Advertisement

அத்தியாயம் 27-2

 

          மதியழகியின் வார்த்தைகளில் மனம் சற்றே நிம்மதியடைய, அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான் தனஞ்செயன். அவன் அருகில் வந்தாலே நடுங்குபவள் இன்று அவளே அவனிடம் மேலும் மேலும் ஒண்டிக் கொண்டாள். அவன் நெஞ்சில் அழுத்தமாக புதைந்து கொண்டவள்சாரிரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல. சாரிங்க.” என்று அவள் தேம்பிக் கொண்டே இருக்க,

                “இப்படி அழுதுட்டே இருக்க போறேன்னா நான் கிளம்புறேன். நீ அழுது முடிஎன்றவன் விலகப்பார்க்க, அவனை தானாகவே இறுக்கி கொண்டவள் விடவே இல்லை. அவள் செயலில் சிரித்தவன் அவள் முகம் பார்க்க முற்பட, அவள் தலைமுடியை தவிர ஒன்றுமே தெரியவில்லை அவனுக்கு.

             அவன் முகத்தை நிமிர்த்த முயன்றபோது அழுத்தமாக புதைந்து கொண்டவள் ப்ளீஸ். இப்படியே இருக்கேன். நான் உங்ககிட்ட பேசணும்,” என்று கூற

                 “என்னை முதல்ல நிமிர்ந்து பாருடி. அப்புறம் பேசலாம். நீ என்ன சொன்னாலும் கேட்கறேன்என்று கூற

             “நிச்சயமா என்னால முடியாது, உங்க கண்ணை பார்த்தாலே பேச முடியல என்னால. நேத்தும் அப்படி தான் என்னை பேசவே விடல.”

                “அதுசரி, வெளிய சொல்லி வைக்காத. நான் வேற ஏதோ பண்ணிட்டதா நினைப்பாங்க.” என்று அவளை இலகுவாக்க அவன் முயற்சிக்க,அதன் பிறகு சத்தமே இல்லை.

                 “சரி, என்னை பார்க்கவே வேண்டாம், என்ன பேசணும் அதையாவது சொல்லி முடிஎன்று அவனாகவே  கேட்க

              “நேத்துநேத்து  நீங்க சொன்னிங்க இல்ல, என் மேல நம்பிக்கை இல்லையா ன்னு…..  உங்களை அதிகமா தெரிஞ்சதால தான் பயந்துட்டேன். அந்த போட்டோ வேற யாராச்சும் பார்த்திட்டா என்ன பேசுவாங்க, தனஞ்செயன் பொண்டாட்டின்னு தான சொல்வாங்க. அது வேண்டாம் ன்னு தான் அழுதேன் அண்ணிகிட்ட.

           என்னால நீங்க ஏன் தலை குனியனும், உங்களுக்கு நான் தகுதியே இல்லைன்னு எனக்கே தோன்ற ஆரம்பிச்சிடுச்சு. ஒருவேளை நந்தினி திரும்பவும் எதுவும் பண்ணிடுவாளோன்னு வேற பயமா இருந்துச்சுங்கஎன்று அவள் கூறும்போது அவன் கைகள் கோபத்தில் இறுக, அவனை மேலும் இறுக்கிக்கொண்டவள்  “எனக்கு உங்களை ரொம்ப பிடிக்குது,  உங்களை என்னால விட்டுக்கொடுக்கவும் முடியல தைரியமா நடக்கிறது நடக்கட்டும்ன்னு விடவும் முடியல. யார் என்ன செய்வார்களோ ன்னு புரியாம ரொம்ப கொடுமையா இருந்துச்சுங்க. அண்ணி இருந்தாங்க தான், ஆனா எனக்கு சொல்ல தெரியல. என்னால முடியவே இல்ல அந்த நேரம் நான் ஏன் வாழனும் ன்னு கூட யோசிச்சுட்டேங்க.” என்றவள் மீண்டும் கேவி அழ ஆரம்பிக்க

          இந்த மூன்று நாட்களாக என்ன வேதனை பட்டிருக்கிறாள் என்று தான் தோன்றியது அவனுக்கு. என்ன பாடுபடுத்தி விட்டாள் இந்த நந்தினி, இவளெல்லாம் ஒரு பெண் என்று இன்னமும் சுற்றிக் கொண்டிருக்க, அவளோடு பழகிய பாவத்திற்கு அவளை இந்த அளவுக்கு தண்டித்துவிட்டாளே என்று தான் நினைத்தான் அவன்.

                அப்போதுதான் அழுது கொண்டிருந்த மனைவியின் நினைவுவர அவளை வலுக்கட்டாயமாக தன்னிடமிருந்து பிரித்தான் அவன். அவன் செயலில் அவள் அதிர்ந்துபோய் அவனை பார்க்க, அந்த பாவனையில் மீண்டும் கடுப்பானவன்அப்படியே ஒன்னு போட்டேனா, பாரேன்என்று அவள் தலையில் லேசாக தட்டிவிட்டுமொதல்ல இப்படி பேந்த பேந்த முழிக்கிறது, அழறது எல்லாத்தையும் விட்டுடற. நல்லா மூஞ்சிய பாரு பச்சை பிள்ளை மாதிரி. இனி ஒருமுறை கண்ணை கசக்கிட்டு நில்லு. அப்புறம் பேசிக்கிறேன்என்று மிரட்ட

                   முதலில் அவன் இழுத்து விட்டதில் பயந்திருந்தவள் இப்போது  அவன் பேசவும் சிரித்துவிட்டு தலையை குனிந்து கொள்ளஎனக்கு உன் தலை கிட்ட பேச ஒன்னும் இல்ல. உன்கிட்ட தான் பேசணும், நிமிர்ந்து என்னை பாரு. இல்லன்னா நான் கிளம்புறேன், தோப்புவீட்ல போய் படுத்துகறேன்என்று கூற

 

               சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள். அவள் வேகத்தில்குட். இப்படித்தான். என் கண்ணை பார்த்துதான் பேசணும் என்கிட்டே, புரியுதா?” என்று கேட்க

         அவளோ  “என்னையும் தோப்பு வீட்டுக்கு கூட்டிட்டு போறிங்களா? ” என்று கேட்க, “என்னஎன்று மீண்டும் கேட்டிருந்தான் அவன்.

            இப்போது தயங்கியவளாகஎன்னையும் தோப்பு வீட்டுக்கு கூட்டிட்டு போறிங்களா ன்னுஎன்று தயங்கி தயங்கியே வார்த்தைகள் வர

                  “ஹேய், நீ நினைக்கிற மாதிரி பெரிய வீடுலாம் இல்ல. சின்னதா ஒரு ஓட்டுவீடு அவ்ளோதான். உனக்கு பிடிக்குமா?” என்று அவன் சந்தேகமாக கேட்க

              “அதெல்லாம் பிடிக்கும். எங்க தோட்டத்துலயும் ஒரு குட்டி வீடு தானே இருக்கு, ஆனா என்னை அங்கே இதுவரைக்கும் விட்டதே இல்ல. அம்மா எப்பவும் சாயங்காலம் கூட்டிட்டு வந்திடுவாங்க. எனக்கு நைட்ல அங்க இருக்கணும் ன்னு ஆச. இளாண்ணா எல்லாம் அங்கேயே தங்கிடுவாங்க, என்னை மட்டும் விடமாட்டாங்க.” என்று அவள் காரணத்தையும் கூற

          அவளை அப்போதே கூட்டி செல்லும் வேகம் தான் தனாவிடம். நேரத்தை பார்க்க பத்தை கடந்திருந்தது. கிராமத்தில் எட்டு மணிக்கே ஊர் அடங்கிவிடும். அப்படி இருக்க அவர்களை பொறுத்தவரை இது அதிக நேரம் தான் ஆனால் முதல்முறையாக அவளாக ஏதோ கேட்கிறாள் எப்படி மறுப்பது என்று யோசித்தவன், அவளை அறையிலேயே விட்டு வெளியே வந்தான்.

                     எங்கே செல்கிறான் என்று மதி அவனை பார்க்க, வெளியே சென்றவன் நேராக சென்று நின்றது தன் அன்னையிடம். அவர் அறையில் உறங்கி கொண்டிருந்தவர் சென்று எழுப்பியவன் தோட்டத்திற்கு செல்வதாக கூற  “என்ன விளையாடறியா தனா  நீ. கல்யாணம் முடிஞ்சி ரெண்டு நாள் தான் ஆகுது.அந்த பிள்ளை என்ன நினைக்கும்என்று சத்தம் போட ஆரம்பிக்க 

 

           “ம்மா.” என்று உறங்கும் தந்தையை காட்டியவன்  “உங்க பிள்ளையையும் கூட்டிட்டுதான் போறேன். அவளும் தான் வர்றாஎன்று கூற

                   “இது இன்னும் மோசம். அங்கே எப்படிடா இருப்பா அவ, நீ என்ன நினைச்சிட்டு இருக்க தனாஎன்று மீண்டும் கேட்க

                  “ம்மா. நான் அவளை கூட்டிட்டு போறேன் அவ்ளோதான். நான் இருக்கேன்ல பார்த்துக்கறேன்மா.” என்று அவரிடம் செல்லம் கொஞ்ச அவனை முறைத்தாலும்பத்திரம் டா, அவளுக்கு இதெல்லாம் பழக்கமில்லை, ரங்கு கைக்குள்ளையே வச்சு வளர்த்திட்டா. பத்திரமா பார்த்துக்கணும் தனாஎன்று கூற

                   “நீ மாமியார் வேளைக்கு சரிப்பட்டு வரமாட்ட. படுத்து தூங்கு. நான் கிளம்புறேன்என்று அவன் திரும்பபோடா, வந்துட்டான் எனக்கு பாடம் சொல்லஎன்று விட்டு மீண்டும் படுத்துக்  கொண்டார் அவர்.

                         தனா தன் அறைக்கு வந்தவன் மதியிடம்கெளம்பு போகலாம்என்றுவிட, ” நிஜமாவாஇப்போவே கூட்டிட்டு போறிங்களாஎன்று அவள் அத்தனை வியப்பாக கேட்க, ” சீக்கிரம் கிளம்புடி.” என்றவன்இன்னொரு செட் டிரஸ் எடுத்துக்கோஎன்று கூற, எதற்கு டிரஸ் என்று யோசித்தாலும் அவன் சொன்னபடி எடுத்து வைத்துக்கொண்டு அவனுடன் கிளம்பினாள் அவள்.

 

                        அந்த நேரத்தில் யாருமற்ற சாலையில் அவனோடு அவன் முதுகில் ஒண்டிக்கொண்டு ஒரு பயணம். ஏன் முடிந்தது என்று அத்தனை ஏக்கமாக இருந்தது அவளுக்கு. பத்து நிமிட பயண தூரத்தை கடக்க எத்தனை நேரம் கடத்த முடியும் அவனும்.

 

                      சுற்றிலும் மாமரங்கள் சூழ்ந்திருக்க, காய் வைக்கும் பருவம் என்பதால் காத்திருந்த மாங்கனிகள் வேறு வாசம் வீசிக் கொண்டிருக்க, அதன் ஒரு பக்கத்தில் அவன் சொன்னது போலவே ஒரு சிறிய ஓட்டுவீடு.

 

                      இருவரும் வண்டியில் இருந்து இறங்கவும், அங்கு காவலுக்கு இருக்கும் பெரியவர் எழுந்துவர அவரிடம் சென்று படுத்துக் கொள்ள சொல்லியவன் அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான். சின்ன வீடு என்றாலும் நேர்த்தியாக இருந்தது அந்த கால வீடுகளை போல நடுவில் மழைநீர் உள்ளே விழுவது போல் முற்றம் இருக்க எதிரெதிராக இரண்டு அறைகள்.அதை தாண்டினால் வலது ஓரத்தில் ஒரு சமையலறை அதற்கு பின் கொல்லைப்புற கதவு என்று அருமையாக இருந்தது அந்த வீடு.

 

                        வீட்டை சுற்றி பார்த்தவள் மீண்டும் வெளியில் செல்ல பார்க்க, அவள் கையை பிடித்தவன்எங்கே போறஎன்று கேட்க

               “வெளியே திண்ணைல உட்காருவோம்என்று மதி கூறவும், அவளை அழைத்துக் கொண்டு திண்ணைக்கு வந்தவன் வெளியில் இருந்த சிறிய விளக்கை ஒளிரவிட்டு அவளுடன் அமர்ந்து கொண்டான். அந்த ரோஜா செடிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே அவள் அமர்ந்து விட, அவளுக்கு அத்தனை நெருக்கமாக அமர்ந்திருந்தான் அவன்.

 

                 அந்த ஏகாந்தமான இரவுப்பொழுதும், அங்கு வீசிக்கொண்டிருந்த நறுமணமும், அருகில் அமர்ந்திருந்த மோகினியும் அவனுக்கு போதையேற்ற நிச்சயம் நல்லவனாக நடிக்க கூட முடியவில்லை அவனால்.அவள் தோளை சுற்றி கையை போட்டுக் கொண்டவன் அவளை தன்னை நோக்கி இழுக்க, அதை எதிர்பாராதவள் அவன் நெஞ்சிலே விழுந்தாள்.

                             அவனின் செயலில் அதிர்ந்து அவனை பார்க்க அந்த கண்களை பார்த்துக் கொண்டே அவள் இதழ்களை அவன் நெருங்கும் நேரம் தானாக அவள் கண்கள் மூடிக்கொள்ள, புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அவள் யோசனையாக கண்களை திறக்க, அவளை பார்த்து கண்ணடித்தவன் அந்த நிமிடம் அவள் இதழ்களை தன் வசமாக்கி கொள்ள அவள் கைகள் தானாக அவன் பனியனை இருக்க பிடித்துக் கொள்ள அத்தனை வேட்கையையும் ஒற்றை முத்தத்தில் காட்டிக் கொண்டிருந்தான் அவன்.

 

                                   நீண்ட நேரம் கழித்து மூச்சுக்கு திணறி அவள் அவனை தள்ளிவிடும் வரை தொடர்ந்தது அந்த முத்தம். நெஞ்சில் கைவைத்து வேகமாக அவள் மூச்சு வாங்க, இதற்கேவா என்பது போல் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அவள் அவனை பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொள்ள, எழுந்து நின்றவன் ஏதோ பொம்மையை தூக்குவது போல் அவளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு நடக்க பதறிபோனவள் அவன் கழுத்தை இறுக்கி கொள்ள அந்த வீட்டின் மறுபுறம் இருந்த தண்ணீர் தொட்டிக்கு அருகில் வந்தவன் அவளை இருக்கைகளிலும் மாற்றிக்கொண்டுஅழகிஎன்று அழைக்க அவள் கண்ணை திறந்து பார்த்த நிமிடம் அவளை பொத்தென்று அந்த தண்ணீரில் போட்டுவிட்டான்.

 

                நீரில் மூழ்கி எழுந்தவள் குளிரில் நடுங்க, தானும் ஒரே தாவலில் உள்ளே குதித்தவன் அவளை இழுத்து அணைத்து கொள்ள, குளிரில் நடுங்கி போனவளாக அவன் மார்பில் ஒண்டிக் கொண்டாள் அவள். அவளை அணைத்து கொண்ட அவன் கரங்கள் அவள் மேனியில் அத்துமீறி அலைய முற்பட இந்த முறை அவனை தடுக்கும் எண்ணம் இல்லை போலும் அவளுக்கு. அவன் விருப்பத்திற்கு அவள் இசைந்து கொடுக்க, அதில் உற்சாகமானவனோ அவளை முழுவதுமாக கொள்ளையிட ஆரம்பிக்க, அப்போதுதான் அவன் இன்னொரு உடை எடுத்துக்கொள்ள சொன்னதன் காரணம் விளங்கியது அவளுக்கு.

 

                               அவர்கள் இருந்த நிலையை பார்த்து அந்த நிலவுகூட மேகங்களுக்கு நடுவில் சென்று மறைந்து கொண்டது வெட்கத்துடன். இனி நமக்கு மட்டும் இங்கென்ன வேலை ???

 

                         இவர்கள் இங்கு தங்களுக்குள் மூழ்கி இருக்கும் அதே நேரத்தில் அங்கு ஒருத்தி தான் செய்த வினையின் பலனால் சேரக்கூடாத இடத்தில சேர்ந்து செய்யத்தகாத செயலை செய்ய துணிந்திருந்தாள். ஆம் நந்தினியே தான். மகேஷுடன் சேர்ந்து அவள் செய்திருந்த காரியம் இருதலைக்கொள்ளி எறும்பாக இப்போது அவளை துரத்த ஆரம்பித்திருந்தது.

 

                 மதியழகியின் வாழ்வை கெடுக்க அவள் என்ன செய்ய சொன்னாலோ அதையே இப்போது அவளுக்கு செய்திருந்தான் மகேஷ். நந்தினியின் ஊரை சேர்ந்த அவன் நண்பன் மூலம் நந்தினியின் செயல்களை அறிந்து கொண்டவன் அவள் வேந்தனை விரும்பியதை கண்டுகொண்டான். அவள் அவளின் சுயநலத்திற்காக தன்னை முட்டாளாக்கி பயன்படுத்திக் கொண்டது புரிய, எதற்கும் துணிந்து விட்டான் அவன்.

 

             அவள் அண்ணன் ஒரு போலீஸ் அதிகாரி என்று தெரிந்திருந்தாலும் அவன் தந்தை அவனை விட்டுவிடமாட்டார் என்ற தைரியத்தில் காரியத்தில் இறங்கி இருந்தான். அவனுக்கு வேண்டியதெல்லாம் பெரிதாக ஒன்றுமில்லையே. நந்தினி மட்டும்தான்.

 

                   முன்பு அவள் சொன்னதை செய்தவன் இப்போது அவளுக்காக அவளையே அவனுடன் இணைத்திருந்தான். இருவரும் நெருக்கமாக இருப்பது போலவும், நந்தினி அரைகுறையான உடைகளோடு இருப்பது போலவும் போலிகளை உருவாக்கியவன் அதைக்கொண்டே அவளை மிரட்ட, முதலில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தவளோ சில நிமிடங்களில் அழுகையில் கரைய, கடைசியாக அண்ணனைக் காட்டி மிரட்டி கூட பார்த்துவிட்டாள்.

 

                                 ஆனால் எதற்கும் மசியாதவனோ தன்னுடன் வருவது ஒன்றுதான் உனக்கான வழி. இல்லையென்றால் இந்த படங்களை உன் வீட்டிற்கே அனுப்புவேன் அதோடு கல்லூரி முழுவதும் பரப்புவேன் என்று அவளை மிரட்ட, திருமணம் செய்து கொள்கிறேன் என்று உறுதி அளித்தும் கூட அவளை நம்புவதாக இல்லை அவன்.

 

                    ஒரே பிடியாக நின்று அவளை சமாளித்தவன், தானே பணம் செலுத்தி அவளை டிஸ்சார்ஜ் செய்ய வைத்திருந்தான். அவன் தந்தையின் பெயரை சொல்லி அங்கிருந்தவர்களிடம் அறிமுகமானவன், இருவரும் காதலர்கள் என்றும் கதை கட்டி இருக்க யாரும் அவன் மிரட்டியதாக சந்தேகப்படவில்லை.

 

                        அங்கு பணியிலிருந்த மருத்துவரிடமும் அதே கதையை சொன்னவன் அவன் கைநிறைய பணத்தை திணித்து காலை வரை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள, அவர்கள் கிளம்பிய செய்தி யாருக்கும் தெரியாமலே போனது.

 

                        ஓடிப்போனவள் மகள், ஓடிப்போனவள் மகள் என்று ஒரு அப்பாவியை துடிக்க வைத்துக் கொண்டிருந்த மங்கையின் மகள் இன்று ஓடிக் கொண்டிருந்தாள். இது தெரிய வரும் நேரம் மங்கையின் கதி என்னவாகுமோ???

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement