Advertisement

அவனைப் பார்த்ததும், ஸ்ருதிக்கு தானாக புன்னகை முகத்தில் வந்தமர, அரைநொடியில் அதை மறைத்து முகம் மாற்றினாள். 

மனம் படபடவென அடித்துக் கொண்டது,ஆனாலும் இயல்பாக,  “வாங்க”, என்றாள்.

“எங்க யாரையும் காணோம்?”

“எல்லாரும் பார்க் போயிருக்காங்க.”

“பர்வதம்மா கூடவா?”

“ஆமா,அங்க பார்க்ல பெரிய சிவன் கோவில் இருக்கு. இன்னிக்கு பஜன் நடக்கும், பாக்கலாம்னு வர்ஷாவோட அம்மா சொன்னாங்க அதான்…”

“.ம்ம்.”,என்ற யோகி வீட்டை நோட்டம் விட்டான்.

‘இதென்னடா இது? திடீர்னு வந்திருக்கான்,நேத்து பேசும்போது ஒண்ணுமே சொல்லலியே?’, “உக்காருங்க.. காஃபி?”

அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்த யோகி, “கொஞ்சமா சூடா குடுங்க, குளிரு கொல்லுது”, என்றான். ஸ்ருதி அப்போதுதான் அவனை அவதானித்தாள். காஷுவலாக வெறும் பேண்ட் டிஷர்ட் அணிந்திருந்தான். பூனாவில் இது குளிர்காலம், தமிழக வெப்ப சூழலில் வளர்ந்தவர்கள் இங்கே ஸ்வட்டர் இன்றி சமாளிப்பது கடினம். இவனோ அரைக்கை சட்டையோடு இருக்கிறான். 

“எடுத்துட்டு வர்றேன்”, என்று விட்டு சமையலுள் சென்றாள். ஐந்து நிமிடத்தில் காஃபியோடு சென்ற ஸ்ருதி , காபியை டேபிளில் வைத்தாள். யோகி அதை எடுத்து குடிக்க ஆரம்பிக்க, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் நின்றாள் ஸ்ருதி.    

அவள் கைபிசைந்து கொண்டு நிற்பதை பார்த்தவன், “ஏன் நிக்கறீங்க? உக்காருங்க.”, காபியை அருந்தியபடி சொன்னான் யோகி.

ஸ்ருதி “ம்ம்”, என்றுவிட்டு மற்றொரு இருக்கையில் அமர்ந்துகொண்டாள். சங்கடமானதொரு மௌனம். டேபிளில் இருந்த செய்தித்தாளை வாசிப்பதுபோல கையில் வைத்துக் கொண்டாள். அது ஆங்கிலம் என்பதைத் தவிர ஒரு அக்ஷரம் என்ன என்று கேட்டாலும் முழிக்கும் நிலையில் அதை பிரித்து கையில் வைத்திருந்தாள். 

சாவகாசமாக டம்ளரை மேஜையில் வைத்த யோகி, “அப்பறம் நேத்து பேசும்போது ஒரு விஷயம் கேட்கமறந்துட்டேன்.அதான் நேர்ல கேட்டுட்டு போகலாம்னு..”, எப்போதும் போன்ற அவனது வழமையாக சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தான். 

ஸ்ருதி யோகியை சங்கடமாக ஒரு பார்வை பார்த்து தலை திருப்பிக் கொண்டாள். ஸ்ருதிக்கு யோகி தன்னை துளைக்கும் கண்களால் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்து.. தான் பதில் சொல்லும் வரை விடமாட்டான் என்றும் புரிந்தது. 

மெதுவாக,”அது சரிவராது யோகி”, என்றாள். ஆனால் அவனது நேராகப் பார்ப்பதை தவிர்த்தாள். சில விஷயங்களைப் பேசி தீர்த்து விடுவோமென்று ஸ்ருதி தயாரானாள்.  

“என்னங்க சரி வராது? பர்வதம்மா பத்தி எனக்குத் தெரியும், மாதேஷ் கேக்கவே வேண்டாம்.கண்டிப்பா நோ சொல்ல மாட்டாரு.அப்படியிருக்கும்போது என்ன சரிவராதுன்னு நீங்க  நினைக்கறீங்க? என்னோட சகஜமா உங்களால பேசமுடியுது, சண்டை போடமுடியுது, அதனால தயவுசெஞ்சு பிடிக்கலைன்னு பொய் சொல்லாதீங்க”

“இதுல பிடிக்கிது பிடிக்கலைங்கிறது இல்லங்க விஷயம், நா ஏற்கனவே ஒருத்தருக்கு மனைவியா இருந்தவ. அதுவுமில்லாம ரெண்டு பசங்களுக்கு நா  அம்மா”

“இது ஒரு காரணம்னு சொல்லப்போறீங்களா?”

“ஆமாங்க, உங்களால ஒத்துக்க முடிஞ்சாலும் முடியலைன்னாலும் இதான் காரணம்”

“நான்தான் அன்னிக்கே சொன்னேனேங்க, ஞாபகங்கள் இருக்கத்தான் செய்யும்.அதைத் தாண்டினாத்தான் மனுஷனால வாழ முடியும்னு. நீங்க மறுபடியும் அதையே பிடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க? நாலு வயசுக் குழந்தையோட கோலாகலமா ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிகிட்டாங்க. தெரியும்தான?”,என்றோ ஒரு பிரபலத்துக்கு நடந்த திருமணம் பற்றி யோகி கூறினான். 

இடவலமாக தலையசைத்து, “அவங்கள்லாம் மேல்தட்டு யோகி”, மறுப்புக் கூறினாள். 

“சரி, நம்ம வீட்டு வேலைக்காரம்மா தன்னோட ஏழு வயசு பையனோட அவங்க மாமாவை கட்டிக்கிட்டாங்க அதுக்கு என்ன சொல்லப்போறீங்க? அவங்க கீழ்த்தட்டுன்னா? ”

“ஆமா யோகி.ஏன்னா இந்த ரெண்டு வகையான மக்களுக்கும் அவங்கள சுத்தி இருக்கறவங்களை பத்தி கவலையில்லை. முதல் ரகம் இத கூச்சல்லாம் அடங்கட்டும்னு வெளிநாட்டுக்கு போயிடுவாங்க.”

“ரெண்டாவது ரகத்துக்கு எவன் என்ன பேசினாலும் ஆமாடா நா அப்படித்தான்ன்னு சொல்ற தைரியம் இருக்கு. இந்த மிடில் க்ளாஸ் இருக்கு பாருங்க. அதுதான் மானம், ரோஷம், கலாச்சாரம் பண்பாடு  நியாயம் தர்மம்னு ஆயிரத்தெட்டு பாக்கும். இந்த க்ளாஸ்-னாலே தப்பிச்சு வெளிநாட்டுக்கும் போகமுடியாது. எவனாவது வம்பு பேசினா வெட்டிட்டு ஜெயிலுக்கு போற தெம்பும் இருக்காது.”

“அப்ப மத்தவங்களுக்காகத்தான் இது சரி வராதுங்கிறீங்க?”

“ஆங்.. அதுவும் ஒரு காரணம் யோகி. ஆனா அதை விட முக்கியமான காரணம் நா ஏற்கனவே சொன்னேனில்ல? நா இன்னொருத்தர் வொய்ப்.”

“அந்த வெண்ண தெரிஞ்சிதான் நா உங்களை கல்யாணம் பண்ணிக்க கேட்டேன்-ன்னு நினைக்கறேன். நா உங்க வீட்..”,என்று ஆரம்பித்து நிறுத்திய யோகி.. கண்ணைமூடி தலையசைத்து, “ஸ்ரீகுட்டி அப்பாவை பாத்ததில்லைங்க, அவரு கருப்பா செகப்பா ன்னு கூட எனக்குத் தெரியாது. நா யாரோட  மனைவியாவும் உங்கள பாத்ததே இல்ல”, என்றவன் தொடந்து..

“எனக்கு தெரிஞ்சது.., உலக விஷயம் ஒண்ணுமே தெரியாம கண்ணுல தண்ணியோட டூ வீலர் ஓட்டத் தெரியாம திணறின வீட்டுக்காரம்மா,கொஞ்ச நாள்ல என் கண்ணு முன்னாடியே.. ஒருத்தன் நல்லவனா கெட்டவனான்னு எடை போடற அளவுக்கு வளந்து நின்னாங்க.  அந்த தெளிவான வீட்டுக்காரம்மாவ.. .அவங்கள எனக்குப் பிடிச்சிருக்கு”,யோகியின் குரலிலிருந்த மென்மை ஸ்ருதியை என்னமோ செய்தது. 

ஆனாலும் மறுத்தாக வேண்டிய கட்டாயத்தில் ஸ்ருதி, “நமக்கு பிடிச்சதெல்லாத்தையும் செஞ்சிட முடியாது யோகி. இப்போ நீங்க பேசும்போதே திணறினீங்க இல்ல? உங்க வீட்டுக்காரர்ன்னு ஆரம்பிச்சு.. அப்பறம் ஸ்ரீ குட்டி அப்பான்னு சொன்னீங்க தான?அந்த திணறல்தான் என்னோட மறுப்புக்கு காரணம். ஞாபகங்களை மறைச்சிடலாம் அது வெளில தெரியாது ஆனா காயங்களை, தழும்புகளை மறைக்க முடியாது யோகி”

யோகி தன் நெற்றி சுருக்கி ஸ்ருதி சொல்வது புரியாமல் பார்க்க, “நா ரெண்டு பசங்களுக்கு அம்மா, அவங்க எனக்குள்ள வந்த அந்த நாட்களை,அந்த நினைவுகளை நா மறக்க முடியும், ஆனா அவங்க வயித்துல இருந்தபோது வந்த தழும்புகளை என்னால மறைக்க முடியாது யோகி.”, என்று விட்டு முகம் கசங்கினாள்.

“நீங்க ஒரு நல்ல பொண்ணா .. “, என்று என்னவோ சொல்ல வந்தவள் வார்தைகள் மறந்து நிறுத்தினாள். காரணம் அத்தனை வேகமாக யோகி எழுந்து நின்றிருந்தான். கை முஷ்டி இறுக்கி நின்ற அவனது முகம் கோபத்தால் கடினமாகி இருந்தது. 

ஸ்ருதியின் முகத்தின் முன் கையை நீட்டி.. “என்ன எங்கிருந்தாலும் வாழ்கன்னு சொல்லப்போறீங்களா? ஏதாவது ஏடாகூடமா சொல்லிட போறேன்..”,என்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியவன் பிடரியில் கைவிட்டு தனது கோபத்தை அடக்க முயற்சித்தான்.

அது அவனுக்கும் மேல் வளர்ந்து நின்றது போலும்.. இடது கைபுறமிருந்த ஸ்ருதியின் புறம் திரும்பி, ”உங்கள போயி வளந்துடீங்கன்னு நினைச்சேன் பாருங்க, இன்னும் அதே அறிவு கெட்ட..”, அதற்கு மேல் அவன் பேசவில்லை. 

ஸ்ருதிக்கோ இவன் இப்படி கோபப்படுமளவு என்ன சொல்லிவிட்டோம் என்று திகைப்போடு பார்த்து நின்றாள். அவனது அளவிலா கோபம் பார்த்ததில் கொஞ்சம் பயம்கூட எட்டி பார்த்தது. 

யோகி டேபிளில் இருந்த தண்ணீர் ஜக்-கில் இருந்த நீரை அப்படியே வாயில் கவிழ்த்துக் கொண்டான். கொஞ்சம் சமன்பட்டிருந்தானோ என்னவோ மீண்டும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். 

அவனுக்கு அடுத்து இருந்த இருக்கையை கை காண்பித்து ஸ்ருதியிடம், “உக்காருங்க”, என்றான். 

ஸ்ருதி இன்னும் அலங்க மலங்க அவனைப் பார்த்து நிற்க, 

“உக்காருங்க, அடிக்கலாம் மாட்டேன், பொண்ணுகளை கைநீட்டற அளவு மோசமானவனா எங்கம்மா என்னை வளக்கல”,என்றான்.

ஸ்ருதியோ, ‘எது அடிப்பானாமா?’ என்று தோன்றினாலும் இவனது கோபத்திற்கு என்ன காரணம் சொல்ல போகின்றான் என்ற எதிர்பார்ப்போடு அவனைப் பார்த்து அமர்ந்துகொண்டாள். 

“எங்க ஈஸ்வரி இருக்கில்ல, அது சுகுமாரனை பத்தி ஒன்னு சொல்லும். என்னை என்னோட ப்ளஸ் மைனஸோட ஏத்துகிட்டவர்ன்னு. நானும் அப்படித்தான். உங்க ப்ளஸ் மைனஸ் ரெண்டும் பிடிக்கும்”, என்று நிதானமாக சொல்லிநிறுத்தினான்.

பின் ஸ்ருதியை ஆழ்ந்து நோக்கி அவனது மனதை மயக்கும் குரலில், “குதுருன்னா என்னனு கேட்ட உங்க அறியாமை பிடிச்சிருக்குங்க, திசை சொல்லத் தெரியாம வழிஞ்சு, மொபைல்ல மேப் பாத்து சிரிச்சீங்க பாருங்க, உங்க புத்திசாலித்தனம் பிடிச்சிருக்குங்க, என்ன ஆகுதுன்னு பாக்கலாம்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு போன உங்க தைரியம், எப்படியும் ஓட்டிடனும்னு டூ வீலர் எடுத்துட்டு போனீங்க பாருங்க அந்த அசட்டு துணிச்சல் பிடிச்சிருக்கிங்க, என் குழந்தையை நா பாத்துப்பேன்னு முடிவெடுத்து பாலாவை சுமந்தீங்க பாருங்க, அந்த பிடிவாதம் பிடிச்சிருக்குங்க. ஆனா நீங்க..?”

“காதலிக்கறது ஒன்னும் பெரிய பாவமில்லைங்க. நீங்க கடந்த காலத்துல ரொம்ப நல்ல புருஷனோட வாழ்ந்து இருக்கலாம்,  உங்களுக்கு ரெண்டு பசங்க இருந்தாலும் உங்களுக்கு காதலிக்க ரைட்ஸ்  இருக்கு.”, 

“நா காதலிக்கல்லாம் இல்ல யோகி..”

“சரி காதலிக்காதீங்க, கல்யாணம் பண்ணிகோங்க” யோகி யோகி தான். அவன் பேச்சே அலாதிதானே? 

மறுப்பாக “ம்ப்ச்”, என்று சொன்ன ஸ்ருதி கண்களை மூடிக்கொண்டாள்.

ஆனால் யோகி பேச்சை விடாமல், “உங்க கட்ட அவுத்துடுங்க, நீங்க எதுக்கு பயப்படறீங்கன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சு. நீங்க பயப்படறது மத்தவங்களுக்காகவோ உங்க சொந்தங்களுக்காகவோ இல்ல. இந்த ஹால் வரைக்கும் உங்களால என்னை உங்களக்கு ஒரு துணையா நினைக்க முடியும் ஆனால் அதைத் தாண்டி இருக்கிற பெட்ரூம் இருக்கு பாருங்க அதுக்கு பயப்படறீங்க. அது தேவையில்ல..”, என்று யோகி சொல்லி  நிறுத்த.., ஸ்ருதியின் கண்ணில் ஏளனம் மின்னலென ஒரு நொடி வந்து சென்றது. 

அவளது கிண்டலைப் புரிந்து  “ம்ம்.ம்ஹூம் இல்லை, நா பேர்ல மட்டும்தாங்க. யோகி. நிஜத்துல மனுஷன்.. பசி, தாகம்ன்னு எல்லாமும் இருக்கிற நிஜமான மனுஷன். உங்க பயம் தேவையில்லன்னு சொல்லவரேன். உண்மைக்கும் நிஜத்துக்கும் ஒரு அழகு இருக்குங்க. அதுக்கு மேல்பூச்செல்லாம் தேவையில்லை. எனக்கு ஸ்ரீகுட்டியையும் பாலாவையும் எந்த அளவு பிடிக்குமோ அந்த அளவு உங்க ஞாபகங்களையும் தழும்புகளையும் பிடிக்கும். நா உங்க நிஜத்ததான் நேசிக்கிறேன்”, என்றான்.

ஸ்ருதிக்கு மூச்சடைத்தது. இவனை என்ன செய்வது? இத்தனை நல்லவனாக இருந்து தொலைக்கிறானே? யோகி சொல்வது சரிதானே? தனி மனிதனாக யோகியைப் பிடிக்கும்தான். ஆனால்..?  யோசனையானாள். அவளுக்கு முதன்முறையாக யோகி இவ்வளவு உண்மையாக இருக்கும்போது எனக்கு மட்டும் என்ன முகமூடி?’ என்ற எண்ணம் வந்தது.
கூடவே நந்தினி சொன்ன ‘கடவுள் குடுத்த ரெண்டாவது வாழ்க்கை இது’என்ற வாசகமும். ஆனாலும் ஒப்புக் கொள்ள முடியுமா? தெரியவிலை.

யோகி ஸ்ருதியை பார்த்து.., “எனக்கு நம்பிக்கை இருக்கு, நம்ம லைஃப் நல்லா இருக்கும்னு. ஒருவேளை உங்களுக்கு எம்மேல  அப்படியொரு நம்பிக்கை இல்லன்னா, இப்போவே எழுந்து உள்ள போயிடுங்க. இல்ல என்னோட எல்லாத்தயும் ஷேர் பண்ண முடியும்னு தோணினா..”, என்று கை நீட்டினான்.

எதனாலோ அவன் பார்வை, அதில் இருந்த தவிப்பு ஸ்ருதியின் மனதை எதோ செய்ய..  அவளது வலது கை அவளையுமறியாமல் தானாக யோகியைப் பற்றியது. 

Advertisement