Advertisement

அத்தியாயம் 12

 

         அன்று வேந்தனின் அரிசி ஆலைக்கு நெல்மூட்டைகள் வந்து இறங்கி கொண்டிருக்க, வேலை அதிகமாக இருக்கவும் தானும் சட்டையை மாற்றியவன் அவர்களுடன் இனைந்து மூட்டைகளை இறக்க ஆரம்பித்தான். வேலை மும்முரமாக நடந்து கொண்டிருக்க, உணவு கூட மறைந்துபோனது அவனுக்கு.

 

            அன்று மாலை வரையிலும் வேலையே சரியாக இருக்க அவன் மில்லை விட்டு எங்கேயும் அசையவே இல்லை அன்று முழுவதும். அவன் பொழுது இப்படியே கழிய ஒருவழியாக மாலையில் வேலையை முடித்து அவன் வீட்டிற்கு கிளம்ப, அந்த நேரம் எதிரில் வந்தான் அவன் நண்பன் கதிர்.

 

            ஒரே ஊராக  இருந்தாலும் அவ்வபோது பார்த்துக் கொள்வதோடு சரி இருவரும். இப்போதும் அப்படியே சந்தித்திருக்க அவன் தங்கையை கல்லூரி வாயிலில் பார்த்ததை சொல்லியவன், அவள் தனஞ்செயனோடு சென்றதையும் வேந்தனிடம் தெரிவிக்க என்னவாக இருக்கும் ? ஏன் அவனுடன் சென்றாள் ? என்று யோசித்துக் கொண்டவன், அவர்கள் இருவருக்கும் திருமணம் பேசி உள்ளதை கதிருக்கு சொல்லிவிட்டான். இல்லையென்றால் இந்த பேச்சு எங்கெல்லாம் பரவுமா என்று தோன்ற தொடங்கி விட்டது அவனுக்கு.

 

          அதைக்கொண்டே இருவருக்கும் திருமணம் முடிக்கப்போகிறோம் என்று நண்பனிடம் கூறியவன், அவனிடம் விடைபெற்றுக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான். வீட்டிற்குள் நுழைந்தவன் வந்த வேகத்தில் மதியழகியை தேட அவள் அறையில் இருந்தாள் அவள்.

 

          மதி என்று அழைத்துக் கொண்டே அவன் அவள் அறைக்குள் நுழைய, கட்டிலில் படுத்திருந்தவள் இவன் குரல் கேட்டதும் எழுந்து அமர்ந்துகொண்டே ” வாண்ணா ” என்று அழைத்தாள்.

 

           உள்ளே நுழைந்தவன் தங்கையின் அருகில் அமர்ந்து அவன் முகத்தை  பார்க்க அத்தனை தெளிவாக இல்லை அவள் முகம். கண்களும் அழுதது போல் இருக்க உள்ளம் பதறியது அவனுக்கு.

 

     இருந்தும் பொறுமையாக ” என்ன மதி. காலேஜ் எல்லாம் எப்படி போகுது. எதுவும் பிரச்சனை இல்லையே.” என்று மேலோட்டமாக விசாரிக்க லேசாக திணறினாள் அவள். இருந்தும் சமாளித்துக் கொண்டு

 

    “இல்லையே அண்ணா. எதுவும் பிரச்னை எல்லாம் இல்லையே” என்று கூற

இல்லைடா. நம்ம கதிரை இன்னைக்கு பார்த்தேன். உன்னை காலேஜ் கிட்ட பார்த்ததா சொன்னான்” என்று மேலும் துருவ அதற்குமேல் தாங்காதவள் தன் அண்ணனின் தோளில் சாய்ந்துவிட்டாள். சத்தமே இல்லாமல் மௌனமாக அவள் கண்ணீர் வடிக்க, வேந்தன் அவளை தேற்றியவன்

 

               ” என்னடா என்ன ஆச்சு. அண்ணன்கிட்ட சொல்லு ” என்று கேட்க

நந்தினி.. நந்தினி ” என்றவள் மீண்டும் அழ, வேந்தன் யோசனையாக முகத்தை சுருக்கியவன் மீண்டும்

 

 ” மதி. மதி இங்க பாரு. என்ன ஆச்சு.என்ன பண்ணா நந்தினி. என்னடா ” என்று கேட்க , மதி மீண்டும் அழுதாலும், அழுதுகொண்டே நடந்த அனைத்தையும் தன் அண்ணனிடம் கூறிவிட, கேட்டவன் கொதித்து போனான். இவளுக்கு என்ன திமிர் இருந்தா என் தங்கச்சி வாழ்க்கையை கெடுக்க பார்த்திருப்பா ? என்று எண்ணியவன் இந்த விஷயம் இவளுக்கு எப்படி தெரியும் ? என்று யோசிக்க ஆரம்பித்தான்.

           நேற்று நடந்த நிகழ்ச்சியில் இரு குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து வெளியாட்கள் யாரும் கலந்து கொள்ளவே இல்லை. அப்படி இருக்க எப்படி அவளுக்கு தெரிந்திருக்க முடியும் என்று யோசித்துக் கொண்டு அவன் அமர்ந்திருக்க அந்த நேரத்தில் வீட்டினுள் ஏதோ சத்தம் கேட்கவும் இருவரும் என்ன என்று பார்ப்பதற்காக வீட்டிற்குள் வர அங்கே நடுக்கூடத்தில் நின்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள் நந்தினி.

 

                      தன் மாமனின் முன் நின்றிருந்தவள் ” ஏன் மாமா இப்படி பண்ணீங்க. எதுக்கு என் வாழ்க்கையை நாசம் பண்றிங்க. உங்களுக்கு தெரியாதா நான் மாமாவை விரும்புறது ? அப்படி இருக்கும்போது நீங்க எப்படி இன்னொருத்தியை பேசி முடிப்பீங்க ? என்று அவள் ஆவேசமாக கத்திக் கொண்டிருக்க,

 

           ரங்கநாயகி “நந்தினி நீ யார்கிட்ட பேசிட்டு இருக்கன்னு புரியுதா ? கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம கத்தி கூப்பாடு போட்டுட்டு இருக்க. மொதல்ல அமைதியா பேசு ” என்றுவிட

    

            ” உங்களுக்கு என்ன அத்தை. என் மாமாகிட்ட நான் பேசுறேன். நீ ஏன் நடுவுல வர்றிங்க. என் வாழ்க்கையே நீங்க எல்லாரும் நாசம் பண்ணிட்டீங்கன்னு நான் பேசிட்டு இருக்கேன்.அது உங்களுக்கு கத்துறது போல இருக்கா. என் வாழ்க்கைக்கு நீங்க பதில் சொல்விங்களா ” என்று அவரிடமும் அவள் கத்த

 

         வேந்தன் எதுவோ பேசச்செல்ல மதி அவன் கையை பிடித்துக் கொண்டாள். அண்ணன் எதுவும் பேசினால் நந்தினி அதை பெரிதாக பேசி அதை வைத்தே எதுவும் நாடகம் நடத்துவாள் என்பதை உணர்ந்து அவள் வேந்தனை தடுக்க சுந்தரபாண்டியன் இப்போது வாயை திறந்தவர்

 

                 ” நந்தினிமா. மாமா உனக்கு கேட்டது பண்ணுவேனா. அவன் அந்த பிள்ளையை விரும்பும்போது நான் எப்படி உனக்கு அவனை கட்டி வைக்க முடியும். அது உங்க ரெண்டு பேருக்குமே நான் பண்ற கெட்டது ஆகிடாதா. மாமா உனக்கு நல்ல பையனா பார்த்து கட்டி வைக்கிறேண்டா.

 

               உனக்கு நாங்க ரெண்டு தாய் மாமனுங்க இருக்கோம் டா. உன்னை அப்படியே விட்டுடுவோமா.” என்று அவர் பொறுமையாக எடுத்துக்கூற

 

            எதையும் கேட்கும் நிலையில் இல்லை அவள். கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல் ” நான் யாரையும் கட்டிக்க மாட்டேன். எனக்கு என் மாமாதான் வேணும். நான் அவரைத்தான் கட்டிப்பேன். நீங்க என் கல்யாணத்தை நடத்தி வச்சு தான் ஆகணும் ” என்று பெருங்குரலெடுத்து கத்த

 

        செவ்வி இப்போது குறுக்கிட்டவள் ” நந்தினி என்ன பண்ற நீ. மாமாகிட்ட இப்படி மரியாதை இல்லாம பேசுவியா. வேந்தனுக்கு தாமரையை பிடிச்சு இருக்கு நந்தினி. நீ ஏன் அவங்க வாழ்க்கை குறுக்க வர்ற. அண்ணன் உனக்கு இதைவிட நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுப்பாங்க நந்தினி. வேண்டாம்டி. அப்பாவை எல்லார் முன்னாடியும் தலை குனிய வச்சிடாத” என்று அவள் கெஞ்ச

 

       வேந்தனோ ” நல்லாவே நாடகம் போடறீங்க அக்காவும் தங்கையும். அவ இங்க வந்து கத்தி கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணுவா. நீங்க அவளை சமாதான படுத்துவீங்க. நல்லாவே இருக்கு உங்க நாடகம்” என்று இருவரையும் சேர்த்தே பேசிவிட

 

        செவ்வி அதிர்ந்து நின்றாள் அவனின் இந்த குற்றச்சாட்டில். என்ன சொல்வது என்று தெரியாமல் அவள் அமைதியாக இருக்க ரங்கநாயகி ” வேந்தா என்ன பேசிட்டு இருக்க நீ, இவ வந்து சத்தம் போட்டா அதுக்கு செவ்வி என்ன பண்ணுவா ” என்று கேட்க

 

        ” மா. கொஞ்சமாச்சும் யோசிங்க. நேத்து நடந்த விஷயம் நம்ம குடும்பத்தை தவிர வேற யாருக்கும் தெரியாது.அப்படி இருக்க இவளுக்கு எப்படி தெரியும். யார் சொல்லி இருப்பா ” என்று அவன் கேட்க, செவ்வி மலைத்து நின்றாள் அவனின் இந்த குற்றச்சாட்டில். இவன் எப்போது என்னை நம்புவான் என்று அவள் நிற்க

 

        நந்தினியோ ” யாரு இவ, இந்த வீட்டு மருமக எனக்கு தகவல் சொல்வாளா. என்ன ஆனாலும் இவளுக்கு எப்பவும் அந்த கேடுகெட்டவளும், அவ தோழியும் தான் முக்கியம். இவ எனக்கு தகவல் சொல்வாளா.

 

       ” நல்லாவே நடிக்கிறிங்க எல்லாரும். இவளுக்கு என்மேல கொஞ்சமாச்சும் அக்கறை இருந்தா நேத்து அவளோட கல்யாணத்தை பேசி முடிச்சு இருப்பாளா இதுல இவை எனக்கு தகவல் சொல்லிட்டான்னு நீங்க இவளை கண்டிக்கிறீங்களா.” என்று நக்கலாக கேட்டவள், செவ்வியின் புறம் திரும்பி ” என்ன சொன்ன நான் இவங்க வாழ்க்கையில குறுக்க வர்றேனா. உனக்கு தெரியாது நான் சின்ன வயசுல இருந்து மாமாவை விரும்புறேன்னு உனக்கு தெரியாது. ” என்று அவளை உலுக்கியவள்

 

     “உனக்கு என்ன ஆசைப்பட்டவரையே அம்மா உனக்கு கட்டிவச்சிட்டாங்க. நீயும் நீ நல்ல இருந்த போதும்னு இவங்களோட சேர்ந்து என் வாழ்க்கையை அழிக்க திட்டம் போட்டுட்ட அப்படிதானே.

 

        அப்படி என்னடி உனக்கு என்னை விட அந்த தாமரையும், சக்தியும் முக்கியமா போய்ட்டாங்க. அவ என் அண்ணனை மயக்கி அவ வலையில விழா வச்சிட்டா. இவ என் மாமாவை மயக்கிட்டா

 

        நீயும் அவங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவ. அப்போ நான் யாரு உனக்கு ” என்று அவள் செவ்வியை உலுக்க அவள் காலடியில் நின்றிருந்த குழந்தை அழ ஆரம்பிக்கவும், ரங்கநாயகி குழந்தையை தூக்கி கொண்டவர் நந்தினியிடம் ” ஏய் விடு அவளை. என்ன பண்ணிட்டு இருக்க நீ. வெளியே போ ” என்று கத்த

 

              ” ஏன் ஏன் நான் போகணும் போகமாட்டேன்.இது என் மாமா வீடு.எனக்கு நீங்க எல்லாரும் பதில் சொல்லியே ஆகணும். அதுவரைக்கும் இங்க இருந்து நகரமாட்டேன்” என்று அவள் மீண்டும் கூச்சல் போட, செவ்வி “நந்தினி” என்று அதட்டியவள் ” ஒழுங்கா இங்க இருந்து வெளியே போ. பெரியவங்க கிட்ட இப்படி பேசிட்டு இருக்காத.” என்று கத்த

 

            ” நான் என்ன செய்யணும்ன்னு நீ சொல்லாத. நீ என்னோட அக்கா இல்ல.நீ இந்த வீட்டு மூத்த மருமக அவ்ளோதான். என்னைப் பொறுத்தவரைக்கும். நீ பேசாத ” என்று அவள் மீண்டும் கத்த

 

        வேந்தன் இப்போதும் சும்மா இல்லாமல் ” நீ என்ன நாடகம் போட்டாலும், நீ நெனைச்சது நடக்காது.இந்த ஜென்மத்துல தாமரை மட்டும்தான் என்னோட பொண்டாட்டி. அதை யாராலயும் மாத்த முடியாது. உங்க நாடகத்தை உங்க வீட்ல போய் போடுங்க ” என்று கூற

 

               சரியாக அந்த நேரம் வீட்டிற்குள் நுழைந்தான் மதிமாறன். வந்தவன் யாரையும் எதுவும் கேட்காமல் மனைவியிடம் நெருங்கியவன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான். திருமணமான இத்தனை ஆண்டுகளில் கடிந்து கூட பேசி இராத கணவன் இன்று இத்தனை பேர் முன்னிலையில் கைநீட்டி அடித்திருக்க உலகமே ஸ்தம்பித்தது போன்ற நிலைதான் செவ்விக்கு.

 

            கண்ணில் வழிந்த நீரோடு பரிதாபமாக அவள் தன்னவனை பார்க்க, அவளின் அடிப்பட்ட பாவனையை கண்டவன் “உள்ள போடி.” என்று கத்தி இருந்தான்.

 

          ரங்கநாயகி, சுந்தரமும் ” என்னடா பண்ற ” என்று அவனை அதட்ட அவர்களை கண்டுகொள்ளாமல் ” உன்னை உள்ளே போன்னு சொன்னேன் செவ்வந்தி” என்று அடிக்குரலில் கொதிக்க, அடுத்தநொடி அந்த இடத்தை விட்டு விலகி இருந்தாள். அவள் சென்றதும் தான் தன் குடும்பத்தினரிடம் திரும்பியவன் தாயின் கையில் இருந்த குழந்தையை வாங்கி கொண்டு தன் தந்தையை நோக்கி “வேந்தனோட கல்யாணம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலயும் இனி செவ்வியால எந்த பிரச்னையும் வராதுப்பா.இனி அவ இந்த குடும்பத்தோட எந்த விஷயத்துலயும் அனாவசியமா தலையிடமாட்டா. உங்க மூத்த மகனா நான் என்ன பண்ணனும் ன்னு சொல்லிடுங்க. தம்பி தங்கச்சி கல்யாணத்துக்கு முன்னாடி வந்து நின்னுடறேன்.

 

           மத்த விஷயங்களை நீங்க பார்த்துக்கோங்க ” என்றவன் பிள்ளை அழ அழ அவனை தூக்கிக் கொண்டு உள்ளே சென்று கதவை அடைத்துவிட்டான். சுந்தரபாண்டியன் அங்கிருந்த நாற்காலியில் இடிந்துபோனவராக அமர்ந்துவிட, ரங்கநாயகி கோபமாக நந்தினியிடம் திரும்பியவர் அவளை ஓங்கி ஒரு அறை விட்டவர் “இனி ஒரு நிமிஷம் நீ என் வீட்ல நின்ன கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளிடுவேன். போடி வெளிய.” என்றவர் அவள் அழுதுகொண்டே வெளியேறவும்

 

               தன் மகனின் புறம் திரும்பினார். வேந்தனுக்கு தான் செய்த தவறு புரிய ஆரம்பித்திருக்க, மதிமாறன் பேசியதிலேயே அதிர்ந்து இருந்தவன், இப்போது தாயை பார்க்க அவன் அருகில் வந்தவர் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தவர் ” என்னடா பிள்ளை நீ. இப்படியா உன்னை வளர்த்தேன் நான். இதென்ன நாக்கா தேள் கொடுக்கா ? “

 

      ” பொறுமைக்கு இலக்கணமே என் புள்ள தான் டா.ஆனா அவனையே இன்னைக்கு நீ பேச வச்சிட்டல. இது சரிப்பட்டு வராது. ஏங்க கல்யாணம் முடியவும் இவனையும்,இவன் பொண்டாட்டியையும் தனிக்குடித்தனம் வைக்க ஏற்பாட்ட பாருங்க. எனக்கு என் மூத்த பிள்ளையும் மருமகளும் எப்பவும் வேணும்.”

 

          ” இவன் இங்க இருந்தா என் மருமகளை நோகடிச்சே கொன்னுடுவான். என் பிள்ளையும் இல்லாம போயிடுவான். வேண்டாம் இவன் தள்ளி இருக்கட்டும். நீங்க நம்ம பண்ணைவீட்டை தயாராவே வைங்க.இவன் அங்க குடும்பம் பண்ணட்டும்”

 

              ” இவனுங்க அடிச்சிட்டு பிரிஞ்சி போறதுக்கு நீங்களே சொத்தை பிரிச்சி எழுதிடுங்க. இல்ல இவனே உங்கள அந்த நிலைமைக்கு கொண்டு வந்திருவான். என் மருமக எனக்கு காலம் முச்சூடும் கஞ்சி ஊத்துவா. எனக்கு யாரும் தேவையில்லை.”

 

             ” என் மருமக இருக்கா எனக்கு. என் பிள்ளைகளுக்கும் மேல அவ என்னை தாங்கிக்குவா. நீங்க நான் சொன்னதை செய்ங்க ” என்றவர் அழுதுகொண்டே தன்னறைக்கு சென்றுவிட்டார். சுந்தரபாண்டியனும் எதுவும் பேசாமல் அமைதியாக அவரை தொடர்ந்து சென்றுவிட மதியழகி தன் தகப்பனை பார்த்தவளுக்கு அவரின் தளர்ந்தநிலை கண்களில் கண்ணீரை பெருக்க அழுதுகொண்டே தன் அறைக்கு சென்று கட்டிலில் விழுந்தவள் கதறி தீர்த்தாள்.

              தனித்து விடப்பட்ட வேந்தன் அந்த கூடத்தில் தனியாக நின்றிருக்க, அவன் உள்ளமோ நடந்ததை நினைத்து கதறிக் கொண்டிருந்தது. தன் அண்ணனின் வார்த்தைகள் கொன்று போட்டது அவனை. அடுத்து என்ன என்று புரியாத நிலையில் நின்றிருந்தான் அவன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

             

    

           

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement