வாழ்க தமிழ் !

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்

அந்த குறிஞ்சிக் கடவுளை வணங்கிவிட்டு கருவறையைச் சுற்றி வந்தவளின் பார்வையில் அன்றைக்குத் தான் விழுந்தது கோவிலின் பக்கச் சுவர்களில் செதுக்கப்பட்டிருந்த வள்ளுவனின் வாக்கு. வெகு நேர்மறையான குறள் வெண்பா தான். ஆனால் அவள் அப்படி உணரவில்லை.

எல்லா முயற்சிகளையும் கைவிட்டுவிட்டுத்தான் கடவுளிடம் அடைக்கலம் தேடி வந்திருக்கிறாள். அவளிடமிருந்து வேண்டுதல்களைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

வழக்கமான வேண்டுதல்களில் கூட நம்பிக்கை தீர்ந்து போய் இந்த 48 நாள் சஷ்டி வழிபாட்டில் இறங்கியிருக்கிறாள். அவளின் இறுதி ஆயுதம் என்று கூட சொல்லலாம்.

உள்ளம் உருகுதையாஆஆ.. என அலைபேசியில் டி.எம்.எஸ் கனியத் தொடங்கவுமே, இருக்கும் இடம் கருதி அவசரமாய் அழைப்பை அமைதியாக்கினாள்.

ஊதா நிற இதயம் திரையில் மின்னிக் கொண்டிருந்தது. அழைப்பைத் துண்டித்துவிட்டு புலனத்திற்குள் வந்தாள். அதற்குள்ளாகவே அழைத்தவளும் அங்கே வந்திருந்தாள்.

“எங்கல இருக்க? நான் கோவில் வந்தாச்சு..”

“நானும்

அப்படியே சுத்தி வா” என்றபடியே நடைபாதையிலிருந்து விலகி நின்றாள். அலைபேசியை நிரந்தர அமைதிக்குள் தள்ளிவிட்டு நிமிர, பொதிகை அவளுக்குப் பக்கத்தில் வந்துவிட்டிருந்தாள்.

“சாரி கட்ட சொன்னேன்ல கழுத” என்றவள் கடல் நீல நிற பருத்தியில் வந்திருந்தாள்.

“அழகா இருக்குல”

“எனக்கே தெரியும். நான் அதக் கேட்கல” என அவள் முறைக்கவும்

“இதையே எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியல. வா!” என மிரட்சியும் தளர்வுமாய் நகரத் தொடங்கியவளை இழுத்து நிறுத்தி, கொண்டு வந்திருந்த சிறு செண்பக மலர்ச்சரத்தை சூட்டினாள் பொதிகை.

“ஹேய்..” என்றவளின் மனம் சட்டென அமைதியால் நிரம்பியது. அந்தச் சந்தன மலர்களின் மேல் அப்படியொரு மையல் அவளுக்குண்டு. ஆனால் சில வருடங்களாகவே அதன் பக்கம் கூட செல்வதில்லை. இன்றைக்கு அவளைத் தேடி வருவது தற்செயலா இல்லை அவளின் தவத்திற்கான வரமா?

விழிகளில் நீரேற,

“தாங்க்ஸ் பொதி!” என்றாள்.