Advertisement

எபிலாக் 2
இதோ யோகியின் முற்றம் வைத்த பழைய கால தொட்டிக்கட்டு வீடு. ஸ்ருதி வீட்டைக் காலி செய்து குடும்பத்தோடு இங்கே வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது.
வாசலில் பெரிய திண்ணை, அதையொட்டி இரு பக்கமும் அறை. திண்ணை நடுவே போகும் ரேழி எனும் நடைபாதை.. தாண்டி அங்கணம் என்னும் சுற்றி தூண்கள் கொண்ட முற்றம். முற்றத்தை ஒட்டி இடது புறம் நீளமான பெரிய கூடம், வலதுபக்கம் கூடத்தை இணைத்து ஒட்டினாற்போல் பூஜையறை, அடுத்து பத்தாயம் (குதிர்)  இருக்கும் அறை, அது யோகியின் தானிய சேமிப்பகம், பழமையான விதைநெல்களை பத்திரப்படுத்தி உள்ளான்.
ஒரு ஆள் மட்டும் ஏறும் ஏணி, மரத்தாலான லாஃப்ட் அங்கே இருந்தது. தானிய சேமிப்பகத்தைத் தொடர்ந்து இரு படுக்கையறைகள், ஒன்று வசந்தியிடையது, மற்றுமொன்றை ஈஸ்வரி அவளிருந்தவரை உபயோகப்படுத்தி வந்தாள்.அதில் அட்டாச்டு பாத்ரூம் வசதி இருந்தது.
யோகியின் படுக்கையறை மாடியில் இருந்தது.  
கீழே வீட்டின் கூடத்தைத் தாண்டி சாப்பிடும் அறை.அடுத்து அதை ஒட்டினாற்போல் உக்ராணஉள் எனும் சமையலறை. அதில் சிங்க், சிம்னி என்று  எல்லா நவீன வசதிகளும் இருந்தது. அதைத் தாண்டினால் உட்கார்ந்து அரைப்பதற்கு ஏற்றாற்போல் அம்மி,ஆட்டுக்கல் தரையோடு பதிந்து இருந்தது. 
பின்னால் கொல்லைப்புறம், கிணறு தாண்டினால் மாட்டுத் தொழுவம். பத்திலிருந்து பனிரெண்டு மாடுகள் இருந்தன. கொஞ்சம் எட்டிப்பார்த்தால் சலசலவென பாசனத்திற்காக ஓடும் கால்வாய். 
பசுக்களையும், வாழை தோட்டத்தையும் மேற்பார்வை பார்க்கவென கோவிந்தன் என்ற ஒருவர் இருந்தார். குறைந்தது அறுபது வயதாகி இருக்கும். ஆனால் பார்த்தால் ஐம்பதுக்கு மேல் சொல்ல இயலாது. விதவையான இவரது மகளுக்குத் தான் யோகி தனது மேற்கு பாத்த நிலத்தை தானமாகக் குடுத்தான்.
கோவிந்தனின் பேரன்தான் யோகியிடம், ‘என்னோட நிலம்னு உழைச்சேன், இப்படி தட்டி பறிப்பீங்கன்னு தெரியாம போச்சு’, என்று கை நீட்டிப் பேசியது.
ஸ்ருதி இந்த ஒருவாரத்தில் வீட்டை நன்றாகப் பழகி இருந்தாள். முதல் இரண்டு நாட்கள் மட்டும் என்ன எப்படி செய்வது என்று தெரியாது தடுமாறினாள். பின் வசந்தியை பின்பற்றி ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பித்தாள். 
ஈஸ்வரியின் அறையை பர்வதம்மாவிற்கு என கொடுக்க, அவர் தனியே சங்கோஜப்படக்கூடாது என்பதற்காக வசந்தியும் அங்கே இருந்து கொண்டார்.  
வீட்டின் கூடத்தை ஒட்டி இருந்த படிக்கட்டில் ஏறினால்  மாடிக்குச் சென்று விடலாம். வாசலில் இருக்கும் திண்ணையை ஒட்டியுள்ள படிக்கட்டு வழியாகவும் மாடிக்குச் செல்ல வழி உண்டு. 
மாடியில் ஒரு நீளமான ஹால், தாண்டினால் படுக்கையறை, சின்னதாக சென்னை மாடலில் ஒரு அடுப்பங்கரை. கரண்ட் அடுப்பு மட்டுமே அங்கு இருந்தது. காஃபி , டி, பால் குடிக்க ஏதுவாக சில்லறை சாமான்கள். சிங்கிள் டோர் பிரிட்ஜ். அவ்வளவே.
அனால் விசாலமான படுக்கையறை. கிங் சைஸ் கட்டில், துணி அலமாரி ஒன்றும் பெட் ரூமில் இருந்தது. பெரிய இரு புத்தக அலமாரிகள், கூடத்திலிருக்க, சொத்து பத்திரங்கள் போன்ற முக்கிய ஆவணங்கள் வைக்கும் பழங்கால லாக்கர் யோகியின் அறையில் இருந்தது. ஸ்ரீகுட்டி, பாலா, யோகி ஸ்ருதி நால்வரும் உறங்குவது ஒரே அறையாக இருந்தாலும் கணவன் மனைவி இன்னமும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டுதான் இருந்தனர்.  
இரவு ஏழு மணிக்கு மேலாகி இருந்தது. வாடகைக்கு சென்றிருந்த யோகியின் டிராக்டர் சற்று நேரம் முன்புதான் வீட்டுக்கு வந்தது. அதை ஷெட்-டில் விட்டு வருகிறேன் என்று யோகி போயிருக்கிறான். கோகோபீட் பாக்டரியை ஒட்டி வண்டிகளுக்கான ஷெட் இருந்தது. 
எனவே சென்றவன் வர சற்று நேரமாகலாம், என்று வசந்தம்மா சொல்லி விட்டு, “பசங்களுக்கு சாப்பாடு குடுத்துட்டு நீயும் சாப்பிட்டு படு  ஸ்ருதி”, என்று அவரது இரவு உணவினை எடுத்துக் கொள்ளும் போது சொல்லி இருந்தார். பர்வதம்மா முன்பு சென்னையில்  இருந்ததைப்போல் அமைதியாகி விட்டார்.  ஆனால் இங்கே வசந்தியின் நட்பு அவருக்கு ஒரு கூடுதல் ஆறுதல். 
ஸ்ருதிக்கு எல்லாமும் கனவு போலத்தான் தெரிந்தது. ஒன்றுக்கு இரு மாமியார்கள் இவளுக்கு. ஆனாலும்.. இது சொத்தை அது சொள்ளை என்று எந்நாளும் சொன்னதில்லை. பர்வதத்தை பொறுத்தவரை அவர் என்றுமே அப்படித்தான். வசந்தமாவை இன்னும் புரியவில்லை. மகனிடம் அளவிலா பாசம், ஆனாலும் அடிக்கடி அவனிடம் முகம் திருப்புகிறார்.
“என்ன அவங்க புள்ளையா பாக்கும்போது பாசம் வழுக்கும், என்கிட்ட எங்கப்பா ஜாடை தெரியும் போதெல்லாம் மனம் சுணங்கி போவாங்க. அவங்களும் என்னதான் பண்ணுவாங்க? எங்கியாச்சும் கொட்டணுமில்ல? கண்டுக்காம விடுங்க வீட்டம்மா”, என்று இலகுவாக சொல்லிவிட்டான். 
வசந்தம்மா யோகியிடம் எப்படியோ ஆனால் ஸ்ருதியிடம் அங்கே சென்னையில் இருந்தபோது எப்படி பழகினாரோ அப்படியேதான் இப்போதும் பழகுகிறார். 
ஸ்ருதி யோகி இருவரும் பேசுவது குறைவே, மாடியில் ஆகட்டும் கீழே பெரியவர்கள் இருக்கும்போதாகட்டும் அவர்கள் சென்னையில் எப்படி இருந்தார்களோ அப்படியேதான் இருந்தனர்.
ஒரு வித்தியாசத்தை தவிர, யோகி மதிய உணவு எடுத்துக்கொள்ள இப்போதெல்லாம் வீடு வந்து விடுகிறான். ஸ்ரீக்குட்டி, அம்மா, பர்வதம்மா என்று மூவருக்கும் ஸ்ருதி பரிமாற, அப்போது பாலாவை இவன் வைத்துக்கொள்வான். அடுத்து பெரியவர்களிடம் பாலாவை குடுத்துவிட்டு இவர்கள் இருவரும் சேர்ந்து சாப்பிடுவர்.  அனாவசிய பேச்சு இருவருக்குமே இயல்பில்லை. ஸ்ரீகுட்டியிடம் அவளது பள்ளியில் நடந்தவற்றை கேட்டு தெரிந்துகொள்வான். 
 இதோ இப்போது..  சின்னவன் வசந்தாமாவிடம் இருக்க, ஸ்ரீகுட்டியோ பாட்டியிடம் தாருகாசுர வதம் பற்றிய கதையை கேட்டுக்கொண்டு இருந்தாள். அவர்கள் நால்வரும் பர்வதம்மாவின் அறையில் இருந்தனர். 
ஸ்ருதி பிள்ளைகள் இருவருக்குமான இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்தாள். அப்போது  வாசலில் யாரோ வரும் அரவம் கேட்க, ஸ்ருதி வெளியே சென்று பார்த்தாள். அங்கே கோவிந்தனின் பேரன் நின்று கொண்டிருந்தான்.
“என்னப்பா?”
“அண்ணீ அண்ணா இல்லிங்களா?”
“இல்லியே, ட்ராக்ட்டர கொண்டு விட போயிருக்காரு. போன் பண்ணி கேளு, அவர் நம்பர் தெரியும்தானே?”
“இல்ல அண்ணீ உங்க கிட்ட தான் ஒன்னு கேக்கணும்..”,தயங்கித் தயங்கி பேசினான்.
கேள்வியாக இவள் பார்க்க, “.ம்ம்ம் ..?”, இவர்கள் பேசும்போதே வசந்தி உள்ளேயிருந்து வந்துவிட்டார். 
“வந்து.. நம்ம காட்ல நாளைக்கு நடவு இருக்கு”
“சரி அதான் தெரியுமே சின்னா, நாத்து நம்ம கிட்ட இருந்துதானே வாங்கின?”, வசந்தி. அந்த இடம் பற்றி பேசினால் அவருக்குப் பிடிக்காது.
“ஆமங்கம்மா, வந்து அண்ணீ நடவுக்கு வந்து அவங்க கையால முத நாத்து எடுத்து தர முடியுங்களா ன்னு அண்ணாட்ட கேட்கலாம்னு வந்தேன்” 
“என்ன திடீர்னு..எப்பவும் முத்தாயிதான செய்யும்?” என்று வசந்தி கேட்க..
“அண்ணீயோட வீட்டை பணயம் வச்சுதான் எங்க நிலத்த மீட்டதா அண்ணன் சொன்னாங்க. அதான்..அவங்க வந்து நடவு ஆரம்பிச்சா நல்லா இருக்கும்னு அம்மா சொல்லுச்சு”
ஸ்ருதி அமைதியாகிவிட, “என்னம்மா போறியா?”, என்று மருமகளிடம் கேட்டார்.
“அவர்ட்ட கேட்டுட்டு சொல்றேம்மா”, ஸ்ருதி சொல்லிக்கொண்டிருக்க, யோகியின் யமஹா சத்தம் கேட்டது. 
“இந்த வந்துட்டாருல்ல உங்க அண்ணன், கேட்டுக்க”,என்று வசந்தி உள்ளே செல்ல.. 
வண்டியில் இருந்து சாவியை எடுத்தபடி, “என்ன சின்னா? இங்க இந்த நேரத்துல?”, யோகி.
“அண்ணே நாளைக்கு நடவு”
“அதான் நீ கேட்ட அளவுக்கு நாத்து அனுப்பிட்டேனே? ஆளு பத்தலையோ?”
“இல்லீங்கண்ணா, அண்ணீ  வந்து ஆரம்பிச்சு வைச்சா நல்லாயிருக்கும்னு அம்மா சொன்னாங்க..”,என்று சின்னா சொல்ல.. யோகிக்கு அவன் இங்கு வந்ததிலிருந்து என்னவோ குறுகுறுவென்று இருக்க.. அப்போதுதான் நிமிர்ந்து ஸ்ருதியை பார்த்தான் யோகி. 
அவள் இவனைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். இவனை மட்டும்.. ஸ்ருதிக்கு சின்னா தெரியவில்லை, உள் சென்ற வசந்தி..ம்ஹூம். 
அவனது ஊரில் மனைவியாக வரப்போகும் அவளுக்கு ஊரு தக்க மரியாதை தரவேண்டுமென்று  சென்னையில் நடந்த விஷயத்தை யோகி இப்படி இங்கே பரப்பியிருக்கிறான் என்று புரிந்து கொண்டாள் ஸ்ருதி. அவளுக்கு யோகியை இன்னும் பிடித்தது.
‘என் மரியாதை உனக்கு அவ்ளோ முக்கியமா?, அப்படி என்ன செஞ்சிட்டேன் உனக்கு? ஏன்டா இப்படி கிறுக்கு பிடிக்க வைக்கிற?’  என்பது போலப் பார்த்தாள்.
பார்வையா அது? ப்பா. ஆளை விழுங்கும் பார்வை. யோகிக்கு ஒரு நொடி சுற்றியிருந்த உலகம் மறைந்தே போனது. 
கண்ணை மூடிக்கொண்டவன், சின்னாவிடமும் திரும்பி, “அம்மா இருக்காங்கல்ல? அவங்க இருக்கும்போது அடுத்தவங்க பண்ணா நல்லாயிருக்காது சின்னா. வழக்கத்தை மாத்தாத. மரியாதை மனசுல இருந்தாப் போதும். புரியுதா?”, என்றான்.
“சரிங்கண்ணா.வர்றேங்க, அண்ணீ போயிட்டு வர்றேங்க”, என்று டிவிஎஸ் பிப்டி யில் சென்றான் சின்னா எனும் சின்னத்துரை. யோகி திரும்பி பார்க்கும்போது ஸ்ருதி அங்கே இல்லை உள்ளே சென்றிருந்தாள்.  
பிள்ளைகளோடு யோகியும் உணவினை முடித்து விட, பாலாவை தூக்கிக்கொண்டு யோகியும் ஸ்ரீகுட்டியும் மாடிக்கு சென்றனர். 
வாசலில் யோகியைப் பார்த்ததோடு சரி அதன் பின் ஸ்ருதி அவனை நிமிர்ந்தும் பார்த்தாளில்லை. 
ஆனால் தன் வீட்டம்மாவின் முக விகசிப்பும், படபடவென அடித்துக் கொள்ளும் கண்களும், சின்ன சின்ன பெருமூச்சுகளும்,தனது பார்வையை எதிர்கொள்ள தயங்கும் இந்த வீட்டுக்காரம்மா யோகிக்குப் புதிதாகத் தெரிந்தாள்.
சிலசமயம் அவளது கண்கள் கலங்குவது போல தெரிந்தது. 
‘என்ன பிரச்சனைன்னு சொன்னாத்தான தெரியும்?எங்கம்மா ஏதாச்சும் பேசிச்சா? ஆனா அது என்னா பார்வ? அம்மாடியோவ். கள்ளு குடிச்சாப்ல இல்ல இருக்கு?’, பாலா உறங்கிவிட, அவனக்கு அணைவாக தலையணை குடுத்து மெத்தையில் படுக்க விட்டான். ஸ்ரீக்குட்டி உறங்கி வெகு நேரமாகி இருந்தது. 
மணி பத்தாகி இருந்தது. இன்னமும் வீட்டம்மா மேலே வரவில்லை. கைகளை விரித்து நெட்டி முறித்தான்.  காலையில் இருந்து தொடrந்து வேலை செய்தது அலுப்பாக இருந்தது. எப்போதும் போல பாலாவின் அருகே படுத்துக் கொண்டான். 
‘அன்று மாதேஷின் வீட்டில், ‘நா பேர்ல மட்டும்தாங்க யோகி’,என்று  சொன்னபோது சுலபமாக இருந்தது. ஆனால், செயல்படுத்த ஒரு தயக்கம்.. பயம் இருக்கவே செய்கிறது. இன்று கேட்போம் நாளை கேட்போமென்று நாளென்னவோ நகர்கின்றது. வீட்டம்மாவோடு ஊர்க்கதை எல்லாம் பேசியாகிறது, ஆனால் என்கதையைப் பேச நா எழவில்லை’, என்று யோசித்தவாறு படுத்திருந்தான். 
மெல்லிய மெட்டி ஒலியோடு ஸ்ருதி வந்தாள். கையில் சுத்தம் செய்யப்பட்ட பாலாவின் பாட்டில் இருந்தது. யோகியின் அருகே இருந்த டேபிளில் வைத்து விட்டு ஸ்ரீகுட்டியின் புறம் அவள் நகர, தலையில் இருந்த மல்லியின் வாசம் ஆளைக் கிறங்கடித்தது.
“வீட்டம்மா இந்த ஊரை அவங்க ஊரா ஏத்துக்கிட்டாங்க, என்னை எப்போ வீட்டுக்காரனா சேத்துப்பாங்க?”,என்று கேட்டே விட்டான். 
“எப்போ சேக்கமாட்டேன்னு சொன்னாங்களாம் உங்க வீட்டம்மா?”,என்று குரல் மட்டும் வர, உள்ளே அடுக்களையில் இருந்தால் ஸ்ருதி.
‘அம்மாடியோவ்.’,என்று அதிர்ந்து, ‘அப்ப நான்தான் குழப்பிட்டு இருக்கேனா?’, எழுந்து சென்று அடுக்களை வாயிலில் நின்றான். ஸ்ருதியோ கடமை கண்ணாயிரமாக ப்ரிட்ஜில் இருந்த பாலை எடுத்து, பாத்திரத்தில் விட்டு காய்ச்ச ஆரம்பித்தாள்.
‘இவங்க பேசினாங்களா இல்ல.. எனக்கு பிரமையா இருக்குமோ?’, பிரிட்ஜை திறந்து தலையை விட்டு அதிலிருந்த தர்பூசணி துண்டை கையில் எடுத்து,“சேத்துக்கறேன்னும் சொல்லலியே?”, என்று முணுமுணுத்து நிமிர..
ஸ்ருதி சமையல் மேடை மேல் சாய்ந்து கை கட்டியபடி, யோகியைப் பார்த்து நின்று கொண்டிருந்தாள். புருவம் உயர்த்தி, “நாலு பேரு முன்னால கையெழுத்தே போட்டு குடுத்தாச்சு, தனியா சொல்லணுமோ?” என்று தலைசாய்த்துக் கேட்டாள் ஸ்ருதி.
மெல்ல கிச்சன் மேடையருகே சென்று திரும்பி அவளைப்போலவே சாய்ந்து கொண்டவன், ஸ்ருதியின் காதருகே குனிந்து, “சொல்லவேணாம், குறைஞ்சது கொஞ்சநேரம் முன்ன வாசல்ல பாத்தீங்கள்ல அப்படியொரு பார்வை பாத்திருக்கலாமில்ல?”, என்று  கேட்டான்.
பக்கவாட்டில் நின்றவனின் குரல் என்னவோ செய்ய, ஸ்ருதியின் பிடரியில் இருந்த பூனை முடிகள் சிலிர்த்து  நின்றது. அவன் புறமாக மெல்லத் திரும்பி, விழி விரித்து யோகியைப் பார்த்தாள்.  
யோகிக்கு மூச்சடைத்து போயிற்று. வார்த்தைகள் தேட மறுத்த மூளை, அவனது உணர்வுகளை வெளிப்படுத்த  எப்போதும்போல பாடலை தேர்ந்தெடுத்தது.
“பாதக்கத்தி என்ன ஒரு பார்வையால கொண்ண…”, தனது மோகனமாக குரலில் பாடினான். ஸ்ருதி யோகியின் ஜீவனானாள்.

))))))))))))

Advertisement