Advertisement

சுகமான புது ராகம்!
அத்தியாயம் – 7
சம்யுக்தாவின் வீட்டில் இருந்து கிளம்பிய சிவாவிற்கும், பவித்ராவிற்கும் மனம் முழுக்க பார்க்க முடியாமல் போன பேரனிடத்தே தான் இருந்தது.
வீட்டிற்கு வந்தும் ஓயாமல் பவித்ரா அதைப்பற்றியே தான் பேசிக்கொண்டு இருந்தார்.
“என்னங்க இது? இவ்ளோ தூரம் முயற்சி பண்ணியும் சர்வாவைப் பார்க்க முடியலையே”
“எனக்கும் அதே வருத்தம் தான் பவி, எனக்கு அவனை ஒரு தடவை பார்த்தே ஆகனும்.”
“சரி விடுங்க, மன்டே ஸ்கூல்ல பார்க்கலாம்.”
“ஆனா சர்வா விசயத்துல எனக்கு எதுவோ எங்கேயோ இடிக்குது பவி”
“உங்களுக்கு அப்படி என்ன சந்தேகம்? அவனைப் பார்த்தாலே தெரியுது, சம்யுக்தாவை வைச்சு ஒரு முடிவுக்கு வர முடியலை, அவ புருஷனை பார்த்தா தான் முடிவு பண்ண முடியும்”
“எனக்கு சந்தேகம் இருக்கு, ஆனா ஒரு இடத்துல இருந்து இல்ல, எல்லா இடத்துல இருந்தும், அதாவது உன் பிரசவத்துல இருந்து”
“ஆனா சம்யுக்தா பார்க்க சின்ன பொண்ணா தெரியலை, எப்படியும் முப்பது வயசாவது இருக்கும், இல்லீங்க?”
“ஆமா பவி, நமக்கு இப்ப வேண்டியது சம்யுக்தாவோட பிறந்த நாள் தேதி”
“அதை வைச்சு என்ன பண்ண போறீங்க?”
“ஒரு வேளை அவ பிறந்த தேதி நம்ம பசங்க பிறந்த தேதியோட ஒத்து வந்தா, சம்யுக்தா நம்ம பொண்ணா இருக்கலாம், இல்லைன்னா அவ புருஷன் நம்ம பையனா இருக்கலாம்”
“எனக்கு ஒரு விஷயம் புரியலைங்க, இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் நம்ம குழந்தைன்னா, நம்ம பசங்கள்ல ஒருத்தர் நம்ம குழந்தை இல்லைன்னு ஒரு பாயின்ட் இருக்கே” என்று குரல் பிசிற பவி சொல்ல, அவரது கூற்றில் ஒரு நொடி அதிர்ந்த சிவா,
“ஏன் நமக்கு மூனு குழந்தைங்க பிறந்து இருக்கக்கூடாது” என்று தன்னை சுதாகரித்துக்கொண்டு கேள்வி எழுப்பினார்.
“நிச்சயமா அப்படி இருக்க வாய்ப்பு இல்லைங்க”
“எதை வைச்சு சொல்ற?”
“எனக்கு இன்னும் நல்லா நியாபகம் இருக்கு, ரெண்டு பேபியோட அசைவை மட்டும் தான் நான் உணர்ந்தேன், என் வயிறும் மூனு குழந்தைக்கு ஏற்ப இல்லை”
“நீ சொல்றதை வைச்சு பார்த்தா, பேபி ஸ்வாப் ஆகி இருக்கனும், அப்படி ஆகி இருந்தா, நம்மகிட்ட இருக்கறது, அவங்க குழந்தையா இருக்கனும், ஐ மீன் ஒன்னு சம்யுக்தா பேரண்ட்ஸ் இல்லை பரத் பேமிலி, அப்படித்தான?”
“ஏங்க? நாம அந்த குழந்தையை தேடப் போயி, நம்ம பசங்கள்ல ஒருத்தர் அவங்க பசங்கன்னு தெரிய வந்தா என்ன பண்றதுங்க?”
“யோசிப்போம் பவி. இவங்களையும் நான் விட்டுத்தர மாட்டேன், நம்ம குழந்தையையும் விட்டுத்தர மாட்டேன்”
“இதென்னங்க பேச்சு, நாம யோசிக்கற மாதிரி தான அவங்களும் யோசிப்பாங்க”
“இப்ப நம்ம பேச வேண்டியது டாக்டர் பிரணித்தா கிட்ட”
“அவங்க தான் இங்க இல்லையே, அவங்க பல வருசத்துக்கு முன்னாடியே ரெண்டு மூனு தடவை வெவ்வேற இடம் மாறினாங்கள்ல, இப்ப எப்படி கண்டு பிடிக்க முடியும்? எங்க இருக்காங்கன்னு? எனக்கும் அவங்களுக்கும் தொடர்பு விட்டு போய் பதினாலு அல்லது பதினைந்து வருஷம் இருக்கும்”
“முயற்சி பண்ணி பார்க்கிறேன் பவி… அவங்களை அணுக வழி கண்டு பிடிக்கிறேன், நீ இதை உன் மைன்ட்ல ஏத்திக்காத, நான் பார்த்துக்கறேன், நீ கொஞ்சம் ரிலாக்ஸ்டா இரு”
“எப்படிங்க ரிலக்ஸ்டா இருக்க முடியும், மனசு கிடந்தது தவிக்குது”
“இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ, இந்த பிரச்சனை எல்லாத்தையும் நான் முடிச்சு வைக்கிறேன்”
“அந்த சம்யுக்தா வேற, இங்கிருந்து போற முடிவுல இருக்கறதா சொன்னா, அதுக்குள்ள நம்ம முயற்சி பலிக்குமா?”
“பலிக்கனும்… பலிக்க வைக்கிறேன் பவி…” என்றவர்,
“நீ கொஞ்ச நேரம் தூங்கு, பாப்பாவும், நித்யாவும் தூங்கறாங்க, அவ எழுந்தா ரெண்டு பேரும் தூங்க முடியாது, எனக்கு ஆபிஸ் வொர்க் கொஞ்சம் இருக்கு” என்று பவியை படுக்க வைத்துவிட்டு, போர்வையையும் போர்த்திவிட்டு அறையை விட்டு வெளியே சென்றார்.
சர்வேஷ்வர் சிவேஷ்வரின் மனதை ஆக்கிரமித்து இருக்க, சிவா ப்ரித்வியின் நினைவை சற்றே பின்னுக்குத் தள்ளினார்.
அன்று இரவு தனுவுடன் பெரியவர்கள் ஹாலில் விளையாடிக்கொண்டு இருக்க, அங்கு வந்த மானவ் கோபத்துடன் சோபாவில், கையில் இருந்த லேப்டாப் பையை வீசிவிட்டு அமர்ந்தான்.
தலையில் கைவைத்து அமர்ந்திருந்த மானவைக் கண்டு உள்ளம் பதறிய பவித்ரா, 
“ஏன்டா? என்னாச்சு?” என்று அவனருகே சென்று அவனது தோளைத் தொட்டவாறே கேள்வி கேட்டார்.
“என்ன ஆச்சா?… அந்த பிரித்வி இந்த டீலையும் முடிச்சுட்டான். எங்கிட்ட அந்த பையர் பேசவே மாட்டேன்னுட்டான். கடைசி வரை அவனை மீட் பண்ணவே முடியலை, இதுக்கு மேல அவனைத் தொங்க விருப்பம் இல்லாம வந்துட்டேன்”
“இங்க பாரு மானவ் பிசினஸ்ல இது சகஜம், நீ டென்ஷன் ஆகறது சரி இல்லைப்பா”
“என்னம்மா சரி இல்லை? இது வரைக்கும் நமக்கு எவ்ளோ லாஸ்ன்னு தெரியுமா? கிட்டத்தட்ட நம்ம மொத்த சொத்துல நாலுல ஒரு பங்கு இழந்தாச்சு”
அவனது வார்த்தைகளில் அதிர்ந்த பவி, சிவாவைப் பார்த்து அதே அதிர்ச்சியுடன் வினவ,
“என்னடா? என்னங்க சொல்றான் இவன்?”
“இந்த முறை எக்கச்சக்க லாஸ், அப்பா பேர்ல இருந்த லேன்ட்ல கொஞ்சம் சேல் பண்ணி வொர்க்கர்ஸ்க்கு லாஸ்ட் ரெண்டு மாசம் சேலரி குடுக்க, ரொட்டேசன் பண்ண ஏற்பாடு பண்ணி இருக்கு”
“எப்படிங்க இவ்ளோ தூரம் விட்டீங்க?”
“நமக்கு ரொட்டேசனுக்கு பணம் தர்ற பைனான்ஸியர் கொஞ்சம் கை விரிச்சுட்டான், அதுக்காக நம்ம வொர்கர்ஸ்க்கு சம்பளம் தராம இழுத்தடிக்க முடியுமா பவிம்மா?”
“அப்பா இதுக்கு உடனே முடிவு கட்டியாகனும்?”
“இங்க பாரு, கொஞ்ச நாளைக்கு நியூ கிளைன்ட் சேர்ச் பண்ணாத, அமைதியா இரு, இன்னும் மூனு மாசத்துக்கு ரொட்டேசனுக்கு காசு இருக்கு, அதுக்குள்ள நமக்கு வந்து சேர வேண்டிய பணம் வந்துடும், சீசன் டைம் ஆரம்பிச்சா, நமக்கு ரெசார்ட்ல இருந்து பணம் வர ஆரம்பிச்சுடும், தீம் பார்க் இருக்கு, மத்த பிசினஸ் இருக்கு, கொஞ்சம் கொஞ்சமா டீல் பண்ணிக்கலாம்.”
“எப்படிப்பா இவ்ளோ கூலா பேசறிங்க, இதுக்கும் மேல இன்னொரு நியூஸ் இருக்குப்பா, அது தெரிஞ்சா என்ன சொல்வீங்க?”
“என்ன நியூஸ்?”
“இப்பத்தான் ரகு அங்கிள் கால் பண்ணி சொன்னார், பிரித்விதான் இந்த வருஷ ஹோட்டல் அசோசியேஷன் ப்ரெசிடென்ட்டாம்”
“இன்னிக்கு எலெக்சன் ரிசல்ட்ன்னு சொன்னாங்க, மறந்துட்டேன்”
“அப்படி என்னப்பா அதை மறக்கர அளவுக்கு சிந்தனைல இருக்கீங்க? அவர் கால் பண்ணப்ப முக்கியமான வேலைன்னு சொன்னீங்களாம், கூடவே இன்னிக்கு நீங்க ஆபிஸ்க்கும் போகலையாம், நம்ம நிலைமை என்ன? நீங்க என்ன பண்றீங்க?”
“ஆமாடா கொஞ்சம் வேலை…  அதுக்கு இப்ப என்ன?”
“என்னவா? நீங்க தோத்துடுவீங்கன்னு தெரிஞ்சுதான் இன்னிக்கு அங்க வரலைன்னு எல்லாரும் பேசிக்கிட்டாங்களாம்”
“டேய்… பேசறவங்க பேசிக்கிட்டு போகட்டும், பிஸினஸ் லைட்டா சறுக்கி இருக்கு, அவ்ளோதான், தென் இந்த இமேஜ் நான் கஷ்டப்பட்டு உருவாக்கினது, அதை அவ்ளோ சீக்கிரம் சரிய விட மாட்டேன், ஆனா அதை விட எனக்கு இப்ப சில முக்கியமான வேலைகள் இருக்கு, சோ கொஞ்ச நாள் பொறுமையா இரு, என்னோட வேலைகளை முடிச்சுட்டு வரேன், அப்புறம் இதை டீல் பண்ணிக்கலாம்”
“அதெல்லாம் முடியாதுப்பா… நான் யாருன்னு, அவனுக்கு நான் காட்டறேன்”
“இங்க பாரு நான் சொல்றதை செய், இப்போதைக்கு இந்த பிரச்சனை வேண்டாம், அவன் நமக்கு பர்ஸ்னலா எந்த தொந்திரவும் இதுவரை தந்ததில்லை, எனக்கு தெரிஞ்சு அவன் போன தடவை கன்ஸ்ட்ரக்சன் அசோசியேஷன்ல அவன் போட்டியிட்டு ஜெயிச்சிருக்கான், இதுவரை அவன் எடுத்த நடவடிக்கை பத்தி உனக்கேத் தெரியும், புத்திசாலி, திறமைசாலி, அவன் நமக்கு மட்டும் தொழில் எதிரி இல்லை, அதையும் புரிஞ்சுக்கோ”
“எப்ப இருந்துப்பா நீங்க இப்படி ஆனிங்க? தொழில்ல வாங்கறவனுக்கு மட்டும் நேர்மையா இருந்தா போதும்ன்னு சொன்ன நீங்க, எதிரிகளே உருவாகாத மாதிரி காட்டிக்கிட்டு, ஒவ்வொருத்தரையும் இந்த தொழிலை விட்டே களையெடுத்த நீங்க, இப்படி பேசறது எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்குப்பா”
“இளரத்தம் சூடா இருக்கு மான்வித், இப்ப உன் அப்பா ஆடியோடி களைச்சு உட்கார்ந்து இருக்கேன், அதனால தான், நிதானமா நான் யோசிக்கறேன், உன் வயசுல நானும் இப்படித்தான் இருந்தேன்”
“அப்பா நீங்க பேசிகிட்டே இருங்க, நான் பண்றதை பண்ணறேன்” என்றவன் எழுந்து செல்ல முயற்சிக்க, அவனைத் தடுத்த பவி,
“ஒரு நிமிஷம் ரெண்டு பேரும் பொறுங்க… டேய் மானவ் அப்பா சொல்றதை வைச்சு பார்த்தா, அந்த பிரித்வி நம்மகிட்ட பர்சனலா எந்த பகையும் கொண்டு நடக்கலை, எனக்கு இப்ப தேவை என்னன்னா? நம்மகிட்ட இருக்கற எல்லா தொழிலுக்கும் அவன் போட்டிக்கு வர்றானா? இல்லை குறிப்பிட்ட சில மட்டுமா?”
“ஹோட்டல், கன்ஸ்ட்ரக்சன், ரியல் எஸ்டேட் இந்த மாதிரி சிலது மட்டும் தான் ம்மா”
“அவன் யாரு? எங்க இருந்து திடீர்ன்னு முளைச்சான்?”
“அவன் ஒரு இன்டர்நேஷனல் மல்ட்டி மில்லினியர், அவனோட பிரான்ச் ரொம்ப நாளா இங்க இருக்கு, இந்த தடவை அவனே நேர்ல வந்து இங்க உட்கார்ந்து இருக்கான்”
“அவனை எப்படிடா எலெக்சன்ல போட்டியிட அனுமதிச்சாங்க?”
“அவன் கம்பெனி, முறைப்படி இங்க அசோசியேஷன்ல பதிவாகி ஐஞ்சு வருஷம் ஆகி இருக்கு, கூடவே அவன் கைல பெரிய பெரிய பிராஜக்ட்ஸ், அதுல முக்கால்வாசி கவர்ன்மென்ட் பிராஜக்ட்ஸ், கூடவே பெரிய புள்ளிங்க, அரசியல்வாதிங்க செல்வாக்கு இருக்கு, நம்ம அசோசியேஷன் சட்டதிட்டப்படி அவன் போட்டியிட அனைத்து தகுதியும் இருக்கு”
“சரி நீ இப்போதைக்கு இந்த போட்டியை விடு, அப்பாக்கு புதுசா கொஞ்சம் வேலை இருக்கு, அவர் அதை பார்த்தாகனும், நீ நம்முடைய மத்த தொழிலை பாரு, அதை முன்னேற்று, இப்போதைக்கு நீ கொஞ்சம் அமைதியா இரு”
“என்னம்மா நீங்களும் இப்படி சொல்றீங்க?”
“மானவ் அவன் நம்மை, நம் வளர்ச்சியை அழிக்க நினைச்சா, அதை இந்நேரம் முடிச்சு இருப்பான், அந்த மாதிரி அவன் எதுவும் பண்ணலை, அதும் இல்லாம எங்கேயோ இருந்து இங்க வந்தவன், இங்கேயே நிரந்தரமா இருப்பானா? கொஞ்ச நாள் ஆனா போயிடுவான், அதுக்காக உன்னை அதுவரை பொறுமையா இருக்கச்சொல்லல, நம்ம மத்த பிசினஸ்ல நீ கிங்கா இரு, இழந்த பதவி, அந்தஸ்து, சொத்து எல்லாத்தையும் பொறுமையா மீட்டுக்கலாம், இந்த சூழல்ல நிதானமே பிரதானம். அவன் நிரந்தரமா இங்க இருக்கற மாதிரி இருந்தா நம்மை எல்லா தொழில்லையும் வீழ்த்தி இருப்பான், அவன் தொழில்ல மட்டும் தான் அவன் கான்சன்டிரெட் பண்றான் புரியுதா?” 
“எனக்கு அதெல்லாம் தெரியாது, அப்பா மன்டே இன்டர்னல் மீட் அரேஞ் பண்ணி இருக்கேன், நீங்க ரெடி ஆகிக்கோங்க” என்று சொன்னவன் சோபாவில் இருந்து எழுந்திருக்க,
“சாரி மானவ், எனக்கு அன்னிக்கு இம்பார்டன்ட் ஒர்க் இருக்கு”
“இதை விட அப்படி என்ன முக்கியமான வொர்க் உங்களுக்கு?”
“என்னடா இப்படி கேட்கற? நம்ம குல தெய்வம் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பண்ற பொறுப்புல அப்பாதான் ஹெட். எப்பயுமே உங்கப்பா தான் முன்னாடி நின்னு செய்வார் தெரியாதா?”
“என்னமோ பண்ணித்தொலைங்க… பிசினஸ் பிரச்சனையை நான் பார்த்துக்கறேன்… இடைல வந்து நீங்க தலையிடாம இருந்தா அதுவே போதும்” என்று கத்தியவன் பேகை எடுத்துக்கொண்டு அவனது அறைக்குச் சென்றான்.
“டேய்… நில்லுடா….” என்ற பவியின் குரல் அவனுடைய காதில் விழவே இல்லை.
“விடும்மா… இப்பத்தானே தோல்வியை சந்திக்க ஆரம்பிச்சு இருக்கான், போகப்போக சரியாகிடுவான்”
“எங்க அண்ணனும் இவனும் இந்த விஷயத்துல ஒன்னு” என்று பவித்ரா புலம்ப, அதில் நித்யாவின் முகம் பிரகாசித்தது.
“அண்ணா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனும்?” என்று நித்யா இடையிட்டார்.
“என்னம்மா?”
“இல்ல பவி சொன்னதை வைச்சு யோசிக்கும் போது, எனக்கு ஒரு சந்தேகம் வருது?”
“என்னம்மா?”
“சர்வா உங்க பேரனா இல்லாம ஏன் உங்க தங்கை பேரனா இருக்கக்கூடாது?”
அவளது கேள்வியில் இருவரும் திகைத்துப் போய் பார்க்க,
“நமக்கு அந்த சூழ்நிலைல, தாய் இறந்ததா சொல்லி ஒரு குழந்தையை மட்டும் தந்தாங்க, மே பீ இன்னொரு குழந்தை பிறந்திருந்தா? உங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்த மாதிரி அவளுக்கும் பிறந்திருந்தா?”
“ஆனா அவன் எப்படி என்னை மாதிரி?”
“மானு இல்லையா? மானு பிறந்ததுல இருந்து இப்ப வரை பவி மாதிரியே தான இருக்கா?”
“பவி உனக்கு என்ன தோணுது? நான் இந்த ஆங்கிள்ல யோசிக்கலை”
“எனக்கு அப்ப இருந்த சூழ்நிலைல ஒன்னும் புரியலை, இப்ப எதுவுமே நியாபகம் வரலை, ஆனா அண்ணா சொன்னதை வைச்சு பார்த்தா ஒரே குழந்தைன்னு மட்டும் தான் தோணுது”
“ஒரு வேளை, அம்மா அப்பா இல்லாத குழந்தைன்னு, குழந்தை இல்லாத யாருக்கோ, இல்லை யாருக்காவது இறந்து பிறந்த குழந்தைக்கு பதிலா  ஒரு குழந்தையைக் குடுத்து இருந்தா?”
“சரி நித்யா, நீ சொன்ன கோணத்துலையும் நான் விசாரிக்கிறேன், இப்ப மானவ் வீட்ல இருக்கான், நாம பேசறது இப்போதைக்கு அவன் காதுல விழ வேண்டாம், சோ மீதியை நாளைக்குப் பேசிப்போம்” என்று சிவா முடித்துக்கொண்டு எழுந்துவிட்டார்.
“சரி நித்யா, நீ சொல்றதை நாங்க யோசிச்சு பார்க்கறோம், இன்னும் ஒரு நாள் தானே, சர்வாவை பார்த்தா விபரம் தெரிஞ்சுடும். நீ வா பாப்பாக்கு சாப்பிட ஏதாவது தரலாம்” என்ற பவித்ரா அங்கிருந்து எழுந்தார்.
இவர்கள் இவ்வாறு குழப்பத்திலும், நிம்மதியற்ற மனநிலையிலும் இருக்க, 
மனிஷா கான்பிரன்ஸ் முடித்துவிட்டு ஹோட்டல் அறைக்குத் திரும்பியிருந்தாள்.
அறைக்கு வந்து வெந்நீரில் ஒரு குளியலைப் போட்டுவிட்டு மஞ்சத்தில் படுத்தவளுக்கோ மறந்தும் உறக்கம் வரவில்லை.
இரண்டு நாட்கள் நடைபெறும் அந்த நிகழ்ச்சியில், அவர்களின் மருத்துவமனைக்கும், அவளுக்கும் அவார்டு வழங்கப்பட இருக்கிறது.
முதல் நாள் அதிகளவில் பரவி வரும் புற்றுநோய் குறித்தும், சிக்கலான அறுவைசிகிச்சை செய்வது பற்றியும் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது, அதன் பின்னர், இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர் குழாம் ஒன்று அங்கிருந்த பிற மருத்துவர்களின் சந்தேகங்களைக் கேட்டறிந்து, அவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
இவற்றையே சிந்தித்துக்கொண்டே, உறக்கம் வராமல் படுத்து  இருந்தவளின் செல் அடிக்க, அதில் மிளிர்ந்த எண்களைப் பார்த்தவள் ஒரு புன்னகையுடன் அதை அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.
“ஹெலோ…”
“ஹலோ மனிஷா… ஹவ் ஆர் யூ?”
“பைன்… நீங்க எப்படி இருக்கீங்க?”
“பைன்… உங்களால எனக்கு ஒரு உதவி ஆகனுமே?”
“சொல்லுங்க”
“எனக்கு உங்க ஹாஸ்பிட்டலோட ஷேர்ஸ் கொஞ்சம் வேணும், இமீடியட்டா”
“மேக்சிமம் ஷேர் மாமா & அத்தைகிட்ட இருக்கு, மீதி ட்ரஸ்ட் மெம்பர்ஸ்ட்ட இருக்கு, அதை டேக் ஓவர் பண்ணி மானவ் பேருக்கு மாத்த ஐடியா பண்ணாங்க, பட் அந்த மெம்பர்ஸ் ஒத்துக்கவில்லை, அவங்க மாமாக்கு நெருங்கிய சிநேகிதம், கூடவே தாத்தாவோட நெருங்கிய நண்பர்கள் பசங்க, அதனால மாமாவும் கேட்கலை”
“எனக்கு அவங்க டீட்டைல்ஸ் வேணுமே”
“உங்களுக்கு நான் வாட்சப் பண்றேன்”
“தேங்க்ஸ்ம்மா”
“இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ் சொல்றீங்க? இது என்னோட கடமை”
“சரிம்மா… நீங்க எனக்கு செய்யற உதவி எக்காரணம் கொண்டும் நான் வெளிய தெரியாம பார்த்துக்குவேன், நீங்களும் ஜாக்கிரதையா இருங்க”
“தேங்க்ஸ்…” என்றவள் போனைக் கட் செய்துவிட்டு, மற்ற டிரஸ்டிக்களின் பெயர்களை அதே எண்ணுக்கு வாட்சப் செய்ய ஆரம்பித்தாள்.
இரட்டை டிக் வந்து இரண்டும் நீல நிறமாக மாறிய அடுத்த நொடி, அதே எண்ணில் இருந்து மற்றொரு அழைப்பு வந்தது.
அதை அட்டென்ட் செய்து காதில் வைத்தவள்,
“உங்களுக்கு நான் அனுப்பின லிஸ்ட்ல இப்ப லாஸ்ட்டா இருக்கற ஒருத்தர் இங்க இல்லை, அவங்க பையனோட டோட்டலா ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிட்டார்.”
“சரிம்மா, நீங்க அனுப்பின தகவல்களுக்கு நன்றி, உனக்கு ஒரு சின்ன சர்பிரைஸ் இன்னிக்கு நியூஸ் சேனல்ல ஓடுது. இது உனக்கு நான் குடுக்கற கிப்ட், தென் வாட்சப் மெசேஜ் டெலீட் பண்ணிடுங்க” என்றவன் காலைக் கட் செய்ய,
அடுத்த நொடி மனதில் ஏதோ தோன்ற, கட்டிலில் கிடந்த ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்தாள்.
அதில் வந்த செய்தியைப் பார்த்து உள்ளம் நிம்மதியடைய ஆனந்த கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.
ஒலிபரப்பாகிக்கொண்டு இருந்த செய்தி இதுதான்,
“கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருச்சியையே உலுக்கிய சிறுமி  லாவண்யாவின் மரணத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த குற்றவாளிகள் நால்வரும், இன்று சிறைச்சாலையில் நடந்த அடிதடியில் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை, சிறை வளாகத்தில் இவர்கள் நால்வருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது, நால்வரில் ஒருவர் அரசியல் தலைவரின் வாரிசு என்பதால், அந்த நபருக்கு, சிறைக்குள்ளே, பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு இருந்த ஆதரவாளர்கள் சிலர் உதவியுள்ளனர்.
இதைப் பிடிக்காத மற்ற மூவரும் அவரிடம் அடிக்கடி சண்டை வளர்த்துள்ளனர், இன்றும் வழக்கம் போல நடந்த தகராறில் மற்ற மூவரும் அவரைக் கையில் வைத்திருந்த மண்வெட்டி, கடப்பரையினால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். 
அதில் ரத்தம் கசிய அந்த நபர் மயங்கிய விழ, அவரது ஓலம் கேட்டு அருகில் வேலை செய்து கொண்டிருந்த கைதிகளும், காவலர்களும் ஓடி வந்துள்ளனர், அதில் கைதிகளினுடனிருந்த, அந்த நபரின் ஆதரவாளர்கள் மூவரையும் தாக்க ஆரம்பித்துள்ளனர்.
தற்காத்துக்கொள்ள பதிலுக்கு மூவரும் அவர்களைத் தாக்க, காவலர்களும், சுற்றி இருந்த நபர்களும் அதைத் தடுக்க முயற்சி செய்துள்ளனர்.
விபரம் அறிந்த சிறை நிர்வாகம் தலையிட்டு, தடியடி நடத்தி சண்டையை நிறுத்தி, படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
அதில் லாவண்யாவின் வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த நால்வரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதிகப்படியான இரத்தப்போக்கினால் நால்வரும் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் ஐந்து காவலர்களும், பத்து கைதிகளும் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மட்டுமல்லாது, நடந்த சண்டையை நிறுத்த முயற்சி செய்த உடனிருந்த சில கைதிகள் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர்.
சிறையில் நிகழ்ந்த இந்த அடிதடி தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகளை சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியால், சிறையில் ஏற்பட்டு இருந்த பதற்றம் தணிந்து, சிறையில் அமைதி நிலவுவதாகவும், தகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறி இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் சிறை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
வெளியான சி.சி.டி.வி. காட்சிகளை இப்போது காணலாம்”
செய்தியைப் பார்த்த மனிஷாவின் கண்கள் தன்னையுமறியாமல் கலங்கியது, அவளது கைகள் தானாக செல்லில் “தேங்க்ஸ்” என்று டைப் செய்து அனுப்பியது.
இரண்டு நீல நிற டிக்குகளைக் கண்ட மனிஷா அந்த மெசேஜ்கள் அனைத்தையும் டெலிட் செய்துவிட்டு, சற்று நிம்மதியுடன் உறங்கச் சென்றாள்.
அதே இரவில், மலைக்கோட்டை மாநகரத்தில் பழமை மாறாமல் சற்றே புது வர்ணங்களை பூசிக்கொண்டு நின்ற அந்த இல்லத்தின் வெளித்தோட்டத்தில், வானில் உலவும் நிலவிற்குத் துணையாக புவியில் உலவிக்கொண்டு இருந்தாள் சம்யுக்தா.
நினைவுகள் முழுக்க, அன்று மாலை அவள் பரத்திடம் அலைபேசியில் பேசியதையே சுற்றி வந்தது.
அன்று மாலை,
“என்னம்மா? வீட்டுக்கு வந்துட்டியா?”
“இப்பத்தான் மாமா வந்தேன்”
“என்ன சொன்னாங்க? உன் அங்கிளும்? ஆன்ட்டியும்?”
“வர்ற வெள்ளிக்கிழமை பூஜை வைச்சு இருக்காங்களாம் மாமா, பூஜைக்கு பசங்களையும் கூட்டிக்கிட்டு வரச்சொல்லி சொன்னாங்க?”
“நீ என்ன சொன்ன?”
“கர்ட்ஸிக்கு சரின்னு சொல்லிருக்கேன்”
“அப்புறம் என்ன சொன்னாங்க?”
“பசங்க எங்கேன்னு கேட்டாங்க? இன்னும் சொல்லப்போனா அவங்க வந்ததே பசங்களைப் பார்க்கத்தான் போல மாமா”
“எப்படிம்மா சொல்ற?”
“அவங்க பேச்சு, அவங்க செயல் எல்லாமே அப்படித்தான் இருந்துச்சு, உள்ளே நுழைஞ்சதுல இருந்து அவங்க கண்கள் வீட்டை சுற்றி அலசிக்கிட்டே இருந்துச்சு”
“திடீர்ன்னு ஏன் பசங்களைப் பார்க்க கேட்டாங்க?”
“எனக்கும் புரியலை மாமா… நீங்க இதைப்பற்றி என்ன நினைக்கறிங்க?”
“ஒரு வேளை அவங்களுக்கு லைட்டா சந்தேகம் வந்து இருக்கலாம்”
“எப்படி மாமா சொல்றீங்க?”
“ஏன்னா? சர்வாவையும் சிவாவையும் ஒப்பிட்டு பார், ஓரளவுக்கு சாயல் தெரியும், அதை வைச்சு அவங்களுக்கு சந்தேகம் வந்திருக்கலாம்”
“சரி மாமா, அப்படி பார்த்தாலும் அவர் வயசு என்ன? சர்வா வயசென்ன? உத்து பார்த்தா தான் தெரியும். கூடவே சர்வா கம்ப்ளீட்டா பாரின் ஸ்டைல்ல இருக்கான்.”
“அப்படி இல்லைன்னா நம்ம மேல ஏதாவது சந்தேகமா இருக்கலாம்”
“சரி மாமா பார்ப்போம் என்ன நடக்குதுன்னு? ஆச்சு இன்னும் ஒரு மாசம், கிளம்பிடுவோம், ஆனா நீங்க ஏன் கிளம்பினீங்க?”
“என்னை நேரடியா கேள்வி கேட்டா, நான் பதில் சொல்லனுமே”
“இப்ப அடுத்து நாம என்ன செய்யனும்ன்னு நினைக்கறிங்க?”
“பூஜைக்கு போயிட்டு வா, மத்ததை அப்புறம் பேசிக்கலாம்”
“சரி மாமா, நீங்க பசங்களைப் பாருங்க நான் ரெப்ரெஷ் ஆகிட்டு கூப்பிடறேன்”
“சரிம்மா”
இந்த உரையாடலையே சுற்றிச் சுற்றி வந்தவள் மனதில் ஒரு எண்ணம் முழுதாக உருவாகியது, அது உறுதியாகவும் மாறியது, அதை உடனே செயலாற்றும் பொருட்டு, கையில் அலைபேசியை எடுத்தவள், பவித்ரனுக்கு அழைப்பெடுத்தாள்.
அவளது அழைப்பிற்கு காத்திருந்தவன் போல, முதல் ரிங்கிலேயே பவித்ரனும் அழைப்பை ஏற்றான்.
“என்ன டார்லி? இந்நேரத்துல போன்?”
“நான் பண்றது இருக்கட்டும், நீங்க இந்த நேரத்துல கரெக்ட்டா ஒரே ரிங்க்ல போன் அட்டென்ட் பண்றீங்களே? நீங்க என்ன பண்ணறீங்க?”
“கொஞ்சம் வொர்க் இருந்துச்சு, அதான் வர லேட் ஆகிடுச்சு, இப்பத்தான் வந்தேன், உள்ளே நுழைஞ்சதும், உன் நியாபகம், சரி போன் பண்ணலாம்ன்னு போனை எடுத்தேன் நீயே கூப்பிட்டுட்ட”
“ம்ம்.. சிவா அங்கிளுக்கும், ஆன்ட்டிக்கும் ஏதோ சந்தேகம் வந்திருக்கும் போல”
“எப்படி சொல்ற?”
“அதான் அன்னிக்கே சொன்னேனே. பாப்பாக்கு செயின் தந்தாங்க, இன்னிக்கு வீடு வரைக்கும் வந்து அவங்க வீட்டு பூஜைக்கு இன்வைட் பண்ணிட்டு போயிருக்காங்க”
“அதான் பசங்களை அந்த ஸ்கூல்ல சேர்க்க வேண்டாம்ன்னு சொன்னேன், நீ கேட்டியா?”
“ப்ச்… சேர்த்தாச்சு… ஸ்கூலும் முடியப்போகுது… அதை விடுங்க, இன்னிக்கு வந்தவங்க பசங்களை அதிகமா தேடின மாதிரி இருந்துச்சு, மாமா கன்பார்மா சொல்றார், பசங்களைப் பார்க்க வந்திருப்பாங்கன்னு”
“நான் உன்னை அங்க போகவே வேண்டாம்ன்னு சொன்னேன், நீ தான் கேட்கலை”
“அதெல்லாம் முடியவே போகுது, பசங்க எக்ஸாம் நெக்ஸ்ட் வீக் ஆரம்பிக்குது, பதினைஞ்சு நாள்ல முடியுது, பாப்பா பர்த்டே வேற வருது, அதை இங்க செலிப்ரேட் பண்ணிட்டு அடுத்த நாளே நாம பிளைட் ஏறனும், அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க”
“ஓகே… டீல்… நீ உன் வேலையை முடிச்சுட்டியா?”
“பாதி கிணறு தாண்டி இருக்கேன், மீதியையும் அதுக்குள்ள முடிச்சுடுவேன்”
“ம்ம்… டன்”
“உங்களுக்கு அவங்க நடவடிக்கைல சந்தேகம் ஏதும் வரலியா?”
“எனக்கு சென்ட் பர்சென்ட் கன்பார்ம்ட், அவங்க வீட்டுல நடக்கிற பூஜைல இதுவரை வீட்டு ஆளுங்க தவிர வேற யாருமே கலந்துகிட்டது இல்லை, சோ முதல் முறையா உன்னை இன்வைட் பண்ணி இருக்காங்க, அப்படி பார்த்தா அவங்க சந்தேகத்துல உன்னை இன்வைட் பண்ண வரலை, கன்பார்ம் பண்ணிட்டு தான் இன்வைட் பண்ண வந்திருக்காங்க”
“தம்பி இராஜஸ்தான் போலாம்ன்னு சொன்னான், பாப்பா கேரளா கேட்டிருந்தா, ரெண்டுக்கும் சேர்த்து பிளான் ரெடி பண்ணி இன்னிக்கு மெயில் பண்ணி இருக்கான், பார்த்துட்டு சொல்லுங்க, அதுக்கு ஏத்த மாதிரி எல்லாருக்கும் டிக்கெட் புக் பண்ணனும். அதுக்குன்னு உடனே எடுத்து வைச்சுட்டு உட்கார்ந்துக்காதிங்க, நாளைக்கு காலைல பார்த்துட்டு சொல்லுங்க”
“நான் ஏற்கனவே பார்த்துட்டேன் டார்லி… பிளான் ரெடி, பட் இந்த முறை ரெண்டு பேருக்கு மட்டும் இல்லை மூனு பேருக்கும் சஸ்பென்ஸ், டேட் மட்டும் கொஞ்சம் சேஞ் பண்ணனும்”
“அதென்னவோ நீங்களே முடிவு பண்ணுங்க, நான் நியூ பேசன்ட் யாரும் பார்க்கறதில்லை, ஓல்ட் பேசன்ட்ஸ் & ஆபரேஷன் பண்றவங்களை மட்டுமே டீல் பண்றேன், எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்லை, அதுவும் இல்லாம டோட்டலா பொறுப்பேத்துக்கிட்ட ஆபரேஷன் எல்லாத்தையும் முடிச்சுட்டேன். நீங்க தான் வழக்கம் போல உங்க வொர்க் முடிக்கனும்”
“அல்மோஸ்ட் முடிஞ்சது…”
“சரி அவங்க பூஜைக்கு என்னையும் பசங்களையும் இன்வைட் பண்ணினாங்கள்ல, நான் போகவா? வேண்டாமா?”
“நீ மட்டும் போயிட்டு வா”
“சரி… நீங்க சாப்பிட்டீங்களா?”
“இனிமே தான் சாப்பிடனும், ரெஸ்டாரன்ட்ல வாங்கிட்டு வந்துட்டேன்”
“சரி நீங்க தூங்குங்க, நாளைக்கு நானும் பண்ணை வீட்டுக்கு கிளம்பறேன்”
“சரி டார்லிங்… நீ தூங்கு… வில் மீட் யூ சூன்…”
“வில் மீட் யூ சூனா? நம்பிட்டேன்… இதையே ஒரு வருஷமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க?”
“ஏன்டி, சூன்ன்னு சொல்லிட்டு, உடனே எட்டிப்பார்க்க, நீ என்ன பக்கத்து ரூம்லையா இருக்க?”
“ஓகே ஓகே… பேட் நைட்”
“ஏன்டி? கனவுல பேய் பிசாசெல்லாம் வரனுமா?”
“நீ என்ன கனவு கண்டாலும், நான் தான் வருவேன், நான் மட்டும் தான் வருவேன், சரியா?”
“அதுக்கு எதுக்குடி பேட் நைட் சொல்ற?”
“உங்களை அடிக்கனும் போல இருக்கு, அதான் கனவுல அடிக்கலாம்ன்னு”
“எனக்கு உன்னை கடிக்கனும் போல இருக்கு, கனவுல வரும்போது கொஞ்சம் கடிச்சுக்கவா?”
“சாப்பிட்டு கண்ணை மூடி தூங்குங்க… கனவுல வந்து அடியோட, உதையும் சேர்த்து தரேன், அப்புறம் பாருங்க… கடிக்கற எண்ணமெல்லாம் இருக்காது, காலைப் பிடிச்சு மன்னிப்பு கேட்கிற எண்ணம் மட்டும் தான் இருக்கும்”
“பார்ப்போம்… பார்ப்போம்… நீ சீக்கிரம் போயி தூங்கு… நாளைக்கு லீவை என்ஜாய் பண்ண வேண்டாமா?”
“பண்ணனும்… பண்ணனும்…”
“குட் நைட் டார்லிங்… தூங்கு… நான் அப்பாக்கிட்ட பேசிட்டு சாப்பிட்டு தூங்கனும்… டுடே சோ டயர்ட்… மார்னிங் வீடியோ கால் பண்றேன்…”
“சரி சரி இன்னிக்கு பொழைச்சு போங்க… நாளைக்கு பேசிக்கிறேன்… குட் நைட்…”
சம்யுக்தா செல்லை அணைத்துவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தாள்.
சிவாவிடம் சண்டை போடுவது போல பேசிவிட்டு அறைக்குள் நுழைந்த மான்வித்தோ அன்றைய நிகழ்வில் மனம் கொதிக்க அந்த அறையை குறுக்கும் நெடுக்குமாக அளந்துகொண்டு இருந்தான்.
ஒரு கட்டத்தில் குளியலறைக்குள் புகுந்து ஷவரின் அடியில் நிற்க ஆரம்பித்தான்.
குளிர்ந்த நீர் தலையில் விழ விழ, உடலின் வெப்பம் தீர்ந்ததோ இல்லையோ, மனதின் வெம்மை மறைய ஆரம்பித்தது.
பிரித்வியின் மேல் இருந்த கோபம் மெல்ல மெல்லக் குறைய, பிரித்வியை அடியோடு சாய்க்க வேண்டிய வேலையைப் பற்றி மனம் மெல்ல சிந்திக்க ஆரம்பித்தது.
குளித்து முடித்து உடை மாற்றி வந்தவன், லேப்டாப்பை எடுத்துக்கொண்டு அமர்ந்தான்.
முதல் கட்டமாக அடுத்து அவன் ஏற்பாடு செய்துள்ள மீட்டிங் சம்பந்தமான தேவையான குறிப்புகளை ஒவ்வொன்றாக எடுக்க ஆரம்பித்தான்.
நிதானமாக ஒவ்வொரு தோல்வியையும், அந்த தோல்விக்கு முன்னும் பின்னும் நிகழ்ந்தவை என அனைத்தையும் ஒன்று சேர திரட்டினான்.
நேரம் போவதே தெரியாமல் உட்கார்ந்திருந்தவனின் அறைக்குள் நுழைந்த பவித்ரா, கையில் கொண்டு வந்திருந்த உணவுத்தட்டுடன் அவளது அருகில் சென்று நின்றார்.
“என்னப்பா பண்ற?”
அவரது குரலில் நிமிர்ந்து பார்த்தவன், “அனலைஸ் பன்றேன்ம்மா… தவறு நடந்திருக்கு சரி, அது எப்படி, எங்க, எந்த சூழ்நிலைல  நடந்ததுன்னு யோசிக்கறேன்”
“சாப்பிடாம உட்கார்ந்து வேலை பார்த்தா எப்படி? இந்தா நானே கொண்டு வந்திருக்கேன், சாப்பிடு”
“இல்லைம்மா, கொஞ்சம் கவனம் மீறினாலும் நான் இவ்ளோ நேரம் செஞ்சது வேஸ்ட் ஆகிடும், நீங்க போங்க”
“சரி… நான் ஊட்டி விடறேன் நீ உன் வேலையைப் பார்” என்றவர் அவனுடைய பதிலைக்கூட கேட்காமல் ஊட்டிவிட ஆரம்பித்தார்.
என்ன சாப்பிட்டோம் என்று கூடத் தெரியாமல் மான்வித் வேலையில் மூழ்கிப்போனான்.
முன் தின பயண அலுப்பு, அன்றைய தின கசப்புகள் தந்த சோர்வு அனைத்தையும் மீறி விடிய விடிய அவன் நிறை குறைகளை தொகுத்திருந்தான்.
“இடையிடையில் எழுந்த சந்தேகங்களை குறித்து வைத்தவன், திங்கள்கிழமை நடக்க இருக்கும் மீட்டிங் தொடர்பான குறிப்புகளையும் எடுத்து வைத்திருந்தான்.
மொத்த வரவு செலவுகளையும், தொழில் வாரியாகப் பிரித்து, பண வரவையும், வாராமல் இருக்கும் நிலுவைத் தொகையையும் கணக்கிட்டான்.
முன் கூட்டியே அவன் மறுநாள் வேலை நாள் என அலுவலக ஊழியர்களுக்கு தகவல் அனுப்பி இருந்ததால், மறுநாள் அவர்கள் முதற்கட்டமாக செய்ய வேண்டிய வேலையை அவர்களுக்கு மெயில் அனுப்பிவிட்டு, அவன் ஓய்ந்த போது மணி ஐந்து.
லாப்டாப்பை அணைத்து மூடி வைத்தவன், அப்படியே சோபாவில் சாய்ந்து உறங்க ஆரம்பித்தான்.
ராகம் இசைக்கும்…

Advertisement