Advertisement

அத்தியாயம் 17:-

 

துடிக்கிறது

எந்தன் இதயமும்

மனமும்

உன்னை காண எண்ணி…!!

 

சற்றே வெப்பத்துடன் இருந்த உடல் நேரம் ஆக ஆக கொதிக்க துவங்க, செவத்தாயி மிகவும் பயந்து போனார்…

 

‘அய்யோ ஆத்தா மகமாயி…இது என்ன சோதனை..சிட்டுக்குருவியா சிரிச்சிட்டு திரிஞ்ச புள்ள, இப்படி காய்ச்ச வந்து சுருண்டு படுத்துக்கிடக்கே.. நான் என்ன பண்ணுவேன்…’ என புலம்பியவரை அடக்கியது காத்தவராயனின் குரல்..

 

‘அடேய் கிறுக்கி,எதுக்கு இப்படி ஓயாம புலம்பிட்டு இருக்கவ, காய்ச்ச  வந்தா டாக்டர் கிட்ட போனா சரியாகுமா..??,இல்ல இப்படியே புலம்பிட்டு இருந்தா சரியாகுமா..??,..’

 

‘புள்ளையை எழுப்பி மேலாப்ப தலையை சீவி விடு ,நான் அதுக்குள்ள தமிழுக்கு ஒரு போனை போட்டு சொல்லிட்டு வந்துற்றேன்..தமிழ் வந்தா பேத்தியை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போயிட்டு வரட்டும்…’ என்றவர் தன்னிடம் இருந்த நோக்கியா போனையும்,எண்கள் இருந்த சிறு குறிப்பேடு புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு வெளியேற..

 

கணவன் சொன்னதை போல் குழல்மொழியினை எழுப்பியவர் ,போர்வை ஒன்றால் நன்கு போர்த்தி விட்டு மேலாக தலையை சீவியவர் ,வயிற்றுக்கு சிறிது புழுங்கல் அரிசி சாதத்தையும், ரசத்தையும் விட்டு நன்கு குழைய பிசைந்து ஊட்ட…

 

‘ம்ஹும்…வேண்டாம் பாட்டி.. ‘ என மறுத்துவளை

 

‘அப்படி எல்லாம் சொல்லாத குழலு.. கொஞ்சமாச்சும் சாப்பிட்டா தான் உடம்புக்கு தெம்பு இருக்கும்,இப்படி சாப்பிடாம இருந்தா எப்படி உடம்பு சரியாகும்..கொஞ்சமா சாப்பிடு குழலு…’ என கெஞ்சியப்படி ஒரு வாய் சாதத்தை ஊட்டி விட…

 

அதனை வாங்கிக்கொண்டவள் கஷ்டப்பட்டு விழுங்கினாள்.. அடுத்த வாய் உணவை ஊட்ட முயல ‘இல்ல பாட்டி என்னால முடியல…வேண்டாம் போதும்…’ என மறுத்தவள் மீண்டும் படுக்கையிலேயே சுருண்டு படுத்துக்கொள்ள,அவளை பார்த்தவர் ‘நல்லா இருந்த புள்ள இப்படி தீடீர்ன்னு சுகமில்லாம படுத்துக்கிட்டாளே..’ என புலம்பியப்படி வெளியேறினார்…

 

சற்று நேரத்தில் எல்லாம் வீட்டில் இருந்த தமிழ்செல்வன் ‘ என்னமா என்ன ஆச்சு.. நல்லா தான இருந்தா…’ என்றப்படி உள் நுழைய.

 

‘நல்லாத்தான் இருந்தா தமிழு, தலைவலியின்னு படுத்தா இல்ல,அப்பாவோ உடம்பு லேசா.சூடாப்ல இருந்தது…சாதாரண உடல் சூடுன்னு நினைச்சு அசந்தாப்புல இருந்துட்டேன், இப்போ வந்து தொட்டு பார்த்தா உடம்பு கொதிக்குது…’

 

‘டாக்டர் கிட்ட போய் காட்டிட்டு வந்துடுய்யா…’ என்றவர் ‘குழலு…குழலு…’ என குழல்மொழியினை எழுப்பினார்..

 

எழுந்து அமர்ந்தவள் தந்தையை கண்டு சோம்பலாய் ஒரு புன்னகையை புரிய ‘குழல் என்னடா எப்படி இருக்கு…’ என்றப்படி தனது மகளின் அருகில் அமர்ந்தவர் ‘அவளின் தலையை பரிவுடன் தடவினார்..

 

‘ஐ அம் பைன்  ப்பா…லேசா உடம்பு சுடுது ,அதுக்கு போய் இந்த பாட்டி இந்த பில்டப் கொடுக்குது..’ என்றப்படி பாட்டியை முறைக்க..

 

‘பார்த்தியாடா தமிழு இவளுக்கு உடம்புக்கு சுகமில்லன்னு நான் பதட்டப்பட்டா, உன் மகளை பார்த்தியா நான் பில்டப் கொடுக்கிறேன்னு சொல்றா…’ என்று குற்ற பத்திரிக்கை வாசிக்க…

 

‘பாட்டி சொன்னதிலையும் பொய் இல்லையே குழல்ம்மா….உடம்பு நிறைய கொதிக்குது…கை வச்சாவே என் கை கொதிப்பை உணருது.. முதல்ல எழு ஹாஸ்பிடல் போயிட்டு வந்திடலாம்..’ என எழுப்பியவரின் கைகளை பிடித்து மீண்டும் தன் அருகில் அமர்த்திக்கொண்டவள்…

 

‘எனக்கு நார்மல் டெம்ப்ரேச்சர் தான் ப்பா…பயப்படும் படி ஒண்ணும் இல்ல, ஒரு பீவர் மாத்திரை போட்டா சரியாகிடும்…’ என்க..

 

‘அதை டாக்டர் செக் பண்ணி பார்த்துட்டு சொல்லட்டும்…’ என்றப்படி உள்ளே நுழைந்த தாத்தாவினை முறைத்தாள்..உடன் முத்துவும் நுழைந்தார்…

 

‘எல்லாம் உங்க வேலை தானா தாத்தா….உங்களை….’ என பல்லை கடிக்க துவங்கினாள்…

 

‘ப்பா….எனக்கு ஒண்ணுமில்ல..சுப்பையா தாத்தா எப்படி இருக்காங்க, இப்போ பரவாயில்லையா…’என்க.

 

‘எங்க மா..அப்படியே தான் இருக்கார்..இருக்க இருக்க உடம்பு ரொம்ப மோசமா போகுதுன்னு அக்கா ரொம்ப பீல் பண்றாங்கா…பெரியம்மா முகத்தை பார்க்கவே முடியல..ஒரே அழுகை,பாவம் அந்த பையனும் சின்ன வயசுல எவ்ளோ கஷ்டம்…எனக்கு அந்த பையனை பார்க்கவே ரொம்ப பாவமா இருக்கு..’ என்க.

 

‘நம்பிராஜன் வந்து இருக்கானா தமிழு…’ என்ற காத்தவராயன் ‘இந்த வாரம் வரலைன்னு சொன்னதா திலகவதி சொல்லுச்சே…’ என்று தன் போக்கில் சொன்னவர் தமிழை பார்க்க.

 

‘ஏதோ அடுத்த வாரம் எண்ணூர் துறைமுகத்துக்கு அவங்க காலேஜ்ல இருந்து கூட்டிட்டு போறாங்களாம்,அதை நேத்து தான் காலேஜ் சொல்லி இருப்பாங்க போல,அதான் தாத்தாவை பார்க்கனும்ன்னு இன்னைக்கு வந்துட்டேன்னு திலகா அக்கா கிட்ட சொல்லிட்டு இருந்தான்…’ என்ற தமிழ்செல்வன்.

 

‘டாக்டர் கிட்ட போய் பார்த்துட்டு வரலாம் டா…’ என்க…இல்லப்பா வேண்டாம் சாரியாகிடும் என்றவளை தமிழ்செல்வனும் மற்ற இருவரும் முறைக்க துவங்க..

 

சரி சரி மூணு பேரும் ஒரே விதமா முறைக்காதீங்க ,ஈரோட்டுக்கு எல்லாம் வேண்டாம்…’இங்க இருக்குற கிளினிக்லையே பார்க்கலாம்.. அப்படியும் சரியாகலன்னா.. ஈவ்னிங் ஊருக்கு போயிடுவோம் இல்லப்பா அங்கே பார்த்துக்கலாம்…’ என்க

 

‘சரி என்பதாய் தமிழ்செல்வன் தலை அசைக்க,  நம்பிராஜனின் வீட்டிற்க்கு அருகில் இருக்கும் கிளினிக்கில் சென்று செக் செய்து விட்டு,மாத்திரையை பெற்றுக்கொண்டு கிளம்பும் நேரம், ‘ப்பா…இவ்ளோ தூரம் வந்திட்டு சுப்பையா தாத்தாவை பார்க்காம போனா நல்லா இருக்குதுப்பா..’ என்ற குழல்மொழியின் பேச்சில் வண்டியை நம்பிராஜனின் வீட்டை நோக்கி திருப்பினார்…

மனம் படபடவென அடித்துக்கொள்ள, தந்தைக்கு சந்தேகம் வராதபடி எல்லாமே நடந்தேறியது என்பதை நினைத்து உள்ளுக்குள்ளே பெருமூச்சொன்றை விட்டவள் ,வண்டி நின்றதும் இறங்கி நின்றுக்கொண்டாள்…

 

தந்தை முன்னமே செல்ல, பவ்யமாய் உள்ளுக்குள்ளே பரவசத்துடன் கண்கள் நாலாபுறமும் அலைபாய மென்னடையிட்டு தந்தையை பின் தொடர்ந்தாள்…

 

குழல்மொழியினை கண்டதும் மிகவும் சந்தோஷமடைந்த திலகவதி வாசலுக்கே வந்து அவளது இரு கரத்தினையும் பற்றிக்கொண்டு ‘குழலு…எப்படி இருக்க, உடம்புக்கு சுகமில்லன்னு காத்தவராயன் அப்பா தம்பிக்கு போன் பண்ணாங்களே…இப்போ பரவாயில்லையா…??…’ என நலம் விசாரித்தவர்

 

பேசிக்கொண்டே உள்ளே அழைத்து வந்தார்…’ஹ்ம்ம் இப்போ கொஞ்சம் பரவாயில்ல ‘  ‘ நீங்க எப்படி இருக்கீங்க…தாத்தா எப்படி இருக்கார்…தாத்தாவை பார்க்கலாமா…??..’ என்று கேட்டபடி பார்வையை சுழலவிட…

 

‘எனக்கு என்னமா நல்லா இருக்கேன்….தாத்தா அப்படியே தான் இருக்கார்…உடம்பு இப்போ இன்னும் மெலிஞ்சி போச்சு….ரூமிக்குள்ள இருக்கார்…வா பார்க்கலாம்….’ என்றவர் அந்த வீட்டின் தாழ்வாராத்தை ஒட்டி இருந்த அறையினுள் நுழைந்தார்…

 

அங்கே ஒரு கட்டிலின் மேல் உருக்குலைந்து தான் முன்பு பார்த்த சுப்பையா தாத்தாவா…!! என தன் கண்ணையே நம்பமுடியாமல் விழி இரண்டினையும் கொட்டி கொட்டி முழித்தவளுக்கு என்னவோ கண் முன்னே இருந்த பிம்பம் மட்டுமே மீண்டும் மீண்டும் தெரிந்தது…

 

‘என்னங்க அத்தை இது,நம்ப தாத்தாவா என்னால நம்பவே முடியல…’  என வேதனையோடு கூறியவளின் பேச்சும் முகமும் மிகவும் வேதனையை காட்டியது…

 

‘நம்ம சுப்பு தாத்தா தான் மா…’ என்றவர் தந்தையின் அழைப்பை ஏற்று அருகில் செல்ல,அவரோ திலகவதியிடம் குழல்மொழியை அருகில் அழைத்து வரும்படி சொல்லி இருப்பார் போலும் ‘குழல் தாத்தா கூப்டறாங்க இங்க பக்கம் வா…’ என்றவர் குழல்மொழியினை சுப்பையாவின் அருகே அமர வைத்தார்….

 

நா சுழற்சி சரி வர சுழலாததால், தன் நடுங்கும் கரங்களை அவளின் தலையின் உச்சியில் வைத்தவர் அவளை நலம் விசாரித்தார் சைகை மொழியில் ஓர் அளவிற்கு அவர் சொல்வது புரிய ,அவளும் உடன் பதில் அளித்தாள்…

 

வாய் பதில் சொன்னாலும் கண்கள் நாலாபுறமும் அவனின் இருப்பை அறிய அலைபாய அந்தோ பரிதாபம் , அவன் இருப்பதற்கான ஒரு அறிகுறியும் தெரியவில்லை…

 

மேலும் எவரும் அவனை பற்றி ஒரு வார்த்தையும் பேசாமல் தங்களுக்குள்ளான விஷயங்களை மட்டும் பேச மண்டை காய்ந்து போனாள்…அவனின் வீட்டில் தான் இருக்கிறானா..?? என்ற சந்தேகம் வேறு இப்போது புதிதாய் மனதில்…

 

அடேய் கோவிந்தா….எங்க டா போய் தொலைஞ்ச…என மானசீகமாக மனத்திற்குள் வறுத்தெடுத்தவள் பவ்யமாய் தந்தையின் அருகில் அமர்ந்துக்கொண்டாள்…

 

கும்பகர்ணனே இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் மறுபிறவி எடுத்தாற்போல் போர்வையை தலை வரை இழுத்து போர்த்திக்கொண்டு உறங்கிக்கொண்டு இருந்தான் அவன்…

 

உங்கள் இருவருக்கும் இடையில் என்னால் அல்லல் பட முடியாது என நேரமும் தன் ஓட்டத்தை நிறுத்தாமல் ஓடிக்கொண்டுத்தான் இருந்தது…

 

இனியும் தாமதித்தால் நேரம் ஆகும், இன்னும் கொஞ்ச நேரத்துல ஊருக்கு கிளம்பனும் அக்கா…அப்போ நாங்க வறோம் என்ற தமிழ்செல்வன் சுப்பையாவிடமும் திலகவதியிடமும் சொல்லிவிட்டு கிளம்பினார்…

 

மீண்டும் ஒரு முறை தாத்தாவிடம் சொல்லிவிட்டு ,மற்ற இருவரிடமும் விடைபெற்றவள் கண்கள் மீண்டும் தன்னை அறியாமல், வீட்டினை வலம் வந்தது…கடைசி நிமிடமாவது அவனை காண்போமா…!!! என ஆனால் அவளின் துரதஷ்டமோ என்னவோ அவளால் கடைசி வரை நம்பிராஜனை பார்க்க முடியவில்லை….

 

ஆனால் பார்க்க வேண்டியவன் ஆசை தீர அவள் போகும் வரை அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான் மாடியில் இருந்து…

 

பக்கத்து வீட்டு மாடியும்,இவர்களது வீட்டின் மேல் மாடியில் இருக்கும் இவனது அறையும் ஒட்டியே இருக்கும்…பக்கத்து வீட்டார் மேல் மாடியில் கேழ்வரகை காயவைத்து அதனை சுத்தப்படுத்திக்கொண்டு இருக்க, ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு உறங்கிய இவனால், அந்த தூசியினால் ஏற்பட்ட மூச்சு முட்டும் நிலையில் உறங்க முடியாமல் போக….

 

‘இருமிக்கொண்டே எழுந்தவன் ஜன்னலை அடைத்துவிட்டு அறையையையும் மூடிவிட்டு மூச்சு திணறலை சமன் செய்ய அந்த அறையின் முகப்பில் இருந்த இடத்தில் இருந்த மாடியின் திட்டின் மேல் அமர்ந்து அந்த காற்றை ஆழ்ந்து சுவாசிக்கலானான்…

 

அப்படி கண்களை மூடி ஆழ மூச்சை இழுத்து வெளியேற்றிய நேரம் ,கண்ணை திறந்து பார்த்தவனின் கண்களில் விழுந்தது வீட்டின் முன் வாசலில் தமிழ்செல்வன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து இருக்க, அவரின் அருகில் அமரப்போன குழல்மொழி….

 

அவளின் கண்களில் அலைப்புறுத்தல் கண்டு கண்கள் விரிய தந்தையுடன் பயணித்த அவளையே பார்வையால் தொடர்ந்தான்…சில்லென்ற மேகக்காற்று முகத்தில் அரைய கண்களை மூடி அவளின் பிம்பத்தை நெஞ்சில் நிரப்பி சொல்ல முடியா ஓர் உணர்வில் கட்டுண்டு நின்றது அந்த இளங்காளை…

 

ஓர விழி பார்வை தீபங்களை ஏற்ற

வைத்தது நெஞ்சோடு இன்று

தென்றல் என வந்து தொட்டு சென்ற காதல்

கலந்தது மூச்சோடு இன்று

காதல் என்னும் வார்த்தை

அது வார்தை அல்ல வாழ்க்கை
வாழ்ந்து பார்த்து நீ சொல்லம்மா
இணைய வேண்டும் மனது

இது இறைவன் செய்த முடிவு
மாற்றி கொள்ள மாலை வேண்டுமா…!!

 

இருதயப் பூவின் மொழி தொடரும்…

Advertisement