Advertisement

part 3 1

மறுநாள் காலையில் மருத்துவமனைக்குச் சென்ற ஸ்ருதி தனது தந்தையைப் பார்த்தாள். அவர் இதுவரை கண் விழிக்கவில்லை. வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்துக்கொண்டு இருந்தார். சுவாசித்துக் கொண்டு மட்டும். 

மருத்துவர்கள், ‘வென்ட் எடுத்துடலாம்னு நீங்க சொன்னா..”, என்று இழுத்தனர். வேறு சில நோயாளிகளுக்கு வென்ட்-க்கான அவசியம் இருக்கவே, பிழைக்க வாய்பில்லையென்று தீர்மானமாக தெரிந்த நோயாளியான இவருக்கு செயற்கை சுவாசத்தை நீக்கி விடலாமென்று அவர்கள் நினைத்தனர். 

“சாயங்காலம் வரைக்கும் பாக்கலாமா டாக்டர்?”, என்று மாதேஷ் கேட்க,மருத்துவர்கள் சம்மதம் தெரிவித்தனர். இந்த பேச்சுவார்த்தையை கேட்டபடி ஸ்ருதி தந்தையின் அருகிலேயே நின்றாள்.கையைப் பிடித்துக்கொண்டு,”அப்பா..அப்பா”, என்றாள். சலனமின்றி கிடந்தவரைப் பார்த்து கண்களில் நீர் திரண்டது. சரி விதி விட்ட வழி என்று மனதை தேற்றிக்கொண்டாள்.

மாலை இவர்களாக செயற்கை சுவாசம் நீக்கும் வரைகூட அவர் தாங்கவில்லை. நான்கு மணிக்குள்ளாகவே அவர் இறைவனடி சேர்ந்திருந்தார். “அப்பா, உங்க மூச்ச நிறுத்தின பாவம் எனக்கு வேண்டாம்னு சீக்கிரமே போயிட்டீங்களாப்பா?”, என்று மாதேஷ் கதறினான். 

“ம்ப்ச். அவர் இன்னும் வேதனைப்படாம போனாரில்லை, அப்படி நினைச்சுக்கோ,போ போயி மத்த வேலைய பாரு”, என்று ஸ்ருதிதான் தன் கண்ணீருக்கிடையேயும் தம்பிக்குத் தேறுதல் சொன்னாள்.

சில நேரங்களில் இவர்களது சம்பிரதாயங்கள் என்ன எப்படி செய்வது என்று தெரியாமல் மாதேஷ் முழிக்க.. ஸ்ருதியும் பர்வதமும் சொல்லிக் கொடுத்தனர். இரு நாட்கள் மட்டுமே அது துக்க வீடுபோன்று இருந்தது. பின் அனைவருமே கொஞ்சம் இயல்பாய் விடுமுறை நாட்களை போல சிரித்துப் பேசி அளவளாவினர். வெகு நாட்களுக்குப் பின் ஸ்ருதி தனது திருமணத்திற்கு முன்பான வாழ்க்கையை மாமியாரைடும் தம்பி மனைவியோடும் பேசி அசைபோட்டு மகிழ்ந்தாள். 

பத்தாம் நாள் காரியத்தின்போது யோகியும் விஷாலும் வந்து துக்கம் விசாரித்துச் சென்றனர். ஆயிற்று இதோ அதோவென ஸ்ருதி அப்பாவின் காரியங்கள் முடிய, பின் அனைத்தையும் சரிபார்த்து வீட்டை சுத்தம் செய்யவென இரு வாரங்கள் ஆனது.

மாதேஷ், “அக்கா நீ இங்கயே இருந்துடேன்க்கா”, என்று வெகுவாக வலியுறுத்தினான். அவன் மனைவியும் கணவனை வழிமொழிந்தாள். ஒருநாள் மாலை தீநீர் அருந்தும் நேரம், மாதேஷின் நண்பன் என்று ஒருவன் வீட்டிற்கு வந்திருந்தான்.கூட அவரது ஐந்து வயது மகனும்.

பரஸ்பர அறிமுகத்திற்கு பின் ஸ்ருதி எழுந்து உள்ளே அறைக்குச் சென்று விட, மாதேஷ் பர்வதம்மாவிடம், “அத்த இவர் என் ஆபீஸ்-ல வேலை பாக்கறார். வொய்ப் கோவிட்-ல இறந்துட்டாங்க, அங்க நம்ம வீட்ல சொன்னேனில்ல?”,என்று சொன்னதுமே பர்வதத்திற்கு மாதேஷ் என்ன சொல்ல வருகிறான் என்பது புரிந்தது. எதனாலோ சட்டென அவரது மனம் சுணங்கியது. அவ்வுணர்வு முகத்தில் பிரதிபலிக்க, நொடிக்கும் குறைவான நேரத்தில் பர்வதம் சுதாரித்து அதை மாற்றிக் கொண்டார்.  

“ம்ம்”, என்று வந்திருந்த புதியவனைப் பார்த்து தலையசைத்தார். 

மாதேஷ் அவரோடு வந்த பையனிடம், “வா தம்பிங்க கூட விளையாடலாம்”, என்று பிள்ளைகள் இருக்கும் அறைக்கு கூட்டிப்போனான். வரும்போது மனைவியிடம், இரண்டு தீநீர் தயாரிக்கச் சொல்ல அடுக்களை செல்ல,அங்கே ஸ்ருதி இருந்தாள். 

அவள் அருகே சென்று  மெதுவாக தயங்கியபடி, ”அக்கா ஒன்னு சொல்லுவேன் நீ கோச்சுக்க கூடாது, அன்னிக்கு உன் வீட்ல என் பிரென்ட் ஒருத்தர்.. விடோயர் இருக்காருன்னு சொன்னேன் இல்ல? அவர் வந்திருக்காரு”, என்றான்.

முன்பு போல சுள்ளென கோபம் வரவில்லை. மாதேஷின் எண்ணம் அவனுடையது அவனுக்கு அது நியாயமானதே என்று புரிந்தவளாக ஸ்ருதி அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டாள். ஆனாலும், “நா நிம்மதியா கொஞ்ச நாள் உங்க வீட்ல இருக்கறது உனக்கு பிடிக்கலையாடா?”, என்று விளையாட்டாகக் கேட்டாள் ஸ்ருதி.. 

அவசரமாக, “சே சே.. அப்டில்லாம் இல்லக்கா. இவர் சும்மா எதேச்சையா வந்தார்”, என்று படபடத்தான் மாதேஷ்.

“போ டீ போட்டு உன் பொண்டாட்டிட்ட குடுத்தனுப்பறேன்”,என்று பேச்சை அத்துடன் கத்திரித்தாள். நீ சொன்ன அந்த மனிதனைப் பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்ற செய்தி அதில் இருந்தது. அதோடு கூட யோகியின் ‘சாதாரணமா இருங்க வீட்டுக்காரம்மா’ வும் அவனது புன்னகை முகமும் தென்றலாய் வருடியது. ஆமாம் என்னை எல்லாவற்றையும் சாதாரணமான கடக்க வைத்தவன் அவன்தான் என்று மனதோடு சொல்லிக் கொண்டாள் ஸ்ருதி. 

இந்த பதினைந்து நாட்களாக, ராகவ் இருந்தபோது,அவளது சென்னை வீட்டில் எப்படி எவ்வித கவலையுமின்றி இருந்தாளோ, அதே போல் ஸ்ருதி இங்கே தம்பியின் வசிப்பிடத்தில் உணர்ந்தாள். 

யோகி இரண்டு மூன்று முறை ஸ்ருதியோடு அலைபேசியில் பேசினான். வீடு விவகாரங்கள், இரவு காவலாளிக்கு, வேலைகாரம்மாவுக்கு சம்பள பட்டுவாடா செய்வது குறித்து பேசினான். அதன் பின் ஈஸ்வரியை ஊருக்கு அழைத்து செல்லப் போவதை தெரிவித்தான். 

விஷயம் தெரிந்ததும், பர்வதம்மா வசந்தியிடமும், ஈஸ்வரியிடமும் நிறைய பேசினார். வசந்தி, ‘நீங்க எப்போ இங்க வரீங்க?’என்று கேட்டிருப்பார் போலும். பர்வதம் ஸ்ருதியின் முகம் பார்த்து, “தெரில.. ஸ்ருதிகிட்டதான் கேக்கணும்.ஆனா ஈஸ்வரி புறப்படறத எங்களுக்குக்காக தள்ளி போடாதீங்க. நல்ல நாள் பாத்துதான முடிவு பண்ணி இருக்கீங்க? அதனால நீங்க போற படி கிளம்பிடுங்க. அதுக்குள்ள நாங்களே வந்துடுவோம்னு நினைக்கறேன்..’, என்று சொல்லிவிட்டு, வசந்தியை எப்போதும் தொடர்பில் இருக்குமாறு கூறிவிட்டு பேசியில் அழைப்பைத் துண்டித்தார் பர்வதம்.

ஸ்ருதிக்கு ‘எதற்கு சென்னை செல்லவேண்டும்? இப்படியே இருந்துவிட்டால் என்ன?’ என்ற யோசனை மனதில் வந்தது. ‘ஸ்ரீகுட்டிக்கு பள்ளி ஆன்லைனில் நடந்ததால்,அவளுக்கு படிப்பு கெடுமென்ற பிரச்சனை இல்லை. வேலை.. அதில் வேண்டிய அளவு விடுப்பிருந்தது. மிஞ்சி மிஞ்சி லாஸ் ஆஃப் பே ஆகும். போனால்தான் என்ன? வேலையே போனாலும் என்ன குடியா முழுகி விடும்?’

இதோ இப்போது இருப்பதுபோல வீட்டில் பிள்ளைகளோடு நேரம் செலவழித்துக் கொண்டு சந்தோஷமாக இருந்து விடமுடியாதா என்ன? பின்னாளில் அவர்களுக்கு சிறகு முளைத்து விட்டால்?.. இருக்கவே இருக்கிறது அத்தை காட்டிய பாதை. நல்ல புத்தகங்களும், சிவபுராணமும், தினசரி கோவில் செல்வதும் என்று நாட்களை கடத்தினால் ஆயிற்று’, என்ற சிந்தனையும் எழுந்தது. கூடவே ஒரு சலிப்பும் என்ன வாழ்க்கடா இது? என்பதுபோல மனதில் வந்து உட்கார்ந்து கொண்டது. 

வசந்தியிடம் பேசி முடித்த பர்வதம் ஸ்ருதியைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தார். “என்ன யோசனை ஸ்ருதி?”

“இல்லத்தை, ஸ்ரீகுட்டிக்கு ஆன்லைன் க்ளாஸ்தான் போகுது. எனக்கு இங்க இன்னும் கொஞ்ச நாள் இருக்கலாம்னு தோணுது”, என்று இழுக்க..

பர்வதம், “ம்ம். உன் வேல..?”, 

“அது.. தேவகி மேம் கிட்ட சொல்லிட்டு தான் வந்தேந்த்த. என்ன? லாஸ் ஆப் பே ஆகும். ம்ப்ச். பாத்துக்கலாந்த்த”, என்று விட்டேற்றியாக பதிலுரைத்தாள். 

‘என்னாச்சு இந்த பொண்ணுக்கு? சாதாரணமா லீவ் போடுன்னு சொன்னாலும் கேக்காம ஆபீஸ் போவா? இப்ப எதுக்கு இப்படி எதுலயும் பிடிப்பில்லாம இருக்கா?’,என்று பர்வதம் ஸ்ருதியை யோசனையோடு பார்த்தார். 

ஆனால்,  “ம்ம்.சரி”, என்பதோடு நிறுத்திக்கொண்டார். 

ஆனால் அங்கே சென்னையிலோ.. ஈஸ்வரி யோகியை பிடி பிடி என்று பிடித்தாள். “‘ஏன் யோகண்ணே நீ ஸ்ருதி கூட பேசும்போது ஏதாவது மிரட்டினியா?”

“எது நா மிரட்னனா? அவங்க அப்படி சொன்னாங்களா?”, என்று தங்கையிடம் எகிறினான் யோகி. 

“அப்படி நேரடியா சொல்லுவாங்களா? நாம போற வரைக்கும் வரமாட்டோம்ங்கிறா மாதிரி பேசினாங்க அதான் கேட்டேன்”

“சும்மா அம்மா கேட்டதை வச்சு பேசாத ஈஸு”, என்று தங்கையைக்  கடிந்தான் யோகி.

“இல்லண்ணா, அம்மா பர்வதம்மாட்ட பேசும்போது, நாங்க கிளப்பி ஊருக்கு போறோம்னு சொன்னதுக்கு.. சரி நாங்க அதுக்குள்ள வந்தாலும் வருவோம். இல்லன்னா எங்களுக்குக்காக காத்திட்டு நிக்காதீங்க நீங்க கிளம்பி போங்கன்னு சொன்னாங்க. நா பக்கத்துலதான் இருந்தேன்? அப்பறம் என்கிட்ட பேசும்போதும்,  எனக்கான பத்தியம், புள்ளவளப்பான் மருந்து பத்திலாம்  சொல்லிட்டு பத்திரமா போய்ட்டு வான்னு சொன்னாங்க. அப்போ இப்போதைக்கு இங்க வர்ற ஐடியா இல்லன்னு தான அர்த்தம்?”, என்று கேட்டாள்.

யோகி தனது தங்கையை வித்தியாசமாகப் பார்த்தான். எப்படி இந்தப் பெண்களால் வெறும் பேச்சின் மூலம்.சொல்பவர்கள் மனநிலை முதற்கொண்டு அதன் அடி ஆழம் வரை தூண்டித் துருவி யோசிக்க முடிகிறது? என்று நினைத்தான். 

தங்கை சொன்ன விஷயம் மனதை அரிக்க, ‘வாய திறக்காம சும்மா இருந்துருக்கலாமோ? பிடிச்சிருக்குன்னு சொல்லி அவங்க நிம்மதியை கெடுத்துட்டோமோ?’ எனத் தோன்றவும் முகம் கவலையை தத்தெடுத்தது. யோசனையினூடே, தங்கையிடம், “நான் வீட்டுக்காரம்மாட்ட பேசுறேன் ஈஸ்வரி”, என்றான்.

“இன்னும் உன் விஷயம் பத்தி அவங்க யார்ட்டையும் எதுவும் சொல்லலை போல இருக்கு அண்ணா”, என்றாள்.

“சரி அதுக்கு சந்தர்ப்பம் வந்திருக்காது அதனால பேசியிருக்க மாட்டாங்க.விடு”

“எனக்கு என்னவோ உன்னால தான் அவங்க வரலைன்னு தோணுது. ஒருவேளை உனக்கு பயந்துகிட்டு தான் அங்க இருக்காங்களோ?”

“நா ஒன்னும் அவங்களை பயப்படுத்தல. சும்மா சாதாரணமா தான் பேசினேன். அவங்களும் நல்லாத்தான் இருந்தாங்க”

“என்னத்த நல்லாயிருந்தாங்க? அவங்க மூஞ்சி பாத்து, அவங்களுக்கு உன்ன  பிடிச்சிருக்கா பிடிக்கலியான்னு சொல்லத் தெரில. நீயெல்லாம் என்னத்த வக்கீலுக்கு படிச்சி கிழிச்சியோ?”,என்று யோகியை சாட… கீழே மகனோடு விளையாடியபடியே அண்ணன் தங்கை பேச்சுவார்த்தையை கவனித்திருந்த சுகுமாறன் சத்தமின்றி சிரித்தான். 

‘எந்த சட்டப்புத்தத்துல பொண்ணுங்க மனசுல நினைக்கறதப் பத்தி போட்டிருக்கான்? இப்படி சின்னப்பிள்ளைக்கிட்டல்லாம் பேச்சு வாங்க வேண்டியதா போச்சே?’ என்று கடுப்பான யோகி, தனது இருக்கையில் இருந்து எழுந்து, சுகுமாரனை நோக்கி கையிலிருந்த செய்தித்தாளைத் தூக்கிப் போட்டுவிட்டு, மாடிக்குச் சென்றான்.

அங்கே சென்றதும் முதல் வேலையாக ஸ்ருதிக்கு அழைத்தான். முதன் முறை  அழைப்பு ஏற்கப்படாமல் போக, மீண்டும் முயற்சித்தான்.நான்காவது ரிங்கில் ஸ்ருதி தொடர்பு கொண்டாள். “ஹலோ.. சொல்லுங்க”, என்றாள்.

“அம்மாட்ட பேசினீங்களாம், நீங்க இப்போதைக்கு வரமாட்டீங்க-ங்கிறா  மாதிரி சொன்னாங்க”

“ஆமா, இன்னும் கொஞ்சநாள் கழிச்சு கிளம்பலாம்னு இருக்கோம்”, இயல்பாகப்  பேசினாள். ஆனால் அடுத்து வேறு எதாவது கேட்டு விடுவானோ என்ற எதிர்பார்ப்போடு கூடிய பயம் தொக்கி நின்றது. 

“அப்ப இந்த ரெஜிஸ்டர் ஆபீஸ் வேலைய எப்ப வச்சுக்கறதுன்னு சொன்னீங்கன்னா அதுக்கு ஏத்தாப்ல அரேன்ஜ் பண்றதுக்கு வசதியா இருக்கும்”, யோகிக்கு ஸ்ருதியின் வரவு எப்போது என்று தெரிய வேண்டி இருந்தது. 

“ம்ம் கிளம்பும்போது சொல்றேனே?”, என்று  பிடிகொடுக்காமல் பேசினாள். 

‘ம்ம். என்ன நழுவறாங்க..?’,“சரி, உங்க வேலைய முடிச்சிட்டுதான் நா வீட்டை காலி பண்ணனும். ஈஸ்வரியே ஊருக்கு போனதுக்கப்பறம் இங்க எனக்கு வேலை இல்ல பாருங்க?”, கொக்கி போட்டான்.

“இல்லல்ல,நாங்க வர்றதுக்காகல்லாம் வெயிட் பண்ணாதீங்க. பத்திரம்பதிவு பண்றத அப்பறமா மெதுவா கூட பாத்துக்கலாம்”, என்று அவசரமாக சொன்னாள்.

“ஓ..”,என்று யோகிக்கு ஈஸ்வரியின், ‘அவங்களுக்கு இப்போதைக்கு இங்க வர்ற ஐடியா இல்லன்னு தோணுது’ என்ற யூகம் சரிதான் என்று தோன்றியது.  கூடவே ஸ்ருதி பயப்படுவது எதற்கென்றும் புரிந்தது. 

“அப்ப நாங்க புறப்படும்போது வீட்டை பூட்டி சாவிய குருக்கள் மாமிட்ட குடுத்துட்டு போலாம்ல?”, ‘ம்ம்ம்.இதுக்கு என்ன சொல்லுவாங்க?’

ஒரு சின்ன மறுப்பையாவது, குறைந்த பட்சமாக வீட்டின் பெயரை மாற்றுவதற்காகவாவது சென்னை வரச்சொல்வான் என்று எதிர்பாத்த ஸ்ருதி, யோகி உடனே வீட்டைக்காலி செய்து கிளம்பிவிடுவதாக சொல்ல, என்னமோ ஏமாற்றமாக உணர்ந்தவள், “ஆங்..”, என்றாள். அவளது கவனம் பேச்சில் இல்லை. 

வீட்டுக்காரம்மாவின் ஆங்-கில் யோகி அவளை சரியாக புரிந்து கொண்டான்.  யோகி, மனதுக்குள் சிரித்தான்.

“கரெண்ட் மீட்டர் ரீடிங் பாத்து அந்த கணக்கையும் போன்பே-ல செட்டில் பண்ணிடறேன். சரிதான?”என்றான்.

‘என்னவோ உணர்ச்சி வேகத்தில் என்னிடம் திருமணத்திற்குக் கேட்டுவிட்டான் போல..?, இல்லாவிட்டால் என்னைப்போய்..?’, நீள் பெருமூச்சோடு, “ம்ம். சரி”,என்ற ஸ்ருதியின் குரல் கிணற்றில் இருந்து வந்தது. 

அடுத்து யோகி, “ஸ்ரீகுட்டி இல்ல? குடுங்க”, என்றான்.

“ம்ம்”, ‘ஸ்ரீம்மா போன்..’, என்று ஹாலில் இருந்தவாறே இரைந்தாள். அறையிலிருந்து ஓடி வந்த ஸ்ரீ, “ஹலோ”, என்று மூச்சு வாங்க..

“ஹாய் குட்டி என்ன ஸ்கூல மறந்தாச்சா?”,என்று ஆரம்பித்தான்.

“ஹிஹி அதெல்லால்ல, கம்ப்யூட்டர்-ல மேம் டெய்லி வர்றாங்க யோகண்ணா”, என்றாள்.

“ஓகேடா, பாலாக்குட்டி என்ன பண்ணுது?”

“ஹா ஹா அவன் மனீஷ் மேல சுச்சு போயிட்டானா? அத கிரீஷ் கிண்டல் பண்ணினானா? மணீஷ் அவனோட சட்டையை கழட்டிட்டு கிரீஷ் மேல போட்டு .. ஹா ஹா ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருக்காங்க. பாலா அவங்க சண்டை போடறத பாத்திட்டு குடுகுடுன்னு ஓடி பாட்டிகிட்ட போயிட்டான்”, என்று சிரித்தாள். 

அங்கே இருந்த ஸ்ருதிக்கு, யோகி மகளுடன் சிரித்து பேசுவதை பார்த்து எதையோ இழந்தாற்போல் இருந்தது. மேற்கொண்டு அவர்களது உரையாடலைக் கேட்க பிரியமில்லாமல் எழுந்து உள்ளே சென்று விட்டாள். 

)))))))))

மறுநாள் சனிக்கிழமை, அன்று மாதேஷுக்கு விடுமுறையும் கூட. வாரஇறுதிக்கு பிள்ளைகளை வெளியே கூட்டிச் செல்வதாக சொல்லியிருந்ததால், மாதேஷ் வீட்டினர் அனைவரையும் கூட்டிக்கொண்டு வர்ஷாவின் அம்மா வீட்டுக்கு செல்வதென திட்டம் போட்டான். அருகே பெரிய பார்க் ஒன்று இருந்தது. செயற்கை நீரூற்று, வண்ண வண்ண விளக்கு அலங்காரங்கள், சிறுவர்களுக்கான விளையாட்டுகள் நிரம்ப இருந்ததால் அங்கே செல்ல தீர்மானித்திருந்தான். 

எல்லாரையும் புறப்படச் சொல்ல வர்ஷாவோ, “இல்லங்க சிலிண்டர் இன்னிக்கி வரும்னு மொபைலுக்கு மெசேஜ் வந்திருக்கு. விட்டுட்டா மறுபடியும் எடுத்துட்டு வந்து போடறது கஷ்டம்.அதனால நா வீட்ல இருக்கேன். நீங்க எல்லாம் போயிட்டு வாங்க”, என்றாள். 

அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஸ்ருதி, “நீ போயிட்டு வா வர்ஷா, நா இருக்கேன், எனக்கு லைட்டா தலைவலிக்குது”, என்று வீட்டில் இருந்து கொண்டாள். நிஜமாகவே ஸ்ருதிக்கு மனம் எரிச்சலாக இருந்தது. என்னமோ சட்டென வாழ்க்கையில் ஒரு விரக்தி. முடிந்தவரை யாரோடும் பேசாமல் தனியாக இருக்க நினைத்தாள். 

ஸ்ருதி தனக்குத் தலைவலி எனவே வீட்டில் இருப்பதாக சொன்னதும், ‘சரி நீங்க ரெஸ்ட் எடுங்க, உங்களுக்குத் தொந்தரவு இல்லாம நா சின்னவனையும் கூட்டிட்டு போறேன்”, என்று வர்ஷா சப்ஜாடாக அனைவரையும் இழுத்துக்கொண்டு கிளம்பி விட்டாள். 

அவர்கள் கிளம்பிச் சென்று சுமார் ஒருமணி நேரத்திற்கு பின் வாசலில் அழைப்பு மணியோசை கேட்க, ஸ்ருதி சிலிண்டர் வந்துவிட்டது என்று நினைத்துக் கதவைத் திறந்தாள். அங்கே யோகி நின்றான்.

Advertisement