Advertisement

அத்தியாயம் 17

திருமணத்திற்கு இன்னும் ஒருவாரம் மட்டுமே மீதமிருக்க, ஊரில் உள்ள சொந்தங்கள், தெரிந்தவர்கள், தொழில் முறை நண்பர்கள் என்று அனைவருக்கும் அழைப்பிதழ் வைத்து முடித்திருந்தார் சுந்தரபாண்டியன். ஆனால் என்ன கரணம் கொண்டோ தன் தங்கையின் வீட்டுக்கு அவர் செல்லவே இல்லை. கந்தகுருவிடம் முன்பே அழைத்து பேசி இருக்க அவரும் பெரிதாக எடுக்கவில்லை.

இப்போது தன் அண்ணன் வந்து விடவும், மங்கைக்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என அவரிடம் சொல்லி இருக்க வீரபாண்டியன் தன் தம்பி மற்றும் தம்பி மனைவியுடன் தங்கை வீட்டிற்கு புறப்பட்டு இருந்தார். அன்று திருமணத்திற்கான உடைகள் எடுப்பதாக இருக்க, மங்கை வீட்டிற்கு சென்று வந்ததும் மாலையில் ஜவுளி கடைக்கு செல்வோம் என்று ரங்கநாயகி விசாலத்தை அழைத்து கூற விசாலம் எதுவும் மறுத்து கூறவில்லை. சரி என்று விட்டவர் மங்கையின் குணம் புரிந்ததால் எப்படியும் ரங்கநாயகி இன்று வருத்தப்பட போகிறாள் என்று கசப்பாக புன்னகைத்து கொண்டார்.

மூவரும் மங்கையின் வீடு வாசலில் சென்று நிற்க கார் வந்த சத்தம் கேட்டபோது கூட எட்டி பார்க்கவில்லை மங்கை. மகள் இல்லாத அந்த வீடு வெறுமையை கொடுக்க முற்றத்தில் இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்து கொண்டு எதிரே இருந்த சுவற்றை வெறித்துக் கொண்டிருந்தார்.அவர் அத்தனை தூரம் கத்தி ஆர்ப்பாட்டம் செய்திருக்க கந்தகுரு எதையுமே காதில் வாங்கி இருக்கவில்லை, ஒரே பிடியாக நந்தினியை பெரிய வீட்டுக்கு அனுப்பி இருந்தார். அதில் தளர்ந்து போய் இருந்தார் மங்கை.

இப்போதும் ஆள் வருவது கூட தெரியாமல் அவர் வெறித்துக் கொண்டிருக்க, வீரபாண்டியனுக்கு மனம் வலித்தாலும் இது அவளாக தேடி கொண்டது என்று நினைத்து கொண்டவருக்கு தங்கையின் செயல்களால் தோன்றி இருந்த வருத்தம் இன்னும் மறைந்திருக்கவில்லை.

தன் முன் ஏதோ நிழலாடவும் என்ன என்று திரும்பி பார்த்தார் மங்கை. தன் அண்ணன்களும் அண்ணியும் அங்கு நிற்பதை கண்டவர் அவர்களை பார்த்து சிரித்துவிட்டு

“ஓஹ் கல்யாணவீட்டு காரங்களா, ஆனா என் வீட்டுக்கு ஏன் வந்து இருக்கீங்க.” என்று இடக்காகவே கேட்க

வீரபாண்டியன் ” பொண்ணோட அத்தைக்காரியை கல்யாணத்துக்கு கூப்பிடனும்ல. அதுக்குதான் வந்திருக்கான் ” என்று கூற

“அட பாரேன். நாந்தான் அத்தைக்காரியா எனக்கு தெரியவே இல்லையே. ஊருக்கே அழைச்சு முடிச்சிட்டு தான் அத்தைக்காரி ஞாபகம் வந்துருக்கு என் அண்ணனுக்கு.பரவால்ல அதுவரைக்கும் இன்னும் சாகமா உசுரோட இருக்கான்னு நெனப்பு இருக்கே”

” ஆமா. நீ ஏன் எனக்கு அழைப்பு வைக்கிற. என் பொண்ண கலங்க வச்சிட்டு நீ உன் மவனுக்கு கல்யாணம் பண்ணுவ அதுக்கு நானும் சூடு சொரணை இல்லாம வந்து நிப்பேனா. என் பொண்ணுக்கு நீங்க பண்ற அநியாயத்துக்கு சாட்சிக்கு என்னை கூப்பிடுறியா.” என்று ஆங்காரமாக கத்தியவர்

” எப்படின்னே உனக்கு மனசு வருது. என் பொண்ணு கலங்கி நிற்கிறாளே அது உன் கண்ணனுக்கு தெரியலையா. என் மகனுக்குன்னு வளர்த்தவள தான் ஏதோதோ சொல்லி இல்லாம பண்ணிட்டீங்க. சரி என் பொண்ணு வாழ்க்கையை மட்டுமாவது காப்பாத்தி கொடுப்பீங்கன்னு நான்தான் முட்டாள் தனமா உங்கள நம்பிட்டு இருந்துட்டேன் ” என்று அவர் குற்றம் சாட்டவும்

ரங்கநாயகி கோபம் கொண்டவர் ” என்ன பேசற மங்கை, ஆதிக்கு என் பொண்ணை கட்டி வைக்கணும்னு எல்லாரும் தான் ஆசைப்பட்டோம் ஆனா கடவுள் வேற நினைக்கிறப்போ நாங்க என்ன செய்ய முடியும். அன்னிக்கு இருந்த சூழ்நிலைல ஆதி கல்யாணம் யாருமே எதிர்பார்க்காத நடந்த ஒருவிஷயம்.அதுக்கு கூட எங்களை குத்தம் சொல்வியா நீ.

” இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு பிறகும் கூட நீயும் உன் மகளும் அவ மனச கெடுக்க பார்த்தீங்க. அதா நான் கேட்டா அதா நீ தப்புன்னு சொல்வியா. அப்படின்னா என் மகளை என்னனு நெனச்சிட்டு நீ” என்று திருப்பி கேட்க

” ஆமா அண்ணி. நீங்க பேசுவீங்க. ஏன் அன்னைக்குதான் சூழ்நிலை அதுக்கு பிறகு, மூணு வருஷம் என் பிள்ளை தனியா கெடந்தானே. அந்த சிறுக்கி மகளை அத்து விட்டுட்டு என் மகனுக்கு மதியை கட்டி வச்சிருக்கலாம்ல. செஞ்சீங்களா ” என்று அவர் முடிப்பதற்கு முன்னே

“சீச்சீ . என்ன பேச்சு பேசற மங்கை நீ. என் மகளுக்கு என்ன தலையெழுத்து, அப்படி ரெண்டாவதா ன்னாலும் உன் மகனை கட்டிக்கணும்ன்னு. எப்பவுமே உனக்கு உன் சுயநலம் தான் பெருசு இல்ல. எவ்ளோ சுலபமா சொல்ற அத்து விடுன்னு. என் பொண்ணை கட்டி கொடுத்து இருந்தா அவளையும் நீ இதே நிலையில நிறுத்தி இருக்கமாட்ட ன்னு என்ன நிச்சயம். அதோட பிடிக்காத மருமகன்னாலும் உன் அண்ணன் நடத்தி வச்ச கல்யாணம் அதை கூட யோசிக்கல ல நீ. நீயெல்லாம் என்ன மனுஷி. இதுல நீ மூணு பிள்ளைகளுக்கு அம்மா வேற ” என்று கொட்டி தீர்த்துவிட்டார் ரங்கநாயகி.

அவருக்கு பதில் சொல்ல முடியாமல் போகவும் ” என்னண்ணே பொண்டாட்டிய பேச விட்டு வேடிக்கை பார்க்கிறியா. அதுக்குதான் கூடவே கூட்டிட்டு வந்தியா. எனக்கு பிள்ளை வளர்க்க துப்பு இல்லன்னு சொல்லுது உன் பொண்டாட்டி அத நீ வேடிக்கை பார்க்கிறியா.இதுக்குதான் இங்க வந்தீங்களா மூணு பேரும்” என்று சுந்தரபாண்டியனிடம் கத்தியவர்

” நீ ஏண்ணே பேசாம இருக்க. உன் பங்குக்கு நீயும் ஏதாவது பேசு.அதுக்குதானே வந்திங்க, என் வயிறு எரியுறதை பார்க்க தான வந்திங்க. என் பொண்ணு கலங்கறத பார்க்கத்தானே வந்திங்க. பார்த்துட்டிங்கல போங்க, போய் உங்க வீட்ல கல்யாணம் பண்ணுங்க. போங்க “

” ஆனா ஒன்னு என் பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ண நீங்க யாருமே நல்லாவே இருக்க மாட்டீங்க. என் மக வாழ்க்கையை கெடுத்துட்டு சந்தோஷமா வாழ்ந்திடுவானா அவன். நிச்சயம் முடியாது, என் பொண்ணுக்கு அவன் பதில் சொல்லியே ஆகணும்” என்று அவர் கத்தும்போது வீரபாண்டியன் மங்கையை எதுவோ சொல்ல வாயெடுக்க ரங்கநாயகி பொறுக்க முடியாமல் மங்கையை அடித்திருந்தார்.

மங்கை அதிர்ச்சியில் நின்றுவிட ரங்கநாயகி பெருங்குரலில் அழத் தொடங்கியவர் அழுதுகொண்டே ” உனக்கு என்னடி பாவம் பண்ணோம் நாங்க. இந்த வீட்டுக்கு வாழ வந்த நாளா உன்னை மூத்த பொண்ணு மாதிரி நெனச்சேனே அதுக்காக சாபம் விடறியா.

” என் மகன் மூணு வருஷமா உள்ளுக்குள்ளேயே வச்சு மருகிட்டு கெடந்தானே. அப்பா மனசு சங்கடப்படும்,பெரியப்பா வருத்தப்படுவாங்க ன்னு அவன் அவன் துடிச்சிட்டு இருந்தான்டி. ஆனா நீ ஒரே நொடியிலே அவன் வாழமாட்டான்னு சொல்லுவியா. இன்னொருத்தியை விரும்புறான்னு தெரிஞ்சும் அவன் பின்னாடி சுத்தின உன் பொண்ணு ரொம்ப நல்லவ. என் பிள்ளை கெட்டவனா. என் பிள்ளை நல்லா இருக்கமாட்டானா.

” என் பிள்ளைங்க வாழ்க்கை நல்லா இல்லாம போனாலும் பரவால்ல. ஆனா உன் பிள்ளைங்க நல்லா வாழணுமா. என்ன நல்ல எண்ணம் மங்கை உனக்கு.நீ வரவே வேண்டாம் என் பிள்ளைங்க கல்யாணத்துக்கு. உன்னபோல ஒரு கேடுகெட்டவளோட ஆசிர்வாதம் அவங்களுக்கு வேண்டாம்.

” இனி உனக்கும் என் பிள்ளைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. என் பிள்ளைங்க கல்யாணத்துக்கு உனக்கு அழைப்பும் இல்ல.உன் பேச்சை எல்லாம் நீ இவ்ளோ பேசியும் அசையாம நிக்கிறாங்க பாரு உன் அண்ணனுங்க அவங்களோட நிறுத்திக்கோ. என் பிள்ளைகளை பத்தி இனி ஒரு வார்த்தை பேசின நானே உன்னை கொன்னுடுவேன்” என்று கத்திவிட்டு தன் கணவரிடம் இருந்த அழைப்பிதழ் இருந்த பையையும் தானே பிடுங்கி கொண்டு விடுவிடுவென நடந்துவிட்டார் அவர்.

வாசலில் நின்றிருந்த காரில் ஏறாமல் அவர் பாட்டுக்கு நடந்தவர் சற்று தூரமாக வந்தபிறகே சுயநிலைக்கு திரும்ப அதன்பிறகே இருக்கும் இடத்தை உணர்ந்தார். வீட்டுக்கு செல்லும் வழியில் செல்லாமல் வேறுபாதையில் நடந்திருக்க இங்கிருந்து வீட்டுக்கு செல்ல மீண்டும் வெகுதூரம் நடக்க வேண்டி இருக்க எதுவுமே யோசிக்காமல் அருகில் இருந்த கோவிலில் சென்று கண்மூடி அமர்ந்துவிட்டார் அவர்.

இங்கு மங்கையின் வீட்டில் நின்றிருந்த வீரபாண்டியனோ ” அண்ணி ங்கிறது அம்மாவுக்கு சமம் ன்னு சொல்லுவாங்க. ரங்கநாயகி உனக்கு இதுநாள் வரைக்கும் அப்படிதான் இருந்தா. ஆனா நீயே இன்னிக்கு உன் வாயால அதை கெடுத்துட்ட.

“அதுசரி நீ ஒரு நல்ல அண்ணியா நடந்து இருந்தா தானே உனக்கு அந்த உறவோட அருமை புரியும். நீ ஒரு நல்ல மருமகளாவும இல்ல, நல்ல பொண்டாட்டியாவும் இல்ல, உன் பிள்ளைகளுக்கு நல்ல அம்மாவாவும் இல்ல. நீ யாருக்காக இதெல்லாம் பண்றதா சொல்றியோ அந்த பிள்ளைகளே இன்னிக்கு உன்கூட இல்ல.

“இத்தனை பட்டும் உனக்கு புத்தி வரல இல்ல. நந்தினியை என்ன பண்ணனும் எப்படி சரி பண்ணனும்ன்னு எனக்கு தெரியும். நான் பார்த்துக்கறேன். ஆனா ரங்கநாயகி சொன்னது சரிதான். இனி உனக்கு எந்த அழைப்பும் இல்ல. என் மச்சானை நான் பார்த்துக்கறேன்.ஆனா நீ கல்யாணத்துக்கு வர வேண்டாம்.

” இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் மங்கை. என் ஆதி முன்னாடி நின்னு நடத்துவான். இனி உனக்கு உறவுன்னு யாருமே கிடையாது.நீ தனியாவே இரு, அப்போதான் உறவுகளோடு அருமை உனக்கு புரியும். இன்னியோட என் மச்சான் இந்த வீட்டுக்கு வரமாட்டாரு.

” இனி இது உன் வீடு. நீ இங்க ராணி மாதிரி இரு. நீ என்ன நினைக்கிறியோ அத பண்ணலாம்.உன்னை யாரும் எதுவுமே கேட்க மாட்டாங்க. உனக்கும் அதுதானே பிடிக்கும். நீ நிம்மதியா இரு மங்கை, ஆனா தாயில்லாத உன்னை நான் சரியாவே வளர்க்கலன்னு எனக்கு இன்னிக்கு நல்லாவே புரிய வச்சிட்ட நீ.

” அண்ணன் பிள்ளையை உன் பிள்ளையா நினைச்சு இருந்தா அப்படி ஒரு வார்த்தையா சொல்லி இருப்பியா நீ. உன் ஆசைப்படியே நடக்கட்டும் எல்லாரும் நாசமா போறோம் இருக்கட்டும். நீ நல்லா இரு” என்று நிதானமாகவே பேசி முடித்தவர் தம்பியை பார்க்க கண்ணீரோடு நின்றிருந்தார் அவர்.

அவரை தோளில் கைபோட்டு தன்னோடு அணைத்து கொண்ட வீரபாண்டியன் ” வா சுந்தரம். உன் வீட்ல கல்யாணம் வச்சிருக்க. அந்த வேலைய பாரு,மனுஷ குணமே இல்லாத ஒருத்திக்காக நீ ஏன் கண்ணீர் விடணும் வா ” என்று அவரையும் அழைத்துக் கொண்டு வெளியேறிவிட்டார் அவர்.

மங்கை சமைந்து நின்றார் இவர்களின் பேச்சில். தன் பிறந்த வீட்டு உறவுகள் தன்னை இப்படி கைவிடும் நிலையை அவர் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. ரங்கநாயகி என்றுமே கோபத்தில் அந்த நேரத்திற்கு ஏதாவது திட்டுவாரே ஒழிய அவரின் இந்த கத்தல்,ஆவேசம் எல்லாம் புதிது மங்கைக்கு.

அதுவும் இன்று அவர் மங்கையை கைநீட்டி அடித்திருக்க, அதுவே அதிர்ச்சி என்றால் தன் அண்ணி கடிந்து பேசினால் கூட உடனே உதவிக்கு வரும் அண்ணன் இன்று அமைதியாக நின்றது அதைவிட வலித்தது அவருக்கு. திருமணம் முடிந்த சில மாதங்களிலே தாயை இழந்திருக்க அன்றுமுதல் அவரை தாங்கிக்கொண்டது ரங்கநாயகி தான்.

அதிலெல்லாம் அவரை எந்த குறையும் சொல்லமுடியாது.அந்த அளவுக்கு பாசமாக தாங்கி கொள்வார் மங்கையை. அதன் பின்னர் வந்த காலங்களில் தான் மங்கையின் குணம் புரிய தன் எல்லையில் நின்றுவிட்டார் அவர்.அப்போதும் இருவரும் எதை கொண்டும் சண்டையிட்டது இல்லை இன்றுவரை.

இப்போது அதை எல்லாம் நினைத்த மங்கைக்கு கண்களில் கண்ணீர் நிற்கவே இல்லை.  உறவுகள் தன்னை தவிர்த்த இந்த நிலை அவரின் தோல்வியை அவருக்கு காட்டியதோ என்னவோ வாழ்வில் முதல்முறையாக கலங்கி நின்றார் மங்கை.

அதுவும் கந்தகுரு வரமாட்டார் என்று வீரபாண்டியன் சொன்னதை அவரால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.என்ன நடந்து இருந்தாலும், தான் என்ன செய்தாலும் இதுவரை யார்முன்பும் தன்னை விட்டு கொடுத்தவரில்லை அவர்

அப்படி இருக்க அவர் இல்லாத ஒரு வாழ்வை நினைத்து பார்க்கவே முடியவில்லை மங்கையால். அவரின் உலகம் அந்த இடத்தில் நின்றுவிட்டது போல் இருந்தது மங்கைக்கு. அப்படியே மடங்கி அமர்ந்துவிட்டார் அவர். கணவனும் இல்லை பிள்ளைகளும் இல்லை தன் அண்ணன்களும் இல்லை என்ன செய்ய போகிறேன் நான் ? என்ற கேள்வியே அவரை வதைக்க அப்படி ஒரு அழுகை வந்தது அவருக்கு.

விதைக்கும் காலம் முடிந்திருக்க இது அறுக்கும் காலமோ ???

Advertisement