Advertisement

பவித்ராவும், டிரிப்ஸ்சைக் கழட்டி, அவள் குளிக்க உதவி செய்ய, அந்த பெண் படுக்கையை சுத்தம் செய்து, வேறு பெட்டைப் போட்டு தயார் செய்தார்.
அறை முழுக்க எலுமிச்சை நறுமண ரூம் ஸ்பிரே அடித்தவர், குளித்து முடித்து களைத்துப் போய் கட்டிலில் வந்தமர்ந்த சம்யுக்தாவின் அருகில் வந்தார்.
“இப்ப எப்படி பாப்பா இருக்கு?”
“டயர்டா இருக்கு சித்தி”
“இந்த ஆப்பிளை சாப்பிடு, இட்லி ஊத்தி வைச்சு இருக்கேன், போயி பார்த்துட்டு வரேன்”
“சித்தி எனக்கு இட்லி வேண்டாம்… வேற எதாவது செய்து தாங்களேன்”
“சரி பாப்பா… நான் பார்த்துக்கறேன்…” என்றவர் பவித்ராவிடம் திரும்பி,
“ரொம்ப தேங்க்ஸ் மேடம்… டக்குன்னு ஹெல்ப் பண்ணதுக்கு”
“இது என் கடமைம்மா… இதுக்கு எதுக்கு தேங்க்ஸ்…”
“சித்தி, வெளிய சார் இருப்பார், அவரை வரச் சொல்லுங்க”
“நான் சொல்றது இருக்கட்டும், ஒழுங்கா இதை சாப்பிட்டு முடி பாப்பா, இல்லையோ என் அண்ணன் வந்தா என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடும்… இந்த எலுமிச்சை பழத்தை கைல வைச்சுக்கோ, வாந்தி வர மாதிரி இருந்தா நுகர்ந்து பாரு…” என்றவர், பழத்தை அவளது கையில் குடுத்துவிட்டு,
வெளியே எட்டிப் பார்த்து “சார் உள்ள வாங்க, பாப்பா கூப்பிடுது…” என்று சிவாவை அழைத்தார்.
அவர் உள்ளே நுழையவும், மற்றொரு ஆள் தட்டில் இட்லியுடன் உள்ளே நுழைந்தார்.
அதைப் பார்த்ததுமே, “சித்தி பிளீஸ்… இது எனக்கு வேண்டாம்…” என்று அவள் வாயை மூடிக்கொள்ள,
“இப்போதைக்கு ரெண்டு மட்டும் பாப்பா… வயித்துல ஒன்னுமே இல்லை, வயித்துப்பிள்ளைகாரி பட்டினியா கிடக்கலாமா? நான் அப்புறமா, உனக்கு வேற சாப்பாடு என் கையாலேயே செஞ்சு தரேன்…”
“எனக்கு காரமா, புளிப்பா இல்லைன்னா ஸ்பைசியா தான் வேணும்”
அவள் சொல்லச் சொல்லவே,
 “என்னமா சொல்றீங்க? சம்யுக்தா மாசமா இருக்காளா?” என்று பவித்ரா கேட்டார்.
“ஆமாம்மா… இது மூனாவது மாசம்… பேருக்குத்தான் டாக்டர்… மாசமா இருக்கறது கூடத் தெரியலை…” என்றவர்,
“இங்க பாரு பாப்பா… தம்பி போன் பண்ணி அப்பவே சொல்லிடுச்சு… அது சொன்ன மாதிரியே உனக்கு வெங்காயச் சட்னி செஞ்சு கொண்டு வந்து இருக்கேன்”
“சித்தி பிளீஸ்… எனக்கு சான்ட்விட்ச் பண்ணிக் குடுங்க…”
“அதையும் பவித்ரன் தம்பி சொல்லிடுச்சு… தம்பி சொல்லாம சான்ட்விட்ச் செஞ்சு தரக்கூடாதுன்னு”
“இருங்க… நான் கேட்கறேன்…” என்றவள், கட்டிலின் அருகில் இருந்த நைட்லேம்ப் டேபிளில் இருந்து போனை எடுத்து பவித்ரனுக்கு அழைப்பெடுத்தாள்.
“சொல்லு டார்லி…”
“எனக்கு சான்ட்விட்ச் வேணும்…”
“சாப்பிடு…”
“சித்தி நீங்க சொல்லாம செய்ய மாட்டாங்களாம்”
“சரி அவங்ககிட்ட குடு”
“இந்தாங்க சித்தி, உங்ககிட்ட பேசறாராம்”
“சொல்லுங்க தம்பி”
“அத்தை, அவளுக்கு சான்ட்விட்ச் செஞ்சு குடுங்க, பட் இட்லி சாப்பிட்டு, டேப்லட் சாப்பிட்டு முடிச்சு ஒரு ஒரு மணி நேரம் கழிச்சு…”
“சரிங்க தம்பி” என்றவர் புன்னகையுடன் சம்யுக்தாவிடம் நீட்ட,
“தேன்க்யூ… லவ் யூ சோ மச்…” என்று சம்யுக்தா சொல்ல,
“உனக்கு சான்ட்விட்ச் செஞ்சு குடுப்பாங்க, பட் இட்லி சாப்பிட்டு, டேப்லட் சாப்பிட்டு முடிச்சு ஒரு ஒரு மணி நேரம் கழிச்சு…”
“அதெல்லாம் முடியாது…”
“நோ வே…” என்றவன் “பை… டேக் கேர்…” என்று சொல்லி போனை அணைக்க,
“என்ன பாப்பா இட்லி சாப்பிடறியா?”
“குடுங்க…” என்றவள் தட்டை வாங்கிக்கொண்டு, சிவாவையும் பவித்ராவையும் பார்த்தாள்.
இருவர் முகத்திலும் லேசாக அதிர்ச்சி தெரிய,
“என்ன மேடம்? பையன் சொன்னது சரியா இருக்குமோன்னு யோசிக்கறீங்களா? இல்லை புருஷன் வெளிநாட்ல இருக்கும் போது, இவ எப்படி கர்ப்பம்ன்னு நினைக்கறீங்களா?”
“என்ன பேச்சு இது பாப்பா?”
“சித்தி இவங்க யாருன்னு கேட்டீங்கள்ல? நேத்து நான் போனதே இவங்க வீட்டுக்குத்தான்”
“இதை ஏன் பாப்பா நீ முன்னாடியே சொல்லல? ஏன் சார்? உங்க பையன் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான்? எங்க பொண்ணு மேல அபாண்டமா பழி சொல்லி இருக்கான். என் கண் முன்னாடி உங்க பையன் மட்டும் இருந்தா, இந்நேரம் பேசின நாக்கை அறுத்திருப்பேன்”
“சித்தி… பிளீஸ்… கோபப்படாதிங்க…”
“என்ன பாப்பா இவங்களுக்கு தெரியும், நம்ம குடும்பத்தைப் பத்தி? இல்லை உன்னையும் நம்ம பவித்ரன் தம்பியையும் பத்தி தான் தெரியுமா? ரிக்கி தம்பி கூட சேர்த்தி வைச்சு பேசி இருக்கானே… அவனுக்கு ரிக்கி பத்தி என்ன தெரியும்? இல்லை பிரித்விங்கறது யாருன்னு தெரியுமா?”
“சித்தி…”
“நீ சும்மா இரு பாப்பா, சார்… இப்பையும் எனக்கும் அண்ணனுக்கும் இந்த விசயத்துல கோபம் தான். ஆனா பவித்ரன் தம்பி, என் பொண்ணு சொன்ன மாதிரி நான் பேசிக்கறேன்னு சொல்லிடுச்சு, அண்ணனை தலையிட வேண்டாம்ன்னு சொல்லிடுச்சு”
“சித்தி… போதும் விட்டுடுங்க… நம்ம வீட்ல இருக்காங்க…”
“நீ சும்மா இரு பாப்பா… நேத்து போனை தூக்கி போட்டானாமே இவங்க புள்ள, அது கொஞ்சம் கீழ இறங்கி உன் மேல பட்டு இருந்தா, உன் வயித்துல வளர்ற இந்த வீட்டோட வாரிசைப் பத்தி நினைச்சியா? எப்ப பாரு அடுத்தவங்களைப் பத்தியே யோசிக்கறதை கொஞ்சம் நிறுத்து… இப்ப நீ சாப்பிடு…” என்றவர்,
“சார்… நீங்க கிளம்புங்க… அண்ணா வர்ற நேரம்… இன்னும் பத்து நாள்ல நாங்க ஊருக்கு கிளம்பனும்… அவர் உங்களைப் பார்த்தா கண்டிப்பா டென்ஷன் ஆவாரு… ஹார்ட் பேசன்ட் வேற, நீங்க கிளம்புங்க…” என்றவர்,
சம்யுக்தாவின் பக்கம் திரும்பி,
“பாப்பா… இட்லி சாப்பிட்டு மாத்திரை போடனும், பத்து நாளைக்கு என்னைப் படுத்தாத… அதுக்கு அப்புறம் தம்பியாச்சு… நீயாச்சு… உங்கத்தையாச்சு… இல்லைன்னா உங்கம்மாவாச்சு…”
“இந்த கர்ப்பம் ஒரு வருசத்துக்கு முன்னாடியே ஆகி இருந்தா பரவால்ல”
“ஏன் பாப்பா?”
“ஊருக்கு போனா, அங்க ஒரு ஊரே என்னை கொடுமை படுத்தும், இங்கைன்னா மாமாவையும், உங்களையும் ஓப்பியடிச்சே பெத்துக்கிட்டு இருப்பேன்…”
“நீ வேற பாப்பா.. இங்க தோளுக்கு மேல வளர்ந்த பையன் இருக்கறப்ப கர்ப்பமா?ன்னு கேள்வி கேட்க ஊரே வரும், அதுக்கு இது எவ்வளவோ பரவால்ல…” என்றவர்,
“சார்.. மேடம்.. பிளீஸ் கிளம்புங்க” என்று சிவாவையும் பவித்ராவையும் விரட்டிக்கொண்டு இருந்தார்.
“என்ன சித்தி நீங்க? பேச்சை மாத்தினாலும் அவங்களை விரட்டரதுலேயே குறியா இருக்கீங்க?”
“நீ பேசாத பாப்பா…”
“சார்… மேடம்… சாரி… என்னோட சின்ன ரெக்வஸ்ட்… இந்த குழந்தைக்கு என் புருஷன் தான் அப்பா… சோ அதை கொச்சை படுத்தி உங்க குடும்பத்துல யாரும் பேசிடாதிங்க பிளீஸ்…”
“சாரிம்மா… நாங்க சூழலை சரி பண்ண வந்தோம்… எப்ப உன்னை மானவ் வீட்டை விட்டு விரட்டினானோ? அப்பவே நாங்க அவனை நம்ம வீட்டை விட்டு வெளிய அனுப்பிட்டோம்… நீ உள்ள வர்ற வரைக்கும் அவனுக்கு அந்த வீட்டுக்குள்ள வர அனுமதி இல்லை…”
“இங்க பாரு சம்யுக்தா… நான் என்னிக்குமே உன்னை சந்தேகப் படலை… படவும் மாட்டேன்… உன்னை சந்தேகப் படறது, என்னை சந்தேகப்படறதுக்கு சமம்… என்னைப் பொறுத்த அளவுல..”
“உடம்பை பார்த்துக்கோ, தம்பி வந்ததும் போன் பண்ணு, நாங்க அவர்கிட்ட நேர்ல மன்னிப்பு கேட்கனும், இப்ப நாங்க கிளம்பறோம்மா…” என்ற சிவா,
“போலாம்மா பவிம்மா?” என்று பவித்ராவிடம் கேட்க,
“போலாங்க… வர்றோம்மா… பத்திரமா இரு…” என்றவர் சிவாவுடன் கனத்த மனதுடன் வெளியேறினார்.
அடுத்த பத்து நாட்களும், பத்து யுகமாகக் கழிய ஆரம்பித்தது, பெரியவர்கள் இருவருக்கும்.
பள்ளியில் சிறியவர்கள் முகம் குடுத்து பேச மறுத்தனர், ஆசையாக பவித்ரா சம்யுக்தாவுக்கு செய்து அனுப்பும் உணவுகளைக் கூட, பரத் திருப்பி அனுப்பி இருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் மனிஷா சம்யுக்தாவைக் காண முயற்சி செய்து கொண்டு இருந்தாள்.
சம்யுக்தாவோ அவளுடைய போன் காலை அட்டென்ட் செய்யவும் இல்லை, வீட்டிற்கு வந்தவளை சந்திக்க விரும்பவும் இல்லை.
பெரியவர்கள் குழப்பம் சிறியவர்களை சிறிதும் அசைத்துப்பார்க்க வில்லை. படிப்பு, பள்ளி, வீடு என்று பழகிக்கொண்டனர்.
மற்றொரு பக்கம், மானவ் தான் சம்யுக்தா மீது அதிக கோபத்தில் இருந்தான்.
பெரியவர்களின் ஏக்கம் மானவ் மீது கோபமாகத் திரும்ப, அவனுக்கு ஏற்கனவே சம்யுக்தாவின் மீது இருந்த கோபமும், வெறுப்பும் கூடிக்கொண்டே போனது.
மறுநாள் கனடா கிளம்புவதற்கு அனைத்தும் ஏற்பாடாகி இருக்க, சம்யுக்தா பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செல்ல விருப்பப்பட்டாள்.
பரத் அனைவரையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்குச் சென்றார்.
அன்று சிறப்பு நாளாக இருக்க, கோவிலில் கூட்டம் அதிகம் இருந்தது. ஒருவாறாக சாமி கும்பிட்டு முடித்து கூட்டத்தோடு கூட்டமாக அனைவரும் வெளியே வர, சர்வேசையும், ஜுவாலாவையும் காணவில்லை.
“மாமா பசங்களைக் காணோம்”
“இங்க தான் இருப்பாங்கம்மா… இரு பார்ப்போம்”
“என் கூடத்தான் வந்தாங்க…”
“இரும்மா பார்ப்போம்… நீ கார்ல உட்கார்… நான் போயி பார்க்கறேன்…”
“இல்லை மாமா.. நானும் வர்றேன்…”
“இருவரும் கோவில் முழுக்க அலசியும் குழந்தைகள் கிடைக்காமல் போக, 
சம்யுக்தா அழுது கொண்டே பவித்ரனுக்கு அழைப்பெடுத்தாள்.
“ஹலோ…”
“எங்க இருக்கீங்க?”
“சென்னை…”
“என்னங்க… பசங்களைக் காணோம்…”
“என்ன?”
“ஆமாங்க… பசங்களைக் காணோம்… இங்க நானும்… மாமாவும் தேடி பார்த்துட்டோம்…”
“டென்சன் ஆகாத… அங்க தான் இருப்பாங்க… சர்வா இருக்கான்… கொஞ்சம் பொறுமையா இரு… அவன் சமாளிச்சுப்பான்…”
“இல்லைங்க… எனக்கு பயமா இருக்கு…”
“நீ பொறுமையா இரு… நான் பசங்களைக் கண்டு பிடிக்க, ஏற்பாடு பண்றேன்…”
“அப்பா எங்க?”
“உள்ளத் தேடப் போயி இருக்காங்க”
“சரி.. நான் அப்பாக்கு கால் பண்றேன்… நீ இந்த மாதிரி நேரத்துல டென்ஷன் ஆகக் கூடாது…”
“சரிங்க…”
போனை அணைத்தவள் மனமோ ஆற மறுத்தது, பிள்ளைகளை எண்ணிக் கலந்கியவள் மனதில் தானாக மானவின் கோப முகம் வந்து நிற்க, அங்கிருந்த கால் டேக்ஸி ஒன்றை அணுகியவள், சிவாவின் வீட்டை நோக்கி பயணமானாள்.
வீட்டின் முன் இருந்த புல்வெளியில் குழந்தையுடன் மானவ் விளையாடிக்கொண்டு இருந்தான்.
“பால் போடு… தனு அப்பாக்கு பால் போடு…” என்று மானவ் கேட்டுக்கொண்டு இருக்க,
குழந்தை சிரித்துக்கொண்டு பாலைப் போடாமல் போக்கு காட்டி விளையாடிக்கொண்டு இருந்தது.
குழந்தையுடன் அவன் லயித்து இருக்க,
கதவைத் திறந்து கொண்டு ஆவேசத்துடன் சம்யுக்தா அவனை நோக்கி வந்தாள்.
“எங்கடா என் பசங்க? எங்க என் பசங்க? என்ன பண்ண அவங்களை?” என்று அவள் ஆவேசத்துடன் அவனுடைய சட்டையைப் பிடித்து உலுக்க, மனிஷா, சிவா, பவித்ரா, நித்யா அனைவரும் அவளை நோக்கி வந்தனர்.
“என்னம்மா? என்னாச்சு?” என்று பவித்ரா கேட்க,
மனிஷா சம்யுக்தாவைப் பிடித்துக் கொண்டு, “சம்யுக்கா… ரிலாக்ஸ்…” என்று சொல்லிக்கொண்டு இருக்க,
சிவாவும், நித்யாவும், இருவரையும் பிரிக்க, முயற்சி செய்து கொண்டு இருந்தனர்.
“எங்கடா? என்ன பண்ண அவங்களை? பிரச்சனை உனக்கும் எனக்கும் தானே? என் பிள்ளைங்களை என்ன பண்ண?” என்று சம்யுக்தா கேள்வி கேட்பதை நிறுத்தவில்லை.
“இங்க பாரு உன் பசங்களைப் பத்தி எனக்குத் தெரியாது… நான் ஒன்னும் பண்ணலை”
“பொய் சொல்லாத, அன்னிக்கு இதே வீட்டு வாசல்ல தான சவால் விட்ட, எண்ணி பத்தே நாள்ல என்னை பழி வாங்கறேன்னு? எங்க என் பசங்க?”
“நிஜமா உன் பசங்களைப் பத்தி எனக்குத் தெரியாது, மோதுனா நேருக்கு நேராவே மோதுவேன்… பிள்ளைங்களை எல்லாம் கடத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.”
“சம்யுக்தா? என்னசும்மா பிள்ளைங்களுக்கு?”
“பசங்களைக் காணோம்… காணாம போக சின்ன பிள்ளைங்க இல்ல அவங்க, இந்த ஊர்ல என்னை எதிரியா நினைக்கறது இவன் மட்டும் தான்…” என்று அவனது சட்டையைப் பற்றி மேலும் அவனை உலுக்கியவள், அழுது கொண்டே அவனது சட்டையில் இருந்து கையை எடுத்துக்கொண்டு கீழே அமர்ந்தாள்.
“என்னது என் பேரப் பிள்ளைங்களைக் காணோமா? பிள்ளையாரப்பா… என் பேரனையும் பேத்தியையும் எங்க இருந்தாலும் எங்கிட்ட பத்திரமா கொண்டு வந்து சேர்த்துடுப்பா…” என்று பவித்ரா அழ,
“சம்யுக்தா முதல்ல அழறதை நிறுத்து… எப்ப இருந்து காணோம்? எங்க இருந்து காணாம போனாங்க” என்று சிவா கேட்க,
“கோவில்ல இருந்து காணோம் ப்பா… முழுக்க முழுக்க நானும் மாமாவும் தேடிட்டோம்… எங்க கூடத்தான் வந்தாங்க… ஆனா காணோம்…. அவங்களா அப்படித் தொலைஞ்சு போக மாட்டாங்க… இவன் தான் ஏதோ பண்ணிட்டான்.. அவங்கிட்ட கேட்டு சொல்லுங்க? என் பிள்ளைங்க எங்கைன்னு?”
“இங்க பாருங்க சம்யுக்கா… நீங்க இந்த மாதிரி நேரத்துல இவ்ளோ டென்சன் ஆகக் கூடாது… எப்படியும் கண்டு பிடிச்சிடலாம்…”
“பரத் எங்கம்மா இருக்கார்?”
“கோவில்லப்பா…” என்று அவள் அழ,
நித்யா குடிக்க தண்ணீர் கொண்டு வந்து தந்தார்.
“இதைக் கொஞ்சம் குடிம்மா… எல்லாரும் இருக்கோம்ல…”
அனைவரும் அவளைத் தாங்க, அதில் மானவ் கோபமடைந்தாலும், அவள் அழுததைப் பார்த்து, அங்கிருந்து சந்தோசத்துடன் அவுட்டவுசிற்குள் நுழைந்தான்.
சம்யுக்தா சற்று சமாதானமாக, சிவா பரத்தை செல்லில் அழைத்தார்.
“ஹலோ…”
“சிவா பேசறேன், சம்யுக்தா என் வீட்ல இருக்கா”
“நல்லது… அவளைக் காணோமேன்னு நான் தேடிக்கிட்டு இருக்கேன், அவ போனையும் எடுக்கல”
“பசங்களைப் பத்தி ஏதாவது தகவல் கிடைச்சதா?”
“அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்… சம்யுக்தா போனுக்கு நான் ஒரு அட்ரெஸ் மெசேஜ் பண்ணி இருக்கேன், அங்க அவளை உடனே வரச்சொல்லுங்க… அங்கதான் பசங்க இருக்காங்க…” என்றவர் போனைக் கட் செய்து விட,
“சம்யுக்தா… உன் போனுக்கு பரத் ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கார், அந்த அட்ரெஸ்ல தான் பசங்க இருக்காங்களாம்.”
அடுத்த நொடி சம்யுக்தா வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல வீட்டின் வெளியே நின்ற கால் டாக்சியை நோக்கி ஓடினாள். அவள் பின்னாலேயே மனிஷா செல்ல,
சிவா பவித்ராவுடன் அவரது காரில் புறப்பட்டார்.
அந்த அட்ரெஸ்சில் வந்திறங்கி, அந்த பங்களாவினுள்ளே அவள் ஓட, மனிஷா காரிலிருந்து இறங்கி அவள் பின்னாலேயே சென்றாள்.
வேகமாக உள்ளே ஓடி வந்தவள், அங்கு ஹாலில் இருந்தவனைப் பார்த்ததும் அப்படியே அதிர்ந்து போய் நின்றாள்.
பான்ட் பாக்கெட்டில் கையை விட்டுக்கொண்டு நடு ஹாலில் பிரித்வி நின்று கொண்டிருந்தான்…
சம்யுதாவின் இதழ்கள் மெல்ல திறந்து “பி..ரி..த்..வி…” என்று உரைக்க,
“வர வைச்சுட்டனா?” என்று அவன் புன்னகையுடன் கண்களைச் சிமிட்டி கேட்டு முடிக்க,
சம்யுக்தாவின் பின்னால் வந்த மனிஷாவும் அவனைக் கண்டு அதிர்ந்து நின்றாள்.
ராகம் இசைக்கும்…

Advertisement