Advertisement

அத்தியாயம் 25

மருத்துவமனையின் அந்த அறையில் உதவிக்கு கூட யாரும் இல்லாமல் தனித்து விடப்பட்டிருந்தாள் நந்தினி. சக்தி ஏற்பாடு செய்த செவிலி அடுத்த அறையில் இருந்தாலும், உடன் உறவினர், தெரிந்தவர் என்று யாரும் இல்லாமல் விட்டதை வெறித்துக் கொண்டு படுத்திருந்தாள் அவள்.

கண்களில் கண்ணீர் குளம் கட்டி இருக்க, தனக்கென யாரும் இல்லாத ஒரு தனிமை உணர்வு அவளுக்குள். தாமரை வேறு முள்ளாக உறுத்திக் கொண்டிருக்க, ஏனோ தோற்றுவிட்டதாகவே எண்ணி துவண்டுக் கொண்டிருந்தாள் அவள்.

அருமையான உறவுகளை ஆண்டவன் இயற்கையிலேயே கொடுத்து இருந்தும் தன் சுயநலத்தால் அனைத்தையும் இழந்து இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாள் அவள். ஆனால் இந்த நிலையிலும் கூட தன் தவற்றை உணராதவள், இப்போதும் வேந்தன்,சக்தி, தாமரை என்று வரிசையாக குற்றப்பட்டியலை தயார் செய்து கொண்டிருந்தாள்.

ஆதித்யன் காயப்பட்டிருப்பதால் சக்தி அவனை பார்க்க வந்தவள் இருந்த பதட்டத்தில் இவளை யோசிக்கவே இல்லை. அதுவும் மங்கை வேறு ஏகத்திற்கும் பேசி இருக்க, நினைவு இருந்தாலும் அவளை வந்து பார்த்திருக்கமாட்டாள் என்பது வேறு கதை.

ஆதித்யனை சோதித்து பார்த்தவள் அவன் உடல்நிலை சீராக இருக்கவே,அன்றே அவனை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டாள். வீட்டிலும் அவனுக்கு தேவையானதை கவனித்துக் கொண்டிருந்தவள் நந்தினியை மறந்து போனாள். சிவகாமி ரங்கநாயகிக்கு துணையாக சென்றுவிட்டவர் நந்தினியின் மீது கோபத்தில் இருந்ததால் அவரும் அவளை பார்க்க நினைக்கவே இல்லை.

சக்தியின் வாயிலாக அவள் உடல்நிலையை அறிந்து கொண்டவருக்கு அதுவே போதுமானதாக இருக்க அவர் யோசிக்கவே இல்லை. வேதமாணிக்கம் உண்மையில் வெறுத்து விட்டிருந்தார் அந்த தாயையும், மகளையும். அதன் பொருட்டே மண்டபத்தில் கூட வேந்தனுக்கு துணையாக நின்றிருந்தார்.

இப்போதும் பேத்தியின் செயலில் வெறுப்பு மட்டுமே மிச்சம் இருக்க, அதோடு வீரபாண்டியன் வேறு உடனிருக்கவும் அவருடனே சுற்றிக் கொண்டிருந்தார் அவர்.

நந்தினிக்கு இது எதுவும் தெரியாத போதே இவர்களை குறையாக நினைத்துக் கொண்டிருந்தவள், இன்னும் மண்டபத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் முழுதாக தெரிய வந்தால் என்ன செய்வாளோ ??

இங்கு மங்கை மண்டபத்தில் இருந்து கிளம்பியவர் மனதில் வேந்தனின் செயல்களே நிறைந்திருக்க, அவன் தன்னை அத்தனைபேர் முன்னிலையில் அசிங்கப்படுத்தி விட்டதாகவே கருதினார் அவர். அதற்கு குடும்பத்தினர் அத்தனை பெரும் அவனுக்கு துணையாக நின்றிருக்க கொதித்து போயிருந்தது அவர் உள்ளம்.

வேந்தனின் மீதிருந்த கோபத்தில் மருத்துவமனையில் இருக்கும் மகளை சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கூட வரவில்லை அவருக்கு. நேரே கோவிலுக்கு சென்றவர் தன் மனக்குறையை எல்லாம் அந்த இறைவனிடம் கொட்டிக்கொண்டு அமர்ந்துவிட்டார்.

எந்த மகள் உயிருக்கு போரடிக்க கொண்டிருக்கிறாள் என்று அத்தனை அழிச்சாட்டியம் செய்தாரோ அவளை சென்று பார்க்கவேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் அவர் அமர்ந்திருந்தது அதிசயம் தான். அந்த அளவுக்கு அவரை அடித்திருந்தான் வேந்தன்.

இவர்கள் நிலை இப்படி இருக்க வேந்தனின் வீட்டில் அவனது அறையில் அவனுக்காக காத்திருந்தாள் தாமரை. மதியம் அவள் பின்னால் அறைக்கு வந்தவனுக்கு மில்லிலிருந்து ஏதோ அழைப்பு வர அவசரமாக கிளம்பி இருந்தான் அவன். ரங்கநாயகி எவ்வளவோ சொல்லியும் அவரை சரிக்கட்டியவன் மில்லிற்கு கிளம்பி இருந்தான்.

மில்லில் ஒரு முக்கியமான இயந்திரத்தில் ஏதோ பிரச்சனையாகி இருக்க, அதன் மதிப்பு கிட்டத்தட்ட கோடியை தொட்டுவிடும் என்பதால் சற்று பதட்டமாகவே காணப்பட்டான் அவன். அதோடு இரண்டு நாட்களில் முடிக்கவேண்டிய வேலைகளும் அப்படியே இருக்க, யார் சொல்லையும் காதில் போட்டுக் கொள்ளாமல் கிளம்பி இருந்தான்.

அங்கு அந்த இயந்திரத்தின் பழுதை சரிபார்க்க அதில் தேர்ந்தவர்கள் போராடிக் கொண்டிருக்க, இவனும் அந்த இடத்தில இருந்தாக வேண்டிய கட்டாயம் அவனுக்கு. மதி இருப்பான் என்றாலும் அவனை அலைக்கழிக்க விரும்பவில்லை அவன். அதிலும் யார் இருந்து பார்த்தாலும் இந்த பிரச்சனை சரியாகாமல் அவன் மனம் அவனை நிம்மதியாக விடாது என்பதால் தானே நின்றிருந்தான் அவன்.

ஒருவழியாக மாலை ஏற்பட்ட இயந்திரக்கோளாறு கிட்டத்தட்ட பதினோரு மணி அளவில் சரி செய்யப்பட்டு இயந்திரம் சோதிக்கப்பட்டு அனைத்தும் தனக்கு திருப்தியான பிறகே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் அவன்.

வீட்டில் ரங்கநாயகி ஒன்பது மணிக்கே தாமரையை அறைக்கு அனுப்பிவிட்டவர் மகனுக்காக காத்திருந்தார். வெகுநேரமாகியும் அவன் வேறுவழி தெரியாமல் அவர் அமர்ந்திருக்க, தாமரை உறக்கம் வராமல் வெளியில் வந்தவள் தான் இருப்பதாக கூறி அவரை சென்று உறங்க சொன்னாள்.

ஆனால் புது மருமகள் வீட்டிற்கு வந்த முதல்நாளே மகன் இவ்வாறு செய்ய அதிலேயே அவருக்கு உடன்பாடு இல்லை இன்னும் அவளை காத்திருக்க வேறு சொல்வதா என்று அவர் யோசிக்க, தாமரையோ “உங்க மகனை பத்தி உங்களுக்கு தெரியாதா? அங்க பிரச்னை முழுசா முடியாம வரமாட்டாங்க. நீங்க போய் தூங்குங்க.” என்று அவரை அனுப்பி வைத்தாள்.

விருந்து நாளை மதியம் தான் என்பதாலும் உறவினர் வீடுகளும் அருகருகே இருப்பதாலும் அனைவரும் வீட்டிற்கு கிளம்பி இருக்க இவர்கள் குடும்பம் மட்டுமே வீட்டில்.செவ்வி சாதாரணமாக இருந்திருந்தால் வந்து இவளுடன் அமர்ந்து விட்டிருப்பாள்.இப்போது மசக்கை அவளை படுத்திக் கொண்டிருக்க  விசாலத்தின் வீட்டிலிருந்து வந்தவுடனே உறங்க சென்றிருந்தாள் அவள். வீட்டில் அனைவரும் உறங்க சென்றிருக்க, தாமரை சிறிது நேரம் சோபாவில் அமர்ந்திருந்தவள் தன் அறைக்கு வந்திருந்தாள்.தன் மொபைலை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தவள், வாசலில் வண்டிச்சத்தம் கேட்கவும் எழுந்து வெளியில் வந்தாள்.

வீட்டிற்கு முன் இருந்த இடத்தில வேந்தன் தன் புல்லட்டை நிறுத்திக் கொண்டிருக்க, வாசலுக்கு வந்தவள் மேல்படியில் நின்றுவிட்டாள். வேந்தனும் அந்த நேரத்தில் அவனை அங்கே எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் கண்களில் தோன்றிய மின்னல் தெரிவித்துவிட அத்தனை பிடித்திருந்தது அந்த நொடி தாமரைக்கு.

அவன் கண்களில் தோன்றிய அந்த கணநேர மின்னலுக்காக வாழ்நாள் முழுவதும் இதேபோல காத்திருக்க தயாராக இருந்தாள் அவள். அவனும் பைக்கை நிறுத்திவிட்டுநிதானமாக அவள் அருகே வந்தவன் கூடத்தை எட்டிப்பார்க்க, அங்கே யாரும் இருப்பதற்கான அறிகுறிகளே இல்லை.

அவன் ஆராய்ச்சியை கண்டவள் “அத்தை தூங்க போய்ட்டாங்க.” என்று கூற

” ஓஹ். சரி நீங்க தூங்க போகலையா ” என்று அவளை போலவே ராகமிட, ஏனோ கோபமே வரவில்லை அவளுக்கு. அவளின் குணத்திற்கு மாறாக அவள் அமைதியாக இருக்க, அவளின் அந்த நிலை வேந்தனை தூண்டிவிட அவள் அருகில் நெருங்கியவன் அவள் இடுப்பை வளைத்து அவளை தன்னோடு இறுக்கி கொள்ள “ஐயோ ” என்று

என்று லேசாக கத்தியே விட்டாள் அவள். அவன் தோள்களை பற்றிக் கொண்டவள் சட்டென பதட்டமாக சுற்றும் முற்றும் பார்த்து வீட்டினுள்ளே எட்டி பார்க்க அவளின் பதட்டத்தில் அப்படி ஒரு சிரிப்பு வேந்தனுக்கு. அவள் வீட்டிற்குள் பார்க்க திரும்பிய நேரம் அவள் கன்னத்தில் தன் முதல் முத்தத்தை பதித்தவன், அவள் காதுகளில் “இந்த ராத்திரில நீ என்னை கட்டிப்பிடிச்சு நிற்கிறதை பார்க்கிறது தான் அவங்களுக்கு வேலையா. அவங்களுக்கெல்லாம் இந்நேரத்துக்கு வேற வேலையே இருக்காதா ?” என்றவன் அவளை லேசாக தூக்கவும், இன்னும் அழுத்தமாக அவனை பற்றிக்கொண்டாள் அவள்.

“கீழே இறக்கி விடுங்க, யாராச்சும் எழுந்து வரப்போறாங்க. ” என்று கூறியவளிடம்

“வந்தா என்ன ? என் புருஷன் நான் கட்டிப்பிச்சிருக்கேன்னு சொல்லு ” என்றவன் அவளை தன்னோடு அணைத்து கீழே இறக்கிவிட,முழுவதுமாக அவன் மேல் உரசிய நிலை. முகம் சிவந்துபோக அவள் மீண்டும் அமைதியாகிவிட, சன்னமாக விசிலடித்தவன் அவளை மீண்டும் நெருங்க அவன் கைக்கு எட்டாமல் சட்டென தள்ளி நின்றாள் அவள்.

அவன் பார்க்கவும் “முதல்ல போய் குளிச்சிட்டு வாங்க. டிபன் எடுத்து வைக்கிறேன்.” என்று கூற

” தப்பிச்சிட்டதா நினைப்பா ” என்று அவளை கேட்க, அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை அவள். அவள் நிலையை புரிந்தவனாக அதற்குமேல் சோதிக்காமல் அமைதியாக அவன் அறைக்கு சென்றுவிட, இவள் சமையல் அறைக்கு சென்றவள் டைனிங் டேபிளில் இருந்த பாத்திரங்களை திறந்து பார்க்க ஹாட் பாக்ஸில் இட்லியும்,சாம்பார், தக்காளி தொக்கு  போன்றவை தனித்தனி கிண்ணத்திலும் இருக்க, அவற்றை மீண்டும் லேசாக சூடுபடுத்த அடுப்பில் வைத்தவள், பிரிட்ஜை திறந்து பார்க்க அதில் மாவு இருக்கவும்

இன்னொரு அடுப்பில் அங்கிருந்த தோசைக்கல்லை ஏற்றியவள் அதில் தோசை வார்க்க ஆரம்பிக்க, சரியாக அவள் இரண்டாவது தோசையை முடிக்கும் நேரம் சமையலறைக்குள் நுழைந்தான் வேந்தன். நடக்குமோ நடக்காதோ என்று எண்ணி அவன் ஏங்கி இருந்த ஒரு கனவு நிலை அவன் கண்டது.

தாமரையை காதலித்த காலத்தில் இருந்தே அவள் நின்று கூட பேசியவன் இல்லை என்பதால் நிறைய போராட வேண்டி இருக்கும் என்று தெரிந்தாலும், அதற்காக என்றுமே கவலைப்படாமல் ஆவலுடன் கனவிலேயே வாழ்ந்தவன் அவன்.

எத்தனையோ முறை இதே கோலத்தில் அவளை நினைத்து பார்த்தது உண்டு என்பதால் அந்த நொடி அத்தனை உவகையை கொடுத்தது அவனுக்கு. ஆனால் மனைவி என்பவள் சமையலறைக்கும், படுக்கையறைக்கு மட்டுமே சுதந்திரம் கொண்டவள் என்ற பிற்போக்கு எண்ணம் கொண்டவனும் அவனில்லை.

தன் மனைவி ஒரு மருத்துவர் என்பதும் அவன் அறிவான்,அந்த பணிக்கு உண்டான பொறுப்புகளும் அவன் அறிந்ததே. அதைக்கொண்டு அவளிடம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது அவளை அவள்போக்கில் அவள் பணியை தொடர செய்ய வேண்டும் என்று எண்ணற்ற கனவுகளை கொண்டவன் தான்.

ஆனாலும் இந்த காட்சி மனதில் பதிந்து போனது. இன்று இருவருக்கும் திருமணமாகி முதல் நாள் இரவாக இருக்க, அவளுக்கும் எத்தனையோ கனவுகள் இருந்திருக்க கூடும்.ஆனால் எதையுமே வெளிக்காட்டி கொள்ளாமல் தன் அன்னையையும் உறங்க அனுப்பி தனக்காக அவள் காத்திருந்தது, இந்த நொடி வரை ஏன் லேட்டா வந்திங்க என்று எந்த கேள்வியும் கேட்காமல் ஏன் ஒரு சிறு முகசுணக்கம் கூட காட்டாமல் அவள் இயல்பாக நடந்து கொள்வது என்று அவளை இன்னுமின்னும் பிடித்து தொலைத்தது அவனுக்கு.

ஏதோ முதுகில் குத்தும் உணர்வில் திரும்பிய தாமரை வேந்தனை பார்க்கவும், அவசரமாக அங்கிருந்த தட்டை கையில் எடுத்துக் கொண்டுவர அவள் கையில் இருந்து அதை வாங்கி கொண்டவன் அவளுடனே வந்து அந்த சமையல் மேடையில் அமர்ந்து கொண்டான்.

இலகுவாக அமர்ந்துகொண்டு அவன் சாப்பிட, இவளும் அவனுக்கு சுடசுட பரிமாறி கொண்டிருந்தாள்.இடையிடையே அவளுக்கும் ஊட்டிவிட மறுக்காமல் வாங்கி கொண்டாள். அந்த ஏகாந்த இரவு அத்தனை இனிமையாக இருந்தது அந்த ஜோடிக்கு.

வேந்தன் ஒருவழியாக உண்டுமுடித்தவன் அவள் சமையலறையை ஒதுங்க செய்யும் வரை அவளுடனே இருந்தான்.பலநாட்கள் அங்கு பழகியவளை போன்று இயல்பாக அவளிருக்க எந்த தடுமாற்றமும் இல்லை அவளிடம்.

அத்தனையும் ஒதுங்க வைத்து அடுப்பை லேசாக துடைத்து,இவர்கள் சாப்பிட்ட தட்டை கழுவி வைத்துவிட்டு அவள் வெளியில் வரவும் , வெளியில் இருந்த விளக்கை அணைத்துவிட்டு,வாசற்கதவை சாத்திவிட்டு அவன் உள்ளேவரவும் சரியாக இருந்தது.

இருவரும் புன்னகைத்துக்கொள்ள தாமரை அமைதியாக அவள் இருந்த அறைக்குள் செல்லப்பார்க்க, வேந்தன் அவளை தடுத்தவன் அவள் கைகளை பிடித்துக் கொண்டு அவளை மடியறைக்கு தன் சாம்ராஜ்யத்திற்கு அழைத்து சென்றான்.

அந்த இடம் மொட்டைமாடியாக இருக்க அதன் தொடக்கத்தில் படிகளுக்கு சற்று தள்ளி ஒற்றையாக இருந்தது அந்த அறை.அந்த மொட்டைமாடியின் சுவர் ஒரு பக்கம் அணைவாக இருக்க,அதை சிறிது மட்டுமே ஏற்றி அந்தகால கூரைவீடு போல செய்திருந்தவன் சீமை ஓடுகளால் கூரை வேய்ந்து இருக்க முன்னால் சின்னதாக காலி இடம் விட்டு அதற்குமேல் பந்தல் போல் அதே ஓடுகளால் வேயப்பட்ட கூரை.

அத்தனை சிறிய இடத்தில் அத்தனை அழகாக அமைக்கப்பட்டிருந்தது அந்த ஒற்றை அறை. இத்தனைக்கும் அத்தனை ஆடம்பரமும் இல்லை அங்கு. அந்த பந்தலின் கீழ் இரு மூங்கில் கூடை நாற்காலிகள்.அதன் முன் ஒரு டீபாய்.அவ்வளவே.ஆனால் அத்தனை ரம்மியமாய் இருந்தது அந்த அறை.

பலநாட்கள் அவனின் புலம்பல்களுக்கும்,அவன் பிதற்றல்களுக்கும் வடிகாலாகவும்,சாட்சிகளாகவும் இருந்தவை அந்த அறையும், அங்கிருக்கும் பொருட்களும் மட்டுமே.தன்னவளுடன் அங்கு நிற்கும் அந்த நொடி அத்துணை முக்கியமானது அவன் வாழ்வில்.

அவளை கைபிடித்து அறையின் உள்ளே அழைத்து சென்றவன், கட்டிலில் அவளை அமர்த்தி அவள் மடியில் படுத்துக் கொள்ள, தடுமாறித்தான் போனாள் அவள். ஆனால் அவள் மடியில் தலை சைத்திருந்தவனுக்கு அதுவே போதுமானதாக இருந்தது போல.அதற்குமேல் எதையுமே தேடவில்லை அவன்.

அவன் அமைதியில் அவளாகவே அவன் தலையை கோதிவிட, சட்டென அவள் முகம் பார்த்து திரும்பி படுத்துகொண்டான்.அவனது திடீர் செயலில் அவள் கை வேலையை நிறுத்த,அவள் கையை எடுத்து மீண்டும்  தன் தலையில் அவன் வைக்கவும் புன்னகையோடு அவன் தலையை கொதிக்க கொண்டிருந்தாள் அவள்.

அவள் மறுகையை கையில் எடுத்துக் கொண்டவன் தன் நெஞ்சில் வைத்துஅழுத்திக் கொண்டவன் அந்த கையோடு தன் கையை கோர்த்துக்கொண்டு அதில் இதழ்பதிக்க, தாமரையின் கைகள் தானாக நின்றுவிட்டது.

அவள் முகத்தை பார்த்து சத்தமாக சிரித்துவிட்டவன் “ஹேய் !! ஒரு முத்தத்துக்கே இப்படியா. ரொம்ப போராட வேண்டி இருக்கும் போலயேடா வேந்தா !” என்று சத்தமாக சிரிக்க,அவன் சிரிப்பு அத்தனை பலமாக எதிரொலித்தது அந்த அறையில்.அவன் வாயை கைகளால் பொத்தியவள் “ஷ்ஷ்ஹ் ” என்று உதட்டின் மீது கையை வைத்து ஒலி எழுப்ப

அவன் கண்கள் அழுத்தமாக அவள் இதழ்களில் பதிந்தது. சட்டென எழுந்து அமர்ந்தவன் அவள் கன்னத்தை பிடித்து தன்னருகே இழுக்க பயந்துபோனாள் அவள்.அவள் கண்களில் அப்பட்டமாக பயம் மட்டுமே தெரிய ஒருநொடி தன் தவற்றை உணர்ந்தவன் அவள் தலையில் தட்டிவிட்டு அவள் தோள்மீது கைகளை போட்டு அணைத்தவாறு அமர்ந்து கொண்டான்.

உணர்வுகள் முற்றிலுமாக வடிந்துவிட்டதா என்று தெரியாவிட்டாலும், தன்னவளை காயப்படுத்த தன்னால் முடியாது என்பது தெளிவாக தெரிய அமைதியாகிவிட்டான் அவன்.அவன் செய்கையில் தாமரைக்கு லேசாக புரிந்தது போல அவன் நிலை.

அவனை விட்டு விலகாமல் அவன் தோளில் சாய்ந்துகொண்டவள் “வேண்டாம்ன்னு நினைக்கல.கொஞ்சம் பயம் இருக்கு அவ்ளோதான். நீங்க தெளிய வச்சிடுங்க.” என்று கூறி அவன் தோளில் அழுத்தமாக புதைந்து கொள்ள,அவள் வார்த்தைகளில் தெளிந்தவன் அவள் முகத்தை நிமிர்த்த முயல அதற்கு இடம் கொடுக்காமல்அவன் நெஞ்சில் புதைந்து கொண்டு அவனை கைகளால் சுற்றிக்கொண்டாள் அவள்.

அவன் தூர நிலவு

அவன் கைகளுக்குள் இருக்க

தொலைவில் தெரிந்த தொடுவானத்தை

தொட்டுவிட்டிருந்தான் அவன்…

Advertisement