Advertisement

அத்தியாயம் 3:

ராஜ் அந்த காவல் அதிகாரியிடம் எவ்வளவோ மன்றாடி பார்த்து விட்டான் ஆனால் பலனோ பூஜ்ஜியம் தான். ஏனோ அந்த இன்ஸ்பெக்டர் இவர்களை விரட்டி விடுவதிலேயே தான் மும்முரமாய் இருந்தார். அவரை சொல்லியும்‌ குற்றம் இல்லை. பல நேரங்களில் பெண்கள் காதல் மயக்கத்தில் பெற்றோர்களை ஏமாற்றி விட்டு இப்படி சென்று விடுவார்கள். அதனை அறியாத பெற்றோர்களும் உடன் பிறந்தவர்களும் இதுபோல காவல் நிலையம் சென்று கதறுவது‌ அந்த‌ காவல்நிலையத்திற்கு புதிதில்லை.

அதிலும்‌ இப்போது இருக்கும் இன்ஸ்பெக்டர் சங்கர் சரியான சோம்பேறி. அதனால் இந்த இரவு வேளையில் நிவியை தேடி அலைய அவனுக்கு விருப்பமில்லை. ராஜிற்கும் , ரவிக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. இவர்களிடம் கெஞ்சுவதை விட வேறு ஏதாவது செய்யலாம் என தோன்றியது.

நமக்கு நடக்காத வரை எவ்வளவு பெரிய துயரமும் தூசி தான்.  மொழி தெரியாத ஊரில் இருப்பது போல பிரம்மை ரவிக்கும், ராஜிற்கும். நிவியை காணவில்லை என்ற ஒன்றே இருவரின் மூளையையும் மழுங்கடித்து விட்டது. நேற்று இரவு சாப்பிட்டது தான். அதன்பின் உணவு எடுத்துக் கொள்ளவில்லை. நிவியில்லாமல் உணவு இறங்குமா என்பதும் சந்தேகமே.

காவல் நிலையத்தின் வாசலில் பிரம்மை பிடித்தது போல அமர்ந்து இருந்தனர்.  சற்று நேரத்தில் காவல் நிலையமே  பரபரப்பானது.  சங்கர் பதட்டமாக இவர்களை நோக்கி ஓடி வந்தான்.

” என்ன சார் நீங்க இவ்ளோ பெரிய ஆளுங்கனு சொல்லவே இல்ல. நா ஏதாவது தப்பா பேசிருந்தா என்ன மன்னிச்சிடுங்க. நாங்க மட்டும் இல்ல இன்னும் நூத்தியம்பது போலீஸ்காரங்க உங்க பொண்ணத் தேட கிளம்பிட்டாங்க. நீங்க வீட்டுக்கு போங்க சார். நாங்க தங்கச்சிய கண்டு பிடிச்சுடுவோம். ” என ஏகத்துக்கும் பம்மியபடி சொல்லி விட்டு சென்று விட்டார்.

ராஜிவிற்கும் ரவிக்கும் ஒரே குழப்பம். அவர்களின் அருகே இருந்த கான்ஸ்டபிள் ஒருவரிடம் விசாரித்தனர்.

” ஐயா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நாங்க பேசும் போது இன்ஸ்பெக்டர் எங்கள தான் திட்டுனாரு. இப்போ இப்படி பேசுறார். என்ன நடந்துச்சு “

“சார் நீங்க ஹரிஸ் சார்க்கு வேணடப் பட்டவரா. அதோட நிவி அவரு கட்டிக்கப் போற பொண்ணு தானாமே. மேலெடத்துலேர்ந்து போன் வந்துச்சு. அதான் சார் கிளம்பிட்டாரு. நீங்க உக்காருங்க சார்” என மரியாதையாக பேசினார்.

ஹரிஸ்க்கு எப்படி விஷயம் போனது என்று தெரியவில்லை ஆனாலும் இப்போது ரோஷம் பார்க்க முடியாது. தன்மானத்தை விட தங்கை முக்கியம் அல்லவா. தங்களை கண்டு கொள்ளாத அதிகாரிகள் இப்போது நடந்து கொள்ளும் விதம் பணத்தின் மதிப்பை அவர்களுக்கு காட்டியது.

விடிய விடிய தேடல் நடந்தது இருப்பினும் நிவியைப் பற்றி எந்த தகவலும் இல்லை. தேடுதலின் முடிவில் அவர்கள் கண்டறிந்தது இதைதான்.

(இது கற்பனை தான். எந்த பகுதியையும் தவறான நோக்கத்துடன் சித்தரிக்கவில்லை)

நிவி தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் மற்றும் மணி மங்கலத்திற்கும்‌ இடையே‌ உள்ள கிருஷ்ணா நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறாள். அவளது வீடு மூன்று மாடி   கொண்டது. வளர்ந்து வரும் மக்கள் தொகையின் தாக்கத்தால் முன்பு வயலாக , கைவிடப்பட்ட இடமாக இருந்த பகுதிகள் எல்லாம் இப்போது குடியிருப்புகள் ஆகிவிட்டன. அது போல இவளது வீடு இருப்பது ஒதுக்குப்புறத்தில்.

அவளது வீட்டிலிருந்து மினி பேருந்து நிறுத்தம் செல்ல வேண்டும் எனில் ஒரு கிலோ மீட்டர் செல்ல வேண்டும். வழியில் ஆங்காங்கே சில வீடுகள் உள்ளன. அவளது கல்லூரி இருப்பது தாம்பரத்தில். தாம்பரம் செல்ல வேண்டும் எனில் மினி பேருந்தில் ஏறி இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராதா நகர் வரவேண்டும். இங்கும் வழியில் சில வீடுகள் ஆங்காங்கே இருக்கும். நிவி எப்போதும் ராதா நகர் வரை நடந்து சென்று விடுவாள் நடைபயிற்சியாக.

அவள் வழக்கமாக செல்லும் கோவில் ராதா நகர் செல்லும் வழியில் உள்ளது. அதாவது நிவியின் வீட்டில் இருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில். என்ன தான் நிவியின் குடும்பம் வசதியானது என்றாலும் சொத்துக்கள் அனைத்தும் நிவி பேரில் தான் இருந்தது. இந்த வீடு தான் நிவியின் தந்தை முதன் முதலில் வாங்கியது. வீடும் அவரது பெயரில் உள்ளது. ஆகையால் குடும்பத்தினர் அனைவரும் அங்கே தான் வசிக்கிறார்கள் பல காலமாய்.

விசாரணையில் தெரிய வந்தது நிவியின் வீட்டிற்கும் அந்த கோவிலுக்கும் இடையே சிசிடிவி கேமரா ஒரே ஒரு‌ இடத்தில் தான் இருந்தது. நிவியின் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு கடையில் நிவி அதிகாலையில் நடந்து சென்றது பதிவாகியிருந்தது. ஆனால் அவள் திரும்ப வரவேயில்லை. அதன் பிறகு என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லை. அதிகாலை நேரமாதலால் ஆட்கள் நடமாட்டம் இல்லை. அதனால் யாரிடமும் விசாரிக்க முடியவில்லை. நிவியின் குடும்பத்துடன் சேர்ந்து அங்கு வசிப்பவர்களும் அவளை தேடினர். ஆனால் காற்றில் மறைந்த கற்பூரமாய் அவளை காணவில்லை. இன்னும் தேடுதல் நடந்து கொண்டு தான் இருக்கிறது

ஒரே இரவில் நடந்த மிகப்பெரிய தேடுதல் மெல்ல கசிய ஆரம்பித்தது ‌.நிறைய பத்திரிகை அன்பர்கள் இது பற்றிய செய்திகளை சேகரிக்கத் தொடங்கினர். விளைவு ஆர்.என் குழுமத்தின் சென்னை மண்டல தலைமை அதிகாரியின் மகளை காணவில்லை என செய்தி பரவியது. சில விஷமிகள் நிவியைப் பற்றி மீம்ஸ் உருவாக்கி வெளியிட்டனர். காணவில்லையா இல்லை காதலனுடன் உல்லாச ஓட்டமா என்று.

சில சமயம் பொய்யான செய்திகள் தான் உண்மையை விட அதிகமாக பரவும். மீம்ஸ் உருவாக்கியவர்களுக்கு நிவி பத்தோடு பதினொன்று. வேறொரு விஷயம் வந்தால் இதை மறந்து கடந்து விடுவார்கள். ஆனால் அந்த குடும்பம் படும் பாட்டை அவர்கள் அறிவார்களா. நிவியை காணவில்லை என்று நிவியின் குடும்பம் பட்ட துன்பங்களை விட துக்கம் விசாரிக்க வந்தவர்கள் பேசிய வார்த்தைகளை அச்சில் ஏற்ற இயலாது.

அவர்கள் பேச்சின் சாராம்சம் இதுதான். நிவி  யாரையோ காதலித்து ஓடி போய் விட்டாள். திருமணம் செய்து இருப்பாள். திருமணம் ஆகாமல் கர்ப்பமாக இருந்து இருப்பாள் அதனால் தான் ஓடி போய் விட்டாள் என நிவி கிருஷ்ணா நகரின் ஹாட் டாபிக்காக இருந்தாள். சில நல்ல உள்ளங்கள் மட்டுமே உண்மையான ஆறுதலை கொடுத்தனர்.

நிவி தொலைந்து போய் இன்றோடு இரண்டு நாட்கள் ஆகிறது. வீட்டில் யாரும் சரியாக உண்ணவில்லை. மகா எந்நேரமும் அழுது கொண்டே இருந்தாள். இரண்டாம் நாள் மதியம் போலீஸ் விசாரணைக்காக நிவியின் வீட்டிற்கு வந்தனர். இம்மாதிரி புகார்களில் போலீஸின் முதல் படி தேடுதலோடு சேர்த்து காணமல் போனவர் மூலம் யாருக்கு ஆதாயம் என்று விசாரிப்பார்கள். அதாவது நிவி இல்லாமல் போனால் யார் பலன் பெறுவார்களோ அவர்கள் தான் சஸ்பெக்ட் நம்பர் ஒன்.

அதன் படி போலீஸ் விசாரணையில் சொத்துக்கள் நிவியின் பேரில் இருப்பது தெரிந்து கொண்டனர். அதனால் இப்போது ப்ரைம் சஸ்பெக்ட் அதாவது சஸ்பெக்ட் நம்பர் ஒன் நிவியின் சகோதரர்கள் அவர்களின் மனைவிமார்கள். இவர்களோடு ஹரிஷ்.

ஆதலால் இன்று விசாரணைக்கு நிவியின் வீட்டிற்கு வந்தனர். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரித்தனர். அதை பதிவும் செய்து கொண்டார்கள். ரகு முதல் வீட்டின் வேலையாள் அம்சவேணி வரை யாரும் விடுபட இல்லை.

போலீஸ் விசாரணை முதலில் சாதாரணமாகவே இருக்கும். நம்முடைய நடவடிக்கைகளை பொறுத்தே அது மாறுபடும். நம்முடைய உச்சி முதல் பாதம் வரை எல்லா இடங்களும் போலீஸ்காரரகளின் கண் எனும் கேமராவில் பதிவாகும். எளிதில் நாம் உண்மை சொல்கிறோமா இல்லையா எனக் கண்டு பிடித்து விடுவார்கள்.

நிவியின் வீட்டில் எல்லாருடைய பதில்களும் அவர்களுக்கு திருப்தியே ஆதலால் அனைவரது பெயரையும் சந்தேகப்படும் நபர்கள் பட்டியலில் இருந்து எடுத்து விட்டனர் ஒருவரைத் தவிர. அது பானு.

பானுவின் உடல் மொழி அவள் எதையோ மறைப்பது போல தெரிந்தது. அதனோடு அக்கம் பக்கம் உள்ளவர்களும் பானுவின் குணத்தை போலீஸிடம் சொல்லிருந்தார்கள். சொத்திற்காக பானு இந்த கடத்தலை செய்து  இருக்கலாம் என்று நினைத்தனர். ஆனாலும் போதுமான ஆதாரம் இன்றி அவளை கைது செய்ய முடியாது.

இங்கே நிலவரம் இப்படி இருக்க சஸ்பெக்ட் நம்பர் ஒன் என குறிப்பிடப்பட்ட ஹரிஷ் பித்துப் பிடித்தவன் போல இருந்தான். இரண்டு நாட்களாய் அவனும் நிவியை தனது அந்தஸ்து அத்தனையும் மறந்து  தேடிக் கொண்டு இருந்தான். மற்றவர்களுக்கு எப்படியோ நிவி அவனுக்கு தேவதை. அவள் இன்றி அவனுக்கு ஒன்றுமே இல்லை. கண்டவுடன் காதல் கிடையாது அவனுடையது. அவனது பத்தாவது வயதில் நிவியைப் பார்த்தான். அன்றிலிருந்து அவள் அவனுக்கு இன்றியமையாத உயிராக மாறிவிட்டாள்.

வழக்கமாக சீரியல்களிலும் கதைகளிலும் வரும் பணக்கார பெற்றோர்களை போல் பணத்தின் பின்னே ஓடி மகனுக்கு தேவைபடும் அன்பை வழங்காத பெற்றோர் போல அல்லாமல் ஹரிஷின் பெற்றோர் அவன் மீது உயிரையே வைத்திருந்தனர். அப்போது ஆர்.என் குரூப்ஸ் சென்னையில் மட்டும் தான் இருந்தது.

ரவி ஆர்.என் குரூப்ஸில் சேர்ந்த நேரமது. நான்கு வயது நிவி எப்போதும் அப்பா செல்லமாய் அவருடனே திரிவாள். பள்ளி விடுமுறை நாள் என்பதால் அவள் அடம்பிடித்து தந்தையுடன் அலுவலகம் வந்திருக்க ஹரிஷும் தனது தந்தையுடன் வந்திருந்தான். அங்கே அவன் கண்டது தந்தையின் கைகளில் இருக்கும் சாக்லேட்டிற்காக தப்பும் தவறுமாக சின்ட்ரெல்லா கதையை சொல்லிக் கொண்டு இருந்த நிவியை தான். சாக்லேட் கைக்கு வந்ததும் இவனைப் பார்த்தவள் பங்குக்கு வந்து விடுவானோ என்று அஞ்சி முழுவதையும் வாயிற்குள் போட்டு திணறிக் கொண்டு இருந்தாள். ஏனோ அந்த நிமிடம் அவனுக்கு அவளை பிடித்திருந்தது.

அவளோடு தானாக சென்று பேச்சு கொடுத்தான். நாட்கள் செல்லச் செல்ல இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். இருவரும் ஒரு நாள் கூட பார்க்காமல் இருந்தது இல்லை. ஹரிஷ் தந்தையின் பொறுப்புகளை கையில் எடுத்த பின்பு அவனுக்கு ஓய்வு என்பதே கிடையாது. அவனுடைய ஒரே ஆறுதல் நிவி தான். இவனுள் காதல் எப்படி முளைத்தது என்று அவனுக்கு புரியவில்லை. ஆனால் அவனது காதலுக்கு வயது பதினாறு.

அவள் கல்லூரியில் சேர்ந்த பின்பு தான் தன்னுடைய காதலை அவளிடம் சொன்னான். அன்றிலிருந்து எல்லாம் மாறிவிட்டது. நிவிக்கு ஹரிஷை மிகவும் பிடிக்கும். ஆனால் காதலா என்று தெரியாது. அதை தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. அவளது‌ கவனம் முழுவதும் படிப்பில் தான். அதனோடு திருமணம் தந்தையின் பொறுப்பு என நினைப்பவளால் அவனது காதலை ஏற்க முடியவில்லை.

வாழ்க்கையை அதன் போக்கில் வாழ நினைப்பவள் இவனது காதலை மட்டும் தவிர்த்து விட்டாள். இருவரும் பார்த்துக் கொள்வதும் பேசிக் கொள்வதும் குறைந்தாலும் ஹரிஷின் காதல் குறையவில்லை.

அப்படிப்பட்டவன் இன்று நிவியை காணமால் தவித்து விட்டான். அவனது பெற்றோர்கள் அவனை வற்புறுத்தி உணவு ஊட்டிக் கொண்டு இருந்தனர்.

சங்கருக்கு தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது. அவனுடைய சர்வீஸ் இல் எந்த புகார்க்கும் அவன் இப்படி அலைந்தது இல்லை. சோஷியல் மீடியாவில் நிவி கடத்தப் பட்ட செய்தி பரவியதில் இருந்து சில மகளிர் அமைப்புகள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று போராட்டம் நடத்தினர். எதிர்கட்சியோ இதை அரசியல் ஆக்கினர். மொத்தத்தில் தலைவலி சங்கருக்கு தான். அவன் இன்னும் இரண்டு நாட்களில் நிவியை கண்டு பிடிக்க வில்லையெனில் வழக்கு வேறொருவருக்கு மாற்றப்படும் அதனோடு இவனுக்கும் ஒரு கரும்புள்ளி கிடைக்கும். காணாமல் போன நிவியை சபித்தவாறு அலைந்து திரிந்து கொண்டிருந்தான்.

இரவு அனைவரும் தங்களது அறைக்குள் ஒதுங்கிய நேரம் பானு யாரும் அறியாமல் மொட்டை மாடிக்கு சென்றாள். தனது தொலைபேசியில் யாருக்கோ அழைத்தாள்.

“எனக்கு பயமாருக்கு… நாம மாட்டிக்க மாட்டம்ல”

“.   “

“சரி நீ சொல்றத நம்புறேன்”

“.  “

” போலீஸ் என்ன சந்தேகப்படுற மாதிரி  தெரியுது. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. விஷயம் வெளியே தெரிஞ்சா என்னோட வாழ்க்கையே போய்டும்”

“.   “

” சரி சரி உன்ன தான் நம்பியிருக்கேன். நா அப்பறமா கூப்டுறேன்”

நிவி காணமல் போய் இன்றோடு நான்கு நாட்கள் ஆகிறது. அது மாலை நேரம் . நிவியின் வீட்டிலிருந்து அரைகிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறுவர் பூங்காவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே அமர்ந்து பெற்றோர்கள் அமர்ந்து அவர்களை கண்காணித்து கொண்டு இருந்தனர்.

திடிரென குழந்தைகளின் அலறல் சப்தம் கேட்டது. பெற்றோர்கள் அதிர்ந்து ஓடி சென்று அவர்களை  பார்த்தனர். அவர்களும் அதிர்ச்சி. குழந்தைகளின் கண்களே முடி விரைவாக அந்த இடத்தை விட்டு அழைத்து சென்றனர்.

எதனால் அதிர்ச்சி??? நிவி எங்கே???? சஸ்பெக்ட் நம்பர் ஒன் யார்?? பானுவா??? ஹரிஷா???? இல்லை மூன்றாவது நபரா???

Advertisement