Advertisement

Final part 2 (1)
ஸ்ருதி அமைதியாக தன அலுவலகத்தில் அமர்ந்திருந்தாள். ‘ஈஸியா.. சாதாரணமா இருங்கன்னு சொல்லிட்டு போயிட்டான். .. ஹ்ம்ம். எப்படி சாதாரணமா இருக்க முடியும்? யோகி இப்படியொரு கோணத்துல எங்கிட்ட பழகுவான்னு நா நினைக்கவே இல்லையே? ஆனா இந்த நினைப்பு ரொம்ப சமீபமாத்தான் வந்திருக்கணும்னு தோணுது. அதுவும், அவனை நா குருட்டாம்போக்குல நம்பினதால.. குருட்டாம்போக்குலயா.. சே சே . இல்லல்ல  யோகியை எனக்குத் புரிஞ்சதால’
‘ஹ்ம்ம். வலி.. .மனசுக்குப் ரொம்ப பிடிச்சதை அடுத்தவங்களுக்காக செய்யமுடியாம போற வலி. அது எனக்கு நல்லா தெரியுமே? பூ வச்சுக்க பிடிக்கும் ஆனா தலைல வச்சிக்கறதா? வச்சுக்கிட்டா அத்த மனசு கஷ்டப்படுவாங்களோ? வெளில மத்தவங்க என்ன பேசுவாங்க? ன்னு யோசிச்சு செய்ய முடியாம போனபோது எனக்கு வந்த வலி..  அது யோகிக்கும் இருக்குன்னு தெரிஞ்சது.
‘ஒரு டிசைனர் பிளவுஸ் போட்டா மூஞ்சிக்கு நேரா எதுவும் சொல்லாம, முதுகுக்கு பின்னால ‘என்னமா மினுக்கறா?’-ன்னு மூஞ்சி சுழிக்கறவங்க எத்தனை பேரு? அவங்க வாய்க்கு பயந்து எத்தனை நாள் சாயம்போன புடவையும்.?’
‘அவ்ளோ ஏன்? பாலா உண்டாகி இருக்கும்போது எத்தனை கேள்வி? அவங்கப்பா எப்போ இறந்தார்? உங்களுக்கு அப்போ மாசமா இருக்கறது தெரியாதா? என்று எல்லாம் அனுதாபமென்ற போர்வை போர்த்துக்கொண்டு..’
‘ஹும்’, நெடுமூச்சொன்று தானாக வந்தது. “சரி அதெல்லாம் போச்சு. என் தலையெழுத்துன்னு அத கடந்து வந்தாச்சு.” 
‘இப்போ யோகி கேட்டதுக்கு நா என்ன பதில் சொல்லனும்? ஆம்பளைங்க ரெண்டு பசங்களோட கல்யாணம் பண்ணினா சரி அதுவே பொம்பளைங்கன்னா கூடாதா-ன்னு சரியாத்தான் கேட்டான். இதுவே அடுத்த பொண்ணுக்குன்னா நானும் யோகி சொல்றது சரின்னு தான் சொல்லுவேன். ஆனா அதுவே எனக்குன்னு வரும்போது..?’
‘ராகவ் இடத்துல யோகியா? அப்படி என்னால யோசிக்க முடியுமா?’, என நினைத்தவள்..”ஏன் கடவுளே? ஏன்? எனக்கு மட்டும் இப்படி?, என்ன பெரிசா ஆசைபட்டுட்டேன்? ஒரு நல்ல புருஷன், கண்ணுக்கு நிறைவா பசங்க. அழகா ஒரு குடும்பம். இவ்ளோதான ஆசைப்பட்டேன்? வேலைக்கு போகணும்.. காரு பங்களா வேணும்? லட்சலட்சமா பணம்வேணும்னு எப்பவாவது கேட்டுருப்பேனா? ஆனா நா கேக்காத எல்லாத்தையும் கொடுத்துட்டு..என்னை இப்படி ஆக்கிட்டியே?”, கண்ணீர் அவளையறியாமலே கரையுடைத்திருத்தது. 
‘அதோட விடாம,அடுத்து யோகியை அனுப்பி என்னோட முக்கியமான எல்லா நேரத்துலயும் அவரை எனக்குத் துணையா இருக்க வச்சு, இப்போ இப்படியொரு நினைப்பை ஏன் அவருக்குக் குடுத்த? எப்படி அவர் கிட்ட மூஞ்சிய முறிச்சாப்ல வேணாம்னு சொல்றது?’ 
தலையை இடவலமாக அசைத்துக்கொண்டாள். “ஷ்ஷ், இல்ல இது சரிவராது .வேண்டாம். வீணா இன்னொரு பிரச்சனையை தலைல ஏத்திக்க முடியாது. ஆபிஸ்-ல எதிர் சீட்காரி என்ன சொல்லுவாளோ அடுத்த டிபார்ட்மென்ட்-ல என்ன பேசுவாங்களோன்னு எந்நேரமும் யோசிக்க  வேண்டியிருக்கும். முடியாது. இது வேண்டவே வேண்டாம். எனக்கு என் பசங்க போதும்ன்னு சொல்லிட வேண்டியதுதான்’
‘ஹூம்..என்ன யோகிக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும். பரவால்ல, நிதானமா இதனால என்னென்ன சங்கடங்கள் வரும்னு தெளிவா சொன்னா புரிஞ்சுக்கற ஆளுதான். 
‘கல்யாணமாகி ரெண்டுபசங்க இருக்கிற பொண்ணு யோகிக்கு எதுக்கு? நல்ல பொண்ணா, லட்சணமா இருக்கிற எத்தனையோ பொண்ணுங்க வருவாங்க. உனக்கு என்ன குறை-ன்னு புரியவைச்சா அந்த வருத்தம்கூட சரியாப் போகும். இது தினமும் என்னைப் பார்த்து பேசறதால வந்த ஈர்ப்பு..இதோ இன்னும்கொஞ்ச நாள்ல ஊருக்குப் போயிட்டா மறந்து போயிடும்’, என்று ஸ்ருதி தனக்குத்தானே இருகூறாக நின்று வாதித்துக்கொண்டாள்.
‘என் லைஃப்-ல ஏற்கனவே இருக்கிற சிக்கல்கள் போதும், இன்னும் அதிகமாக்க வேணாம்’,என்று ஸ்ருதி ஒருமனதாக முடிவெடுக்கும்போது அலுவலகம் முடியும் நேரம் வந்திருந்தது. தேவகியும் அவரது அறையில் இருந்து கிளம்பி வெளியே வந்து கொண்டு இருந்தார். 
ஸ்ருதி தனது கைப்பையில் அனைத்தையும் எடுத்து வைக்கும்போது, அவளது அலைபேசி அழைத்தது. எடுத்துப் பார்த்தாள். போனில் மாதேஷ்.
“ஹலோ சொல்லு மாது?”
“அக்கா..க்கா.”, என்ன விட்டுவிட்டு கேக்குது? சிக்னல் சரியில்லையா? இல்லை மாதுக்கு பேசமுடியாம தொண்டை அடைக்குதா ?  
“ம்ம். சொல்லு மாது, லைன்-ல தான் இருக்கேன்.சத்தமா பேசு”
“அக்கா, அப்பாக்கு சீரியஸா இருக்கு. இன்னிக்கு நைட் தாங்காதுன்னு டாக்டர் சொல்றாங்க. நீ இங்க வரியா?”
“ஓஹ்!. என்ன என்ன ஆச்சு?”
“மத்தியானம் நல்லாத்தான் இருந்தாருக்கா, சாப்பிட்டு மாத்திர கூட ஒழுங்கா சாப்ட்டாரு. உள்ளே படுக்கறதுக்குப் போனது வரைக்கும் வர்ஷா பாத்துருக்கா.   ரெண்டுமணி நேரமாகியும் எழுந்துக்கலைன்னதும் அவரை பாத்துக்கற நர்ஸ் வந்து பாத்திருக்கார். ‘பல்ஸ் நார்மலா இல்ல .ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிடலாம்னு சொன்னார்.”
“கூட்டிட்டு போனியா?”
“ஆமாக்கா, அங்க இருந்துதான் பேசறேன்”
“ஹ்ம். ஹாஸ்பிடல்ல என்ன சொல்றாங்க?”
“இதே மாதிரிதான் சொல்றாங்க. வென்ட் போட்டும் பல்ஸ் ஏத்த இறக்கமா இருக்கு. எல்லாத்துக்கும் மேல அப்பா கண்ணை திறக்கவேயில்லக்கா. எதுக்கும் நீ ஒரு முறை வந்து பாத்துடேன்.”
“ஒன்னும் பயமில்லையேடா?”
“சொல்லமுடியாதுன்னு சொல்றாங்கக்கா, நீ வாயேன். நா வேணா டிக்கட் பாக்கவா?”
“அதெல்லாம் வேணான்டா. நீ அங்க பாத்துக்க. நானே வந்துடறேன்”, என்று விட்டு அழைப்பை துண்டித்தாள். 
இவளது குழப்பமான முகம் கண்டு, “என்ன ஆச்சு ஸ்ருதி?”, என தேவகி கேட்க..
ஸ்ருதியின் மனம் தானாக அப்பாவிடம் சென்றிருந்தது. கடந்த மூன்று வருடங்களாகத்தானே இப்படி இருக்கிறார். அதற்கு முன் அவர் பொறுப்பான தந்தையாயிற்றே? தனது கடமைகளை சரி வர முடித்தவர்தானே? மருந்து உட்கொள்ளாதது, சிகிச்சைக்கு ஒத்துழையாமல் படுத்தியது என்று அவரிடம் குறைகள் சில இருந்தாலும் அவர் ஸ்ருதிக்கு அப்பா அல்லவா? மனது கலங்கித்தான் போனது.“அப்பாக்கு ரொம்ப முடிலன்னு தம்பிட்ட இருந்து போன். வர சொல்றான். அதான்..”, என்று இழுத்தாள்.குரல் வெகுவாக உள்ளே போயிருந்தது.  
“இதுல யோசிக்க என்ன இருக்கு? பூனாதான? பிளைட் இருக்கா பாரு. எது ட்ராவெல்லிங் டைம் கம்மியா இருக்கோ அதுல புக் பண்ணிக்கோ”
“ம்ம். அத்தைகிட்ட கேட்டு புக் பண்ணிட்டு அப்படியே கிளம்பறேன் மேம். லீவு.. அதான் எத்தனை நாளுன்னு தெரில”, என்றாள் குழப்பமாக. 
பின்னே? தந்தை இறந்துவிடுவார் என்று கட்டியங்கூற முடியுமா என்ன? யோசித்துத் திணறியவளை, “எல்லாம் நா பாத்துக்கறேன். ஒண்ணும் ஆகாது பயப்படாம போயிட்டு வா”, என்று தேவகி ஆறுதல் சொல்லவும்,”ம்ம்.கிளம்பறேன் மேம்”, என்று கவலையான முகத்தோடு ஸ்ருதி புறப்பட்டாள்.
வாழ்க்கை மீண்டும் மீண்டும் இப்பெண்ணை துரத்தி அடிக்கிறதே? என்று  தனது இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் ஸ்ருதியையே பார்த்திருந்த தேவகி, அவளது தலை மறைந்தும்.., “அடடா, அந்த ஆள் ஏன் இங்க வந்தான்னு ஸ்ருதிக்கிட்ட கேக்க நினைச்சேனே?, ஹ்ம்ம். சரி அப்பறம் பாக்கலாம்”, என்று தனக்குள் சொல்லியபடி  கிளம்பினார். 
)))
ஸ்ருதி தனது வீட்டிற்குச் சென்று முதல் வேலையாக அத்தையிடம் மாதேஷ் சொன்ன விஷயத்தை பகிர்ந்தாள். பின், “டிக்கட் புக் பண்றேன்”, என்றாள்.
அலைபேசியில் பிராயணசீட்டு பதிவு செய்யும் முன், பாமாவிடம், “உங்களுக்கும் சேர்த்து புக் பண்ணிடட்டுமா அக்கா?”, என்று கேட்டாள். 
“இல்ல ஸ்ருதி, அங்க மாது வீட்ல வேலைக்கு ஆள் இருக்கு. உங்களுக்கு துணைக்கு வேணும்னா நா கூட வர்றேன்”, என்று சொல்லி..“இல்லன்னா என் பையனுக்கு போன் பண்ணினா அவனே வந்து கூட்டிட்டு போயிடுவான். என்ன பத்து நாள் பின்னால போறது இப்போவே..”, என்று இழுத்தார். 
அவர் மகன் இருக்குமிடம் செல்ல ஆசைப்படுவது புரிய, “சரி, அப்போ அவனை கூப்பிட்டு சொல்விடுங்க. அப்பறம் வீட்டை பூட்டி சாவிய ஈஸ்வரி வீட்ல குடுத்துடுங்க”, ஸ்ருதி பேச்சு ஒருபக்கம் செல்லும்போதே, பிரயாணத்துக்குத் தேவையான துணிமணிகள், சின்னவனுக்கு பீடிங் பாட்டில், டயப்பர், அத்தையின் மருந்து மாத்திரைகள் அனைத்தும் பேக்கிங் செய்தாள்.
“ஸ்ரீக்குட்டி, உன்னோட ஸ்வட்டர் எடுத்துட்டு வாடா”, என்று மகளையும் ஏவினாள். ஸ்ரீகுட்டிக்கு கொண்டாட்டம். ஊருக்குப் போகிறோம் அதுவும் வெகுநாட்களுக்குப் பிறகு மாமா ஊருக்கு, என்று குட்டிப்பெண் ஓடி ஓடி வேலை செய்தாள்.  
)))
இங்கே இவர்கள் ஊருக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்க, வசந்தி மதியம் தன்னிடம் ஈஸ்வரி பேசியதை பற்றி யோசித்தபடி இருந்தார்.
 யோகிக்கு  ஸ்ருதியை பிடித்திருக்கிறது என்று ஈஸ்வரி சொன்னதுமே, “என்னது?”, என்று அதிர்ந்தவர், அடுத்து சொன்னது, “அடியே.. அவளுக்கு ரெண்டு புள்ள இருக்குடி.  இவனுக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு?”, என்று பதறினார். 
“கிறுக்கெல்லாம் பிடிக்கல,அந்த புள்ளைய பிடிச்சிருக்கு, சொல்லு பொண்ணு கேப்பியா?”
“போடி, விளங்காதவளே, அதுக்கு பர்வதம்மா ஒத்துக்க வேணாம்? அந்த குழந்தை ஸ்ரீக்குட்டிக்கு பிடிக்கணுமில்ல? “, என்று காரணங்களை அடுக்கினார். 
“யம்மா, நா மத்தவங்கள பத்தி கேக்கல, நீ போயி பொண்ணு கேப்பியா? உனக்கு சரின்னு தோணுதா?  முதல்ல அத சொல்லு?  அதைவிட்டுட்டு ஊர சுத்தற?”,ஈஸ்வரி ஒரு முடிவோடுதான் இருந்தாள். 
“ஏண்டி அவனுக்கு என்னடி குறைச்சல்? ராசா மாதிரி இருக்கான், நாளை பின்ன பொண்டாட்டிய கூட்டிகிட்டு வெளில வாசல்ல போக வேணாம்? ரெண்டு புள்ளைங்களோட போனா, ஊரு எப்பிடி பேசனும்னு யோசிக்க வேணாம்?”,என்று அவருக்குத் தோன்றியதைக் கேட்டார். உலக வழக்கமும் அதுதானே?
தனது அம்மாவை தீர்க்கமாகப் பார்த்த ஈஸ்வரி, “இததானம்மா எங்கத்தை கேட்டுச்சு? ரெண்டு காலில்லாதவளோட எப்படிடா வெளிய போவ-ன்னு?, அவ்ளோ ஏன் அவர்கிட்ட நானே கேட்டிருக்கேன் ‘ஏன் உங்களுக்கு வேற பொண்ணா கிடைக்காதுன்னு?” 
“அடியே உனக்குத்தான் அவன்னு சின்ன வயசுலேர்ந்து பேசி வச்சதுடி”
“ஆமாம்மா, பேசி வச்சதுதான். ஆனா, அண்ணனுக்கு நடந்துச்சா? ஏன்னா, அந்த பொண்ணு மனசுல யோகண்ணா இல்ல,ஆனா அப்பா பத்தின பயம் மட்டும் அழுத்தமா படிஞ்சிடிச்சு. அதான் வேணான்னு சொல்லிட்டா”,என்றவள் தொடர்ந்து..  “ஆனா என் புருஷன், எனக்கு பொண்டாட்டி அவதான்னு மனசுல வச்சுட்டேன். இனிமே மாத்திக்க முடியாதுன்னு நின்னாரு. இல்லனா எங்க கல்யாணம் ஆரம்பிச்ச அன்னிக்கே முடிஞ்சி போயிருக்கும்”
ஈஸ்வரி தனது குறையைப் பற்றி ஒருபோதும் பேசி அறியார் வசந்தி. இப்போது நிதர்சனத்தை முகத்திற்கு நேரே சொல்ல.. தாயாக அவரது மனம் வேதனையுற்றது. “அதுவும் இதுவும் ஒன்னா ஈஸு?”,வாஞ்சையோடு கேட்க..
கண்களில் மெலிதான நீர்திரையோடு, “இல்லம்மா, அதெப்பிடி ஒன்னாகும்?, நீங்க சொல்ற ஸ்ருதியோட குறை.. பழகிடுச்சுன்னா மறந்தே கூட போயிடும். ஆனா என் குறை காலாகாலத்துக்கும் இப்படியேதான் இருக்கும்மா”, என்றவள் தொடர்ந்து..”ஒரு விஷயம் நமக்குன்னா நியாயம் அதுவே அடுத்தவங்களுக்கு நாம செய்ய வேண்டி இருந்தா அநியாயமாம்மா?”
“ம்ப்ச். நிறுத்து ஈஸ்வரி, இப்ப என்ன பண்ணனும்னு சொல்லு?”
“சொல்றதெல்லாம் ஒண்ணுமில்லமா, அவங்க சம்மதம்னு சொன்னா நீ குறுக்க விழாத. அவ்ளதான். முடிஞ்சா பர்வதம்மாகிட்ட பேசு”
“ம்ம். ஏற்கனவே மாதேஷ் அதான் ஸ்ருதி தம்பி.. அவளோட மறு கல்யாணம் பத்தி பேசி இருக்கான். அவங்க கூட அடிக்கடி சொல்லுவாங்க ‘இந்த பொண்ணு என்ன வாழ்ந்துடுச்சு’-ன்னு?”
“அது பேச்சுவாக்கில் சொல்றது வேறம்மா, நடைமுறைக்கு வரும்போதும் அப்படியே இருப்பாங்கன்னு சொல்லமுடியாது.”
“ஹ்ம்ம். அதெல்லாம் பர்வதம்மா அப்படி  கிடையாது. ஆனா என்ன சொல்றது? எல்லாம் ஒத்து வந்தா பாக்கலாம் ஈஸு”,என்று அந்த பேச்சு வார்த்தை முடிந்து போயிருந்தது. 
}}}}}}}}}

Advertisement