Advertisement

ஒரு பக்கம், மனிஷாவும், மான்வித்தும் கொடைக்கானல் கிளம்ப, பிரித்வி அசுர வேகத்தோட தொழில் போர் புரிய தன் பயணத்தை தமிழகத்தை நோக்கி ஆரம்பித்து இருந்தான்.
இதற்கிடையில் மனிஷாவிடம் சம்யுக்தாவும் பேசி இருந்தாள். லாவண்யாவின் புயல் சற்று ஓய்ந்திருக்க ஆரம்பிக்க, சிவாவின் குடும்பம் சற்று இயல்புக்குத் திரும்பிக்கொண்டு இருந்தது.
கொடைக்கானல் சென்று வந்த பின்னர் கூட, மனிஷாவுக்கும், மான்வித்துக்கும் இடையில் இடைவெளி இருக்கத்தான் செய்தது. அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் அதிகம் தவித்துப்போனது பெரியவர்கள் தான்.
நாட்கள் அதன் போக்கில் மாதங்களாக நகர ஆரம்பித்து இருக்க, மானஷாவும், மான்வியும் வரும் நாட்களும் தள்ளிப்போய் இருந்தது. மானஷாவின் மாமியாருக்கு உடல் நலமில்லாமல் போக, அவள் ஒரு மாதம் கழித்து வருவதாக சொல்லிவிட, மான்வியும் அவள் வரும் போது வருவதாக சொல்லிவிட்டாள்.
இதற்கிடைப்பட்ட நாட்களில் பிரித்வி தொழிலில் அசுர வளர்ச்சி அடைந்திருந்தான், அவனது அறிவுத்திறமையில் சிவாவின் பல்வேறு தொழில்களுக்கு போட்டியாக அமர்ந்து, சிவாவின் தொழில்களையும் ஒரு வழியாக்கி இருந்தான்.
முகம் காணாத பிரித்வியின் மேல், சிவாவுக்கு ஒருவித கோபம் உருவாகி இருக்க, மான்வித்துக்கோ வன்மம் உருவாகி இருந்தது.
இரு ஜாம்பவான்கள் மோதினாலும், உலகளவில் பெரிய தொழிலதிபரான பிரித்வியுடன் மோதிப் பார்க்க சிவாவிற்கும் போதிய பொருளாதார அடிப்படை இல்லாமல் போய்விட சிவா பொறுமை காக்க ஆரம்பித்து இருந்தார்.
இதற்கிடைப்பட்ட நாட்களில் சம்யுக்தாவும் மனிஷாவிடம் ஓரளவு நெருங்கி இருந்தாள்.
மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு மாலைப் பொழுதில்,
சிவாவின் வீடே இரண்டாகிக்கொண்டு இருந்தது,
மானவ் தொழில் வேலையாக ஒரு பக்கம் டெல்லி கிளம்பிக்கொண்டு இருக்க, மனிஷா ஒரு கான்பிரன்ஸ் விசயமாக பெங்களூர் கிளம்பிக்கொண்டு இருந்தாள்.
இது ஒரு பக்கம் இருக்க, பவித்ராவின் பள்ளியில் ஆண்டு விழா நடக்க, அதற்கு மற்ற நால்வரும் கிளம்பிக்கொண்டு இருந்தனர்.
“பவி பாப்பாக்கு எல்லாம் எடுத்து வைச்சுட்டேன், நீ ரெடியா?”
“நான் ரெடி நித்யா”
“சரி நான் பாப்பாவை ரெடி பண்றேன், நீ போயி வேற வேலை இருந்தா பாரு”
“அவளும் ரெடி நித்யா, வா போகலாம்”
இருவரும் வெளியே வர, மனிஷா எதிர்பட்டாள்.
“அத்தை நான் கிளம்பறேன், போய்ட்டு போன் பண்றேன்”
“மானவ் எங்க?”
“மேல இருக்கார்”
“உன்னை யார் கொண்டு போயி விடறாங்க?”
“டிரைவர்”
“சரி கிளம்பு… பத்திரம்… நடந்த விசயத்துனால ஜாக்கிரதையா இரு”
“சரிங்கத்தை… பை ம்மா”
“பத்திரம்மா”
“ஓகேம்மா”
மனிஷா கிளம்பிச் செல்ல,
“நீ கார்ல உட்கார் நித்யா, நான் உங்கண்ணனை கூட்டிகிட்டு வரேன்” என்று சொல்லியவாறே பவித்ரா சிவாவைக் காணச் சென்றார்.
“சிவா கிளம்பலாமா?”
“ஏம்மா பங்கசனே ஆறு மணிக்குத்தான், நீ இப்பயே பறக்கற”
“நம்ம ஸ்கூல் பங்கசன், என்ன தான் நான் சேர்மன்னாலும் முன்னாடியே போகனும்”
“சரி கிளம்பிட்டேன்… நித்யாவும் தனுவும் கிளம்பிட்டாங்களா?”
“அவங்க காருக்கே போய்ட்டாங்க… சீக்கிரம் வாங்க… உங்க பேத்தி காரை எடுக்கலை ரகளை பண்ணுவா”
“வா.. வா.. போகலாம்… மனிஷா கிளம்பிட்டாளா?”
“கிளம்பிட்டாங்க… மானவ் இன்னும் கிளம்பலை”
“ஏன் அவனும் போறது ஏர்போர்ட்டுக்கு, ஒன்னா போனா என்ன?”
“அவனுக்கு பிளைட் பத்து மணிக்கு, இப்பவே போயி என்ன பண்ணப் போறான்?”
“இங்க அவ்ளோ நேரம் என்ன பண்ண போறான்?”
“ஏற்கனவே அவனுக்கு டென்ஷன்… ஒன்னும் பேச முடியலை… நீங்க எதுவும் பேசாம, இப்ப வாங்க… அப்புறம் இதைப்பத்தி பேசலாம்”
இருவரும் வந்து காரில் ஏற, கார் அவர்களின் பள்ளியை நோக்கிச் சென்றது.
பள்ளியை விட்டு இறங்கியதுமே நித்யா சொல்லிவிட்டாள்,
“பவி… இந்த இடமே எவ்ளோ மாறிடுச்சு”
“இன்னும் அப்படியே இருக்கனும்ன்னு சொல்றியா?”
“நீ மரம் நடு, செடி நடுன்னு பேசுவ, இப்ப என்னடான்னா, முன்னாடி இருந்த பாதி மரத்தைக் காணோம்”
“என்ன பண்ண நித்யா? பசங்க புதுப்புது கேம் கேட்கறாங்க, அதான் பாஸ்கட் பால் ஸ்டேடியம், புட்பால் ஸ்டேடியம் ரெண்டு கட்டிருக்கு, கூடவே பசங்களுக்கு கராத்தேக்கு ஷெட், அந்தப்பக்கம் ஸ்கேட்டிங்க்கு தனி ஷெட் போட்டு இருக்கோம்… இதுல கிரிக்கெட் பிராக்டீஸ் வேற இருக்கு…”
“பக்கத்து லேண்ட் வாங்கினதா சொன்னீங்களே?”
“இந்த ஒரு கேம்பஸ்ல மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.சி, ஐ.சி.எஸ்.சி மூனும் இருக்கு, தனித்தனி பில்டிங். ஹாஸ்டலுக்கும், ஆடிடோரியத்துக்குமே வாங்கின இடம் சரியாகிடுச்சு.”
“பழைய ஆடிட்டோரியம் என்ன ஆச்சு?”
“அங்க இன்டோர் கேம்ஸ் போட்டாச்சு, இன்டோர் கேம்ஸ் இருந்த இடத்தை லைப்ரரி கூட எக்ஸ்டென் பண்ணியாச்சு. இதனால இது மெயின் லைப்ரரி, மூனு ஸ்கூல் ஸ்டுடென்ட்சும் இந்த மெயின் லைப்ரரில புக் எடுக்கலாம்.”
“ம்ம்.. ஒரே பில்டிங் மயமா இருக்கு, கொஞ்சம் மரம் இருந்தா நல்லா இருக்கும்”
“அங்க பார்த்தியா? ஒவ்வொரு ப்ளோரை சுத்தி ஒரு மினி கார்டன் இருக்கு, பசங்க தடுமாறிக் கீழ விழாம இருக்க, சுத்தியும் கம்பி நட்டு, ஸ்டீல் வலை போட்டு இருக்கு.”
“இந்த ஐடியா சூப்பர் பவி”
“இதனால பசங்களுக்கு பொல்யுசன்ல இருந்து கொஞ்சம் விடுதலை, கூடவே இயற்கையோட சேர்ந்த படிப்பும்”
“இந்த கார்டன் வொர்க்கு மெயிண்டனன்ஸ் அதிகமாத் தேவைப்படும், எப்படி சமாளிக்கறிங்க?”
“இதுக்கு பசுமை இயக்கம்ன்னு நம்ம ஸ்கூல ஒரு டீம் இருக்காங்க, இவங்க இந்த கார்டன் வொர்க், மரம் நடறது, புதுச்செடி வைக்கிறதுன்னு எல்லாமே பார்த்துப்பாங்க. சுத்தி இருக்கற நிலம் விலைக்கு கேட்டுக்கிட்டு இருக்கோம், கிடைச்சா, முழுக்க தோட்டம் தான் போடற ஐடியா”
இவர்கள் பேசிக்கொண்டே நடக்க, மூன்று பள்ளிகளின் பிரின்சிபால் மற்றும் சில ஆசிரியர்கள் எதிரில் வந்து அனைவரையும் வரவேற்றனர்.
அனைவர்க்கும் தலையசைத்துக்கொண்டே ஆடிட்டோரியம் நோக்கி மூவரும் சென்றனர்.
பள்ளி ஆண்டு விழாவை முன்னிட்டு, ஆட்டிடோரியம் வண்ணமயமாகக் காட்சி அளித்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள், அவர்களின் பெற்றோர் என பெருங்கூட்டமே அங்கு திரண்டிருந்தது.
விழா ஆரம்பிக்க நேரம் இருக்க, பவித்ரா விழா ஏற்பாட்டினை ஒரு முறை சரி பார்த்து விட்டு, வந்திருந்த சிறப்பு விருந்தினருடன் பேச ஆரம்பித்துவிட்டார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பிக்க, அனைவரும் விழாவில் ஒன்றிப்போக ஆரம்பித்தனர்.
பவித்ரா, மூன்று பள்ளிகளின் பிரின்சிபால் மற்றும் அன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் விளக்கேற்ற விழா ஆரம்பமானது.
பொன்னாடை போர்த்துதல் மற்றும் நினைவுப் பரிசு வழங்குதல் முடிந்ததும், மேலிருந்த அனைவரும் முதல் வரிசைக்கு வந்து அமர, கலை நிகழ்ச்சிகள் தோன்றியது.
சின்னஞ்சிறு சிறுமி ஒருத்தி மேடையில் தோன்றி, 
குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
என்று அழகாக வீணை வாசிப்புடன் பாட அரங்கமே அந்தக் குரலில் லயித்து அமைதியாக இருந்தது. அவளுடைய தளிர் கரங்கள் மீட்டிய வீணையின் இசையில் சில முதியவர்கள் கண் கலங்கி அமர்ந்திருந்தனர்.
அடுத்ததாக சில மாணவிகள் ராமாயண காவியத்தை, பரதத்தில் அழகாக மேடையில் அரங்கேற்றினர்.
தமிழர் மறந்து போன கரகத்தையும், பொய்க்கால் குதிரையையும் மேடையில் ஏற்றி இருந்தனர், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களோ பறையிசையில் அரங்கை அதிர வைத்து இருந்தனர்.
திடீரென மூன்று மாணவர்கள் முக மூடிகள் போட்டுக்கொண்டு, மேடையில் தோன்றி, படம் வரைய ஆரம்பித்தனர்.
ஒரு மாணவன் அந்த அரங்கில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த சிறு குழந்தையைப் பார்த்து வரைந்து அசத்தினான்.
ஒரு மாணவன் பவித்ரா மற்றும் சிவாவின் படத்தை அவர்கள் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்து வரைந்து அசத்தினான். 
இன்னொரு மாணவன் எதிரில் அவனை போகஸ் செய்துகொண்டு இருந்த வீடியோகிராபரை வரைந்து அசத்தினான்.
மூவருமே சிறப்பாக வரைந்திருந்தனர். அச்சு அசலாக வரைந்திருந்தனர். அதுவும் கொடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே…
ஒரு மாணவி கையில் வாளெடுத்து ஜான்சி ராணியாக நிற்க, மற்றொரு மாணவி வேலு நாச்சியாராக வந்து நின்றாள். 
ஒரு மாணவன் பகத்சிங்காக முழங்க, மற்றொரு மாணவன் வீர பாண்டிய கட்ட பொம்மனாக வந்து நின்றான். இன்னொரு மாணவன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸாக வந்து நிற்க, அனைவரும் அரங்கில் இருந்தவரின் மனதில் அந்த கதாப்பாத்திரமாகவே உறுமாறினர்.
மாணவர்களின் இந்தத் திறமைகள், அனைவரையும் பொறுமையாக காத்திருந்து பார்க்கத் தூண்டியது.
எவ்வித சோர்வும் யாரையும் ஆட்டிப்படைக்கவில்லை. எட்டு மணி தாண்டியும் பிள்ளைகள் புத்துணர்வுடன் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
ஒரு மாணவி, காதலன் பட பாணியில் மேடையில் கலர் பொடிகளைத் தூவி அதில் பள்ளியின் லோகோவை நடனத்தில் ஆடி வரைந்திருந்தாள். 
நவீன கல்வி முறை பற்றி சில மாணவர்கள் நாடகம் நடத்திக் காட்டினர்.
பிற மாநிலங்களின் பாரம்பரிய நடனங்களும், நாடகங்களும் மேடையேறின.
தமிழ் நாடகம், ஆங்கில நாடகம், இந்தி மொழியில் ஒரு நாடகம் என திறமையுடன் நடித்துக்கொண்டு இருந்தனர்.
ஒவ்வொரு பள்ளியிலும், பரிசளிப்பு முதலிலும், கலை நிகழ்ச்சிகள் இறுதியிலும் நடைபெறும், இவர்களோ முதலில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, பின்னர் பரிசு வழங்குவதை வழக்கமாகச் செய்து வந்தனர்.
அதன் படி கலை நிகழ்சிகள் முடிவடைந்த நிலையில், விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிரபல எழுத்தாளர் அவரது சிறப்புரையாற்றினார்.
குழந்தைகளின் எண்ணங்கள், அவர்களின் செயல்பாடுகள் பற்றி அவர் கூறிய கருத்துக்கள் அனைவரையும் அவரின் சொற்களில் கட்டிப்போட்டன.
அவரையடுத்து பவித்ரா பேசி முடிக்க, மூன்று பள்ளிகளின் பிரின்சிபாலும் அடுத்தடுத்து மேடையேறி பள்ளியின் ஆண்டறிக்கையை சமர்பித்தனர்.
அதன் பின்னர் ஒவ்வொரு வகுப்பு வாரியாக பரிசுகள் வழங்கப்பட்டன.
அதற்கு முன்பு மேடையில் பேசிய பவித்ரா, 
“எல்லா பள்ளிகளிலும் பெரும்பாலும் பரிசுகள் தான் முதலில் வழங்கப்படும், அதன் பின்னர் தான் கலை நிகழ்சிகள் ஆரம்பமாகும். எங்கள் பள்ளியில் முதலில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு காரணம், நேரம் செல்லச் செல்ல பிள்ளைகள் அனைவரும் சோர்ந்து விடுவார்கள், குறிப்பிட்ட நேரத்தில், அனைத்து பிள்ளைகளும் அவர்கள் திறமையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் வேறு உள்ளது, எங்கள் பிள்ளைகளின் திறமை எங்களுக்குத் தெரிந்தாலும், உங்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த ஆண்டு விழா நடைபெறுகிறது. மேலும் சிலர் பரிசுகள் பெற்றவுடன் கிளம்பி விடுவதால், எங்கள் செல்வங்களின் திறமையை அவர்கள் காண முடியாமல் போய் விடுகிறது.”
“அதற்காகவே இந்த விழாவில் இப்படி ஒரு மாற்றம் செய்து, ஒவ்வொரு முறையும் நடத்திக்கொண்டு இருகின்றோம், கூடவே எங்கள் பிள்ளைகள் வீடு திரும்பும் போது கண்டிப்பாக ஒரு வெற்றியாளராக, மகிழ்ச்சியுடன் திரும்பவே நாங்கள் விரும்புகின்றோம். நம் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு பரிசு காத்திருக்கிறது. எங்களுக்கு அனைவருமே சமம். அதிகமாக எங்களை நோக்கி நம்பிக்கையுடன் வரும் சிறுவர்கள் ஓரிரு பரிசுகள் அதிகம் வாங்கிச் செல்வார்கள்…”
“மாணவக் கண்மணிகளே, உங்கள் தன்னம்பிக்கையின் அளவே உங்கள் கைகளில் உள்ள பரிசுகளின் அளவாகும். பரிசு குறைவாக உள்ளதே என்று வருந்தாமல், உங்கள் தன்னம்பிக்கையை அதிகரியுங்கள், அடுத்த வருட ஆண்டு விழாவில் உங்கள் கையில் நிச்சயம் பரிசும் அதிகமாகும்”
என்று சொல்ல மாணவர்கள் முதல் பெற்றோர் வரை அனைவரும் கரகோஷம் எழுப்பி அவர்கள் ஆதரவினைத் தெரிவித்தனர். 
கல்வி என்பதையும் தாண்டி, ஒழுக்கம், நேர்மை, அவர்களின் தனிப்பட்ட திறமைகள் என ஒவ்வொன்றிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் இறுதியில், மேடையில் தோன்றிய தொகுப்பாளர்,
“இன்றைய நாள் எங்கள் பள்ளியின் வரலாற்றியில் செதுக்கப்பட்ட அடுத்த ஒரு மைல்கல். ஒவ்வொரு வருடமும் எங்கள் பள்ளி ஒவ்வொரு வகையிலும் முன்னேறிக்கொண்டு இருக்கிறது, அரை நூற்றாண்டை நோக்கிச் செல்லும் எங்கள் பள்ளி புரிந்த சாதனைகள் பலவற்றை எங்க பள்ளிகளின் முதல்வர்கள் சொல்லிக் கேட்டிருப்பீர்கள், அடுத்ததாக, இதுவரை பல்வேறு பரிசுகள் வழங்கி இருக்கின்றோம், ஆனால் இப்பொழுது இரண்டு நபர்களுக்கு பரிசு வழங்க இருகின்றோம். என்னடா இரண்டு நபர்களுக்கு பரிசு வழங்குவதற்கு இவ்வளவு பெருமையா என்று நீங்கள் கேட்கலாம், இவர்களுக்கு வழங்குவதில் எங்களுக்கு நிச்சயம் பெருமையே…”
“ஒவ்வொரு மாணவரிடமும் ஒவ்வொரு தனித்திறமை இருக்கும், சிலர் பாடுவார்கள், ஆடுவார்கள், நன்றாகப் படிப்பார்கள்; சிலர் நன்றாகப் படிப்பார்கள், விளையாடுவார்கள்; சிலர் படிக்கவே மாட்டார்கள், விளையாட்டிலோ, கலைத்துறையிலோ சாதிப்பார்கள்; சிலர் நன்றாக எழுதுவார்கள்; சிலர் நன்றாக நடிப்பார்கள்; சிலர் நன்றாக படம் வரைவார்கள்; ஆனால் நாங்கள் இங்கு பரிசு வழங்க மேடைக்கு அழைக்கும் நபர்கள் இருவரும் அனைத்துப் போட்டிகளிலும் முதல் பரிசு வாங்கியவர்கள். மூன்று பள்ளிகளிலும் பெயர் பெற்றவர்கள் இவர்களின் பெயரைச் சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பதே உண்மை”
“அந்த இரண்டு மாணவச் செல்வங்களையும் மேடைக்கு அன்புடன் அழைக்கின்றோம், அவர்களின் பெற்றோரையும் உடன் அழைக்கின்றோம்.”
சில நிமிடங்களில் ஒரு சிறுமியும், ஒரு சிறுவனும் மேடை ஏறினர்.
இரட்டை ஜடைப்பின்னலில், இரண்டு பக்கமும் குஞ்சம் வைத்துப்பின்னி, மல்லிகை மலர்ச்சரம் சூடி, அழகிய மயில் தோகை விரிந்தது போன்ற பாடுப்பாவாடையில், குட்டி தேவதையென வந்து நின்ற பெண்ணைப் பார்த்ததும் சிவாவின் முகம் யோசனைக்குச் சென்றது.
மேடை ஏறியதும், அங்கிருந்த பெரியவர்களைப் பார்த்து கை கூப்பி அவள் வணக்கம் சொல்ல, பவித்ரா ஒரு நொடி நெகிழ்ந்தே விட்டார். அவள் பாடும் போதே, அவளுடைய குரலில் தன்னைத் தொலைத்திருந்தவர், அவளது செயலில் மேலும் மனம் குளிர்ந்து போனார்.
அவள் பின்னே வந்த சிறுவனைக் கண்ட பவித்ராவும், சிவாவும் ஒரு நொடி அதிர்ந்தே நின்றுவிட்டனர். அவர்களைச் சுற்றி உலகம் ஒரு நொடி தன் இயக்கத்தை நிறுத்தியிருந்தது.
ராகம் இசைக்கும்…

Advertisement