Advertisement

epilogue 1
யோகி மாதேஷிடம் சொன்னது போல, முன்பே குறித்த நாளில் ஈஸ்வரி மற்றும் அவளது குழந்தையை கூட்டுக்கொண்டு ஈஸ்வரியின் புக்ககம் சென்றான். பின் தனது அன்னையுடன் சொந்த ஊர் சென்று ஸ்ருதியை அங்கு கூட்டிச்செல்ல என்ன தேவையானவைகளை செய்ய வேண்டுமோ அனைத்தையும் திட்டமிட ஆரம்பித்தான்.
வசந்தம்மா யோகியிடம்  இரண்டு மூன்று முறை ஸ்ருதியைப் பற்றி கேட்டுப் பார்த்தார். அவன் பிடி கொடுக்காமல் பேச, வசந்திக்கே சந்தேகம் வந்தது. இந்த ஈஸ்வரி எதாவது தப்புந்தவறுமா புரிஞ்சிட்டு சொல்றாளோ? என்று நினைத்தார்.  
உடனே அலைபேசியில் மகளை பிடித்துக் கேட்க, “யம்மா. அண்ணா-க்கு அந்த நோக்கம் இருக்குன்னு எனக்குத் தெரியும் நீ ஆகவேண்டியத பாப்பியா? அத விட்டுட்டு .. சரி ஒன்னு பண்ணு.. உன்னோட ஒன்னு விட்ட தம்பி பொண்ணு..அது யாரு மகேசு, மகேஸ்வரி. அதோட ஜாதகம் வந்திருக்கு-ன்னு அண்ணன்கிட்ட சொல்லு. அப்பயும் உன் புள்ள ஊமைக்கோட்டான் மாதிரி இருந்தா அவளையே கட்டி வை. இல்ல, நா இப்படியே காவி கட்டிட்டு கேதாரம் போறேன்னு சொன்னான்னு வை.. அப்போ இந்த புள்ளைய பத்திக் கேளு”,என்றவள் தொடர்ந்து.. 
“ம்மா. நீயா கேக்கலைன்னா, உம்புள்ள எப்பயும் யோகியாத்தான் நிப்பான். வேண்ணா, சிலையா செஞ்சு வச்சு சாமி கும்பிட்டுக்கோ”, என்று அன்னையை வறுத்தெடுத்தாள் ஈஸ்வரி.
‘அன்னிக்கு பேசினத்தோட சரி,அதுக்கப்பறம் இந்தண்ணன் ஒரு வார்த்த கூட ஸ்ருதி பத்தி பேசல. அவங்கதான் சொல்லாம கொள்ளாம போனாங்கன்னு பாத்தா, இந்த அண்ணனுக்கு என்ன வந்திச்சு? என்னமோ இப்போவே கட்டிக்கறா மாதிரி அன்னிக்கு அவ்ளோ சீன போட்டுச்சு’, மடியில் கிடந்த மகனிடம், “அடேய் உம்மாமனுக்கு கல்யாணம் முடிக்கறதுக்குள்ள.. நீ காலேஜுக்கே போயிடுவ போலிருக்கே?”,என்று புலம்பினாள். 
அப்படி புலம்பலோடு விட்டு விட்டால் அது ஈஸ்வரியா? உடனே  அண்ணனுக்கு அலைபேசினாள். “அண்ணே யோகண்ணே,அண்ணீ வரப்போறாங்க போல?”, என்று நடிகர் செந்திலைபோல ஆரம்பிக்க.. யோகி ‘ஆஹா ஆரம்பிச்சிட்டால்ல?’, என்று புன்னகைத்தான்.
“என்ன சொல்ற ஈஸு?”, புனா சென்றதோ,அங்கு ஸ்ருதியோடு பேசியதையோ யோகி யாரிடமும் சொன்னதில்லை. 
ஆனால் அவனுக்குத் தெரியும். தனக்கு ஒன்றும் செய்ததில்லை என்ற குற்ற உணர்வோடு இருக்கும் தன் அன்னையோ, ஈஸ்வரியோ இதை அப்படியே விடமாட்டார்கள் என்று. இதோ அவன் யூகித்தவாறே, ஊர் சென்ற நான்கைந்து நாட்களில் ஈஸ்வரி, ஸ்ருதியின் விஷயம் பற்றி கேட்டுவிட்டாள்.
“ஆங்.உனக்கு பொண்ணு பாக்கறாங்களாமே எங்கம்…ம்மா? தெரியாது?”,என்று இழுக்க..
“ப்ச்.சும்மா இரு ஈஸ்வரி, நானே என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கேன்”, வருத்தமாக யோகி. 
“நீ சரிப்பட மாட்ட, உனக்கு அந்த மகேஸ்வரிதான்னு தலைல எழுதி இருந்தா நா என்ன பண்ணமுடியும்?”
“அதுக்கு நா இப்படியே இருந்துட்டு போவேன்”, என்று வெடுக்கென சொன்னவன், “இங்கபாரு என்னை கேக்காம யார்கிட்டயும் எதுவும் பேச வேணாம்னு அம்மாகிட்ட சொல்லிடு ”,என்றான்.
“ஏய் யோகண்ணா,இதுக்கு என்னதான் வழி?”
“அவங்க வாயைதிறக்க மாட்டாங்க, அவங்க மேலயும் குத்தம் சொல்ல முடியாது, பர்வதம்மா இருக்கும்போது அவங்கள மீறி ஏதாச்சும் சொல்லுவாங்களா? நான்தான் முன்னாலேயே யோசிக்காம போயிட்டேன்..”, வக்கீலாக சரியான பாயிண்டை தங்கைக்கு எடுத்துக் கொடுத்தான். 
சிறிது நேரம் யோசித்த ஈஸ்வரி, “நீ கவலைப்படாதண்ணா, அம்மாவ சென்னைக்கு போயி நேர பர்வதம்மாட்ட பேச சொல்றேன். ஆமா இல்லன்னு அவங்க சொல்லட்டும்”, என்று ஈஸ்வரி அண்ணனுக்கு தேறுதல் சொன்னாள்.
‘உங்க அண்ணி ஒத்துக்கிட்டாங்க’ன்னு தங்கையிடம் சொல்லிவிடலாம்தான். ஆனால் இது முழுக்க முழுக்க பெரியவர்கள் பார்த்து முடிவு செய்த திருமணமாக இருந்தால்தான் பின்னால் ஒரு பேச்சு வராது. அதிலும் யோகி ஸ்ருதியின் வீட்டிலேயே வாடகைக்கு இருந்ததினால் இன்னமும் ஜாக்கிரதையாக இந்த விவகாரத்தை அணுக வேண்டுமென்று நினைத்திருந்தான்.
நூறில் ஒரு வாய்ப்பாக பர்வதம்மா வேண்டாமென்றுவிட்டால் என்ற பதைப்பும் யோகிக்கு இல்லாமலில்லை. நல்லதே நடக்கட்டும் என்று  அவனது குலதெய்வமான அசலதீபேஸ்வரருக்கு வேண்டுதல் கூட வைத்திருந்தான். 
அடுத்த வாரத்திலேயே ஈஸ்வரியின் தூண்டுதலின் பேரில் வசந்தி சென்னை சென்று பர்வதத்திடம், “பர்வதம்மா, நா ஒரு விஷயம் சொல்லுவேன்.நீங்க கொஞ்சம் கோச்சுக்காம கேக்கணும்..”,என்ற பீடிகையோடு ஆரம்பித்து.., 
“என் புள்ளைக்கு உங்க ஸ்ருதியை கட்டி குடுப்பீங்களா?, அவனை பத்தி உங்களுக்கு நல்லாத் தெரியும். எப்படி பட்டவன்னு.. எங்களையும் உங்களுக்குத் தெரியும். ஸ்ரீக்குட்டி கிட்ட இப்..ப கூப்பிட்டு கேட்டு பாருங்க, ‘ யோகண்ணா ஊருக்கு வரியா? ன்னு, மாட்டேன்னு ன்னு குட்டி சொல்லட்டும்’, இந்தப் பேச்சையே விட்டுடறேன்”, என்றார்.
“….”, வசந்தி பேசுவதைக் கேட்ட பர்வதம்மாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. என்றாவது மாதேஷ் இப்படி ஒன்றைக்  கேட்பான் என்று அவர் எதிர்பார்த்ததுதான். அப்படி கேட்கும்போது அட்டியேதும் சொல்லாமல் ஒதுங்கி நிற்க வேண்டும் என்று முன்பே யோசித்தும் வைத்திருந்ததுதான். ஆனால் வசந்தி கேட்டதுதான் அவருக்கு ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி. என்ன சொல்வதென்று தெரியாமல், எப்படி வசந்திக்கு இப்படி ஒரு எண்ணம் வந்தது? என்று நினைத்து திகைத்திருந்தார்.  
“நீங்களும் ஸ்ருதியை பத்தி புலம்பிட்டே தான இருக்கீங்க? கண்ணுக்குள்ள வச்சு பாத்துகிட்ட பொண்ணு, இப்படி ஆம்பள இல்லாம எல்லாத்துக்கும் அலையறான்னு? நீங்களும் கோவிலும் காவேரியும் தோப்பும் துறவுமா இருக்கலாம் எனக்கு ஒத்தாசையா எங்களோட வந்துடுங்க, மாட்டேன்னு சொல்லாதீங்க”, என்று கோரிக்கை வைத்தார்.
வசந்தியின் கையைப் பிடித்துக்கொண்டு சிறிது நேரம் மெளனமாக இருந்த 
பர்வதம்மா, நிமிர்ந்து கூடத்தில் இருந்த ராதாகிருஷ்ணனைப் பார்த்தார்.மந்தகாசமாக புன்னகையோடு நின்ற முகுந்தனைக் கண்டதும், பர்வதத்திற்கு மகன் ராகவனின் நினைவு வந்தது. ஏனோ இன்று அந்த நீலவண்ணனின் முகம் மிகப் பொலிவாக இருப்பதைப்போல தோன்றியது.    
“நா.. எனக்கு.. என்ன சொல்றதுன்னே தெரில வசந்தி..”,என்று தழுதழுத்தவர், “ஸ்ருதி ஆபீஸ்லேர்ந்து வரட்டும். கேட்டுடறேன்”, என்று மனதார சம்மதம் சொன்னார்.
அடுத்தென்ன? இவையனைத்தும் ஈஸ்வரிக்கு அலைபேசியில் ஒலிபரப்பு செய்யப்பட..அது அப்படியே யோகிக்கு சென்றது. உடனே யோகி தனது வீட்டம்மாவுக்கு அழைத்து விட்டான்.
“ம்ம். சொல்லுங்க”
எப்போதும் போல நேராக விஷயத்திற்கு வந்தான். “சாயங்காலம் வீட்டுக்கு போனதும் பர்வதம்மா உங்ககிட்ட நம்ம கல்யாணம் பத்தி பேசுவாங்க. அதுக்குத் தயாரா போங்க. எல்லாம் உங்க இஷ்டம்ன்னு சொல்லி முடிச்சிடுங்க.”, என்றான் வேகமாக. 
“யோகி.. “,என்றழைத்து பின் தயங்கி.., ”நா எப்ப என்ன யோசிச்சாலும் அவங்களையும் மனசுல வச்சிட்டுத்தான் முடிவெடுப்பேன். அத்தை உங்களுக்கு சரி சொல்லுவாங்கன்னு எனக்கு நல்லா தெரிஞ்சுதான் நா உங்ககிட்ட என் முடிவை சொன்னேன்”, என்று பதில் சொல்லி ஸ்ருதி யோகியை அசர வைத்தாள்.       
என்னைவிட அத்தை முக்கியமா? என்று அவனது காதல் மனது போர்க்கொடி உயர்த்த, ஆமாம் ஸ்ருதியைப் பொறுத்தவரையில்..   பர்வதம்மா, என்னைவிட முக்கியமானவர்தான் என்று நியாயமான மனது பதில் சொன்னது. 
யோகியிடமிருந்து சிறிது நேரம் எந்த பதிலும் வராதுபோக, தான் சொன்னதை தவறாக நினைத்துக் கொண்டானோ என்று எண்ணி, “யோகி உங்களுக்கு வருத்தமா இருந்தா..இப்போகூட ஒன்னும் கெட்டுப்போகல.. எல்லாத்தையும் நிறுத்திடலாம்”, மெதுவாக என்றாலும் உறுதியாக சொன்னாள் ஸ்ருதி.
அதில் இன்னமும் வெகுண்ட யோகி, “ஹலோ வீட்டம்மா, யோகி சொன்னா சொன்னதுதான். நீங்க இல்ல. இனி பர்வதம்மாவே மாட்டேன்னு சொன்னாலும் உங்கள கட்றது கட்றதுதான். ஆனத பாத்துக்குங்க”
“யோகி.. நா சொல்றத புரிஞ்சுக்கோங்க”
“அய்ய.. நீங்க சொன்னதும் போதும் நா புரிஞ்சிக்கிட்டதும் போதுங்க, ஒருத்தன் இங்க கிடந்து அல்லாடறது புரியாம.? போனை வைங்க”, யோகிக்கு கோபம் கோபமாக வந்தது. 
ஸ்ருதி பெருமூச்சோடு அழைப்பினை துண்டித்தாள். காதல்தான். யோகியைப் பிடித்து இருக்கிறதுதான், அதற்காக அத்தையை விட முடியுமா என்ன? கடமையா காதலா என்றால் கடமைதானே முன்னே வருகிறது?
யோகி கோபமுற்றால் தான் வருந்துவது ஏன்? எப்படி இந்த ரசவாதம் நடந்தது? என்று தன்னைத்தானே ஆயிரம்முறை கேட்டுவிட்டாள்.
ஸ்ருதியை பொறுத்தவரை ராகவ் ஒரு அருமையான கணவன். ஆனால் விதிவசத்தால் அவன் இல்லையென்றான பின் தம்பி மாதேஷ்,  ‘கண்டிப்பாக உனக்கு வாழ்க்கை இருக்கிறது. அதை நான் அமைத்துத் தருகிறேன்’, என்று முன்வந்தது இந்த எண்ணத்திற்கு முதல் வித்தாய் இருந்திருக்கலாம்.
தொடர்ந்து அவனை அடித்ததும், கோபமாக அவனை வீட்டை விட்டு வெறியேற சொன்னதும், அதற்குஅவன், ‘நீ அப்பா மாதிரி ஆகமாட்டேன்னு சொல்லு, மாமா வோட நினைவுகள்ல தங்கிட மாட்டேன்னு சொல்லு’, என்று கத்தியதும்  நினைவுக்கு  வந்தது. ஒருவேளை அப்போதே நான் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டேனோ?
யோகியை முதன் முதலில் சந்தித்த போது ஏட்டிக்கு போட்டி பேசும் மனிதன் என்று பதிவு செய்துகொண்ட மனம், பின் தவிர்க்க இயலாமல் கிடைத்த அவனது உதவி, எகத்தாளம் பேசினாலும் எல்லை தாண்டாத அவனது நட்பு, இழப்புகள் ஆயிரமிருந்தும் அனைத்திற்கும் மேலாக அவனது தன்னலம் பாரா செய்கை அனைத்தும் சேர்த்து அவன் பால் ஈர்த்துவிட்டதோ?
சொன்னானே? ‘மாற்றம்தாங்க எப்போதும் மாறாததுன்னு?’, மெல்ல புன்னகைத்தாள். யோகி இதுவரை என் பெயர் சொல்லியதில்லை, ங்க வையும் விடவில்லை.  இவளறிந்த யோகி, தன்னை பெயர் சொல்லி அழைக்க மாட்டான். பன்மை விகுதி கூட எப்போதும்  தொடரலாம்.
அகட விகடம் பேசினாலும், அட்சர சுத்தமாய் பேசினாலும் உண்மையே  பேசுவான்.ஆமென்றால் ஆம். இல்லையென்றால் அஃதில்லை. உள்ளொன்று வைத்து புறமொன்று வராதவன், வார்த்தைகளில் கூட காயப்படுத்த நினையாதவன் யோகி.  இவன் என் யோகி.
)))
அலுவலகத்தில் இருந்து வீடு சென்றதும், ஸ்ருதியிடம் பர்வதமும் வஸந்தியைப்போல பெரிய பீடிகையோடு தான் ஆரம்பித்தார், கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கும் மேல் பேசி, “யோகி நல்லவன்னு எனக்கு தெரியும்..அதான்..”, என்று நிறுத்த..
ஒரு பெருமூச்சோடு, “எனக்கு ஒரே கண்டிஷன்தான் அத்த..  நீங்க எப்போவும் எங்கூடத்தான் இருக்கனும்.அதுக்கு சரின்னு சொன்னா நா ஒத்துக்கறேன்”, ஸ்ருதி பர்வதத்தின் மருமகளல்ல மகள் என்று சொல்லாமல் சொல்லி முடிவாக முடித்து விட்டாள்.
பர்வதத்தின் கண்கள் கலங்க, “நிச்சயமா.. உங்கூடவேத்தான் இருப்பேன். நீ சரின்னு மட்டும் சொல்லு போதும்”, என்றார். 
“ம்ம். உங்களுக்கு பிடிச்சிருந்தா.. சரி”, என்று சொல்லி தனது சம்மதத்தை தெரிவித்தாள் ஸ்ருதி. 
அடுத்தடுத்து மளமளவென காரியங்கள் நடந்தது. மூன்று மாதம் பொறுத்து ஒரு நல்ல சுபயோக சுப தினத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்ட யோகி ஊரில் உள்ள தனது வீட்டின் மாடியை  விஸ்தரிக்கும் வேலையை செய்து கொண்டுள்ளான்.
அவன் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் கேட்காமல், ஸ்ருதி தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டாள். இன்னும் இரண்டு மாதத்தில் ஸ்ரீகுட்டிக்கு வருடாந்திர தேர்வு முடிந்துவிடுமென்பதால் இவர்கள் இங்கே சென்னையில் இருக்கிறார்கள். ஸ்ரீகுட்டியின் பள்ளியில் மாற்று சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்து விட்டனர்.
இனி யோகியின் ஊரில்…
))))))))))  

Advertisement