Advertisement

அத்தியாயம் 29

பெரிய வீட்டில் ஆதித்யனுக்காக காத்திருந்தாள் சக்தி. நேற்று இரவு அவன் நண்பன் விஜய் அழைத்து கூறிய செய்தியில் இரவு முழுவதும் ஒருநொடி கூட உறங்கி இருக்கவில்லை அவன். அத்தனை கோபமாக இருந்தவன் சக்தியை கூட அருகில் நெருங்கவிடவில்லை. காலை விடிந்தும் விடியாத வேளையில் கையில் இருந்த பேண்டேஜை கழட்டி வீசிவிட்டு தானே காரை எடுத்து கொண்டு கிளம்பி இருந்தான்.

அவன் முகத்திலிருந்த உக்கிரத்தில் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை சக்தி. இப்போதும் காலை எட்டு மணிக்கு மேல் ஆகி இருக்க இன்னும் இருவரும் வந்த பாடில்லை. என்னவானதோ என்று பதட்டமாக அவள் காத்திருக்க, இன்னும் வேதமாணிக்கத்திடம் கூட அவள் எதுவுமே கூறி இருக்கவில்லை.

மருத்துவமனைக்கும் கிளம்பாமல் அவள் அமர்ந்திருக்க, கேட்ட சிவகாமியிடம் ஏதோ ஒன்றை கூறி சமாளித்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் அவள். அந்த நேரம்தான் மங்கை பெரிய வீட்டின் வாசலில் வந்து நின்றது. வாசலில் நின்றவர் “நந்தினி… நந்தினி ” என்று சத்தமாக கூப்பிடவும்

கூடத்தில் அமர்ந்திருந்த சக்திக்கு அந்த குரல் நன்கு கேட்டது. அவர் கத்தலில் பயந்து போனவளாக அவள் அமர்ந்திருக்க, சிவகாமி பூஜை அறையில் இருந்து வெளியே வந்தவர் அமைதியாக சென்று வெளியில் எட்டிப்பார்க்க அங்கே அழுது சிவந்த விழிகளோடு, உடை ஒரு கோலம், தலை ஒரு கோலமாய் நின்றிருந்தார் மங்கையற்கரசி.

ஏனோ அந்த நொடி சிவகாமிக்கு பட்டும்,படாடோபமுமாக தன் வீட்டில் மகாராணியாக வளம் வந்த மங்கை நினைவுக்குவர, கூடவே என்றோ இந்த வாசலில் பிணமாக கிடத்தப்பட்டிருந்த தன் மகளின் நினைவும் சேர்ந்தே வந்தது. காலம் எத்தனை வேகமாக செல்கிறது என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை அவரால். கடவுள் கட்டாயமாக கணக்கை தீர்த்துத்தான் விடுகிறார் போலும் என்றும் நினைத்தவருக்கு கசப்பான புன்னகைதான் வெளிப்பட்டது.

அதே கசப்புடன் தன் வீட்டின் வாசலில் இருந்த நிலைப்பாடுகளில் முதல் படியிலேயே நின்றுவிட்டவர் “என்ன விஷயம், எதுக்கு காலையில என் வீட்டு வாசல்ல வந்து கத்திட்டு இருக்க?’என்று கோபமாகவே கேட்க

மங்கையோ “என் மகளை கூப்பிடுங்க, நான் என் மகளை பார்க்கணும்” என்று கூற

“உன் மக இங்கே ஏன் இருக்கா. அதான் உன் திட்டப்படி நல்லா நாடகம் போட்டு ஆஸ்பத்திரில படுத்து கிடக்காளே அங்கே போய் பாரு” என்றுவிட்டு அவர் திரும்ப

“என்ன சொல்றிங்க நீங்க?? என் மகளை நீங்க கூட்டிட்டு போய்ட்டதா தான் ஆஸ்பத்திரில சொன்னாங்க, நேத்து ராத்திரியே அவளை கூட்டிட்டு வந்துட்டிங்க. எனக்கு இருக்கறது என் மக மட்டும்தான் அவளையும் என்கிட்டே இருந்து பிரிச்சிடுவீங்களா” என்று அவர் அழுகையுடன் கேட்க

சிவகாமி என்ன நினைத்தாரோ இகழ்ச்சியாக சிரித்தவாறு “குடும்பத்தை பிரிக்கிறது, பெத்த மகளை பிரிகிறது இதெல்லாம் உனக்குதான் கைவந்த கலை, எனக்கில்லை. நீயெல்லாம் எங்களை பத்தி பேச வந்துட்டியா ” என்று கேட்டுவிட

மங்கைக்குள் இருந்த விஷம் வெளிவர தொடங்கியது. ” உங்க மக கொழுப்பெடுத்து போய் வீட்டை விட்டு ஓடிப்போனா அதுக்கு நான் பொறுப்பாவேனா? நீங்க குடுமபத்தை பிரிச்சு எங்களை தனியா வச்சிட்டு அதுக்கும் என்னையே குறை சொல்விங்களா. இதுதான் உங்க பெரிய வீட்டு நியாயம் போல, எனக்குதான் தெரியாம போச்சு” என்று அதிசயிக்க

சிவகாமியோ “ஆமா என் மக வீட்டை விட்டு போனா. எதுக்கு?? உன்னை மாதிரி ஒரு பிடாரியை அண்ணியா கொண்டுவந்தோமே அந்த பாவத்துக்கு தண்டனையை என் மக அனுபவிச்சா. உன் கழுத்துல தாலி கட்டின பாவத்துக்கு என் மகனும் அரை உயிரா போய்ட்டான். உன்கிட்ட எல்லாம் பேசுறதே அசிங்கம். என் வீட்டை விட்டு வெளியே போ முதல்ல” என்றுவிட

“ஹ்ம்ம்… என் மகளை வெளியே அனுப்புங்க, நான் போய்கிட்டே இருக்கேன். நானும் இங்கே விருந்தாட வரல.” என்று கூற

சிவகாமியோ “உனக்கு புத்தி ஏதும் பிசகி போச்சா. அவ இங்கே இல்லன்னு நாந்தான் சொல்றேன்ல. போடி என் வீட்டை விட்டு ” என்று கத்த ஆரம்பிக்க, பாட்டியின் குரலில் சக்தி வெளியில் வர மங்கை வழக்கம் போல் “என் மக எங்கேடி, என்ன பண்ண அவளை” என்று அவளை நோக்கி முன்னேற

சிவகாமி தன் பேத்தியின் முன் வந்து நின்றவர் “அவளை இன்னும் ஒருவார்த்தை பேசின, உன் சங்கை நெறிச்சுப்புடுவேன்.இறங்குடி கீழ” என்று ஒரு அடி முன்னால் வைக்க மங்கை தானாக பின் சென்றார். அப்போதும் சக்தியிடம் “என் மக எங்கே ” என்று அவர் கேட்டுகொண்டிருக்க,  சக்தி வாயே திறக்கவில்லை.

கணவனின் கோபம் அறிந்தவள் என்பதோடு நந்தினியை பற்றி எப்படி தவறாக கூறுவது என்று யோசித்து அவள் தடுமாறி நிற்க, சிவகாமிக்கு பேத்தியின் அமைதி வித்யாசமாக பட்டது.அவர் அவளை என்ன என்பதுபோல் பார்க்க மறுப்பாக தலையசைத்தவள் எதுவுமே பேசவில்லை.

அதுவே மங்கைக்கு தூபம் போட, நிச்சயமாக மகள் இருக்குமிடம் இவளுக்கு தெரியும் என்று நினைத்தவர் அங்கிருந்து அசையாமல் அவளை முறைக்க, அந்த நேரம் தான் வேந்தனின் வண்டி அந்த வீட்டிற்குள் வர அவனுக்கு பின்னால் அமர்ந்திருந்த தாமரையும் கீழே இறங்கினாள்.

தாமரை வரும்போதே மங்கையை பார்த்துவிட்டவள் அவரை ஏளனமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சக்தியிடம் சென்று நிற்க, அந்த காலை வேளையில் அவளை எதிர்பார்க்காத சக்தி “என்ன தாமரை ” என்று கேட்க

“என்னை கேட்கிறது இருக்கட்டும். இவங்க ஏன் இங்க வந்திருக்காங்க” என்று தாமரை கேட்க

“அவளா, ஆஸ்பத்திரில படுத்து கிடக்கறவள பெரிய வீட்ல தேட வந்திருக்கா. நீ உள்ள வா ஆத்தா” என்று பாட்டி கூற

தாமரை மங்கையை திரும்பி பார்த்தவள் “அவ ஹாஸ்பிடல்ல இல்லாம தானே இங்கே தேடி வந்திருக்காங்க பாட்டி. நாம சரியா தகவல் சொல்லணும்ல” என்றவள் மங்கையிடம் “நீங்க அடிக்கடி சொல்விங்களே ஓடிப்போனவ மக, ஓடிப்போனவ மக ன்னு, அதுக்கு இனி வேலையிருக்காது. ஏன்னா இனி ஓடிப்போனவளோட அம்மா ன்னு உங்களைத்தான் பேசுவாங்க.” என்று பட்டென்று அவள் கூறிவிட

மங்கை ஆத்திரமாக அவளிடம் “ஏய் என்னடி சொன்ன, யார் மகளை பத்தி யார் பேசுறது” என்று ஆவேசமாக கத்த, அங்கு கூடியிருந்த வேலையாட்களின் கவனம் இவர்கள் மீது விழுந்தது.அதற்குள் வேந்தன் தாமரையின் அருகில் வந்து நிற்க

“ஹ்ம்ம், உன் கேடுகெட்ட பொழப்பை மறைக்கிறதுக்கு என் மக மேல பழி போடுவியா நீ. நல்லா வாட்டசாட்டமா  இவனை பார்க்கவும் மயக்கி போட்டுக்கிட்டவ தானே நீ. என் மகளுக்கு பார்த்திருந்தது தெரிஞ்சும் இவனை கட்டிக்கிட்டு இப்போ என் மகளை சொல்றியா. நீதான் இவனை மயக்கி இவன் கூட ஓடிப்போக திட்டம் போட்டவ. என்மக இவனை நெனச்ச பாவத்துத்துக்கு ஒத்தமரமா நிக்கிறாடி பாவி.” என்று அவர் கண்ணீரோடு கத்தி அழுதும் கூட அங்கு நின்றிருந்த யாருக்கும் அவர்மேல் இரக்கம் வரவே இல்லை.

தாமரை அவரின் பேச்சில் அருவருப்பாக முகம் சுளித்துவிட, சிவகாமியோ இது உண்மையா என்பதுபோல் தன் பேத்தியை பார்க்க அவள் ஆமோதிப்பாக தலையசைத்தாள் அவரிடம். வேந்தன் அவரை முறைத்தவன் கோபமாக ஏதோ சொல்லத்தொடங்க தாமரை அவன் கையை பிடித்து தடுத்துவிட்டவள் மங்கையிடம் “என்ன சொன்னிங்க. நான் இவரை மயக்கிட்டேன்னா, இதை சொல்ல வெட்கமாயில்ல உங்களுக்கு. சொந்த மகன்னு கூட பார்க்காம அவளுக்கு தப்புத்தப்பா பாடம் நடத்தி இவரை மயக்க சொல்லி அனுப்பி வச்சது நீங்க. துணையை சொல்லணும்ன்னா அவள் நல்லவதான்.”

“உங்க வளர்ப்பு சரியில்ல, எங்களோட வளர்ந்திருந்தா அவளும் இன்னொரு செவ்வியா இருந்திருப்பா. உங்க கைக்குள்ளேயே வச்சு நீங்க வளர்க்கவும் தான் இப்படி வந்து நிற்கிறா. உங்க வளர்ப்போட லட்சணம் தான் இது. இதுல நீங்க என்னை குறை சொல்ல வந்துட்டிங்க.”

“மூணு வருஷமா மனசுக்குள்ளேயே வச்சி புழுங்கிட்டு, எனக்குள்ளேயே செத்து பிழைச்சிருக்கேன். அப்படிப்பட்ட என்னை குறை சொல்விங்களா நீங்க. காசு,பணத்துக்காக மனசு முழுக்க விஷத்தை வச்சிட்டு, உடம்பை மட்டும் தினம் தினம் விற்கிறவ நான் கிடையாது. அது மங்கையோட புத்தி” என்று நேரடியாகவே அவள் கூறிவிட

அவள் பேசிய வார்த்தைகளை கேட்டு சிவகாமி கூனிக்குறுகி நின்றுவிட, சக்தி வெறுப்போடு கண்களை மூடிக் கொண்டாள். சம்பந்தப்பட்ட மங்கை அவள் பேச்சில் வெகுண்டு அவளை அடிக்க கையை ஒங்க அவர் கையை பிடித்து தள்ளிவிட்டான் வேந்தன். அவன் தள்ளியதில் சற்று பின்னோக்கி நகர்ந்து நின்றுவிட்டவர் அவர்களை பார்த்து பேச முற்படும் நேரம் ஆதித்யனின் கார் வந்து நின்றது அங்கே.

காரின் ஓட்டுநர் இருக்கையிலிருந்து அவன் இறங்க, மறுபுறம் நந்தினி இறங்கினாள். மங்கை அவளைக்கண்டதும் “நந்தினி” என்று அருகில் வந்தவர் தாமரை சொன்ன விஷயங்கள் நினைவு வர “அவ சொல்றதெல்லாம் உண்மையா ? எங்கே போன நீ?” என்று கேள்வி கேட்க

அவள் பதில் கூறாமல் தலைகுனியவும்,அருகில் நின்றிருந்த வேந்தன் மங்கையை ஏளனமாக பார்க்க மங்கை அப்போதும் தன் தவறை உணராமல் நந்தினியை உலுக்க ஆரம்பிக்க அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. இதற்குள் ஆதித்யன் தங்கையின் அருகில் வந்தவன் அவளை தன்னோடு சேர்த்து பிடித்துக் கொண்டு வீட்டிற்குள் செல்லும் படியில் அவளை ஏற்ற முற்பட, மங்கை அவனை தடுத்தவர் ” இரு நந்தினி எனக்கு பதில் சொல்லிட்டு போ.” என்று அவள் வழியை மறைக்க

அவரை ஒரே கையால் தள்ளி நிறுத்தியவன் நந்தினியிடம் “நீ யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம். உள்ளே போடா.” என்றவன் “சக்தி ” என்று குரல் கொடுக்க அவன் பார்வை உணர்ந்து சக்தி அவளுடன் கூட நடந்தாள். அடுத்ததாக அவன் தாமரையை பார்க்கவும் அவளும் அவர்களுடன் உள்ளே நடந்துவிட, தன் பாட்டியிடம் திரும்பியவன் “இவங்கதான் யாரோ தெருவுல இருக்கவங்க, நம்ம வீடு பொண்ணை பத்தி கவலையில்ல. உனக்குமா பெரிய வீட்டு மரியாதை மறந்து போச்சு. இப்படி எல்லாரும் பார்க்க நம்ம வீட்டு விஷயத்தை பேசியே ஆகணுமா? ” என்று அவரை முறைக்க

வேந்தன் சிவகாமியை பார்த்தவன் அவர் அருகில் சென்று அவர் கையை பிடித்துக் கொண்டான்.”நீ மொதல்ல இவங்களுக்கு பதில் சொல்லி அனுப்பி வைக்க முடியுதா ன்னு பாரு. தாமரையும் நானும் இருந்தே அப்படி கத்தி பேசுறாங்க அவங்க. இதுல வயசானவங்க என்ன பண்ண முடியும் ஆதி. நீ இவங்களுக்கு ஒரு வழியை பண்ணு முதல்ல” என்றவன் அங்கே நின்று பார்த்துக் கொண்டிருந்த வேலையாட்களை கண்டிப்பாக ஒரு பார்வை பார்க்க அடுத்த நிமிடம் அனைவரும் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

அவர்கள் தலை மறையவும் சிவகாமியை அழைத்துக் கொண்டு அவன் உள்ளே நுழைய,ஆதித்யன் தன் தாயின் புறம் திரும்பினான்.

அவரை நேர்பார்வையாக பார்த்தவன் ” என்ன தெரியணும் உங்களுக்கு?? கேளுங்க என்கிட்டே நான் சொல்றேன் ” என்று நிதானமாக கேட்க

“ஆதி.. அந்த தாமரை நம்ம நந்துவை என்னென்னவோ சொல்றாப்பா. நந்து அப்படி கிடையாது தானே. அவ யாரு என் பொண்ணை பத்தி பேச” என்று கண்ணீரோடு கேட்க அவர்தான் சற்றுமுன்னர் கத்தி கூச்சலிட்டு சண்டை பிடித்தவர் என்று கூறினால் சத்தியமாக யாரும் நம்பமாட்டார்கள். அந்த அளவுக்கு கச்சிதமாக நடித்துக் கொண்டிருந்தார் அவர்.

ஆனால் ஆதித்யன் அவரை பற்றி நன்கு தெரிந்தவன் என்பதால் “தாமரை யாருன்னா கேட்டிங்க. என்னோட தங்கச்சி அவ. அடுத்து என்ன நந்துவை பத்தி பேசினாளா.அவ பேசி இருக்கமாட்டா, நீங்க அவளை பேச வச்சிருப்பீங்க. அதோட அவ சொன்னது பொய்யும் இல்ல.”

“உங்ககூடவே இருந்த பாவத்துக்கு கடவுள் அவளை தண்டிக்க நினைச்சிட்டாரு போல. அதான் அவ வாழ்க்கையே நாசமாக இருந்தது. என்ன பண்றது நீங்க தான் நெறைய பாவத்தை எங்களுக்கு சேர்த்து வச்சிருக்கீங்களே நாங்க அதையெல்லாம் தீர்க்க வேண்டாமா. அதான் இப்படி எல்லாம் நடக்குது போல.” என்று கூறியவன் மேலும் தொடர்ந்து

“என் தங்கச்சியோட வாழ்க்கை இன்னிக்கு இந்த நிலைமையில இருக்குன்னா அதுக்கு நீங்க மட்டும்தான் காரணம். யாருக்கு தெரியும் நீங்க மனோ அத்தைக்கு செஞ்ச பாவம் தான் அவளுக்கு இந்த நிலைமை போல. இனியாவது அவ நல்லா இருக்கணும்.”

“இனி உங்களுக்கு யாருமே இல்ல.மகன், மக ன்னு யாரையும் தேடி இங்க வந்துடாதீங்க. எல்லாரும் செத்துட்டதா நினைச்சுக்கோங்க. இனி உங்கள யாரும் கேள்வி கேட்கவோ, உங்களை எதிர்த்து பேசவோ மாட்டாங்க.”

“நீங்க செஞ்ச அத்தனை பாவமும் கேவலம் இந்த சொத்துக்காக தானே செஞ்சீங்க. உங்க கழுத்துல இருக்க தாலிக்கான பங்கு உங்களை வந்து சேரும். அதை வச்சு நீங்க நிம்மதியா இருங்க, இனி ஒருமுறை நான் உங்களை பார்க்கவே கூடாது. எங்க யார் கண்லயும் படவேகூடாது நீங்க.”

“முக்கியமா நந்தினி…..  உங்க பார்வை கூட அவ மேல படக்கூடாது. இனி அவ என் தங்கச்சி மட்டும்தான். வெளியே போங்க” என்றவன் “முத்தண்ணா “என்று அழைத்து “இவங்களை வெளியே அனுப்பிட்டு கேட்டை மூடுங்க ” என்று விட்டு உள்ளே சென்று விட்டான்.

வாசலில் நின்றிருந்த மங்கை மொத்தமாக தோய்ந்து போயிருந்தார் அவன் வார்த்தைகளில். தன் மக்கள் மட்டுமே வாழ வேண்டும் என்று நினைத்து அவர் அத்தனையும் செய்து வைத்திருக்க, இன்று அந்த மக்களே அவரை வெறுத்து ஒதுக்கி இருந்தனர்.

யார் என்ன சொல்லி திட்டியபோதும், பேசியபோதும் அசாராதவர் இன்று தனது பாசமான மகனின் வார்த்தைகளில் முழுவதுமாக உடைந்திருந்தார். நடைபிணமாகவே அந்த பெரிய வீட்டை விட்டு வெளியேறினார் அவர்.

Advertisement