Advertisement

அத்தியாயம் 15

செவ்வந்தி கருவுற்ற செய்தியால் சுந்தரபாண்டியனின் வீடு மகிழ்ச்சியில் திளைத்திருக்க, அதற்கு நேர்மாறாக மாறி இருந்தது கந்தகுருவின் வீடு. நந்தினி இரண்டு நாட்களாக வீட்டிலேயே அடைந்து கிடக்க அறையை விட்டு கூட வெளியேறவில்லை அவள். மங்கை வீட்டின் ஒரு மூலையில் முடங்கி இருந்தார்.

இவர்கள் இப்படி இருக்கும் அளவிற்கு என்ன நடந்து விட்டது என்றால் நடத்தி இருந்தார் கந்தகுரு. அன்று தனஞ்செயன் அவரை பார்க்கவேண்டும் என்று போனில் அழைத்தபோது கூட ஏதாவது திருமணத்தை பற்றி பேசவாக இருக்கும் என்று நினைத்து தான் அவர் அவனை வரச் சொன்னது.

ஆனால் வந்தவன் கூறிய செய்திகளில் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றிருந்தார் மனிதர். தன் மகளுக்கு சக்தியை பிடிக்காது அதனால் ஏதோ தாயின் போதனையில் புரியாமல் நடக்கிறாள் என்று அவர் நினைத்திருக்க, அப்படி இல்லை என்று புரிய வைத்திருந்தாள் அவர் மகள்.

தனஞ்செயன் அன்று கல்லூரியில் நந்தினி நடந்துகொண்டது முதல் நேற்று மதியழகி அவனை வந்து சந்தித்து திருமணத்தை நிறுத்த சொன்னாள் என்பது வரை அனைத்தையும் தேவையான அளவில் அவரிடம் தெரிவித்திருக்க அதிர்ச்சிதான் மனிதருக்கு.

அதுவும் நிச்சயம் நடக்கவில்லை என்றாலும் எல்லாம் முடிந்து உறுதி செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்த சொல்கிறாள் என்றால் எந்த அளவுக்கு இவள் பேசி இருக்க வேண்டும் தோன்ற மனம் வெறுத்து போனது அவருக்கு.

ஆனால் தன் கவலையில் மூழ்க இது நேரமில்லையே. எதிரில் நிற்பவனுக்கு பதில் சொல்ல வேண்டுமே.பெறாவிட்டாலும் அவளும் மகளை போன்றவளாயிற்றே அவள் வாழ்வை சரிசெய்ய வேண்டுமே என்று தன்னை தேற்றியவர் தனாவை நிமிர்ந்து பார்த்தார்.

” என்னை மன்னிச்சிடு…” என்று அவர் ஆரம்பிக்கும்போதே அவன் அவரது கைகளை பற்றிக் கொண்டவன்

“ஐயா. நீங்க மன்னிப்பு கேட்கணும்ன்னு நான் எதையுமே உங்ககிட்ட சொல்லல. அதோட கல்யாணத்தை நிறுத்தற முடிவும் எனக்கு இல்ல.

அந்த புள்ள பாவம் ஐயா, வீட்ல ஏதோ பிரச்சனை போல, தன்னால இன்னும் ஏதாவது அசிங்கம் வந்திற போதுன்னு என்கிட்டே வந்து அழுதுட்டு போய்ட்டா. ஆனா கொஞ்சம் யோசிங்க வேற யார்கிட்டயும் அவ இப்படி புலம்பி இருந்தா அவ நிலைமை என்ன. அவங்க வீட்ல என்ன பிரச்சனைன்னு கேட்கிற அளவுக்கு இன்னும் எனக்கு உரிமை வரல.

ஆனா அவ அழாம இருக்க ஏதாவது செய்யணும்னு தோணிச்சு.அதான் உங்கள தேடி வந்திட்டேன்..நீங்க இதுக்குமேல என்ன செய்யணுமோ பார்த்துக்கோங்க ஐயா.” என்று கூறி அவரை கையெடுத்து கும்பிட்டு விடை பெற அவனை கட்டியணைத்துக் கொண்டார் கந்தகுரு.

” சுந்தரபாண்டியன் கொடுத்து வச்சவன் தான் தனா. அவனுக்கு நீ மாப்பிள்ளையாக போறியே. உன் மனசுக்கு நீ நல்லாயிருப்பைய்யா ” என்று அவனை வாழ்த்தியவர்  ” என் வீட்டு சிக்கலை நான் பார்த்துக்கறேன். இந்த கல்யாணத்துக்கு நான் பொறுப்பு. நீ போய் ஆகற வேலைய பாரு” என்று அவனை அனுப்பி வைத்தார் அவர்.

என்ன செய்ய வேண்டும் என்பதை பொறுமையாக யோசித்து முடிவு செய்தவர் வெகுநேரம் அன்று தோப்பிலேயே கழித்தார். அதற்கு பின்பும் கூட வீரபாண்டியனுக்கு அழைத்து பேசிக்கொண்டிருந்தவர் அவர் கூறியவற்றையும் கேட்டுக் கொண்டு அதன் பின்பே வீட்டிற்கு கிளம்பினார் அன்று.

வீட்டுக்கு வந்தவர் வீட்டிலிருந்த இரண்டு பேரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக சென்று படுத்துவிட்டார். அன்று இரவு அவர் சாப்பிட கூட இல்லை. மங்கை அழைத்து பார்த்தவர் அவர் பதில் சொல்லாமல் முறைத்ததில் தானும் வந்து படுத்துவிட்டார்.

ஆனால் அடுத்தநாள் காலை தன் மகளை அழைத்தவர் ” இன்னும் ரெண்டு நாள்ல உன்னை கூட்டிட்டு போய் பெரிய வீட்ல விட்டுடறேன். இங்க இருக்க உன் பொருளையெல்லாம் எது வேணுமோ பார்த்து எடுத்து வச்சிக்கோ. நீ இனிமே அங்கே இருந்தே காலேஜுக்கு போயிட்டு வந்திடு. உன் அண்ணன் உன்னை பார்த்துக்குவான்” என்று சொல்லிக்கொண்டே போக

” யாரை கேட்டு முடிவு பண்ணீங்க நீங்க. நான் ஏன் என் வீட்டை விட்டு அங்க போய் இருக்கணும். என்னால முடியாது. என் அம்மாவை விட்டு நான் எங்கேயும் போகமாட்டேன். இது என் வீடு. நான் எங்கேயும் போகமாட்டேன்” என்று அவள் கத்த

” இது உன் வீடா. எப்பவுமே இது உன் வீடு இல்ல. நீ பெரிய வீட்டு பொண்ணுதான் எப்பவும். நான் கட்டிட்டு வந்த கழிசடையால இங்க வந்து இருக்கேன்.நீயும் ஏன் இங்க இருக்கணும். நீ பெரிய வீட்டுக்கு கிளம்பற வழியை பாரு.” என்று உரைத்து விட

மங்கை பொங்கியவர் ” யாரை கழிசடைன்னு ஜாடை பேசறீங்க. நான் அப்படிதான்னா ஏன் என்னோட குடும்ப ……” இன்னும் என்ன பேசி இருப்பாரோ கந்தகுருவின் ஒரு அறை அவர் வாயை மூடி இருந்தது.

“நீ வாயே திறக்கக்கூடாது இனி. இந்த வீட்ல உன் குரல் கேட்கவே கூடாது.புரியுதா.” என்று அவரை முறைக்க ஆரம்பித்தார் கந்தகுரு

மங்கை நடுங்கி போய் நிற்க  ஆனால் நந்தினி இப்போதும் பயப்படாமல் “நான் எங்கேயும் போகமாட்டேன் பா. நீங்க அடிச்சாலும் சரி ” என்று அழுத்தமாக கூற

” உன்னை அந்த வீட்டுக்கு அனுப்ப சொன்னது உன் பெரிய மாமன். ரெண்டு நாளில் வந்து கூட்டிட்டு போறதா சொன்னது உன் அண்ணன். நீ எது பேசுறதா இருந்தாலும் அவங்க ரெண்டு பேர்கிட்ட தான் பேசணும் இனிமே. அதோட அடிச்சாலும்ன்னா சொன்ன.” என்று கேட்டவர், மங்கையை இன்னும் இரண்டு வைத்தார்.

பின் மகளிடம் திரும்பி ” என்னமா பண்றது பொண்ணா போய்ட்டியே.அடுத்த வீட்டுக்கு வாழப்போற, உன்னை அடிக்க முடியுமா. அதான் இனி நீ என்ன பண்ணாலும் நான் இவகிட்ட கேட்டுக்கறேன். நீ போய் கெளம்புடா ” என்றவர் அதற்குமேல் அங்கு நிற்காமல் நடந்து விட்டார்.

நந்தினிக்கு அப்படி ஒரு அதிர்ச்சி தந்தையின் வார்த்தைகளில். எப்போதும் அவளை திட்டாதவர் தான். முன்பு சக்தி விஷயத்தில் ஒருமுறை தன்னை கைநீட்டியதோடு சரி. அதற்குப்பிறகு கூட அவளிடம் நல்ல முறையில்தான் பாசம் காட்டி வந்தார். மகளாக இவள் என்ன செய்திருந்த போதும் தந்தையாக அவர் தன் கடமைகளில் தவறியதே இல்லை.

ஏன் இளவேந்தன் விஷயத்தில் கூட அவருக்கு பெரிதாக எந்த எதிர்ப்பும் இருந்தது இல்லை.ஆனால் அவன் தாமரையை விரும்புவது தெரிந்ததும் தான் மனிதர் மாறிப் போனார். ஆனால் அப்போது கூட தன்னை ஒருவார்த்தை கூட கடிந்து பேசவில்லை அவர். ஆனால் இன்று வீட்டை விட்டு வெளியேற்ற முடிவு செய்துவிட்டார் என்பதை அவளால் தாங்கவே முடியவில்லை.

ஆனால் இப்போதும் “இவருக்கும் என்னைவிட அந்த தாமரை முக்கியமாக போய்விட்டாளா” என்று சரியாக தவறான வழியில் யோசித்துக் கொண்டிருந்தாள் அவள். தாமரை இல்லையென்றால் எல்லாம் சரியாக நடந்திருக்கும் என்பது அவள் மனதில் ஆழ பதிந்து போனது.

இரண்டு நாட்களாக இதே சிந்தனை தான். தன் அறையை விட்டு அவள் வெளியே வரவே இல்லை. உணவுகூட மங்கையின் வற்புறுத்தலால் ஏதோ இறங்கி கொண்டிருந்தது. பல நேரங்களில் வேந்தனை நினைத்து அழுபவள் அதற்கு அடுத்தநொடியே தாமரையை எண்ணி கனன்று போவாள். கூடவே தன் அண்ணன், சக்தி, தந்தை என்று அனைவரின் மீதும் கோபம் வர அப்படி ஒரு அழுத்தத்தில் இருந்தாள் அவள்.

எல்லோரையும் கொன்றுபோடும் அளவுக்கு அவள் மனதில் வெறி கிளம்பியது சில நேரங்களில். ஆனால் தன் மாமனையும் அண்ணனையும் மறுத்து பேச தைரியம் இல்லாததால் அமைதியாக இருந்தாள் அவள்.

சுந்தரப்பாண்டியனின்  வீட்டில் செவ்வி கருவுற்று இருப்பது தலைப்பு செய்தியாகி இருக்க வீடே தாங்கியது அவளை. கோவிலில் வைத்து நல்ல செய்தி கிடைத்திருக்க உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்தார் ரங்கநாயகி. சும்மாவே மருமகளை தாங்கிக் கொள்பவர் அவர்.இப்போது அவள் கருவுற்று இருக்க கவனிப்பு இன்னும் அதிகமாகி போனது.

நேற்று கோவிலில் இருந்து திரும்பியவுடன் சிவகாமிக்கு அழைத்து சொல்லி இருக்க, தன் கணவருடன் வந்து பார்த்து சென்றிருந்தார் அவர். நேற்று இரவு ஆதித்யன் சக்தியுடன் வந்து தங்கையை சீராட்டி விட்டு சென்று இருந்தான். வேலை முடிந்து வந்தவுடனே அந்த நேரத்தில் அவன் வந்து நின்றது செவ்வியை கண்கலங்க செய்தது.

மதிமாறன் தன் மனைவியை தாங்கி கொண்டான் என்றுதான் சொல்லவேண்டும். கோவிலிருந்து திரும்பிய உடனே கிடைத்த முதல் தனிமையில் அவளை கொஞ்சி கொண்டவன் அதன்பிறகும் கூட அவள் மீது இருந்த கோபத்தை காட்டிக்கொள்ளவே இல்லை என்பதை விட மறந்து போயிருந்தான்.

இன்றும் அதுபோலவே செவ்வி சோபாவில் அமர்ந்திருக்க மதியழகி அவள் அருகில் அமர்ந்துகொண்டு இளமாறனை கையில் வைத்துக்கொண்டு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தாள். அவனும் சமத்தாக தன் அத்தையிடம் அமர்ந்துகொண்டு தன் அன்னைக்கு பழிப்பு காட்டிக் கொண்டிருக்க, அவனை ரசித்துக் கொண்டு கதை பேசி கொண்டிருந்தனர் பெண்கள் இருவரும்.

திருமணத்திற்கு நாள் நெருங்கி கொண்டிருக்க, மதிக்கு தேவையானவற்றை எல்லாம் வாங்கிவிட வேண்டும் என்று பட்டியலிட்டுக் கொண்டிருந்தனர் இருவரும். இருவரும் தங்களுக்கு தெரிந்ததை சொல்லி விவாதித்துக் கொண்டிருக்க,அந்த நேரம் மருமகளுக்கும் மகளுக்கும் பழச்சாறு கொண்டுவந்து கொடுத்துவிட்டு பேரனை வாங்கி கொண்டார் ரங்கநாயகி.

” சீக்கிரமா சேலையெல்லாம் எடுத்துரனும் செவ்வி. ஜாக்கெட் எல்லாம் தச்சு வர நேரம் வேணும்.இல்லன்னா கடைசி நேரத்துல அலைய வேண்டியதா போய்டும்” என்று அவர் சொல்ல

செவ்வி தலையாட்டியவள் ” அதுவும் சரிதானத்தை. நீங்க மாமாவை சீக்கிரமே தாமரை வீட்ல பேச சொல்லுங்க” என்று கூற அப்போதுதான் ” மறந்தே போனேன் பாரு. உங்க அப்பா பத்திரிக்கை வைக்க சொந்தகாரங்க பேரையெல்லாம் ஒரு லிஸ்ட் எழுத சொன்னார் மதி. ஓடு நோட்ட கொண்டு வா ” என்று அவளையும் விரட்டினார்.

கல்யாண வேலைகள் சூடு பிடித்திருக்க ஆளுக்கு ஒன்றாய் பிரித்து பார்த்துக் கொண்டிருந்தனர் வீட்டினர் அனைவரும். ஆண்கள் வெளி வேலைகளை கையில் எடுத்துக்கொள்ள பெண்கள் அவர்களுக்கு உதவி கொண்டிருந்தனர்.

இப்போது செவ்வி இப்படி இருக்கவும் அவளை அலைய வைக்காமல் பத்திரிக்கை வைக்கவும் பெரியவர்களே பெரும்பாலும் அலைந்து கொண்டிருக்க, தொழில் வட்டத்திற்கு மதிமாறன் பொறுப்பெடுத்துக் கொண்டிருந்தான்.

இவர்கள் லிஸ்ட் எடுத்துக் கொண்டிருக்க அந்த நேரம் உள்ளே நுழைந்தான் வேந்தன். கையில் ஏதோ பெரிதாக இரண்டு மூன்று பாலித்தீன் பைகள் இருக்க, செவ்வியிடம் நின்று கூட பேசாதவன் ஏன் அவள் இருக்கும் திசைக்கே திரும்பாதவன் இன்று அவளிடம் அவற்றை நீட்டி இருந்தான்.

அவள் திகைத்துப்போய்  அவனை பார்க்க அவள் பார்வையில் நெளிந்தவன் பையை டீபாயில் வைத்துவிட்டு அவளை பார்த்து லேசாக சிரித்துவிட்டு “சாரி அண்ணி ” என்றிருந்தான்.

செவ்வியின் முகத்தில் அந்த ஒரு வார்த்தைக்கே ஏதோ பெரிதாக சாதித்து விட்டதை போன்ற ஒரு உணர்வு. அவள் கண்கள் கண்ணீரை உற்பத்தி செய்ய தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அவனுக்கு தலையசைத்து இருந்தாள் அவள்.

ரங்கநாயகிக்கு மகன் செய்தது திருப்தியாக இருந்தாலும் மருமகளை இயல்பாக்க ” இந்தா பாரு. அவனை நம்பி இத்தனை சந்தோஷப்படாத.நாளைக்கே திரும்ப மலையேறிடுவான். அப்புறம் பழையபடி கண்ணை கசக்குவ பார்த்துக்கோ” என்று கேலியாக அவளை எச்சரிக்கை செய்ய

செவ்வி சிரிக்க ஆரம்பிக்க, வேந்தன் அன்னையை முறைத்து கொண்டிருந்தான். “என்னை நம்பவே மாட்டியம்மா நீ” என்பது போல் இருந்தது அவன் பார்வை.

“நான் உனக்கு அம்மாடா” என்பது போல் அவனை பார்த்தவர்  நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தார். செவ்வி இவர்கள் இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, மதியழகி வந்தவளும் தன் அண்ணன் அந்த நேரத்தில் அங்கு நிற்பதை அதிசயமாக பார்க்க, வேந்தன் மதியிடம் திரும்பியவன்

“இதையெல்லாம் அவங்களுக்கு கொடு. தீர்ந்து போச்சுன்னா என்கிட்டயே சொல்லு. பார்த்துக்கோ” என்றுவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டான்.

ரங்கநாயகி அவன் காதுபடவே ” இவன் சொல்லலைன்னா நாங்க பார்த்துக்க மாட்டோமா. வந்துட்டான் நல்லவன் ” என்று நக்கலாக கூற, அவரை திரும்பி முறைத்தவன் “ரொம்ப பண்ணிட்டு இருக்க மா நீ ” என்றுவிட

“என்னடா பண்ணிட்டேன் இப்போ. இல்லாததையா சொன்னேன். நீ அப்படிதானே அவளை முறைச்சிட்டே திரிவ. இன்னைக்கு இப்படி வந்து பேசுனா நான் என்ன நினைக்கட்டும் ” என்று அவனுக்கு திருப்பி கொடுத்தார் அவர்.

அவரை முறைத்து கொண்டே படிகளில் ஏறி சென்றுவிட்டான் அவன்.அவன் தலை மறைந்ததும் செவ்வி தன் மாமியாரிடம் ” ஏன் அத்தை இப்படி பண்றிங்க. அவனே இப்போதான் என்னை அண்ணின்னு கூப்பிட்டு ஏதோ பேசினான். அது பொறுக்கலையா உங்களுக்கு ” என்று கேட்க

” நல்லா இருக்குடி. உன் கொழுந்தன் ஒரு வார்த்தை உன்கிட்ட பேசுனதுக்கே உனக்கு இத்தனை வாயா. நான் இப்போவும் சொல்றேன் அவனை நம்பாத. திரும்பவும் ஏதாவது பிரச்சனை வந்தா உன்னைத்தான் இழுப்பான் பாரு. அவன் வாயை பத்தி எனக்கு நல்லா தெரியும்.” என்றவர்

” அதோட நீ இப்போ முழுகாம இருக்க. என்ன இருந்தாலும் அவன் அண்ணன் பிள்ளை இல்ல.அதான் உன்கிட்ட பாசமா இருக்கான். அவ்ளோதான். நீ அவனை ரொம்ப நம்பாத ” என்று சேர்த்து கூற, இப்போது செவ்வி அவரை முறைக்க மதி தானும் தாயை முறைத்தவள் “அண்ணன் அப்படி எல்லாம் செய்யாது அண்ணி. நீங்க இந்த அம்மாவை  நம்பாதீங்க” என்று கூற

செவ்வி ” இளாவை எனக்கு தெரியும் அத்தை. கோபம் வந்தா கத்துவானே தவிர பாசம் அதிகம். என்னையும் பிடிக்கும் அவனுக்கு. அவன் என்னோட பிரண்ட் அத்தை.அவனுக்கு செவ்வியை பிடிக்கும். மங்கையோட பொண்ணை தான் பிடிக்காது. அதான் விஷயம். எனக்கும் அது புரிஞ்சதால தான் அமைதியா இருக்கேன்” என்று நம்பிக்கையாக கூறினாள் அவள்.

இவர்கள் நம்பிக்கையை வேந்தன் காப்பாற்றுவானா ???

Advertisement