இளம் ரோஜா வண்ண டிசைனர் புடவையில், மூன்றில் ஒரு பாகம் ஆழ்ந்த பிளம் நிறத்தில், வெல்வெட் வகையில் பளபளக்க, புடவைக்கு மெருகேற்றும் விதமாகப் புடவையின் இருபுறமும் இரண்டு இன்ச் டிசைனர் பார்டர் அமைந்த அந்த புடவை மிகவும் ரசனைக்குரியதாக இருந்தது.
மகளுக்கு நேர்த்தியாக அந்த புடவையைக் கட்டி விட்ட வளர்மதிக்கு மகளின் அழகில் கண்ணும் மனமும் நிறைந்து போனது. மகள் திருமண வரவேற்பை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்ததும், திருஷ்டி சுத்தி போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
அபூர்வ சங்கீதாவிற்கு ஒருவித இனிய படபடப்பு! ஆக, எதுவும் பேசாமல் அன்னை வளைப்பதற்கு ஏற்ப வளைந்து கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“தலையும் நீங்களே வாரி விடுங்க மா… இங்கிருந்து தூக்கி பின்னுவீங்களே பிரெஞ்ச் பிரைட் அப்படி பின்னி விடுங்க…” என்ற மகளைக் குறுகுறு பார்வையால் அளந்தவாறே அவள் கேட்டவாறு வாரிவிடத் தொடங்கினார் அன்னை.
“அது எனக்கு நல்லா இருக்கும்ன்னு பிரெண்ட்ஸ் சொல்லி இருக்காங்க மா…” என்றாள் குழைந்த குரலில்.
“நான் ஒன்னும் கேட்கவே இல்லையே…” என்று அன்னை சொன்னதும், கீழுதட்டைக் கடித்துக் கொண்டவள், தலையைக் குனிந்தவாறு, “அது… அம்மா… உத்ராவோட அக்கா கல்யாண ரிஷப்ஷனுக்கு, ‘இசை நிலா’ மியூசிக் கச்சேரி தான் புக் பண்ணி இருக்கங்களாம்” என்று சொல்லி முடித்தபோது அவள் முகம் குங்குமமாய் சிவந்திருந்தது.
வளர்மதி மகளை வாஞ்சையோடு பார்த்தாலும், அவரது விழிகள் கலக்கத்தைக் காட்டி… மகள் கவனித்து விடப்போகிறாள் என்ற அச்சத்திலும் தவிப்பிலும் உடனேயே அதனை மறைத்தும் கொண்டது.
அபூர்வாவின் நாடியை இதமாக வருடி, “கச்சேரி முடிய நேரம் ஆகும்… மெய்மறந்து அங்கேயே உட்காராம இருந்தா சரிதான்” என வளர்மதி சொன்ன மறுநொடி, “அம்மா…” என்றாள் மகள் முகம் சுருக்கி சிணுங்கலாக.
“மறந்துட்டேன் பாரேன்… உன்னை அங்கே பார்த்த பிறகு, அதுவும் இப்படி நீ ரதி மாதிரி அலங்காரத்துல ஜொலிக்கும் போது, கச்சேரி நல்லபடியா நடக்குதோ என்னவோ?” அன்னை கண்சிமிட்டி கேலி செய்ய,
மனைவியின் கேலியை அத்தனை நேரமும் கண்டும் காணாமலும் கவனித்து வந்த அபூர்வாவின் தந்தை கருணாகரன், பெருங்குரலெடுத்துச் சிரிக்க, “அச்சோ… அப்பா… நீங்களுமா?” என்று அறையினுள்ளிருந்தே சிணுங்கினாள் இளையவள். கூடவே, “அவர் அப்படி எல்லாம் கிடையாதுப்பா…” என்று ரோசமாகச் சொன்னாள்.
“நீ சொன்னா நாங்க நம்பிடறோம் மா..” என கருணாகரன் சொன்னதும்,
“ச்சு போங்கப்பா… அது உங்களுக்கே தெரியும்” என்ற அபூர்வாவிற்கு நிச்சயம், அப்படி ஒன்றும் சக்திவரதன் அவளைக் கண்டு மயங்கி நின்று விடமாட்டான் என்று!
இதுவரை அப்படி அவன் மதி மயங்கி நின்று அவள் பார்த்ததில்லை என்பது ஒருபுறம் என்றால், அப்படிப் பார்ப்பதற்கும் அவர்களது அறிமுகம் ஒன்றும் வாலிப வயதில் இல்லையே! சிறு வயதிலிருந்தே பார்த்துப் பழகியவர்கள் என்பதால் பிரமிப்பு, லயிப்பு எல்லாம் பெரிதாக இல்லை போல என்பது அவள் எண்ணம்!
ஆனால், அது நிச்சயம் ஒருபுறம் தான்! அதாவது அவன் புறம்! அவனுக்கு அதெல்லாம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அபூர்வாவிற்கு அவன் மீது பித்து, பிரமிப்பு, பிடித்தம், லயிப்பு, மயக்கம் என எல்லாமே நிறையவே இருக்கிறது.
இன்றும் இப்படிப் பார்த்துப் பார்த்து தன்னை அலங்கரித்துச் செல்வதன் முக்கிய நோக்கமே, சக்திவரதன் விழிகளில் ஒருநொடி மயக்கத்தையேனும் கண்டுவிட வேண்டும் என்ற கட்டுக்கொள்ளா ஆசையினால் தான்! கல்லூரி படிக்கும் இருபது வயது பெண்ணுக்கு இதுபோன்ற ஆசைகள் எழுவதும் இயல்பு தானே!
முகத்தில் லேசான ஒப்பனையோடு அறையை விட்டு வெளியே வந்த மகளைக் கண்டதும், தந்தைக்கும் ஏதேதோ நினைவுகள்! அவரது விழிகள் கலங்கிவிட, மகள் அறியாமல் வளர்மதி கண்களால் கண்டிப்பு காட்டினார். உடனே தன்னை சுதாரித்து மீட்டுக்கொண்ட கருணாகரன், “மகாலட்சுமி மாதிரி இருக்க தங்கம்” என்று உருகினார்.
பெற்றவர்கள் இருவரது பாராட்டிலும் வெட்கமாக வந்தது அபூர்வாவிற்கு! சக்திவரதனும் கண்களாலேனும் மெச்சினால் போதும் அவளுக்கு!
தனிமை, செல்ல சீண்டல் என்றெல்லாம் கூட அவள் இதுவரை யோசித்ததும் இல்லை, எதிர்பார்த்ததும் இல்லை! ஒருவேளை ஆரம்பக்கட்ட ஆசைகள் நிறைவேறிய பிறகுதான் அடுத்தடுத்த ஆசைகள் தோன்றுமோ என்னவோ!
சக்திவரதன் சற்று கெடுபிடியானவன் என்பதால், அவனுக்கு இந்த வலிசல், தடவல் எல்லாம் அறவே பிடிக்காது என்று இத்தனை தினங்களில் அவள் புரிந்து வைத்திருந்தாள். அதனால், இவளது காதல் ஆசைகளும் அதற்குத் தக்கவே சிறியதாகவே துளிர்விட்டன!
கல்யாண மண்டபம் வரை கருணாகரன் தான் மகளைக் கொண்டு வந்து விட்டார். “கிளம்பறதுக்கு முன்னாடி போன் பண்ணுமா நான் வந்துடறேன்” என மகளிடம் சொல்லிவிட்டு விடைபெற்றார்.
உள்ளே நுழைந்தவள், நண்பர்கள் பட்டாளத்தைத் தேடி தனது விழிகளைச் சுழற்றினாலும், வலப்புறம் பிரம்மாண்டமாய் அமைந்திருந்த இசை மேடையில் தான் அவளது விழிகள் மையம் கொண்டது.
அவள் நல்ல நேரமோ என்னவோ சக்திவரதன் தான் பாடிக்கொண்டிருந்தான்.
“எல்லோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும்…
உயிரே இல்லாத கல் கூட காமமுறும்…
உன் மீது காதல் கொண்ட மானுடன் நான் என்ன ஆகுவேன்?”
சக்தியின் குரல் உருகி வழிய, இவள் அதில் உருகி, கரைந்து நின்றாள்.
அவளின் தோளை இடித்து, “இந்த சிலைக்கு எப்ப உயிர் வரும்…?” என்ற கேலிக்குரல் கேட்டிராவிட்டால், அவள் மோனநிலை எப்பொழுது கலைந்திருக்கும் என்றே அவளுக்கு தெரிந்திருக்காது.
கேலியாக உரைத்த குரலில், அவசரமாகத் திரும்பிப் பார்த்தவள் தோழி பிரீத்தியின் பார்வையில் லஜ்ஜையுற்றாள்.
“இல்லைடி… அது…” என அபூர்வா இழுக்கத் தொடங்கவுமே,
“நீ நடத்து… நடத்து…” எனக் கேலியாகப் பேசியபடி நண்பர்கள் கூட்டத்தை நோக்கி பிரீத்தி முன்னே நடந்தாள். பின்னாலே ஓடியவள், “பிரீத்தி… பிரீத்தி… பிளீஸ் யார்கிட்டயும் சொல்லிடாதடி… பின்ன நான் முடிஞ்சேன்… பிளீஸ்… பிளீஸ்…” என கெஞ்ச,
“நான் சொல்லணுமா? கொஞ்சம் அக்கட சூடும்மா” என அவளின் தாடையைப் பற்றி அவர்களின் கூட்டத்தைத் தோழிக்குச் சுட்டிக்காட்ட, கூட்டம் மொத்தமும் மணமேடையை விட்டுவிட்டு இவளைத் தான் இத்தனை நேரமும் பார்த்துக் கொண்டிருந்தது என அவர்களது பாவனை சொன்னது.
இப்படியே திரும்பி ஓடி விடலாம் போல இருந்தது அபூர்வாவிற்கு!
அவள் செய்வதறியாது கையை பிசைந்து கொண்டு, தலையைக் குனிந்தபடி நின்றிருக்க… “ஹப்பா… உன் அலங்காரம்… வெட்கம்… உன்னோட அவர்ர்ர்ர் பாடும்போது நீ இருந்த மெய்மறந்த நிலை… அச்சோ… அச்சோ… அச்சோ… காண கண்கோடி வேணும்டி” என பிரீத்தி சொல்லி அவளைச் செல்லமாக அணைக்க வந்தவள்,
பிறகு அணைக்காமல் அப்படியே நின்று கொண்டு, அவளை குறுகுறுவென பார்த்து, “எதுக்கு வம்பு? அப்பறம் அண்ணன் இதை பார்த்துட்டா என்மேல கொலைவெறியே வந்துடும்” என்று கண்ணடித்துச் சொல்ல, அவளுக்கு அச்சோவென்றிருந்தது.
அம்மா, அப்பா மூலம் குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பித்து வைத்த கேலி, கிண்டல்கள் இப்பொழுது நண்பர்கள் மூலம் ஜெகஜோதியாய் ஜொலித்தது.
இத்தனை கேலி, கிண்டல்களின் இடையே சக்திவரதனை நிமிர்ந்து பார்க்க முடியுமா என்ன? அவன் பாடிய பாடல்கள் மட்டும் அவளது செவியையும், மனதையும் நிறைத்து அவளை பித்தாக்கிக் கொண்டிருந்தது.
அவள் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தடுமாறியதால், சக்திவரதன் அவளைப் பார்த்தானா? அவளின் இந்த அலங்காரத்தை ரசித்தானா? என எதுவும் அவளுக்குத் தெரிந்துகொள்ள முடியவில்லை. கடைக்கண்ணால் பார்க்கும் பாக்கியம் கூட இல்லாமல் பரிதவித்துப் போனாள்.
சக்திவரதனும் அவளும் ஒரே ஊர்க்காரர்கள் தான்! ஒரு வகையில் உறவினனும் கூட! கருணாகரனின் மறைந்த மூத்த தாரம் மகாலட்சுமியின் அண்ணன் மகன் தான் சக்திவரதன்.
இரு குடும்பங்களுக்கும் பெரிதாகப் பேச்சுவார்த்தைகள் இல்லை! சுமூக பேச்சுவார்த்தைகள் இல்லாததாலோ என்னவோ அபூர்வாவிற்கு ஆரம்பத்தில் சக்திவரதன் மீது எந்த எண்ணமும் இல்லை!
சக்திவரதனின் குடும்பத்தினருக்கு கருணாகரன் மீது ஏதோ மனவருத்தம் போலும்! அதனால் தான் ஒதுங்கி இருந்தனர். ஆனால், இரு வீட்டிற்கும் பாலம் என்றால், அது மகாலட்சுமியின் மைந்தன் ஸ்ரீவத்சன் தான்!
அபூர்வாவிற்குச் சிறு வயதிலிருந்து பெரிய குறை என்றால், அது அண்ணனின் பாசம் மட்டும் தான்! ஏனோ அண்ணனுக்கு அவளின் பெற்றவர்களையும் பிடிக்காது… அவளையும் சுத்தமாகப் பிடிக்காது… ஆனால், இவளுக்கு அண்ணன் என்றால் அத்தனை இஷ்டம்! அவன் பின்னேயே அலைவாள். பலன் தான் இருந்ததில்லை!
ஸ்ரீவத்சன் அப்பா மீது கொண்ட கோபத்தினால், எந்த விஷயத்திலும் அவர் விருப்பம்போல நடந்து கொண்டதில்லை! திருமண விஷயம் கூட அவனது சொந்த விருப்பமாகத்தான் இருந்தது!
இருபத்தி மூன்று வயதிலேயே மனதுக்குப் பிடித்தவளைக் கைபிடித்து விட்டான். கருணாகரனுக்கும், வளர்மதிக்கும் இன்னும் கொஞ்ச ஆண்டுகள் போகட்டும். இப்பொழுதே எதற்கு குடும்ப பாரம் எனச் சொல்ல ஆசைதான்! ஆனால், சொல்ல அவர் மகன் அனுமதித்ததில்லையே!
அண்ணன் ஸ்ரீவத்சன் திருமணத்தில், அபூர்வா மீது ஒருவன் மையல் கொண்டு அவளையே சுற்றி சுற்றி வர, அப்பொழுது அவளது வாழ்வில் அதிரடியாக நுழைந்தவன் தான் சக்திவரதன்.
அவளைத் தனியே எதிர்கொண்டபோது, “இங்கே பாரு… அவன், இவன்னு சுத்தி வரத்தான் செய்வானுங்க. நீ கவனமா இருக்கணும் எப்பவுமே… புரியுதா?” எனச் சக்தி கேட்டபோது அவள் தலை தன்னால் உருண்டது.
“காலேஜ் தானே போற?”
வேகமாக மண்டையை உருட்டியவள். “பி.எஸ்.சி., பர்ஸ்ட் இயர்…” என்றாள்.
அதுனால என்ன என அவனைப் புரியாமல் ஏறிட்டவளிடம், “ம்ம்ம்… நீ கொஞ்சம் வளர்ந்துட்டதால உனக்கு சொல்லறேன் சரியா? உன்னோட கல்யாணம் என்கூட தான் நடக்கும்… ஆக எங்கேயும் உன் மனசு சஞ்சலப்படாம பார்த்துக்க…” என முகத்தை அத்தனை இயல்பாக வைத்துச் சொன்னவனைப் பார்த்ததும், அவளுக்குத் தான் படபடத்துப் போனது.
காதல் சொல்வது இத்தனை எளிதா என்ன? இதற்காகத் தடுமாற எல்லாம் மாட்டார்களா? அவள் அறிந்து அவர்களுக்கிடையேயான முதல் பேச்சுவார்த்தையே இன்று தான்! ஆனால், கண் பார்த்து, தடுமாறாத குரலில், உறுதியோடு ஒலித்த அவனது குரல் அவளை அத்தனை வசீகரித்தது.
சாமி வரம் தரும்போது யாராவது மறுத்து பேசுவார்களா? அபூர்வாவிற்கும் அதே நிலைதான்! அண்ணனின் தாய் மாமா மகன், அண்ணனுக்கு மிகவும் நெருக்கமானவன், இந்த திருமணம் இரு குடும்பங்களையும் மீண்டும் இணைக்கும். முக்கியமாக அண்ணனோடான உறவில் முன்னேற்றம் வரலாம். அதோடு சக்தியும் அழகன், சொந்தமாகத் தொழில் செய்பவன், இனிய குரலுக்கு சொந்தக்காரன்… அப்படிப்பட்டவன் காதலைச் சொல்ல அவள் மறுக்க முடியுமா என்ன?
‘உன்னோட கல்யாணம் என்கூட தான் நடக்கும்’ என அவளின் எண்ணம், எதிர்வினை எவ்வாறு இருக்கும் என்று கூட யோசிக்காமல் உறுதியாகச் சொன்னவன் மீது கோபம் என்பது மருந்துக்கும் எழவில்லை மங்கைக்கு!
காதலோ வாழ்க்கையோ கடவுளின் வரமாக இருக்கலாம்! அதைத் தனிமனிதன் வரமாக அளித்தால் அந்த உறவின் மரியாதையும், முக்கியத்துவமும் எந்தளவு இருக்கக்கூடும்? அபூர்வ சங்கீதா இன்று வரையும் யோசித்துப் பார்க்காத விஷயம் அது! இனியும் யோசிப்பாளா என்பது சந்தேகமே!