Advertisement

அத்தியாயம் 11

 

                 தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களுக்கு உரம் வைத்து கொண்டிருக்க, அந்த பணிகள் சரியாக நடக்கிறதா என்று மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் தனஞ்செயன்.அங்கிருந்தவர்களிடம் நட்பாக பேச்சு கொடுத்துக் கொண்டே அவர்களை வேலைவாங்கி கொண்டிருந்தான் அவன். காலையில் தொடங்கி இருந்த வேலைகள் உச்சிப்பொழுதை அடையும் வரை நடந்து கொண்டிருக்க, அவனும் அவர்கள் உடனே இருந்தான்.

 

       அந்த நேரம் அவன் நண்பன் குமார் அங்கு வரவும் அவனோடு பேசிக்கொண்டே வேலை நடக்கும் இடத்தை விட்டு சாற்றி தள்ளி வந்திருந்தனர் நண்பர்கள் இருவரும்.குமார் நண்பன் முகத்தை பார்த்தவன் உடன் யாருமில்லாத தைரியத்தில் “என்னடா மாப்புளகலை வந்திருச்சு போல. முகமே பொலிவா அம்புட்டு அம்சமா இருக்கே” என்று அவன் தாடையை பிடித்து அப்படியும், இப்படியுமாக திருப்பி பார்க்க

 

       தனா “அட ஏண்டா நீ வேற. அவளே பேயை பார்த்த மாறி பார்க்கிறாடா. நேத்து இத்தனை விஷயத்துக்கு ஒரு முறை கூட என்னை நிமிர்ந்து கூட பார்க்கலடா அவ.” என்று ஆதங்கமாக கூற

 

       “டேய் மாப்புள, அந்த புள்ளைய தூக்கி இருக்கடா. இன்னிக்கு கல்யாணம்ன்னு சொன்ன உடனே உன்னைப்பார்த்து சிரிச்சு பேசிடுவாளா. கொஞ்ச நாள் ஆகும்டா”

 

                “ அதுதான் டா என்னோட பயமும். நான் அவளை தூக்கிட்டு போனதால மட்டும் இந்தக்கல்யாணம் நடக்க கூடாது இல்ல.அப்புறம் அவளுக்கு என்னடா நிம்மதி இருக்கும். அவளுக்கு உண்மையிலேயே இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கா ? இல்ல நீ சொன்ன மாதிரி அவளை தூக்கிட்டு போனதை வச்சு அவகிட்ட பேசி அவளை சரிக்கட்டி ஒத்துக்க வச்சாங்களா ன்னு தெரியணும்டா எனக்கு”

 

             “ டேய் அதுக்காக என்ன அந்த புள்ளைகிட்ட போய் கேக்கவா முடியும். எப்படியும் அப்பா  சொல்றவனை கட்டிக்க தான் போகுது.அப்படி உன்னை கட்டிக்க போகுது ன்னு நெனச்சுக்கோடா. இதுல நீ இவ்வளவு யோசிக்க என்ன இருக்கு”

 

            “ நிறையவே இருக்குடா. அவங்க வீட்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்றதுக்கும், இப்போ நடக்கிறதுக்கும் நெறைய வித்தியாசம் இருக்கு. அவங்க வீட்ல மாப்பிளை பார்த்து இருந்தா பையனை பிடிக்கலன்னு அவ சொன்னா சரின்னு வேற மாப்பிளை பார்ப்பாங்க. ஆனா இப்போ நிலைமை அப்படியா இருக்கு. கிட்டத்தட்ட கட்டாய கல்யாணம் தான். அவ அண்ணனுக்கு வேற தாமரையை பேசி முடிச்சிருக்கு. ஒருவேளை எல்லாத்தையும் மனசுல வச்சுட்டு எதுவுமே சொல்லாம மருகிட்டு இருந்தா.அந்த புள்ளைக்கு பிடிச்சு தான் ஒத்துக்கிட்டாளா ன்னு கேட்கணும் டா “ என்று கூற

 

                 “ சரி அதுக்கு என்ன பண்ண போற. நீயே நேரா போய் கேட்டுட்டு வர்றியா “ என்று குமார் நக்கலாக கேட்கவும்

 

           “ அதுதான் டா சரி. நானே போய் அவகிட்ட கேட்டுடறேன்” என்று கிளம்பிவிட்டான் அவன்.

டேய். எங்கடா போய் கேட்ப.”

ஏன் அந்த புள்ள காலேஜ் தெரியும்ல அங்கேயே போய் கேட்டுடறேன் “ என்றவன் நேரத்தை பார்த்துவிட்டு வேலை செய்பவர்களுக்கு கணக்கை முடித்தவன் அவர்கள் அனைவரும் வேலையை முடித்துக் கொண்டு கிளம்பவும் தன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். அவனை தனியே விட தயங்கிய குமார் தானும் தன் வண்டியில் ஏறி அவனை தொடர்ந்தான்.

              தனா நேராக மதியழகி படிக்கும் கல்லூரிக்கு வந்தவன் அவளுக்காக காத்திருக்க தொடங்கினான். கல்லூரி வகுப்புகள் முடிய இன்னும் நேரமிருந்ததால் இவர்கள் வந்த நேரம் கல்லூரி வளாகம் ஆள் நடமாட்டமின்றி அமைதியாக இருக்க, கல்லூரிக்கு எதிரில் இருந்த டீக்கடையில் ஒரு டீயை சொல்லிவிட்டு அங்கிருந்த சேரில் அமர்ந்து விட்டவன் மதியழகிக்காக காத்திருந்தான்.

 

            சரியாக அதே நேரம் நந்தினியும் தன் வகுப்பறையில் வகுப்புகள் எப்போது முடியும் என்று காத்திருந்தாள். அவளின் வகுப்புத்தோழி ஒருத்தி தாமரையின் வீட்டுக்கு அருகில் இருக்க,அவள் நேற்று தாமரையின் வீட்டில் நடந்த விசேஷத்தை பற்றி நந்தினியிடம் கூறியவள் மேலும் மாப்பிள்ளை, பெண் பற்றிய தகவல்களையும் அலசி ஆராய்ந்து தன் தோழியிடம் தெரிவித்து இருந்தாள்.

 

       தான் இங்கு அவனையே நினைத்து உருகிக் கொண்டிருக்க இவன் அவளோடு திருமணம் நிச்சயிப்பானா ? என்று கொதித்து போய் இருந்தாள் அவள். அவளின் கோபம் முழுவதும் வேந்தன் மீதும் தாமரை மீதும் தான் இருந்தது. இந்த தாமரை தன்னை பழிவாங்கவே இதெல்லாம் செய்கிறாளோ என்று நினைத்தவள் என் மாமாவை நீ கட்டிக்க விடமாட்டேன் தாமரை. உன்னை கொன்னுடுவேன்? என்று மனதிற்குள் அவளை வறுத்துக் கொண்டிருந்தாள். ஏனோ வேந்தன் இன்னொருத்தியை திருமணம் செய்யபோவதை அவளால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.

 

           வேந்தன் தான் தன்னுடைய மாமன். அவனை தான் திருமணம் செய்யப்போகிறேன் என்று அவள் தனக்கு தெரிந்த தோழிகளிடம் ஏற்கனவே கூறி வைத்திருக்க அவர்கள் இவளை பொறாமையாக பார்ப்பது அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும் நந்தினிக்கு. ஊரில் கூட தன் அன்னையின் உதவியால் வேந்தன் தான் நந்தியின் கணவன் என்று அனைவரிடமும் தம்பட்டம் அடித்து இருந்தனர்.

 

            இப்போது அது அனைத்தையும் ஒரே நொடியில் இவர்கள் இல்லாமல் செய்ய நினைத்தால் அப்படியே விட்டுவிடுவதற்கு தான் என்ன முட்டாளா. இவர்கள் யாரையும் விடுவதில்லை என்று தனக்குள் புழுங்கி கொண்டிருந்தாள் அவள். அதிலும் இந்த மதியழகி நேற்றுவரை தான் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக் கொண்டு தன்னை சுற்றி வந்தவள் இன்று மொத்தமாய் மாறிப்போனதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

             அவள் எப்படி இந்த திருமண விஷயத்தை தன்னிடம் இருந்து மறைக்கலாம் என்று கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது அவளின் மேல். மேலும் அவளுக்கும் திருமணம் பேசி இருப்பது தெரியவும் “நீ எப்படி நிம்மதியா இருக்கேன்னு நானும் பார்க்கிறேன் மதி” என்று சூளுரைத்துக் கொண்டாள் அவள்.

 

            மதியை எப்படி அசிங்கப்படுத்துவது என்று அவள் இப்போதே திட்டமிட தொடங்கி இருந்தாள்.அவள் நிம்மதியை கெடுக்க அவள் வழிதேட, அன்றே அவளுக்கு ஒரு வாய்ப்பு காத்திருக்கும் என்று அவள் அப்போது அறியவில்லை.

                 வகுப்புகள் முடிந்து மாணவர்கள் வெளியேற, மதியழகி தானும் வகுப்பை விட்டு வெளியே வந்தவள் கல்லூரி வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தாள்.அவளின் தோழிகளிடம் விடைபெற்றுக் கொண்டே அவள் நடந்து வந்து கொண்டிருந்தாள். கல்லூரிக்கு அருகில் இருந்த பேருந்து நிலையத்திற்கு சென்று தான் இவள் ஊருக்கு செல்லும் பேருந்தை பிடிக்கவேண்டும் என்பதால், சற்று வேகமாகவே நடந்து கொண்டிருந்தாள் அவள்.

 

            தோழிகளுடன் பேசிக்கொண்டே சுற்றுப்புறத்தை கவனிக்காமல் அவள் விளையாட்டுத்தனமாக நடந்துவர, எதிர்புறமிருந்து அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன். மஞ்சள் நிறத்தில் கருப்பு பூக்கள் வாரி இறைத்தது போல அமைந்த காட்டன் சுடிதார். காலர் நெக்கொடு அரைக்கை வைத்து தைக்கப்பட்டிருக்க அத்தனை பொருத்தமாக இருந்தது அவளுக்கு.

 

                    கருப்பு நிறத்தில் இளமஞ்சள் கரையாக அமைந்த துப்பட்டா தோளில் ஒருபுறமாக தொங்கி கொண்டிருக்க, ஒப்பனை ஏதுமில்லாமல் ஜொலித்த லேசான மஞ்சள் நிற முகத்தில் மெரூன் வண்ண பொட்டு. இருபக்கமும் முடி எடுத்து உச்சியில் கிளிப் குத்தப்பட்டு விரித்து விடப்பட்ட கூந்தல் இடையை தாண்டி  நீண்டிருந்தது. கொள்ளை கொள்ளும் அழகிதான் என்று அமர்த்தலாகவே ஒத்துக் கொண்டது அவனது மனது.

 

          பேசிக்கொண்டே கல்லூரியை விட்டு வெளியேறியவள் பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க தொடங்க, அவளை பின்தொடர்ந்து சென்றவன் சாலையை கடக்கும்போதுதான் அவனை பார்த்த்திருந்தாள் மதியழகி. அவனை பார்த்தவளுக்கு பயத்தில் உதடுகள் தந்தி அடிக்க ஆரம்பித்தது. “கடவுளே இவன் எதற்கு வந்திருக்கிறான்.” என்று யோசித்தவளுக்கு அன்று நடந்தவை கண்முன் தோன்றி மறைய, நேற்று நடந்த ஒப்புதல் எல்லாம் மறந்து போனது.

 

            அந்த நிமிடம் பயம் மட்டுமே சூழ்ந்திருந்தது அவளை. அவன் பின்னால் பயத்தோடு பார்க்க குமார் வேறு நின்றிருக்க இன்னும் பயந்து போனாள் அவள். என்ன செய்வானோ என்ற பயத்திலேயே அவள் நின்றிருக்க அந்த இடைவெளியில் அவளை நெருங்கி இருந்தான் அவன். அவள் அருகில் சென்று நின்றவன் தடாலடியாக “உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்னோட வா “ என்று அழைக்க, உடனிருந்த அவள் வகுப்புத்தோழிகள் அவளை பார்க்கவும் சங்கடமாக போனது அவளுக்கு.

 

                என்ன செய்வது என்று அவள் முழித்துக் கொண்டு நிற்க,அவள் தோழி அவளை சுரண்டவும் சுயநினைவுக்கு வந்தாள் அவள். அவள் தோழியிடம் செல்லுமாறு கண்ணை காட்டியவள் அவள் சென்றதும் தனாவிடம் “ சொல்லுங்க” என்றாள் மெல்லிய குரலில். பயம் இன்னும்கூட மிச்சமிருந்தது அந்த குரலில்.

 

           இங்கே எப்படி பேசுவது என்று தயங்கிய தனா “என்கூட வர்றியா. கூட்டிட்டு வந்து விட்டுடறேன். கொஞ்சம் பேசணும் உன்னோட. இங்க பேச முடியாது” என்று தெளிவாக கூறியும் அவனை பயத்தோடு பார்க்க ஆரம்பித்தாள் அவள்.அவளின் பயத்தை உணர்ந்தவன்

 

            “ முதல்ல இப்படி பயப்படாத. என்னை பார்த்தா எப்படி தெரியுது. என்ன செஞ்சிடுவேன் உன்னை நான்? “ என்று அவன் கேட்க

 

            இப்போது வாயை திறந்தவள் “இல்ல. வீட்ல…. நேரம் ஆச்சு.. பஸ் வந்திரும்” என்று வாய்க்கு வந்த காரணத்தை கூறினாள். இப்போது சிரித்துக் கொண்டே அவன் ஏதோ சொல்ல வாயை திறக்க அப்போது எங்கிருந்தோ அவர்கள் அருகில் வந்து நின்றாள் நந்தினி.

 

தனா அவளை அறிந்திருந்ததால் இவளுக்கு என்ன வேண்டும் என்பது போல் பார்த்தவன் மதியுடன் பேச வந்திருக்கிறாளோ என்று மதியை திரும்பி பார்த்தான். மதியின் முகமோ பயத்தில் வெளிறிப் போய் இருந்தது அவளைக் கண்ட நொடி.

 

            நந்தினியின் தோழி என்ற முறையில் அவளை மதி நன்றாகவே புரிந்து வைத்திருந்தாள். கண்டிப்பாக அவள் நேற்று நடந்ததை தெரிந்து கொண்டு தான் வந்திருக்கிறாள் என்பதை அவள் தோரணையில் கண்டு கொண்டாள் அவள். என்ன பேசப்போகிறாளோ என்று அவளை பார்க்க, அவள் எண்ணம் சரிதான் என்பதுபோல்

 

                  “ என்ன மதி அண்ணி. இவர்தான் உனக்கு பார்த்து இருக்க புது மாப்பிள்ளையா “ என்றாள் அந்த புது வில் அழுத்தம் கொடுத்து

 

               மதி பயத்துடன் தனாவை பார்த்தவள் “ நந்தினி. நான் சொல்றதை கேளு. நான் உன்கிட்ட என்ன நடந்ததுன்னு” என்று ஆரம்பிக்கும்போதே அவளை கைநீட்டி தடுத்த நந்தினி

 

                  “என்ன அண்ணி சொல்லப்போற. இன்னும் எப்போ சொல்லப்போற. என் அண்ணன் பின்னாடி சுத்திட்டு இருந்ததை எல்லாம் சொல்லிட்டியா இவர்கிட்ட. இல்ல இனிமேதான் சொல்லனுமா. இல்லை எதுக்கு சொல்லிக்கிட்டு அப்படின்னு யோசிச்சு கமுக்கமா இருந்திட்டியா.”

 

        “ உனக்கு தான் கைகழுவி விடறது புதுசு இல்லையே. முதல்ல என் அண்ணனை,அப்புறம் உன்கூடவே சுத்திட்டு இருந்த என்னை, இப்போ அடுத்தது யாரு இவரா” என்றவள்

 

          “எத்தனை நாளைக்கு இவரோட இருப்ப அண்ணி. இவர் வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டா புதுசா ஒருத்தனா“ என்று நந்தினி முடிக்கவில்லை. அதுவரை அவள் தனாவின் முன் பேசுவதை கேட்கமுடியாமல் மண்ணுக்கும் புதைந்துவிட மாட்டோமா என்று பார்த்துக் கொண்டிருந்த மதி “நந்தினி” என்று காதை பொத்திக் கொண்டு அலறி இருந்தாள்.

          கண்ணில் கண்ணீர் வடிய அவள் காதை கைகளால் பொத்தி கொண்டு கதறியது தனாவின் நெஞ்சை அறுக்க நந்தியின் தரம் கேட்ட வார்த்தைகளில் ஏற்கனவே கட்டுக்கடங்காத கோபத்தில் இருந்தவன் எட்டி அவள் கழுத்தை பிடித்து இறுக்கி இருந்தான்.

 

            மதி கண்களை மூடி இருந்தவள் நந்தினியின் அலறலில் கண்களை திறக்க நரசிம்ம அவதாரம் எடுத்திருந்த தனஞ்செயன் அவள் கழுத்தை நெறித்துக் கொண்டு இருந்தான். பதறிப் போனவள் “ஐயோ “ என்று அலறி அவன் கையை பிடித்தவள் “விடுங்க விடுங்க அவளை “ என்று கத்திக்கொண்டு அவன் கையை விலக்க போராட

 

       தனக்கு இடப்புறம் நின்றிருந்தவள் தோளை சுற்றி தன் இடக்கையை போட்டுக் கொண்டவன் அவளை தோளோடு அணைத்துக் கொண்டு நந்தினியின் கழுத்தை மேலும் அழுத்தலானான். நந்தினி மூச்சுக்கு திணற, மதி அவன் அணைப்பில் திணறிக் கொண்டிருந்தாள்.அவள் அறிந்த முதல் ஆண்மகனின் நெருக்கம் அவளை என்னவோ புரியாத ஒரு சுழலுக்குள் அழுத்திக் கொண்டிருந்தது.அதுவும் அவன் ஒரே கையால் தன்னை அடக்கி அணைப்புக்குள்  கொண்டு வந்திருக்க என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தவள் நந்தினி மூச்சுக்கு திணறவும்

 

         அவனை நிமிர்ந்து பார்த்து மீண்டும் “ப்ளீஸ் அவளை விடுங்க, பாவம் அவ, விடுங்க ” என்று கத்தவும் எதிர்புறமிருந்து ஓடிவந்த குமார் வேறு அவனை பிடித்து கொண்டான்.அப்போதுதான் ஒருவழியாக அவளை விடுவித்தவன் நந்தினியை உதறி தள்ளினான்.

 

             அவள் தடுமாறி நின்றவள் தனஞ்செயனை முறைக்க மதியை கையை பிடித்து இழுத்து தன் அருகில் நிறுத்தி தோளோடு அணைத்து கொண்டு நந்தினியை பார்த்தவன் “இவ என் பொண்டாட்டி. இனி இவகிட்ட பேசும்போது இந்த நிமிஷம் உனக்கு ஞாபகம் வரணும். அதோட இனி இவளை நீ அண்ணின்னு கூப்பிட கூடாது. இவளுக்கு நாத்தனார் என் வீட்ல இருக்கா. புரியுதா.”

 

             “அதோட வேற என்ன கேட்ட.எத்தனை நாளைக்கா. இந்த ஜென்மத்துக்கும் அவ தனஞ்செயன் பொண்டாட்டி தான் அவளே நினைச்சாலும் அத மாத்த முடியாது. இன்னொருத்தியை விரும்புறான்ன்னு தெரிஞ்சும் வேந்தன் பின்னாடி அலையுற நீ இவளை பேச வந்துட்டியா. இன்னொருத்தி புருஷனை நினைக்கிற அளவுக்கு அவ கேவலமானவ இல்ல.”

 

                இனி எப்பவும் மதியை பத்தி பேசணும்ன்னா அவ என் பொண்டாட்டின்னு உனக்கு ஞாபகம் வரணும்.இல்ல இன்னிக்கு நெரிச்சதோட விட்டேன் அடுத்தமுறை சங்கை அறுத்துடுவேன்.” என்று அவளை மிரட்டியவன் குமாரிடம் திரும்பி ” வண்டியை எடுத்துட்டு வாடா ” என்று சாவியை கொடுத்தான்.

 

            அவன் வண்டியை எடுத்து வரவும் மதியை விட்டு வண்டியை எடுத்தவன் “ஏறு ” என்றான் அவளிடம்.

அவள் முழிக்கவும் “ஏறுன்னு சொல்றேன் இல்ல.ஏறுடி ” என்று கத்தவும் பயந்து போனவள் அவன் பின்னல் ஏறி அமர்ந்திருந்தாள். அவள் அப்படி பயத்தோடு அமர்ந்து கொண்டதை பார்த்து புன்னகைத்துக் கொண்டவன் நந்தினியை திரும்பிக் கூட பார்க்காமல் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

 

        இவர்களை வன்மத்தோடு பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள் நந்தினி.அவள் என்ன செய்ய காத்திருக்கிறாளோ.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement