Advertisement

final  பார்ட் 4

கடைசி வரை ஸ்ருதி தனக்கு சம்மதம் சொல்வாளோ மாட்டாளோ என்ற யோகியின் ஊசலாட்டம், அவள் தனது கையைப் பற்றியதும் ஒரு முடிவுக்கு வந்தது. 

“ஃபூஹ்”, ஆசுவாசமாக மூச்சு விட்டு, “ரொம்ப அழுத்தம்ங்க, நீங்க. சுத்தல்ல விட்டீங்க?”,என்றான் இயல்பாக.

ஸ்ருதியோ தனது கையை மெல்ல விடுவித்துக்கொண்டு, பார்வையை தழைத்திருந்தாள். “ஹலோ வீட்டுக்காரம்மா, என்ன தரைல கிடக்கற டைல்ஸ்-சை ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்களா என்ன?”, என்று தனது வழமையான எடக்குப் பேச்சை ஆரம்பித்தான்.

ஸ்ருதி யோகியை நிமிர்ந்து பார்க்க,அவளது கண்களில் நீர் திரையிட்டிருந்தது. முகமோ வெளிறிப் போயிருந்தது.”பயம்ம் ”, என்று ஆரம்பித்தவள்..”கொஞ்சம் பதட்டமாயிருக்கு”,என்று அவள் சொல்ல…, 

“அய்யய்ய. இனிமே உங்கள யோசிக்க விடக்கூடாது போல. எல்லாம் சரியா வரும். வரலைன்னா வர வச்சிடுவோம் சரியா?” என்று யோகி சிரித்தான்.

“இல்ல, உணர்ச்சி வேகத்துல நந்தி..”, ‘நந்தினி பேர எதுக்கு இழுக்கனும்?’ நாக்கை கடித்து… பேச்சை திருத்தினாள். “ஒருத்தங்க தப்பு பண்ணினா மாதிரி, நானும் பண்றேன்னு சொல்லிடுவாங்களோ?”, என்று மீண்டும் வேதாளமாக  முருங்கை மரம் ஏறினாள்.

ஸ்ருதியின் வேண்டும் ஆனால் வேண்டாம் என்ற இரண்டும் கெட்டான் நிலை இவர்களின் திருமணம் வரையும் இருக்கும் என்பதை யோகி புரிந்து கொண்டான். 

“அன்னிக்கு நீங்க நந்தினிகிட்ட பேசும்போது என்ன சொன்னீங்க? மனசாட்சி மட்டும்தான் நம்ம கூட காலம் பூரா கூட வரும். அதுக்கு நம்ம துரோகம் பண்ண கூடாதுன்னு சொன்னீங்கல்ல? இது உங்களுக்கு துரோகம் மாதிரி தெரியுதா?”,என்றான் 

‘நந்தினி தற்கொலைக்கு முயற்சி பண்ணி ஹாஸ்பிடல்ல ஏன் இருந்தானு இவனுக்குத் தெரியுமா? நா பேசினது கேட்டிருக்கான்னா அதுவும் தெரியும்னு தான அர்த்தம்? ஆனா இதைப்பத்தி என்கிட்ட ஒன்னுமே கேக்கலையே?’ என்று திகைப்பைக் காட்டினாள்.  “உங்களுக்கு தெரியுமா?”

“தெரியுந்தெரியும். ஹாஸ்பிடல் சுவர் அப்படியே சவுண்ட் ப்ரூப் பாருங்க? வெறும் ஒத்தக்கல் செவுரு, அவங்களோட நீங்க பேசிட்டு இருந்த ரூமுக்கு வெளிலதா நா இருந்தேன்”,என்று சொல்லி சிரித்து.., “நூத்துக்கிழவி மாதிரி ஏதோ தத்துவமெல்லாம் சொல்றீங்கன்னு கேட்டுட்டு இருந்தேன்”, என்றான். 

‘நூத்துக்கிழவியா?’, நினைத்தவளுக்கும் யோகியின் புன்னகை தொற்றிக் கொண்டது.

“சரி, மச்சானை வரச் சொல்லிடலாமா?”,என்று யோகி கேட்க.. 

“சுகுமாரன் வந்திருக்காரா என்ன?”, ஸ்ருதி. 

“நா உங்க தம்பி மாதேஷ சொன்னேங்க”

“ஓஹ்! ஆனா அவன் வர்ஷாவோட வெளில..”, என்று ஆரம்பித்தவள்.. யோகியின் நமுட்டுச் சிரிப்பைப் பார்த்ததும் நிறுத்தி விட்டாள். ஓஹ்! யோகி வருவது மாதேஷுக்கு..’,  “நீங்க வர்றது அவனுக்குத் தெரியுமா?”

ஆமென தலையசைத்து இதழ் விரியச் சிரித்த யோகி,“ஆமா, நேத்து உங்ககிட்ட பேசின உடனே.. உங்க தம்பிட்ட பேசினேன்”

“ஆங். ?”

“பின்ன? ஆனானப்பட்ட தனபாலையே கட்டம் கட்டி தூக்கி,கால்ல விழ வச்சேன்.. உங்களை கரெக்ட் பண்றதா கஷ்டம்ன்னு தோணிச்சி”

“எது கரெக்ட் பண்றதா?”

“அட பேசி புரிய வைக்கிறதுங்க..”

“அப்போ.. இன்னிக்கு மாதேஷ் அவுட்டிங் போனது..?”

“நா சொல்லித் தான், பின்ன என்ன உங்களோட பொது இடத்துல உக்காந்து இவ்ளோ விலாவாரியா பேசமுடியுமா?அதான் ‘மச்சான் மச்சான்.. இந்த மாதிரி இந்த மாதிரி நா உங்க அக்காவ கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். அவங்களுக்கும் என்னை பிடிச்சிருக்கு போல. அதான் ரெண்டுல ஒன்னு கேட்டுடலாம்னு இருக்கேன்-ன்னு சொன்னேன்”

இப்படியா கேட்டிருப்பான்?என்று திகைத்த ஸ்ருதி,  “அவன் என்கிட்ட ஒரு வார்த்தைகூட சொல்லல.?”,என்று விட்டு, “உடனே சரின்னுட்டானா?”, என்றாள். 

“ம்க்கும்..உங்க தம்பிய சரிகட்றத விட சிவில் ஜட்ஜ் எக்ஸாம் எழுதிபாஸ் பண்ணிடலாம்ங்க. எவ்ளோ கேள்வி? என்ன படிச்சிருக்கீங்க? எவ்ளோ காணி நிலமிருக்கு. என்ன கம்பெனி வச்சிருக்கீங்க? என்ன வருமானம் வருது-ன்னு.  இதா முடிப்பார் அதோ முடிப்பாருன்னு பாத்தா.. பன்னிப் பன்னி கேள்வி கேட்டுகிட்டே இருக்காரு.  மூணு வருஷ ஐடி தாக்கல் பண்ணின ரசீதைக்  குடுங்கன்னு மட்டும்தாங்க கேக்கல”, என யோகி நொந்து போய் சொல்ல, ஸ்ருதி புன்னகைத்தாள். 

“அவன் அப்படித்தான் என் விஷயத்துல எந்த ரிஸ்க்கும் எடுக்க மாட்டான்”, பெருமையாக ஸ்ருதி சொன்னாள். 

“அய்ய கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசியிருக்கேங்க. என் ஜாதகம் வரைக்கும் கேட்டு தொல்லை பண்ணிட்டாரு. நம்மள முன்ன பின்ன தெரிலைன்னா கூட சரி பரவாயில்லங்க. சரி-ன்னு ஒத்துக்கலாம், முதல் தடவ சென்னைல பாக்கும்போதே என்னோட கோகோபீட் எக்ஸ்போர்ட் வரைக்கும் பேசியிருக்கோம். அப்டியிருந்தும்..?”,என்று அங்கலாய்த்தான்.

சில நொடிகளுக்குப் பிறகு, “உங்கள நேர்ல பாத்து பேசணும்னு நா  நினச்சதுக்கு காரணம் ஈஸ்வரி. அது  எங்கிட்ட ஒன்னு கேட்டிச்சு.ஒரு பொண்ணு மூஞ்சிய பாத்தா பிடிச்சிருக்கு பிடிக்கலைன்னு தெரிஞ்சிக்க தெரில நீயெல்லாம் என்ன வக்கீலுக்கு படிச்ச -ன்னு, ஹ ஹ”, என்றவன்.. தொடர்ந்து.. 

“பொம்பளைங்க  மனசுல இருக்கறத படிக்க எந்த கொம்பனாலும் புத்தகம் எழுத முடியாதில்ல? , ஆனா ஒருத்தங்க பொய் சொல்றாங்களா இல்லையானு என்னால கண்டுபிடிக்க முடியும்.அதான் நேர்ல பேசிடணும்னு நினச்சு வந்துட்டேன்”,என்றான். 

மென்னகையோடு அவன் பேச்சை ரசித்த ஸ்ருதிக்கு.. அடுத்தடுத்து நடக்கப்போகும் செயல்களை நினைத்து,அதன் தாக்கங்கள் குறித்த அச்சம் வர,தானாக பெரு மூச்சொன்று எழுந்தது. “அத்தைய பத்தி நினைச்சாத்தான்.. என்ன நினைப்பாங்கன்னு…?”, என்றாள் ஸ்ருதி. எப்போதும் யோகியிடம் சரளமாக பேசுபவள் தானே? அதனால் கவலையை பகிர்வதும் இயல்பாய் வந்தது.  

“ஹ்ம்ம். என்னதான் சரி சரின்னு சொன்னாலும் அவங்க மனசுக்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும். அத ஒன்னும் பண்ண முடியாதில்லயா? அதனால முடிஞ்ச வரை பழசை ஞாபகப்படுத்தறா மாதிரி எதுவும் வேணாம். ஆனா நம்ம ஊர்ல விருந்து வைக்கவேண்டி இருக்கும்”

“உங்க ஊரு..?”,எனறு இழுத்தாள் ஸ்ருதி. அவன் ஊர் எதுவென்று இன்றுவரை ஸ்ருதிக்கு தெரியாது. 

“அட அதுகூட தெரியாதா? எங்கம்மா நொடிக்கு நூறுதரம் எங்க ஊரு பேரை சொல்லியிருப்பாங்களே?”, என்னமோ தலைநகர் டெல்லியை தெரியாது என்று ஸ்ருதி சொல்லிவிட்டதைப்போல யோகி அவளைப் பார்த்தான்,  

“சொல்லியிருக்காங்க.. அது.. காவிரிக்கரை ஓரமா ஊருன்னு..”

“அதேதான். மோகனுர்.. எங்கூரு..”, என்று வாஷிங்க்டன் டி.சி. போல பெருமையாக சொன்னவன்..கண்ணை மூடிக்கொண்டு ஆழ மூச்சிழுத்து அவனது மண்ணின் சுவாசத்தை இங்கிருந்தபடியே உணர்ந்தான். “மூணு கிலோமீட்டர் குறுக்களவுல காவேரி போற ஊரு..”,என்று பரவசமாக சொன்னான். 

“ஓ!  தண்ணீ நல்லாப் போகுமா?”

புருவமுயர்த்தி பெருமையாக தலைசாய்த்து, “ம்ம்.எப்பவும் ஓட்டம் இருக்கும். அதுலயும்  மேட்டூர் டாம்-ல தண்ணீ திறந்தாச்சுன்னா.. ஆத்துல தெக்கத்தெக்க தண்ணீ ஓடும். அப்படியே புதுவெள்ளம்.. நொங்கும் நுரையுமா போகும் பாருங்க. பாக்கறதுக்கு அப்..டி இருக்கும்”, என யோகி உள்ளார்ந்து சொன்ன போது ஸ்ருதிக்கு அகண்ட காவிரியும் அதில் நுரைபோல பொங்கி வரும் தண்ணீரும் மனதுள் காட்சியாய் விரிந்தது.

 “ஒம்போது வயசுலயே இக்கரைலேர்ந்து அக்கறை நீஞ்சிட்டு வருவேன். ஜீவாக்கும் எனக்கும்தான் போட்டி. யாரு வேகமா போறதுன்னு. குளிச்சிட்டு வீட்டுக்குப் போனோம்னு வைங்க. கொலப்பசி பசிக்கும். அந்த நேரத்துல எங்கம்மா வச்ச மீன் குழம்பும் வடிச்ச சாதமும் பிணைஞ்சு எங்கப்பா உருட்டி கொடுப்பாரு. அப்பல்லாம் சனி ஞாயிறுன்னா வீட்டுக்கு வந்துடுவாரில்ல? நானும் ஜீவாவும் எனக்கு எனக்குன்னு சண்டைபோட்டு சாப்பிடுவோம். சொர்க்கம்ங்க..”,என்று விகசித்துச் சொன்னான்.

‘இவனுக்குள் இப்படியோர் பரிணாமமா? என்று ஆச்சர்யமாக பார்த்த ஸ்ருதி , “ஆமா ஜீவா யாரு?”,என்று கேட்டாள். 

யோகி, தனது மலரும் நினைவுகளின் சங்கிலியில் இருந்து சட்டென அறுபட்டு, நடப்புக்குத் திரும்பினான்.  “அதுவா? நம்ம சுகுமாரன்தான். அவனை சின்னப்போ ஜீவான்னு தா கூப்பிடுவோம். அது எங்க சின்னம்மாவோட பேருனு அப்போ யாருக்கும் தெரியாது”, என்று சொன்னான். முகத்தில் பொலிவு கொஞ்சம் குறைந்தாற்போல் இருந்தது. 

“எங்கப்பா விஷயம் தெரியிற வரைக்கும் அவன் என்னய பேர் சொல்லித்தான் கூப்பிடுவான். அவர் போனதுக்கு அப்பறம், எங்களுக்குள்ள இருந்த அந்த நட்பு.. காணாம போயிடுச்சு. எதனாலன்னு தெரில. ஸ்கூல் காலேஜ்னு என் கூடவே தான் சுத்துவான் ஆனா, எனக்கு தனியா இருக்கிற ஃபீல் வரும்”

“அவங்க வீட்ல சொல்லியிருப்பாங்களா இருக்கும். டே இவன் கல்யாண சுந்தரத்தோட பையன். கொஞ்சம் ஜாக்கிரதையா பழகுனு”

“எனக்கு அப்பலேர்ந்தே ஸ்டாம்ப் குத்திட்டாங்க.இவன் நம்பவச்சு கழுத்தறுத்தவனோட புள்ள. அதனால இவனும் அப்படித்தான் இருப்பான்னு”

“நா நல்லா இருக்கணும்னா அதை மாத்தியாகணும், என்ன பண்ண முடியும்? அதனால எப்பவும் பொய் சொல்றதில்ல, ஹ ஹ எங்கப்பா பண்ணி வச்ச வேலைக்கு பொண்ணுங்க பக்கம் திரும்ப வாய்ப்பே இல்ல. அப்பறம் எங்கம்மாக்காக.. பாடறத விட்டேன்”

“சின்ன வயசுலேர்ந்தே காடு கழனி-ல மாமாவோட வேலை பாப்பேன். பன்னெண்டு வயசுல என் காட்ல என்ன போடறதுன்னு தீர்மானிச்சேன். பதினஞ்சு வயசுல மாமாதும் சேர்த்து மொத்தமா பாத்துக்க ஆரம்பிச்சேன். இருபத்திரெண்டுல தென்னை நார் பாக்டரி, இப்போ பத்து வருஷத்துல அத எக்ஸ்போர்ட் பண்ற அளவுக்கு வளந்திருக்கேன். அவ்ளோதான்”,என்றான்.   

ஸ்ருதி, அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். யோகி, இப்படியான குணாதிசங்களுடன் இருப்பதற்கான காரணம் புரிந்தது. 

பேசிக்கொண்டிருந்த ஒரு விஷயம் திடீரென நினைவு வர, “ஐயோ யோகி நான் அசைவம் சாப்பிட மாட்டேன்”

“நீங்க சாப்பிடாட்டி போங்க, நா சாப்பிட்டு போறேன்”

“ம்ப்ச்,  எனக்கு சமைக்கவும் தெரியாதுங்க”, தானாக அவனது மொழி ஸ்ருதிக்கு வந்தது. 

“கவலையே படாதீங்க,.நா நல்லா சமைப்பேன். எப்பிடின்னு கேளுங்க, எங்கம்மா ஈஸ்வரிக்கு உதவி பண்றேன்னு அப்பப்ப பசுபதிபாளையம் போயிடுவாங்க. எனக்கு நல்லா சாப்டு பழக்கம். எங்க சமயக்காரம்மா வைக்கறது விளங்காது. மத்தது நல்லா பண்ணுவாங்க. ஆனா மீன்-ன்னா மட்டும் அவங்க கை சுணங்கி போகும். அப்பறம் ஒரு நாள் நானே வச்சு பழகினேன்.அம்மா அளவுக்கு இல்லேன்னாலும், நல்லா வைப்பேன்”

யோகி பேசப்பேச ஸ்ருதிக்கு அவனது உலகம் புரிந்தது. இயல்பில் நல்லவன், தந்தை தடம் புரள, அவரைப்போல சாயலுடைய சிறுவனான இவன் மீது சிலுவை சுமத்தப்பட்டது. சுமப்பதை சுகமென இயல்பாக ஏற்றுக்கொண்டு விட்டவன்.  

அதிகமாக பேசிவிட்டோமென்று நினைத்தானோ என்னமோ, யோகி தனது அலைபேசியை எடுத்து மாதேஷை அழைக்க நினைக்க, அதற்க்குள்ளாகவே மாதேஷ் அவன் அக்காவிற்கு அழைத்திருந்தான்.  

“உங்க தம்பின்னு நினைக்கறேன்”, என்று விட்டு எட்டி அலமாரியிலிருந்த ஸ்ருதியின் பேசியை எடுத்து மாதேஷின் அழைப்பை ஏற்றான். “சொல்லுங்க மாதேஷ்,உங்களுக்குத்தான் கால் பண்ண போன எடுத்தேன். இருங்க உங்க அக்காகிட்ட தர்றேன்”, என்று சொல்லி பேசியை கைமாற்றினான். 

“ஹலோ மாது..”, என்ற ஸ்ருதிக்கு தம்பியிடம் என்ன சொல்வது? எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.  

“க்கா..”, மாதேஷ் இவளுக்கு மேலிருந்தான். இருவருக்குமிடையே ஒரு அசந்தர்ப்பமான மௌனம் திரையிட்டது. இனி நடக்கப்போகும் ஒவ்வொன்றிலும் இந்த சின்ன சின்ன தயக்கங்கள், திணறல்கள் இருக்கும் என்பது ஸ்ருதியைப் பார்த்து நின்ற யோகிக்குப் புரிந்தது.

“குடுங்க”, என்று கை நீட்டினான். “ஹலோ மாதேஷ் எனக்கு இன்னும்”,என்று வாட்ச் பார்த்து, “மூணு மணி நேரத்துல சென்னைக்கு பிளைட். சீக்கிரம் வாங்க”, என்றான்.

எவ்வித சூழலையும் இலகுவாக கடக்க இவனால் மட்டும் எப்படி முடிகிறது என்று யோகியைப் பார்த்தாள் ஸ்ருதி. கூடவே தம்பியை எதிர்கொள்ளும்  பதட்டமும் இருந்தது. 

அதை பார்த்தும் கவனிக்காதது போல,“நா இங்க வந்தது யாருக்கும் தெரியாது.மாதேஷுக்கு மட்டும்தான் சொன்னேன்”, என்றான் 

“?”,ஏன் என்பது போல பார்த்தாள் ஸ்ருதி. 

“நீங்க சென்னைக்கு வாங்க, நானும் ஈஸ்வரிய ஊருல விட்டுட்டு..அங்க  கொஞ்சம் செய்ய வேண்டிய வேலைகள் இருக்கு. அதெல்லாம் முடிச்ச பிறகு வர்றேன், அப்ப எங்கம்மா பர்வதம்மாட்ட பேசுவாங்க”

“ம்ம்.”, எனும்போதே பாதி திறந்திருந்த கதவினை இருமுறை தட்டிவிட்டு மாதேஷ் உள்ளே நுழைந்தான். யோகியும் ஸ்ருதியும் அடுத்தடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள். போதுமான இடைவெளி இருக்கத்தான் செய்தது. 

ஆனாலும் தம்பியின் எதிரே.. யோகியோடு உட்கார்ந்திருப்பதா அல்லது எழுந்து கொள்வதா என்று ஸ்ருதி தடுமாறினாள். 

மாதேஷ் அக்காவை யோசனையோடு பார்த்தான். அவளருகே இருந்த யோகிக்கு ஸ்ருதியின் தடுமாற்றம் புரிந்தாலும், இப்படியான சின்ன சின்ன விஷயங்களுக்கு அவள் பழக வேண்டும் என்பதால், அழுத்தமான ஒரு பார்வை பார்த்து, எழுந்து மாதேஷுக்கு கை குடுத்து அவனை வரவேற்றான். “ரொம்ப நன்றிங்க, என்ன நம்பி வீட்டுக்கு வரவச்சதுக்கு”, என பேச்சை ஆரம்பித்தான். 

மாதேஷ் பதிலுக்கு கைகொடுத்து, புன்னைகையோடு  யோகியின்    கைகுலுக்கிவிட்டு  ஸ்ருதியைப் பார்த்தான். தன்னை நேரடியாக பார்ப்பதை தவிர்க்கும் அக்காவின் உணர்வுகள் புரிய, “நா நம்பறதுக்கு முன்னாடியே எங்க அக்கா உங்கள நம்பினாங்க. அதான்..”,என்று சொல்லி, உனது இந்த சங்கடம் தேவையில்லை என்று தனது அக்காவுக்கு புரியுமாறு மாதேஷ் சொன்னான். 

அங்கே கூடத்தில் இவர்கள் அருகிலேயே அமர்ந்திருந்தும் எங்கோ பார்த்தபடி, இருவரின் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த ஸ்ருதி சட்டென தலை திருப்பி மெச்சுதலும் நன்றியாக தனது தம்பியைப் பார்த்தாள். 

யோகிக்கோ ‘என்கிட்டே ஒரு மணி நேரத்துக்கும் போலீஸ் மாதிரி விசாரணை பண்ணிட்டு அக்கா நம்பினாங்கன்னு..?’ என்ற எண்ணம் வந்தாலும், இது மாதேஷ் தனது அக்காவிற்காக சொன்னது என்பது புரிந்தது. “அந்த பத்திர விஷயம்தான?”

“ம்ம். ஆமா”, மாதேஷ்.

இத்தனை நேரம் வெளியே நின்று கொண்டு இருந்ததால் அவனுக்கு குளிரெடுக்க.,உஷ்ணத்திற்காக தனது கைகளை தேய்த்து விட்டுக் கொண்டான் மாதேஷ். . 

ஸ்ருதி,  “ஏதாவது குடிக்கறயாடா?”

“ம்ம். டீ போடுக்கா”

“சரி”, என்று எழுந்து ஸ்ருதி உள்ளே செல்லும்போதே, “எனக்கு வேண்டாங்க”, சொன்னான் யோகி.

ஸ்ருதியின் தலை மறைந்ததும், “அப்பறம்.. என்ன பண்ணலாம்னு..?”, மாதேஷ்.

“கல்யாணம்தான், வேறென்ன?”,சிரித்த யோகி, “ஆனா கொஞ்ச நாளாகட்டும்.ஒரு மூணு மாசம் பொறுத்து நல்லநாள் பாத்து வச்சிக்கலாம்ன்னு தோணுது”, என்று சொல்லி.., “அதுக்கு முன்னால, பர்வதம்மாகிட்ட பேசணும்”

“ஆங். அத்தை பத்தி சொல்லணும்னு இருந்தேன்.,அவங்கள நா என்கூட வச்சிக்கறேன்”, மாதேஷ். 

“ம்ப்ச்.ம்ப்ச்.”,என்று கூடாது என்பதுபோல தலையசைத்து, “தப்புங்க. ரொம்ப தப்பு, அவங்க பையன் கூட இருந்தா எப்படி அவங்க பேரப் பசங்க கூட நிம்மதியா இருப்பங்களோ அப்படி அவங்க இருக்கறதுதான் முறை. உங்க அக்கா.. முதல்ல அவங்க மருமக. அவங்கள பாத்துக்கற கடமை உங்க அக்காக்கு இருக்கு. புரியுதுங்களா?”

“நீங்க சொல்றது புரியுது. ஆனா..?” இந்த ஆனாக்களும் ஆவன்னாக்களும் இவர்கள் திருமணம் முடியும்வரை தொடரும் போல? 

“அவங்க ஒரு பிரச்சனையே இல்லங்க, இப்போ..”, நாற்காலியை இழுத்து மாதேஷின் பக்கம் போட்டுகொண்டு, “எங்களுக்கு பிடிச்சுருக்கு.. கல்யாணம் பண்ணி வைங்கன்னு அவங்க கிட்ட கேட்டா.. ஏதாவது கொஞ்சம் மாறுதலா நினைக்க வாய்ப்பிருக்கு. இல்லியா?”, என்றவன் “ஆக்சுவலா பர்வதம்மா அப்படி கிடையாதுன்னு நமக்கு தெரியும் ஆனாலும், ஒருவேளை மனசு கஷ்டப்படுவாங்களோ-ன்னு தோணுதுல்ல?”

“ம்ம்: அதுக்குத்தான்…”,என்று மாதேஷ் இழுக்க..

கையைத் தூக்கி மாதேஷை அமர்த்திய யோகி, “இருங்க.. இதே எங்க கல்யாணமே அவங்க முடிவு பண்ணினதா இருந்தா? நாங்க சந்தோஷமா இருக்கறத பாத்து அவங்க சந்தோஷப்படுவாங்கல்ல?”

ஆமாம் ஆமாமென்று தலையசைத்தான் மாதேஷ்.ஆனால் பர்வதம்மா எப்படி முடிவு பண்ணுவாங்க? என்ற கேள்வி மூளையில் உதிக்க.., யோகி என்ன சொல்ல வருகிறான் என்று பார்த்தான்.

“அதனால நா இங்க வந்ததையோ, உங்க அக்காவோட பேசினதயோ யாருக்கும் சொல்லாதீங்க, இப்போதைக்கு பர்வதம்மாட்ட சொன்னமாதிரி, நாங்க ஈஸ்வரிய கூட்டிட்டு ஊருக்கு போறோம். உங்க அக்கா சென்னைக்கு வந்த பிறகு, நாங்க இருந்த வீடு காலி பண்ணனும்னு எங்கம்மா வருவாங்க. அப்ப பர்வதம்மாட்ட இந்த விஷயத்தை பேசுவாங்க”,என்று சொன்ன யோகியை மாதேஷ் வித்தியாசமாகப் பார்த்தான். 

“ஏ என்னாச்சு? அப்டி பாக்கறீங்க?”

“இல்ல அத்த ஒத்துப்பாங்கன்னு எப்படி அவ்ளோ நம்பிக்கையா சொல்றீங்க?”

“அவங்க உங்க அக்காவ எப்படி பாத்துக்கிட்டாங்கனு எனக்குத் தெரியும். அதனால அவங்க என்ன சொல்லுவாங்கனு ஓரளவு யூகிக்க முடியும். அதுவுமில்லாம அவங்க கிட்ட பேசப்போறது யாருன்னு நினைக்கறீங்க? எங்கம்மால்ல? அவங்க பேசும்போதே  ஈஸ்வரிய போன்-ல இழுத்து விட்டுட்டா போதும் எந்தங்கச்சி ஊருக்கே கல்யாணம் முடிச்சு விட்ரும்”, என்று நம்பிக்கையாக சொன்னான் யோகி. 

இவன் சொல்பவன் அல்ல செய்து முடிப்பவன். இல்லாவிட்டால்  சுகுமாரனையும், தனபாலனால் ஏமாற்றப்பட்ட ஓட்டு வீடு பெண்மணியையும் வைத்து கச்சிதமாகக் காய் நகர்த்தி அவனை வீழ்த்தியிருப்பானா?  இப்பொது பர்வதம் அத்தையோடு பேச அவரது தோழியான வசந்தம்மா கூடவே ஈஸ்வரி என்று பகடை உருட்டி காரியம் சாதிக்க போகிறான். ம்ம். புத்திசாலிதான் என்று மாதேஷுக்கும், அவனுக்கு டீ கொண்டு வரும் ஸ்ருதிக்கும் நன்றாக புரிந்தது. 

“உங்களுக்கு நா உங்க அக்காவை கட்றதுல ஆட்சேபனை இல்லியே? வேண்ணா..ஊருக்கு ஒருதரம் வாங்க. வந்து என்னை பத்தி கேளுங்க. அப்டியே என்ன சொத்து பத்து இருக்குன்னும் காமிக்கறேன்”, கேட்பவர்களுக்கு சாதாரணம் போல தோன்றினாலும் அதில் ‘என்னையே எடை போடறியா நீயி?’, என்ற கிண்டல் மறைந்திருந்தது சக ஆணாக அது மாதேஷுக்குப் புரிய..

“ஆட்சேபனை இருக்குங்க”,என்று யோகி போலவே பேசி, “நா உங்கள விட சின்னப்பையன்.இந்த நீங்க வாங்க போங்க வ விட்டுடுங்க. அப்பறம் கல்யாணத்துக்கு சரின்னு சொல்றேன்”, என்று மாதேஷ் சிரித்தான். 

“அது.. பேச ஆரம்பிக்கும்போதே ஒருமைல பேசி பழகியிருந்தா ஈஸியா வரும். இப்போ கொஞ்சம் பழகணும்”

“சரி அப்போ வாங்க பழகலாம்”

“ஏங்க? இதென்னங்க நியாயம்? உங்க அக்காகூட பழக சொன்னாலும் பிரயோஜனம் இருக்கு. உங்க கூட பழகி..? என்னத்த போங்க..?”,என்ற கலகலத்துச் சிரித்த யோகியை ஸ்ருதிக்கு எவ்வளவு பிடித்ததோ தெரியாது ஆனால் மாதேஷுக்கு நிறைய நிறைய பிடித்தது. 

“ஹஹஹ, எப்டி இப்டி? சான்ஸே இல்ல”,மாதேஷ்.

“சரி அப்ப நா கிளம்பறேன், ஏதாவது பேசணும்னா போன் பண்ணுங்க.” மாதேஷுக்கு சொல்லி..ஸ்ருதியிடம், “அடுத்த வாரம் ஊருக்கு போறோம். சீக்கிரமா சென்னைக்கு வாங்க”, என்று விட்டு யோகி தனது அலைபேசியை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு புறப்பட ஆயத்தமானான்.

வாசலை நோக்கி நடந்தபடி, “அப்பறம்.. வீட்டு வரி கட்ட நோட்டிஸ் வந்தது, கட்டிட்டேன்”, யோகி.

“ம்ம்”,ஸ்ருதி. 

“மீட்டர் ரீடிங் பாத்தேன். ட்யூ டேட் பதினஞ்சாம் தேதி, கட்டாம இருந்துச்சு.ஆன்லைன்ல கட்டிட்டேன்”,யோகி.

“ம்ம்”,இது ஸ்ருதி. 

“குருக்கள் வீட்ல வாடகை குடுத்தாங்க. அதுல கழிச்சிடறேன்”

“ம்ம்”

இவர்கள் இருவரும்பேசுவதை பார்த்த மாதேஷுக்கு, திருமணமான  கணவனும் மனைவியும்  பேசுவதைப் போலத் தெரிந்தது.  

“அப்பறம்..”,என்று யோகிஆரம்பிக்க..,”பிளைட் போயிடும்”, என்றான் மாதேஷ்.

திரும்பி மாதேஷைப் பார்த்த யோகி மண்டையை ஆட்டி, “ஆமா.கரெக்ட்,பிளைட் போயிடும்”,என்று சிரித்து, ஸ்ருதியிடம் “போன்-ல பேசறேன்”,என்று சொல்லிவிட்டு விடைபெற்றான் யோகி. 

)))

ஒரு முழுமையான உணர்வு இல்லன்னு சொல்லி மேற்கொண்டு எழுதுங்கன்னு சொன்ன வேதாவிஷால் , அலெக்ஸ் ஜோசபின், தேவி ராஜ்.. மேலும் பல நட்புகளுக்காக… இந்த நீட்சி.

என்னோட மன அழுத்தங்களால..  எப்படியாவது கதை முடிச்சா போதும்ன்னு தோணி.. எடிட் கூட பண்ணாம சென்ற பதிவை போட்டதற்கு நட்புகளிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

அண்ட்.. இன்னும் ஒரேயொரு எபிலாக் இருக்கு. (யோகியை விடமாட்டியா  நீ? ன்னு கேக்காதீங்க.. இவன்தான் என்னை விட மாட்டேங்கிறான். ஹஹ.

Advertisement