Advertisement

அத்தியாயம் 16

நாட்கள் வேகமாக கடந்திருக்க திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்தன. திருமண வேலைகள் அனைவரையும் இழுத்துக் கொள்ள இரண்டு குடும்பத்தினரும் ஆளுக்கு ஒன்றாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.

வேந்தனும் தாமரையும் தங்கள் காதலை போனில் வளர்த்துக் கொண்டிருக்க, பெரும்பாலும் வேந்தனின் கேள்விகளுக்கு பதில் சொல்லி கொண்டிருப்பாள் தாமரை. வளவள வென்று பேசும் அவளுக்கு ஏனோ வேந்தனிடம் மட்டும் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டு பேச்சு வருவதில்லை. ஆனால் அதற்காக வேந்தனும் அவளை விட்டுவிடவில்லை

அவளை எப்படியாவது நான்கு வார்த்தைகள் பேசவைத்து கேட்டுவிட்டு தான் போனை வைப்பான் தினமும்.ஆனால் இன்னும் கூட அவளிடம் வீட்டில் நடந்து முடிந்திருந்த களேபரங்களை பற்றிக் கூறியிருக்க வில்லை அவன். அதை சொன்னால் இவன் பேசியதையும் சொல்ல வேண்டி வருமே.

எனவே எதையுமே அவளிடம் சொல்லாமல் இருப்பது உத்தமம் என்று நினைத்தவன் இன்றுவரை அவளிடம் அதைப்பற்றி எதுவும் பேசி இருக்க வில்லை.

இன்று வீரபாண்டியன் சென்னையிலிருந்து வருவதாக இருக்க அவருக்காக காத்திருந்தனர் அனைவரும். திருநெல்வேலி வரை விமானத்தில் வந்தவரை அழைத்து வருவதற்காக மதிமாறனும், ஆதித்யனும் ஏற்கனவே விமான நிலையம் கிளம்பி இருந்தனர்.

திருமணத்திற்கு முழுதாக பத்து நாட்கள் மட்டுமே மீதமிருக்க, வீரபாண்டியன் இல்லாமல் எதுவும் செய்ய சுந்தரபாண்டியனுக்கு விருப்பம் இல்லாமல் போகவே பெரிதாக நிச்சயம் என்று எதுவும் நடந்திருக்கவில்லை.ஆனால் திருமணத்தை பற்றி இருவீட்டார் சார்பிலும் முறையாக ஊராருக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இங்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் அத்தனையும் சிறிதும் தொய்வில்லாமல் நடந்து கொண்டிருக்க, அங்கு நந்தினியோ பெரிய வீட்டின் ஒரு அறையில் முடங்கி இருந்தாள். கந்தகுரு சொன்னதுபோலவே அவளை ஆதித்யனிடம் கொண்டு வந்து விட்டிருக்க, இரண்டு நாட்களாக இந்த வீட்டில் தான் அவளின் வாசம்.

ஆனால் அந்த வீட்டுக்குள் நுழைந்தது முதல் அப்படி ஒரு அமைதி அவளிடம். சக்தி ஏதாவது வந்து பேசுவாள் அவளை ஒரு வழி செய்துவிட வேண்டும் என்று அவள் நினைத்திருக்க அவளோ இவள் இருக்கும் பக்கம் கூட திரும்பவில்லை. இவள் வீட்டுக்கு வந்தபோதும் வா  அழைக்கவில்லை சக்தி.

“ வந்தாயா வா” என்பதுபோல் தான் இருந்தது அவள் செய்கை. அதற்குப்பிறகும் அவள் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தன் வேலைகளை பார்க்க உள்ளுக்குள் குமுறி கொண்டிருந்தாள் நந்தினி.

ஆதித்யனும் அவளை பெரிதாக எதுவும் கேள்வி கேட்கவில்லை இப்போதுவரை. நடந்தது அனைத்தையும் தந்தை மூலமாக அறிந்து இருந்தாலும் ஏனோ அமைதியாகவே இருந்தான் அவன். இப்போதும் வீரன் வருவதால் அவரை அழைக்க செல்கிறேன் என்று கூறிவிட்டு அவன் காலையிலேயே கிளம்பி இருக்க, அவன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் சக்தியும் கிளம்பி இருந்தாள்.

பெரியவர்கள் இருவரும் வீட்டில் இருக்க தன் அறையில் அடைந்து கொண்டவள் இன்னும் வெளியே வந்திருக்கவில்லை. சிவகாமி என்னதான் அவளிடம் நெருக்கமாக பேச முயன்றாலும் அவர் உட்பட அனைவரிடமும் தனித்தே நின்றாள் அவள். இவர்கள் இருவருக்கும் என்னைவிட அந்த சக்தி தான் முக்கியம் என்ற எண்ணம் அவள் மனதில் பல வருடங்களாக ஆழப்பதிந்திருக்க இப்போது அவளால் அதை மாற்றிக்கொள்ள முடியவில்லை.

இன்னும் கூட பெரிதாக யாரிடமும் ஒன்றும் பேசிடவில்லை அவள். தட்டில் வைப்பதை உண்டுவிட்டு அறையில் சென்று அடைந்து கொள்பவள் இரண்டு நாட்களாக கல்லூரிக்கு கூட செல்லவில்லை. இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்க இப்போது அதிலும் நாட்டமில்லாமல் போனது. வேந்தன் மட்டுமே நிறைந்திருந்தான் எண்ணம்  முழுவதும்.

இந்த கல்யாணத்தை நடக்க விடாமல் செய்ய என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையில் இருந்தாள் அவள். நாளின் முழுநேரமும் அதற்கே சரியாக போனது அவளுக்கு.

இங்கு ஆதித்யனும் மதியும் வீரபாண்டியனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வர தன் அண்ணனை வாசலிலேயே வந்து வரவேற்றார் சுந்தரபாண்டியன். வேந்தனும் தன் பெரியப்பாவுக்காக காத்திருந்தவன் அவரை கண்டதும் இறுக்கமாக தழுவிக் கொண்டான்.

அவன் மீது எத்தனை கோபம் இருந்தபோதிலும் அந்த நொடி அனைத்தையும் மறந்து அவனை தழுவிக் கொண்டார் வீரபாண்டியன்.  பெரிய தந்தையா கண்டவனுக்கு கண்கள் கலங்கும் போல் இருக்க முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான் அவன். அதோடு நிற்காமல் அவர் காதில் ” சாரிப்பா ” என்று வேறு உரைக்க அதற்குமேல் கோபம் இருக்குமா வீரபாண்டியனுக்கு.

“விடுடா” என்று மகனை அணைத்து விடுவித்தவர் அருகில் நின்றிருந்த செவ்வியையும், மதியழகியையும் அப்போதுதான் பார்த்தார். இருவரையும் பார்த்து புன்னகைத்து ” என்ன பொண்ணுகளா ரெண்டு பெரும் எனக்கு நல்ல சேதி சொல்ல போறீங்க போலவே ” என்று கேட்க

செவ்வி முகம் சிவக்க, மதி புன்னகையுடன் தன் பெரியப்பாவை ஏறிட்டாள். அவள் முகத்திலிருந்த புன்னகை வீரனுக்கு திருப்தியாக இருந்தது. அதே சிரிப்புடன் வந்து அவர் சோபாவில் அமர அப்போதுதான் அவர் கண்ணில் பட்டார் ரங்கநாயகி.

“வாங்க மாமா” என்று அவர் வரவேற்க

“வந்துட்டேனே மா.” என்று அவருக்கு பதிலளித்தவர்  ” கூடவே என்ன சொல்றாங்க உன் மருமகபிள்ளைங்க ” என்று கேட்க

ரங்கநாயகி சிரித்தவாறு ” என்ன சொல்றாங்க. ரெண்டு பேரும் தங்கம் தான் மாமா. எந்த குறையுமே சொல்ல முடியாத பிள்ளைங்க. எங்க தேடினாலும் இப்படி பிள்ளைகளை பார்க்க முடியாது மாமா” என்று பெருமையாக கூறினார்.

“ம்ம். இன்னும் வீட்டுக்கே வரல அதுக்குள்ள இத்தனை பெருமையா. ஏன் என் பிள்ளைகளுக்கு என்ன குறைச்சல். ரெண்டும் தங்கம்தான்”

“நீங்க தான் மெச்சிக்கணும். என் பொண்ணை பத்தி எனக்கு கவலை இல்ல.ஆனா இவன் இருக்கான் பாருங்க, இவன எந்த கணக்குல சேர்க்கறதுன்னே புரியல எனக்கு. சாதாரண விஷயமா இவன் செஞ்சது” என்று கோபப்பட

“அதுதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதே. ஏன் பழசை பேசி நீயும் கஷ்டப்பட்டு அவனையும் வாட்டிட்டு இருக்க. அவனும்தான் வேற என்ன செய்வான் சொல்லு. முதல்ல அவன் ஆசையா உங்கிட்ட தானே வந்து சொன்னான்.”

“உன் நாத்தனார் செஞ்ச வேலைக்கு அவன் அத தவிர ஒன்னும் செஞ்சிருக்க முடியாது. உங்களுக்கு உங்க குடும்ப கௌரவம் முக்கியம்.உன் புருஷனுக்கு தங்கச்சி மக முக்கியம். ஆனா அவனுக்கு அது வாழ்க்கை இல்லையா. அதான் துணிஞ்சிட்டான். விடு அவனை எதுவும் சொல்லாத. ஏற்கனவே உணர்ந்துட்டான் இதுக்குமேல இதப்பத்தி பேசி நோகவைக்காத” என்று அவர் வேந்தனுக்கு ஆதரவாக பேச

” நீங்க அவனை விட்டு கொடுத்துட்டாலும். உங்க தைரியத்துலதான் ஆடிட்டு இருக்கான்” என்று நொடித்துக் கொண்டார் அப்போதும் அவர். இப்போது ஆதித்யனும் இடையிட்டு ” விடுங்க அத்தை. அதான் எல்லாம் முடிஞ்சதே. இன்னும் எதுக்கு அது. கல்யாண வேலையெல்லாம் எப்படி போகுது. இன்னும் என்ன வேலையெல்லாம் இருக்கு. சொல்லுங்க.ஆளுக்கு ஒண்ணா பார்ப்போம்”

“கல்யாண வேலையெல்லாம் நல்லாவே நடக்குது ஆதி. கல்யாணத்துக்கு துணி எடுக்கணும் ஆதி. அவங்க வீட்ல பேசி எப்போ தோதுப்படும்ன்னு கேக்கணும். உன்மாமா கிட்ட நேத்து சொன்னேன், இன்னும் கேட்டுட்டு இருக்காரு.” என்று அவர் கணவரையும் வம்பிழுக்க,நிஜமாகவே சுந்தரபாண்டியன் மறந்துதான் இருந்தார்.

இப்போது ஆதித்யனை அவர் பாவமாக பார்க்க, மதி தன் தந்தையின் நிலையை உணர்ந்து அவனே விசாலத்திற்கு அழைத்துவிட்டான். அவரிடம் பொதுவாக விசாரித்துவிட்டு தாய் கூறிய விஷயத்தை கூறி அவர்களுக்கு எப்போது நேரம் ஒத்து வரும் என்று கேட்க, விசாலம் நாளையே நல்ல நாளாக இருப்பதால் நாளை சென்று வருவோம் என்று கூற அதை தன் தாயிடம் தெரிவித்தான் அவன்.

இப்படியாக ஒருவழியாக நாளை அனைவரும் திருமண பட்டு எடுக்க செல்வதாக முடிவானது. அந்த நாள் வீரபாண்டியனின் வரவால் மகிழ்ச்சியாக மாற ஆதித்யனும் அங்கேயே இருந்தான். வேந்தனும், ஆதித்யனும் வீரபாண்டியனை விட்டு நகராமல் அவரை ஒட்டிக்கொண்டு சுற்ற அவர்களின் சிறுவயது கண்முன் வந்துபோனது வீரபாண்டியனுக்கு.

சின்ன வயதில் இவர்கள் இருவருக்கும் வீரபாண்டியன் தான் எல்லாம். மற்ற பிள்ளைகளை விட இவர்கள் இருவரும் ஓட்டுதல் அதிகம் வீரபாண்டியனிடம். அவர் எப்போதாவது வந்தாலும் இவர்களின் பெரும்பாலான நேரங்கள் அவருடனே கழியும். காலப்போக்கில் அணைத்தும் மாறி இருக்க, இன்று மீண்டும் இருவரும் அவருடன் ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

மூவரும் வேந்தனின் அரிசி மில்லுக்கு வந்திருக்க, அங்குதான் அமர்ந்துகொண்டிருந்தனர். வேந்தனின் மூன்று வருட உழைப்பு அந்த மில்லின் ஒவ்வொரு இடத்திலும் தெரிய மிகவும் பெருமையாக உணர்ந்தார் வீரபாண்டியன். அதை வேந்தனிடமும் அவர் கூற, ஆதித்யனும் அவனை கட்டிக்கொண்டு வாழ்த்தினான்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் படிப்பை முடித்து வந்தவன் அண்ணனோடு டிரான்ஸ்போர்ட் செல்ல விரும்பாமல் வீரபாண்டியனிடம் வந்து நிற்க, அவனுக்கு பணம் மட்டுமே கொடுத்து உதவி இருந்தார் வீரபாண்டியன்.ஆனால் அதன் பிறகான அத்தனை போராட்டங்களும் அவன் ஒருவனுடையதே. யாரையும் அவன் துணைக்கு அழைக்கவில்லை.

ஆரம்ப காலங்களில் சிறிது திணறிய போதும் இந்த மூன்று ஆண்டுகளில் அவன் வளர்ச்சி அசுர வளர்ச்சிதான்.தாமரையை அவன் விரும்பியது, அவளின் மறுப்பு, வீட்டு பிரச்னை எதுவுமே அவனை அசைக்கவில்லை. ஒருசிலரை போல் கிடந்து புலம்பாமல் அவன் தன் மொத்த கோபத்தையும் தன் தொழிலில் காட்ட அது அவன் வெற்றியை உறுதிப்படுத்தி இருந்தது.

மூவரும் மாலை வரை மில்லில் சுற்றிக்கொண்டு இருக்க வீரபாண்டியன் தனஞ்செயனை பார்க்கவேண்டும் என்று கூறியதால், மாலை அவன் தோட்டத்திற்கு செல்ல, அங்கே கூலி பங்கிட்டுக் கொண்டு இருந்தான் புது மாப்பிளை.

சட்டையெல்லாம் சற்று அழுக்காகவும், கசங்கியும் இருக்க தலைமுடி கூட கலைந்துபோய் களைத்து போனவனாக அமர்ந்திருந்தான் அவன். ஆனால் அந்த நிலையிலும் புன்னகை வாடாமல் தன் வேலையாட்களிடம் ஏதோ பேசி சிரித்துக் கொண்டு இருந்தவன் இவர்களை கவனிக்கவே இல்லை. அங்கே வெளி முடித்து நின்றிருந்த ஒரு பாட்டி ” ஏன் ராசா, புது மாப்பிள  நீ. நீ வராட்டி தான் என்ன, ஏன் உன் அப்பன் கூலி கொடுக்கமாட்டானா. இப்போகூட இப்படி உழைக்கணுமா என் தங்கமே” என்று அவனை நெட்டி முறிக்க

” அப்பா கல்யாண வேலையா அலைஞ்சிட்டு இருக்காங்க பாட்டி.அதோட புது மாப்பிள்ளையானா என் தோட்டத்துக்கு நான் வரக்கூடாதா. ” என்று அவன் வாயடிக்க

” உன்னை வரக்கூடாதுன்னு யாரு சொன்னது ராசா. அடிக்கிற வெயில் மொத்தமும் உன் தலையில விழுந்து நீ காக்கா கலருக்கு வந்துட்டா, அந்த பொண்ணுக்கு உன்ன அடையாளம் தெரியனும்ல” என்று அவனை வம்பிழுக்க

” அதெல்லாம் என் பொண்டாட்டிக்கு என்னை தெரியும். அப்படியே தெரியாட்டியும் அதை நான் பார்த்துக்கறேன். நீ கெளம்பு கிழவி” என்றான் அவன்.

“ஆத்தி கேட்டியா சேதிய. கல்யாணமே முடியலையாம். அதுக்குள்ள பொண்டாட்டியாம்ல. விசாலத்துக்கு கடைசி காலத்துல அவ பொண்ணுதான் கஞ்சி ஊத்தனும்போலவே ஆண்டவா ” என்று அவர் ராகமிழுக்க

” ஏன் என் பொண்டாட்டி இருக்கும்போது என் அம்மாக்கு ஏன் தாமரை கஞ்சி ஊத்தணும். அதெல்லாம் என் பொண்டாட்டி கறிசோறு போடுவா. உன் மருமக உன்ன இடிச்சா நீயும் என் வீட்டுக்கு வா உனக்கும் சேர்த்தே போட சொல்றேன்” என்று நக்கலாக கூற

அந்த பாட்டி நொடித்துக் கொண்டவர் ” நீ ஏம்லே எனக்கு சோறு போடணும், இது வைரம் பாய்ஞ்ச கட்டை. இன்னும் என் நாள் இருக்க வரைக்கும் என்னால உழைச்சு சாப்பிட முடியும் போடா.” என்றவர் கூடவே ” கொடுத்து வச்சவ தான் உன் பொண்டாட்டி, இப்படி விட்டுக்கொடுக்காத புருஷன் கிடைச்சிருக்கானே. நல்லா இருப்ப ராசா ” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

வீரபாண்டியன் அண்ட் கோ அங்கு நடந்த அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்தாலும், எதிலும் தலையிடாமல் தள்ளி நின்றே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது மூவரும் தனாவை நெருங்க, வீரபாண்டியனை பார்த்ததும் எழுந்து நின்றவன் மரியாதையாக வணக்கம் சார் என்று கைகூப்பி இருந்தான்.

அவனுக்கு தானும் பதிலுக்கு வணக்கம் சொல்லி கைகூப்பிய வீரபாண்டியன் ” இந்த சார் நல்லா இல்லைங்களே மாப்பிள ” என்று இயல்பாகவே கூற

” இனிமே சொல்லலைங்க மாமா ” என்று அவனும் இலகுவாகவே கூறிவிட, சத்தமாக சிரித்துவிட்டார் வீரபாண்டியன். உடனிருந்த வேந்தனும், ஆதித்யனும் இவர்களை வேடிக்கை பார்க்க

” இன்னிக்குதான் மாப்பிள ஊர்ல இருந்து வந்தேன். என் மகளை கட்டிக்க போறீங்க, நான் பார்க்காம எப்படி. அதான் வந்துட்டேன்.என் மாப்பிளையை பார்க்க ” என்று கூற

” உங்க மாப்பிள எப்படி மாமா. அட்லீஸ்ட் பார்டார்லயாச்சும் பாஸ் ஆவேனா ” என்று கேட்க

” அதெல்லாம் நூத்துக்கே நூறே போட்டுக்கலாம் மாப்பிள.” என்று அவர் கூறியதும்

” இந்த ங்க வேண்டாமே மாமா. தனான்னே கூப்பிடுங்க. இவங்களை எல்லாம்  பேர் சொல்லித்தானே கூப்பிடுவிங்க ” என்று கூற

” இந்த பயல்களும் நீங்களும் ஒண்ணா மாப்பிள.” என்று சட்டென்று அவர் கேட்டுவிட வேந்தனும் ஆதித்யனும் அவரை முறைக்க தனா சிரித்தவன் “கண்டிப்பா மாமா. இவங்களை மாதிரியே என்னையும் நினைங்க. மரியாதை கொடுக்கிறேன்னு தள்ளி நிறுத்த வேண்டாமே” என்று அவன் கேட்டுக்கொள்ள அங்கே வீழ்ந்தார் வீரபாண்டியன்.

அவரின் மாப்பிளைக்கு தீவிர விசிறியாகி போனார் அவர். நாளை திருமண பட்டு எடுக்க செல்வதை பற்றி பேசிக் கொண்டவர்கள், எத்தனை மணி, எங்கே என்று பேசி முடிவு செய்து கொண்டு ஒருவழியாக பிரிந்து சென்றனர். ஆனால் கடைசி வரை வேந்தன் தனாவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதேநேரம் தனாவும் வேந்தனிடம் பேச முயற்சிக்கவில்லை.

உடன் இருந்த இருவரும் இதை கண்டுகொண்டாலும் ஒரு வார்த்தை கூட அதை பற்றி பேசிக்கொள்ளாமல் கண்ஜாடையோடு நிறுத்திக் கொண்டனர் .

Advertisement