சக்திவரதனுக்கு இது மிகவும் நீண்டடட… நாள். அவன் எதிர்பார்த்ததற்கெல்லாம் அப்பாற்பட்டு நிறைய நிறைய நடந்து விட்டிருந்தது. ஏதோ கசப்பை வலுக்கட்டாயமாக விழுங்கியவனின் நிலையில் இருந்தான்.
இன்றைய அவனது முதல் சறுக்கல் அபூர்வாவிடமிருந்து பிள்ளையார் சுழி போட்டது. ஏன் அவளிடம் அத்தனை நெருக்கம் காட்டினோம்? ஏன் அவளோடு அத்தனை இணக்கமாக இருந்தோம் என என்ன யோசித்தும் புரிபடவில்லை அவனுக்கு.
மருத்துவமனை சென்றதை பற்றி யோசித்தாலோ இன்னும் இன்னும் சங்கடமாகவும் குழப்பமாகவும் இருந்தது. வளர்மதி முகத்திலிருக்கும் சாந்தம், அவரின் ஒளி நிறைந்த கண்கள், கருணை கொண்ட புன்னகை… எல்லாவற்றையும் பார்க்கையில் தெய்வீகமாகத் தோன்றுவதை அவனால் தடுக்கவே முடிவதில்லை. அவரை அவனுக்குப் பிடிக்காது. தங்கள் குடும்பத்திற்குத் துரோகம் இழைத்தவர், ஒரு பெண்ணின் வாழ்வை, உயிரைப் பறித்தவர், ஸ்ரீவத்சனின் அனாதரவான நிலைக்குக் காரணமானவர் என அவனுள் இருக்கும் எண்ணங்கள் எல்லாம் அவரை கண்டதும் எங்கோ தொலைந்து விடுவதன் அதிசயம் இன்று வரையிலும் அவனை வெகுவாக குழப்பியது.
சூதோடு அவரை ஒப்பிட்டுப் பார்ப்பதே பெரும் பிழை என்பது போலத் தோன்றும் எண்ணத்தை அவனும் தான் என்ன செய்வான்?
முத்தாய்ப்பாய் அந்த மருத்துவர், ‘இவள் என் மகள்’ என வளர்மதி அவரிடம் அபூர்வாவை அறிமுகப்படுத்தியதும் ஏன் அவ்வாறு நோக்கினார்? ஒருவேளை என்னைப்போல வளர்மதியின் சாயலை அபூர்வாவிடம் தேடித் தோற்றாரோ?
அபூர்வா அழகு பெண் தான் என்றாலும், பிரமிக்க வைக்கும், வியக்க வைக்குமளவு அழகெல்லாம் இல்லை. பருவ பெண்களுக்கே உரித்தான அழகு அவ்வளவே! ஆனால், வளர்மதி பேரழகாய் இருந்தார். அவரோடு ஒப்பிடும்போது அபூர்வா எல்லாம் இம்மி கூட நெருங்க முடியாது. அதுவும் அவர் முகத்தில் குடிகொண்டிருக்கும் வாடாத புன்னகையும், சாந்தமும், தேஜஸும் அபூர்வாவிற்கும் இருக்கக் கூடாதா என மனதோரம் ரகசியமாய் ஏக்கம் கூட அவனுக்கு எழுந்திருக்கிறது.
இந்த ஒப்புமைகளில் மீண்டும் மருத்துவரின் பார்வைக்கான விளக்கம் என்னவாக இருக்கும் என்ற யோசனையைக் கைவிட்டிருந்தான்.
எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் வண்ணம், வீட்டில் நடந்த பிரச்சினைகளோ அவனது உச்சந்தலையில் நின்று நடனமாடிக் கொண்டிருந்தது. எத்தனை பக்குவமாய் இந்த விஷயத்தைக் கையாள நினைத்தான். எல்லாம் அவசரக்காலத்தில் அள்ளி இரைத்தது போல ஆகிவிட்டது. அம்மா, அப்பாவின் முழு கோபத்தையும் சம்பாதித்து விட்டான். இனி ஸ்ரீவத்சன் வேறு என்ன சொல்வானோ என நீண்டதாய் பெருமூச்சு எழுந்தது.
அம்மா சொல்வது போல ஒதுங்கி விட வேண்டுமோ? இது தேவையில்லாத வேலையோ என்றெல்லாம் எண்ணியவன், அந்த நிலையைக் கடந்து எப்பொழுதோ வந்து விட்டிருந்ததை உணரவில்லை.
யாசிப்பும் எதிர்பார்ப்புமாய் இருக்கும் கருணாகரன் மற்றும் வளர்மதியை அவனால் ஏமாற்ற முடியாது. அவர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கும் தைரியமும் அவனிடம் இல்லை. இது எல்லாவற்றிற்கும் மேலாய், அபூர்வாவின் நேசம்… அதைப் புறக்கணிப்பதென்பது உயிர்வலி அவனுக்கு. இது எதையுமே அவன் மனதார உணரவில்லை என்றாலும், திருமணத்தில் பின்வாங்கும் எண்ணம் மட்டும் அவனுக்கில்லை.
அப்படியென்றால் ஷர்மிளாவை நீ ஏமாற்றி விடுவாயா என்று கேட்ட மனதின் குரலுக்கும் அவனிடம் பதில் இல்லை. அவளை என்ன சொல்லிச் சமாளிக்கப் போகிறான் என்றும் தெரியவில்லை.
ஆம், அவனது நேசத்தைப் பகிர்ந்து கொண்டவள் ஷர்மிளா தான்! அவளிடம் ஏதேதோ கதைகள் சில சொல்லிவிட்டுத் தான் பிறந்த ஊருக்கு வந்திருக்கிறான். அவளுக்கு இவன் சென்னையில் இருக்கும் வேலையை விட்டுவிட்டு ஊருக்குச் செல்வதில் விருப்பமே இல்லை. இருந்தும் எதையோ சமாளித்துவிட்டு வந்திருக்கிறான். சங்கீதாவோடு அவனது திட்டத்தையும் அரைகுறையாகச் சொல்லி, இருவருக்குள்ளும் சண்டை தான்! இவனும் முறுக்கிக்கொள்ள, அவளும் முறுக்கிக்கொள்ள ஊடலோடு தான் அவர்களின் காதல் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. சமீபமாக சரிவர பேச்சு வார்த்தைகள் கூட இல்லை. இனி சங்கீதாவுடன் திருமணம் என்றால் ஷர்மி சாமியாடி விடுவாள். அதையும் சமாளித்தாக வேண்டும்.
எது எப்படி என்றாலும் அபூர்வாவுடனான திருமணத்தில் உறுதியாய் இருந்தான். நிச்சயம் மூத்தவர்கள் இருவரும் செய்த தவறுக்கு, அவர்கள் கலங்கித் தவிக்கும் வண்ணம் ஏதாவது செய்வான் தான் என்றாலும், அது கண்டிப்பாக இந்த திருமணத்தைப் புறக்கணித்து இல்லை.
அன்றைய நாளின் நிகழ்வுகளை எண்ணியபடி புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தவனுக்கு, இந்த தீர்மானத்தை முழுமனதோடு எடுத்த பிறகே உறக்கம் ஆக்கிரமித்தது.
இரு கைகளையும் நிறைத்திருந்த மெஹந்தி சிவப்பை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அபூர்வா. சக்திவரதன் எப்பொழுது திருமணம் பேச வருவான் என வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த காலமென்ன? இப்பொழுது ஜீபூம்பாவென மந்திரம் போட்டது போல வந்தான், சம்மதம் கேட்டான், கைப்பிடித்தான் என எத்தனை விரைவு?
என்ன அவனின் பெற்றவர்களும், அண்ணன் ஸ்ரீவத்சனும் வந்திருந்தால் மனதை பாரமாய் அழுத்தும் மனக்குறையும் இல்லாதிருந்திருக்கும். அவள் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் காத்திருக்கத் தயார்தான். ஆனால், பெற்றவர்களின் உடல்நிலை காத்திருப்பை சாத்தியமாக்கவில்லை.
“கல்யாணம் ரொம்ப சிம்பிளா செய்ய வேண்டியதா போச்சேன்னு உனக்கு வருத்தமா அபூ…” படுக்கையில் அவளருகே அமர்ந்து கேட்டவனை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தவள் இல்லையென்று தலையசைத்தாள்.
உள்ளே ஏக்கம் நிறைந்திருக்கிறது தான். ஆனால், கணவன் சங்கடப்படக்கூடாதே என மறுத்துத் தலையசைத்தாலும் அவளின் முகத்தில் அந்த கலக்கம் அப்பட்டமாக தெரிந்தது.
அவளையே ஊன்றிப் பார்த்தான். இப்பொழுது அவனுள் பலவித குற்றவுணர்வு! ஷர்மிளாவை ஏமாற்றி இருக்கிறோம். அம்மா, அப்பா, ஸ்ரீவத்சனின் கோபத்தை பெற்றிருக்கிறோம் என அனைத்தும் இப்பொழுது தான் முன்னுக்கு நிற்கிறது. இத்தனை நாட்களும் அவனின் மனம் இந்த திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றதிலேயே சுற்றிச் சுழன்றதில், மற்ற விஷயங்கள் எல்லாம் அவனைப் பெரிதாக மிரட்டவில்லை. இப்பொழுது திருமணம் நல்லபடியாக முடிந்ததும், அனைத்தும் பூதாகரமாக ஆக்கிரமித்து அவனைத் திணறடித்தது.
சக்தியின் பார்வையில் திணறியவள், “மத்தவங்க மாதிரி நல்லா சிறப்பா கல்யாணம் செய்யணும்ன்னு எனக்கும் ஆசை தான்! இதுக்கும் நீங்களே வெட்டிங் பிளானர்… நிறைய கல்யாணத்தைச் சிறப்பா எடுத்து செய்வீங்க. நம்ம கல்யாணம் இப்படி ரொம்ப சாதாரணமா நடந்தது கஷ்டமா தான் இருக்கு” என்று தலையைக் கவிழ்ந்தபடி மெல்லிய குரலில் சொன்னவளை, பார்த்தவனின் பார்வை எரிச்சலைச் சுமந்திருந்தது.
‘இவளுக்கெல்லாம் கல்யாணம் ஆகறதே பெருசு… இதுல சிறப்பா வேற நடக்கணுமோ… நினைப்பு தான்’ என அவனுள் ஓடிய எண்ணம் உணராமல் அவள் தன் மனக்கவலையைப் பகிர்ந்து கொண்டிருந்தாள்.
திருமணம் முடியும் வரை இருந்த மதிப்பு இப்பொழுது அவனுள் இல்லை. அலட்சியம் நிறைந்திருந்தது. அதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படுத்துவதற்கும் அவன் தயங்கவில்லை.
“ஓஹோ…” என்றான் ஒரு மாதிரி இளக்கார குரலில். அதில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள், என்ன சொல்ல எனத் தெரியாமல் சில நொடிகள் திணறினாள்.
“சரி தூங்கலாம். நாளைக்கு வெளிய போக வேண்டிய வேலை இருக்கு…” என்று சொன்னவன், எழுந்து சென்று விளக்கை அணைத்துவிட்டு கட்டிலின் மறுபுறம் படுத்துக் கொள்ள, ஒரு பொருள் விளங்கா பார்வையில் அவன் முதுகை வெறித்தவள், அமைதியாக படுக்கையில் சரிந்து கொண்டாள்.
முதலிரவிற்கான எதிர்பார்ப்பு இருந்தது தான் என்றாலும் அது பொய்த்து விட்டதை விட, இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே உறங்கச் சென்றது முகத்தில் அடித்தது போல இருந்தது. ஏதேனும் தவறாகப் பேசி விட்டோமோ என யோசித்தாலும் புரியவில்லை. ஒருவேளை தன்னைப் போல இவரும் தங்களை ஏற்றுக்கொள்ளாத குடும்பத்தினரை நினைத்து உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருக்கிறார் போல என நினைத்தவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
பாவம் நானாவது பெற்றவர்கள் சம்மதம் வாங்கி, அவர்கள் முன்னிலையில் இவரை மணந்து கொண்டேன். இவருக்கு எத்தனை கஷ்டமாக இருக்கும்? எனக்காக எல்லாரையும் எதிர்த்து வந்த இவரை எந்த காலத்திலும் வருந்த விடக்கூடாது என மனதில் உறுதி எடுத்துக் கொண்டாள்.
முகம் மலர மறுநாள் வளைய வந்த புது மனைவியைச் சக்தியின் விழிகள் ஆச்சரியத்துடன் அளவிட்டது. இரவில் அவளைப் புறக்கணித்ததற்கு வருந்துவாள், கோபம் காட்டுவாள் என்றெல்லாம் அவன் எண்ணிக் கொண்டிருக்க, அபூர்வா இப்படிச் சுற்றுவது அவனுக்கு அதிசயமாக இருந்தது. கூடவே காரணமற்ற ஒருவித எரிச்சலும்.
வாழ்க்கை அதன் போக்கில் பயணித்தது. சக்தி இம்மிகூட மனைவியை நெருங்கவில்லை. பேச்சுவார்த்தைகள் கூட அளந்தே! அவளுக்கு அவனின் நிலை புரிந்தது. பெற்றவர்களை மிகவும் தேடுகிறான். அவர்களுக்காக ஏங்குகிறான். அவர்களை புறக்கணித்த குற்றவுணர்வு என்று அவளாக எண்ணிக் கொண்டவள், அவன் செயலை நினைத்து வருந்துவதில்லை.
அது அவனைச் சீண்டி விட்டுக் கொண்டிருப்பதை அவள் அறியவில்லை பாவம்!
“இன்னையிலிருந்து ரெண்டு நாள் வெளியூரில் தான் வேலை” காலை உணவின் போது கணவன் அறிவிக்கவும், “நீங்க வர வரைக்கும் நான் அம்மாங்க கூட இருக்கட்டுமாங்க. இங்க நான் தனியா இருக்கணுமே…” என்றாள் தயக்கத்துடன். ஏனென்றால், திருமணமான இந்த ஒன்றரை மாதங்களில், பெற்றவர்கள் தான் வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றனரே தவிர, இவர்கள் அங்கு இன்னமும் செல்லவில்லை. அவளுக்கு அதற்கான காரணமும் விளங்கவில்லை. எட்ட நிற்கும் கணவனிடம் அதுகுறித்து உரிமையாகக் கேட்பதற்கும் தயக்கமாக இருந்தது.
“அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. இங்கேயே இரு…” என்றான் வேகமாக. அவளது புருவங்கள் யோசனையாகச் சுருங்கியது. ஏன் இந்த வேக மறுப்பாம் அவளுக்கு விளங்கவில்லை. அமைதியாக இருந்து கொண்டாள்.
அவனோ உண்டு முடித்ததும், அவனுடைமைகளை பிரயாணத்திற்கு எடுத்து வைத்தான். மதியம் மேல் தான் பயணம். ஆனால், அலுவலகத்திலிருந்து அப்படியே சென்று விடுவானாம். பொத்தாம் பொதுவாக அறிவித்துவிட்டு வெளியேறி விட்டான்.
ஒதுக்கம் அவளுக்குப் புரிந்தது தான். ஆனால், இந்த பாராமுகம்???
என்னவோ நெருடியது. எல்லாம் சரியாகத் தான் செல்கிறதா? வாழ்க்கை குறித்து புது அச்சம் அவளுள்.
இரவில் தனியாக உறங்குவது அவளுக்குப் பழக்கம் தான் இருந்தாலும் என்னவோ வெறுமையாக இருந்தது. எதற்காக இந்த திருமணம்? அன்னியோன்னிய தம்பதிகளாக வலம் வர வேண்டும் என்றும் அவள் நினைக்கவில்லை தான்… ஆனால், இப்படிப் பேசக் கூட மறுக்கும் கணவன் அவளைக் கலங்கச் செய்தான். அவளது இரவு உறக்கத்தை வெகுநேரம் கணவன் குறித்த சிந்தனைகள் தின்று கொண்டிருந்தது. புதுமண தம்பதிகளுக்குரிய இனிய சிந்தனைகளாக இல்லாது போனது அவளது துரதிஷ்டமே!
வெளியூர் சென்ற இடத்தில் சக்திவரதன் ஸ்ரீவத்சனை காண நேர்ந்தது. இவனைக் கண்டு முகத்தை திருப்பிக் கொண்டு சென்றவனின் கைப்பிடித்துத் தடுத்து, “என்ன மச்சான்?” என்றான் உரிமையும், சமாதானமுமாய்.
அவனது பிடியை உதறியபடியே, பேச மறுத்து நின்றிருந்தான் ஸ்ரீவத்சன்.
அவனது இறுக்கம் மனதிற்குக் கஷ்டமாக இருந்தது. “நான் என்ன செஞ்சாலும் ஏதாவது காரணம் இருக்கும்ன்னு உனக்குத் தெரியும் தானே?” நண்பனின் பாராமுகம், இத்தனை நாட்கள் பெற்றோரைப் பிரிந்திருந்த ஏக்கம் எல்லாமுமாகச் சக்தியை வெகுவாக இறங்கி வர வைத்தது.
சக்தி எப்படியாவது அவர்களின் தவறு உரைக்கும் வண்ணம் சீண்டிக் காட்ட நினைத்தான் தான். கொஞ்சம் வதைக்கவும் கூட எண்ணியிருக்கிறான்… அது உண்மையில் பழி வாங்கல் தான்! ஆனால், என்னவோ அந்த சொல்லைக் கேட்கவும் மனது வெகுவாக பதறியது.
உள்ளே ஓடிய நடுக்கத்தை மறைத்து, “ம்ப்ச்… அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை…” முழு மனதோடு மறுக்கத் தைரியம் இல்லாமல் திணறியபடி சொன்னான்.
“பாரு… யாரோ எப்படியோ போகட்டும். இந்த சிக்கலுக்குள்ள நீ ஏன் போன? அவங்க எல்லாம் எங்கேயோ போயி தொலைஞ்சா பரவாயில்லைன்னு எவ்வளவு நாள் நான் நினைச்சிருக்கேன்னு உனக்கே நல்லா தெரியும். நீ என்னன்னா… ச்சே… அந்த ஊரு… அவங்க உறவு… எல்லாம் எனக்கு தூரமா போகணும்ன்னு நினைச்சா… என்னை பேச வைக்காத சக்தி. எனக்கு நீ செஞ்சது கொஞ்சம் கூட பிடிக்கலை… நீயும் எனக்கு ஒரு வகையில துரோகம் தான் செஞ்சிருக்க…” என்றான் எரிச்சலாக.
துரோகம் என்ற வார்த்தை அவனது நெஞ்சை அறுத்தது. “டேய்… நடந்ததை மாத்த முடியாது. எனக்கு உன்னை விட்டா யாருடா இருக்கு…” என்றான் அவசரமாக.
“இங்க பாரு அந்த பொண்ணை நான் பார்த்தாலே… ச்சு… எல்லாரும் நல்லா இருக்கணும்ன்னு நினைக்கிற மகாத்மா எல்லாம் நான் இல்லைடா. அத்தை என்னை நல்லவிதமா தான் வளர்த்திருக்காங்க. யார் மேலயும் வெறுப்பு வேண்டாம்ன்னு சொல்லி தந்திருக்காங்க. ஆனா என்னால அப்படி இருக்க முடியறதே இல்லை… அதுவும் அந்த குடும்பத்துக்கு வர ஒவ்வொரு சறுக்கலுக்கும் கடவுள் இருக்காருன்னு சந்தோச பட மட்டும் தான் தோணுது. இப்ப கூட அந்த ஆளுக்கு உடம்புக்கு முடியலை… சீக்கிரம் போயிடுவான். அந்த பொம்பளையும், பொண்ணும் நடுத்தெருவுக்கு வந்துடுவாங்கன்னு நினைச்சிட்டு இருந்த என்னோட நினைப்பை நீ உடைச்சிருக்க…” அமைதியான குரல் என்றாலும் அவனது ஆத்திரம் அதில் நன்கு புரிந்தது.
ஆத்திரத்தில் சிவந்திருந்த நண்பனின் விழிகளை ஆழ்ந்து நோக்கி, “நான் என்ன அவளை சந்தோசமாவா வெச்சுக்க போறேன்…” என சக்தி தன்னையும் மீறிக் கேட்டு விட்டான்.
“அப்ப அதுதான் இல்லையா? பழி வாங்க தான் இதெல்லாம்? ஆனா சக்தி இதுல உன் வாழ்க்கையும் அடங்கி இருக்குன்னு நீ மறந்துட்டியா?” என்றான் ஸ்ரீவத்சன் ஆதங்கத்துடன்.
“கண்டிப்பா… அதை காப்பாத்திக்க எனக்குத் தெரியும்…”
“பைத்தியம் மாதிரி பேசாதடா…”
“உனக்கு என் பேச்சு உளறலா தெரியும். உங்களை மாதிரி கடவுள் தண்டனை தரட்டும்ன்னு என்னால விலகி இருக்க முடியாது. உயிரோட மதிப்பு தெரியாத கூட்டத்துக்கு பாடம் புகட்ட வேண்டாம்…” என்று சொன்னவனின் முகத்தில் வேட்டைபுலியின் வெறி நிறைந்திருந்தது.
“பைத்தியமா நீ? என்ன செஞ்சிட முடியும் உன்னால? அப்பறம் உன்னோட வாழ்க்கை?”
“அதுக்கென்னடா குறைச்சல்? அத்தை செத்த அப்பறமும் அந்த ஆளு என்ன வாழாமையா போயிட்டான். பொண்டாட்டி, பொண்ணுன்னு அமோகமா வாழலை. அப்பறம் என்ன?”
“அதாவது…?”
“அத்தைக்கு அந்த ஆளு செஞ்ச துரோகத்தை அவர் பொண்ணுக்கு நான் செஞ்சிட்டு போறேன்…” இலகுவாகச் சொல்லி முடித்தவனை, ‘இதெல்லாம் நடக்குமா என்ன’ என்பதுபோல அலட்சியமாகப் பார்த்து நின்றான் ஸ்ரீவத்சன்.
சொல்வது இலகுதான்… செயல்படுத்துவது சிரமம் என சக்திவரதனுக்குப் புரியவில்லை. அதோடு இந்த சொற்களை அவன் மனதாரவும் சொல்லவில்லை. இதுபோல திட்டம் அவனுக்கு இருந்தால் தானே அதை மனதார சொல்ல… ஸ்ரீவத்சனோடு வார்த்தையாடும்போது தானாக வந்து விழுந்திருந்தது.
உண்மையில் அவனது எண்ணங்கள் என்ன என்பதை அவன் மட்டும் தானே அறிவான். அதுகூட உரிய முறையில் நடக்க மறுத்தது. இதுவரை அவன் திட்டமிட்டது எதுவுமே உருப்படியாக நடக்கவில்லை.
காதலித்து ஏமாற்ற நினைத்தான். காதலிக்கவே முடியவில்லை. ஆனால், அவனே எதிர்பாராமல், அவனது ஒரு சொல்லைப் பற்றிக்கொண்டு அபூர்வா நேசித்தாள். அப்பொழுது புறக்கணித்திருந்திருக்கலாம். அதற்கான வாய்ப்புகளும் நிறைய இருந்தது. ஆனால், மூத்த தம்பதியினரின் உடல்நிலையால் தடுமாறினான். கூடவே அபூர்வாவின் நேசத்தாலும்!
இதுவரை அவன் எண்ணியது எதுவுமே உருப்படியாக நடந்ததில்லை. இப்பொழுது அவன் எண்ணம் ஒன்று… ஸ்ரீவத்சனிடம் வீம்புக்கு சொன்னது ஒன்று… ஆனால், விதி எதை நடத்தத் திட்டமிட்டிருக்கிறதோ யார் அறிவர்?