சங்கீத சக்தி – 11

சக்திவரதனுக்குள் பூகம்பமே நிகழ்ந்து கொண்டிருந்தது. அதில் அவன் அடங்கியே ஆக வேண்டும். இல்லையேல் பெரும் பிரச்சினையைச் சந்திக்க வேண்டும் என்று அவனாகவே நினைத்துக் கொண்டான். நிதானித்து ஆழ்மனதிலிருந்து யோசிக்கும் மனநிலையில் அவன் இல்லாது போனான். இல்லையேல் அவன் உதிரத்தையே வெறுக்கும் நிலைக்குப் போவானா? உண்மையில் இதுவல்ல அவன்! ஒருவேளை இது அவனின் போதாத காலம் போலும்!

அபூர்வா உரைத்த செய்தியை ஜீரணிக்க முடியாமல் சில நொடிகள், சக்தி தனக்குள் போராடிக் கொண்டிருந்தான். விழிகளை இறுக மூடி ஆழ்ந்த மூச்செடுத்து வெளியே விட்டவன், ஒருமுடிவோடு அவளை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தினான். ஒருவித ஒட்டாத தன்மை அவனிடம்!

இத்தனை நாட்கள் சண்டையின் பின்னரும், அபூர்வா தானாகச் சென்று அவன் தோளில் சாய்ந்தபோது அவன் விலக்கி வைத்தது, அவளின் முகத்தில் அடித்த மாதிரி அவமானமாகத் தோன்றியது. அதிலும் அவனின் இறுக்கத்தில், முகத்தில் தெரிந்த வெறுமையான உணர்வுகளில் பிள்ளை உருவானதில் அவனுக்கு மகிழ்ச்சி இல்லையோ என்று யோசித்தவளின் மனம் ஆழமாகக் காயப்பட்டு வலியில் துடித்தது.

தவிப்போடு அவளின் விழிகள் அவனைக் கேள்வியாக நோக்க, அதை நேருக்கு நேர் எதிர்கொள்ளாமல் அவளை அழைத்துச் சென்று கட்டிலில் அமரவைத்து தானும் அருகில் அமர்ந்து கொண்டான். என்னவோ விரும்பத் தகாதது வரப்போகிறது என்ற எண்ணத்தில் அபூர்வாவின் உடல் நடுங்க, இதயம் மத்தளம் கொட்டியது. தொண்டைக்குழிக்குள் எச்சிலை வெகு சிரமப்பட்டு விழுங்கினாள்.

அவனுக்குள் அன்று சாத்தான் தான் குடியேறியிருக்க வேண்டும். இல்லையேல் அவனது ஆழ்மன அழுக்குகளும், அழுத்தங்களும் இத்தனை வீரிய மிக்க வார்த்தைகளாக வெளிவர சாத்தியமே இல்லை!

மீண்டும் சில நொடிகள் மௌனம் அவனிடம்! “பாரு… நான் இதை எதிர்பார்க்கவே இல்லை…” என அவன் தொடங்க, அவள் கலவரத்துடன் அவனைப் பார்த்தாள்.

இப்பொழுதும் அவள் விழிகளை நேருக்கு நேராகச் சந்திக்காது, “இல்லை… எனக்கு இந்த உறவை…” என்றவன் எதையோ சொல்ல வந்து அதை இடையில் நிறுத்திவிட்டு, “இங்கே பாரு அபூர்வா நாம… நமக்கு… இந்த குழந்தை வேண்டாமே…” என அவன் கெஞ்சல் குரலில் சொல்ல, மொழியறியா குழந்தை போல மலங்க விழித்தாள்.

கடைசியில் அவள் பயந்தது போலவே தலையில் இடியை இறக்கி விட்டானே அவளின் உள்ளம் கதறித் துடித்தது. விழிகள் நிறைந்து போனது.

பதிலாக எதுவும் மறுத்துச் சொல்லக் கூட அவளுக்கு முடியாமல், தொண்டை அடைக்க அவள் அமர்ந்திருக்க, “இல்லை… இனியும் இதை நீட்டிக்க வேண்டாம். நான் என்னோட நிலைப்பாட்டை உன்கிட்ட முழுசா விளக்கிடறேன்” என்று அவன் தொடங்கவுமே இன்னமும் என்னவோ பெரிதாக வரப்போகுது என்று புரிந்து கொண்டவளுக்கு வயிற்றுக்குள் எதுவோ பிசைந்தது.

அவள் எண்ணிப் பயந்தது போலவே, “இனியும் இந்த உறவு சரியா வரும்ன்னு எனக்கு தோணலை” என அவளின் தலையில் மீண்டுமொருமுறை இடியைப் பலமாக இறக்கினான் சக்திவரதன். என்ன எதிர்வினையாற்ற என்று கூட தெரியாமல், திக்கு தெரியாத கானகத்தில் மாட்டிக்கொண்டது போல மொத்தமாக உடைந்து போய் அமர்ந்திருந்தாள்.

அவனின்றி அவள் உலகம் எப்படி இயங்கும்? என்ன பேசுவதென்று வரைமுறை இல்லையா? ஏன் இப்படி எல்லாம் மனம் நோகப் பேசுகிறான். திருமணம் முடிந்து சொற்ப மாதங்களில் யாரேனும் இப்படி எல்லாம் பேசுவார்களா? அதிலும் காதல் திருமணம்!

துக்கத்தை விழுங்கிக்கொண்டு, “அத்தை… மாமா… கோபம் இனி சரியாயிடுமேங்க…” என்றாள் வயிற்றை வருடியபடி இறைஞ்சுதலாக. அவனது வாட்டம் அது மட்டும் தானே என்பது அவளது ஊகம். அவன் விலகலாம் என்று சொன்னதற்கும் இது மட்டும் தான் காரணமாக இருக்க வேண்டும் என அப்பாவியாக நினைத்தாள்.

அதோடு வயிற்றில் இருக்கும் பிள்ளையையும், உடல்நிலை சரியில்லாத பெற்றோரையும் கருத்தில் கொண்டு, வேண்டாம் என்றவனிடம் வீம்பு காட்டி விலகி வர முடியாமல், கெஞ்சிக்கொண்டு நிற்க வைத்தது. கூடவே வெட்கங்கெட்ட காதல் மனமும் அவனின் பிரிவை ஏற்க முடியாமல் துவண்டு கொண்டிருந்தது. தான் தரை வரை குனிய நேரும் என அவள் எண்ணியதே இல்லை. தொண்டையை அடைத்த துக்கத்தை விழுங்கிக்கொண்டு அவனிடம் யாசித்தாள்.

உரிமைப்பட்டதை யாசகமாகக் கேட்பதே வலி என்கையில், அது நிராகரிக்கப்படும் போது எத்தனை கொடூரமான வலியை எதிர்கொள்ள நேரிடும்? அதையும் அனுபவித்தாள் பெண்ணவள்.

“ம்ப்ச்…” என சலிப்பு காட்டியவன், “உனக்கு என்ன சொல்ல… எனக்கு உன்னை பிடிச்செல்லாம் நான் உன்னை கட்டிக்கவே இல்லை… இதை எப்படித் தொடங்க… ஹ்ம்ம் நீ எப்ப பிறந்த தெரியுமா?” என்று கேட்டான்.

‘என்னது என்னைப் பிடித்து திருமணம் செய்யவில்லையா?’ கண்கள் இருட்டிக்கொண்டு வர, இயந்திரம் போலத் தான் பிறந்த மாதத்தையும் வருடத்தையும் அவனிடம் சொன்னாள்.

“அந்த சமயத்துல தான் எங்க அத்தை இறந்திருந்தாங்க…” என்று புலியின் உறுமலாகச் சொன்னவனை நம்பமுடியா திகைப்போடு பார்த்தாள். அதெப்படி சாத்தியமாகும்? அவளுக்குப் புரியவே இல்லை.

அவன் விளக்கினான். “அதாவது உங்க அப்பா… எங்க அத்தை இறக்கும் முன்னாடியே உங்க அம்மா கூட தொடர்பில் இருந்து இருக்கார். யாருக்குத் தெரியும் என் அத்தை உயிரை குடிச்சது கூட இந்த விஷயமா இருந்திருக்கலாம். அப்படி இல்லையா ஏதோ வெளியூருக்கு எங்க அத்தையை கூட்டிட்டு போறேன்னு போன மனுஷன் அங்கேயே அவரை கொன்னு கூடக் கொண்டு வந்திருக்கலாம். ஒரு வருஷம் முன்னாடி நல்லபடியா புருஷனோட போன எங்க அத்தை திரும்பி இந்த ஊருக்கு வரும்போது பிணமா தான் வந்தாங்க…” என்றவன் சொன்னதுமே,

“இல்லை… அப்படி இருக்காது… அப்பா, அம்மா பத்தி எனக்கு நல்லா தெரியும். அவங்களால இப்படி ஒரு துரோக… ஹ்ம்ம் இப்படி ஒரு விஷயத்தை… செஞ்சே இருக்க முடியாது” என்றாள் உறுதியும், அழுகையுமாக. அவளால் துரோகம் என்ற வார்த்தையைக் கூடப் பெற்றவர்களுக்கு எதிராகச் சொல்ல முடியவில்லை.

“நான் சொல்லறது உண்மை தான்… உன்னை இந்த ஊருக்கு கூட்டிட்டு வரும்போது நீ கைக்குழந்தை… உங்க அம்மா கழுத்துல புதுத்தாலி…” அழுத்தம் திருத்தமாக ஆதங்கத்துடன் சொன்னான். அவள் குழப்பமும், கலக்கமுமாக ஏறிட,

“எங்க அத்தை இறந்த எழெட்டு மாசத்துல உன்னையும், உங்க அம்மாவையும் உங்க அப்பா கூட்டிட்டு வந்தாங்க… கண்டிப்பா உங்க அம்மாவை நீ பிறந்த பிறகு தான் கல்யாணம் செய்திருக்கணும். நீ பிறந்ததும், என் அத்தை உயிரோட இருக்கும்போது தான் இருந்திருக்கணும்”

அவளால் நம்பவே முடியவில்லை. தலை சுற்றுவது போல இருந்தது. இல்லை… இதில் வேறு ஏதோ இருக்கிறது என அவள் மனம் மிகவும் உறுதியாக நம்பியது. ‘ஏன்மா… என்கிட்ட மறைச்சீங்க… யாரும் என்கிட்ட இதைப்பத்தி கேட்க மாட்டாங்கன்னு நினைச்சீங்களா?’ மானசீகமாக அன்னையிடம் கேட்டுக் கதறினாள். ஒருவேளை அம்மாவும் கைம்பெண்ணாக இருந்து அப்பா மறுமணம் செய்திருப்பாரோ? அம்மாவையும், என்னையும் வேறுபாடாகப் பார்க்கக் கூடாது என தன் குழந்தை என அப்பா சொல்லி இருப்பாரோ?

அவளின் எண்ணங்களை கலைத்து, “எங்க அத்தையோட வாழ்க்கையை அழிச்சிட்டு, அவங்களை எங்கேயோ கூட்டிட்டு போயி சாகடிச்சுட்டு வந்த உங்க அப்பாவுக்கு புத்தி புகட்ட வேண்டாம்?” என்று ஆத்திரத்தோடு ஒலித்தது அவளின் கணவனின் குரல்.

அபூர்வாவிற்கு திக்கென்றது. புத்தி புகட்டவா இந்த காதல், திருமணம், தாம்பத்தியம் எல்லாம்? உடலெல்லாம் எரிவது போன்ற உணர்வில் மேனி சிவந்து நடுநடுங்கி போனாள். இதையெல்லாம் கேட்டுக்கொண்டு இந்த உயிர் இன்னமும் என் உடலில் இருக்க வேண்டுமா? கடவுளே! இந்த பாரத்தை என்னால் தாங்க முடியுமா? ஏன் இப்படியெல்லாம் என்னைச் சோதிக்கிறாய் என மனதிற்குள் கண்ணீர் வடித்துக் கதறி துடித்தாள்.

களிமண்ணாய் இருந்த அவளுள்ளத்தை, அவன் இஷ்டம் போல வடிமைத்து சுட்டு அதற்கு அழகானதொரு உருவம் வரும் முன் அழகாகச் சிதைத்தும் விட்டானே! இனி அவள் வாழ்வு என்னவாகும்? அதுதான் புத்தி புகட்ட என்றானே! அந்த புத்தி புகட்டலில் இவள் செய்வதறியாது செத்து மடிவதும் ஒரு பகுதியோ என்னவோ? அதுதான் நா கூசாமல் மனைவிக்குத் துரோகம் இழைத்தவன், மனைவியைக் கொன்றவன் என்றெல்லாம் தந்தையைச் சொல்லி விட்டானே!

அப்படியே ஏதாவது ஒரு தவறு அப்பா பக்கமே இருந்தாலும் என் அப்பாவிற்குப் புத்தி புகட்ட முதலில் இவன் யார் என சீறியது பெண்ணின் மனது! இவன்மீதா எனக்குக் காதல் வந்தது அவளுக்கே அவளின் பருவ காதல் கசந்து வழிந்தது. இவனை நம்பி சுமந்து கொண்டிருக்கும் வயிற்றில் இருக்கும் பிள்ளையின் நினைவு அவளை அச்சம் கொள்ள வைத்தது. கடவுளே! இனி இந்த பிள்ளையும், நானும்! படிப்பு முடிந்த கையோடு வேலைக்குக் கூட செல்லாமல் இவனை நம்பி வந்த தன் முட்டாள்தனத்துக்கு இதெல்லாம் பட வேண்டியது தான்!

அசைய மறுத்த கால்களை இயக்கி, மெல்ல எழுந்து தன் உடைமைகளை எல்லாம் ஒரு பெட்டியை எடுத்து அடுக்கலானாள். “உனக்கே இது சரின்னு படுது… அப்படித்தானே?” இகழ்ச்சியாகப் பேசியவனைத் திரும்பி பார்வையால் பொசுக்கினாள்.

“ஓ…உனக்கு மட்டும் துரோகம் செய்யக் கூடாது… ஆனா என் அத்தைக்கு என்ன வேணா செய்யலாமா?” இகழ்ச்சியில் உதடு வளையக் கேட்டான். கண்களில் இத்தனை வெறியா? வேட்டை நாயைப் போல!

‘ச்சீ! என்ன பிறவி இவன்?’ அவள் முகத்தில் அருவருப்பு! தனக்காகப் பெற்றவர்களைப் பிரிந்து வந்திருக்கிறானே என அவன்மீது காதலைக் கொட்டினாளே அதற்காகவா இந்த பரிசு! கடவுளே! என்ன பாவம் செய்தேன் என்று என்னை இந்த நிலையில் நிறுத்தினாய்?

இப்பொழுது விளங்கியது அன்று மனுநீதி சோழன் கதையைப்பற்றிய விவாதத்தை அவன் ஏன் தொடங்கினான் என்று! இவனும் இவன் நீதியும் விளங்காதவன்!

கிளம்பி கொண்டே இருந்தவள், தலை கிறுகிறுவென சுற்றுவது போலத் தோன்றவும் ஓய்ந்து போய் மீண்டும் அமர்ந்தாள். “போக மாட்டேன்னு முரண்டு பிடிக்கலாம்… சண்டை போடலாம்… நியாயம் கேட்கலாம்… இல்லை கெஞ்சி கூத்தாடலாம்ன்னு என்ன திட்டம் இருந்தாலும் மாத்திக்க… என் வாழ்க்கையில வேற ஒருத்தி இருக்கா…” என்றான் சக்திவரதன் கொஞ்சமும் தயவுதாட்சண்யமின்றி.

‘ச்சீ… ச்சீ…’ என அவளுக்கு அருவருத்துப் போனது. அவனை ஏறிட்டும் பார்க்காமல் கையில் கிடைத்ததை அள்ளிக்கொண்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறினாள். அவன் வாழ்வை விட்டும்!

அன்றென பார்த்து வெளியில் மழை கொட்டிக் கொண்டிருந்தது. அவள் அதைப் பொருட்படுத்தும் எண்ணத்தில் இல்லை. வீட்டைவிட்டு வெளியேறிய அதே வேகத்தில் மழையிலும் இறங்கி நடக்கத் தொடங்கினாள்.

கொட்டிக்கொண்டிருக்கும் மழையில் சுரணையற்றவள் போல அபூர்வா நனைந்து கொண்டிருந்தாள். இந்த மழையோடு மழையாக தானும் கரைந்து போனால் எவ்வளவு நன்றாக இருக்கும் என அவளின் பேதை மனம் பிதற்றியது.

உண்மையில் பூஞ்சை உள்ளம் கொண்டவள் இத்தனை அதிர்ச்சியையும் ஒருசேர எப்படித் தாங்கிக்கொண்டாளோ தெரியவில்லை? அவளின் உடல்நிலைக்கும், மனநிலைக்கும் இத்தனை அழுத்தத்தை எதிர்கொள்ளும் சக்தி எல்லாம் சாத்தியமே இல்லை! சாத்தியப்படுத்தி வைத்திருப்பது வளர்மதி தான்! அவரின் வளர்ப்பு தான்!

அபூர்வா மனோதிடம் குறைந்தவள் தான்! அதற்காக மனப்பிறழ்வு தோன்றுமளவு பலவீனமானவள் இல்லை. வளர்மதியின் வளர்ப்பு அப்படி!

எந்த சூழலிலும் துணிவு அவசியம். எது நடந்தாலுமே நடந்து போன விஷயத்தில் உழலாமல், அடுத்து என்ன என யோசித்துத் தெளிவாகச் செயல்பட வேண்டும் என மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லி, அவளுள் அதை ஆழமாகப் பதிய வைத்து வளர்த்திருக்கிறார். எப்பொழுதும் தேங்கி நின்னுடாத… இந்த உலகம் நமக்கு எப்பவும் ஏதாவது ஒரு வழியை காட்டிட்டே இருக்கும்ன்னு சொல்லிச் சொல்லி வளர்த்ததன் பயன், அவளுக்கு அடுத்து என்ன செய்வது என யோசிக்குமளவு தெளிவைத் தந்திருந்தது.

அதாவது, வேண்டாம் என உறுதியாக இருப்பவனை, வேண்டாம் எனத் தூக்கி எறியும் திடம் அவளிடம் இருந்தது. அவனாக சொல்லும் முன்னே, அந்த வீட்டை விட்டு வெளியேறும் உறுதி இருந்தது. இத்தனை மனவலியிலும் மழையையும் பொருட்படுத்தாது நடக்கும் துணிவு நிறைந்திருந்தது.

இல்லையேல் இந்த சூழலை எதிர்கொள்ளும் மனோதிடம் இல்லாதவளுக்கு எந்த நிலை வேண்டுமானாலும் வந்திருக்கலாம். ஆம்! எந்த நிலை வேண்டுமானாலும்!