Advertisement

எபிலாக் 3
கோபமாக வீட்டினுள் நுழைந்த யோகி, “எங்கடா உங்க அம்மா?”,என்று பாலகிருஷ்ணனிடம் கேட்டான். அவன் யோகிக்கு, “தெர்லப்பா”, என்று சொல்லி, சரியாகச் சொல்வதென்றால் அவன் பேசுவதை பாதி காதில் வாங்கி மீதியை காற்றில் விட்டு, தன்னை விட ஆறுமாதம் சின்னவனான.. ஈஸ்வரி & சுகுமாரின் மகன் மணிமாறனோடும், தன்னிலும் இரண்டு வயது சின்னவனான தம்பி முகுந்தனோடும் விளையாடிக்கொண்டு இருந்தான்.  
“தோட்டத்துல வாழை லோடு ஏத்தறதுக்கு லாரி வருது-ன்னு சுகுமாமா சொன்னாங்க. நீங்க வெளிய போயிருந்ததால அம்மா போனாங்க யோகண்னா”, பதிலுரைத்தது ஸ்ரீகுட்டி. பத்து வயதுக்கு ஏற்ற வகையில் யோகியின் தோளுயரத்துக்கு நிகுநிகுவென்று வளர்ந்து நின்றாள்.  
கையில் டேப்லட்டின் உதவியுடன் நெதர்லாந்தில் இருக்கும் மாமா மாதேஷுடன் ஆன்லைனில் சதுரங்கம் ஆடிக்கொண்டு இருந்தாள்.  இளையவர்களுக்கான ஆசிய சதுரங்க போட்டியில் 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கலந்து கொள்ள ப்ரித்விஸ்ரீ இந்திய சதுரங்க சம்மேளனத்தால் தேர்தெடுக்கப்பட்டு இருந்தாள். அவளது பயிற்சி நேரம்போக,மீதி நேரம் ஸ்ரீகுட்டியோடு விளையாடுவது ஈஸ்வரியின் வேலை. 
ஈஸ்வரியின் உந்துதலில் பேரில்தான் ஸ்ரீகுட்டி பத்து வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருந்தாள். ஆனால் படிப்பில் சுமார் ரகமே, அதில் ஸ்ருதிக்கு ஏக வருத்தம். யோகியும் அவ்வப்போது ஸ்ருதிக்கு ஒத்து ஊதுவான். 
ஆனால் ஈஸ்வரி, “அண்ணி, இதோ, உன் வீட்லயே பழியா கிடக்கானே மாறன், இவன நல்லா படிக்க வைங்க. இல்லன்னா பாலாவும் முகுந்த்தும் படிக்கட்டும். அது எல்லாராலையும் முடியும். ஆனா, இந்த விளையாட்டு எல்லாருக்கும் வராது. உங்களுக்கு கஷ்டமாயிருந்தா அவள என்கிட்டே விடுங்க. அடுத்த விதித் சந்தோஷாவோ இல்ல விஸ்வநாதன் ஆனந்தாவோ மாத்தி காட்டறேன்”, என்று ஒரே போடாக போட்டு விடுவாள்.
அதே போல ‘யோகண்னா’ என்ற ஸ்ரீகுட்டியின் அழைப்பு இன்றுவரை  மாறவேயில்லை. ஈஸ்வரி அப்படி கூப்பிடுவதால் வந்த வழக்கம் என்று இவர்களை அறியாதவர்கள் நினைத்துக் கொள்வார்கள். அதைப்பற்றி யாரும் பெரிதாகக் கவலைப்படுவதுமில்லை. அவளுக்கு விபரம் தெரியும் வயதில் நடந்த திருமணம்தானே? மறுப்பு சொல்லுமளவு பெரிய மனுஷி இல்லை, அதோடு கூட யோகியின் மேல் வெறுப்பு ஏதுமில்லை. இன்னமும் சொல்வதென்றால், ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’என்ற சொலவடைக்கு ஏற்ப யோகியின் குடும்பம் பிள்ளைகளை கொண்டாடியது. பின் வேறு யோசனை எங்கிருந்து வரப்போகிறது?
ஆனாலும் ஸ்ரீக்குட்டி தந்தை ராகவ் குறித்து ஸ்ருதியிடமும், ஏன் யோகியிடம் கூட இலகுவாகப்  பேசுவாள். முன்பே சென்னையில் இருக்கும்போது பேசியவள் தானே ? இருவருமே இயல்பாக பதில் சொல்வார்கள். ஸ்ருதிக்கு சற்றே முகம் சுணங்கும். அனால், யோகி சின்ன மாற்றத்தைக் கூட காண்பிக்காமல் ஸ்ரீக்கு சரிக்கு சரி பேசுவான். இங்கே வந்த புதிதில், “எங்கப்பாக்கு இந்த மாதிரி இடம் ரொம்ப பிடிக்கும், அங்க சென்னைல தக்ஷின் சித்ரா போயிருக்கும் போது நாங்க பாத்தோம்”, என்பாள். 
“அதான் அவருக்கு பிடிச்சா மாதிரி இடத்துல இருக்கணும்னு உங்கள இங்க கூட்டிட்டு வந்துட்டாரு”, என்று பதில் சொன்னான் யோகி.  ஸ்ருதிக்கு மனதில் ராகவ்-ன் நினைவெழ, அந்த இடம் விட்டு நகர்ந்து விட்டாள். 
வலிகள் போகலாம்,  அவை ஏற்படுத்திய தடங்கள் போகுமா? தடங்களோடு வாழ நாம் பழகிக்கொள்ள வேண்டும் அவ்வளவே. ஏனெனில் தடயங்கள் மட்டுமே வாழ்க்கையல்லவே? 
ஆனால் அதெல்லாம் முன்பு  நடந்தவை. இப்போது யோகியின் கோபத்திற்கு அது காரணமில்லை. எதிர்வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், இவர்களது தொகுதி வேட்பாளராக இவனைக் கேட்காமல் ஈஸ்வரி நிற்கப்போவதாக அறிவித்திருந்தாள் ஸ்ருதி. 
யோகியின் கோபத்துக்கு காரணம், வரும் வழியில் கட்சி பலம் உள்ள ஒரு அரசியல்வாதி, “என்ன யோகி? காலே இல்லாத புள்ளைய எலக்சன்ல நிக்க வைக்கிறயாமே? அது கட்ட கால வச்சிட்டு எப்போ வீடு வீடா போயி எப்போ வோட்டு கேட்டு…? இல்ல பொண்டாட்டின்னு வச்சிருக்..”,என்று ஆரம்பிக்கக்கூட இல்லை .., அடுத்த நொடி அவனது கன்னத்தில் யோகியின் கை இடியென இறங்கியிருந்தது. 
அடுத்த அடி அடிக்கும்முன் எழுந்து கொண்ட அவன், “யே என்னியா அடிச்ச? பாரு உன் தங்கச்சிய டெபாசிட் கூட கிடைக்காம தோக்கடிக்கல..என் பேரு மார்த்தாண்டம் இல்ல?”
“வேணா விழுப்புரம்ம்னு மாத்திக்க, ஏய் இங்க பாரு.. ஈஸு நிக்கிது நிக்கல, அது வேற விஷயம்.ஆனா நீ தோக்கற.. எழுதி வச்சிக்க.. போ போயி.. உனக்கு வோட்டு போடறதுக்காக ஜனங்களுக்கு காசு கொடுக்கற இல்ல? .அத நிப்பாட்டு, அதுவாச்சும் உனக்கு மிச்சமாகட்டும்”, என்று சொல்லிவிட்டு, அலைபேசியில் தொடர்பு கொண்டு ஈஸ்வரியிடம் கேட்க, அவள் கைகாட்டியது ஸ்ருதியை. அடுத்து ஏதும் பேசாமல் நேரே வீடு வந்திருந்தான். இவளோ யோகியின் கோபம் தெரியாமல் வாழை லோடு ஏற்ற போயிருக்கிறாள். 
உள்ளே சென்று கூடத்தில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டான். பொது வாழ்வில் ஈடுபட்டால் என்னென்ன தொல்லைகள் வரும்? கொஞ்சமாவது யோசிக்கும் தன்மை இருக்கிறதா? இந்த வீட்டமாவை வெளிய வாசல் போயிட்டு வந்து ஊரு உலகம் தெரிஞ்சிக்கங்கனு சொன்னது தப்பா போச்சே.. , தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்தான். 
“அட எப்ப வந்தீங்க?,ஒரு போன் போட்டிருந்தா நானே வந்திருப்பனே?”
“ஆமாமா, புருஷனுக்கு ரொம்ப மதிப்பு குடுக்கறா மாதிரிதான்?”, என்று சத்தமாகவே முணுமுணுத்தான். 
“என்ன குறைஞ்சுபோச்சுன்னு..?”
“யாரை கேட்டு ஈஸ்வரி எலக்சன்ல நிக்கிதுன்னு சொல்லிட்டு வந்துருக்கீங்க?”
“யார கேக்கணும்? ஈஸ்வரிய கேட்டேன். அவ சுகுமாரனை கேக்கணும்னு சொன்னா.அவரு உங்க இஷ்டம் னு  சொல்லிட்டாரு. அப்பயும் ரொம்ப பிகு பண்ணினா, எங்க மகளிர் சுயஉதவிக்குழு குரூப் இருக்குல்ல,  அவங்க எல்லாரும் சப்போர்ட் பன்றோம்னு சொன்னாங்க. பாரம் வாங்கிட்டு வந்தாச்சு” 
“சும்மா பையித்தியக்காரத்தனமா பேசக்கூடாது வீட்டம்மா,நீங்க ஆளு வளந்த அளவுக்கு அறிவு வளரலைங்க”
“வளந்த வரைக்கும் போதுங்க, ரொம்ப வளந்தாலும் பிரச்னைதான். எங்க அறிவுக்கு எது சரின்னு படுதோ அத செய்துட்டு போயிட்டே இருக்கோம். உங்களால முடிஞ்சா உதவி செய்ங்க. இல்லியா விடுங்க.”
“ஏங்க, ரோட்ல போற எவனோ ஒருத்தன் கட்ட கால வச்சிக்கிட்டு உன் தங்கச்சி நிக்கப்போகுதாமேன்னு கிண்டல் பண்றான், விஷயமே எனக்குத் தெரியாதுங்கும்போது கோவம் வருமில்ல?”
“சும்மாவா விட்டீங்க அவனை? இந்த ….கட்சி ஆளுதான? ஜாதிய வச்சு ஓட்டு கணக்கு பண்ற பரதேசி அவன். நாங்க மனு வாங்கும்போது அந்த ஆளு அங்க எலக்ஷன் ஆபிஸ்ல தான் நின்னுட்டு இருந்தான். வேணும்னு உங்ககிட்ட வம்பு இழுத்துருக்கான். ஆபிஸ் வாசல்ல நின்னு அப்படித்தான் ஜாடை பேசினான். இன்னொரு தடவ என் கைல கிடைக்கட்டும் அவன..”, என்று பல் கடித்தவளை கவலையோடு பார்த்தான். 
பூ மாதிரி இருந்த என்னோட வீட்டுக்காரம்மா இப்படி புயலா மாறி நிக்கறாங்களே?
“என்ன ஜாடை பேசினான்?”, 
“ஆங். இதேதான்..  உங்ககிட்ட பேசின மாதிரிதான்.. அவன் வந்து எங்ககிட்ட அவன் கட்சிக்கே ஆதரவு தரணும்னு கேட்டான். நாங்க முடியாதுன்னு சொல்லிட்டோம். இன்னிய வரையும் நம்ம கோரிக்கை எதையாவது அவங்க கட்சி தீத்து வச்சிருக்கா? இல்லல்ல..  அப்பறம் எதுக்கு அவனுக்கு ஒட்டு போடணும்ங்கிறேன்?”
“ஆளுக்கு கைல ஆயிரம் ரூபா குடுத்தான் பத்தும் பத்தாத்துக்கு ஆம்பளைங்களுக்கு சரக்கு வேற.., இதெல்லாத்தையும் கூட விட்டுடுவேன். அவன் சொல்றான், முஸ்லீம் இருக்கிற தெருல முஸ்லிமா போவேன், யாதவா இருக்குற இடத்துல அங்க செல்வாக்கா இருக்கிற ஆளோட போனா, ஜாதிக்கட்சி ஓட்டு, சிறுபான்மை மக்கள் ஓட்டு கிடைக்கும். அத வச்சு கௌன்சிலர் ஆயிடுவேன்னு. இந்த மாதிரி பச்சோந்தி பயலுங்க இருக்கறதாலதான், ஒண்ணும் தெரியாத படிக்கற பசங்க மத்தில  ஹிஜாப் காவித்துண்டு, டர்பன்,  சிலுவைன்னு பிரச்சன வருது.”
“பிஞ்சு மனசுல நஞ்சை விதைக்கறாங்க, அதுவும் குறிப்பா இளந்தாரிப்பசங்க..தொட்டா நெருப்பா பத்திப்பாங்க. அவங்க கிட்ட ஜாதி மத வெறியை தூண்டிவிட்டு..” மூச்சு வாங்கினாள் ஸ்ருதி. யோகி தனதருகே  இருந்த தண்ணீரை சொம்போடு குடுத்தான். அதை அவனிடமிருந்து  வாங்கிய ஸ்ருதி அப்படியே வாயில் கவிழ்த்துக் கொண்டாள். 
“இவ்ளோ மூச்சு வாங்க பேசறீங்களே, ஜெயிக்கறதுக்கு ஏதாவது யோசனை வச்சிருக்கீங்களா?”
“அய்யய்ய, யோசனையெல்லாம் இல்லீங்க, நிக்கறோம் ஜெயிக்கறோம். அவ்ளோதான்”
“ஏன் எல்லாரும் உங்களுக்குத்தான் எங்க ஓட்டு ன்னு பால்ல அடிச்சு சத்தியம் பண்ணிட்டாங்களா?”
“பால்ல அடிக்கலைங்க, படிப்புல அடிச்சு சத்தியம் பண்ணினாங்க. ஈஸ்வரி எத்தனை பசங்களுக்கு இலவசமா ட்யூஷன்  எடுத்துருக்கு, எத்தனை பசங்கள சென்ட்ரல் யூனிவர்சிட்டிக்கும், போலீஸ், கவர்மெண்ட் கிளார்க் வேலைக்கும் போங்கடான்னு வழி காட்டி அனுப்பி வச்சிருக்கு. அவனுங்க எப்ப வந்தாலும் அக்கா அக்கானு சுத்தறாங்க இல்ல, அவங்களும் அவங்க குடும்பமும் போடுவாங்க ஓட்டு”
“பொம்பளைங்க நாங்க எப்போவும் ஒரே கட்சிதான், மதுவில்லா மாநிலம். ஈஸு சொன்ன முதல் வாக்குறுதியே என்னானு தெரியுமா? ஸ்கூல் பக்கத்துல இருக்கற டாஸ்மாக்கை தூக்கணும்ங்கிறதுதான். மாத்தி மாத்தி ஆண்ட ரெண்டு கட்சியும் ரெண்டு  தலைமுறையை குடிக்கவச்சு நாசம் பண்ணிட்டாங்க. அடுத்த தலைமுறை அப்படி ஆகக்கூடாது. இன்னும் அறிவுள்ள தலைமுறையா, உபயோகமான தலைமுறையா உருவாகட்டும். உருவாக்கறோம்”, என்றாள் ஸ்ருதி.
அவள் பேச்சுக்கு யோகிக்கே கைதட்டி விடுவோமோ என்று பயம் வந்தது. “நடந்தா நல்லதுங்க..”, நிதானமாக சொன்னான்.
“நடக்கும்ங்க.நீங்க அடிக்கடி சொல்வீங்க இல்ல? உண்மைக்கு ஒரு அழகு இருக்கு. அதை அப்படியே ஏத்துக்கோங்கன்னு. அந்த உண்மைய நா நம்பறேங்க.. சத்தியத்தை நம்பறேன். சத்தியம் ஜெயிக்கும்னா நாங்களும் ஜெயிப்போம்”
“ஸ்ருதி என்னம்மா அங்க அரசியல் மீட்டிங்கா நடக்குது? எதுக்கு இவ்ளோ குரலுசத்தி பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?”,வசந்தம்மா.
ஸ்ருதியின் “ஒன்னுமில்லம்மா,சும்மா பேசிட்டு இருந்தோம்” த்வனி பாதியாக குறைந்திருந்தது. 
பர்வதம் பூஜையறையிலிருந்து வெளியே வர, ஸ்ருதி பெட்டி பாம்பாகஅடங்கினாள். “முகுந்தன் எங்கம்மா?”
“மாடில இருக்கான்த்த”
“யோகி அந்த பக்க மாடி படிக்கு க்ரில் போட சொன்னேனே?ஏற்பாடு பண்ணிட்டியாப்பா?”
“சொல்லியிருக்கேன் பர்வதம்மா மதியம் போல வருவாங்க”
“வசந்தி..மோருக்கு உரை ஊத்த சொன்னே….”, கிச்சனுக்குள் போய் விட்டார். 
இதோ ஸ்ருதியும் யோகியின் வீட்டம்மாவாக அவளது கடமைகளை செய்ய கிளம்பி விட்டாள்.
ராகவ் எனும் ஜன்ய ராகத்தில் இருந்து பிரிந்த ஸ்ருதி, பேதமாகி பின் யோகியோடு சேர்ந்து ஸ்ருதிலயமானது. 
வணக்கம்.  

Advertisement