Advertisement

final 2 2
ஸ்ருதி மேலே தனது வீட்டினர் புறப்பட்டுக்கொண்டு இருக்க, பாமா சொன்னபடி அவரது மகன் அவருக்கு பெங்களூர் வருவதற்கு ரயில் டிக்கெட் புக் செய்திருந்தான். அவரை சென்ட்ரல் வரை கொண்டு விட சென்னையில் இருந்த அவனது நண்பனை அனுப்பி இருந்தான். எனவே, இவர்களுக்கு முன்பாகவே அவர் கிளம்ப வேண்டி இருந்தது. “இவ்வளவு சீக்கிரம் ஏற்பாடு பண்ணுவான்னு தெரியாது ஸ்ருதி.. இருந்துட்டு நீங்க கிளம்பியதும் எல்லாத்தையும் ஒழிச்சு போட்டுட்டு நாளைக்கு போகவா?”, என்று பாமா கேட்க..
“அதெல்லாம் வேணாம், அந்த வேலைய நிமிஷமா  முடிச்சிடலாம்”,என்று கொஞ்சமாக இருந்த தயிர்,  வெண்ணை, உலர் பழங்கள் தவிர பிரிட்ஜ்-ஜில் இருந்த அனைத்தையும் சிறு சிறு டப்பா மற்றும் கவர்களில் மளமளவென பேக் செய்தாள். பர்வதம்மா வசந்திக்கு போன் செய்து விபரம் கூறியதும் அவர் உடனே மாடிக்கு வந்து விட்டார். 
“வசந்தி,, இதுல காய்கறி, தயிர், சீஸ், பன்னீர் பிரெட்-ன்னு எல்லாம் இருக்கு”, பர்வதம்மா கூற..
“சரி பாத்து பத்திரமா போயிட்டு வாங்க”, என்று பர்வதத்திடம் சொன்னவர்,  கூடத்து சோஃபாவில் பாலாவுக்கு உல்லன் சாக்ஸ் அணிவித்து மங்கி குல்லாயை தனது கைப்பைக்குள் திணித்த ஸ்ருதியை பார்த்தார்.  
இதற்கு முன்பு எத்தனையோ முறை பார்த்திருக்கிறார்தான். ஆனால் இப்போது பார்க்கும்போது ஸ்ருதியை புதிதாகப் பார்ப்பது போல அளவெடுத்தார். சோபையான முகமே தவிர சுண்டியிழுக்கும் அழகு இல்லை, மெலிந்த தேகம். ‘இந்த புள்ளைக்கிட்ட என்ன இருக்குன்னு..?’, என்று தோன்றுவதை தடுக்க முடியவில்லை.
ஆனாலும், என்னவோ இருக்கப்போய் தானே மகன்..? இதே வேறு பெண்ணாக இருந்தால், ‘என்ன காமிச்சு என் மகனை மயக்கினாளோ?’ என்று அடுத்தவர் கேட்க வாய்ப்புண்டு. ஸ்ருதியிடம்..? அவளை பற்றித்தான் வசந்திக்கு நன்றாகத் தெரியுமே?
ஸ்ருதிக்கு தன்னை யாரோ பார்ப்பது போல குறுகுறுவென்று தோன்ற, சட்டென திரும்பினாள். அங்கே இருந்தது வசந்தியும் பர்வதமும் மட்டுமே. ஸ்ருதி பார்ப்பதைக் கண்ட வசந்தி, ”ரெண்டு பைய குடும்மா, நா போகும்போது கொண்டு போறேன்”, என்று உதவிக்கு வந்தார்.
அவரது தன்னை வித்தியாசமாகப் பார்த்ததும், தான் பார்த்ததும் அவர்  பேச்சை மாற்றுவதையும் வைத்து, வசந்தியின் பார்வை எதற்கானது என்று ஸ்ருதி புரிந்து கொண்டாள். ஆனாலும் இதில் அவள் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏற்கனவே முடிவெடுத்தாகி விட்டது, என்று நினைத்துக் கொண்டாள். எனவே, மறுப்பேதும் சொல்லாமல் இரண்டு பைகளை அவரிடம் தந்து மெயின் கேட்டுக்கு  அருகே வைக்கச் சொன்னாள். 
விமான நிலையம் செல்வதற்கு ஸ்ருதி, ஏற்கனவே கேப் முன்பதிவு செய்திருந்ததால், அலைபேசியை பார்த்தாள். வாடகை வாகனம் வீட்டின் அருகே வந்துவிட்டது என்று அதன் வரைபடம் தெரிவித்தது.  
“அத்த, ஸ்ரீமா நீங்க ரெண்டு பேரும் முன்னால போங்க”, என்றவள் ஸ்ரீயைப் பார்த்து, “ஸ்ரீக்குட்டி கார் வந்தா,அந்த அங்கிள் கிட்ட இந்த பின் நம்பர் சொல்லிட்டு வண்டில ஏறி உக்காருங்க”, பர்வதத்தைப் பார்த்து, “அத்த, கார்ல நிதானமா ஏறுங்க. அப்பறம்  டிரைவர்கிட்ட வண்டி டிக்கியை திறக்க சொல்லுங்க”, என்று இருவரையும் கிளப்பினாள். 
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் பாலாவை கையில் தூக்கிக்கொண்டு, ஒருபுறம் தனது கைப்பையோடு ஸ்ருதி கீழே இறங்கினாள். சரியாக அதே நேரம் யோகி மாடிக்கு அவனது போர்ஷனுக்கு வர, இருவரும் எதிரும் புதிருமாக சந்தித்துக் கொண்டனர். 
இவன் வரும்போதே, கீழே மெயின் கேட் அருகே நின்ற ஸ்ரீகுட்டி, யோகியின் தலை தெரிந்ததுமே, “நாங்க ஊருக்குப் போறோமே? அதும் மாமா ஊருக்கு?”, என்று குதித்துக் கொண்டு விஷயம் பகிர்ந்தே காரில் ஏறிக்கொண்டாள். பர்வதம் காருக்குள் இருந்தபடியால், இன்ன விபரம் இதற்காக போகிறோம் என்று யோகியிடம் சொல்லவில்லை. 
இன்று மதியம் தான் கேட்ட விஷயத்திற்கும், ஸ்ருதி இப்படி குடும்பமாக கிளம்பி செல்வதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா என்று யோசித்த யோகி, ஏதும் கேட்காமல் ஸ்ருதியைப் பார்த்தபடி வழியிலேயே நிற்க.., அவளோ அவனைப் பார்த்தும் பார்க்காதது போல கடந்து செல்ல நினைத்தாள். என்னவோ ஒரு பதட்டம் வந்தமர்ந்து கொண்டது.
ஆனால், அவள் கையில் இருந்த பாலா எப்போதும் யோகியைப் பார்த்ததும் தாவுவதைப் போல இப்போதும் செய்ய, ஸ்ருதி பிள்ளையை விடாமல் இறுக்கிப் பிடித்தவாறு படியிறங்கினாள். குழந்தையோ மொத்தமாக கீழே யோகியின் புறம் சரிந்து தாவினான். அதில் ஸ்ருதி பாலன்ஸ் இல்லாமல் தடுமாற சட்டென ஒரு படி ஏறி பாலாவை தூக்கியவன், முகத்தை கடுகடுவென வைத்து, “சின்னப்புள்ளத்தனமா இருக்கு”, என்றான்.
‘எது?’ என்பது போல ஸ்ருதி யோகியைப் பார்த்தாள். 
“நீங்க பண்றது தான்”, வெடுக்கென சொன்ன யோகி..”சாதாரணமா இருங்கன்னு சொன்னேன்ல்ல?”, என்று கடிந்தான். வளர்ந்த பெண்ணாக யோசிப்பாள் என்று நினைத்தவனிடம் ஸ்ருதி இப்படி நடந்து பதின்ம வயதுப் பெண் போல நடந்து கொண்டால்?..இது யோகியின் எண்ணம். அவனுக்குத் தெரியாது,எந்த பெண்ணாய் இருந்தாலும் அவள் நிலையில் இருந்தால் இப்படி தடுமாறத்தான் செய்வார்கள் என்று. 
‘க்கும். எங்க சாதாரணமா இருக்கறது? எப்பவும் நார்மலா பாத்து பேசற உங்கம்மாவே  வித்தியாசமா பாக்கறாங்க’, என்று நினைத்த ஸ்ருதி, “கார் வெயிட் பண்ணுது”, என்றாள். 
“ஹ்ம்ம்.”, என்று பாலாவை தூக்கிக்கொண்டு கீழே இறங்கினான். ஸ்ருதி ஏதும் பேசாமல் அமைதியாக வர, “வீட்டுக்காரம்மா எதுக்கோ பயந்து ஓடிப்போறாப்புல இருக்கு?”, என்று கொஞ்சம் கிண்டலாகக் கேட்டான்.
அவனது கிண்டலுக்கு உடனுக்குடன் பதில் சொல்வது ஸ்ருதிக்கு பழக்கமாயிற்றே? “நா எதுக்கு ஓடிப்போனும்?”, பதில் கேள்வி கேட்டாள். 
தோளைக் குலுக்கி, “அப்ப எதுக்கு இவ்ளோ அவசரமா போறீங்கன்னு சொல்றது?”
“ம்ப்ச். அப்பாக்கு சீரியசுன்னு மாது போன் பண்ணியிருந்தான்”
“ஓஹ்”,என்று சொல்லி,அவள் காரில் ஏறி அமர்ந்ததும் பாலாவை அவளிடம் குடுத்து, “எது வந்தாலும் பயப்படாதீங்க, போயி சேந்தோடனே போன் பண்ணுங்க”, என்று சொல்லி அவளை வழியனுப்பி வைத்தான்.
))))))))))))))
விமான நிலையம் வந்து செக்கிங்  செய்து விட்டு அத்தையையும் ஸ்ரீக்குட்டியையும் இடம்பார்த்து உட்கார வைப்பதற்குள் ஸ்ருதிக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. கையில் இருந்த லக்கேஜ்கள், தூங்கி வழியும் பாலா, துள்ளி ஓடும் ஸ்ரீ என்று இவர்களை சமாளிப்பதற்குள் அவளுக்கு கை இத்துப் போயிற்று. 
பாலாவிற்கு பால்பாட்டில் எடுத்து குடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவள் தூங்கிவிட, அத்தையின் மடியில் அவனைப் படுக்க வைத்து விட்டு, ஸ்ருதி ரெஸ்ட் ரூம் சென்றாள். ஸ்ரீகுட்டியிடம் மொபைலைக் குடுத்து, அதில் சதுரங்கம் ஆடச்சொல்லி விட்டு வந்தாள். 
ரெஸ்ட் ரூம் செல்லும் வழியில், ;ஹே ஸ்ருதி…”, என்ற குரல் கேட்க.., திரும்பிப் பார்த்தாள். அங்கே நந்தினி நின்று கொண்டிருந்தாள். 
“ஹலோ நந்தினி..”, என்று கையசைத்தாள் ஸ்ருதி. 
அவளைப் பார்க்கையில் கொஞ்சம் ஆச்சர்யமாகக் கூட இருந்தது. அத்தனை பூரிப்போடு மகிழ்ச்சியாக இருந்தாள், கூடவே ஆள்  அடையாளம் தெரியாத அளவு மாறிப் போயிருந்தாள். ஒற்றைச் செயின் அணிந்து, சிம்பிளாக காணப்படும் நந்தினியாக இல்லாமல், கழுத்தில் பிடியளவு நகை போட்டிருந்தாள். அடர் நிறத்தில் புடவை, ஆனால் அதையும் நறுவிசாக கட்டி இருந்தாள்.  
“எங்க இங்க? எப்படி இருக்கீங்க?வீடு மாறி போனதுக்கப்பறம் பாக்கவே இல்ல..”, என்று புன்னகையோடு அடுக்கடுக்காய் கேள்விகள்.
“நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க?”
அருகே வந்து கைகளை பிடித்துக்கொண்டாள். “அருமையா இருக்கேன் ஸ்ருதி, மும்பை போயிட்டு இருக்கோம் அண்ணா வீட்டு கிரஹப்ரவேசம். நீங்க?”
“நா புனா போறேன். தம்பி ஊருக்கு”, என்ற ஸ்ருதி எதற்காக போகிறாள் என்பதைச் சொல்லவில்லை. இவளது மகிழ்ச்சியை நான் குலைப்பானேன்?     
“ஹ ஹ, எந்த நேரத்தில உங்களை நிறுத்தி பேசிட்டு இருக்கேன் பாருங்க?”,என்று சிரித்த நந்தினி, “வாங்க நானும் பாத்ரூம் போகணும்னுதான் வந்தேன்”, என்றதும் இருவருமாக வாஷ் ரூம் நோக்கிச் சென்றார்கள்.
சிறிது நேரம் பொறுத்து கைகளை சோப்பு நீரில் கழுவும்போது, “அன்னிக்கு இருந்த மனக்குழப்பத்துல கொஞ்சம் புத்தி பிசகி உங்ககிட்ட எல்லா விபரமும் சொல்லிட்டோமொன்னு ரெண்டு மூணு தடவ நினைச்சிருக்கேன் ஸ்ருதி.ஆனா, உங்க கூட பேசினதால தா, எனக்கு ஒரு தெளிவு கிடைச்சது”, அருகில் இருந்த ஸ்ருதியிடம் நந்தினி. வெளியே இருந்த இரைச்சல் குறைந்து இருக்க, இவர்களோடு கூட அங்கே வேறு யாரும் இல்லாததால் இருவராலும்  இயல்பாக பேச முடிந்தது. 
“நீங்க அன்னிக்கு சொன்னீங்க பாருங்க, நமக்கு யாரு சந்தோஷம் தர்றான்னு பாக்கறத விட, நம்மளால யாருக்கு உபயோகமா, சந்தோசம் கொடுக்க முடியும்னு நினைச்சா வாழ்க்கை அற்புதமா இருக்கும்னு..அதாங்க.. அதை நா யோசிக்க ஆரம்பிச்சேன். அதை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சதுக்கப்பறம் பாருங்க.. எனக்கு அது நாலு பங்கா திரும்பி வந்து..  இதோ பாருங்க, உலகத்துலேயே ஆசீர்வதிக்கப்பட்ட ஆளா இருக்கேன். என் மனசாட்சிக்கு நா உண்மையா இருக்கேன் ஸ்ருதி”, உணர்ச்சிப் பெருக்கில் நந்தினியின் கண்களில் நீரே வந்துவிட்டது
கண்களை சிமிட்டி கண்ணீரை நிறுத்தியவள், “நிறைய தடவ உங்ககிட்ட வந்து பேசணும்னு நினைச்சிருக்கேன் ஸ்ருதி.ஆனா,பழசை எதுக்கு கிளர்றதுன்னு..”, என்று நிறுத்தி, “தேங்க்ஸ் ஸ்ருதி, தேங்க் யூ வெரி மச். என்னோட இந்த வாழ்க்கை.., கடவுள் உங்க மூலமா எனக்குக் குடுத்த ரெண்டாவது சான்ஸ்”, என்று சொல்லி விட்டு வாட்ச் பார்த்தாள். “நேரமாச்சுன்னா அவங்க தேடுவாங்க, வர்றேன் ஸ்ருதி ”, என்று  அவளது கணவனிடம் சென்று விட்டாள் நந்தினி. 
நந்தினி பேசியதை அசைபோட்டவாறே ஸ்ருதி அவளது இருக்கைக்கு வந்தமர்ந்தாள். அன்னையின் வருகையை தெரிந்து, ஸ்ரீகுட்டி ஒருமுறை ஸ்ருதியை நிமிர்ந்து பார்த்து.. பின் தனது விளையாட்டைத் தொடர்ந்தாள். 
ஸ்ருதி அத்தையிடம் இருந்து பாலாவை வாங்கி தனது மடியில் போட்டுக் கொண்டே, “அத்த, இங்க நந்தினிய பாத்தேன்”என்றாள்.  
“அட அப்படியா? அவ மாமியார் வீட்டோட போனதுக்கப்பறம் இந்த பக்கம் வரவேயில்லை இல்ல? எப்படி இருக்கா?”,பர்வதம். 
“நல்லா இருக்காங்க, அவங்க அண்ணா வீடு கிரஹப்ரவேசமாம் மும்பைக்கு போயிட்டு இருக்காங்க”
“ஹ்ம்ம்.”, சொல்லி, “நா கொஞ்ச நேரம் கண்ணை மூடறேன் ஸ்ருதி, போகணும்னா கூப்பிடு”, என்று அந்த இரும்பு நாற்காலியின் பின்புறம் தலையை சாய்த்துக்கொண்டார்.
ஸ்ருதி தனது மடியில் இருந்த மகனின் தலையை மெல்ல கோதியவாறு, அன்று நடந்ததை அசைபோட்டாள். உணர்ச்சி வேகத்தில் தப்பு செய்த நந்தினி, பேசத்தெரியாத நான் பேசிய எதோ ஓரிரு வார்த்தைகள் மூலம் தனது வாழ்க்கையை புதிதாய் அமைத்துக் கொண்டாள், என்று இதமாக உணர்ந்தாள். 
உடனே அன்று யோகியோடு அரட்டை அடித்தபடி வந்த நினைவும் எழ, ‘உங்களுக்கு என்னதாங்க வேணும்?’ என்று பெண்களை பொதுவாக குறிப்பிட்டு தன்னிடம் அவன் பேசிய பாவனை, அதற்கு தான் கூறிய பதில் என்று வரிசையாய் அலை மோத, ஸ்ருதியை அறியாமலே அவளது முகத்தில் கீற்றாய் ஒரு புன்னகை. 
அடுத்து இவர்களது விமானத்தில் பயணிகள் ஏறலாம் என்ற அறிவிப்பு வர, பூனாவிற்கு புறப்பட்டார்கள்.
இரண்டரை மணி நேரத்தில் பூனா சென்றவர்கள், மாதேஷ் ஏற்பாடு செய்திருந்த கால்டக்சியில் அவனது வீடு அடைந்தனர். ஸ்ருதி முதல் வேலையாக ‘வந்து சேர்ந்துவிட்டோம்’ என்ற தகவலை யோகிக்கு அனுப்பினாள். அடுத்த நொடியே தகவல் பார்க்கப்பட்டு விட்டதாக ப்ளூ டிக் காண்பிக்க, இத்தனை நேரம் தனது தகவலுக்காக காத்திருந்திருக்கிறான் என்று புரிந்துகொண்டாள்.
பின், தம்பி மனைவியிடம் தந்தையின் உடல்நலம்பற்றி கேட்டு தெரிந்து கொண்டாள். முன்பு மாதேஷ் கூறியதையே அவளும் சொன்னாள். தம்பியின் மக்கள் இரட்டையர் அல்லவா? அவர்களை பார்க்கவென அவளது அம்மாவும் உடனிருந்தார். பர்வதம் அவரோடு இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு அறைக்குச் சென்று படுத்து விட்டார். 
ஸ்ருதியும் சற்று நேரம் கண்ணயர்ந்தாள், அதில் யோகி, “வீட்டுக்காரம்மா எனக்கு பொண்ணு கின்னு தேடாதீங்க, இந்த ஊர்ல கிணறு கூட இல்ல”,என்று சிரித்துக்கொண்டே சொன்னான்.
வேண்டாம் வேண்டாம் என்று சொன்னவளின் உறக்கத்திலும் புன்னகை வரவைத்தான் யோகி.

Advertisement