியாமல் ” நீங்களே.. நீங்களே பாருங்க ” என்றுவிட்டாள் அவள்.

அவள் அந்த அளவுக்கு பேசியதே அதிசயம் என்பதால், அதற்குமேல் அவளை கேள்வி கேட்காமல் தானே மூன்று புடவைகளை தேர்ந்தெடுத்தான் அவன்.  மூன்றையும் அவள் முன்பாக வைத்துவிட்டவன் “இது மூணுல ஒன்னு எடுத்துக்கோ. மூணுமே ஓகே தான் நல்லா இருக்கு” என்றுவிட

அப்போதும் குழப்பம் தீர்ந்தபாடில்லை அவளுக்கு. எதை எடுப்பது என்று அவள் தடுமாற, அவள் கையை பிடித்துக் கொண்டவன் “ஏன் இப்படி டென்ஷன் ஆகிற. அமைதியா இரு. என்ன ஆச்சு இப்போ. புடவை தான எடுக்க சொன்னேன் உன்ன ” என்று நிதானமாக கூற, அவள் பார்வையோ அவன் பிடித்திருந்த கைகளில் இருந்தது.

“இப்போ என்ன மதி ” என்று மீண்டும் கேட்கவும், பார்வையை புடவைகளின் மீது திருப்பியவள், அங்கிருந்த மூன்று சேலைகளில் இலை பச்சையில் அரக்குநிற பார்டர் வைத்து உடல் முழுவதும் தங்க நிற ஜரிகை நெய்யப்பட்டு இருந்த அந்த புடவையை தேர்ந்தெடுக்க, தனாவின் முகம் மலர்ந்து போனது.

“பிடிச்சிருக்கா “என்று அவள் கேட்கவும், அவன் பார்த்த பார்வையில் அவளுக்கு முகம் சிவந்து போக தானாகவே தலையை குனிந்து கொண்டாள் அவள். அந்த புடவையை பில்லுக்கு அனுப்பியவன் அவள் காதருகில் குனிந்து ” இதுபோல என்முன்னாடி வெட்கப்படாத. நீ சிவந்து போகும்போது சத்தியமா முடியல.அந்த கன்னத்தை அப்படியே கடிச்சு வைக்கணும் போல இருக்கு” என்று கூறிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் எழுந்து கொள்ள அவள் முகம் இரத்த நிறத்திற்கு மாறிப்போனது.

இங்கே இவர்கள் புடவை தேர்ந்தெடுத்து முடிப்பதற்குள் அங்கே ரங்கநாயகியும், விசாலமும் மொத்த குடும்பத்திற்கும் எடுத்து முடித்திருந்தனர். தாமரைக்கு மட்டும் இன்னும் எடுக்காமல் இருக்க, அவளும் புடவையை தேர்ந்தெடுப்பதை விட்டு வாசலை பார்த்து பார்த்து திரும்பிக் கொண்டிருந்தாள்.அவள் பார்வையை உணர்ந்த மதிமாறன் தம்பிக்கு அழைக்க அவன் கடைவாசலில் தான் நின்றிருந்தான்.

எடுத்த எடுப்பில் மதிமாறன் ” எங்கேடா இருக்க ” என்று ஆரம்பிக்க

” நீ எங்கேடா இருக்க. நான் வந்துட்டேன்” என்று கூறவும் இவர்கள் இருக்குமிடத்தை கூறி அவன் அழைப்பை துண்டிக்க அடுத்த இரண்டு நிமிடங்களில் அங்கு வந்து நின்றான் வேந்தன். தாமரையின் முகம் அவனை பார்த்த கணத்தில் மலர்ந்துபோக ரங்கநாயகி புன்னகைத்துக் கொண்டார் மருமகளின் செயலில்.

வேந்தன் வரவும் மதி அவனை அழைத்து வந்தவன் தாமரை அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்து சேர ரங்கநாயகி அவன் முன்னால் வேண்டுமென்றே அடிக்கும் நிறத்தில் நான்கைந்து புடவைகளை எடுத்து வைத்து ஒன்றை தேர்ந்தெடுக்க சொல்ல அந்த புடவைகளை பார்த்த தாமரையின் முகம் மாறிப் போனது.

இதை கட்டிக்கொண்டு எப்படி என்று அவள் தவிக்க, அவளுக்கு அந்த தவிப்பை கொடுக்காத வேந்தன் தன் அன்னையை முறைத்துவிட்டு, கண்களை சுழற்றி தேடியவன் லேசாக மங்கிய தங்க நிறத்தில் உடல் முழுவதும் தங்க ஜரிகை நெய்யப்பட்டு  பார்டரில் மட்டும் தங்க நிற பட்டு இழைகள் சற்று பளிச்சென்று இருந்த அந்த தங்கநிற புடவையை எடுக்க சொல்லி பார்த்தவன் தாமரையின் முகம் பார்க்க அவள் முகத்தில் பளிச்சென்ற புன்னகை. அதையே சம்மதமாக கொண்டு அந்த புடவையை தன் அன்னையிடம் கொடுத்தவன் “இதுதான் புடவை ” என்று வேறு கூற

ரங்கநாயகி அவனை முறைத்தவர் ” அப்போ இதையெல்லாம் என்ன செய்யுறது ” என்று அவர் எடுத்திருந்த புடவைகளை காட்டிக் கேட்க

” ஒன்னும் பிரச்சினையில்ல. அத்தனையும் பில் பண்ணுங்க. ஆனா உங்க மருமகளுக்கு பதிலா நீங்களே சுத்திக்கோங்க ” என்று கூற செவ்வி பக்கென்று சிரித்துவிட்டாள்.

அவள் சிரிப்பில் ரங்கநாயகி பொங்கியவர் “அடேய் ” என்று ஆரம்பிக்க “மா வேலையை பாருங்க” என்று சிரிப்போடு கூறியவன் அங்கிருந்து நகர்ந்துவிட்டான். ரங்கநாயகி முறைப்பதுபோல் இருந்தாலும் அத்தனை திருப்தி மகனின் இந்த சிரித்த முகத்தில்.அதற்கு காரணமானவளை திரும்பி பார்க்க அவளும் புன்னகையுடன் தான் நின்றிருந்தாள்.

அவளை அருகில் அழைத்து நெட்டி முறித்தவர் “கடவுளே என் பிள்ளைங்க நல்லா இருக்கணும் என்னிக்கும் ” என்று வேண்டுதல் வைக்க விசாலம் அவர் கையை பிடித்து அழுத்தியவாறு அவரை அழைத்து சென்று மற்ற வைபவங்களுக்கு புடவை எடுக்க ஆரம்பித்தனர்.

இவ்வாறாக இவர்கள் புடவை எடுத்து முடிக்கவே அந்த நாள் சரியாக இருக்க, கிடைத்த கொஞ்ச நேர இடைவெளியில் ஆண்கள் தங்கள் உடையையும் எடுத்துக் கொண்டு கிளம்பினர். யார் சொல்லியும் கேட்காமல் தாமரையின் புடவைக்கு வேந்தன் பணம் செலுத்தி இருக்க, மீதி புடவைகளுக்கு மதியும், தனாவும் பணம் செலுத்தினர்.

இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே இருந்தது திருமணத்திற்கு.திருமண வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்க, திருமணமும் அப்படியே நடந்து முடிய வேண்டும் என்பதே  அனைவரின் வேண்டுதலாக இருந்தது.

Advertisement