Advertisement

சில மணி நேரத்தில் ஹார்பருக்கு வந்து இறங்கினான் முகிலன்.. வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் கம்பீரமாக கட்டுக்களையாத உடல்கட்டுடன் வந்து இறங்கியவனை செல்வம் ரசித்துப் பார்த்தான்… முன்பெல்லாம் முகம் இறுகி இருக்கும்.. ஆனால் இப்பொழுதெல்லாம் இதழ்களில் புன்னகை உறைந்திருக்கும்… 
               செல்வத்தை பார்த்து புன்னகைத்தவாறே ஆஃபீஸ்க்கு சென்றவனுக்கு,  வீடியோ கால் வர அதைப் பார்த்தவனின் முகம் மென்மையாக புன்னகைத்தது.. இது அவனின் செல்லக்குட்டி அல்லவா… அவன் போனை ஆன் செய்ததது தான் தாமதம்…. படபடவென தவுசண்ட் வாலா பட்டாஸாய் வெடிக்க ஆரம்பித்து விட்டாள்.. 
     
               “எல்லாம் உங்களால தான் பெரிப்பா… இந்த மீசைக்கிழவன் தொல்லை தாங்கலை… என் மருமகன் இப்படி… என் மருமகன் அப்படின்னு அப்பாவை பத்தி பேசிப்பேசியே எனக்குத் தலைவலியை வர வைக்கிறாரு.. இதுல மீசையை வேற முறுக்கி விட்டுக்கிட்டு… நல்லா கெடா மீசைக்காரு எனக்குப் புடிக்கவே இல்லை பெரிப்பா.. என்னை இப்போ வந்து கூட்டுப் போறீங்களா? இல்லையா?… இல்லை.. இல்லை நான் சிம்மா அண்ணாகிட்டையே சொல்லிடறேன்… வந்து கூப்பிட சொல்லி… நீங்க ஒன்னும் வர தேவையில்லை… நீங்க அந்த ஹார்பரையே கட்டி அழுவுங்க.. போங்க உங்க பேச்சு கா”  என முகிலன் பேசுவதற்கு சிறிதளவு கூட இடம் கொடுக்காமல் போனை வைத்து விட்டாள் பிரணவீகா.. 
              பதினைந்து வயது பாவையவள்.. வீட்டில் எல்லாருக்கும் சின்னவள் என்பதால் இவள் மீது எல்லாருக்குமே ப்ரியம் அதிகம்… 
             போனை பார்த்தவனின் இதழ்கள் அழகாக விரிந்தது… அவனுக்கு எப்பொழுதும் பிரணவீ ஸ்பெஷல்.. அவரின் ஆச்சியை உரித்து வைத்திருந்தாள்.. இவளின் ஆளுமை பேச்சுத்திறன் என அனைத்தும் தமயந்தி தான்… 
             மாணிக்கமும் சண்முகமும் “என்னை பெத்தவளே” என ஒரு வார்த்தை சொன்னால் போதும் எங்கிருந்தாலும் தாத்தா என இருவரையும் கட்டிக் கொள்வாள்..அந்தளவிற்கு அனைவருமே இவளின் மேல் உயிரையே வைத்திருந்தனர்.. 
               பத்து வயதிலே அந்த வீட்டிலே அல்லி ராஜ்ஜியமே நடத்த ஆரம்பித்து விட்டாள்…  அந்த வீட்டிலே பெருங்கவலை என்றால் இன்னும் ப்ரணவீ வயதுக்கு வராதது தான்.. 
                 அப்பொழுது தான் ஹார்பரில் நுழைந்தான் நரசிம்மன்… எல்லாரும் சிம்மா என அழைக்கப்படுபவன்.. முகிலனுக்கு உதவியாக ஹார்பரை பார்த்துக் கொள்பவன்.. இவனுக்கு வாய் பேசுமோ இல்லையோ கை நன்றாகவே பேசும்… 
              ஆல்பர்ட்டுக்கு என்றும் சிம்மாவை நினைத்து பெருமையே.. தன் தந்தை போல் இருப்பதால் சற்று மரியாதையாக தான் பேசுவான்.. 
                எதிர்ப்பட்ட அனைவரின் வணக்கத்தை ஏற்று கொண்டபடி… நேராக சென்றது முகிலனின் அறைக்குத் தான்… நேற்று எக்ஸ்போர்ட் பண்ணிய கணக்கு வழக்குகள் அனைத்தையும் துல்லியமாக ஒப்படைத்தவன்… அதை சஷ்டிக்கு மெயில் அனுப்பி விடுவான்..
               சஷ்டி எம்.கே.. குரூப்ஸ் ஆப் கம்பெனியின் சீப் ஆடிட்டர்….  முகிலன் படிப்பிலோ வேலையிலோ தலையிடுவதே இல்லை.. அது அவர்களின் விருப்பம் என்று விட்டான்… 
                 அவனின் கணக்கு வழக்கையெல்லாம் சரி பார்த்தவன்.. “எப்போ பார்த்தாலும் யாரையாவது அடிக்கிறீயாம்.. கம்ப்ளெட் வருது..” என்ற சற்று குரலை கடினமாக்கி கேட்ட முகிலனை பார்த்து சற்று தலை குனிந்தவாறே “எந்த பக்கி பண்ணாடையோ…. போட்டுக் கொடுத்துடுச்சி போல” என முணங்கியவனை.. 
               “இல்லை… பெரிப்பா… அது வந்து” என இழுத்தவனை கண்டிக்கும் பார்வை பார்த்தவன்.. 
              “டக்குன்னு கையை நீட்டுறது உன் வயசுக்கு நல்லது இல்லை சிம்மா”… “ம்ம் சரி பெரிப்பா” என நல்ல பிள்ளை போல் தலையாட்டியபடி சிறிது தூரம் சென்றவனை… “சிம்மா” என்ற குரலில் டக்கென திரும்பியவனை.. “அந்த பக்கி பண்ணாடை உங்கப்பா தான்”… என்றதும் டக்கென நாக்கை கடித்து ஒரு கண்ணை மூடியவாறே வெளியே சென்றவனை பார்த்து இதழில் புன்னகை தான் வந்தது…
                “அவங்கப்பனுக்கு அப்படியே நேர்மாறா வந்து பொறந்துருக்கான்… இவனுக்கெல்லாம் அவ அம்மா தான் கரெக்ட்” என்றவன் சிறிது நேரத்தில் திருநெல்வேலியை நோக்கி வண்டியை விட்டிருந்தான்.. 
           
                 சில மணி நேரத்தில் வேலையை முடித்த நரசிம்மா… நேராக சென்றது தூத்துக்குடி கோர்ட் வளாகத்தில்.. தன் டூகாட்டியை நிப்பாட்டி உள்ளே செல்ல முயன்றவனுக்கு… சப்பென அறையும் சத்தத்தில் திரும்பி பார்த்தான்… 
                கேடி வக்கீல் என அனைவராலும் அழைக்கப்படும் கிருத்திகா தேவி… ஒன்றரை வருடங்களாக வக்கீலாக பணிபுரிகிறாள்.. எடுத்த முதல் கேஸில் தன்னை விட சீனியரை திறமையாக வாதாடி… அனைவரின் பாராட்டையும் பெற்றவள்.. 
                தந்தையின் கோபத்தையும் தாயின் அழகையும் கொண்டு பிறந்தவள்.. இன்று நடந்த கேஸில் ஆளுங்கட்சிகாரனின் கையாளை ஆதாரத்துடன்  ஜெயிலுக்கு  அனுப்பி வைத்து விட்டாள்… அதனால் தரக்குறைவாக பேசிய கட்சிக்காரன் ஒருவனை சப்பென அறைந்திருந்தாள்… 
                “ஆரம்பிச்சிட்டாடா” ஆனாலும் இந்த பெரிப்பாக்கு ஏன்தான் இவ்ளோ ஓரவஞ்சனையோ??? இதுங்க யாரை அடிச்சாலும் கேக்குறதில்லை… தப்புன்னு தெரிஞ்சா டக்குன்னு கையை நீட்டுது.. காலையில அந்த பிசாசு ஒரு குடிகாரனை  போட்டு அடிச்சிட்டு  இருந்தா… இப்ப இவ …. நம்ம கையை நீட்டுனா எங்கயிருந்தாவது நீயூஸ் போனா பத்து நிமிஷம் அட்வைஸ் பண்ணி காதுல ரத்தம் வர வைக்குறாரு… ஓஹ். மை காட்” என்று புலம்பினாலும் கிருத்தி என்ன பண்ணுகிறாள் என வேடிக்கை தான் பார்த்தான்.. 
                “என்னடா சொன்ன??.. ஹான் சின்ன பொண்ணுன்னு பாக்குறேன் இல்லை செதைச்சிருவீய்யா??”… என் மேலே கை வைச்சி பாருடா??”.. அப்போ தெரியும் நான் யாருன்னு வந்துட்டான் அண்டாவுக்கு சட்டை போட்ட மாதிரி”… என சற்றும் பயம் இல்லாமல் எகிறியவளை, அடிக்க செல்வதற்குள், 
                அந்தக் கட்சியை சேர்ந்த நாலைந்து பேர் அவனை இழுத்து சென்றனர்.. “ஏம்ல ஆக்கங்கெட்ட கூவ.. வரைமொறை தெரியாம… அவ மேலே கை வைக்கப் போற??”… 
            “ஏன் அவ அவ்ளோ பெரிய ஆளா??”… என அப்போதும் அடங்காமல் எகிறியவனை, 
               “ம்ம… நீ சொன்னாலும் சொல்லாட்டியும்… அவ பெரிய ஆளுதாண்டி.. இவ்ளோ பேர் இருக்கோமே… அவகிட்ட கூட போகாம ஏன் நிக்கிறோம்ல.. முகிலன் அண்ணாச்சி பொண்ணுல அது.. அந்த நரசிம்மன் உனக்கு கட்டம் கட்டிட்டான்னு நெனைக்கிறேன்.. அங்க பாரு.. என கை நீட்டிய திசையில் பார்த்தவனுக்கு அள்ளு கிளம்பியது.. 
             நரசிம்மன் இவனை நோக்கி தான் வந்து கொண்டிருந்தான்.. அவனின் நல்ல நேரம் அதற்குள் கிருத்திகா நேரே வந்தவள்… சிம்மு வீட்டுக்கு போகலாம்.. இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு இவன்கிட்ட மோதுறதுக்கு போறா.. அவன் கிடக்கான் சல்லிப்பய… நீ வா.. கை கோர்த்து அழகாக கூப்பிட்டு சென்றாள்… தன் தம்பியை…
              திருச்செந்தூர் நோக்கி செல்லாமல் டூகாட்டி நேராக திருநெல்வேலியை நோக்கி செல்ல.. கிருத்தி ஒரே ஹாப்பி.. 
                  கொழும்புவில்  எப்பொழுதும் போல்  காலையில் மகன் ஆபீஸ் செல்வதை பார்ப்பதற்காக அமர்ந்திருந்த காயத்ரி நிமிடத்திற்கு ஒரு முறை வாசலையும் லிப்டின் கதவையும் மாறி மாறி பார்த்தார்… இவன் இறங்கி வருவதற்குள் அவன் வர வேண்டுமே.. என மனதுக்குள் நினைத்தவாறே இஷ்ட தெய்வமான அம்மனை வேண்டி திரும்பி பார்த்தவரின் நெஞ்சில் பாலை வார்த்ததுபோல் வந்து நின்றான் சர்வானந்த்.. 
             ” சர்வா” என அழைக்கப்படுபவன்… காயத்ரி தன் சொந்த மகனாக நினைப்பவன் அவனுக்கு ஒரு தங்கை மட்டுமே ப்ரியம்வதா… இருவரும் அவ்வளவாக பேசிக் கொள்வதில்லை.. கட்டுப்படுத்த அனைவரும் திணறும் ஒருத்தனை தன் சிரிப்பால் கட்டிப்போடுபவன்.. 
               “குட்மார்னிங் ம்மா”… 
              “குட்மார்னிங் டா”.. என சற்று கலங்கிய குரலில்  சொன்னவரின் இரு கரங்களையும் பிடித்தவாறே, 
               “என்னாச்சி ம்மா.. அண்ணா ஏதாவது சொன்னாரா??”.. என்றவனைப் பார்த்து “இல்லை” என தலையாட்டியவர்… 
               “அவன் ரொம்ப ஒரு மாதிரியா இருக்காண்டா… என்னால பாக்க முடியல.. யார்கிட்டையும் பேசவே மாட்டிக்கிறான்.. யார் பேசினாலும் அவன் அக்னி பார்வையாலேயை எரிச்சிறான்… சரியா தூங்கவே மாட்டேங்குறான்… கல்யாணமாவது பண்ணி வைக்கலாம்னு பார்த்தா கொஞ்சங்கூட பிடிகொடுக்க மாட்டேங்குறான்”என தன் கவலையெல்லாம் தன் வளர்ப்பு மகனிடம் சொல்ல.. 
             “ஒன்னும் ஆகாதும்மா… நான் பார்த்துக்கிறேன்” என ஆறுதல் சொல்லியவன்…  நேராக மேலே செல்ல பார்க்க அதற்குள் லிப்ட் திறந்தது.. இருவரின் கவனமும் லிப்ட்டின் அருகில செல்ல… கோர்ட் சூட்டில் கம்பீரமாக ஆணவமும் திமிரும் கலந்து வந்து கொண்டிருந்தான்…
               அக்னி என அழைக்கப்படுபவன்… தொழில் வட்டாரத்தில் அனைவரையும் தன் கண் பார்வைக்கே அடிபணிய வைப்பவன்.. அவன் ஒருவனிடம் சாந்தமாக பேசுகிறான் என்றால் அது சர்வா தான்… 
              “குட்மார்னிங் அண்ணா” என்றவனுக்கு தலையாட்டல் மட்டும் தான் குட்மார்னிங் சொன்னது… ஆனாலும் சின்ன சிரிப்புடனே… டைனிங் டேபிள் போய் அமர… இருவருக்கும் பரிமாறிய காயத்ரி.. 
    
             காயத்ரி திருநெல்வேலியில் உள்ள தென்காசியை பூர்வீகமாக கொண்டவர்.. பெற்ற மகனை தம்பி என அழைக்கும் ஒரு சிலருக்கு இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.. காயத்ரியும் அவ்வழக்கத்தில் உள்ளவர்.. 
              ஒரு சில காரணங்களால் இருபது வருடத்திற்கு முன்பு இங்கு வந்து சிறிய அளவில் தொழிலை ஆரம்பித்தவர்.. அக்னி வளரும் வரை சாதாரணமாக சென்ற தொழிலை பதினோரு வருடத்தில் தன் அசுரத்தனமான உழைப்பால் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருந்தான்.. அக்னி..
             அந்த உழைப்பு தந்த திமிரும் ஆணவமும் அவனை பேரழகனாக காட்டியது…
               “தம்பி” என்றதும் தலையை நிமிர்த்தி பார்த்தவனைக் கண்டு உள்ளுக்குள் திகிலடித்தாலும்… 
              “நான் இண்டியா போகலாம்னு இருக்கேன்” என்றவரின் பயம் கலந்த தயக்கமாக வந்த வார்த்தை எதுவும் அவன் கவனத்திற்கு வரவில்லை..
               “ஏன்” என்ற தெறித்து வந்து விழுந்தன வார்த்தைகள்… 
               காயத்ரி சர்வாவிற்கு “ஹெல்ப் பண்ணுடா” என்று கண்ணை காட்டியதும்.. 
                 ” என்னண்ணே இப்படி சொல்றீங்க.. அம்மாவோட பெரிய வேண்டுதலே உங்களுக்கு கல்யாணம் ஆகணும்ங்கிறது தான்.. 31 வயசாயிடுச்சி இன்னமும் நீங்க கல்யாணம் பண்ணாம இருந்தா அம்மா கவலைப்படாம இருப்பாங்களா??… அம்மா மட்டுமா கவலைப்படுறாங்க…. எனக்கு இருபத்தி எட்டு வயசு ஆகுது… நீங்க எப்போ கல்யாணம் முடிச்சி அப்புறம் நான் எப்போ கல்யாணம்  பண்ணி.. புள்ளை குட்டின்னு பொறந்து படிக்க வைக்கிற ப்ராசஸ் இறங்குறது…. சோ.. சேட்” என்றவனை தீப்பார்வை பார்த்தவன்… 
                “கல்யாணம் மனசுக்கு எவளோ புடிக்குதோ அவ கூட தான் நடக்கணும்… நீங்க சொல்றீங்க அப்படிங்குறதுக்காக என்னால கல்யாணம் பண்ண முடியாது மாம்… சாரி மாம்… நீங்க இண்டியா போக எல்லா அரெஞ்ஜ்மெண்டும் நாளைக்கு காலையில ரெடியா இருக்கும்.. ” என்றவன் வேகமாக எழுந்து செல்ல சர்வா பிளைட்டை தூக்கிக் கொண்டு பின்னாடியே ஓடினான்… 
                  அவன் ஓடி வருவதை பார்த்தவன் அவனையும் பிளேட்டையும் மாறி மாறி பார்த்தான்.. அவன் பார்வையிலையே புரிந்து விட்டது.. “இப்படித்தான் மீட்டிங் வர்றீயா” என கண் பார்வையை உணர்ந்தவன்…
            .  ஹ்ஹ்ஹிஹிஹி என்ற பல்லை காட்டியவாறே    “இல்லைண்ணா பிளேட் வைச்சிட்டு வந்துர்றேன்… என வேகமாக டைனிங் டேபிளில் ஓடிச்சென்று அவசர அவசரமாக எல்லாத்தையும் வாயில் அள்ளி போட்டவனை காயத்ரி “மெதுவாடா… இந்தா தண்ணீ” என்றதும் ஒரே மடக்கில் அனைத்தையும் குடித்தவன்… 
               “போய்ட்டு வர்றேன் ம்மா.. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க… அண்ணா யாரையோ லவ் பண்றாங்க.” என்றதும் அதிர்ச்சியில் காயத்ரியின் கண்கள் விரிந்து பார்த்தவரை… 
            “ஆமாம்மா.. உண்மையா… அண்ணாவோட செல்லுல ஒரு வீடியோ இருக்கு.. அந்த பாட்டு அண்ணா ரொம்ப டிப்ரஷன் ல இருக்கும் போது கேட்பாரு.. பாட்டு கேக்குறாருன்னு நினைச்சேன்.. ஆனா அது இல்லை.. அவரு அந்த வீடியோவுல இருக்கிற பொண்ணைத் தான் காதலிக்கிறாரு”.. 
          “உனக்கு எப்படித் தெரியும்???”.. என வாய் திறப்பதற்குள் “சர்வா” என்ற கர்ஜனையில் ஓடியே விட்டான்… 
                மீட்டிங் செஞ்ச சில மணி நேரத்தில் ப்ராஜெக்ட் வி.கே.. குரூப்ஸ்க்கு கிடைத்தது.. சிலர் பொறாமைப்பட்டாலும் சிலர் உண்மையாக வாழ்த்து சொன்னபவர்களுக்கெல்லாம் அளவான புன்னகையே பதிலாக கொடுத்தான்… அதுதான் இவன்… இவன் சிரித்து இதுவரை யாருமே பார்த்ததில்லை… காயத்ரி உள்பட.. 
            நெஞ்சில் பழிவெறியை சுமந்து கொண்டிருந்தவனால் சிரிக்க முடியவில்லை… எல்லார் முன்னாடியும் சாதாரணமாக முகத்தை வைத்திருந்தாலும்… அவனின் நெஞ்சில் இருக்கிற ஆறா வடு அது.. பகைவன்​ இரத்தத்தை பார்த்த பின்பே ஆறும்… 
                பகைவன் சாமானியனாய் இருந்தால் அவனின் எண்ணம் ஈடேறும்… அவனே சத்ரியனாவும் சாணக்கியனாவும் இருந்தால் இருவர் மோதிக் கொள்ளும் பகையில் புள்ளி மான் ஒன்று மாட்டிக் கொண்டால்.. புள்ளி மானை காப்பாற்ற யார் வருவார்??… 

Advertisement