சங்கீத சக்தி – 4

சக்திவரதன் வெகுவாக தடுமாறி நின்றது சில கணங்களே! ஆவலும், எதிர்பார்ப்புமாய் தன்னையே மூவரும் நோக்க, என்ன முயன்றும் அவனால் அந்த நேரத்தில் தன் கோபத்தை எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை.

தன்னை நேசிக்கும் ஒருத்தி, உடல்நிலை மோசமான நிலையிலும் கண்கள் ஒளிரத் தன்னை மட்டுமே ரட்சகனாய் நோக்கும் ஒரு மனிதர், மகள், கணவரது எதிர்பார்ப்பு பொய்த்து விடக்கூடாதே என்ற அச்சமும் கலக்கமுமாய் நோக்கும் வளர்மதி என மூவருமே அவன் வரையறுத்த பிம்பத்திற்குத் துளியும் பொருந்தாதவர்களாய் இருந்தனர்.

அவர்கள் குற்றமற்றவர்கள், கபடு அறியாதவர்கள் என்று உள்ளுக்குள் ஏதோ ஒரு மூலையில் துகளாய் தோன்றும் எண்ணத்தை என்ன முயன்றும் அவனால் ஒத்துக்கித்தள்ள முடியவில்லை.

நீண்ட பெருமூச்சை வெளியேற்றியவன், “வீட்டில் பேசி பார்த்தேன் ஒத்துக்கலை…” என்றான் பார்வையை இலக்கற்று அலையவிட்டபடி. இன்னும் அவன் வீட்டில் பேசவே இல்லை என்பது வேறு விஷயம்! அவனுக்குப் பேசும் எண்ணமும் இம்மியும் இல்லை. இருந்தும் அவர்களிடம் தயங்காமல் பொய்யுரைத்தான்.

கற்குவியலை மேலே அள்ளி கொட்டியதுபோல இருந்த அவனது வார்த்தைகளில், மூவரின் முகமும் ஏமாற்றத்தை சுமந்தது. சங்கீதாவின் விழிகள் சற்று கலங்கவே தொடங்கி விட்டது. பார்வையை சுழல விடுவது போல அவளைக் கண்டுவிட்ட சக்தி, இவள் இத்தனை பலவீனமானவளா என்று மனம் வருந்தினான்.

அதை வேகமாகப் புறந்தள்ளி, “இன்னும் கொஞ்ச நாள் டைம் வேணும். அவங்களை கன்வீன்ஸ் பண்ண…” என்றான் குரலை செருமி. இன்னுமா என தொய்ந்தார் கருணாகரன். தன் உயிரைக் கையில் பிடித்துக் காத்திருப்பது போல அவருக்கு பிரமை.

இன்னும் எத்தனை காலம் தன்னால் காத்திருக்க முடியும்? தனக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் இவர்களின் கதி?

கருணாகரனின் கலக்கம் அவரின் முகத்தில் பிரதிபலித்ததோ என்னவோ, “இது ஒத்து வராதுன்னு உங்களுக்கு தோணினா… மேற்கொண்டு உங்க விருப்பம் போல செய்யுங்க. நான் உங்க மகளோட இதுவரை போனில் கூட பேசி காதலை வளர்த்ததில்லை. என் விருப்பத்தை சொன்னதோட சரி. அதனால எங்க ரெண்டு பேருக்கும் இதனால் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது” உணர்வுகளற்ற முகத்தோடு சொன்னாலும், சக்திவரதன் இதை முழு மனதோடு உணர்ந்து தான் சொன்னான்.

மனதின் அடி ஆழத்தில் ஏதோ ஓர் இனம்புரியா உணர்வு, தான் செய்வது தவறு என ஓயாமல் இடித்துரைக்க, இங்கு வந்ததிலிருந்து தன் பார்வையில் படும் அனைத்தும் அவர்களை நல்லவிதமாகக் காட்ட, இதிலிருந்து பின் வாங்க தன்னாலான ஒரு முயற்சி எடுத்தான் என்று சொல்லலாம்.

அவன் வார்த்தைகளில் அபூர்வாவின் முகம் செத்தே போனது. என்ன சொல்கிறான் இவன்? இருவரும் பிரிவதால் எந்த பாதிப்பும் இல்லையா? ‘எனக்குப் பாதிப்பில்லை என்று உன்னிடம் யார் சொன்னது? நான் சொன்னேனா? உனக்குத் தெரியுமா?’ அவன் சட்டையை பிடித்துக் கேட்கும் வேகம் அவளுள்.

யாரேனும் அவனை என்னோடு சேர்த்து விடுங்களேன் இரைஞ்சல் பார்வையால் தாயை நோக்கினாள்.

அவளையே கவனித்துக் கொண்டிருந்த தாயின் மனம் கனிந்து கரைந்து போனது. மகளின் மகிழ்வுக்காக உலகையே விலை பேசும் அன்னையாக அந்த நொடியே மாறியிருந்தார் அவர்.

கணவரின் வாடிய தோற்றமும் உசுப்ப, “நாங்க காத்திருக்கோம் பா. ஆனா எங்களுக்கான காலம் காத்திருக்குமான்னு தெரியலை…” என்றார் தன்னையும், கணவனையும் பார்த்தபடி சோர்ந்த குரலில்.

அவர் உச்சரித்த அந்த “பா”வில் தான் எத்தனை மென்மை? உயிரை உருகி, கரைய வைக்கும் ஒளி பொருந்திய விழிகளும், சாந்த முகமும், பண்பான வார்த்தைகளும், இனிய குரலும் இவர் உண்மையில் தீங்கானவர் தானா? மீண்டும் சக்தியின் மனம் அலைபாய்ந்தது. காரணமேயின்றி அபூர்வாவின் முகத்தில் இவரின் சாயலைத் தேடி தோற்றான்.

அப்பொழுதே நோவு அந்த மனிதருக்கு தானே?! இந்த பெண்மணி ஏன் அவரையும் இணைத்துக் கொள்கிறார் என்ற யோசனை எழ, தன் எண்ணங்கள் பயணிக்கும் விதம் கண்டு, அவன்மீதே அவனுக்குக் கோபமாய் வந்தது. இவர்கள் எத்தனை சூழ்ச்சிக்காரர்கள், ஏமாற்றுக்காரர்கள் என்று தெரிந்திருந்தும் இதென்ன இப்படி அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதும், பரிதாபம் பார்ப்பதும்.

முயன்று மனதிற்குக் கடிவாளமிட்டு, “இன்னும் கொஞ்ச நாள் காத்திருப்போம். அப்படி அவங்க ஒத்துக்கலைன்னா அவங்களை மீறி கல்யாணம் செய்யவும் எனக்கு சம்மதம் தான்” என்றான் தூண்டில் வீசி.

இதுதான் அவனது சில ஆண்டுகால திட்டம் என்றபோதும், தற்சமயம் மனதே இல்லாமல் உதிர்த்த சொற்கள் இவை! சில செயல்களை செய்யும் முன்பு மனது எச்சரிக்குமே வேண்டாம் என்று! அந்த எச்சரிக்கையை புறக்கணித்து இவ்வாறு சொல்லியிருந்தான்.

இருந்தும் அவன் தான் செய்வதைத் தவறாக எண்ணவில்லை. என்ன இப்பொழுது? நான் ஒரு வாய்ப்பு தருகிறேன். புத்தியும், நல்லெண்ணமும் இருந்தால் உபயோகப்படுத்திக் கொள்ளட்டும். இவர்கள் நல்லவர்கள் என்றால், பெரியவர்கள் சம்மதமின்றி திருமணம் செய்ய முன்வருவார்களா என வீம்பாய் எண்ணினான்.

நம்பிக்கை ஒளி தேடி கானகத்தில் அழைப்பவர்களுக்குத் தீப்பந்தம் தந்திருக்கிறோம் என அவன் எங்கே அறியப் போகிறான்?

உங்கள் மகளுக்கு உங்கள் விருப்பம் போலச் செய்யுங்கள், அவளது மனதை நான் கலைக்கவில்லை என்ற விட்டுக்கொடுக்கும் பண்பாகட்டும், பெற்றவர்களை மீறியேனும் கைப்பிடிப்பேன் என்று தீர்க்கமாகச் சொல்லி காதலை உறுதிப் படுத்தியதாகட்டும், அவனை ஆபத்பாந்தவனாகவே அவர்களை எண்ண வைத்தது.

ஒருவேளை மகன் ஸ்ரீவத்சன் உதவிக்கு இருந்திருந்தாலோ, சுற்றம் என யாரேனும் இவர்களை நல்லவிதமாக ஏற்றிருந்தாலோ இப்படி ஒரு அவசர முடிவு சாத்தியம் இல்லைதான். ஆனால், இப்பொழுது இருந்த நிலையில், அவர்களுக்கு சக்திவரதன் இவ்வாறு சொன்னதே பெரிய விஷயமாக இருக்க, “என் பொண்ணை நல்லா பாத்துக்கய்யா” என்றார் கருணாகரன் கோரிக்கையாக.

கைகள் குவித்து அவர் கேட்டவிதம் மனதை அசைக்க, அவன் தலை தன்போல சம்மதமாய் ஆடியது.

வளர்மதிக்கு சொல்ல நிறைய இருக்கும் போல… ஆனாலும் தன் கோரிக்கைகளைப் பார்வையில் மட்டும் வைத்து எதுவும் பேசாமல் நின்றிருந்தார். பிள்ளையைத் திருமணம் செய்து வைக்கும் பெற்றவளின் பரிதவிப்பு இப்படித்தான் இருக்குமோ தன்னையும் மீறி அவர் முகத்தையே சில நொடிகள் பார்த்திருந்தான்.

இமைக்காமல் அவரையே பார்த்தவன், அவர் எதுவுமே பேசப்போவதில்லை எனப் புரிந்து, “கவலை படாதீங்க” என்றான் ஏதோ ஓர் உந்துதலில்.

எத்தனை ஆசுவாசம் அந்த பெண்மணியின் முகத்தில் அதை அசை போட்டவாறே அனைவரிடமும் விடைபெற்றுச் சென்றான்.

சென்றவன், “என்னால் வீட்டில் பேசி சம்மதிக்க வைக்கவே முடியலை. நாம் மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்ப்போம்” என சொல்வதற்காக அடுத்த சில நாட்களில் அவர்களின் வீடு தேடி மீண்டும் வந்தான்.

காலிங் பெல் அடித்தும், வாசல் கதவை தட்டியும் வெகுநேரம் கதவு திறக்கப்படாமலே இருக்க, இவன் குரல் கொடுத்ததும், அவசரமாகத் திறந்த கதவு வழியே மின்னலென வெளியே வந்த அபூர்வா, “அச்சோ! என்ன இந்த நேரத்துல? சீக்கிரம் உள்ளே வாங்க” என அதைவிட அவசரமாக அவன் கைப்பற்றி உள்ளே அழைத்து விட்டவள், அவன் உள் நுழைந்த வேகத்தோடு வாசல் கதவை அடைத்து அதன் திரைச்சீலையையும் இழுத்து மூடியிருந்தாள்.

‘இந்த நேரத்துல வந்தா என்னவாம்? இவ ஏன் இப்படி பதறணும்?’ தானாக உதயமான சிறு புன்னகையோடு அவளையே பார்த்திருந்தவன், அப்பொழுது தான் கவனித்தான் வீடு முழுவதும் ஜன்னல், கதவு எல்லாவற்றையும் மூடி, திரைச்சீலைகளையும் இழுத்து விட்டிருப்பதை.

அசையாமல் நின்றிருந்தவனைத் திரும்பி பார்த்தவள், “ஹா… நேரம் ஆச்சு நீங்க என்ன நின்னுட்டே இருக்கீங்க. சீக்கிரம் வாங்க” என அவனின் கைப்பிடித்து அழைத்துப் போய் சோபாவில் அமர வைத்தாள்.

எப்பொழுதுமே எட்ட நிற்பாள். பேசலாமா வேண்டாமா எனக் கோடி முறை யோசிப்பாள். பார்வை கூட திருட்டுத்தனமாக இருக்கும். இன்று இவளுக்கு என்னவாயிற்று? சுவாரஸ்யமாக பார்த்தவனிடம் அவசரமாகத் தட்டை நீட்டினாள். தட்டு முழுவதும் சாதம்.

மணி என்ன பதினொன்றரை இருக்குமா? விரிந்த விழிகளால் அவளை நோக்க, “சீக்கிரம் வாங்கி சாப்பிடுங்க” என அவசரப்படுத்தினாள்.

“இந்த நேரத்துலயா?” அவன் இன்னமும் தட்டை வாங்காமல் இருக்க, “பிளீஸ் அப்பறமா இதைப்பத்தி பேசிக்கலாம். நேரம் போயிட்டே இருக்கு பாருங்க. இன்னும் கால் மணி நேரத்துல சாப்பிடணும். பிளீஸ்… பிளீஸ்…” அவளின் கண்களின் சுருக்கமும், கெஞ்சலும் அசைக்க, மறுத்துப் பேச முடியாமல் தட்டை வாங்கிக் கொண்டான்.

அவளுக்கும் ஒரு தட்டில் போட்டு அமர்ந்தாள். அவள் உணவைத் தான் தனக்கும் பங்கிட்டிருக்கிறாள் எனப் பார்த்ததுமே புரிந்தது.

தக்காளி சாதமும், எலுமிச்சை சாதமும், ஊறுகாயுமாய் இருந்த தட்டை மேம்போக்காக பெயருக்கு உண்ண ஆரம்பித்தவன், அவளின் தவிப்பான பார்வை அடிக்கடி இவன் தட்டை வருடுவதாலும், உணவின் சுவையிலும் தன்னைப்போலத் தட்டை காலி செய்திருந்தான்.

‘உஃப்…’ என ஆசுவாசமாய் மூச்சு விட்டவளைப் பார்க்கச் சிரிப்பு கூட வரும்போல இருந்தது. என்னவாம் இவளுக்கு? காரணம் அறிய அவளின் பின்னேயே பார்வையை அலையவிட்டான்.

அவளோ உண்ட பாத்திரங்களை ஒதுங்க வைக்கிறேன் என்று அவனது பார்வை வட்டத்திலிருந்து மறைந்திருந்தாள். அப்பொழுதுதான் தனிமையே உரைத்தது. வீட்டில் யாரும் இல்லையா என்ன?

இதென்ன யாருமில்லா வீட்டில் நாம் வந்து சட்டமாக அமர்ந்து கொண்டு, இவளைப் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? அவசரமாக எழுந்து கொண்டவன், “அபூர்வா…” என்று அழைத்தபடியே சமையலறை வாசல் சென்றான்.

சமையலறையில் வேலை எதுவும் இல்லை போலும் அல்லது முடித்து விட்டிருப்பாளோ தெரியவில்லை; ஆனால், அவன் காணும் போது அவனை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல் அங்கேயே கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தாள். அவன் வந்ததை கூட அவள் உணரவில்லை. அவளின் அச்சமும், பதற்றமும் அவனைப் பித்தாக்கியது.

சமையலறை நிலவில் ஒய்யாரமாகச் சாய்ந்து நின்றவன், ஒரு காலை குறுக்காகப் போட்டுக்கொண்டு, கையை கட்டியபடி, “என்ன?” என்றான் சிறு புன்னகையோடு.

அவன் குரலில் அவசரமாக நிமிர்ந்தவள், விழி விரித்து அவனை நோக்கினாள். தன்போல ஓரடி பின்னால் நகர்ந்தவளின் முகத்தில் மிதமிஞ்சிய பதற்றம். ‘இவள் ஏன் இப்படி ஈர்க்கிறாள்?’ தலை முடியைக் கோதிக் கொண்டவனுக்கு இந்த உணர்வுகளுக்குப் பெயரிட தெரியவில்லை.

“வீட்டுல யாரும் இல்லையா?” என்றான் விழிகளைச் சுழற்றியபடி.

“அம்மாவும், அப்பாவும் வெளிய போயிருக்காங்க” என்றாள் மென்குரலில்.

“ஓ… அப்ப நான் அவங்க இருக்கும்போது வரேன்” என்றவன் திரும்பினான்.

“இருங்க… இருங்க…” அவளின் பதற்றத்தில் குழப்பமாக அவளை நோக்க, “கிரகணம் தொடங்கிடுச்சே…” என்றாள் தவிப்புடன்.

“வாட்…?” அவன் அதைப் பெரிதுபடுத்த மாட்டான் போலும்.

அதற்கும் விழி விரித்தாள். “சூரிய கிரகணம். இன்னும் அஞ்சு மணி நேரம் வெளியே போக கூடாது… எதுவும் சாப்பிடக் கூடாது” அவள் அடுக்க, அதற்குத்தான் அரக்கப்பறக்க உணவளித்தாளா என எண்ணியவன் சிரித்து விட்டான்.

“அந்த கிரகண நேரத்துக்கு வேணும்ன்னா எங்கேயும் போகாம இருந்துக்கலாம். அதுக்காக அஞ்சு மணி நேரம் வீட்டுக்குள்ளேயே… விளையாடாத அபூ…” என்று சிரிப்புடன் சொல்லிவிட்டு மீண்டும் திரும்ப நினைக்க,

வேகமாக அவன் முன்னே வந்து வழி மறித்தவள், “இல்லை இல்லை நீங்க நியூஸ் எல்லாம் பார்க்கலையா? வெளிய போக வேண்டாம் பிளீஸ்” என்றாள் சிறுபிள்ளை அடத்துடன். அவளின் காதலும் அக்கறையும் மயிலிறகாய் வருடியது.

அவளை நோக்கி அவசரமாக அவன் ஓரெட்டு முன்னே வைக்க, அதை எதிர்பாராதவள் வேகமாக பின்னால் நகர எத்தனிக்கக் கால் இடறியது. அவளின் இடையே வளைத்துத் தாங்கியவன், “இங்கேயே நான் அஞ்சு மணி நேரம் இருந்தா ரொம்ப டேஞ்சர்… தப்பிச்சுக்க” என்றான் வசீகர புன்னகையுடன்.

அவன் பற்றியதில் படபடத்தவள், அவனது மயக்கும் குரலிலும், புன்னகையிலும் ஆவென அவனைப் பார்த்தாள்.

அந்த பாவனை இன்னும் இன்னும் ஈர்க்க, பட்டும் படாமலும் அவளின் இதழ்களை தன் இதழ்களால் ஒற்றி எடுத்தான். அதில் பதறி அவள் விலக நினைக்க, அவளின் துள்ளலில் அவனின் பிடி தளர அடுத்த நொடி தரையில் கிடந்தாள். பார்த்தவனுக்கு சிரிப்பு பொங்கியது.