Advertisement

அத்தியாயம் 16 :-

 

மீளட்டும் எனது

விழிகள்

அதன் விதியை

சுகமாய்

ஓரப் பார்வையால்

உன்னை ரசிப்பதற்கு…

 

‘உட்காருங்க…’ என்றவர் தன் இருக்கையில் அமர்ந்தார்….

 

‘இங்க பாருங்க.. நான் உங்களுக்கு பொய்யான ஹோப் குடுக்க விரும்பல.. இப்போதைய கண்டிசன் என்னன்னு சொல்லிற்றேன்.. நீங்க பதட்டப்படாம கேளுங்க…’ என்றவர் வெளிறிய அவர்களின் முகத்தை பார்த்துவிட்டு மேலும் தொடர்ந்தார்…

 

‘ஐ அம் ரியல்லி வெரி சாரி… எனக்கும் உங்களோட நிலைமை புரியுது… ஆனா பேஷன்ட்டோட நிலைமை நானும் உங்களுக்கு சொல்லணும் இல்லையா…அதான்…’ என்றவர்…

 

‘அவருக்கு முக வாதம் ஏற்பட்டு இருக்கு, முக வாதத்தை ஒரு இருபது நாள் பிசியோதெரபி பயற்சி மூலம் குணப்படுத்தலாம்…ஆனா அவரோட காதின் வழியே தொண்டைக்கும் முகத்திற்க்கும் செல்லக் கூடிய நரம்புகள் முக்காவாசி சிதைஞ்சி போச்சு.. ரத்த ஓட்டமும் குறைஞ்சி போச்சு….ஓப்பனா சொல்லனும்ன்னா செத்து போச்சு…’

 

‘முக வாதம் வேணும்ன்னா சரி செய்யலாம்… அதுல எந்த பிரச்சனையும் இல்லை..அதுவும் அவரோட சப்போர்ட் ரொம்ப முக்கியம்…. ஆனா அவரால மேற்கொண்டு பேச முடியுமா அப்படின்னு சொல்றதுன்னா ,சான்ஸ் இல்லன்னு தான் சொல்லணும்…’

 

‘டாக்டர்ர்ர்…..’ என்று அதிர்ச்சியோடு அலறிய நம்பிராஜனை பார்த்தவர் ‘சாரி. பா… உங்களோட நிலைமை புரியுது, பட் பேஷன்ட் கண்டிஷனை தான நாங்க சொல்ல முடியும்…கொஞ்சம் யங்கா இருந்தா கூட பரவாயில்லை, ஏஜ் ஆகிடுச்சு உடம்பும் ரொம்ப பலவீனமா இருக்கு…’

 

‘வில் ஹோப் போர் தி பெஸ்ட்…’ என்றவர் ,எனக்கும் சொல்ல கஷ்டமா தான் இருக்கு ,பட் ஒரு டாக்டரா நான் இதை சொல்லித்தான் ஆகணும்…. அவங்களோட காலத்தை அவங்க இதே போல் தான் கழிக்கணும்…’

 

‘டாக்டர் நரம்பு எல்லாம் சிதைஞ்சி போயிடுச்சுன்னு சொல்றீங்க..அப்புறம் எப்படி முன்னாடியே எந்த ஒரு அறிகுறியும் இல்லாம நல்லா இருந்தவருக்கு இப்படி ஆகும் …’ என தமிழ்செல்வன் கேட்க….

 

அறிகுறி இல்லன்னு சொல்ல முடியாது, கண்டிப்பா இருந்து இருக்கும்…அவர் அதை பெருஷா கேர் பண்ணி ட்ரீட்மெண்ட் எடுத்திருக்க மாட்டார்… கொஞ்சம் கொஞ்சமா அபக்ட் ஆகி இப்போ இந்த ஸ்டேஜ்ல இருக்கு…

 

‘இன்னைக்கும் நாளைக்கும் பெட்ல இருக்கட்டும், ட்ரிப்ஸ் ஏறிட்டு இருக்கு, கண் முழிச்ச பிறகு ட்ரீட்மெண்ட்க்கு அவரோட சப்போர்ட் எந்த அளவுக்கு இருக்கும்ன்னு பார்த்துட்டு மேற்கொண்டு ட்ரீட்மெண்ட் செய்யலாம்…ஏன்னா பிசியோதெரபிக்கு பேஷன்ட்டோட சப்போர்ட் ரொம்ப முக்கியம்…’ என்க…

 

‘சரி என சொல்வதை தவிர வேறெதுவும் செய்யமுடியவில்லை இவ்விருவரால்… எதை தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலையில் ,எதை செய்தால் சுப்பையா குணமாகுவார் என யோசிக்க மட்டுமே முடிந்தது…

 

டாக்டரிடம் விடைபெற்று இருவரும் வெளிவர…’என்னங்க மாமா டாக்டர் இப்படி சொல்லிட்டாங்க…’ என நம்பிராஜன் கேட்க..

 

‘நிலைமை என்னன்னு அவர் சொல்றார் நம்பி…அவர் மட்டும் என்ன பண்ணுவார்… எல்லாம் அந்த ஆண்டவன் விட்ட வழி…’ என்ற படி தமிழ்செல்வனும் நடக்க…

 

‘எனக்கு அம்மாவை நினைச்சா தான் ரொம்ப பயமா இருக்குங்க மாமா…அம்மாவை எப்படி சமாளிக்கிறதுன்னே எனக்கு ஒன்னும் புரியல…பயமா இருக்குங்க மாமா…’ என தன் மனதில் இருப்பதை மறைக்காமல் பகிர…

 

நம்பிராஜனின் வார்த்தைகள் அவருக்கு மிகவும் சங்கடத்தை கொடுத்தது…மிஞ்சி போனால் இவனுக்கு வயது பத்தொன்பது நடந்து கொண்டிருக்கும்..தந்தையை இழந்து, மீண்டெழுந்து தாத்தாவின் அரவணைப்பில் வாழ்ந்து கொண்டிருப்பவனுக்கு மீண்டும் ஒரு அடி…

 

என்னவென்று சொல்வது காலத்தின் கோலத்தையும் கணக்கையும் என எண்ணி பெருமூச்சொன்றை வெளியிட்டவர்…

 

‘அக்காகிட்ட நான் பேசி சமாளிச்சிக்கிறேன் ..,நீ எதுவும் பேசாத..’ என்றவர் ‘நான் சொல்றது புரியுது தானே…’ என மீண்டும் கேட்டு உறுதிப்படுத்தியப் பின் முன்னே செல்ல நம்பிராஜன் பின் தொடர்ந்தான்….

 

கலக்கத்துடன் அமர்ந்து இருந்த திலகவதிக்கு டாக்டர் என்ன சொன்னாரோ…’ என்ற யோசனை மற்றும் கலக்கத்துடன் டாக்டர் அறைக்கு சென்றவர்கள் எப்போது வருவார்கள் என தவிப்புடன் வழியின் மீது தனது பார்வையை பத்தித்தப்படி இருந்த திலகவதியை கண்ட குழல்மொழிக்கு பாவமாய் இருந்தது ..

 

‘அத்தை ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க.. தாத்தாக்கு ஒன்னும் ஆகாது…தாத்தா சீக்கிரம் குணமாகிடுவாங்க பாருங்க… ரிலாக்ஸ்சா இருங்க …’ என ஆறுதல் கூற…

 

அவளை அமைதியாய் பார்த்தவர் ‘எப்படி மா, கவலைப்படாமா இருக்க முடியும்… அவர் அப்படிப்பட்ட நிலைமையில இல்லையே…’ என கண்ணீர் விட்ட படி புலம்ப, குழல்மொழியால் பார்வையாளராய் மட்டுமே அவர் புலம்புவதை பார்க்க முடிந்தது….

 

மேற்கொண்டு என்ன சொல்லி அவரின் மனதை தேற்றுவது என புரியாமல் விழி பிதுங்கி நின்றவளை நிம்மதியுற செய்தது தமிழ்செல்வன் மற்றும் நம்பிராஜனின் வருகை….

 

‘அத்தை அப்பா வந்துட்டாங்க…’ என்ற குழல்மொழியின் வார்த்தையில் அவர்களை நோக்கி திரும்பினார் திலகவதி…

 

‘ராஜா….தம்பி….டாக்டர் என்ன சொன்னாங்க…..’ என்ற திலகவதி இருவரையும் மாறி மாறி பார்த்தார்….

 

‘அக்கா பத்தப்படாதீங்க…டாக்டர் பிசியோதெரபி பண்ண சொல்லி இருக்கார்…ஒரு மாசத்துல சரியாகிடுமாம்…நல்ல நம்பிக்கை குடுத்து இருக்கார்… நீங்க கவலைப்படாதீங்க…’ என்க…

 

நம்பிராஜன் தமிழ்செல்வனை அதிர்ச்சியோடு நோக்க,தமிழ்செல்வன் அவனது பார்வையை கண்டும் காணாது போல, நம்பி ‘நீ போய் ரிஷப்சன்ல பில் எவ்ளோன்னு கேட்டுட்டு கட்டிட்டு வா….’ என அவனை அனுப்பினார்…

 

ஹ்ம்ம் சரி என்ற தலையசைப்புடன் அவன் நகர, குழல்மொழி தாத்தாவின் உடல்நிலையை அவளின் தந்தையிடம் விசாரிப்பது இவனுக்கும் கேட்டது….

 

அடுத்தடுத்து எல்லாம் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நடந்தேற சுப்பையாவிற்க்கு மருத்துவம் தொடரப்பட்டது…

 

எதையெதையோ பேசி திலகவதியை தமிழ்செல்வன் சமாதானம் செய்தார் போலும் என்னவென்று நம்பிராஜனுக்கு தெரியவும் இல்லை தெரியப்படுத்தவும் இல்லை….

 

திலகவதி முன்பு போல் அழுகாமல் அமைதியாய் இருந்தார் அதுவே அவனுக்கு பெருத்த நிம்மதியாய் இருந்தது… ஊடே என்ன சொல்லி இருப்பார் என மனதின் ஓரத்தில் அந்த எண்ணம் என்னவோ அவனை அரித்துக்கொண்டே இருந்தது உண்மை…

 

அன்றே மாலை தமிழ்செல்வன் தன் பெண்ணை அழைத்துக்கொண்டு, கோவைக்கு சென்றுவிட்டார்…

 

அவசர தேவை எதுவாயினும் தனக்கு அழைக்கும்படி நம்பிராஜனிடம் கூறியவர், திலகவதிக்கும் ஆறுதல் மொழி சொல்ல தவறவில்லை…

 

மறுநாள் இருந்து சுப்பையாவிற்க்கு பிசியோதெரபி ஆரம்பமானது…. வயதானவர் என்பதால் மிகவும் சிரமப்பட்டார் எனலாம்…

 

அந்த ஆண்டவனின் கருணையோ என்னவோ நம்பி நினைத்ததை விட சுப்பையா ஓர் அளவிற்க்கு மருத்துவத்திற்கு அவரும் அவரது உடலும் சற்றே ஒத்துழைப்பை நல்கியதை கண்டு மருத்துவரே வெகுவாய் பாராட்டினார் எனலாம்…

 

நம்பிராஜனிடமும் அவனது தாத்தாவின் ஒத்துழைப்பை வெகுவாய் பாராட்டியவர், நாங்க சொல்ற பயிற்சியை தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு செய்ய வையுங்கள்… பின் பதினாறாவது நாள் வந்து என்னை பாருங்க… என்றவர் மருந்துகளை எழுதிக்கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பினார்..

 

பதினைந்து நாட்கள் சுப்பையா பிசியோதெரபி செய்யும் போது வலியால் அவர் அதிகம் அலண்டு போனாரோ இல்லையோ நம்பிராஜன் கோவைக்கும் பள்ளி பாளையத்திற்கும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என வந்து மிகவும் சோர்வடைந்து போனான்…

 

அதிலும் தாத்தாவின் குரல் வளம் சிதைந்ததை அடுத்து மனதில் மிகவும் ஒடுங்கி போனான்…மேலும் பயணம் அவனை மிகவும் களைப்படைய செய்ய, உடலாலும் மனதாலும் தளர்ந்து போனான் எனலாம்…

 

வயதிற்க்கு மீறிய அவனின் உடல் அலைச்சலை கண்டு சுப்பையா கண் கலங்கி போனார்…

 

பிசியோதெரபி மூலம் முகம் சற்று பழைய நிலைக்கு திரும்ப , குரல் வளத்தை இழந்து போனார் சுப்பையா….

 

ஒரு முறை தமிழ்செல்வனும்  அவரது மனைவி வித்யாவும் நேரில் வந்து சுப்பையாவின் நலம் விசாரித்து சென்று இருந்தனர்…

 

அப்போது நம்பிராஜனும் அங்கே இருக்க,நலம் விசாரிப்புடன் அவர்களிடம் இருந்து ஓதுங்கிக்கொண்டவன் மனம் என்னவோ குழல்மொழியினை காண விழைய , தன்னையே திட்டிக்கொண்டான்…

 

இப்போ  உன்னோட குடும்பம் இருக்குற லட்சணத்துக்கு அவளை எதுக்கு மனசுல நினைக்கிற… மனசால கூட நீ நினைக்க கூடாது என கடிந்துக்கொண்டான்….

 

அகிலாண்டேஸ்வரியும் திலகவதியும் தங்களது வேதனையை கண்ணீரோடு கரைக்க முயன்று தோற்று போயினர்…யாரால் என்ன செய்ய இயலும்…

 

மாதங்களும் பல கடந்து கரைந்து போயின… நாளுக்கு நாள் சுப்பையா உடல் நலிந்துக்கொண்டே போக, விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் நம்பிராஜனும் ஊருக்கு வந்து சென்றான்…

 

அப்படி ஒரு முறை அவன் ஊருக்கு வந்து சேரும்பொழுதே தமிழ்செல்வனும் முத்துவும் வீட்டில் இருந்தனர்….

 

இருவரும் அவனை வரவேற்க, ‘என் வீட்டுக்கு எனக்கே வரவேற்ப்பா…!!..ஹ்ம்ம் நல்லா இருக்கு…’ என மனதில் எண்ணிக்கொண்டவன் அவர்களிடம் நலம் விசாரித்துக்கொண்டு தாத்தாவின் அருகில் அமர்ந்தான்…

 

‘ரா….ர்…..ர்…ஜ்… ஜா….’ என நாக்கு குழற அவனை அழைத்தவர் அவனின் கன்னத்தை வருட அவரின் கைகளை தன் கண்களில் ஒற்றிக்கொண்டான்…

 

அந்த பக்கம் திலவதியும், அகிலாண்டேஸ்வரியும் தமிழ்செல்வத்திடமும் , முத்துவிடமும் பேசிக்கொண்டு இருந்தனர்…பார்வை தனது தாத்தாவின் புறம் இருந்தாலும், மனம் குழல்மொழியும் வந்திருப்பாளோ..!! என எண்ணத்துடனே அலைப்பாய்ந்துக் கொண்டு இருந்தது…

 

அங்கே குழலின் நிலையோ அந்தோ பரிதாபம்… கட்டிலில் விழுந்து கசங்கிய முகத்துடன் விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தாள்…

 

ஊருக்கு செல்லும் தந்தையிடம் நானும் ஊருக்கு வருகிறேன்,தாத்தா பாட்டியை பார்க்கணும் போல இருக்குப்பா….. என்றப்படி நின்றவள் இப்போது மனம் கனக்க கட்டிலின் மேல் வதங்கிய கொடிமலராய் வீற்றிந்தாள்…

 

ஊருக்கு வர தான் செய்த தர்க்கம் என்ன,இப்போ இருக்கும் நிலை என்ன என எண்ணி இதழின் ஓரத்தில் கசந்த முறுவல் ஒன்று அவளிடம்.. இன்னும் ஐந்து நாட்களில் யூனிவெர்சிட்டி எக்ஸாம் இருக்க,அதனை எண்ணி இம்மியும் கவலை கொள்ளாமல் இவனை காண சிறகு முளைத்த பறவையாய் பறந்ததென்ன..??

 

அவன் ஊரில் இல்லை என்றதும் சிறகுடைந்த பறவையாய் நெஞ்சம் பதறியது என்ன…!!…என எண்ணியவள் தன்னையே முட்டாள்…முட்டாள் என கோடி முறை திட்டிக்கொண்டாள்…வீட்டில் நடந்தது வேறு நினைவு வந்து அவளை குற்றவாளியாக்கியது…பாவம் சஞ்சயன்….என்றது மனம் இப்போது…

 

நீ வேண்டாம்…எக்ஸாம் பக்கத்துல வந்திடுச்சு, இப்போ போய் ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு நிக்கிற, எக்ஸாம் முடிஞ்சிட்டு எல்லோரும் சேர்ந்து ஊருக்கு போலாம்… என அன்னை வித்யா ஊருக்கு செல்வதற்கு தடை போட…

 

சுருங்கிப்போன முகத்துடன் தன் தந்தையை பாவமாய் கண்டவளின் முகத்தை கண்டு ‘ அவளும் வரட்டும் வித்யா…இப்போ போனா ஈவ்னிங் வந்திடப்போறோம்….’

 

‘அப்பாவும் அம்மாவும் கூட குழலை பார்க்கணும்ன்னு சொன்னாங்க…’ என்றவர் ‘நீ சீக்கிரம் ரெடி ஆகுடா…’ என பச்சை கொடி காட்ட….

 

‘மாமா அக்கா….படிக்க கஷ்டப்பட்டுக்கிட்டு இப்படி ஒரு பிட்டை போட்றா, நம்பாதீங்க…’ என்ற அத்தை மகன் சஞ்சயன் மண்டையில் நங்கென்று கொட்டிவிட்டு வேகமாய் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்…

 

‘…குழலுலு…..கொஞ்சமாச்சும் அறிவிருக்கா உனக்கு,சின்ன பையன் மண்டையில இவ்ளோ வேகமா கொட்டிட்டு போற…’ என்ற அன்னையின் கோவமான கத்தலில்,

 

‘உங்க சின்ன பையன் செஞ்ச வேலைக்கு இது தான் பனிஷ்மெண்ட்..வாயை கொஞ்சம் அடக்கி வைக்க சொல்லுங்க…உங்க செல்லத்தை…’ என்ற குழலின் மறுமொழியில்,

 

‘..பார்த்தீங்களா…எப்படி பேசுறான்னு… இப்போ எல்லாம் இவளுக்கு கொழுப்பு கூடி போச்சு, சொல் பேச்சு கேட்குறதே இல்ல,எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம் தான்….’ என வித்யா தமிழ்செல்வனி்டம் சண்டைக்கு நிற்க

 

என்னை ஆள விடுங்க சாமிங்களா..’ என்றவர் ‘அக்கா சீக்கிரம் ரெடி ஆகுங்க…’ என்று முத்துவிடம் கூறியப்படி அறைக்குள் செல்ல…மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, போகும் கணவனை முறைத்தார் வித்யா…

 

விடு வித்யா…சின்ன பிள்ளைங்கன்னா அப்படித்தான், சஞ்சயனுக்கும் வாய் அதிகம்..அக்காகிட்ட அப்படியா சொல்றது..’ என தன் மகனை கடிந்துக்கொண்டவர் அவனை அழைத்துக்கொண்டு சென்றார்…

 

பள்ளிப்பாளையத்திற்கு இவ்வளவு சாகசம் செய்து வந்தது எல்லாம் என்னவோ அவனை பார்க்க வேண்டும் என்ற உந்துதலில் தான் என மனம் ஒப்புக்கொண்டாலும், அவளின் மூளையோ சில நொடி ஒப்புக்கொண்டு மறுநொடியே இல்லை என சத்தியம் செய்தது…

 

நான் என்னோட தாத்தா,பாட்டியை தான் பார்க்க வந்தேன்..அவனை ஒண்ணும் இல்ல, என முறுக்கிக்கொள்ள…

 

‘தாத்தா ,பாட்டியை பார்க்க வந்த மூஞ்சியைப் பாரு…’ என்ற மனதின் நக்கலில் கோபமாய் சிலிர்த்தெழ மட்டுமே முடிந்தது…

 

வீட்டில் உள்ள அனைவரும் பேசியதில் இருந்து நம்பிராஜன் ஊரில் இல்லை ,காலேஜில் இருக்கிறான் என விஷயத்தை அறிந்துக்கொண்ட மனம் வெயிலில் வதங்கி உதிர்ந்த மலராய் சுருங்கிப்போனது…

 

ஆசைகள் எல்லாம் நிராசையாக, சுப்பையாவினை பார்க்க செல்லலாம் என அழைத்த அத்தையிடம் ‘ரொம்ப தலை வலிக்குது அத்தை….’ என்றவள் சுருண்டு கட்டிலில் படுத்துக்கொள்ள,

 

செவத்தாயி அம்மாளும் ‘ உடம்புக்கு முடியலன்னா ரெஸ்ட் எடு ஆத்தா…’ என்றவர் நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க முத்து ‘ என மகளிடம் மொழிந்தவர் ‘பேத்தியின் நெற்றியை தொட்டு பார்க்க ‘உடல் சற்றே வெப்பத்துடன் இருந்தது…

 

நம்பிராஜனை காணாத மன வருத்தத்தின் வெப்பமோ…!!!

 

இருதயப் பூவின் மொழி தொடரும்..

Advertisement